• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 4 மார்ச், 2012

    வாழ்க்கைப் பாடம்


    மனித மனங்கள் பற்றிய பதிவு
                
    சாளரத்தினூடு தன் பார்வையைச் செலுத்தியவாறே அருகே அமர்ந்திருந்த சௌம்யாவின் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் கன்னத்தை ஈரமாக்கியிருப்பதை அறிந்த அவள் தாய் வித்யா, அவளை அணுகி பனி படர்ந்த அழகைக் கண்ட ஆனந்தக் கண்ணீரா? இல்லை ஆழமான இதயம் அழுகின்ற நீரோட்டமா? என்று மனதில் நினைத்தவளாய் தன் மகளைக் கட்டி அணைத்தான். விடுங்கோ அம்மா! என்று சௌம்யா தாயாரைத் தள்ளிவிட்டாள்.  நான்தான் ஏதும் குற்றம் செய்துவிட்டேனோ! என்று மனதில் நினைத்தவளாய் அவளைச் சீண்டிப்பார்த்தாள். அவளும் சீறினாள். இது விளையாட்டு இல்லை. அவள் மனதால் அழுகின்றாள். என்று புரிந்து கொண்டாள். ''சௌம்யா அம்மா ஏதாவது பிழை செய்தேனா? இல்லை உனக்கு வேறு ஏதாவது பிரச்சினையா? எதுவாக இருந்தாலும் சொல். அம்மாவைத் தவிர ஒரு பெண்ணுக்கு வேறு யாரும் சரியான வழியைக் காட்டமுடியாது. அழுவதால் எந்தப் பிரச்சினையும் தீரப் போவதில்லை. எதுவாக இருந்தாலும் சொல் என்றாள். 

                      ''அம்மா என்னுடைய Best Friend லாராவிடம் எனக்குக் கணிதப்பாடத்தில் குறைவான புள்ளி கிடைத்ததைச் சொல்லிக் கவலைப்பட்டேன். அவளும் அநுதாபமாகக் கேட்டுக்கொண்டிருந்து விட்டு பிறகு 5,6 பிள்ளைகளிடம் அதைப் போய்ச் சொல்லி நக்கலடித்துக் கதைக்கின்றாள். அவள் என்னுடைய Best Friend என்று இவ்வளவு நாளும் நினைத்தேன் அம்மா'' என்று கூறி விம்மிவிம்மி அழுதாள். பெரியவர்கள்தான் இப்படி என்றால் இந்தச் சிறியவர்களும் இப்படியா? என்று மனதில் நினைத்த வித்யா, மகளை அணைத்தபடி, ''இங்கே பார்! பூமியெங்கும் கொட்டிக் கிடக்கிறது வெள்ளைப் பனி உன் வார்த்தைகளைப் போல. அழகாகக் காட்சியளிக்கின்றது. ஆனால், அழுக்குகளும் குப்பைகளும் நிறைந்த பூமியின் மேல் மாசற்ற தன் வெண்பஞ்சுத் தோற்றத்தை வெளிப்படுத்தி அழுக்குகளை மறைத்துக் கிடக்கின்றது. அதேபோலேயே நீ நல்லவர்கள் என்று நினைக்கும் மனிதர்கள், மனதுக்குள் எத்தனை அழுக்குகளை வைத்திருக்கின்றார்கள் என்று யாருக்குத் தெரியும். பனி படர்ந்த பூமியில் பனியை விலக்கி நல்ல நிலத்தை அறிதல் போல நல்லவர்கள் யாரென்று அறிந்தல்லவா நட்பைத் தேடிக் கொள்ள வேண்டும். யாவரும் வெள்ளை உள்ளம் கொண்டவர்கள் போலவே தெரிவார்கள். நூல்கள் பல வெளியிட்டிருப்பார்கள். அதில் பல நல்ல அறிவுரைகள் கூறியிருப்பார்கள். ஆனால், கேவலமான பல காரியங்களைச் செய்வார்கள். மேடையேறிப் பேசுவார்கள் ஆனால், தம் வாழ்க்கையில் பல குப்பைகளை வைத்திருப்பார்கள்.  அதனாலேயே சிலருடன் புளியம்பழம் போல் ஒட்டியும் ஒட்டாமலும் வாழவேண்டும் என்பார்கள். எதையும் எண்ணி அலட்டிக் கொள்ளாதே. 

             சிரித்துப் பழகினால் ஆளை வளைக்கப் பார்க்கின்றாள் என்பார்கள். துயரைப் பகிர்ந்தளித்தால் நன்றாய் நடிக்கின்றாய் என்பார்கள். திறமையைக் கொட்டினால், புகழுக்கு வீங்கிக் கிடக்கின்றாள் என்பார்கள். பேசாமல் இருந்தால், பெருமையில் இருக்கின்றாள் என்பார்கள். வாய்விட்டுப் பேசினால், அலட்டுகின்றாள் என்பார்கள், தேடிப் பழகினால், வேறு ஆளில்லை என்னைத் தேடி வருகின்றாள் என்பார்கள். ஒதுங்கிப் பழகினால், லெவல் அடிக்கின்றாள் என்பார்கள். யதார்த்தம் உரைத்தால் படித்த பெருமையில் பேசுகின்றாள் இல்லையென்றால் வித்துவச் செருக்கு என்பார்கள். இவளுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவள் என்பார்கள். உதவி செய்வார்கள் அதனால், உயர்ந்துவிட்டால், என்னால் உயர்ந்துவிட்டுப் பெருமைகாட்டுகின்றாள் என்பார்கள். எழுதிக் கொட்டினால், வார்த்தையில் வன்முறை காட்டுகின்றாள் என்பார்கள். எழுத்தை நளினப்படுத்தினால் நன்றாய் நடிக்கின்றாள் என்பார்கள். அதனால், மனதை அறியும் கருவி கண்டுபிடிக்கும் வரை மனித வாழ்க்கையை அவதானமாகத்தான் வாழவேண்டும்'' 

         ''இல்லை அம்மா! அப்படி ஒரு கருவி இருந்தால், மனிதன் நிம்மதியாக வாழவே முடியாது. அதனால், அந்தக் கருவி கண்டுபிடிக்கக் கூடாது. வேறு இனமாக வாழவேண்டும். என்றாள் சௌம்யா.  ''பிறந்துவிட்டால், அந்தப் பிறப்பின் இறுதி வரை வாழ்ந்துதான் முடிக்க வேண்டும். ஏன் மனித இனத்தில் மட்டுமே இவ்வாறான குணமுள்ளவர்கள் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றாயா? விலங்குகளில் இல்லையா? கொம்பைக் கொண்டு மாடு ஏன் படைக்கப்படுகின்றது? தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காகவே. நன்றியுள்ளது நாய். ஆனால், தன் உணவை உண்ண வருகின்ற பிற நாய்களைத் துரத்திவிடுமே. தம்மைப் பாதுகாக்க பிற உயிரினங்கள் ஆயுதங்களுடனேயே பிறக்கின்றன. கடலுக்குள் வாழுகின்ற உயிரினங்களைப் பார். சில மீன்கள் ஒரு வகையான வாயுவை வெளியகற்றுகின்றன. இது எப்போதும் எதிரியைக் குறி பார்த்தே வாழும். 


    சில மீன்கள் வாளுடன் வாழுகின்றன. சில மீன்கள் ஒருவிதமான பசையைக் கக்கும் இதன் மூலம் வேற்று மீன்கள் இப்பசையில் ஒட்டிக் கொள்ளும். இப்படித்தான் வாழ்க்கை முழுவதும் போராட்டம். மனிதனும் மிருகங்களும் போராடியே வாழ வேண்டும். ஏன் எத்தனை செல்களுடன் போராடி முன்னிலைக்கு வந்து எனக்கு நீ மகளாகப் பிறந்திருக்கின்றாய்''  அப்படியென்றால், என்னதான் செய்வது அம்மா!'' என்று வினா எழுப்பினாள் சௌம்யா. 

                        '' வெள்ளைக் கடதாசியாய் வாழாதே. உன்னில் பல கிறுக்கல்களைக் கீறிவிடுவார்கள்.   துன்பமோ இன்பமோ அநுபவித்துப் பார். சோர்ந்து கண்ணீர் விட்டால், வாழ்க்கையை வாழவே முடியாது.  இதுவே வாழ்க்கை என்ற எண்ணத்தைத் திடகாத்திரமாகக் கொள். பழிப்பவரை எதிர்த்து நில். சட்டை செய்யாதே. உன் எதிர்கால வாழ்க்கையே உன் இலட்சியமாகக் கொள். சுயநலவாதியாய் இரு. இதைத்தான் வள்ளுவரும் 

    ''தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
     துன்னற்க தீவினைப் பால்''  

    என்று கூறியிருக்கின்றார். சுயநலமுள்ளவன் பிறர்க்குத் தீமை செய்ய மாட்டான். ஏனென்றால், அது தன்னைப் பாதிக்கும் என்ற காரணத்தை மனதில் கொள்வதனால் மனதைத் தீவினைபால் செலுத்த மாட்டான். உன்னை நீ நேசிக்கப் பழகிக் கொள். உன்னை வளர்த்துக் கொள். இடையில் வருகின்ற இடைஞ்சல்களை எடுத்தெறிந்துவிட்டு நிமிர்ந்து நில். மற்றவர்கள் தருகின்ற நிந்தைக்கு உன் கண்ணில் இருக்கும் கண்ணீர் வீணாகக் கூடாது. நெஞ்சை நிமிர்த்திக் கொள். உன் மனதுக்கு நியாயம் என்று படுவதை எதிர்த்து நின்று கேட்கத் தயங்காதே. சட்டென்று பேசி நியாயம் காண். சிந்தித்துக் கோழையானால், உன்னை ஏறி மிதித்து மேலே போய்க் கொண்டே இருப்பார்கள். நல்ல மனிதர்களைக் காண்பதும் அரிது. அவர்களுடன் பழகுவதும் அரிது. உலகத்தில் எல்லோருக்கும் நல்லவளாய் வாழ உன்னால் முடியாது. நல்ல மனதர்களைக் கண்டுபிடிக்கவும் உன்னால் முடியாது. அதனால், உன் மனதுக்குச் சரி என்று படும் விடயங்களை மட்டுமே செய். சந்தேகம் ஏற்பட்டால் சரியா என்று மறு பரிசீலனை செய்து பார்த்து திருத்திக் கொள். இப்போது எழுந்து வா சுத்தக் காற்றைச் சுவாசிக்க காலாற மரங்கள் அடர்ந்திருக்கும் பகுதியில் நடந்து வருவோம். காதுக்குள் மெல்லிய இசையைக் கேட்போம். இல்லை குருவிகளின் ரீங்காரத்தை ருசிப்போம். மரங்களின் சல்லாபத்தை ரசிப்போம். இயற்கையின் அற்புதத்தைக் காண்போம்'' என்று நீண்ட பிரச்சாரம் செய்து முடித்தாள் வித்யா. எழுந்த சௌம்யா அம்ம்ம்மா.......என்ற வண்ணம் அவளை இறுக்கிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். ''அப்படி என்றால் இந்த மிருகங்கள், மீன்கள் எல்லாவற்றிற்கும் பாதுகாப்புக் கருவிகளை யார் படைத்தார்கள் அம்மா? சௌம்யா அடுத்த கேள்வியைத் தொடுத்தாள். தாய்க்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கின்றது என்று மனதில் நினைத்தபடி '' அது ஒரு பெரிய உhயிவநச.  அவை ஒன்றும் படைக்கப்படவில்லை. தேவை கருதி மெல்ல மெல்ல வளர்ந்தன. மனிதனுக்கு வால் இல்லாது போனது போலவேதான் நடந்தது. இது பற்றி இன்னும் ஒருநாள் விளக்கமாக விளக்குகின்றேன்'' என்ற படி தன் மகளின் கவலை தீர்த்த நிம்மதிப் பெருமூச்சுடன் எழுந்தாள் வித்யா. 

    7 கருத்துகள்:

    1. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரியக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html

      பதிலளிநீக்கு
    2. அருமையான பதிவு.
      வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. உங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா .

        நீக்கு
    3. பதிவிற்கான உட்பொருளும் சொல்லிச் சென்ற
      விதமும் மிக மிக அற்புதம்
      இதுபோன்ற மனதோடு பேசுகிற உறவுகள்
      குறைந்து வருவதால் இழப்புகள் அதிகமாகி வருகிற
      இந்தச் சூழலில் தங்கள் பதிவு
      மிக மிக முக்கியமானது
      அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியது
      மனம் கவர்ந்த பதிவு.பகிர்வுக்கு நன்றி
      தொடர வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...