• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 4 ஜூன், 2011

    என்னையே நானறியேன் (அங்கம் 6 )

    எதிர்கொள்காதை            


    வரம் பெற்ற வாழ்வு
    திறம் கெட்டுப் போனாலும்
    உரம் கொண்ட வரமது
    உருக்குலைக்கும் உருக்கினார் வாழ்வை

    வாழ்நாட்களில் வந்து போகும் சோகநினைவுகள் வரதேவி மூளைப் புதையலில் அழியாத அறிவுப்பலகையாய் அச்சடிக்கப்பட்டிருந்தன. அவ்வப்போது தலைகாட்டும் நினைவுகளை விரட்டியடிக்க வரதேவி விரும்பிய பணி மீண்டும் வீடு தேடி வந்தது. திறமையும் அறிவும் மறைக்கப்பட்டாலும் மறுக்கப்பட்டாலும் மடைதிறந்த வெள்ளம் போல் ஓர்நாள் பெருக்கெடுத்தே தீரும். இதனாலேயே அறிவுச்செல்வம் அழிக்கமுடியாத செல்வமாய்க் கருதப்படுகிறது. அறியாதமொழி, புரியாத மனிதர்கள், தெரிந்திராத வாழ்வு எதுவாய் இருந்தாலும் அறிவுச் செல்வம் கிடைக்கப்பெற்றார் அந்தஸ்து வாழ்வை அகிலம் எங்கு சென்றாலும் அடையப் பெறுவார். வரதேவி இவ்வாறே எதிர்காலத் தலைமுறைகள் தமிழால் தலைநிமிர்ந்து நிற்கத் தேடித் தன் மனைபுகுந்தார் தம் வேண்டுகோளுக்குத் தலைசாய்த்தாள். மீண்டும் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் மனதில் பிரகாசித்தது. மீண்டு;ம் ஆர்வ வெள்ளம் மனமெங்கும் பாயத் தொடங்கியது. தொழிலாய்க் கொள்ளாது, பணியாய்க் கொண்டு பயின்ற பல கல்விக்களஞ்சியங்களைப் பாலர் தொட்டுப் பருவ வயதினர்வரைத் தாரைவார்க்கத் தீர்மானித்தாள். தமிழ்ப்பாடசாலை சென்றாள். பயின்றாள், பயிற்றுவித்தாள், மனநிறைவு பெற்றாள். ஆசிரியத்தொழில் நாளுங்கற்று நாளுங்கற்பிக்கும் தொழிலல்லவா! மாணவர்கள் கற்க ஆசிரியர்கள் கற்க வேண்டியதும் கற்பிக்க வேண்டியதும் கடமை அல்லவா. இனியொரு தடவை இவ்வரதேவி கற்பித்தலில் தடை காணமாட்டாள். தடைசெய்வார் துணிவுதளர்ந்த நிற்கும் நேரமிதுவென முற்றாக நம்பியதனால், முடிவாய் இப்பணிக்கு முகங்கொடுக்கத் துணிந்தாள். வாரம் இருதடவைகள் காணும் தமிழ்ச்சிறுவர்கள் முகங்கள், அவள் மனதிற்கு மருந்தாகியது. நோயை விரட்டியடிக்கும் பயிற்சியாகியது. 
         
           இந்நிலையில் கரண் வாழ்வில் காலம் என்ன மாற்றத்தைக் காட்டியது? காத்திருக்கும் வாழ்வில் காலம் தந்த பரிசை யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள் வேண்டியது கட்டாயமாகிறது. கரண் கால் விரலில் கறுப்பாய் ஒரு புள்ளி அதிசயமாய்த் தோன்றியது. மெல்ல மெல்லக் கால்விரல் நிறம் மாறத் தொடங்கியது. உருக்குலையும் நிலை கண்ட வைத்தியர்கள், இவ்விரலைப் பாதத்திலிருந்து அகற்றிவிட்டனர். ஓர்விரல், ஈர்விரல் என அவ்விரல்கள் அனைத்தும் பாதத்திலிருந்து விடைபெற, இதன் தாக்கத்தால் முழங்காலில் கீழ்ப்பகுதி பழுதடையும் நிலை கண்ட வைத்தியர்கள் முழங்காலின் கீழுள்ள பகுதியை அகற்றிவிட்டார்கள். ஒற்றைக்காலில் வாழ்வைக் கழிக்க வேண்டிய தண்டனை கிடைக்கப் பெற்றுத் தடுமாறிவிட்டான் கரண். இதை விதி என்பதா? இல்லை வினை விதைத்தான் வினை அறுப்பான் என்பதா? ஒரு மனிதன் செய்யும் தவறுகள் தண்டிக்கப்படும் வேளையில் அவன் அகற்றிய புண்ணியங்கள் புதுப்பொலிவு பெற்றுத் துணை தரத் துடித்துக் கொண்டு ஓடிவரும் இந்த வகையில் ஒற்றைக் கால் இழந்த கரணுக்கு ஒரு தடியாய் யார் இருப்பார்? தாலியின் மகத்துவம் இங்கு தலைநிமிர்ந்து நிற்கின்றது. தமிழர் கலாசாரம் என்றும் அழிந்துவிட மாட்டாது என வரதேவியின் பணிவிடை ஆணித்தரமாகக் காட்டியது. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடக்கப் போவது நல்லதாகட்டும் எனத் தன் அணைப்பில் மட்டுமே எதிர்காலத்தைக் கழிக்கவிருக்கும் கணவனைப் பராமரிக்கும் பாரிய பொறுப்பைத் தலைமேல் கொண்டாள். உலகம் உருண்டையானது. எங்கு சுற்றியும் திரும்பவும் அந்த இடத்திற்கே வந்தேயாக வேண்டும். மருத்துவமனை கரணுக்கு நல்ல பல பாடங்களைக் கற்றுத் தந்தது. சிந்தித்துச் சிந்தித்துத் தனக்குத் தானே பட்டை தீட்டித் தன் வாழ்வைப் பொலிவாக்கினான். தன் எதிர்கால வாழ்வைத் தன் மனையாள் கையிலே தங்கியிருக்கும் பேருண்மை புரிந்து கொண்டான். பெட்டிப்பாம்பாய் வீட்டினுள் அடங்கிக் கிடக்கும் கணவனின் தேவைகளைத்  தெரிந்து புரிந்து தீர்த்து வைத்த வரதேவி, வாழ்வை மாற்றியமைக்கும் காலத்தை எண்ணிப் பார்த்தாள். தனக்குள்ளே ஒரு சிரிப்பு. இது அலட்சியச் சிரிப்பா! இல்லை வாழ்ந்து பார்த்த வாழ்வுஞானச் சிரிப்பா! குடியிருக்கும் வீடானது அடிக்கடிப் பழைய நினைவுகளை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. வேறு மனை புகுந்தால் வேற்று எண்ணங்கள் மனதில் பதியத் தொடங்கும். புதியவீடு, புதிய சூழ்நிலை புதிய வீட்டின் மாற்று அலங்காரம், அனைத்திலும் ஏற்படும் மாற்றமானது மனதில் மாறுதலை ஏற்படுத்தலாம் என்ற தீர்மானம் மனதில் வலுப் பெற்றது. இப்போது ஒரு புதிய முயற்சி முனைப்புப் பெற்றது. பத்திரிகைப் பக்கங்கள் திருப்பப்படுகின்றன. வீடு வாடகைக்கு விடப்படும்...... இது எமது தராதரத்திற்கு ஒத்துவருமா? வீடு இருக்கும் சூழ்நிலை பொருத்தமாக இருக்குமா? தேடத் தொடங்கினாள். அடுத்துவரப் போகின்ற தூரத்து வெளிச்சத்தை எதிர்பார்த்து வரதேவி காத்திருக்கின்றாள்.


    கதையின் கதாநாயாகி கண்ணீர்வரிகள் என் கைப்பட்டு இலக்கிய வரிகளாயின. இது ஒரு பக்கப் பார்வையின் அலசலே. வரதேவி கணவன், மகன், சூழலிலுள்ளோர் பார்வையில் வேறுவிதமாய் இக்கதை அலசப்படலாம். அனைத்துப் பக்கப் பார்வையிலும் உருமாறி இலக்கியம்  விரிவுபடலாம். ஆயினும் 6 பாகங்களும் காத்திருந்து பொறுமையுடன் வாசித்து மனம் பதித்த உங்களுக்கு நன்றியைத் தெரிவித்து உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன். 

             
                     

    5 கருத்துகள்:

    1. நல்ல தொடர் தொடர்ந்து போய் இருந்தால் நல்ல விருந்தாக இருந்திருக்கும்
      அடுத்தது எப்ப
      --

      பதிலளிநீக்கு
    2. கோவைக்கவி (vetha.)4 ஜூன், 2011 அன்று PM 1:11

      நிசமான கதையை எழுதத் துணிவு வேண்டும். ஆரம்பம் விரிவாகத் தொடங்கி போகப் போக சுருக்கி விட்டது போன்ற ஒரு உணர்வு நான் உணர்ந்தது. உங்கள் பணி தொடர வாழ்த்துகள் கௌசி.

      பதிலளிநீக்கு
    3. இருக்கலாம். முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் விரிவைக் கவனிக்கவில்லை. வாசிப்பவர்களுக்கும் அலுத்துவிடக் கூடாது அல்லவா. இருபபினும் தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துக்கதை; தரும் உங்கள் அன்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளகின்றேன்.

      பதிலளிநீக்கு
    4. நன்றி யாதவன். தொடர்கதை வாசிக்கும் பொறுமை இப்போதெல்லாம் யாருக்கும் இருப்பதில்லை. மெலோட்டமாகப் பார்த்து விட்டு மற்றைய வேலைக்கு இறங்கிவிடுவார்கள். நீங்கள் விரும்புவதனால் சில இடுகைகளின் பின் மீண்டும் வர இருக்கின்றது. பொறுமையின் கனிவு. பொறுத்திருங்கள்.

      பதிலளிநீக்கு
    5. விருந்தாய் அருமையாய் தொடர் அருமை. பாராட்டுக்கள்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...