நூலகங்களும் நூல்களும் வாசகர்களும் குறைந்து விட்டார்கள் என்று சொன்னால், அதை முற்றுமுழுதாக ஏற்றுக்
கொள்ள முடியாது. வாசிப்பவர்கள் வாசித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். எழுதுபவர்கள்
எழுதிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். முற்காலத்தை விட இக்காலத்தில் நூல்கள் அச்சடிக்கும்
தொகை அதிகரித்துள்ளது என அச்சகத்தினர் கூறுகின்றார்கள், ஆனால், இளையோர் வாசிப்பு ஆர்வமும்
எழுதும் ஆர்வமும் அதிகரித்துள்ளதா என்றால், அது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. 'ஹரி பொட்டர்' என்னும் நூல் வாங்குவதற்காக
முதல் நாளே வரிசையில் நின்ற இளையோரும் இக்காலப்பகுதியில் தான் வாழுகின்றார்கள். வீட்டில்
இருந்தபடி இணையம் மூலம் புத்தகம் வாங்கி வாசிக்கின்ற இளையவர்களும் எம்மத்தியில் இன்னும்தான்
வாழ்கின்றார்கள். நகரங்கள் தோறும், புகையிரத நிலையங்கள் தோறும் புத்தகக் கடைகள் நிரம்பிக் காணப்படுகின்றன.
புகையிரதம், பேரூந்து பயணங்களில் புத்தகங்களையும், E-Books களையும் திறந்து வாசித்துக் கொண்டு பயணம் செய்வோர் இன்னும் எம் கண்களில்
தென்படுகின்றனர். வாசிப்புக்கேற்ப புத்தகங்களின் வரவும் இருக்கவே செய்கின்றன. எனவே
வாசிப்பும் எழுத்தும் மனிதன் வாழும் வரை வாழும். அதுவே மனிதப் பண்பாட்டின் அடிப்படை
அம்சமாகவும் காணப்படுகின்றது. ஏனென்றால். இவ்விரண்டின் உதவியும் இல்லாமல் மற்றையவற்றை
எம்மால் பெறமுடியாது.
எழுதுவது என்பது ஒரு மனஒருமைப்பாட்டுக்காரணி. இது மனிதமனங்களைக் கட்டிப்போடுகின்றது.
ஒரு விடயத்தை எழுதுவதற்கு ஆரம்பிக்கும் போது எமது எண்ணங்கள் அவ்விடயத்தில்
ஒன்றிவிடுகின்றன. கைத்தொலைபேசி போன்ற ஏனைய காரணிகள் அச்சமயங்களில்
உறங்கிவிடுகின்றன.
சுப்பிரமணிய பாரதியார் 38 வருடங்களே வாழ்ந்தார், சுவாமி விவோனந்தர் 39 வருடங்களே வாழ்ந்தார், சுவாமி விபுலானந்த அடிகளார் 55 வருடங்கள் வாழ்ந்தார். இளமையில் எழுதிப் புகழ் பெற்றோர்களே இவர்கள். மனிதன்
வாழ்க்கை குறுகிய காலங்களேயானாலும் படைப்பே மனிதனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது.
இவ்வாறு காலங்கள் படைப்புக்கு அளவுகோல் அல்ல. அவை இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும்
இறவாப் புகழை மனிதனுக்குக் கொடுக்கக் கூடியது. இவ்வாறான பெரியோர் தமக்குப் புகழ் கிடைக்க
வேண்டும் என்பதற்காக எழுதியவர்களுமல்ல. வாழ்ந்தவர்களும் அல்ல. ஆனால், இறவாப்புகழ் பெற்று இன்றும்
வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே உலகத்திற்கு எது தேவையோ அதனை சரியான முறையில்
எதிர்பார்ப்பு இன்றிக் கொடுத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் இறவாப் புகழ் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இளையோர்களை அறிவுலகத்தின்
திறவுகோல்கள் என்று கூறலாம். இன்றைய தொழில்நுட்ப உலகத்திற்கு இன்றைய இளைஞர்களே வழிகாட்டிகள்.
எமது கை பிடித்து நடைபயின்ற இளையோர்கள் இன்று கைகாட்டி வழிகாட்ட நாம் தொடருகின்ற காலமே
இத்தொழில்நுட்ப யுகம். இக்காலத்தை சந்தோசமாகக் கடக்க வேண்டுமென்றால், அதனை சரியான முறையில்
சந்தோசமாக அனுபவிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு வழிகாட்டிகளாக இளையோர் படைப்புக்கள்
வெளிவருவது அவசியமாகின்றது. செம்மொழி என்று கருதப்படும் தமிழ்மொழிக்கு வரிவடிவம், பழைமை போன்றவையே போற்றுதற்குரியன.
அதனை இளையோர் தொடரும் பட்சத்தில்தான் மொழியும்
வாழும்.
இளையோரிடம் இருந்து எதிர்பார்க்கும் படைப்புக்கள்:
அனுபவங்கள் தான் சிறந்த ஆசான்கள். எமது காலப்பகுதியில் எமக்குக் கிடைத்த
அனுபவங்கள் எமது பிள்ளகளுக்குக் கிடைக்கவில்லை. அதேபோல் எமது பிள்ளைகளுக்குக் கிடைக்கின்ற அனுபவங்கள் எமக்குக் கிடைக்காது என்பதுதான்
உண்மை. அந்த அனுபவங்கள் எமது வாழ்க்கையை மாற்றிப்போடும். எதிர்காலத்தில் நாம் வாழவேண்டிய
வழிமுறைகளைக் காட்டும். புலம்பெயர்ந்த தேசங்களில் மொழியாலும் கலாசாரத்தாலும் கலந்துபட்ட
சூழ்நிலையில் பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்புகின்றோம். அவர்கள் கொண்டுவருகின்ற அனுபவப்
புதையல்களை, அவர்கள் இந்நாட்டில் பதியமிட எழுத்துக்கள் துணையாகின்றன. காலம் காட்டுகின்ற
ஆவணங்களாகின்றன.
இளையோர்களிடையே நண்பர்களுடன் தொடர்பாடல், நண்பர்களிடையே ஏற்படுகின்ற
கருத்து வேறுபாடுகளும் கருத்து ஒருமித்தலும்,
எதிர்கால வாழ்க்கைக்கு விட்டுக்கொடுத்தலின் அவசியமும், எவ்வாறான சந்தர்ப்பங்களில் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது
என்பவை பற்றி விளக்கமாக தெரியப்படுத்த
வேண்டிய கடமை இளையோருக்கு இருக்கின்றது.
உற்பத்திகளும், சந்தைப்படுத்தலும், தேடலும், இளையவர்களிடமே அதிகம் உள்ளது. அதற்கு அத்துறையிலும் அவ்வயதுப்பிரிவிலும்
உள்ள இளையவர்கள் எழுதும் கலையே அவர்களை
மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. எழுத்தின் மூலம் உங்கள்
துறை பெரியவர்களிடம் அடையாளப்படுத்தப்படும். இவ்வாறு வாழ்க்கைக்குத் தேவையான, வாழ்க்கைக்கு
உகந்த விடயங்களைப் பகிர்ந்து கொள்வது எதிர்காலத்தை வளப்படுத்த அவசியமாகின்றது.
இளையவர்களே! உங்கள் சிக்கல்கள்,
வளர்ந்தோர் தருகின்ற குழப்பங்கள்,
கட்டாயப்படுத்தல்கள் பற்றிய உங்கள் ஆதங்கங்களை நீங்கள் வெளிப்படுத்தும்
போதுதான் அதற்கான தீர்வை நீங்கள் பெறமுடியும்,
எம்மால் பெற்றுத்தர முடியும். எவ்வாறான சிக்கல்களை இளந்தலைமுறையினர் எதிர்நோக்குகின்றார்கள்
என்னும் அறிவை பெரியவர்கள் உணர்ந்து கொள்ளமுடியும்.
காலமாற்றங்கள் சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டு வருவது இயற்கை. இளையோரிடம்
உள்ள சிந்தனைகள் பெரியோர்களைச் சென்றடையவேண்டுமென்றால் வாய்மொழி மூலம் வெளிப்படுத்தல்
காற்றில் கரைந்துவிட எழுதி வைக்கும் எழுத்துக்களே சிந்தனைகளின் அத்தாட்சிகளாகின்றன.
அவை நாளேடு, கடிதம் போன்ற வடிவங்களின் இலக்கியங்களாகின்றன என்பதைப் பெற்றோர் பிள்ளைகளிடம்
புரியவைக்க முயலுங்கள்.
இளையவர்கள் எமது எழுத்துக்கு அங்கீகாரம் கிடைக்குமா? என்னும் சந்தேகம் கொள்ளத்
தேவையில்லை. நம்பிக்கை இளையோருக்கு அங்கீகாரம் வழங்கும். சங்கம் தொட்டு நம்பிக்கை கொண்டு
வாழ்ந்த இனமே தமிழ் இனம். காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்று நம்பி வாழ்ந்த
இனம் தமிழ் இனம், 'வெள்ளி தென்புலத் துறைய விளைவயல் பள்ளம் வாடிய பயனில் காலை' என்னும் புறநானூற்றுப்
பாடலிலே கூறியபடி, வெள்ளி என்னும் கோள் தெற்குத் திசைக்கு வந்தால் மழை பெய்யாது என்று நம்பி
வாழ்ந்தார்கள் எம் முன்னோர். எனவே தேவையானவற்றை தெளிவோடு எழுதினால் அழிவில்லை என்று
நம்பிக்கை கொண்டு கணனியைத் திறவுங்கள். இளையோரே! எழுதுவதற்கு தமிழ் இலக்கியம், இலக்கணம் கற்றிருக்க வேண்டும்
என்பது அவசியமில்லை. யாருக்கு எது தேவையோ அந்த அறிவைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போது
எதிர்காலத்திலும் எமது தமிழ்மொழி கண்டம் கடந்து ஆட்சி மொழியாகும். தமிழர்களும் உலகம்
அறியும் இனமாக இனங்காணப்படுவர் என்பது உறுதி.
மார்கழிமாத வெற்றிமணி பத்திரிகைக்காக எழுதியது
அனைவருக்கும் தேவையான, வாசிப்பு மற்றும் எழுத்தின் தேவையை உணர்த்தும் பதிவு.
பதிலளிநீக்குசிறப்பு...
பதிலளிநீக்கு