ஆழ்ந்து உறங்கித்தான் போனேன். என் கரங்களை அசைத்து யாரோ கதைபேச முனைகின்றார் என்பதை என் உணர்வு உணர்கின்றது. கண்கள் விழிக்க மறுக்கின்றன. கண்திரைக்குள் நுழைந்து என்னை ஆட்கொள்பவர் யார்? அப்படியே மனம் மண்டியிட்டுக் கொண்டது. என் முப்பாட்டன் வள்ளுவப் பெருந்தகை என் முன்னே. என் அங்கங்கள் துடிக்கின்றன. ஆழ்மனம் மகிழ்ச்சியால் பூரிக்கின்றது. காரணம் அறிய கண்களை விரிக்கின்றேன்.
அறிந்தாயா மகளே!
நன்றே செய்ய மனம் நாடி ஆண்டுகள் பல முன்னே நான் படைத்த நூலொன்று இன்று 11.11.2017 Helmholtz Gymnasium , Münster Str. 122, Dortmund மேடையிலே பாட்டாய் நடனமாய் வரிகளாய் நின்று நடம் புரிந்தது.
ஸ்ரீஜீவகன் என்னும் மகனார் தன் பாடசாலைக்கு வள்ளுவர் தமிழ் பாடசாலை எனப் பெயர் சூட்டி நடத்திக் கொண்டிருக்கின்றார். அவர் என் மீது கொண்ட தீராக்காதலால் வருடா வருடம் என் மழலைக் குஞ்சுகளுக்கு என்னால் அளிக்கப்பட்ட அறிவுரைகளைப் போட்டியாய் நடத்திப் பரிசுகளும் வழங்கிக் கொண்டிருக்கின்றார். 12 ஆவது ஆண்டு வள்ளுவர் விழா என நடத்தப்பட்டமையிட்டு பூரிப்பில் இன்று புஸ்பமாக மலர்கின்றேன். இன மத அடையாளங்களை வெளிப்படுத்தாது நான் எழுதிய குறள்களுக்கு திரு என்ற பட்டம் சூட்டித் திருக்குறளென இன்று அனைவரும் என்னைத் தம் இனமாய்க் கொள்கிறார். அவ்வாறே அன்றைய நிகழ்வில் மங்கள விளக்கேற்றப்பட்டது. மௌனவணக்கமும் நடைபெற்றது. வரவேற்புரையைப் பாடசாலை ஆசிரியர் கிளி ஸ்ரீஜீவகன் வழங்கினார். நன்றியுரையைப் பெற்றோர் பிரதிநிதி வழங்கினார்.
இதில் ஒரு சிறப்பு என்ன தெரியுமா? ஜேர்மனி மொழியிலே மருத்துவமும், பொறியியலும் கற்கின்ற இரு மாணவர்களும், ஜேர்மனி பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றுபவரும் அறிவிப்பைச் செய்தார்கள். 3 வயது தொடங்கி என் மாணவச் செல்வங்கள் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டார்கள்.
ஐரோப்பிய மண்ணிலே பிறந்து வேற்றுமொழி கலாசாரத்துடன் வாழுகின்ற இம்மழலைகள் ஐரோப்பா பக்கம் என் பார்வையைத் திருப்பி ஐரோப்பிய மண்ணிலே இன்று என் ஆட்சியை வலியுறுத்தியுள்ளார்கள். இறவாப்புகழுடன் என்னை வாழ வைத்துள்ளார்கள். 3 வயதில் தேவாரம் பாடி உலகுக்களித்த திருஞானசம்பந்தன் இறைஅருள் பெற்ற இன்பத்தைவிட இவர்கள் பெற்ற பேறு பெரும் பேறாக நான் நினைக்கின்றேன். அவர்களுக்கு என் அன்பு முத்தங்களைப் பறக்கவிடுகின்றேன்.
என் வரிகளை மனனம் செய்து ஒப்புவிக்கும் கண்மணிகளின் தரத்தை மதிப்பீடு செய்பவர்களாக ஆசிரியர்களும் பழைய மாணவர்களும், கல்விச்சேவை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த நிகழ்விலே மனமுவர்ந்து வழங்குவார் சிறுதொகை பெருவெள்ளமெனக் கருதி விழாவில் கலந்து கொண்டோரிடம் பெற்ற பணத்தை இலங்கைவாழ் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் தொழிற்பட்ட உள்ளப் பெருந்தகைகளையும் பணம் வழங்கிய நன்நெஞ்சங்களையும்
கல்விப்பயன் அளிக்கும் மாந்தரின் உள்ளம்
பெருங்கோயில் ஆற்றலின் உடைத்து
என நவகுறள் கூறி வாழ்த்துகிறேன்.
மனிதம் வாழ மருந்து கொடுத்த நான் இன்று இல்லை. மருந்து இன்றும் கொடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றது. 125 வருடங்கள் கடந்தும் நோய்கள் அகற்றும் மருந்துக் கடைகள் இன்னும் இருக்கின்றன. நோய்களும் குறையவில்லை. மருந்துகள் இன்றி உயிர் வாழ முடியாததுபோல் அறிவுரைகள் இன்றி நல்வாழ்க்கை என்றும் இல்லையென்றாகிவிட்டது. தவறுகள் தொடர்வதும் அதை தவிர்ப்பதற்கு நல்லவர்கள் முனைவதும் இயற்கை.
என் அருமருந்து திருக்குறளை என் மகனார் ஸ்ரீஜீவகன், அவரோடு துணைபுரியும் ஆசிரியர்கள், கல்விச்சேவை செயற்குழு உறுப்பினர்கள், மாணவக் கண்மணிகள் அனைவரும் நன்மக்களாய் நாள்தோறும் வாழ வேண்டும். என் புகழை உலகுக்கு அறியச்செய்யும் ஆற்றலுடன் உலகுக்கு நன்மக்களை உருவாக்கும் ஆத்மீக அரும் பணியாணியாற்றும் எல்லோரும் நன்றாக வாழவேண்டும். கடமை கருதி புகழை எதிர்பார்க்காத சேவைக்குப் புகழ் தானாக வந்தடையும் என்று கூறியதுடன்;, உறக்கம் தவிர். என் கூற்றை இணையம் அறியா எனக்காய் உலகுக்கு அறியச் செய் என ஆணையிட்டு மறைந்து போனார். கனவில் தோன்றி என் கடமையை உணர்த்திய என் முப்பாட்டன் பணியைத் தலைமேற் கொண்டேன்
வள்ளல் பெருமான் வள்ளுவப் பெருந்தகை நாமம் வாழ்க
விழா நிகழ்வுகளை நேரில் கண்ட உணர்வு
பதிலளிநீக்குமகிழ்ந்தேன்
நன்றி சகோதரியாரே