• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 3 மார்ச், 2026

    ஒரு குழந்தை பிறக்கும் போது அங்கே ஒரு தாயும் பிறக்கிறாள்

     



    பூமிப் பந்திலே தோன்றிய உயிர்களில் மகத்தான உயிரினம் மனித இனம். இம்மனித இனத் தோற்றத்தில் ஆணும் பெண்ணும் அவசியமாக இருந்தாலும் தாயே ஒரு கரு உருவாகி கர்ப்பம் தரித்துப் பாராமரிப்பதில் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளுகின்றாள். அந்தத் தாய் கருப்பை ஆய்வு கூடத்தினுள் வைத்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து இந்த உலகத்துக்குக் கொடுப்பது என்பது இலகுவான காரியமல்ல. மூன்றாவது மாதத்துடன் வாந்தி, தலைச் சுற்றலில் ஆரம்பித்துத் உடலுக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உடல் உணர்ந்து கொள்ளும் வரை உபாதை அடைகின்றாள். வலிதாங்கி, உடல் நோய் பொறுத்து, பத்தியம் இருந்து தாய் குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். எம்முடைய தமிழ் மக்கள் பச்ச உடம்புக்காரி என்று குழந்தையைப் பெற்றெடுத்த தாயை கவனமாகப் பேணுவார்கள். குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் மற்றும் மன நலத்தை மீட்டெடுக்க ஒவ்வொரு கலாச்சாரத்திலும் தனித்துவமான வீட்டு மருத்துவச் சடங்குகளும், பாட்டி வைத்திய முறைகளும் (Home remedies) பின்பற்றப்படுகின்றன. அதில் மட்டக்களப்பு மக்கள் இன்றும் சில பகுதிகளில் குழந்தை பிரசவித்த தாய்மாருக்கு எடுக்கும் கவனம் குறிப்பிடத்தக்கது.


    குழந்தை பிறந்த பிறகு ஒரு தாய்க்கு ஏன் அதிகப்படியான கவனிப்பும் பராமரிப்பும் தேவைப்படுகிறது என்றால், ஒரு உயிர் உருவாவதும், அது உலகிற்கு வருவதும் தாயின் உடலுக்கு மிகப்பெரிய சவாலாகும். பிரசவத்தின் போது ஏற்படும் இரத்த இழப்பால் உடல் பலவீனமடையும். அதை ஈடுகட்ட சத்தான உணவு அவசியம். கர்ப்ப காலத்தில் விரிவடைந்த கருப்பை மற்றும் பிற உறுப்புகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப கால அவகாசம் தேவை. உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் திடீரென குறைவதால் உடல் சோர்வு ஏற்படும். பிரசவத்திற்குப் பின் பல பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு அல்லது 'Baby Blues' ஏற்பட வாய்ப்புள்ளது. தூக்கமின்மை மற்றும் புதிய பொறுப்புகள் தாய்க்கு மன அழுத்தத்தை தரலாம். அன்பான கவனிப்பு மற்றும் அரவணைப்பு மட்டுமே தாயை இந்த மனநிலையில் இருந்து மீட்க உதவும். 

    தாய்ப்பால் ஊட்டுதல் 

    குழந்தைக்குத் தேவையான முழு ஊட்டச்சத்தும் தாயிடமிருந்தே கிடைக்கிறது. தாய் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும். தாய் உட்கொள்ளும் உணவே குழந்தையின் செரிமானத்தையும் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு தாயின் நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாகக் குறைந்திருக்கும். கிருமித்தொற்று ஏற்படாமல் இருக்கவும், உடல் காயங்கள் (தையல்கள் போன்றவை) விரைவில் ஆறவும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

    பெரும்பாலான நாடுகளில் இந்த காலத்தை "தனிமைப்படுத்தப்பட்ட காலம்" (Confinement Period) என்று அழைக்கிறார்கள். அதன் முக்கிய விவரங்கள் இதோ:

    இந்தியாவில் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு என்பது ஒரு கலை போலவே போற்றப்படுகிறது. தாய்க்கும் குழந்தைக்கும் தினமும் வெதுவெதுப்பான நல்லெண்ணெய் அல்லது மூலிகை எண்ணெய் மசாஜ் செய்யப்படுகிறது. இது எலும்புகளை வலுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. பிரசவ லேகியம், காயம் (காயப்பொடி), ஓமம் கலந்த நீர் போன்றவை செரிமானத்திற்கும் பால் சுரப்பிற்கும் தரப்படுகிறது. பொதுவாக 40 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் ஓய்வெடுக்க வேண்டும். 'வயிறு கட்டுதல்' (Tummy Binding) மூலம் கருப்பை பழைய நிலைக்குத் திரும்ப உதவுகிறார்கள்.

    2. சீனா: 'சுவோ யுயே சி' (Zuo Yue Zi - Sitting the Month)

    இதன் பொருள் "ஒரு மாதம் அமர்ந்திருத்தல்" என்பதாகும். 'வெப்பம்' தான் இவர்களின் முக்கிய கொள்கை. தாய்மார்கள் குளிர்ந்த நீரில் கை நனைக்கவோ, குளிக்கவோ, தலை வாரவோ கூடாது என்பது பழங்கால நம்பிக்கை. இஞ்சி, பேரீச்சம்பழம் மற்றும் மூலிகைகள் சேர்த்த சூப் வகைகள் அதிகம் தரப்படும். குறிப்பாக, பன்றி கால் சூப், பால் சுரப்பிற்கு மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

    3. லத்தீன் அமெரிக்கா: 'லா குவாரன்டீனா' (La Cuarentena)

    மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் 40 நாட்கள் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. 'Faja' எனப்படும் துணியால் வயிற்றை இறுக்கமாகக் கட்டுவார்கள். உடலை முழுவதுமாகப் போர்த்திக் கொண்டு காற்று புகாமல் பார்த்துக்கொள்வார்கள். 40-வது நாளில் தாய்க்கு ஒரு மூலிகைக் குளியல் அளிக்கப்படும், இது 'உடலை மூடுதல்' (Closing the bones) என்று அழைக்கப்படுகிறது.

    4. மலேசியா மற்றும் இந்தோனேசியா: 'பாந்தாங்' (Pantang)

    'பெர்டுங்கு' (Bertungku) என்ற முறையில், சூடாக்கப்பட்ட கற்கள் அல்லது மூலிகை மூட்டைகளைக் கொண்டு வயிற்றுப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பார்கள். 'ஜமு' (Jamu) எனப்படும் பாரம்பரிய மூலிகை பானங்கள் உடல் வலிமையைத் திரும்பப் பெற வழங்கப்படுகின்றன.

    இதுவே ஒரு குழந்தை பிறந்துவிட்டால் மட்டக்காளப்பிலே பிள்ளை பிறப்பதற்கு 1 மாதத்திற்கு முன் கருவேலம் பட்டை, சித்தரத்தை, வேர்க்கொம்பு, பறங்கிக்கிழங்கு, மஞ்சள், ஓமம், வெட்டிவேர், நாயுருவி வேர், அசமதாகம், மிளகு, திப்பிலி போன்ற பல வேதிப் பொருட்களை மாதவிடாய் வந்த பிள்ளையிடம் கொடுத்து சின்னச்சின்னத் துண்டாக வெட்டிக் கழுவி அதனைத் தென்னஞ்சாராயப் போத்தலுக்குள் நல்ல நேரம் பார்த்துப் போட்டு மூடிவிடுவார்கள்.

    அந்தப் போத்தலை நீர் ஊறுகின்ற வாய்க்கால் பகுதிக்கு அண்மையில் நிலத்துக்குக் கீழே புதைத்து வைப்பார்கள். குழந்தை பிறந்தபின் ஊற வைத்த போத்தலை எடுக்கும் போது அது நன்றாக ஊறி இருக்கும்.

    குழந்தை பிறந்து 3 ஆவது நாளில் குழந்தை பெற்ற பெண்களை நன்றாகச் சுடுநீரில் குளிக்க வார்ப்பார்கள். மதியச் சாப்பாட்டின் பின் இந்த ஊற வைத்த பொருட்களை வடித்தெடுத்து அப்பொருள்களை இவையெல்லாம் ஊறிய தென்னஞ்சாராயத்தில் இருந்து ஒரு தேக்கரண்டி எடுத்துக் குடிக்கக் கொடுப்பார்கள்.

    அதன் பின் இந்த ஊறிய வேதிப் பொருட்களை நன்றாகக் காய வைத்து இடித்து மாவாக்கி குழந்தை பெற்ற தாய்மாருக்கு மாதவிடாய் ஏற்படுகின்ற காலத்தில் தேனில் கலந்து 3 உருண்டைகள் உருட்டிக் கொடுப்பார்கள்.

    பெண்களைக் குளிக்க வார்ப்பதை வேது வார்ப்பது என்பார்கள். அதற்கு வேப்பம் பட்டை, வேப்ப இலை, ஆமணக்கு, ஆடாதோடை போன்றவற்றை அவித்த நல்ல சூடான நீரை இடுப்புப் பகுதிக்கெல்லாம் ஊற்றிக் குளிக்க வார்ப்பார்கள்.

    வேர்க்கொம்பு, பரங்கிக்காய், கருவேலம் பட்டை, அசமதாகம், மஞ்சள், வெள்ளைப் பூண்டு, மிளகு, திப்பிலி போன்ற பொருட்கள் மாத்திரமே ஊற வைத்து மண்ணுக்குள் புதைக்காமல் கொடுக்கின்ற வழக்கம் ஏறாவூரில் இருக்கின்றது.

    இவ்வாறெல்லாம் கொடுப்பது மட்டுமல்ல. பத்தியக்கறி என்று சரக்குச் சாமான்களாலேயே தூள் செய்து அந்தத் தூளிலேயே தாய்க்கு உணவு சமைத்துக் கொடுப்பார்கள். ஒரு மாதத்துக்குக் குஞ்சுக் கோழி, மீன், முருங்கைக்காய் என்று பார்த்துப் பார்த்துச் சமைத்து உண்ணக் கொடுப்பார்கள்.

    ஒரு குழந்தை பிறக்கும்போது, அங்கே ஒரு தாயும் பிறக்கிறாள். பழைய ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், புதிய பொறுப்புகளைச் சுமக்கத் தயாராகவும் அந்தத் தாய்க்கு ஓய்வும், சத்தான உணவும், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பான அரவணைப்பும் மிக அவசியம்.





    ஞாயிறு, 1 மார்ச், 2026

    வாழ்வின் போராட்ட முதல் படி




     விழுவதும் எழுவதும்

    எழுந்ததும் விழுவதும்

    வாழ்வின் இயற்கை

    முயற்சியின் முதற்படி

    படி படி வாழ்வைப் படியென

    உள்ளத்துள் ஒரு உந்துதல்

    உதைத்துக் கொண்டே

    உரக்கச் சொன்னது

    கற்றேன் கற்றேன்.


    ஒரு அடி தரையில் படிய

    மறு அடி உயர்த்த

    தரையில் முத்தமிடும்

    உடலின் ஓங்கிய குரல்

    உள்ளிருந்து ஒலித்தது

    போராடத் துணிந்தாய்  - உன்

    வாழ்வின் முதல் நம்பிக்கை

    முதல் வெற்றி 



    புதன், 18 பிப்ரவரி, 2026

    உயிரினும் ஓம்பப்படும்





    உயிர் வாழ உள்ளத்து உணர்வுகளே உத்தமமானது. இல்லையென்றால் வாழ்தல் என்பது ரொபோட்டோக்களின் அசைவாகவே அமையும். 

    உயிர்களின் உணர்வுகளுக்கு உரமூட்டுகின்ற காதலென்னும் பொதுவான மொழியானது, இனம், கடந்து உயிர்களின் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகின்றது. இது மனிதனின் ஆதித் துடிப்பு. இது மின்னலாயும் வரும், வாழ்நாள் முழுவதும் தொடரும் தீபமாயும் அமையும். ஒருவரின் குறைகளை நிறைகளாய்க் காண்பதும், அவரின் பலவீனங்களை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக அவருடன் வாழ்வதும் காதலிப்பவர்களால் மட்டுமே முடியும்.

    மிருகமாய்த் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய மனித இனத்துக்கு ஏற்படும் காதல் உணர்வானது பிற உயிரினங்களை விடப் புனிதமானது என்று மட்டும் கூற முடியாது. அதேபோல யாருக்கு யாரில் காதல் ஏற்படும் என்பது யாராலும் கூற முடியாது. அக்காதல் எவ்வளவு காலம் நீடித்திருக்கும் என்றும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. உள் உணர்வுகள் ஏற்படுத்துகின்ற பிரதிபலிப்புக்குக் காரணம் தேடாது புரிந்துணர்வின் பால் மனத்தைச் செலுத்துவதே தற்கால பண்பாட்டம்சமாக இருக்கின்றது.

    உடல் அழகில் ஆரம்பித்து ஆன்ம அழகை நோக்கி உயர்த்தும் சக்தி காதலுக்கு உண்டு என்று பிளேட்டோவும், ஒருவர் மற்றவர்களுக்காக வாழும்நிலை காதலுக்கு உண்டு என்று அரிஸ்டோட்டிலும், அன்பும் காதலும் குழந்தைப் பருவ அனுபவ நீட்சி என்று சிக்மண்ட் ஃப்ராய்ட்டும் கூறினார்கள்.

    காதலை இலக்கியங்கள் அற்புதமாக படம்பிடித்துக் காட்டியுள்ளன. “யாயும் ஞாயும் யாராகியரோ…” என்ற வரிகளில் காதல் சமூக எல்லைகளை உடைப்பதைப் பார்க்கிறோம். சிலப்பதிகாரக் கண்ணகியின் காதல் கணவன் மீது கொண்ட பக்தியும், நீதிக்கான போராட்டமும் ஆகும். கம்பராமாயண ராமன் – சீதை காதல் தியாகத்தின் உச்சம். ஷேக்ஸ்பியரின் ரோமியோ - ஜூலியட் சமூக விரோதங்களை எதிர்த்து உயிர் துறக்கும் காதல். டோல்ஸ்டாயின் அன்னா கரெனினா வில் வரும் காதல் சமூக கட்டுப்பாடுகளுக்குள் சிக்கும்போது உருவாகும் வலியை எடுத்துக் காட்டுகின்றது.

    வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்துகின்ற, அடிப்படையான, ஆச்சரியப்பட வைக்கும் காதலின் பிரதிபலிப்புக்களை மிருகங்கள், பறவைகளின் வாழ்க்கையிலும் காணலாம்.

    தன்னுடைய குடும்பத்தைத் தனியே விடாது குடும்பமாகப் பயணிக்கும் யானைகள் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும் போதும் குடும்பமாகச் சீரழிப்பதைக் கண்டிருக்கின்றோம். குட்டியை அணைத்துக் கொண்டு கொப்பு விட்டுக் கொப்புத் தாவுகின்ற குரங்குக்குக் கூட்டங்கள் தாய்மையின் தியாகமான காதலை உணர்த்துகிறன, இணை பிரிந்தால் உயிர் வாழாமை மட்டுமல்லாது இரையுண்ணாது காலங்கடத்தும் பறவைகளும், வளர்த்த எசமானைக் கண்டதும் வாலாட்டி மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் நாயும், எசமானில் பாசம் கொண்ட மாடும் காதலுக்குச் சாட்சிகளே.

    ஒரே துணையுடன் வாழ்நாள் முழுவதும் அன்னப்பறவை, புறா, ஆல்பட்ராஸ், பென்குயின், கழுகு, நாரை ஆகிய பறவைகள் வாழுகின்றன. அன்னப் பறவைகளினுடைய இரண்டு கழுத்துக்களையும் இணைத்துப் பார்த்தால் காதலின் வடிவம் இதயம் போன்றிருக்கும். நற்றிணையிலே

    இணையொடு நீங்கா அன்னம் போல

    அணையா அன்பு உடையாள்”

    அன்னப்பறவைகள் எப்போதும் துணையைப் பிரியாது சேர்ந்து வாழ்வது போல என தலைவி தலைவன் இடையிலான பிரிக்கமுடியாத காதல் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.


    ‘’குருவி இணை போலக்

    குறைவு இன்றி வாழ்க”

                   - குறந்தொகை -


    குருவிகள் சிறிய பறவைகள் என்றாலும், இணைபிரியாத குடும்ப வாழ்க்கை அவற்றின் சிறப்பு எனக் கூறுகிறது.

    புறா துணையை இழந்தால் நீண்ட காலங்கள் துயரோடே காணப்படும்.


    “துணை இழந்த புறா போல

    துயருறும் என் நெஞ்சம்”

                    - நற்றிணை – 

    பென்குயின்கள் தங்கள் துணையை மிக அன்புடன் பராமரிக்கின்றன. குறிப்பாக எம்பெரர் பென்குயின்களில், ஆண் பென்குயின் முட்டையை கால்களில் வைத்துக் கொண்டு கடும் பனிக்காலத்திலும் பாதுகாக்கிறது. இது தியாகம் மிக்க காதலின் சின்னமாகும்.

    மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பல காதல் பாடங்கள், இயற்கையின் சிறு பறவைகளிடமே மறைந்துள்ளன.

    அதேபோல ஓநாய்கள்,  யானை, நாய், குதிரை, பீவர், சிம்பாஞ்சி, டால்பின், ஆகிய விலங்குகள் துணையின் காதலை வாழ்நாள் முழுவதும் விட்டுக் கொடுக்காது.  வாழ்நாள் முழுவதும் ஒரே துணையுடன் வாழும் விலங்குகளாக அறியப்படுகின்றன.

    யானை தன்னுடைய துணையுடன் மட்டுமன்றி குட்டிகளுடனும் உறவுகளுடனும் தீராத காதலுடையது. உறவு யானை இறந்தால் அதைச் சுற்றி நின்று துயரப்படும் தன்மையானது அதனுடைய காதலை எடுத்துக்காட்டுகின்றது. ஆண்–பெண் ஓநாய்கள் இணைந்து குடும்பத்தை உருவாக்கி, குட்டிகளை பாதுகாப்பதிலும் வளர்ப்பதிலும் சம பங்கு வகிக்கின்றன. குடும்பத்திற்கான இந்த ஒற்றுமை உண்மைக் காதலின் அழகான வடிவமாகும். குதிரைகள் தங்கள் துணையுடனும் பராமரிப்பாளருடனும் ஆழமான பாசத்தைக் கொண்டிருக்கின்றன. பிரிந்தால் மனஅழுத்தம் அடைவதும், மீண்டும் சந்திக்கும் போது மகிழ்ச்சியுடன் காணப்படுவதும் குதிரைகள் தம்முடைய காதலை வெளிப்படுத்துகின்ற அம்சங்களாகின்றன. ஆண், பெண் பீவர்கள் இணைந்து குடியிருப்புகளை கட்டி, குட்டிகளை வளர்க்கின்றன. இணைந்த உழைப்பும் குடும்ப ஒற்றுமையும் உண்மைக் காதலின் அடையாளம் என்பதை உணர்த்துகின்றன. சிம்பாஞ்சிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே ஆழமான பாசத்தை வெளிப்படுத்துகின்றன. காயமடைந்த உறுப்பினர்களை கவனித்தல், குட்டிகளை அன்புடன் பராமரித்தல் ஆகியவை கருணைமிக்க காதலை எடுத்துக்காட்டுகின்றன. டால்பின்கள் காயமடைந்த தோழர்களை நீர்மேலே தூக்கி மூச்செடுக்க உதவுவதைப் பார்க்கும் போது சமூக உறவுகளுக்கும் காதலுக்கும் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை அறியக்கூடியதாக இருக்கின்றது. 

    காதல் பார்வை, ஈர்ப்பு மானில் உண்டு என்பதை ஆண் மானின் பார்வை பெண் மான்மீது காட்டும் மென்மையான காதலைச்

    “பெண்மான் நோக்கின் பெருங் காதல்” என்னும் வரிகள் எடுத்துக் காட்டுகின்றன.

    இன்றைய காதல் வேகமானது. ஒரு மெசேஜில் தொடங்குகிறது. ஒரு பார்வையில் இல் முடிகிறது. சமூக வலைதளங்கள் காதலை மிக அருகில் கொண்டுவந்தன. அதே நேரத்தில் அதன் ஆழத்தை சுருக்கின. பல இடங்களில் காதல் உடல் ஈர்ப்பாக, உடனடி தேவையாக, நுகர்வுப் பொருளாக மாறுகிறது. ஆனால் இதற்கிடையிலும், புரிதலோடு, பொறுமையோடு, ஒருவருக்கொருவர் இடம் கொடுத்து காதலோடு வாழும் மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் காதல் இன்னும் உயிரோடு இருக்கிறது.

    உண்மைக் காதல் என்பது கை பிடிப்பதில் இல்லை, வாக்குறுதிகளில் இல்லை, படங்களில் இல்லை. ஒருவரின் மௌனத்திலும் அருகில் நிற்பது, வலியிலும் விட்டு விலகாமல் இருப்பது, காலம் மாறினாலும் மனம் மாறாது இருப்பது. காதல் இல்லாத வாழ்க்கை இதயம் துடிக்காத உடலைப் போன்றது. காதலின் வடிவங்கள் மாறலாம். காதல் மாறாது. அது உயிரைவிடப் பெரிதானது. 













    திங்கள், 5 ஜனவரி, 2026

    உதவி வரைத்தன்று


    ‘கொடை கொடுத்தான் சீதக்காதி(செய்தக்காதி)‘‘ ‘‘செத்துங் கொடுத்தான் சீதக்காதி‘‘.அவரே எங்களுடைய ரோல்மொடல் என்பார்கள் புலம்பெயர்ந்து வாழும் கொடைவள்ளல்கள். அவரைப் புகழ்ந்து படிக்காசுத் தம்பிரான் என்னும் புலவர்


    ‘‘காய்ந்து சிவந்தது சூரியகாந்தி கலவியிலே

    தோய்ந்து சிவந்தது மின்னார்நெடுங் கண்சொல்பலநூல்

    ஆய்ந்து சிவந்தது பாவாணர் நெஞ்ச மனுதினமும்

    ஈந்து சிவந்தது மால்சீ தக்காதி யிருகரமே‘‘

    சூரியகாந்தி மலர் வெயிலிற் காய்ந்து சிவந்தது. மின்னல்கொடி போன்ற இளம்பெண்களுடைய கண்கள் கூடலில் தோய்ந்து சிவந்தன. பாட்டிசைக்கும் பாவலர் மனம் பழமையான நூல்களைப் படித்துச் செம்மை அடைந்தன. மேகம் போன்ற வரையாது வழங்கும் வள்ளல் சீதக்காதியின் கரங்கள் தானம்; கொடுத்துச் சிவந்தன என்று இப்பாடலின் பொருள். சீதக்கரி என்னும் கொடைவள்ளல் பரம்பரையாகச் செல்வம் மிக்கவராகவும்இ கப்பல் வாணிகத்திலே சிறப்புமிக்கவராகவும்இ மிளகு வியாபாரத்தில் உயர்ந்தவராகவும்இ நபிகள்நாயக மான்மியத்தைச் சீறாப்புராணம் மூலமாக உலகத்துக்குப் பரப்ப உதவியவராகவும் அறியப்படுகின்றார். புலவர்கள் புகழ்ந்து பாட வள்ளல்கள் பரிசில்கள் வழங்குவது வழக்கம். இங்கு உழைப்பே புலவர்களுக்கு வள்ளல்களின் கொடையால் ஊதியம் ஆனது.

    மன்னர்கள் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி பாவலர்களுக்குப் பரிசில்கள்கள் வழங்கினர். கர்ணன் இறப்பிலும் தான் பெற்ற தருமத்தை வழங்கி இறந்தான் என்று மகாபாரதம் சொல்கிறது. பலரிடம் பணம் கேட்டுப் பெற்றுச் சில புலம்பெயர்ந்த வள்ளல்கள் உதவி தேவைப்பட்டோர்க்கு வழங்குகின்றார்கள். அதைவிட முகநூல் செய்திப் பெட்டியினூடாகவும்இ புலனம் வழியாக உதவி கேட்பவர்களுக்கும்இ யாருக்கும் தெரியாமல் கொடுத்துவிட்டு மௌனமாகச் சில வள்ளல்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்குக் காரியம் ஆகவேண்டும். காட்சிப்படுத்தல் தேவையில்லை.

    உழைப்பினால் பெறும் ஊதியமே நிலைத்து நிற்கும். அது அவமானத்தை அளிக்காது. அந்த உழைப்பை உறிஞ்சி வாழ நினைப்பதும்இ பிறர் உழைப்பிலே பெருமை தேடுவதும் அவமானமாகப்படுகின்றது. பகலும் இரவும் கண்விழித்து ஒருவர் ஆற்றுகின்ற பணியில் கட்டாயப்படுத்திப் பணம் பறிக்கும் சமுதாயம் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. பகைவர்களாக மாட்டாமல்இ கேட்பதைக் கொடுத்துவிட்டு நண்பர்களாக வாழ்ந்துவிட்டுப் போவோம் என்று சில புண்ணியவான்கள நினைப்பார்கள். தாம் ஏமாளிகள் என்று தெரிந்தும் பகைவர்களாக இல்லாமல் வாழும் சிறிது காலம் ஏமாளிகளாகவே வாழ்ந்துவிட்டுப் போவோம் என்று கருதுகின்றார்கள்.

    புலம்பெயர்ந்து வாழுகின்ற இலங்கைத் தமிழர்களில் பலர்இ தம்முடைய உழைப்பை தாயகமான இலங்கை மண்ணுக்குத் தாரைவார்க்கின்றனர். இலங்கை மண்ணில் வாழும் மக்களை உயரத்துக்குக் கொண்டு வந்து விட்டு அதன்பின்தான் அமைதியடைவோம் என்னும் தன்னலம் கருதாத பேதையுள்ளங்கள் வாழுகின்றார்கள். அவர்கள் தன்னலமற்ற சேவையை உணராத தாயகப் பல இளம் தலைமுறையினர் ஒட்டுண்ணி போல அவர்களை உறிஞ்சி வாழுவது மட்டுமல்லாதுஇ உதவுபவர்களை எதுவும் அறியாது இருக்கின்றார்கள் என்று கருதுகின்றனர்.

    தேவைக்கேற்ற உதவி பெறுவதைத் தவிர்த்துஇ ஆடம்பரமான செலவுகளுக்கும் அவர்களுடைய அநுதாபத்தைப் பெற்று பணம் கறப்பதை இப்போது சாட்சிகளுடன் உண்மைகளைப் பலர் சமர்ப்பிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒரு தெரிந்தவர் மூலமாக புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து அனுப்புகின்ற பணம்இ குறிக்கப்பட்டவருக்குச் செல்கின்ற போது அரைப்பாகமாகக் குறைந்து உரியவரிடம் சேர்கின்றது. உதவி பெற்ற தொடர்புகள் இல்லாதவர் உரிய புலம்பெயர்ந்த தேசத்தாரிடம் உண்மையை உரைக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள். கொடுப்பார் பலரிருக்கப் பறிப்பாரும் பலர் இருக்கின்றார்கள்.


    அமெரிக்காவில் ஒரு நண்பர் எமது தேசத்திலுள்ள மக்களுக்கு உதவி கிடைக்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்துடன் இளந் தலைமுறைகளுக்கு கல்வி கற்பித்துஇ அவர்களுடைய சேவை எமது தேசத்துக்குக் கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்கின்றார். அவரோ காலங் கருதாது இரவு பகலென்று தன்னை வருத்தி வேலை செய்கின்றார். ஆனால்இ அங்குள்ள இளையவர்கள் நன்றாகக் கற்றுவிட்டு வெளிநாட்டுக்கு வருவதற்கு எத்தனிக்கின்றார்கள்.

    ‘’உதவி வரைத்தன்று உதவி உதவி

    செயற்பட்டார் சால்பின் வரைத்து’’

    என்கிறது வள்ளுவம். உதவி என்பது அவ்வுதவியைப் பெறுபவரின் பண்பைப் பொறுத்தே அதன் அளவு மதிப்பிடப்படும். நன்றே செயினும் நாம் ஆராய்ந்தறிந்து செய்வதே சிறப்பு நாம் உதவியாகப் பெறுகின்ற பணம் யாரிடமிருந்து பெறுகின்றோம் என்பது அறிந்து பெறுவதும்இ நாம் பெற்றுக் கொள்வது முறையா என்பதை உணர்ந்து கொள்வதும்இ அதன் மதிப்பை மனத்தில் ஏந்திக் கொள்வதும் மனிதப்பண்பாகவே நோக்கப்படுகின்றது.


    உடலுக்கு ஆரோக்கியம் முக்கியம் போல ஒவ்வொருவருக்கும் அர்த்தமுள்ள மனித வாழ்க்கை அவசியமானது. அடுத்தவர்கள் வாழ்க்கையைச் சிரிக்க வைத்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையுடையவர்கள்இ அனைத்தையும் அலசிப் பார்த்துத் திட்டமிட்டுச் செயற்படுத்த வேண்டியது கடமையாகும். ‘’சிந்தனைப் பூக்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறதோஇ அவ்வளவு அற்புதமான பழங்கள் என்ற பலன்கள் கிடைக்கும்’’ என்று மேனாட்டு அறிவாளி ஜேம்ஸ் ஆலன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம் போன்றது. இதுதான் குறிக்கோள் என்றால்இ கையில் வைத்திருக்கும் காயை நகர்த்துவதற்கு முன்னே எங்கே? எப்போது? எப்படி? வைக்க வேண்டும் என்ற அறிவை முதலில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    எக்கேடு கெட்டால் எமக்கென்ன என்றிருக்க முடியாத சமூகப்பார்வை கொண்டவர்கள் எழுத்தாளர்களாக இருக்க முடியாது என்றே கருதுகின்றேன். எழுத்தாளர்களிடமே கொட்டித் தீர்க்கப் பாகுபாடற்ற சொற்கள் குவிந்து கிடக்கின்றன.




    நன்றெ செய்வோம். அதை இன்றே செய்வோம்.















































































































    புதன், 31 டிசம்பர், 2025

    2026 புதுவருட வாழ்த்துக்கள்

     2026 புது வருட வாழ்த்துக்கள்

    ----------------------------------------
    2025 ஏற்ற இறக்கங்கள், உயர்வுகள் தாழ்வுகள், தோற்றங்கள் அழிவுகள், கவலைகள் மகிழ்ச்சிகள் அனைத்தையும் தொட்டுக் காட்டிவிட்டுச் சென்றது. நினைக்காதவை பல நடந்து முடிந்துவிட்டன. இதுதான் வாழ்க்கை என்று கலங்கி நிற்கின்ற போது எதிர்பாராத விதமாக ஆச்சரியப்படும் விடயங்கள் வந்து மனத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டுப் போகின்றன. அனைத்தும் புரிகின்றது. ஆனால், ஏனிந்த ஓட்டம் நாமாக ஒடுகின்றோமா? இல்லை ஏதோ ஒன்று எம்மை வழி நடத்துகின்றது என்பதை ஒவ்வொரு நிகழ்வும் நியாயப்படுத்திக் கொண்டே இருக்கின்றது.
    ஏதோ நாமே மலையைக் குடைகின்றோம் என்று பெருமை பேசினாலும் பட்ட அறிவும் தொட்ட அறிவும் உன்னை மிஞ்சி ஒரு சக்தி இருக்கிறது. நீ சும்மா இரு எல்லாம் அதுவாக நடக்கும் என்று அச்சுறுத்திகட்டிக் கொண்டே இருக்கிறது. அதனால், இந்த வருடத் திட்டங்களைச் சொல்லப் போவதுமில்லை, இப்படி வாழுங்கள் என்று அறிவுரை போதிக்கப் போவதுமில்லை. அதனால் "சும்மா இரு சொல் அற" என்று கூறும் அருணகிரிநாதரை நினைத்து அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துகள்




    திங்கள், 1 டிசம்பர், 2025

    செவ்வாய், 21 அக்டோபர், 2025

    விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு

     



     

    காதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் ‘’காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாருமில்லை’’ என்று விக்னேஷ் சிவன் எழுதினார். மனத்துள் பூட்டி உணர்வில் வெளிப்படுத்தும் இக்காதலை நிறமூட்டி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய பெருமை இலக்கியங்களுக்கும், திரைப்படங்களுக்குமே இருக்கின்றன.

    கதையாய்ப் பாடலாய் இலக்கியங்களும், அழகுக் காதல் சொல்லும். நடிப்பால் காட்சிகளால் திரைப்படங்களும், காதலை வெளிப்படுத்திக் காட்டும். வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி இலக்கியங்கள் என்றால், திரைப்படங்கள் என்று சொல்லப்படுகின்ற சினிமாவும் அதைத்தான் செய்கின்றன. சினிமா வரலாற்றிலே காதலைச் சொல்லாத தமிழ் சினிமாப் படங்களை விரல்விட்டுத்தான் எண்ண வேண்டும். ஊனமுள்ளவனாக இருந்தாலும் காதல் வரும் என்று எடுத்துக்காட்டிய ‘’பேரழகன்’’, ஒருவரை ஒருவர் தீண்டாமலே காதல் சொல்லும் ‘’ஒரு தலை ராகம்’’, பார்க்காமலே உணர்வுகளைப் பரிமாறிக் கடிதம் மூலம் காதல் வெளிப்படுத்திய ‘’காதல் கோட்டை’’, கால் சலங்கையால் காதலியைக் காலமெல்லாம் நினைத்திருந்த காதல் ‘’சலங்கை ஒலி’’, கலையைக் காதலித்து அக்கலைஞனில் காதல் கொண்ட ‘’சிந்துபைரவி’’, பார்வையற்ற ஏழையாக இருந்தாலும் பணக்காரக் பெண்ணுக்குக் காதல் வரும் என்று சொன்ன ‘’ராஜபார்வை’’, வயது பேதம் பார்க்காது தன்னைவிட வயதான பெண்ணின் மேல் காதல் கொண்ட ‘’அபூர்வராகங்கள்’’, முதியவர்க்கும் காதல் வரும் என்று சொன்ன ‘’முதல் மரியாதை’’, எனை மாற்றும் காதலே என்று சொன்ன ‘’நானும் ரௌடி’’ இவ்வாறு சினிமா சொன்ன காதல் எண்ணிக்கையற்றன.

    இவ்வாறான சினிமாவில் தேன் சுவை சொட்டச் சொட்ட மக்கள் மனத்துக்குள் இதமான காதல் உணர்வுகளை வெளிப்படுத்திய சில பாடல் வரிகளை இரசித்து இன்புறுவோம். 

    காதல் பாடல்களில் வகைகளை எடுத்து நோக்கினால், காதலன் காதலியின்  அழகைப் புகழ்ந்து பாடும் பாடல்கள், காதலி காதலன் அழகைப் புகழ்ந்து பாடும் பாடல்கள், காதலியின் மனதை ஈர்க்கும் பாடல்கள், காதலனை எதிர்பார்த்துக் காதலியும் காதலியை எதிர்பார்த்துக் காதலனும் ஏங்கும் பாடல்கள், பிரிவுத் துயரை வெளிப்படுத்தும் சோகப் பாடல்கள் என வகைப்படுத்தலாம்.

    காதலன் காதலியை வர்ணிக்கும் போது அவள் கண்களுக்கு முக்கித்துவம் கொடுப்பது வழக்கம். 

    “பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து உருவ உண்கணை ஒண்படை ஆம் எனக் கருதி அன்பொடு காமுற்று” 

    எனக் கம்பன் பாட கம்பனைக் கற்ற கண்ணதாசன் அதேபாணியில்

    “பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

    நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட’’

    என்று இரு வல்லவர்கள் என்ற படத்திற்கு கண்ணதாசன் பாடல் வரிகளைத் தந்துவிடுகின்றார். பெண்களுடைய கண்களை பெண் வண்டுகள் என்று கருதிய ஆண்வண்டுகள் அவளுடைய மலர் போன்ற முகத்திலே வந்து மோதுகின்றன. அந்த வண்டுகளைத் தடுப்பதற்காக அவள் கைகளால் மூடுகின்றாள். எவ்வளவு அறபுதமான வரிகள்.

     ''செந்தமிழ் தேன்மொழியால் நிலாவென சிரிக்கும் மலர் கொடியாள்,

    பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிடத் தலைகுனிவாள்.

    சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ,

     கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்

    கடலினில் கொண்டு கரைத்தவளோ”

     என்னும் கண்ணதாசன் வரிகள் இன்றும் நெஞ்சில் நிலைத்திருக்கின்றன. கடலின் நீலமே அவள் கண்களிலிருந்து கரைத்ததுதான் என்று தற்குறிபேற்ற அணியில் வர்ணிக்கின்றார். அவள் பிறந்த குலம் எவ்வாறாக இருந்தாலும் அழகில் குறைந்துவிடவில்லை என்பதற்கு உதாரணமாக தாமரை சேற்றில் பிறந்தாலும் அழகானது என எடுத்துக்காட்டிள்ளது சிறப்பாக இருந்தது.

     “வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்.

    கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.

    அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்.

    ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்.

    இன்னிசையைப் பாடங் கேட்க எண்ணி வரும் குயிலும்.

    இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும்”

     

    என்னும் பாவை விளக்குப் படத்தில் வரும் வரிகளில் அன்னநடையைப் புலவர்கள் பெண்ணின் நடைக்கு உவமையாகச் சொல்வார்கள். அந்த அன்னமே இவளிடம் நடைப்பாடம் கற்க வருவதாகச் சொல்வது காதலனின் அதீத கற்பனையாக வெளிப்படுகின்றது. அதேபோல் மயில் ஆடல்கலையையும், குயில் பாடலையும் பயில வருகின்றன.

     “என்னிசை நின்றால் அடங்கும் உலகே”

    என்று சிவபெருமான் தேவநாதருக்குப் புத்திபுகட்டுவதற்காக தன் இசையை நிறுத்தி உலகத்தையே அசையாமல் செய்தார் எனப் புராணம் கூறுகின்றது. இங்கு இயற்கையைத் தன் காதலி அவள் குரலினால் துயில வைக்கின்றாள் எனக் கவிஞர் எழுதியிருப்பது சுவாரஸ்யமாக இருக்கின்றது.

    உலகத்தில் எவையெல்லாம் சிறப்பாக இருக்கின்றனவோ, அவையெல்லாம் தன் காதலியாகக் காணுகின்ற காதலனின் மனத்தை

    “காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி(குளிர்மை), மலர்களிலே அவள் மல்லிகை(வாசனை). பறவைகளில் மணிப்புறா, பாடல்களில் தாலாட்டு, கனிகளிலே மாங்கனி, காற்றினிலே தென்றல், பால் போல் சிரிப்பதில் பிள்ளை(களங்கமில்லை). பனிபோல் அணைப்பதில் கன்னி, கண் போல் வளர்ப்பதில் அன்னை’’ எனப் புகழ்ந்து பாடிய கவிஞர், அன்னை பிள்ளையை வளர்ப்பது போலவே என்னைக் கவிஞனாக வளர்த்துள்ளாள் எனத் தன் காதல் உணர்வுகளைப் பாடலாகத் தந்திருக்கின்றார்.

    இந்தக் காதலி எவ்வாறான அழகானவளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனதுக்குப் பிடித்துவிட்டால், அவள் காதலனுக்குத் தேவதைதான். அவள் கோபுரங்கள் சாய்வதில்லை படத்து அறுக்காணியாகக் கூட இருக்கலாம்.  16 வயதினிலே கமலஹாசன் போல் சப்பாணியாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் காதல் மலரும், மனங் காவியம் பாடும். அதுவே காதலுக்கு உள்ள மகத்துவம். அதனாலேதான் என்னவோ தன்னுடைய காதலனின் அழகை எடுத்துக் காட்டுவதற்கு பல எடுகோள்களை முன் வைக்கின்றாள்

    “கறுப்புத்தான் எனக்குப் பிடித்த கலரு. அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் தவுஸண்ட் வோட்ஸ் பவரு’’ என்று சொல்வது மட்டுமல்லாமல்ல. இரவு, விவசாயி, மண்ணுக்குள்ள இருக்கிறப்போ வைரம், காதலனை ரசிக்க வைச்ச கண்ணுமுழி, கண்ணகி, கருவறை , பாவாடை கட்டிப் பதிஞ்ச தடம், என்று பலவாறாக கறுப்பின் பெருமைகளைப் பாடுகின்றாள். ஏனென்றால், இவ்வாறான பெருமைகள் பொருந்திய கறுப்பு தான் தன் காதலன்.

    இருமனங்கள் சந்தர்ப்பவசத்தால் ஈர்க்கப்படுகின்றன. அதைத்தான் சிலரைக் கண்டால் மனதுக்குள் பல்ப் எரிகின்றது என்பார்கள். அவ்வாறு ஈர்க்கப்பட்ட மனங்கள் ஒன்றாகக் கலக்கின்றன. உயிரில் கலந்து விடுகின்றன. உயிரில் கலக்கும் போது “யாருமில்லா தனியறையில் ஒரு குரல் போல எங்கோ இருந்து என்னை இசைக்கிறாய்” என்கிறார் கவிஞர் பா.விஜய். தனியாக இருக்கும் ஒரு அறையில் அமைதி குடிகொண்டிருக்கும். அந்த அறையில் ஒருவரை எங்கோ இருக்கும் ஒருவர் இசைக்க வைக்க எப்படி முடியும்! இசைக்குத்தானே மனங்களை மட்டுமல்ல மரங்களைக் கூட இசைய வைக்கக் கூடிய சக்தி உண்டு. ஆனால், எங்கோ இருந்து ஒருவரை இசைக்க வைக்கக் கூடிய சக்தி அந்தக் காதலுக்குத்தான் உண்டு.

     

    விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிருள் கலந்த காதல் உணர்வுகள் “Black and White கண்ணு காதலியைப் பார்த்தா கலரா மாறும். துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறும்” என்று விக்னேஷ் சிவன் அவர்கள் நானும் ரௌடிதான் என்னும் படத்தில் எழுதுகின்றார். “காதலுக்கு மொழி தேவையில்லை கண்கள் பேசும் வார்த்தைகளே காதலுக்கு மனப்பதிவுகளை வலிமையாக்குகிறது. இதனையே ஒலி இல்லாத உலகத்தில் இசையாக நீயே மாறி காற்றில் வீசினாய் காதில் பேசினாய். மொழியில்லாத மௌனத்தில் விழியாலே வார்த்தை கோர்த்து கண்ணால் பேசினாய்” என்று அதே நானும் ரௌடிதான் என்னும படத்தில் தாமரை வரிகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

     “வெண்பஞ்சு மேகங்கள் உன் பஞ்சுப் பாதங்கள்

    மண் தொட்டதால் இன்று

    செவ்வானம் போல் ஆச்சு. 

    விண் சொர்க்கமே பொய் பொய்

    என் சொர்க்கம் நீ பெண்ணே”

     

    என்னும்போது வாழ்க்கையில் சொர்க்கத்தைக் காணவே விரதங்களும் கோயில், குளங்களும் சுற்றுகின்ற அடியார்களுக்கு நடுவே ஒரு பெண் போதும் சொர்க்கம் காண என்று கூற உண்மைக் காதலுக்குத்தான் முடியும்.

     “ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்

    நிலவில் குளிரில்லை.

    அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்

    மலரில் ஒளியில்லை.

    குயில் ஓசை போலொரு வார்த்தை

    குழலோ யாழோ என்றிருந்தேன்.

    கலை அன்னம் போலவள் தோற்றம்

    இடையில் இடையோ கிடையாது”

     என்னும் வாலியின் கற்பனை வரிகளை விட்டு காதல் பாடல்களை எழுத முடியாதுள்ளது.

    காதல் பாடல்களில் சோகப்பாடல்களே அதிகமாக பலரின் மனங்களை இலகுவில் ஆட்கொண்டுவிடுகின்றன. பிரிவுத்துயரை வெளிப்படுத்தும் “கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ?  

    காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ?

    கணையாழி இங்கே மணவாளன் அங்கே

    காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே”

    ஆண்டுகள் கடந்தாலும் மனதுக்குள் ஆழமாகப் பதியும் வரிகள் உன்னைக் காணாமல் உயிர் வாழ முடியாது என்பதை காதலி வெளிப்படுத்தும் பாங்கைக் கண்ணதாசன் வரிகளில் கேட்டு இன்புறக் கூடியதாக இருக்கின்றது.

    எதுக்காகக் கிட்ட வந்தாளோ! எதைத்தேடி விட்டுப் போனாளோ! விழுந்தாலும் நான் ஒடஞ்சே போயிருந்தாலும் நினைவிருந்தால் போதும் நிமிர்ந்திடுவேன் நானும் என்று பாடும் வரிகளில் கண்ணீரும் கூட சொந்தமில்லை என்று வலி சுமந்த வரிகள் நெஞ்சைத் தொடுகின்றன.

     100 வீதம் காதல் என்னும் படத்திலே

     “இரு விழிகள் போதவில்லை அழுதிடக் கண்கள் கோடி எனக்கில்லை.

    காற்றிலே ஆடும் காகிதம் போல தூரமாகப் போகவே நேர்ந்தது ஏனடி.

    கண்ணுக்கு இமையின்று தூரம். நெஞ்சுக்கு நினைவின்று தூரம்.

    உடலுக்கு உயிரின்று தூரம் ஆனதே.

    கிளை மேலே இணை சேர்ந்த பூக்கள் புயலாலே

    மண் மேலே விழுந்தால்

    மீணடும் ஒன்றாகச் சேரக் கூடுமோ”

    என்னும் போது கண்ணுக்கு இமைபோல் காதலியைக் காத்து நின்ற காதலன் நெஞ்சு முழுவதும் அவள் நினைவுகளைச் சுமந்தான். அவள் பிரிந்து சென்றதனால் உடல்தான் தாங்கி நிற்கின்றான். உயிரான காதலியை வெகுதூரம் பிரிந்து விட்டான் என்னும் போது உயிரும் உடலும் ஒன்றிணைந்த காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வரிகளை மோகன் ராஜ் தந்திருப்பது ரசித்து இன்புற வைக்கின்றது.

    இதேபோன்று அள்ளஅள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போல் சினிமா காதல் பாடல்களை எமக்கு தந்து கொண்டே இருக்கும். இதற்கு அனைத்துக் கலைகளும் போல் பாடலும் பாடகர், இசையமைப்பாளர், கவிஞர், போன்ற மூவரும் ஒன்றிணைந்த கூட்டுச் சேர்க்கையிலேயே சினிமாவில்  களை கட்டி இரசிக உள்ளங்களுக்கு நல்ல தீனி போடுகின்றது.

     

     

     

     

    நேரத்தால் அழியாத ஒரு காதல்

    மாலை நேரம் . சூரியன் தன் கடைசி ஒளிக்கீற்றை பூமியின் நெற்றியில் மெதுவாகத் தடவி விட்டு மறைந்து கொண்டிருந்தது . அந்த வெளிச்சம் போல் , ஒரு மனிதன...