• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 3 ஜூலை, 2023

    பனிக்குடம் நூல் அறிமுகம்


     நூல் தேட்டம்

    நூல்தேட்டப் பதிவு 894.8(1)

    தமிழ்க் கவிதைகள்

    பனிக்குடம். கௌசி (இயற்பெயர்: சந்திரகௌரி சிவபாலன்).

    தமிழ்நாடு: ஒரு துளிக் கவிதை, புதுச்சேரி,

    1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (தமிழ்நாடு: ஒரு துளிக் கவிதை, புதுச்சேரி).

    114 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5x14 சமீ.

    பெண்கள் கருவுற்ற காலத்தில் இரண்டாவது வாரத்தில் பனிக்குடம் என்னும் பகுதி திரவத்தால் நிறைந்து

    கருப்பையில் உருவாகிறது. கருவில் வளரும் குழந்தை பாதுகாப்பாய் அந்த நீரில் மிதந்து அதன்

    பாதுகாப்பில் வளர்கின்றது. உடல் பிரசவத்திற்கு தயாரானதும் இந்தப் பனிக்குடம் உடையத் தொடங்கி திரவம் மற்ற மாசுக்களுடன் வெளியே வந்துவிடும். இந்தக் கவிதைத் தொகுதியிலும் அவ்வாறே சுகமாய்ச் சுமந்து வலியோடு வளர்த்து உயிராய் உரமாய் கனவாய் வெளியுலகில் நடமாட விட்ட உயிர்களில் அன்னையரின் மனஓசை ஒவ்வொன்றாய் வெளிப்படுத்தும் வகையில் இந்நூலின் கவித்துளிகள் அமைந்துள்ளன. அணிந்துரை வழங்கியுள்ள தேவகோட்டை முத்துமணி ‘இந்த நூலில் சுருங்கச் சொல்லி நம்முள்ளே ஒரு பொறியைப் பற்றவைத்துவிட்டு அறிவு விளக்கை வாசிப்பவரின் சிந்தையைத் தூண்டும் வண்ணம் செய்திருக்கிறார். ஒவ்வொரு வரியும் மிக யதார்த்தமாகவும் எளிய நடையுடனும் இருந்தாலும் அரிய எண்ணங்களை இக்கவி வரிகள் நம்முள்ளே விதைத்துச் செல்கின்றன' என்கிறார். தாய்மை, பெண்மை, முதுமை, அம்மா கவிதைகள் என நான்கு பிரிவுகளில் இக்கவிதைகள் விரிந்து கிடக்கின்றன. கௌரி, கௌசி ஆகிய புனைபெயர்களில் தாயகத்திலும், புகலிடத்திலும் இலக்கியத்துறையில் தடம்பதித்தவர் திருமதி சந்திரகௌரி சிவபாலன். மட்டக்களப்பு மாவட்டம் - ஏறாவூரில் பிறந்த இவர், மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாவார். பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணி தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றதுடன், நுகேகொடை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வி டிப்ளோமா பட்டமும் பெற்று தன் தொழில்துறையாக ஆசிரியத் துறையை தேர்ந்தெடுத்தவர். மட்டக்களப்பு கறுவாக்கேணி தமிழ் வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்ற இவர், பின்னர் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம், நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராகவும், நீர்கொழும்பு கல்வித் திணைக்களத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றியவர்.

                    ---------------------------------------------------------------------------------------------------------

                                தமிழ் வான் அவை ஜெர்மனி

                       இணையவழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு --37

     கௌசியின் “பனிக்குடம்”  புதுக்கவிதை நூல் அறிமுக நிகழ்வு.

       காலம்;--30—04—2023

     தலைமை உரை;--கலாநிதி தமிழ்மணி அகளங்கன்  

     

         ஜெர்மனி தமிழ் வான் அவை நடத்தும் இணையவழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பின் 37ஆவது நிகழ்வாக நடைபெறுகின்ற கௌசியின் “பனிக்குடம்” புதுக் கவிதை நூல் அறிமுக நிகழ்வுக்குத் தலைமை தாங்குவதில் பெருமகிழ்வடைகின்றேன்.

         இந்நிகழ்வில் அவுஸ்ரேலியாவிலிருந்து கலந்துகொள்ளும் என்னோடு பல நாடுகளிலிருந்தும் பல தமிழறிஞர்களும், கவிஞர்களும் ஆர்வலர்களும், அன்பர்களும் கலந்து கொள்வதைப் பார்த்துப்  பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

        இந்நிகழ்வில் தொகுப்பாளராகக் கலந்து சிறப்பாக வழிநடத்திக்கொண்டிருக்கும்  திரு முல்லை மோகன் அவர்களே! சிறந்த வரவேற்புரையை வழங்கிய நற்றமிழ் நாவரசி முனைவர் வே,பூங்குழலிப் பெருமாள் அவர்களே! நிகழ்வில் உரையாற்றி வாழ்த்துரை வழங்கக் காத்திருக்கின்ற மூத்தவர் காப்பியக்கோ ஜின்னா ஷரிபுதீன் உள்ளிட்ட அறிஞர் பெருந்தகைகளே! நூலாசிரியர் கௌசி(திருமதி சந்திர கௌரி சிவபாலன்)அவர்களே! மற்றும் ஆர்வலர்களே! உங்கள் அனைவருக்கும் எனது இந்நேர வணக்கம்.

           கௌசி அவர்கள் ஓயாது இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு சிறந்த படைப்பாளி. தமிழைச் சிறப்பாகப் பயின்ற ஒரு பட்டதாரி. ஈழத் தாயகத்தின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்து தற்போது ஜெர்மனியில் வாழ்ந்துகொண்டு தாய்த் தமிழை உலகம் முழுவதும் பரப்பிக்கொண்டிருக்கும் தமிழ்ப்பற்றாளர்.

       பெண் படைப்பாளிகள் பெருகிக்கொண்டிருக்கின்ற இக்காலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் படைப்பாளிகளில் விரலுக்கு முந்தும் உற்சாகத்தோடு செயற்பட்டு வருபவர் கௌசி.

        இவரது புதுக்கவிதை நூலான பனிக்குடம் நூலின் அறிமுக நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

        பனிக்குடம் நூலில் பனிக்குடம், பெண்மை, முதுமை, அம்மா, அம்மா ஒரு ஆச்சரியம், வலிதாங்கி வாழ்வளித்த தெய்வமே, ஆகிய தலைப்புக்களில் கவிதைகள் உள்ளன. இக்கவிதைகள் பற்றி சிறப்பாக எடுத்துரைக்க இங்கே பலர் கலந்து கொள்கிறார்கள். இருப்பினும் தலைப்புக் கவிதையாக  நீண்டிருக்கும் பனிக்குடம் கவிதை பற்றி சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன்.

       தாய் வயிற்றில் பிள்ளை உருவாவதுமுதல் அது பிறந்து வளர்ந்து இறந்துபோகின்ற காலம்வரையிலான நிகழ்வுகளைப் பலர் பாடியுள்ளார்கள். பட்டினத்தாரின் “ஒருமடமாதும் ஒருவனுமாகி---“எனத்தொடர்கின்ற உடற் கூற்று வண்ணப் பாடல், அருணகிரிநாதரின் “கருவினுருவாகிவந்து----” “இத்தாரணிக்குள் மனு வித்தாய் முழைத்தழுது—“முதலான திருப்புகழ்ப் பாடல்கள், மாணிக்கவாசக சுவாமிகளின் “நான் முகன் முதலா--- எனத்தொடங்குகின்ற போற்றித் திருவகவற்  பாடல் முதலான பாடல்களில் இந்நிகழ்வுகள்  அறிவு பூர்வமாகச் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன.

          இருப்பினும் அப்பாடல்களில் ஆண்குழந்தையைப்பற்றி மட்டுமே சொல்லப்பட்டுள்ளன. கௌசி அவர்கள் பெண்குழந்தை பற்றியதாகவும் தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவு பற்றியதாகவும் உணர்வு பூர்வமாகப் பாடியுள்ளார். படிக்கப் படிக்க இன்ப உணர்வூட்டும் இக்கவிதை பற்றியும் ஏனைய கவிதைகள் பற்றியும் இங்குள்ளவர்கள் எடுத்துரைக்கவும் கௌசியை வாழ்த்தவும் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் அப்பணியை விட்டுவிட்டு தமிழிலக்கிய வானில் கொஞ்சம் பின்னோக்கிச் சிறகடித்துப் பார்ப்போம்.

           இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான சங்ககாலப் புலவர்களில் ஒளவையார் முதன்மையானவர். அவர் பாடியதாக புற நானூறு என்னும் நூலில் பதினேழு பாடல்கள் காணப்படுகின்றன. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் அவரது பாடல்கள் காணப்படுகின்றன,

       அதிய மானைச் சந்திக்கச் சென்ற முதல் நாளில் அவன் அவரைச் சிறிது தாமதித்துச் சந்திப்பதாக வாயிற் காவலனிடம் சொல்லிக் காத்திருக்கச் செய்த நேரத்தில் நீண்ட நேரம் காத்திருக்க விரும்பாதவராகி அரசனுக்கு எதிரானதாகவும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகவும் அவர் பாடிய பாடல் அற்புதமானது.

         கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி

         தன் அறியலன் கொல் என்னறியலன் கொல்.

         மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

         மழுவுடைக் காட்டகத்தற்றே

         எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.

    “தளவாடங்களைச் செய்யும் தச்சனின் சிறப்பாக வேலை செய்யத் தெரிந்த பிள்ளைகள் உபகரணங்களோடு காட்டுக்குச் சென்றால் அவர்கள் வாழ்ந்துகொள்வார்கள்.அவர்க  ளைப்போல புலவர்களாகிய நாங்கள் ஆற்றல் படைத்தவர்கள். எங்குசென்றாலும் வாழக்கூடியவர்கள். அரசர்களில் மட்டும் தங்கியிருப்பவர்கள் அல்லர்.” என்று சொல்லி “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே” என்று பாடியவர்.   

         அதியமானுக்கும், தொண்டைமானுக்கும் இடையே ஏற்பட இருந்த பெரும்போரைத் தவிர்க்க, அதியமான் சார்பாக தொண்டைமானிடம் தூது சென்றவர் ஒளவையார்

            மன்னனை வாழ்த்துவதற்கு “வரப்புயர---“ என்று தொடங்கி “குடி உயரக் கோன் உயரும்”என்ற ஜனநாயகக் கோட்பாட்டை முடியாட்சிக் காலத்திலேயே முழங்கியவர்.  

      வெண்ணிக்குயத்தியார் என்ற புலவர் சேரமான் பெருஞ்சேரலாதனின் புகழைஅவனது எதிரியான கரிகாற் சோழன் முன்னிலையில் பாடியவர். கரிகாற் சோழனுக்கும், சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும் வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் நடைபெற்ற பெரும் போரில் கரிகாற் சோழன் சேரமானின் மார்பில் தன் ஈட்டியைப் பாய்ச்சி வெற்றி கொள் கிறான்.

         அதற்கான வெற்றிவிழா சோழநாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது சேரமானின் புண்ணுக்கு மருத்துவர்கள் மருந்து போடுகிறார்கள். சோழனின் ஈட்டி சேரனின் மார்பை ஊடுருவி முதுகிலும் காயத்தை ஏற்படுத்திவிட்டது. அதனால் முதுகுப்புண்ணுக்கும் மருந்துபோட மருத்துவர்கள் முயல்கின்றனர்.

         முதுகுப் புண்ணுக்கு மருந்துபோட்டு உயிர்வாழ்வது அவமானம் என்று சொல்லி மறுத்து சேரமான் உயிர்துறக்க வடக்கிருக்கிறான். அப்போது சோழனின் அவைக்குச் சென்ற வெண்ணிக்குயத்தியார் சோழனின் முன்னிலையில் அவனது வெற்றி விழாவில் சேரமானைப் புகழ்ந்து

      “--------------------------------------

      நின்னிலும் நல்லன் அன்றே---

      கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை

      மிகப் புகழ் உலகம் எய்தி  

      புறப்புண் நாடி வடக்கிருந் தோனே”

      என்று பாடுகிறார்.

                      திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி, கோயில் மூத்த திருப்பதிகங்கள் ஆகிய பாடல்களை கட்டளைக் கலித்துறை, வெண்பா, விருத்தம் ஆகிய யாப்புக்களில் பாடி விருத்த யாப்பே எந்தவகை உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்த ஏற்ற யாப்பு என்பதைக் காட்டியவர் காரைக்கால் அம்மையார்.

       அதனால் பல்லவர் காலத்து நாயன் மார்கள், மற்றும் சமயப் புலவர்களும், காவியப் புலவர்களும் விருத்தப் பாவைப் பாட வழிகாட்டியவர் காரைக்கால் அம்மையார். பதிகம் பாடுகின்ற மரபையும் உருவ வழிபாட்டினையும் பாடியவர் இவரே என்பர்.

                 சங்க காலப் புலவர்களில் நக்கண்ணையார், நச்செள்ளையார். நப்பசலையார், பொத்தியார், பொன்முடியார், அள்ளுர் நன்முல்லையார், ஒக்கூர் மாசாத்தியார், காவற் பெண்டு, குறமகள் இளவெயினி, பேய்மகள் இளவெயினி, பாரிமகளிர் முதலான முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் பெண்புலவர்கள். இப்படி வந்த பெண்புலவர் மரபு பின்பு  இருபதாம் நூற்றாண்டுவரை ஆயிரம் ஆண்டுகளாக நலிவடைந்தது.

       புலவர் என்ற பொதுப் பாற் சொல்லுக்குள் இருந்த தமிழுலகம் புலவன் என்ற ஆண்பாற் சொல்லுக்குள் சுருங்கிப் போனது. புலவன் என்ற சொல்லுக்குரிய பெண்பாற் சொல் இல்லாமற்போக புலவர் என்பதுகூட புலவன் என்ற ஆண் பால் ஒருமைச் சொல்லுக்குரிய மரியாதை ஒருமைச் சொல்லாகப் பெருமளவு மாறிற்று.

      கவி என்ற பொதுப்பாற் சொல்லுக்குப் பதிலாக கவிஞன் என்ற ஆண்பாற் சொல் உண்டாகியது. அதற்குரிய பெண்பாற் சொல் இல்லாமலே போய்விட்டது. ஆடவன் என்பதற்குரிய பெண்பாற் சொல்லாகிய ஆடவள் மறைந்து விட்டது. கடவுள் மட்டும் மாறாமல் இருக்க இறை என்பது பால் பெற்று இறைவன், இறைவி ஆயிற்று, மன்னன், வேந்தன், ஆகிய சொற்கள் பெண்பாலை இழந்தன. அரசன் மட்டும் அரசியாயிற்று.

      இன்னும் நீட்டிக்கொண்டு போகாமல் நிறைவுக்கு வருகிறேன். பத்தொன்பதாம்  நூற்றாண்டின் பின் பெண்கள் படைப்புத்துறைக்குள் மீண்டும் வந்துள்ளனர். இப்போது சாதனைப் பெண்களாக வளர்ந்து வருகிறார்கள்.

       அந்த வழியில் கௌசிஅவர்கள் முன்னணிக்கு வருகிறார். ஜெர்மன் தமிழ் வானவை நிறுவுனராக, கவிஞராக, கட்டுரையாளராக மிளிர்கின்றார். தமிழ் நூல்களைத் தேடித்தேடிப் படிக்கின்றார். சுவைக்கின்றார். அதனை மற்றவர்களுக்கும் பகிர்கின்றார்.

       உலகளாவிய தமிழ் உறவுகளுக்குத் தமிழ் உணர்வூட்டுபவராக விளங்குகிறார். பெண்ணியம் என்பது பொத்தம் பொதுவாக ஆண்களுக்கு எதிரானது என்பதை மறுத்துப் புதுப்பாதை காட்டுகின்றார். தனது இந்நூலைத் தனது தந்தைக்கே சமர்ப்பணம் செய்துள்ளார்.

      “பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா, பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா” என்ற பாரதியின் பாடல் வரிகளைச் சொல்லி நிறைவு செய்கின்றேன்.

       கௌசி இன்னும் பல தரமான ஆக்கங்களைத் தமிழுலகுக்குத் தரவும், பெண்ணியம் பற்றிய தகுதியான வழிகாட்டியாக விளங்கிப் புகழ் பெறவும், மனதார வாழ்த்துகிறேன், பனிக்குடத்தைப்  படியுங்கள். உங்கள்பார்வைக்குள் கொண்டுவாருங்கள். இந்த வாய்ப்பை எனக்களித்த கௌசி அவர்களுக்கும் கலந்து கொண்டோர்க்கும்  நன்றி வணக்கம்.

                          வாழ்க தமிழ். வளர்க தமிழர்.

                           அகளங்கன் (இலங்கை)

                                 01—05--2023    

    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

                   

    (ஒரு வாசகன் பார்வையில்) காப்பியக்கோ ஜின்னா ஷெரிபுத்தீன் 

    இந்தக்

    கவிநூலின் காணிக்கை

    கருவுக்குக் காரணர்க்கே.

    கௌசியின்

    நெஞ்சத்தின் ஆழத்தை நிதர்சனஞ் செய்யுவது

    தாய்க்குத் தான்முதன்மை

    என்றாலுந் தந்தை!

    தாபரித்துக் காத்த தகைமைக்குச் சொந்தமதால்

    தாதைக்கே நூலைத் தந்துள்ளார் நன்றியொடு.

    நவீனமென்று எதையெதையோ

    நவிலுகின்ற காலத்தில்

    கவிஞர் கௌசியின்

    கவிவரியின் கோப்பு

    கடந்ததனைச் செல்கிறது.

    தொடக்கத்தில் வலிக்கு அவர்தரும்

    வேறுபட்ட அர்த்தங்கள்

    வாசகன் நெஞ்சத்துள்

    விதம்விதமாய் பொருள்கூறும்.

    விளக்கம் எதற்கு!

    வாசியுங்கள் பொருள் புரியும்

    வலிவருங்கால் வாய்மலர்ந்து

    வற்றாத புன்னகைக்கும்.

    வேதனையின் வெளிப்பாட்டை

    வரிசுமக்கும் விந்தைதனை

    நாமும் அறிய அவர் நவின்றுள்ளார்.

    அனுபவந்தான்.

    தொடரும் வரிகள்

    தாய்மையின் தியாகங்கள்

    தனக்கென்று எதுவுமின்றித்

    தாங்கியுள்ள சுமைக்காக!

    அல்ல! அல்ல!

    தாங்கியுள்ள துணைக்காக

    எத்தனையெத்தனைதான்!

    எண்ணில்தான் அடங்கிடுமோ!

    பனிக்குடத்துள் விளையாடும்

    பாவைக்கு நோகுமெனப்

    பக்குவமாய்ப் பதம்பதித்த

    பத்துமாத பந்தமது.

    தன்னைத் தானாகத்

    தானுணராக் காலமது.

    தாய்மைக்கு மட்டிலுமே.

    தெய்வமருள்

    திருப்பொருத்தம்.

    யாருக்குங் கிடைக்காத

    எல்லையில்லாப் பெரும்பேறு

    அற்புதமாய் அடியடியாய்

    ஆழப் பதித்துள்ளார்.

    கருவறைக்குள் குடியிருக்கும்

    கடவுளெனுங்கலையுருவம்

    தாயின்

    கருவறைப் பனிக்குடத்துள்

    புனிதக்குளிர்த் தீர்த்த்துள்

    பக்குவமாய்ப் புத்துருவம்

    படிப்படியாய்ப் பொலிவுபெறும்.

    பாருலகில் வாழும்

    பக்குவத்தைப் பனிக்குடத்துள்

    பெற்றுவிட்ட தாயும்

    பேசியுள்ளார் பாட்டரசி.

    கழுத்தைச் சுற்றியுள்ள

    கருக்கொடியைப் பூவாழ்வின்

    இறுக்கத்தைப் புகலுவது

    ஏற்புடைய உவமானம்

    பிரசவத்தின் அற்புதத்தைப்

    பேசுவதோ தூமொழியல்.

    ஆரம்பச் செவிமடுப்பு

    ஆ இ ஓ நாதவரி

    வேரறுக்கச் செய்ததென்றன்

    வேதனையை என்கின்றார்.

    ஆமாம்

    அவைதானே ஆத்மாக்கள்

    அசைபோடும்அரிச்சுவடி!

    ”உனக்குப் பசித்தால்

    எனக்குப் பால்சுரக்கும்”

    தாய்மைக்குக் கவிஞர்

    தேடியுள்ள தேறல்வரி!

    இதைவிடவுஞ் சொல்ல

    என்னவரி ஈங்குளதோ!

    தொடர்ந்துவரும் வரிகள்

    தாயுளத்தின் பூரிப்பும்

    தாரணியின் வாழ்வியலும்!

    தாதையின் அறிமுகமோ

    சத்தியத்தின் வெளிப்பாடு!

    கைவிரலின் ஸ்பரிசம்

    கருவறையின் உணர்வலைகள்

    உன் இதயத்துடிப்பை

    உன்விரல் நுனியில் உணருகின்றார்

    உன்றனது

    உற்பத்தி மரபணுவின்

    உதயத்தை உணர்வதுவாய்

    ஒப்பிட்டு உணர்த்துவது

    ஒப்பற்ற ஒப்பீடு

    பெண்மை

    தாயாகிப்பின்தனித்துத்

    தாவுகின்ற புத்துருவம்.

    தனித்தனியே உணர்வுகளை

    தன்னளவின் அனுபவத்தைச்

    சித்திரம்போல் வடித்துள்ளார்

    தெரிந்தறிய வாசகர்க்கு.

    ஒவ்வொரு பெண்ணும்

    உலகளவில் உணருகின்ற

    பக்குவந்தன்னைப்

    பாவரியில் வடித்துள்ளார்.

    பட்டறிந்த அனுபவங்கள்.

    வாழ்வியலைப் பரீட்சைக்கு

    வரித்திட்டால் வெற்றிபெற்று

    மீள்தல் பெரும்பேறு -என்னும்

    வினாவாடு கவிமுடியும்.

    பனிக்குட மகுடத்தில்

    பெற்றவளின் தியாகத்தை

    மனத்தூன்றச் செய்துள்ள

    முறைமை முழுமைதரும்.

    பிள்ளை புகல்வதுபோல்

    பேசுவது தனியழகு.

    விளையாட்டுப் பருவத்தை

    வரிவரியாய்ப் பேசுவதும்

    அனுபவ நிகழ்வுகளை

    அழகழகாச் சொல்லுவதும்

    கற்போர்க்கு!

    அற்றைக் காலத்தை

    அனுபவிக்கச் செய்கிறது

    கற்றறிந்த பாடங்கள்

    கதைகதையாய்ப் பொழிகையிலே

    கவிதைகளோ காதைகள்போல்.

    அம்மா பற்றிய

    அடிகள்மிக ஆழம்தான்

    அணுவணுவாய்ப் பாடமிட்டு

    அடிமனத்தில் பதியவிட.

    உயிராகி மெய்யாகி

    ஒன்றித்து மற்றொன்றாய்

    உயிர்மெய்யாய் ஒன்றான

    உறவேதான் தாயாகும்.

    வாழ்வியலைத் தமிழோடும்

    வழிமொழியும் கவி கௌசி

    அணைப்பின் சுகமும்

    அமுதளித்த உன்னதமும்

    அன்னையாய்ப் பேறுகொண்டும்

    அழியவில்லை மனத்திரையில்

    ”தாய்பாலை மிஞ்சிய சத்துணவு எங்குண்டு

    தாய்ப்பா சத்திற்கு மிஞ்சிய அன்பு எங்குண்டு”

    கௌசியின் கவிவரிகள்

    காலத்தால் அழியாது“

    நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

    செகம்புகழ வாழுதற்கு!

    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    கௌசியின் பனிக்குடம்! எழுத்தாளர் பொன் புத்திசிகாமணி 

     

    இயற்கை மனமுவந்து அளித்த செல்வம்,பெண்மை.

    அதனால் எமக்குக் கிடைத்த வரம் தாய்மை.

    இது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கு மானதே.

    கண்கண்ட தெய்வம் என்கிற பதவி தாயைச் சேருகிறது.

    கௌசி தந்த இந்த பனிக்குடம் எங்களுக் கானதும் கூட,

    கருவில் எப்படி இருந்தோம் என்பதை எம்மால் அறிய முடிவதில்லை.

    இரண்டு குழந்தைகள் பிறந்ததைப் பார்த்த பின் மூன்றாவது குழந்தை வேண்டாம் என்பதை நானும் மனைவியும் முடிவெடுத்துக் கொண்டோம்.

    அந்த வேதனையைப் பார்த்த அனுபவம் எங்களுக்கு.

    இப்போதெல்லாம் மூன்றாவதையும் பெத்திருக்கலாம் என்று கதைப்பதுண்டு.

    இது எங்களின் இன்றைய தனிமை.

     

    குழந்தை மீது விருப்பம் வரும்போது தாயானவள் ,அனைத்தையும் மறந்து விடுகிறாள்.

    இந்தப் புலம்பெயர் வாழ்க்கையில் ஒவ்வொரு தந்தையும் தாயுமானவர் தான்.

    இவை எல்லாமே அனுபங்கள் தந்த பாடங்கள்.

    கௌசியின் அனுபவங்களே இன்று பனிக்குடமாக  நல்ல இலக்கியமாக எங்கள் முன் விரிந்து கிடக்கிறது.

    ஒவ்வொரு வரியும்  ,ஒவ்வொரு வலியும் இன்பத்தைத் தருகிறது.

    அனுபவத்தின் சுவடுகளாக நாங்கள் அம்மாவின் வயிற்றில் இப்படித்தான் வாழ்ந்தோம் என்பதை ஞாபகப் படுத்துகின்றன.

    நேற்றைய தினம் நண்பன் ஒருவன் வாட்சாப்பில் செய்தி ஒன்று அனுப்பியிருந்தான்.தாயை அறியாத பிள்ளை ஒருவன் தாயின் படத்தை வரைந்து அந்தத் தாயின் வயிற்றில் அவன் போய் சுருண்டு படுத்திருந்தான்.

    அந்த அளவிற்கு தாய்மையை, அவன் இழந்து தவிக்கிறான்.அதற்காக ஏங்குகிறான்.

     

    நீங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ள முதுமையைப் பற்றிச் சொல்லுங்கோ என கௌசி எனக்குக் கட்டளை இட்டிருக்கிறா.

     

    "வாழ்க்கையின் கட்டங்கள் தோறும்,வாழ்ந்து பெற்ற பட்டங்களே முதுமை" என்கிறார் கௌசி.

    இந்தச் சான்றிதழ் பெறாமலே சாகத் துணிந்தவர்களும்,வாழ்க்கையை இழந்தவர்களும்,வாழ்க்கைப் பரீட்சையில் பெறாத பட்டம் முதுமை.

     

    இதுவும் அவரது கருத்தே.

    இன்னும் சில கவிதைகள் முதுமைக்காக எழுதியிருக்கிறார்.

    எல்லாம் முதுமைக்கான வரையறைகள்.

    "அம்மாவின் பார்வைக்குள் ஆத்மா அடங்கிவிடும்.

    பார்வையிலே பாடம் நடத்தி

    பக்குவப் பண்புகளைப் புரிய வைக்கும்-அப்

    பார்வைக்குள் சக்தியைப் புதைத்து வைத்த

    புண்ணிய ஆத்மாவைப் போற்ற வேண்டிய

    காலம் தாயின் முதுமைக்காலம்."

    என்று இந்தக் கவிதை முடிகிறது. 

     

    ஒவ்வொருவரும் முதுமைக் காலத்தில் நாம் போற்றவேண்டிய தாய்க்குரிய கடமைகளைச் செய்ய வேண்டிய அவசியத்தைச் சொல்கிறது இந்தக் கவிதை.

     

    "பஞ்சு மெத்தையின் தன்மை தெரியாதவர்களே

    அம்மாவைக் கட்டி அணைத்துக் கொள்ளுங்கள்.

    நறுமணத்தை அறிய அம்மாவின்

    கன்னத்தில் முத்தமிடுங்கள்

    அம்மாவிடம் உள்ள அற்புத சக்தியால்

    மதி மயங்கிப் போவீர்கள்"

    தாய்மீது அன்பு வைத்திருக்கும் ஒவ்வொரு குழந்தையும் அறிந்து வைத்திருக்கும் செய்தி.

     

    "தன்னந் தனிமையிலே உடல் தள்ளாடும் வயதினிலே உங்கள் புன்னகையைப் பார்த்திருக்கும் மனம் போதாதோ எந்தனுக்கு

     

    நான் வணங்கும் தெய்வமெலாம்

    உங்கள் நல்ல குணம் அறியாரோ

    கோவிலுக்குக் கொடுத்ததெலாம்

    நன்மை கொண்டு வரமாட்டாதோ

    மூச்சிருக்கும் காலம் வரை

    உங்கள் முகம் பார்த்து

    நானிருப்பேன்

    காத்து நின்று போகும் என்றால்

    உங்கள் காலடியில்  உயிர் கொடுப்பேன்.

     

    கடைசி காலத்தில் மனைவி பாடுவதைப் போல் அமைந்தது இந்தப் பாடல்.

    காமத்தை மறந்து எவன் உண்மையான அன்பு வைக்கிறானோ

    அவனே முதுமையை நேசிக்கிறான்.

    என்பதை நானும் அறிகிறேன்.

     

    தாயின் கைக்கும் உடலுக்கும் இடையில்

    முகம் புதைத்துத் தூங்கும் இடமே

    இரவுப் பஞ்சணை

    கட்டியணைத்தேன் அம்மா

    உன் இதயத் துடிப்பு

    என் இதயத்தில் மத்தளம்

    கொட்டுவதேன்

    ஒரு வேளை உன் கருவறை

    கற்றுத்தந்த பாடமாக இருக்குமோ

     

    எனக்கு இறக்கை தந்த தேவதையே -உங்கள்

    விரிக்கத்துடிக்கும் இறகுகளை

    எனக்காக சுருக்கிக் கொள்ளுங்கள்

    என் பாதைக்கு இன்னும்

    வெளிச்சம் போதவில்லை.

     

    அன்று படுக்கையை நனைத்தேன்

    நீ இன்று படுக்கையை நனைக்கிறாய்

    தடக்கித் தடக்கி விழுந்தேன்

    தாவித் தாவி எனைப்பிடித்தாய்

    இன்று தடுமாறும் கால்களுக்கு தாங்கிப்பிடிக்க

    கைத்தடியாய் நான் வேணும்.

     

    சிறப்பான வரிகள்.

    கௌசியின் கவிதைகள்

    இதயத்தை வருடிச் செல்கின்றன

    அம்மாவின்

    அன்பு இதயத்தை அழைத்து வருகிறது.

    நானும் நனைத்தேன்

    கண்களின் நீராலே

    அம்மாவின் நினைவுதான் எப்போதும்

    வருகிறது.

     

    பனிக்குடம்  எங்களின்

    பணிக்குடம்.

    சிறப்புறும் ஆக்கங்கள் கௌசியால் இன்னும் வெளிவரவேண்டும்.இவ்வேளை

    அனைவரும் சேர்ந்து வாழ்த்துவோம்.

     நன்றி

    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------


    பனிக்குடம் - ஒரு பார்வை

     

    பனிக்குடத்தில் இன்னுமொருமுறை தோய்ந்து பிறந்தேன்



    எழுத்தாளர் தேனம்மை 

    ஜெர்மனியின் ஷோலிங்கனில் நான் சந்தித்த இலக்கிய முத்து கௌசி. அங்கே தாய்மையோடு எங்களுக்கும் விருந்தோம்பினார்கள் கௌசியும் அவர் கணவரும் மகளும். அதன் முன்னரே வலைப்பூ எழுத்துக்களில் கௌசியின் பல்பரிமாணங்கள் கண்டு வியந்திருக்கிறேன். செய்திகளையும் வித்யாசமான சிறுகதைகளாக்கும் அவர் பாணி என்னை ஆச்சர்யப்படுத்தியதுண்டு. அவரின் இத்தொகுப்பில் மகளாய், இளம் மனைவியாய், தாயாய் உணர்ந்தேன். அவரின் எழுத்துக்கள் நம் உள்ளத்தோடு பேசுகின்றன. அதுவே அவரின் எழுத்தாற்றலுக்குச் சாட்சி. தொய்வில்லாத மன ஓசையின் வெளிப்பாடு. எதுகை மோனை சந்தத்தோடு புதுக்கவிதையிலும் எடுத்தி இயம்பி இருப்பது சிறப்பு. அவர் எழுத்துக்கள் பற்றித் தெரிந்திருந்தும் இது ஒரு எதிர்பாரா வாசிப்பனுபவம். இன்ப அனுபவம்.  

    பலரைத் தோற்கடித்து எனக்குள்
    உரிமையுடன் நுழைகின்றாய் நீ

    என்ற வரிகளில் குழந்தை உருவாகும் போது ஏற்படும் அறிவியல் போராட்டத்தை அறவியலுடன் எடுத்தியம்புகிறார் கவிஞர். உடல் மாற்றங்களில் மார்பகங்கள் மெல்ல வீங்கி மகவுக்கு உணவு தயாரிக்கும் என்று கூறியுள்ளது அனுபவ அற்புதம்.

    நம்மின் சிறு பதிப்பு குழந்தை என்பதை என் மறுபிறப்பாய் உன் தந்தையின் மறுபிறப்பாய் என அழகாகச் சித்திரப்படுத்தி உள்ளார். இதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம். பிள்ளைப் பேறு என்பதே மறுபிறப்புத்தானே. கணவனும் மனைவியும் பிள்ளை பிறந்தபின் தந்தையும் தாயுமாய் இன்னொருபிறப்பு எடுக்கிறார்கள்தானே.

    குழந்தை உருவானதும் இருவரும் நெகிழ்வது அழகு. என் பரிசத்தில் உன் பரிசத்தை உணர அப்பா என்று மனதுள் இசைக்கின்றார்!. வரும் குழந்தை உலகுக்கு சூரியனாய் உதித்துப் பணி செய்ய வேண்டும் என்ற பேராவல் தாய்க்கு.

    அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் இருக்கிறது என்பார்கள். கௌசியின் கவிதைகளில் அண்ட இருட்டிலும் தாயின் சுவாசத்தையே தாலாட்டாகக் கொண்டு குழந்தை ஜீவிக்கிறது. குழந்தை வயிற்றுக்குள் அடித்தாலும் உதைத்தாலும் ஆக்கினைகள் செய்யும் இன்பத்தை ஒரு தாயாக உரைக்கும்போது அதைப் படிக்கும் என்னைப் போன்ற பல தாய்கள் அந்தப் பேரின்பத்தை நினைவில் கொண்டு மகிழ்வார்கள்.

    ஒரு குழந்தையின் வரவால் உணவுக் கட்டுப்பாடு, கடவுள் வழிபாடு என ஒரு தாய் தெய்வீக நிலைக்கு உயர்ந்துகொண்டே செல்கிறாள். சுகமாய்ச் சுமப்பதால் வலியும் கூட சிரிக்க வைக்கிறது ஆனந்தத்தில். நம்மின் சிறு உருவாகப் பத்து மாதம் கர்ப்பத்தில் கை கூப்பி வணங்கித் தாயிடம் கற்றுக்கொள்ளும் குழந்தையை கௌசி விவரிக்கும்போது மனம் பெருமிதத்தால் பொங்குகிறது.

    கருவறை அமைதி ஆனந்தம் உண்மையில் அந்தப் பேரின்பம் எங்குமே கிட்டுவதில்லை. உந்தி உந்தி வெளியேற கழுத்தைச் சுற்றும் காலனாய் உணவுக்குழாய் தடுக்கக் கத்தியால் தாயையும் சேயையும் பிரித்தெடுக்கிறார்கள் மருத்துவர்கள். என் மகவுகளையும் ( உணவுக்குழாய் சுற்றவில்லை ஆனால் ) இப்படிக் கத்தியால் பிரிக்கப்பட்டுப் பெற்றதால் அதன் வேதனையை என்னால் முழுவதுமாய் உணர முடிகிறது. குழந்தையின் குரலின் வசீகரம் அனைத்தையும் மறக்கடிக்கிறது.

    வாழ்க்கை தலைகீழாய் மாறுவதையும் பிரம்மாண்டப் பிரச்சனைகளை குழந்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கவிஞர் விவரித்திருக்கும் விதம் கண்டு பிரமித்தேன். தாய் தந்தையின் ஸ்பரிசம், மணத்தை நுகரும் குழந்தையும், அதற்குப் பசித்தால் பால் சுரக்கும் தாயும், எட்டி எட்டி நடை போட்டு எட்டாத உயரம் போகும் குழந்தையும், பிரபஞ்சத்தைத் தன்னோடு இணைப்பதற்குக் குழந்தை பேசும் அம் மும் வெகு அழகு.

    பருவ மாற்றத்தால் பச்சிளங்குழந்தை பருவக் குமரி ஆனதும், அவள் மாற்றத்தை உலகம் படம் பிடிப்பதும், மகள் என்னும் உலகைச் சுற்றி இருக்கும் ஓஸோன் படலமாயிருக்க விரும்புவதும், ஒரு தாயாய் விவரித்திருக்கும் விதம் சிறப்பு.

    தன் தாயின் சிறப்பாக தாயின் கரங்களே பொற்கரண்டி என்றும் சேலைத்தலைப்பின் நறுமணத்தையும், அவர் சமைக்கும் கறிச்சுவையின் அறுசுவையும் அமுது என்றும் ரசித்துக் கூறி இருக்கிறார். 

    தாயாய்த் தான் வடிக்கப்பட்டதையும் வார்த்தெடுக்கப்பட்டதையும் ஒரு இளம்பெண்ணாகவும் கூறி இருக்கிறார். சேர்க்கை என்னைச் சிந்திக்க வைக்கும், நூல்கள் எனக்கு வழியைக் காட்டும் எனப் புதுமைப்பெண்ணாய் ஆயுதமாய் எழுத்தைத் தெறிக்க விடுகிறார். இதில் மூட நம்பிக்கைகளை ஆய்வுக்கூடத்தில் கழுவ வேண்டும் என்ற வார்த்தைகள் பெரிதும் சிந்திக்க வைத்தன.

    விவேகானந்தரின் வரிகளான தனித்திரு விழித்திரு என்பதையும் கவிதையுள் அழகாகக் கொண்டு வந்துள்ளார். பெண்ணாய்ப் பிறந்ததால் விட்டுக்கொடுப்புகளோடும் தடைகளோடும் சமரசங்களோடும் வாழ நேர்வதையும் கோபத்தோடு சுட்டியிருக்கிறார். அடுத்து இளமைப் பருவத்துக்கே உரித்தான காதல் உணர்வுகளைப் பாடு பொருளாக்கி அதில் என் அருகே மிருகமா, அன்பு மனிதனா என்றும், பெண்மையை இழந்து தாய்மையைப் பெற்றதும், அழுகின்ற போது ஆறுதல் செய்வதும், அதன்பின் அன்பினால் ஆளுமை செய்வதும், இருமனம் கூடிய திருமணம் தந்த பரிசு. அதை இவரின் வார்த்தைகளில் படிக்கும் போது நமக்கும் நெகிழ்வு.

    என் உடல் ஒரு அருங்காட்சியகம்
    என் மனம் ஒரு சோதனைக் கூடம்
    இயற்கையின் படைப்புகள் எத்தனையோ
    அத்தனையும் பேரழிவுகளையும் தருகின்றன.

    என அபாரமான வார்த்தை வீச்சு. கவிஞர் எல்லாத் துறைகளிலும் துறைபோகியவர் என்பதற்கு இந்த மொத்தத் தொகுப்பும் அதில் இந்த வரிகளுமே சான்று. அண்டத்தையே பனிக்குடமாக்கும் வித்தை கைவருகிறது இவருக்கு.

    பெண்மனதின் புலம்பல்களும், தவிப்புகளும், தவறுகளுக்குத் தானே பொறுப்பேற்பதும் அத்துடன்

    அனைத்துமாய் நானிருக்க
    அவதாரம் பலவாறாக நானிருக்க
    உன்னை மிஞ்சி நான் இருக்க மட்டும்
    உனக்கு இஷ்டமில்லை

    என உண்மையை அதிரடியாய்ச் சுட்டிக் காட்டுவதும் கம்பீரம். அதேபோல் தன்னைத் தானே வடிவமைத்துத் தன்னைத் தானே ஏற்றுக் கொள்ளுதல் என உளவியல் பாடத்தையும் தன்னம்பிக்கையையும் போதிக்கிறார்!. பெண்களின் மனபலம் பற்றி உரைப்பதும் ஆணுக்கான அறிவுறுத்தலும் நெஞ்சுரம் தருகின்றன.

    முதுமை பற்றிய சித்திரம் அடுத்தது. போற்ற வேண்டிய பொக்கிஷம் முதுமை என்னும் வலிமை, கண் இமைகளால் கைதட்டல் கொடுப்பது, அற்புத சக்தியாக ஒவ்வொருவருக்குள்ளும் ஆட்சி செய்யும் தாய், பூச்சிகளுக்கும் உணவூட்டும் தாயின் நற்செயல்கள், தாயின் கைத்தடியாய் மாறவேண்டும் என்ற ஆசை, வான் துகளாக வழி நடத்தி வாழ்த்திக் கொண்டிருக்கும் தேவதை, ஆறாயிரம் கோடி செல்களில் மிஞ்சி இருப்பவற்றுள் ஆட்சி செய்யும் இறை துகளை இறைஞ்சி இன்னும் சில காலம் அவள் தன்னுடன் வாழும் வரம் தரவேண்டும், என் உயிர்மெய் தந்தவள், நம் எல்லா உணர்விலும் வெளிப்படும் வார்த்தை அம்மா எனத் தாயின் மீதான அபரிமிதமான அன்பை எழுத்தில் காவியமாக வடித்துள்ளார் கௌசி.

    மிக அருமையான இந்தக் காவியத்தைப் படித்துப் பெருமிதத்திலும் பூரிப்பிலும் அன்பிலும் பாசத்திலும் நனைத்து விம்மிக் கிடக்கின்றேன் நான். உலகின் முதல் அன்பை எழுத்துக்களில் படைத்த கௌசிக்குப் பேரன்பும் முத்தங்களும்.

    இனி அவரின் வார்த்தைகளிலே, 

    நடந்தேன் வாழ்க்கைப்பாதை தோறும்
    நலமே தோன்றுமென நல்லெண்ணங்கொண்டே

    என்று நவில்கிறேன் முத்தாய்ப்பாய்.!

     -------------------------------------------------------------------------------------------

    கவிஞர் கிரேஷ் பிரதீபா - அட்லாண்டா 

    அவை நிறைக்கும் ஆன்றோருக்கும் தமிழ் உறவுகளுக்கும் தேன் தமிழ் வணக்கம்.

    கௌசி அவர்களுடைய 'பனிக்குடம்' நூல்! இந்த நூலில் இருக்கும் வாழ்க்கைப் பாடங்கள் மற்றும் அறிவியல் குறித்து ஒரு சில கருத்துக்களைப் பதியப்போகின்றேன்.

    அதற்கு முன்பு இந்த நூலை வெளியிட்டிருக்கும் உலக பெண் கவிஞர் பேரவையின் நிறுவனர் திரு. அமிர்தகணேசன் ஐயா அவர்களுக்கு புதுச்சேரி அரசின் 'கலைமாமணி' விருது வழங்கப்பட்டு இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து, அவருக்கு வாழ்த்துகள் கூறி தொடங்குகின்றேன்.

     ஒவ்வொருவருடைய வாழ்வும் உலகத்திற்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறார் கவிஞர்...

    "ஆதார வேர்களுக்கு ஆரோக்கிய நீர் வேண்டும்

    உலகுக்கு உன் வரவு உபயோகமாக வேண்டும்...

    உதிப்பதும் மறைவதும் பகலவனின் பழக்கமல்ல பணி"

    நாளும் பகலவன் உதித்து மறைந்தாலும் அவன் அந்தப் பணியைச் செய்வதனால் உலகமே இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதுபோல உன் வாழ்வு பயமுள்ளதாக இருக்க வேண்டும் என்று பிறந்த குழந்தைக்கே சொல்கின்றார்.

     அனைவருக்குமே மிக முக்கியமான மற்றுமோர்  அறிவுரை.. "சாதிக்கத் துணிந்தவர்கள் வலிகளுக்கு வசப்படுவதில்லை... முயற்சி முன்னேற்றம் தானாய் கிடைக்கும்" 

    கண்டிப்பாக இன்றைய நிலைக்கு மிகத் தேவையானது. ஒரு வலியோ ஒரு தடங்கலோ ஏற்பட்டு விட்டால் மனம் உடைந்து வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலையில் இருக்கும் சிலர் இதைப் படித்துவிட்டு முயற்சி செய்வோம் என்று ஓர் உந்துதலுடன் வாழ்வை எதிர்கொள்ள வேண்டும். இன்று கடினமாகத் தோன்றினாலும் முயற்சி செய்து கொண்டேயிருப்பேன், நாளை முன்னேற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மிகவும் தேவை. 

    "தலைகீழாய்த்  தூக்குகின்றார் வைத்தியர்

    இன்னும் இருக்கின்றது வாழ்ந்து பார்" பிறந்த குழந்தைக்கு நம்பிக்கை சொல்லும் வரிகள். குழந்தையை வளர்க்கும் பொழுது வாழ்க்கைப் பாடங்களையும் அறிவுரைகளையும் ஊட்டிக் கொண்டே வந்தால் அருமை தானே? பதின்மவயதில் வந்து அனைத்து அறிவுரைகளையும் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் அது இயலாத காரியம்.

     "சிரிப்பைக் கற்க காலம் தேவை அழுகை அவசரமாகவே ஒட்டும் வாழ்ந்து பார்த்து உணர்ந்து கொள்ளும் அற்புத கலை "என்று வாழ்வை குறித்து கூறுகின்றார். அழுகை தவறானது நல்லதல்ல என்னும் பொதுப்பிம்பத்தை இது உடைக்கும் அல்லவா?

     கள்ளமுள்ள குழந்தை உலகில் எந்த மூலையிலும் இல்லை"

    குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் இங்குப் பதியப்படுகின்றது. ஒவ்வொரு குழந்தையும் அன்புடனும் அறத்துடனும் வளர்த்து விட்டால் இந்தச் சமூகம், இந்த உலகம் இனிமையானதாக இருக்கும்.

    வாழ்க்கைப் பாடங்களுடன் .

     தான் தெரிந்து கொண்ட படைவலிமை பற்றிச் சொல்லுகின்றார். அந்த வரிகளை வாசிக்க விழைகின்றேன்.

    "அன்பு எந்தன் ஆயுதமாகும்

    அறிவு எந்தன் அணிகலனாகும்

    ....

    பொறுமை எனக்குப் புகழை புகட்டும்

    சேர்க்கை என்னைச் சிந்திக்க வைக்கும்

    ...

    நூல்கள் எனக்கு வழியைக் காட்டும்

    ..

    விரும்பா தொழில்கள் ஏற்பது இல்லை

    ...

    "அனைத்தும் வாங்கிக் கொள்ளும் குப்பைத் தொட்டியாய் மனதை வையேன்"

    "நூல்கள் வழிகாட்டும் என்று சொல்லும் கௌசியின் இந்த 'பனிக்குடம்' நூலும் பலருக்கு வழிகாட்டியாய் அமையும் என்பதில் ஐயமில்லை.

    சிந்திக்கப் பொறி தெறிக்கும் புதுமைப்பெண் ஆயுதமாய் எழுத்தை தெறிக்க விடுவாள்"

    இந்த வரிகளுக்கு அருமையான சான்றாக விளங்குகிறார் தோழி கௌசி.

     

     

    ஆசிரியருடைய அறிவியல் அறிவும் கருத்துக்களும் கவிதைகளினூடே நிறைந்திருக்கின்றன.

    "குழந்தையின் முதல் வார்த்தை அம் கபால உச்சியை திறக்கும் மந்திரம்"

    மனத்தை ஒருநிலைப்படுத்தும் ஓசையின் சிறப்பை நமக்கு பிறக்கும்போதே இறைவன் கொடுத்திருப்பதை உணர்த்தும் வரிகள். 

    மகளைப் பற்றி சொல்லும் பொழுது, உன்னைப் பற்றிய எண்ணங்களில் "ஓசோன் படையாகவே இருக்க வேண்டும் என ஆசைப்படுகின்றேன்" என்று சொல்கிறார் கௌசி. இந்த பூமியை எப்படி ஓசோன் படர்ந்து இருக்கின்றதோ அதுபோலவே மகளைச் சுற்றி நான் இருப்பேன் என்று அழகான ஓர் இணைப்பு. 

    ஆய்வுக்கூடம் ஒன்று அமைப்பேன் என்ற கவிதையில் ஆசிரியர் உடைய அறிவியல் அறிவு சமூகக் கொடுமைகளைக் களைவதற்குப் பேசுகிறது. 

    "நாவை சுடுகின்ற சுரப்பு" அடடா நாவின் சிறப்புகள் சுவைக்க மட்டுமே என்று தானே அறிந்திருக்கின்றோம்.. அதில் பொய் சொல்வதைத் தடுப்பதற்கான சுரப்பை யோசிக்கின்றார். சுரப்பிகளால் உடல் இயங்குவதை எவ்வளவு அழகாக இணைத்துப் பார்க்கிறார்.

     

    "அறிவைத் தேடும் காந்தவிசை

    மூளையை மூடிவிட்டு சமுதாயத்தை உலகத்தில் நடமாட விட வேண்டும்"

    இந்த மூளை தானே அன்பை ஒதுக்கி வைத்துவிட்டுத் தன் சுகத்தை, சுயநலத்தைத் தேடுகின்றது.. மூளையை  மூடிவிட்டு சமூகத்தை உலகத்தில் விட்டால் அங்கு அன்பு தானே பிரதானமாக இருக்கும்? ஆசிரியருடைய சிந்தனைத்திறனை வியக்கிறேன்!

    "கட்டுப்பாட்டுக் கருவியைக் கையில் வைக்க வேண்டும் "

    "புவியீர்ப்பு விசையைத் தள்ளிவிட்டு பூலோகம் எங்கும் பறக்க வேண்டும்"

    என்று பல வரிகளில் அறிவியல் எளிமையாக அமர்ந்திருக்கின்றது. வாசிப்பவரைப் புரியாமல்  கனப்படுத்தாத வரிகள்.

     

    "பாறாங்கல்லைத் தூக்கியெறிய பிறர் உதவி தேவை

    மனதுக்குள் விழுந்த சுமைக்கு என்னிடமே மருந்து இருக்கின்றது"

    வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகளுக்கு உதவியைத் தேடிப் போவது தவறல்ல, இன்றியமையாதது என்பதையும் மனத்துக்குள் இருக்கும் சுமைகளுக்கு என்னிடமே மருந்திருக்கின்றது என்று தன்னம்பிக்கையும் ஊட்டும் வரிகள் இவை!

     

     

    "சோக அனுபவங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியே சோர்ந்து விடமாட்டேன்"

    என்று சோகம் வந்தவுடன் துவண்டு விடாமல் இருக்க அறிவுறுத்துகின்றார்.

    சமூகத்தில் கவிஞருடைய வரிகளை அவருடன் இணைத்து பார்க்கும் ஒரு தவறான புரிதலும் இருக்கவே செய்கின்றது. அதையும் தெளிவுபடுத்துகின்றார் கௌசி அவர்கள்.

    "வானம் அழுவது பூமி விளைவதற்காக பேனா அழுவது பேதைமை நீக்குவதற்காக"

     

    எப்படி ஒரு குழந்தையின் பிறப்பை பனி கூடத்தில் இருந்து தொடங்கி, அதன் வளர்ப்பில் பெற்றோர் மகிழ்வதையும் அவர்களுடைய கனவுகளையும் அழகாக சொல்கின்றாரோ அதைப்போலவே வாழ்வின் இறுதியில் முதுமையை பற்றியும் தெளிவாகப் பேசுகின்றார்.

    "போற்ற வேண்டிய பொக்கிஷம் முதுமை என்னும் வலிமை"

     

    "விதைக்குள் அகப்படும் விருட்சமாக உனக்குள் அகப்பட்டு கிடக்கவே ஆசைப்படுகிறேன்" என்று எப்படி  விருட்சம் விதைக்குள் இருந்து வளர்கிறதோ அதுபோல தாயிடம் இருந்து பிறப்பை பெற்றுக் கொண்ட நாம் முதுமையிலும் தாயை தேடுகின்றோம், மீண்டும் அவருக்குள் சென்று நிம்மதியாக இருக்க மாட்டோமா என்று ஒரு பொழுதேனும் ஏங்குகின்றோம் என்பதை படம் பிடித்து காட்டுகின்றார்.

     

    உடல் நலம் குன்றுவதைக் குறிப்பிடும் கவிதையில் அறிவியல் இழையோடுகின்றது. எப்படி செல்கள் ஓர் உயிரை உருவாக்குகின்றனவோ அதுபோலவே முதுமையில் அந்த செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கின்றன.

    "இறந்து கொட்டும் மூளை செல்கள் இவைதான் முதுமையின் முகவரிகள்"

     

    "கருப்பை பரிசோதனை கூடம்",

    "உந்து விசையும் உந்தியின் விசையும் ஆரம்ப கட்டத்தில் ஆரம்பமாகிறது"

     

    இப்படி பனிக்குடம் எப்படி ஓர் உயிரை வளர்த்து அதை உலகிற்குப் பரிசளிக்கின்றதோ, அது

    போலவே கௌசியின் இந்த ' 'பனிக்குடம்' நூலும் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பிறப்பிலிருந்து மூப்பு வரை சிறந்த சொல்லாடல்களோடு கருத்தாழமிக்க வரிகளில் கொடுக்கின்றது.

    சமூகத்தில் இருக்கும் குறை நிறைகள்.. அவற்றை எதிர்கொள்வதற்கான அறிவுரைகள்.. பாடங்கள் என்று ஒரு பெண்ணின் குரலாக அழகாகப் பதிவு செய்திருக்கின்றார். அன்புத் தோழி கௌசிக்கு வாழ்த்துக்களைக் கூறி அனைவரும் இந்த நூலை வாங்கி வாசிக்க வேண்டும் என்று விரும்பி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

    கிரேஸ் பிரதிபா

    அட்லாண்டா

    ஏப்ரல் 30, 2023.

    -----------------------------------------------------------------------------

    “பனிக்குடம்” கவிதை நூல் – கவிஞர் கௌசி, ஜெர்மனி

    வாழ்த்துரை - இராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா, வட அமெரிக்கா

    ஏப்ரல் 30, 2023

     

    அனைவருக்கும் வணக்கம்!

     

    முதல் மனப்பதிவு (first impression) :

    ஒரு நூலைப் படிக்க எடுக்க, “முதல் மனப்பதிவு” நன்றாக இருக்க வேண்டும். நூலின் தலைப்பு, அட்டைப்படம் மற்றும் வடிவமைப்பு படிப்போரைக் கவர வேண்டும்.  அந்த வகையில் “பனிக்குடம்” ஒரு மாறுபட்ட, அழகான தலைப்பு.  முகப்பு ஒரு புத்தாக்க ஓவியம். பின் அட்டையில் கலைமாமணி அகன் அவர்களின் வாழ்த்துரையோடு புதுச்சேரி ஒருதுளிக்கவிதை வெளியீடு, நூலுக்குச் சீரான வடிவமைப்பை அளித்துள்ளது.

    காணிக்கை:

    ஆசிரியர் கவிஞர் கௌசி தம் காணிக்கைப் பக்கத்தில்,

    “புதையலுக்குள் வைரமாக

    பொக்கிசமாகப் போற்றி வளர்த்த

    புண்ணிய ஆத்மா”

     என்று தம் தந்தையைப் பற்றிக் குறிப்பிடும் போதே வாசகனுக்கு ஓர் இணைப்பு உணர்வு வந்துவிடுகிறது.

     தோரண வாயில்:

    திரு. முத்துமணி அவர்களின் அணிந்துரை, கவிஞர் மெய்யன் நடராஜ் அவர்களின் ஆய்ந்துரை மற்றும் கௌசியின் மன ஓசை இந்நூலுக்குத் தோரண வாயிலாக அமைந்துள்ளன. கௌசி குறிப்பிட்டிருந்தபடி, இந்நூலைப் படித்து முடிக்கையில் நம் மனத்துக்குள் பனிக்குடம் உடைந்து எண்ண அலைகளைப் பிரசவிக்கத்தான் செய்தது!

     பிரிவாக்கம்:

    திட்டப்பணி மேலாண்மையில் WBS (Work break-down structure) என்று சொல்வார்கள். இதன்படி வேலைகளைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துச் செய்தால், திட்டப்பணியை முடிப்பது எளிதாக இருக்கும். அதே போல் ஆசிரியர், “தாய்மை”, “பெண்மை”, “முதுமை” என்ற பிரிவுகளாக்கி இந்நூலை அமைத்திருக்கிறார். இது  படிப்போருக்கு, ஒரு பிரிவை வாசித்து உள்வாங்கி, அசை போட்டு, அடுத்தக் கட்டத்துக்குப் போகும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

    உருவமா? உள்ளடக்கமா?

    கவிதை நூலில் உருவத்துக்குத்தான், அதாவது சொல்லும் முறைக்குத்தான் முதலிடம், உள்ளடக்கத்துக்கு அன்று என்று கூறுவோர் உண்டு. கௌசி இக்கருத்தை உடைத்தெறிந்து இரண்டையும் சரிசமமாகப் படைத்துள்ளார். வலுவான கருவை உள்ளடக்கமாகக் கொண்டு, அது எங்கும் சிதறி விடாமல், சொல்லோசையில் ஒழுங்கு முறையைப் பின்பற்றி, அழகுறக் கவிதைகளைக் கட்டமைத்திருப்பது சிறப்பு. 

    இரசனை / அழகியல் உணர்வுகள்:

    வாசகனின் இரசனை என்பது பலதரப்பட்டது. படைத்தவனின் இரசனையைக் காட்டிலும் படிப்பவனின் இரசனை பரந்துபட்டது. இதை வகைப்படுத்துதல் என்பது இயலாத ஒன்று.  இருப்பினும் நான் சுவைத்த அழகியல் உணர்வுகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

      எளிமை

    வாசகனின் அடிப்படையான எதிர்பார்ப்பு “எளிமை”. கவிதையைப் படிக்கையில், வரிகள், வாசகனின் முயற்சி அதிகம் இல்லாமல், அவனை மென்மையாகக் கொண்டு போக வேண்டும். இடையில் அகராதியைப் புரட்ட வேண்டும் அல்லது வரிகளைத் திரும்பப் படித்துப் பொருளை உணர வேண்டும் என்றால், ஒரு சராசரி வாசகன் புத்தகத்தைப் பாதியிலேயே போட்டு விட்டுப் போய் விடுவான். கௌசி இதற்கெல்லாம் இடம் வைக்காமல், எளிய சொற்கோவைகள் கொண்டு இந்நூலைப் படைத்துள்ளார்.

    ·         ஆழமான, வாழ்வியல் சார்ந்த கருப்பொருள்

    ·         கருப்பொருளுக்கு நம்மை அழைத்துப் போகும் காட்சிகள்

    ·         காட்சிகள் மனத்தில் கிளறி விடும் உணர்ச்சிகள் / இணைப்பு உணர்வு

    ·         நடைமுறைக்கேற்ற அணுகுமுறை

    ·         கவிதை வடிவம்

    ·         தாளக்கட்டு

    ·         ஒலிநயம்

    ·         கற்பனை

    ·         உவமை, உருவகம்

    ·         அன்பு, பாசம், கடமை, துணிவு

    ·         புதுமை வேட்கை

    ·         வாழ்வியல் கண்ணோட்டம்

    ·         சமுதாயச் சீர்திருத்த உணர்வு

    ·         முற்போக்கு எண்ணங்கள்

    ·         கலைக் கண்ணோட்டம்

    ·         இலக்கியப் போக்கு

    ·         அறிவியல்

     

    பிடித்த வரிகளில் ஒரு சில – நேரம் கருதி ஒரு சில மட்டுமே!

     

    மகப்பேறு நிகழவிருக்கும் வேளையைப் பற்றிச் சொல்கையில்-


    “உந்துவிசையும் உந்தியின் தள்ளுவிசையும்

    ஆரம்பக் கட்டத்தில் ஆரம்பமாகிறது” 

    என்று இயற்பியலைப் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார்.

    “என்னுள் உன் உருவம் எல்லை கடக்கிறது

    நீ வர எத்தனித்தாயா? இல்லை

    வரவுக்கு அஞ்சினாயா?”

     என்ற குழந்தைக்கான தாயின் கேள்வி எழுப்பல், நம் மனத்திலும் பல கேள்விகளை எழுப்புகிறது.

     குழந்தைக்கு நனைந்துவிட்ட உள்ளாடை மாற்றுவது என்பது இயல்பான செயல். இதைக் குறிப்பிடுகையில் ஆசிரியர்,

     “நீருக்குள் கிடந்தாய் நீந்திக் களித்தாய் – இன்று

    நனைந்துவிட்ட உள்ளாடை மாற்ற வீறிட்டு அழுகின்றாய்”

     என்று நமக்குப் பனிக்குடத்தை நினைவுபடுத்துவது புதுமை.

     ஆசிரியர், பெண்மைப் பகுதியில் ஆய்வுக்கூடம் அமைத்து, அங்குச் சமுதாயத்தை அடைக்க வேண்டும் என்று தொடங்கி, பாரதி “காணி நிலம் வேண்டும்” பாடலில் கேட்டது போல் தமது பல ஆசைகளை அடுக்குகிறார்.

     

    அவற்றுள் நான் சுவைத்த சில வரிகள்-

     “மூளைகளை முழுவதுமாய்த்

    திறக்க வேண்டும்

    மூடநம்பிக்கைப் பதிவுகளை

    முழுவதுமாக உரசிக் கழுவ வேண்டும்

    …

    பொறாமைச் சுரப்பை சுரக்க விடாது

    முடக்க வேண்டும் – அது

    உர்ர் என்ற முகத்திற்கு

    மகிழ்ச்சி தர வேண்டும்”

     

    இதைப் படிக்கையில், “உர்ர்” என்று முறைத்துக் கொண்டிருக்கும் எவர் முகத்திலும் முறுவல் அரும்பத்தான் செய்யும்!

     கலைநுட்பம் மிகுந்த, மிகைப்படுத்தல் இல்லா இப்படைப்பை அளித்த அன்புச் சகோதரி கௌசிக்கு உலகப் பெண் கவிஞர் பேரவை மற்றும் வல்லினச் சிறகுகள் சார்பில் பாராட்டுகள்!

     தமிழ் வான் அவை அளித்த வாய்ப்புக்கு நன்றி!

    -------------------------------------------------------------

    பனிக்குடம் – பெண்மை

    ஹேமா  ராமச்சந்திரன்

     

    பேரன்புமிக்க தமிழ்கூறும் வாசகர் வட்டத்திற்கு எனது அன்பான  வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் முதற்கண் மகழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    பெண் என்பவள் யார்? பெண்ணியம் பற்றி பேசும் நம்மில் எத்தனை பேருக்கு இதற்கான விடை தெரியும்?

    இந்தக் கேள்விகளுக்கான பதிலை கௌசி அவர்கள்  ”தாய், தாரம், தோழி, சகோதரி எனப் பன்முகம் கொண்ட  பெண்,  வலிமைக்கும் மென்மைக்கும் எடுத்துக்காட்டாக இருக்கின்றாள்” என்பதை "பனிக்குடம்" என்ற இந்தக்  கவிதைத் தொகுப்பில்  "தாய்மை, பெண்மை, முதுமை" என்ற மூன்று பரிமாணங்களைக் கொண்டு  அழகான கவிதை நடையில் உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்துகிறார்.

    இந்த மூன்று தலைப்புகளில் பெண்மை என்ற தலைப்பில் நான் வாசித்து இரசித்த சில வரிகளை ”யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” - என்ற வகையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த தமிழ்வானவை நிறுவனத்திற்கு என் நன்றிகள் பல.

    பெண்மையும் தாய்மையும் பிரிக்கமுடியாதவை. சிறந்த பெண்மையே சிறந்த தாய்மையாகும். அன்பும் அரவணைப்பும் பெண்மையின் இரு கண்கள்.

    அத்தகைய தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் வாழ்ந்த பெண் தனித்து வாழும் போது  அவள் எதிர் கொள்ளும் சவால்கள் எத்தனை எத்தனை..

    அவற்றை அழகாக விவரிக்கிறார் கௌசி. இதோ அவருடைய வரிகள்:

     



    இந்த வாழ்க்கைப் பாடங்கள் அப்பெண்ணுக்குள் தோற்றுவிக்கும் மனஉறுதி, மனத்திண்மை, மனவலிமை இவற்றைப் பாங்குற இந்த வரிகளில் வெளிப்படுத்துகிறார் கௌசி!

    அடுத்ததாக பெண் என்பவள் எவ்வளவுதான் தன்னிச்சையாக இருக்க முயன்றாலும், கருவறை தந்த சுகங்களை உலகத்திற்குத் தாரை வார்த்துவிட்டு தன்னை இழக்கவேண்டி வருகிறது. 

    பெண்ணின் சுதந்திரங்களைத்  தட்டிப்பறிக்கும் சமூகம் அவள் நொந்த போது  எங்கே போனது என்றும் கேட்டு விட்டு, அவளுடைய அவலங்கள் நீங்க கௌசியே ஒரு அறிவியல் கற்பனை விளக்கம் தருகின்றார்.



    என்ன ஒரு கற்பனை கௌசி! வியந்து போனேன் நான்!

    என்னைக்  கவர்ந்த மற்றொரு பகுதி:



    இதை விட உள்ளக்கிடக்கை அனுபவபூர்வமாக யாரால் சொல்ல முடியும், நம் கௌசியைத் தவிர?

    ”மரத்துக்குத் தெரிவதில்லை இளைப்பாறும் பறவையின் சுயநலம்”- என்று கூறும் போது பெண் எவ்விதம் ஆணின் வன்முறை மற்றும் ஒடுக்குமுறை  போன்ற முறைகேடுகளை அறியாது போகிறாள் என்றும், இத்தகைய சவால்களினால் பெண் மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும்  துன்புறுவது முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலையாக உள்ளது என்றும் எண்ணி மனம் கலங்குகிறார் கௌசி.

    மேலும் அவர்  சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை, அவலங்களை, பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டுவதோடு நின்றுவிடவில்லை.

     ”அடங்கிக் கிடக்கும் ஆமைகளாய், ஒடுங்கிக் கிடக்கும் அடிமைகளாய் நாங்கள் இனி இல்லை ,  எங்களைப் புறக்கணிக்க, நசுக்க நினைக்கும் எவரையும் எதிர்த்துக் குரல் கொடுக்கும் அளவிற்குத் துணிவும், மனஉறுதியும் பெற்று விட்டோம்.” -  என்று ஆண்களுக்கு  அடுத்து வரும் கவிதை வரிகளில் ஆணித்தரமாக எச்சரிக்கை விடுக்கின்றார்.

     தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்து  சமூகத்தையே மாற்றியமைக்க  வேண்டிய பொறுப்பு  நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.  

    இன்றைய சமூகம் தற்போதுள்ள கலாசார விழுமியங்களை பெண்களுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. அதனை விடுத்து, பெண்களின் உடல், உளநலன்களை கருத்திற் கொண்டு, கலாசார விழுமியங்களில் மாற்றங்களைக் கொண்டு வருவதே, சமூகம், அதாவது நாம்  செய்யவேண்டிய தலையாய  நடவடிக்கையாகும்.  

    மற்றுமொரு மிகவும் முக்கியமான பொறுப்பு பெண்ணென்ற வகையில் தாய்மார்களுக்கு  உள்ளது. அது என்னவென்றால் பெண்கள் தமது ஆண்  பிள்ளைகளுக்குச் சரியான மனப்பாங்குகளை சிறுவயது முதல் கற்பித்து, அவர்களைப்  பெண்ணினத்தைக்  கௌரவப்படுத்துபவர்களாக ஆயத்தம் செய்வது .

    அவ்வாறு செய்யப்படுமானால், பெண்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என்பது திண்ணம்.   

    பனிக்குடம் என்ற இந்தக் கவிதை நூலை அனைவரும் படித்துப் பயன் பெறலாம். அவ்வளவு எளிமையோடும், சுவையுடனும், கவிதை நயத்தோடும் எழுதப்பட்ட வரிகள்.

    இந்தக் கவிதைத் தொகுப்பை வாசித்த பிறகு ஓரிரு நாட்கள் கௌசியின் கவிதை வரிகளோடு நான் தனியே எஞ்சியிருந்தேன் என்றால் அது மிகையாகாது.

    கௌசி அவர்களுக்கு என் இதயபூர்வமான நல்வாழ்த்துகள்.

    ”இந்த உலகு வாழும்வரை பெண்மை என்னும் புதுவெள்ளம்  பாய்ந்து உலகை வாழ்விக்கும்!”

    ”பெண்ணியம் போற்றுவோம், கண்ணியம் காப்போம் ”

    ”பெண்மையை வணங்குவோம்”

    ”வாழ்க தமிழ் ”

    வாய்ப்புக்கு நன்றி கூறி  விடை பெறுகிறேன். வணக்கம்!

     

    ஹேமா  ராமச்சந்திரன்

    டென்மார்க் 

    -------------------------------------------------------------------------------------------------------------------------------------

    "பனிக்குடத்தில் நனைந்தவன்"
    ------------------------------------------------
    " ஒரு புத்தகமென்பது எப்படி இருக்க வேண்டுமெனில்... / இந்த புத்தகம் ஒரு ஆகச்சிறந்த... / ஒரு புத்தகத்தின் சிறப்பென்பது.... " இப்படி எப்படி வேண்டுமானால் ரொம்பவும் Formal-ஆக ஒரு புத்தகம் பற்றியும் அதன் ஆசிரியர் பற்றியும் எழுதலாம், பேசலாம். ஆனால் அப்புத்தகம் உண்டாக்கும் தாக்கமென்பது வெகு இயல்பானதாய் இருக்கும்போது, அது சார்ந்து செய்யும் எல்லாமே இயல்பாகத்தான் இருக்கும்.
    இருக்காதா பின்னே..?
    நேற்றைய முன்தினம் இரவு 11.00 மணி வரை Site-இல் பிரச்சனை என்று தூங்காது கிடந்து மறுநாள் காலை 5.30 மணியிலிருந்தே அலுவலகத்தில் அலைச்சலோடு கிடந்தவனின் உள்ளுக்குள் ஒரு அலாரம் மட்டும், "டம்..டம்..டம்..டம்...(பனிக்கு)டம்" என்று டம்மடித்துக்கொண்டே இருந்தது. அந்த அலாரம், "இந்த புத்தகம் பத்தி நாமளும் ஏதாச்சும் சொல்லணுமே..?" என்ற சுய வற்புறுத்தலால் அடித்ததல்ல. மாறாய், நானும் இந்த புத்தகத்தை வாசித்திருக்கிறேன் என்ற பெருமையை வெளிப்படுத்துவதற்கு.
    இருக்காதா பின்னே..?
    அது ஏற்படுத்திய தாக்கம் அப்படி. இல்லையேல் எப்படியாவது கௌசியின் "பனிக்குடம்" பற்றி உலகத்துக்கு ஓரிரு வார்த்தைகளேனும் விளம்பிட வேண்டுமென்று வேலைக்கு இடையில் ஓடி வந்து உலகெங்கிலுமிருந்து ஆகப்பெரும் சான்றோரும் முனைவரும் தமிழ்ப்புலவரும் ஆர்வலரும் சூழ்ந்திருந்த Zoom - சபையில் அடியேனின் அவசர வார்த்தைகளும் இடம்பெற வேண்டுமென்ற எண்ணம் எழுந்திருக்குமா..? அப்படி எழுந்ததாலேயே, அக்கணம் என்னிதயத்திற்கு என்ன தோன்றியதோ, அதையே என்னிஷ்டத்துக்கு வார்த்தைகளாய் உடைத்துக் கொட்டினேன்.
    "பனிக்குடம்" புத்தகம் பற்றியும் அதன் ஆசிரியர், எனது பெரும் Inspiration "கௌசி சிவபாலன்" பற்றியும் நானுரைத்தது கொஞ்சத்திலும் கொஞ்சமே. இன்னுமவர் புத்தகங்களை/எழுத்தை கிரகிக்கும் ஆற்றலை எனக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதுதான் நிதர்சனம்.
    இருக்காதா பின்னே..?
    எத்தனை கேள்விகள்,விண்ணப்பங்கள் என்னிடம்?
    01. "யாரிந்த கௌசி..?,
    02 "அந்த புத்தகம் என் காதலிக்கு/மனைவிக்கு பரிசளிக்க வேண்டும்.."
    03. "பனிக்குடம்..பேருக்காகவே புத்தகம் வாங்கணும்.."
    04. " நீங்க எழுதுன மாதிரி இல்லையே, ரொம்ப நல்லாருக்கே..."
    05. "நான் கௌசியின் மிகப்பெரிய ரசிகை ஆகிவிட்டேன்.!"
    etc etc....
    அந்த "பனிக்குடத்தில் நனைந்தவன்" என்ற முறையில் மீண்டுமொரு முறை சொல்கிறேன், எப்படி பனிக்குடம் என்பது எப்படி பெண் ஒருத்தியின் உடலுக்குள் இயற்கை ஏற்படுத்திடும் அற்புதமோ, அதுபோலவே பனிக்குடம் புத்தகமும் ஆண் பெண் பேதம் பாராது நிறைய பேரின் உள்ளத்துக்குள் ஒரு பேரற்புதத்தை நிகழ்த்தி விட்டிருக்கிறது. நிகழ்த்தி கொண்டிருக்கிறது. இனியும் நிகழ்த்தும். அது நிகழ்த்துமந்த அற்புதத்தின் பெயர்..
    "பேரன்பு".
    ----------------------------------
    புத்தகம் : பனிக்குடம்.
    ஆசிரியர் : கௌசி சிவபாலன்.
    ---------------------------------

    --------------------------------------------------------------------------------------------------------------------------------------

    கௌசியின் பனிக்குடம்!


    இயற்கை மனமுவந்து அளித்த செல்வம்,பெண்மை.

    அதனால் எமக்குக் கிடைத்த வரம் தாய்மை.

    இது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கு மானதே.

    கண்கண்ட தெய்வம் என்கிற பதவி தாயைச் சேருகிறது.

    கௌசி தந்த இந்த பனிக்குடம் எங்களுக் கானதும் கூட,

    கருவில் எப்படி இருந்தோம் என்பதை எம்மால் அறிய முடிவதில்லை.

    இரண்டு குழந்தைகள் பிறந்ததைப் பார்த்த பின் மூன்றாவது குழந்தை வேண்டாம் என்பதை நானும் மனைவியும் முடிவெடுத்துக் கொண்டோம்.

    அந்த வேதனையைப் பார்த்த அனுபவம் எங்களுக்கு.

    இப்போதெல்லாம் மூன்றாவதையும் பெத்திருக்கலாம் என்று கதைப்பதுண்டு.

    இது எங்களின் இன்றைய தனிமை.


    குழந்தை மீது விருப்பம் வரும்போது தாயானவள் ,அனைத்தையும் மறந்து விடுகிறாள்.

    இந்தப் புலம்பெயர் வாழ்க்கையில் ஒவ்வொரு தந்தையும் தாயுமானவர் தான்.

    இவை எல்லாமே அனுபங்கள் தந்த பாடங்கள்.

    கௌசியின் அனுபவங்களே இன்று பனிக்குடமாக  நல்ல இலக்கியமாக எங்கள் முன் விரிந்து கிடக்கிறது.

    ஒவ்வொரு வரியும்  ,ஒவ்வொரு வலியும் இன்பத்தைத் தருகிறது.

    அனுபவத்தின் சுவடுகளாக நாங்கள் அம்மாவின் வயிற்றில் இப்படித்தான் வாழ்ந்தோம் என்பதை ஞாபகப் படுத்துகின்றன.

    நேற்றைய தினம் நண்பன் ஒருவன் வாட்சாப்பில் செய்தி ஒன்று அனுப்பியிருந்தான்.தாயை அறியாத பிள்ளை ஒருவன் தாயின் படத்தை வரைந்து அந்தத் தாயின் வயிற்றில் அவன் போய் சுருண்டு படுத்திருந்தான்.

    அந்த அளவிற்கு தாய்மையை, அவன் இழந்து தவிக்கிறான்.அதற்காக ஏங்குகிறான்.


    நீங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ள முதுமையைப் பற்றிச் சொல்லுங்கோ என கௌசி எனக்குக் கட்டளை இட்டிருக்கிறா.


    "வாழ்க்கையின் கட்டங்கள் தோறும்,வாழ்ந்து பெற்ற பட்டங்களே முதுமை" என்கிறார் கௌசி.

    இந்தச் சான்றிதழ் பெறாமலே சாகத் துணிந்தவர்களும்,வாழ்க்கையை இழந்தவர்களும்,வாழ்க்கைப் பரீட்சையில் பெறாத பட்டம் முதுமை.


    இதுவும் அவரது கருத்தே.

    இன்னும் சில கவிதைகள் முதுமைக்காக எழுதியிருக்கிறார்.

    எல்லாம் முதுமைக்கான வரையறைகள்.

    "அம்மாவின் பார்வைக்குள் ஆத்மா அடங்கிவிடும்.

    பார்வையிலே பாடம் நடத்தி

    பக்குவப் பண்புகளைப் புரிய வைக்கும்-அப்

    பார்வைக்குள் சக்தியைப் புதைத்து வைத்த

    புண்ணிய ஆத்மாவைப் போற்ற வேண்டிய

    காலம் தாயின் முதுமைக்காலம்."

    என்று இந்தக் கவிதை முடிகிறது.  


    ஒவ்வொருவரும் முதுமைக் காலத்தில் நாம் போற்றவேண்டிய தாய்க்குரிய கடமைகளைச் செய்ய வேண்டிய அவசியத்தைச் சொல்கிறது இந்தக் கவிதை.


    "பஞ்சு மெத்தையின் தன்மை தெரியாதவர்களே

    அம்மாவைக் கட்டி அணைத்துக் கொள்ளுங்கள்.

    நறுமணத்தை அறிய அம்மாவின்

    கன்னத்தில் முத்தமிடுங்கள்

    அம்மாவிடம் உள்ள அற்புத சக்தியால்

    மதி மயங்கிப் போவீர்கள்"

    தாய்மீது அன்பு வைத்திருக்கும் ஒவ்வொரு குழந்தையும் அறிந்து வைத்திருக்கும் செய்தி.


    "தன்னந் தனிமையிலே உடல் தள்ளாடும் வயதினிலே உங்கள் புன்னகையைப் பார்த்திருக்கும் மனம் போதாதோ எந்தனுக்கு


    நான் வணங்கும் தெய்வமெலாம்

    உங்கள் நல்ல குணம் அறியாரோ

    கோவிலுக்குக் கொடுத்ததெலாம்

    நன்மை கொண்டு வரமாட்டாதோ

    மூச்சிருக்கும் காலம் வரை 

    உங்கள் முகம் பார்த்து

    நானிருப்பேன்

    காத்து நின்று போகும் என்றால்

    உங்கள் காலடியில்  உயிர் கொடுப்பேன்.


    கடைசி காலத்தில் மனைவி பாடுவதைப் போல் அமைந்தது இந்தப் பாடல்.

    காமத்தை மறந்து எவன் உண்மையான அன்பு வைக்கிறானோ

    அவனே முதுமையை நேசிக்கிறான்.

    என்பதை நானும் அறிகிறேன்.


    தாயின் கைக்கும் உடலுக்கும் இடையில் 

    முகம் புதைத்துத் தூங்கும் இடமே

    இரவுப் பஞ்சணை

    கட்டியணைத்தேன் அம்மா

    உன் இதயத் துடிப்பு

    என் இதயத்தில் மத்தளம்

    கொட்டுவதேன்

    ஒரு வேளை உன் கருவறை

    கற்றுத்தந்த பாடமாக இருக்குமோ


    எனக்கு இறக்கை தந்த தேவதையே -உங்கள்

    விரிக்கத்துடிக்கும் இறகுகளை

    எனக்காக சுருக்கிக் கொள்ளுங்கள்

    என் பாதைக்கு இன்னும்

    வெளிச்சம் போதவில்லை.


    அன்று படுக்கையை நனைத்தேன்

    நீ இன்று படுக்கையை நனைக்கிறாய்

    தடக்கித் தடக்கி விழுந்தேன்

    தாவித் தாவி எனைப்பிடித்தாய்

    இன்று தடுமாறும் கால்களுக்கு தாங்கிப்பிடிக்க

    கைத்தடியாய் நான் வேணும்.


    சிறப்பான வரிகள்.

    கௌசியின் கவிதைகள் 

    இதயத்தை வருடிச் செல்கின்றன

    அம்மாவின்

    அன்பு இதயத்தை அழைத்து வருகிறது.

    நானும் நனைத்தேன்

    கண்களின் நீராலே

    அம்மாவின் நினைவுதான் எப்போதும்

    வருகிறது.


    பனிக்குடம்  எங்களின்

    பணிக்குடம்.

    சிறப்புறும் ஆக்கங்கள் கௌசியால் இன்னும் வெளிவரவேண்டும்.இவ்வேளை

    அனைவரும் சேர்ந்து வாழ்த்துவோம்.

     நன்றி

    எழுத்தாளர், கவிஞர் பொன்னையா புத்திசிகாமணி

    ஜெர்மனி  

    -------------------------------------------------------

    ஏற்புரை 

    இந்த நிகழ்வில் உரையாற்றியவர்கள் அனைவருக்கும் உடனேயே நன்றி தெரிவித்து விட்டேன். ஒவ்வொருவருக்கும் ஏற்பு தெரிவித்து விட்டேன். இருந்தாலும் இப்போது ஓட்டு மொத்தமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். என்னுடைய இந்த உரையிலே சிலருக்கு நன்றி சொல்ல வேண்டிய கடமை இருக்கின்றது. இன்னும் சில விடயங்கள் பேச வேண்டி இருக்கின்றது. அதனையே இவ்வுரையிலே பேசலாம் என்று இருக்கின்றேன்.

    என்னுடைய மூளைக்குள் இருந்து சிதறிய சிதறல்கள் இந்தப் பனிக்குடத்துக்குள் விழுந்து காலம் அறிந்து பிரசவமாகும் போது அதைக் கையில் ஏந்துபவர்கள் எப்படி மகிழ்ந்து அணைப்பார்கள் என்பதைக் காணும் ஆசை ஒவ்வொரு நூலாசிரியர்களுக்கும் இருப்பதுபோல் எனக்கும் இருந்தது. அதிலும் நான் இந்த நூலை எழுதிவிட்டு இதற்கான அங்கீகாரம் எனக்கு எப்படிக் கிடைக்கப் போகின்றது என்பதுதான் எனக்கு பெரிய கேள்வியாக இருந்தது. அதுவும் இது என்னுடைய முதல் முயற்சியும் புது முயற்சியும். முதலில் என்னுடைய பல்கலைக் கழகத் தோழன் சிவலிங்கம் ராஜேந்திரனிடம் அனுப்பினேன். அவர் ஒரு புத்தகப் பிரியன்.  பல நிறுவனங்கள் பரிசுத் தேர்வுக்காக இவரிடம் புத்தகங்கள் அனுப்புவார்கள். விரல் நுனியில் புத்தகப் பக்கங்களை வைத்திருப்பவர். எந்தப் புத்தகம் என்றாலும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறானது அவருடைய நூலகம். அவர் பெரிய சந்தோஷப்பட்டார். இந்த நூலுக்குரிய பெயரை வைத்தார்.  இந்தப் பெயர் சிறப்பாகப் பலரைக் கவர்ந்திருக்கின்றது. இந்தப் புத்தகத்தின் வெற்றிக்கு இந்தப் பெயரும் காரணம். அவர் என்ன காரணம் கூறினார் என்றால், இந்த உலகத்திலே யாராலும் rejekt பண்ண முடியாத ஒரு உறவு இருக்கின்றது என்றால் அது அம்மா பிள்ளை உறவுதான். அந்த அம்மாக்கும் பிள்ளைக்கும் இருந்த முதல் உறவு பனிக்குடத்திலேதான் ஆரம்பமாகின்றது. அதனாலேயே இந்தப் பெயர் வைப்போம் என்றார். நானும் யோசித்தேன். பெண் இந்தப் புத்தகம் முழுவதிலும் ஆட்சி செய்கின்றாள். தாயாக இளம் பெண்ணாக மூதாட்டியாகப் பருவம் எடுக்கின்றாள் அதன் முதல் அத்திவாரம் போடப்படுகின்ற இடம் பனிக்குடம். அதனால் இந்த நூலுக்கு இந்தப் பெயர்தான் பொருத்தம் என்று நினைத்தேன். அடுத்து இந்த நூலை நான் எழுதியதன் பின் இந்த நூல் பற்றிய அபிப்பிராயம் அறிவதற்காக டாக்டர் அகன் ஐயாவிடம் அனுப்பி வைத்தேன். அவரும் வாசித்த பின் இந்த புத்தகத்தை உலகப் பெண் கவிஞர்கள் பேரவை ஒரு துளிக்கவிதை அமைப்பினால் வெளியீடு செய்வோம் அம்மா என்று சொன்னார். அப்போது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி பெண்ணைப் பற்றிய புத்தகம் உலகப் பெண் கவிஞர்கள் பேரவை ஒரு துளிக்கவிதை அமைப்பினால் வெளியீடு செய்வது மகிழ்ச்சியைத் தந்தது. அத்துடன் அகன் ஐயா என்னுடைய புத்தகத்தை பிடிஎப் இல் கேட்டு பெற்றே முழுவதுமாக வாசித்துப் பின் அட்டையில் எழுதித் தந்திருந்தார். 

    பின் இந்தப் புத்தக வடிவம் பெற்று புத்தகத்தை அட்லாண்டாவில் கொண்டு சென்று வெளியீடு செய்வதற்காக ஆயத்தங்களை செய்து டாக்டர் அகன் ஐயா அவர்கள் அட்லாண்டாவில் வெளியீடு செய்தார். பெண்மையை கொண்டாடுவோம் என்று இந்தப் பெண்களுக்காக முற்று முழுதாக செயற்படுகின்ற அவருடைய செயல்பாட்டிலே இன்று உலகப் பெண் கவிஞர் பேரவை இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஈரோடு தமிழன்பனின் மகனாக அவர் மூச்சாக தொழிற்படுகிறார். அவருக்கு இந்த இடத்திலே நான் நன்றி சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கின்றேன். அதன்பின் இந்த நூல் எழுதுவதற்கு அணிந்துரை தந்தவர். என்னுடைய உடன்பிறவா சகோதரன் இந்தோனேசியாவில் இருக்கும் கவிக்கிறுக்கான முத்துமணி அண்ணா அவர்கள். இன்று இந்தியா பயணம் செல்வதால் அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அவருக்கும் மிக்க நன்றி. 

    அடுத்ததாக இதற்கு எழுதுவதற்கு மெய்யன் நடராஜா என்பவரை அகன் ஐயா அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார் மிகச் சிறப்பாக புத்தகத்தில் இருக்கின்ற அத்தனை விடயங்களையும் அழகாக உள்வாங்கி ஆய்வுரை எழுதித்தந்த மெய்யன் நடராஜா அவர்களுக்கு மிக்க நன்றி அணிந்துரையையும் ஆய்வுரையையும் பார்த்தபின் எனக்கு மனதுக்குள்ளே ஒரு உற்சாகம் ஏற்பட்டது அதன் பின் புத்தகம் வெளியானது இந்த புத்தகத்தின் சிறப்பு கட்டாரில் இருந்து தான் ஆய்வுரையும் வந்தது கட்டாரில் இருந்துதான் புத்தகத்திற்கான முன்னெட்டை படமும் வந்தது

    அடுத்து நூலாக்கியவுடன் அதுதான் அகளங்கன் ஐயாவிடமும் காப்பியக்கோ ஐயாவிடமும் எனக்கு ஏசக்கூடாது என்று கேட்டுத்தான் அனுப்பினேன். யாரிடம் நாம் பாராட்டுக்கள் பெறுகின்றோம் என்பதை பொறுத்து தான் எம்முடைய தராதரம் கவனிக்கப்படும். அவர்கள் இருவரும் மரபுக் கவிதை வல்லவர்கள். அங்கிருந்தும் அங்கீகாரம் கிடைத்தது. சுவாமி வாரம் கொடுத்ததான் பின் வேறு என்ன இருக்கிறது. .  நான் எழுதியதோ புதுக்கவிதை இந்த இருவரும் சிறந்த விமர்சனம் எனக்குத் தந்து தட்டிக் கொடுத்து அந்த புத்தகத்தை சிறப்பாக பிறர் மத்தியில் பார்வைக்கு விட்டிருக்கின்றார்கள் அந்த வகையில் இருவருக்கும் மிக்க நன்றி. 

    பெண்ணின் பருவங்கள் அதில் ஏற்படும் உணர்வுகள் எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய வரிகளாக இவை இருக்க வேண்டும் என்று விரும்பினேன் அதில் வெற்றியும் கண்டேன்.

     அடுத்ததாக இந்த நூலை இளையவர்களுக்குக் கொண்டு சேர்த்த பெருமை கவிஞர் அரவிந்தையே  சாரும், அவர் போட்ட ஒரு பதிவின் மூலம் பலரின் கவன ஈர்ப்பை இந்த நூல் பெற்றது. இந்தியாவில் இருப்பவர்களுக்கு அனுப்புவதற்காக பூங்குழலியிடம் இந்தியாவில் புத்தகங்கள் கொடுத்திருந்தேன் அரவிந்த் அறிமுகம் செய்து நொடியிலிருந்து பூங்குழலிக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கள் ஏராளம் பூங்குழலி கேட்டார் என்ன கௌசி என்னை இப்படிப் படுத்திராங்களே என்று. அரவிந்துக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரை கவர்ந்த அந்த நூலுக்கு இவரை கவர்ந்த ரசிகர்கள் போட்டா போட்டி போட்டு வாங்கினார்கள் இந்த வகையில் இந்த நூல் இந்த அளவு விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வெளி வருகின்றது என்றால் அதற்குக் காரணம் அரவிந்த் என்பதும்  வெளிப்படையான உண்மை அந்த அரவிந்துக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கின்றேன். 

    அடுத்து முக்கிய காரணம் நூலின் மேலட்டைப் படம். அதனையும் அரவிந்த் தான் வரைந்தார். இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் யாருமே இந்தப் புத்தகத்தை தூக்கக்காமல் விட மாட்டார்கள். மெய் எழுத்துக்களில் வைக்கப்பட்டிருக்கும் புள்ளிகள் அதற்குள் நீந்துகின்ற குழந்தை அற்புதமாக இருக்கின்றது. அவருக்கு மிக்க நன்றி. இவர்  சாதாரண கவிஞர் மட்டுமல்ல சிறந்த ஒரு கலைஞன் அவருடைய படங்கள் தான் முதலில் என்னை கவர்ந்தன.  அதன் பின் தான் அவருடைய கவிதை என்னைக் கவர்ந்தன. அந்த கவிதைகளுக்குள் சில கவிதைகள் விரசமாக இருக்கும் சில கவிதைகள் அழகியலுடன் இருக்கும் சில கவிதைகள் உள்ளத்துக்குள் ஒரு நெருடலை ஏற்படுத்தும் உள்ளத்துக்குள் ஒரு உணர்வு போராட்டத்தை தரும் இவ்வாறு பல விதமான உள்ளத்து உணர்ச்சிகளை கவிதை ஆக்கித் தரவல்லவர். அரவிந்த் உங்களுடைய நூல்கள் ஏதாவது வெளியிடுவதாக இருந்தால் அதற்கு வேண்டிய உதவிகளையும் நான் உங்களுக்கு செய்வேன்.

    இங்கு அமர்ந்திருக்கின்ற என்னுடைய நூலை விமர்சனம் செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மகிழ்ச்சியை அன்பை தெரிவித்துக் கொள்கின்றேன். 

    பனிக்குடம் என்ற நூல் நான் எப்படி எழுதினேன் என்று என்னால் சொல்ல முடியாது. இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது உண்மையில் இந்த நூல் எழுதுவதற்கு எந்தவித பெரிய பிராயத்தனங்களும் நான் எடுக்கவில்லை. தானாக தோன்றிய நினைவுகளும். தானாகவே மூளையில் இருந்து விரல்களுக்கு கொட்டிய வரிகள் தான் இந்த நூலாக வடிவெடுத்திருக்கின்றது. நான் demenzia நோயாளிகளுடன் வேலை சேகட காரணத்தால் முதுமை எப்படி இருக்கும் என்பதை உணரக்கூடியதாக இருந்தது.

    நாவல் சிறுகதை கட்டுரை தொகுப்புகள் வெளியிட்டு விட்டேன் ஒரு கவிதை நூல் வெளியிட வேண்டும் என்று நான் நினைத்தேன் அந்த கவிதையில் தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய பேரவா ஆனாலும் தந்தை இல்லாமல் எப்படி ஒரு உயிர் இந்த உலகத்தில் பிறக்க முடியும் எனவே தந்தைக்காக இந்த புத்தகத்தை சமர்ப்பணம் செய்தேன். என் உதிரத்திலேயே ஓடுகின்ற இரத்தத்தில் என் தந்தையின் சமூக பற்றும் என் தாயின் அறிவு தேடலும் கலந்து இருக்கின்றது.

    பிழைகள் இருக்கின்றதா என்று அறிய வேண்டியது அவசியம் அந்த வகையில் கலாநிதி ஜீவகுமாரன் அவர்களிடம் இந்த புத்தகத்தை அனுப்பி இருந்தேன் அவரும் உடனே வாசித்து இந்த புத்தகத்தில் இருக்கின்ற தவறுகள் எழுத்து பிழைகள் பெரிதாக எந்த எழுத்துப் பிழைகள் இல்லாமல் விட்டாலும் ஓரிரு பிழைகளை அவர் சுட்டிக் காட்டினார். அவருக்கும் மிக்க நன்றி.

    புத்தகம் வெளியிடப்பட்டதுடன் அந்தப் புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கி யார் யாருக்கு எங்கே எல்லாம் அனுப்ப வேண்டுமோ அவற்றையெல்லாம் இந்தியாவில் இருந்து பிரித்து அனுப்புவதற்கு ஆவண செய்தவர் குருஜி கோபால்ஜி அவர்கள். அவருடைய பணிப்பின் பேரில் இறையாசிரியர் சசிக்குமார் அவர்கள் புத்தகத்தை தன்னுடைய செலவிலே வாங்கி அதை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் எனக்கும் பிரித்து அனுப்பி வைத்தார். அந்த நேரத்திலே மழை தன்னுடைய வேலைப்பளு அத்தனையையும் பொருட்படுத்தாமல் அந்த நூலை என்னிடம் அவர் கொண்டு வந்து சேர்த்தார். அவருக்கும் மிக்க நன்றி.

     பூங்குழலி தன்னிடம் இருந்த புத்தகங்களை  யார் யாருக்கு சேர்க்க வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் அனுப்பி வைத்தார். இதேபோல மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இந்நூலை வெளியீடு செய்து வைத்து அங்கு சென்று எனக்காக ஏற்புரை தந்து அனைத்துக் கடமைகளையும் செய்தார். பூங்குழலியை பற்றி நான் சொல்ல தேவையில்லை என்று என்னுடன் தொடர்பு ஏற்படுத்தினாரோ அன்றிலிருந்து இன்று வரை பூங்குழலி என்னுடைய சிறந்த ஒரு தோழியாக இலக்கியத் தோழியாக என்னுடன் பயணம் செய்கின்ற அவருக்கு மிக்க நன்றி. 

    அதேபோல் இலங்கையில் ஜீவலிங்கம். ஜீவலிங்கம் என்னுடைய முதலாவது புத்தகத்தை தவிர என்னுடைய எல்லா புத்தகங்களுக்கும் அவருடைய கைபடாமல் இலங்கையிலே யாரிடமும் போய்ச் சேர்வதில்லை அந்த அளவுக்கு எனக்கு அவருடைய உதவி இருக்கின்றது. ஏன் நான் புத்தகம் என்று சொல்லுகின்றேன் பொதுவாக எல்லா விடயங்களும் என்னுடைய ஒரு சகோதரன் எப்படி எனக்கு உதவி செய்வாரோ அங்கே இருந்து அதே போல எல்லாவிதமான உதவிகளையும் செய்கின்ற ஜீவலிங்கம் என் வாழ்க்கையிலே என்றும் மறக்க முடியாத ஒரு இடத்தில் இருக்கின்ற ஒரு என்னுடைய அன்பு சகோதரனாக அவர் விளங்குகின்றார். அவருக்கும் மிக்க நன்றி 

    அகளங்கள் அய்யாவிடம் இன்று நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குங்கள் என்று சொன்னவுடன் உடனே ஓம் என்று சொல்லிவிட்டார் நான் உச்சியிலே வைத்துக் கொண்டாடிய ஒருவர், அவர் இன்று என்னுடைய நூல் வாசித்து அதற்கு சிறந்த விமர்சனம் தந்து அதற்கு தலைமை உரையாற்றியது எனக்கு பேரின்பம் என்றுதான் சொல்ல வேண்டும். மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி. அதைப்போல் கப்பியக்கோ JInna sherifudeen ஐயா அவர்களும் பெருக்கத்து வேண்டும் பணிவு என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு அவர் ஒரு மேதை மகாமேதை அவர் பாராட்டும் எனக்குச் சிறப்புத்தான். 

    அடுத்து எல்லோரும் அந்த விமர்சனத்தை அழகாக இந்த இடத்தில் எடுத்துக் காட்டி இருக்கிறார்கள் என் உள்ளத்துக்குள்ளே ஒரு பெருமைதான் சாதாரணமாக பயந்து பயந்து நான் எழுதிய நூல் பலருடைய பாராட்டைப் பெறுகின்ற போது உண்மையில் மகிழ்ச்சியை நான் பெற்றுக் கொள்கின்றேன். என்ன மனதிலே ஒரு பெரிய குறை நான் இந்த இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணமான இருவரும் இன்று இந்த உலகத்தில் இல்லை. என்னுடைய பதவிகளுக்கெல்லாம் பெருமைப்பட்ட என்னுடைய தந்தை இன்று இல்லை. நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மனதுக்குள் பதியம் போட்ட என்னுடைய தாய் இங்கு இல்லை. என் ஆயுள் வரை என் எண்ணங்கள் உன்னைச் சுற்றியிருக்கும் ஓசோன் படையாகவேயிருக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன் என்று சொன்ன அம்மா 58 வயதிலேயே உலகத்தை விட்டுப் போய் விட்டார். ஏதோ பாவம் செய்தவர்களுக்குத் தான் இந்த இழப்பு வரும். இது வாழ்க்கை முழுவதும் தீராத குறையாக எனக்கு இருக்கின்றது.

    இந்த மூன்று வருடம் தமிழ் வானவை நிகழ்ச்சியிலே என்னுடைய ஒரு நூல் முதன்முதலாக இன்று தான் வெளியீடு செய்யப்படுகின்றது அதுவும் ஒரு வித மகிழ்ச்சியை தான் தருகின்றது. அதற்கு நான் கேட்டவுடன் மறுப்புத் தெரிவிக்காது ஆம் என்று ஒருங்கமைப்புச் செய்த ஜெர்மனி தமிழ்  ஊடகவியலாளர் காந்தகுரலோன் முல்லை மோகன் அவர்களுக்கும் நன்றி கூறி  இனி வரும் நூல்கள் அத்தனையும் தமிழ் வானவை வெளியிடாக தான் நான் செய்வேன் என்று கூறி உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன். அனைத்துக்கும் மிக்க நன்றி 

     

    செவ்வாய், 6 ஜூன், 2023

    விழி சொல்லும் கதைகளை விட மனம்சொல்லும் கதைகள் உணர்வுபூர்வமானவை

     



    விழி சொல்லும் கதைகளை விட மனம்சொல்லும் கதைகள் உணர்வுபூர்வமானவை

    காரணமில்லாமல் மனம் சிலரைத் தேடும். முன்னமே ஒட்டி உறவாடி விட்டுச் சென்றவர்களின் நினைவுகள் மனதுக்குள் தவியாய் தவித்து ஊசலாடும். இது உறவுக்கு மட்டுமா? இல்லை ஊருக்கும் தான் அது பொருந்தும்.  விழி சொல்லும் கதைகளை விட மனம் சொல்லும் கதைகள் உணர்வு பூர்வமாக இருக்கும். புலம்பெயர்ந்து பிறப்பில் இருந்தவர்களைத் தொலைத்து  யாரோ ஊர் பேர் தெரியாத மனிதர்கள் எல்லாம் எம்மோடு ஒட்டி உறவாடுகின்ற போது ஏதோ கனவுகள் போல பழைய ஊர் ஞாபகங்கள் நிழலாடிக் கொண்டேயிருக்கும். இது வெளியில் தெரியாது மனதுக்குள் இருக்கும் ஒரு ஏக்கம். இது அனைவருக்கும் தான் இருக்கின்றது. இந்த மனநோய் இல்லாத புலம்பெயர்ந்த மக்கள் யாருமேயில்லை. கடமைக்காகவும் இருப்பை வலுப்படுத்தவும் ஓடிஓடி உழைத்து ஓய்ந்த பின் தவிப்புக்கு மருந்து தேடப் பிறந்தகம் நோக்கிப் பறக்கின்றவர்கள் அங்கு எதிர்பார்ப்பதெல்லாம் அன்பு, பாசம், அமைதி, அந்தப் பிள்ளைப் பிராயத்து நினைவுகளை மட்டுமே. வானத்தில் பறந்து சென்று மகிழ்ச்சி கண்டாலும் திரும்பவும் வானத்தில் பறந்து திரும்பவும் வாழும் நாட்டில் கால் பதிக்கவே வேண்டும். 

    என்னுடைய என்னையே நானறியேன் என்னும் நாவலிலே முக்கிய கதாபாத்திரம் பேசுவதை இங்கு பதிவு செய்கின்றேன் 

    அந்தக் காற்றைச் சுவாசிப்பேன். என் தாய் மணலில் புரண்டு எழுவேன், அந்தச் சூரியனின் கதிர்களை என் வெற்று உடம்பினால் உடைப்பேன். கால்களால் இலங்கை மண்ணைத் தட்டித்தட்டி ஒத்தடம் கொடுப்பேன், உறவினர் மனதுக்குள் நுழைந்து திரும்புவேன், தியேட்டருக்குள் சென்று சினிமா பார்த்து மூட்டைப்பூச்சிகளுக்கு இரத்ததானம் வழங்குவேன், பள்ளிவாசலிலே நாரிசாசோறு உண்பேன், பொடிமெனிக்கா வீட்டில் பாற்சோறும் கட்டச்சம்பலும் உண்பேன், விகாரையிலே தாமரைப்பூ வைத்து வணங்குவேன், கோயில் குளத்திலே மூழ்கி எழுவேன், சின்னத்தம்பிப் படத்து பிரபுபோல் ஏரியிலே குளிப்பேன்,  அநாதைப்பிள்ளைகளைப் பார்த்து நம்பிக்கை விதைத்து வருவேன், மாமரநிழலிலே ஆறுதலாய் அமர்ந்திருந்து கறுத்தக் கொழும்பான் மாம்பழம் கடித்துத் தின்பேன், பழஞ்சோற்றுக் கஞ்சியிலே ஊறுகாய் சேர்த்தெடுத்து வாசற்கட்டிலே அமர்ந்து காற்று வாங்கி கஞ்சி குடிப்பேன். இப்படி எத்தனையோ ஆசைகள் எனக்குள்ளே இருக்கின்றன. என்று அவர் சொல்வதாக எழுதியிருக்கிறேன். 

    ஏறாவூரிலே நான் வாழந்த அந்தத் தெரு. நடக்கப் பழக்க மில்லாமல் ஓடியே சென்ற சாலை ஓரங்கள்

    சதங்களை எண்ணிக் கொடுத்து முந்திரியம் பருப்புக்கள் வாங்கிய போது முந்திரிப் பால் சுட்டுக் கறுத்த விரல்களால் பெட்டியைத் திறந்து உம்மா எண்ணிக் கையில் புதைத்த பருப்பை வாயில் போட்டபடி மீண்டும் ஓடிய நினைவுகள். என்னுடைய ஐயாவின் காலைப்பிடித்தால் காலுக்கு மேல் ஏறி நடந்தால் 50  சதம் கிடைக்கும். அந்தச் சதங்களை முன் கடையில் போத்தலுக்குள் இருக்கும் முட்டாசு வாங்கி சுவைத்த காலங்கள் ஊர் நினைவுகளை மீட்டுகின்றன. நாம் கடந்து போன காலங்களில் மறந்து போனவை அதிகம். சிட்டுக்குருவிகளாக பறந்த அந்த நாட்கள் நினைவுக்குள்ளே நிழலாடுகின்றன 

    பொப்பிசைச் சக்கரவர்த்தி A,E.மனோகரன் பாடிய பாடலொன்றில்


    கோணேஸ்வரர் கோயில் கொண்ட திருமலையூரில்

    ராவணேசன் ஞாபகமும் வருகுது அங்கே

    கன்னியா வெந்நீர் ஊற்றும் கலங்கரை ஒளி விளங்கும்

    இயற்கை துறைமுகந்தானே என்று பாட அந்தக் கன்னியா வெந்நீர் ஊற்றிலே உள்ள வெப்பத்தின் தன்மையைச் சின்னத்தம்பிப் புலவர் விளக்கும் போது 

    காதலனைப் பிரிந்தவளின் மனம்போல ஒன்று 

    கவிபாடிப் பரிசுபெறான் மனம்போல ஒன்று 

    தீதுபழி கேட்டவன்தன் மனம்போல ஒன்று

    செய்தபிழைக் கழுங்குமவன் மனம்போல ஒன்று 

    நீதிபெற வேழைதுயர் மனம்போல ஒன்று 

    நிறைபழித்த கற்புடையாள் மனம்போல ஒன்று 

    காதுமழுக் காறுடையான் மனம்போல ஒன்று 

    கனலேறு மெழுநீர்கள் உண்டுகன்னி யாயில்.

    வெந்நீர் ஸ்நானம் ஆயிற்று. 

    என்று பாடியுள்ளார். மேலும் சோமசுந்தரப்புலவர் இலங்கை வரலாற்றிலே 

    'மஞ்சளாவிய மாடங்கள் தோறும்

    மயில்கள்போல் மடவார்கணஞ் சூழும்

    அஞ்ச ரோருரக பள்ளியின் மீமிசை

    அன்ன வன்னக் குழாம் விளையாடும்

    துஞ்சு மேதி சுறாக்களை சீறச்

    சுறாக்களோடிப் பலாக்கனி கீறி

    இஞ்சி வேலியின் மஞ்சளிற் போய் விழும்

    ஈழ மண்டல நாடெங்கள் நாடே' 

    என்று இலங்கை வளத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார். இவ்வாறு எண்ண எண்ண இனிக்கின்ற சொல்லச் சொல்லச் சுவைக்கின்ற இலங்கையின் சிறப்பினை சொல்வதற்கு இக்கட்டுரை போதாது. 

    இலங்கை பூலோகம் படத்திலே ஒரு புள்ளி. ஆனாலும் அது சந்தித்த நிகழ்வகளோ பெரும் சாகரம்.  ரிஷி மூலம் நதி மூலம் பார்க்கக் கூடாது. இதன் குற்றவாளி சுற்றவாளி ஆராய்ந்து கணக்கில் வைக்க எமக்கு இருக்கும் காலங்களோ மிகக் குறைவு. வாழ்ந்து கழித்த நாட்களிலே மனதுக்குள் ஊஞ்சல் ஆடும் நினைவுகளை மனத்துக்குள் சிறை வைத்து, மனக்கண் கொண்டு நோக்குகின்றோம். மகிழ்ந்து இன்பம் அனுபவிப்போம். 

    சொற்களை அடுக்கி அடுக்கிக் கட்டி மேய்க்கும் எழுத்தாளனின் கனவுகளும் நினைவுகளும் சரித்திரமாகும். 


    புதன், 19 ஏப்ரல், 2023

    உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல நூல் விமர்சனம்

     



    ஒரு சிறிய கதை ஒன்றுடன் என்னுடைய உரையை ஆரம்பிக்கின்றேன். சொல்கிறேன். குருவிக்கதை. ஒரு உழவன் தோட்டத்தில் வேலை செய்வதற்குச் செல்லுகின்றான். அங்கே ஒரு குருவிக் கூட்டைக் காணுகின்றான். அங்கே ஒரு முட்டை சிறிய வெடிப்போடு இருக்கிறது. அடுத்த நாளும் போய்ப் பார்க்கின்றான். இன்னும் கொஞ்சம் வெடிப்பு. இந்த முட்டையைப் பார்ப்பதே அவனுக்கு ஒவ்வொருநாளும் பழக்கமாகப் போகின்றது. ஒருநாள் அந்த முட்டைக்குள்ளே இருந்து ஒரு குங்சு வெளியே வருவதற்கு தன்னுடைய சிறகுகளால் முட்டி மோதிக் கொண்டிருப்பதைக் காணுகின்றான். பாவம் அந்தக் குருவி வெளியே வரக் கஷ்டப்படுகின்றது என்று நினைத்து அந்த முட்டையின் வெடிப்புத் துவாரத்தை கொஞ்சம் பெரிதாக உடைத்து விடுகின்றான். அந்தக் குருவி கஷ்டமில்லாமல் வெளியே வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன். அடுத்த நாள் பார்க்கிறான் எந்தவித அசைவும் இல்லை. அதற்கடுத்தநாள் போகின்றான். அந்த முட்டையைச் சுற்றி எறும்புகள் ஊர்ந்தது கொணடிருக்கின்றன. அந்த குருவிக்குஞ்சு இறந்து விட்டது. இந்தக் கதை இப்படியே இருக்க இந்த புத்தகத்துக்குள் நாம் இப்போது போவோம். 

    திருமூலருடைய திருமந்திரத்திலே ஒரு பிள்ளையைக் கருத்தரிக்க முன் ஆணும் பெண்ணும் எவற்றைக் கையாள வேண்டும் என்று சொல்லியிருக்கின்றது. அதேபோல் ஒரு பிள்ளையைப் பெற்றவுடன் எப்படிப் பிள்ளையை வளர்க்க வேண்டும் என்பதை இந்தப் புத்தகம் சொல்லியிருக்கின்றது.  குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கடமை இல்லை. அது ஒரு கலை. அது மட்டுமல்ல அறிவியல், உளவியல் சார்ந்தது. பாட்டி தாத்தா கூடத் தம்முடைய பிள்ளைகளை வளர்க்கும் போது விட்ட பிழைகளை திருத்திக் கொள்ள வேண்டியது  அவசியம். இதற்கெல்லாம் ஒரு கைநூலாகப் பல உளவியலாளர்களின் கருத்துக்களை எல்லாம் உள்வாங்கி இரவு பகலாக ஆய்வு செய்து இந்த சமூகத்துக்காக திருமதி கலாநிதி ஜீவகுமாரன் அவர்கள் இந்த நூலை உங்கள் கைகளில் ஒப்படைக்கின்றார். 

    இந்த நூலின் பெயர் உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. நிற்க இடமும் நீளமான நெம்புகோலும் இருந்தால் பூமியையே நகர்த்துவேன் என்றார் ஆர்க்கிமீடிஸ். அதேபோல் நீண்ட தடி இருந்தால் நிலாவைத் தொட்டு விடுவோம் என்று இந்த நூலின் முன்னட்டையிலே குழந்தைகள் தொடுவது போல் படம் வரையப்பட்டுள்ளது. இவர்கள் பார்வை பூமி நோக்கி இருக்கவில்லை. எம்மைத் தாண்டி ஏதோ ஒன்று இருக்கின்றது என்பதை அறியும் ஆவலாக முயற்சித்துப் பார்ப்பவர்களாக இருக்கின்றார்கள். இந்த நூலுக்கு ஏன் இந்த முன்னட்டை என்று சிந்தித்துப் பார்த்தால், குடும்பம், மக்கள், பணம் என்று ஒரு குறுகிய வட்டதுக்குள் பெரியவர்கள் வாழுகின்ற போது குழந்தைகள் உலகம் வேறு ஒரு ஆராய்ச்சிப் பாதையை நோக்கிப் போவதாக இருக்கின்றது. அப்படியான குழந்தைகளை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதைத்தான் இந்த நூல் எடுத்துரைக்கின்றது. அதனாலேயே இந்த நூலுக்கு ஆசிரியர் இந்தப் படத்தைத் தந்திருக்கின்றார். பின்பக்கத்தில் ஆசிரியரைப் பற்றி பதிப்பகத்தார் பரணீதரன் அவர்களின் குறிப்பு வந்திருக்கின்றது. இலக்கிய அப்பாக்களாகிய எழுத்தாளர் திரு.கு.சின்னப்பா பாரதி, டெல்லி நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஹரிஹர பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் இந்த நூலைச் சமர்ப்பணமாகத் தந்திருக்கின்றார். பேராசிரியர் மௌனகுரு அவர்கள் வாழ்த்துரை தந்திருக்கின்றார். ஞானம் சஞ்சிகை ஆசிரியர் ஞானசேகரம் அவர்கள் அணிந்துரை தந்திருக்கின்றார். விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அது இந்த மண்டபத்துக்குரிய விலை அல்ல. புத்தகக் கடைக்குரிய விலை.   

    இந்த நூலாசிரியரைப் பற்றி உங்களில் அநேகம் பேருக்குத் தெரிந்திருக்கும். இவர் இந்த நூலை எழுதாமல் விட்டிருந்தால், அவர் வாழுகின்ற நாட்டுக்கு வஞ்சகம் செய்தவராகவே கருதப்படுவார். இலங்கையிலே இவர் கலைமாணிப் பட்டம் பெற்றிருக்கலாம். ஆனால் இங்கு மனிதவாழ்விலே தொட்டில் முதல் சுடுகாடுவரையிலான புரிந்துணர்வு, பராமரிப்பு, அன்பு, அறிவு ஆகியன வாழ்வாதாரங்களாக இருப்பதனால் அதுசம்பந்தப்பட்ட அறிவைப் பெற்றுக் கொள்வதும், நடைமுறைப்படுத்துவதுமான கல்வியைக் கற்றுக் கொண்டார். அதில் குழந்தை வளர்ப்புத்துறை முக்கியமானதாக இருந்தது. அதைவிட குழந்தைகளுடைய பாடசாலையிலே அவர்களுடனேயே பணி புரிந்தது மட்டுமல்லாமல் டென்மார்க்கில் தமிழ்க் குடும்பங்களிலே ஏற்படுகின்ற பிரச்சினைகளை அவர்களிடம் சென்று கேட்டுத் தெரிந்து அதனை டெனிஸ் மொழியில் மொழிபெயர்த்து இங்குள்ள அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துகின்ற தொழிலைச் செய்பவர். அதனால், இந்த நூலை எழுதாமல் விட்டிருந்தால், பெரிய பழி இவரை வந்து சேர்ந்திருக்கும். அதேபோல இந்த நூலை வாசிக்காமல் விட்டீர்களானால், உங்களுடைய பிள்ளைகள் தவறு விடுகின்ற சந்தர்ப்பங்களில் என்ன காரணம் என்று தெரியாதவர்களாக ஆவீர்கள். இந்தத் தொழிலும் சரி இந்த நூலும் சரி ஒரு தொண்டு என்றுதான் சொல்ல வேண்டும். தன்னுடைய அனுபவங்களின் தெளிவை இந்த நூலாகத் தந்திருக்கின்றார். அதற்கு உளவியலாளர்களுடைய எடுத்துக்காட்டுக்களைத் துணையாக எடுத்திருக்கின்றார். 

    12 அத்தியாயங்களிலே 8 சாராம்சங்களுக்கு விடை காண்பதுதான் இந்த நூலாக இருக்கின்றது என்று ஆசிரியர் தன்னுடைய முன்னுரையிலே அறியத் தந்துள்ளார். 

    1. நமது சொத்துக்களாக நமது பிள்ளைகளை கருதலாமா? அவர்களைத் தனிப்பட்ட மனிதர்களாக எப்படி வளர்க்க வேண்டும்

    2. குழந்தைகளின் வளர்ச்சிக் கட்டங்களை எவ்வாறு புரிந்து கொண்டு பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.

    3. அடித்து வளர்ப்பது சரியா? எப்படி அடிக்காமல் வளர்க்கலாம்.

    4. கட்டுப்பாடுகள் குழந்தை வளர்ப்புக்கு ஏன் அவசியம்

    5. நாம் விழிப்புணர்வுள்ள பெற்றவர்களாக இருப்பது எப்படி? 

    6. எமது மக்கள் இந்த புலம்பெயர்ந்த சூழ்நிலையில் கலாசாரச் சிக்கல்களை எப்படிப் புரிந்து கொள்வது?

    7. எங்களுடைய வளர்ப்பிலே தவறுகண்ட அரசாங்கம் பிள்ளைகளை ஏன் எப்படி பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுக்கின்றது? 

    8. உங்களுடைய பிள்ளைகள் உங்களுடைய பிள்ளைகள் அல்ல என்னும் கூற்றை எவ்வாறு புரிந்து கொள்வது 

    இவைதான் அந்த சாராம்சங்கள். அதாவது என்னுடைய எண்ணம் பகவத்கீதை பக்கம் போகிறது குருஷேத்திர யுத்தத்திலே பகவான் கிருஸ்ணபரமாத்மாவால் அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட 18 அத்தியாயங்கள் அடங்கிய 700 சுலோகங்கள். இதுதான் பகவத் கீதை. இது மனிதவாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கின்ற அத்தனை நூல்களையும் கசக்கிப் பிழிந்தால் அதுதான் பகவத்கீதை. அதேபோல  குழந்தை வளர்ப்பு பற்றிய அத்தனை நூல்களையும் கசக்கிப் பிழிந்தால், வருவது உங்களுடைய பிள்ளை உங்களுடைய பிள்ளை அல்ல என்கின்ற இந்த நூல். இது ஒரு வாழ்க்கைத் தத்துவம். இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்தால், குழந்தைநல உளவியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக நீங்கள் விளங்குவீர்கள். இதைக் கேட்டவுடன் 10 மாதம் சுமந்து தாலாட்டிப் பாராட்டி கண்முழித்து பிள்ளைகளின் நோய் துன்பங்களை அனுபவித்து நாங்கள் வளர்க்கி;ன்ற பிள்ளைகள் எங்களுடைய பிள்ளைகள் இல்லையா? என்ன விசர்க் கதை. இதற்கு ஒரு மேடை இதற்கு ஒரு மைக், இதற்கு ஒரு புத்தகம். எழும்புங்க நடையைக் கட்டுவோம் என்று யாரும் கிளம்பி விடாதீர்கள். இதையேதான் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களும் சொல்லியிருக்கிறார். தனியே கலாநிதி ஜீவகுமாரன் அவர்கள் மட்டும் சொல்லவில்லை. எதற்கும் ஜீவா அண்ணனையும் இதற்கு அத்தாட்சியாகச் சேர்ப்போம். 

    அப்துல்கலாம் எதைச் சொன்னார் என்றால், உங்களுடைய டென்மார்க் வைத்தியசாலை ஒன்றில் செய்திப்பலகையில் எழுதப்பட்டிருக்கின்ற ஒரு கவிதையைத்தான் அவர் சொன்னார். அது என்னவென்றால், 1902 ஆம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற சூஃபிக் கவிஞர் கலீல் ஜிப்ரான் அவர்கள் எழுதிய ஒரு கவிதை. இதனை இந்த நூலில் ஆசிரியர் தந்திருக்கின்றார். 

    உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல.

    அவர்கள் இயற்கையின் (கடவுளின்) குழந்தைகள் 

    உங்கள் மூலமாக வந்திருக்கிறார்களே அன்றி உங்களிடம் இருந்து அல்ல. 

    உங்களுடன் இருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல.

    உங்களுடைய அன்பை அவர்களுக்குத் தரலாம். உங்களுடைய எண்ணங்களை அல்ல.

    அவர்களுக்கு என்று தனிச்சிந்தனைகள் உண்டு. உடலுக்குத்தான் பாதுகாப்புத் தர முடியும் ஆன்மாக்களுக்கு அல்ல. இதில் அற்புதம் என்னவென்றால், நீங்கள் வில். உங்களிடம் இருந்து எய்யப்படும் உயிருள்ள அம்பு குழந்தைகள். அம்பு எதை அடைய வேண்டும் என்ற இலக்கை வில் தீர்மானிப்பதில்லை. அம்பை எய்பவன்தான் தீர்மானிப்பான். நீங்கள் அம்பை எய்பவன் அல்ல. நீங்கள் அந்த வில்லுத்தான். அந்த அம்பை எய்பவர் நீங்கள் இயற்கை என்று எடுத்துக் கொண்டால் இயற்கை. கடவுள் என்றால் கடவுள்.  



    இந்த வித்தியாசத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். டெனிஷ்காரனுக்கு விளங்கியிருக்கிறது. இது எங்களுடைய பெற்றோர்களுக்கு விளங்க வேண்டும் இல்லையா? என்ன செய்கிறது பாழாய்ப் போன மனசு கேட்குதில்லையே என்று நீங்கள் கூறலாம். தொப்புள் கொடி வெட்டப்படும் போது உங்களுக்கும் பிள்ளைக்கும் உள்ள தொடர்பு பிரித்து எடுக்கப்படுகின்றது. ஒரு நாற்றைப் பிடுங்கி வேறு இடத்திலே நாட்டினால்தான் அந்த நாற்று நல்ல நாற்றாக வளரும் என்று ஆசிரியர் கூறுகின்றார்.  

    அதனால், இந்த நூலை வாசிக்கத் தொடங்குவதற்கு முன் இதுதான் நீங்கள் முற்றுமுழுதாக மனதிலே பதிக்க வேண்டிய விடயம். அடுத்தது நீங்கள் வாழுகின்ற கலாசார சூழல் இதனையும் மனதில் கொள்ள வேண்டும். எமது பெற்றோர்கள் புலம்பெயாந்தது குற்றம். பலவிதமான கலாசார மாணவர்கள் கற்கின்ற பாடசாலையிலே பிள்ளைகளைப் படிக்கச் அனுப்பியது குற்றம். அப்படி இருக்கும் போது தம்முடைய ஆசைகளைப் பிள்ளைகளில் திணிப்பது குற்றம், தங்களுடைய கலாசாரத்திலேயே பிள்ளைகள் வளர வேண்டும் என்று அடம்பிடிப்பது குற்றம், இப்படிப் பல குற்றங்களைத் தங்களிடம் வைத்திருந்துவிட்டு பிள்ளைகள் வளர்ந்தபின் யோசித்து யோசித்து மனநிலை பாதிப்படைவது பாரியகுற்றமாக இருக்கின்றது.  இதனை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் என்றால், 

    பிள்ளை வயிற்றில் உருவாவதில் இருந்து பெற்றோர் கவனம் எடுக்க வேண்டும். வளருகின்ற காலங்கள் முழுவதும் கவனம் எடுக்க வேண்டும். இதைத்தான் இந்தப் புத்தகம் உங்களுக்குச் சொல்லுகிறது. 

    இந்த ஆசிரியருடைய சுவாரஸ்யம் என்னவென்றால், நன்றாகக் கதை சொல்லுவார். இதனை விட மகாபாத்திர கதாபாத்திரங்களுடன் கனவில் பேசியிருக்கின்றார்.  கதை சொல்லுவதென்றால், கதைகள் மூலமாக, சம்பவங்கள் மூலமாக பசுமரத்தாணி போல் மனதிலே சில விடயங்களைப் பதித்து விடுவார். அதற்கான தீர்வுகளும் தந்துவிடுவார். அதனால், இங்கு ஒலிவர், சங்கர் போன்ற கதாபாத்திரங்களை இந்தப் புத்தகத்தில் நடிக்க வைத்திருக்கின்றார்கள்.  

    இப்போது உங்களுடைய பிள்ளை என்ற காரணத்தாலேயே உங்களுடைய ஆசாபாசங்களை பிள்ளைகளில் வலுக்கட்டாயமாகத் திணிக்கின்றீர்கள். அதற்குப் பிள்ளைகள் அடங்கவில்லை என்றால், வன்முறையைக் கையாளாதீர்கள். வன்முறை என்றால், தடியெடுத்து அடிக்க வேண்டும் என்றில்லை. நீங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கின்ற ரோச்சரே வன்முறைதான். இதற்காக கலாநிதி அவர்கள் புத்தருடைய காலத்திலே வாழ்ந்த அங்குலிமால் கதையை எடுத்துக்காட்டியிருக்கின்றார். அங்கு விமானத  தாங்கிக்என்றொரு அரக்கன் இருந்தான். அவன் 1000 மனிதர்களைக் கொல்வதாக சபதம் எடுத்திருந்தான். கண்ணெதிரே காணுகின்றவர்களை கொன்று அவர்களுடைய கட்டைவிரலை வெட்டி மாலையாகப் போட்டுக்கொண்டு திரிந்தான். அந்த ஊர் மக்கள் எல்லாம் பயந்து வெளியே வராமல் இருந்தார்கள். அவ்வழியே வந்த புத்தரிடம் அவனெதிரே போகாதீர்கள் என்று தடுத்தார்கள். ஆனால் புத்தர் எதையும் கேட்காமல் அவன் முன்னே போய் நின்றார். அவனுக்கோ பெரும் ஆச்சரியம். எனக்கு முன்னே துணிந்து இவர் வந்திருக்கின்றாரே என்று உன்னுடைய இறுதி ஆசை என்ன என்று கேட்டான். அவரும் அருகே இருந்த மரத்தின் கிளையை வெட்டு என்றார். மீண்டும் வெட்டியதை ஒட்டு என்றார். அவனால் முடியாது என்று தன்னுடைய இயலாமையை நினைத்து வருந்துகி;றான். 

    நீ வெட்டுவதை மட்டும் வைத்துக் கொண்டு பெரிய வீரன் என்று எப்படிக் கூற முடியும் என்கிறார். இப்படித்தான் வன்முறையால் திருத்தலாம் என்று நினைப்பவர்களும் அங்குலிமாமா போன்றவர்களே தான். வெட்டப்படும் மரம் போன்றவை எங்கள் குழந்தைகளின் உள்ளமும் உணர்வுகளும். இந்த வன்முறை என்பது உங்களுடைய வீட்டுக்குள் இருந்து ஆரம்பித்து நாட்டுக்குள் சென்று உலகத்திற்குப் பரவுகின்றது. 

    என்னுடைய யூரியூப் சனலில் இந்த சீரியல் கில்லர் என்று ஜெப்ரி டாமர், ஜோசப் கசவைணநட  போன்றோரைப் பற்றிப் பதிவுகள் போட்டிருக்கின்றேன். சிறுவயதிலே அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் வளர்ந்த பின் எவ்வாறு தொடர் கொலைகாரர்களாகவும், போதைவஸ்துக்கு அடிமையானவர்களாகவும்  அவர்களை மாற்றியிருக்கின்றது என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு சிறுவயதில் எம்மையறியாமல் நாங்கள் செய்கின்ற தவறுகள் வளர்ந்தபின் அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 

    நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் விளைவு நிச்சயமாகக் கிடைக்கும். அதைத்தான் செயல் விழைவுத் தத்துவம் என்று வேதாத்திரி மகரிஸி சொல்லுவார். நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே மாறுகின்றோம். அதேபோல் நாம் என்ன செய்கின்றோமோ அது எம்முடைய பிள்ளைகளிலே பிரதிபலிக்கும். 

    பிள்ளைகளை முன்னே வைத்துக் கொண்டு நாம் தொலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தால், பிள்ளை சாப்பிடவில்லை என்றால், உங்களுடைய ரெலிபோனைக் கொடுப்பது இப்படியான காரியங்கள் செய்தால், உங்களுடைய பிள்ளைகளும் அதைத்தான் செய்யப் போகின்றார்கள். சரி ரெலிபோன் இல்லாமல் சாப்பிடப்பழக்க வேண்டும் என்று ஒருநாள் நீங்கள் முடிவெடுத்து தொலைபேசியைக் கொடுக்காமல் விடுகின்றீர்கள்.முதல் நாள் அடம்பிடிக்கும் ஏனென்றால், நீங்கள் பழக்கிவிட்டீர்களே. நீங்கள் என்ன செய்வீர்கள். இவனைத் திருத்த முடியாது என்று ரெலிபோனைத் திரும்ப கொடுத்துவிடுவீர்கள். ஒரு பிள்ளை ஒரு பழக்கத்தை தொடங்கினால், அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு 21 நாட்கள் எடுக்கும். ஆனால், எங்களுடைய பெற்றோர்களுக்கு அந்தப் பொறுமை இல்லை. உடனே செய்ய வேண்டும் என்றால், பிள்ளை வைன் கொடுத்து ஆடவிடும் பொம்மையா? அதனால், பொறுமையும் தொலைநோக்கு சிந்தனையும் இருக்க வேண்டும். 

    மகாபாரத யுத்தம் முடிந்து பாஞ்சாலி பல விதவைகளைக் காணுகின்றாள். மனதாலே சரியாக வேதனைப்பட்டுக் கண்ணனிடம் சொல்கிறாள் என்னால்தானே இந்த யுத்தம். நான் தானே இதற்குக் காரணம் என்கிறாள். அதற்கு கண்ணனும் நீ மட்டும் காரணம் இல்லை. நீ கொஞ்சம் தொலைநோக்குப் பார்வையை கொண்டிருந்திருந்தால் இவ்வளவு துன்பம் வந்திருக்காது என்கிறார். அது என்னவென்று பாஞ்சாலி கேட்கக் கண்ணன் கூறுகிறார். நீ கர்ணனை அவமானப்படுத்தியிருக்கக் கூடாது ஐந்து பேரைத் திருமணம் செய் என்று குந்தி சொன்ன போது நீ சம்மதித்திருக்கக் கூடாது, துரியோதனன் விழுந்தபோது அவமானப்படுத்திச் சிரித்திருக்கக் கூடாது இப்படியெல்லாம் நீ செய்யாது விட்டிருந்தால் இவ்வாறு வந்திருக்காது என்கிறார். 

    இதுபோலவேதான் இப்படி நடக்கும் என்று நாம் சிந்திப்பதில்லை. ஆத்திரத்தில் ஏதாவது செய்துவிட்டு அதற்குப் பின் நாம் வருந்துவோம். அது பிள்ளைகளில் எப்படி பிரதிபலிக்கும் என்று பல எடுத்துக்காட்டுக்களை இந்த நூலிலே ஆசிரியர் கொண்டு வந்திருக்கிறார். 

    பாஞ்சாலிக்கு கண்ணன் சொல்லியது தொலைநோக்குப் பார்வை எமது பெற்றோர்களுக்குக் கூட இல்லை. என்ன மனிதனுக்கு இவ்வளவு  தான் என்று கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக எங்களுடைய பார்வை ஒரு எல்லைக்கு அப்பால் போகாது. அதேபோல் இந்த பூமியிலே எத்தனையோ விதமான நுண்அங்கிகள் சிறிய பூச்சிகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், அவை போடுகின்ற சத்தத்தை எம்மால் கேட்க முடியாது. இவ்வாறு எம்முடைய புலன்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.

     பூமிக்கு மேலே நீங்கள் நிற்கின்றீர்கள் உங்களைக் கவர்ந்து வைத்திருக்கின்ற புவியீர்ப்பு விசையை நீங்கள் பார்க்க முடியாது, காற்றைக் கண்களால் காணமுடியாது. ஏன் நீங்கள் இப்போது பார்க்கும் சூரியன் இப்போது இருக்கும் சூரியன் அல்ல. 8 நிமிடத்தின் முன் எப்படி இருந்தது என்பதையே நாம் பார்க்கின்றோம். இந்தப் பிரபஞ்சத்தில் நாம் இருக்கின்ற இடம் ஒரே இடமல்ல ஒரு நிமிடத்தின் முன் எங்கோ இருந்தோம் பூமி பிடித்து வைத்திருப்பதால் டென்மார்க்கில் இந்த ஹோல் இற்குள் இருக்கின்றோம். இது உண்மையல்ல. உங்களுடைய உடல் ஒரு ஆச்சரியம். இவ்வாறுதான் சில விடயங்கள் உங்களை மீறித்தான் நடக்கின்றன. இவ்வாறுதான என்று கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. அவற்றை மாற்ற முடியாது. உங்களைக் கேட்டு உங்களுடைய பிள்ளை பிறக்கவில்லை. நீங்கள் விரும்பியது போல அப்பிள்ளை இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவர்களை அவதானமாக வளர்த்து விட வேண்டிய கடமை மட்டுமே உங்களுடையது. 

    பூதக்கண்ணாடியால் தொலைதூரத்தை நாங்கள் பார்ப்பது போல எங்களுடைய பிள்ளைகள் எங்கே சென்றாலும் என்ன செய்தாலும் அவர்களில் அவதானம் எமக்குத் தேவை. நேரம் இல்லை என்று பிள்ளைகள் கையில் தொலைபேசியைக் கொடுத்துவிட்டோ, தொலைக்காட்சியைப் போட்டு விட்டோ நீங்கள் போனால், உங்களை விட உங்கள் பிள்ளை வேறு ஒரு கவன ஈர்ப்புக்குள்ளேயே போகும். அது பெருத்து பலூன் வெடிப்பது போல ஒருநாள் வெடிக்கும். அதனால், என்ன வேலை இருந்தாலும் ஒரே இடத்தில் இருந்து கொண்டு எங்கேயோ ஹரியானா மாநிலத்தில் குருஷேத்திரத்தில் நடக்கின்ற காட்சிகளை சஞ்சயன் திருதராட்டினனுக்கு பார்த்துச் சென்னான் இல்லையா அதேபோல் உங்கள் பார்வை எங்கே இருந்தாலும் பிள்ளைகளில் இருக்க வேண்டும். 

    பிள்ளைகளின் வளர்ச்சிக் கட்டங்களை ஒவ்வொன்றாக உளவியல் ரீதியாக ஆழமாக நோக்க வேண்டும். இந்தப் புத்தகம் அழகாக அந்த வளர்ச்சிக் கட்டங்களை எடுத்துக் காட்டியிருக்கிறது. குழந்தை பிறந்து 2 வயது வரை, ஒன்றரை வயதில் இருந்து 3 வயது வரை, 3 வயதில் இருந்து 4 வயது வரை, 4 முதல் 7 வயது வரை, 7 வயது முதல் 12 வயது வரை, 12 முதல் 18 வயது வரை  இப்படிப் பருவங்கள் தோறும் நடக்கின்ற குழந்தையின் மாற்றங்கள் தாமாக எப்படி வளருகின்றார்கள் இதையெல்லாம் அற்புதமாக இந்தப் புத்தகம் தந்திருக்கின்றது. 

    ஒருநாள் ஒரு மிருகக்காட்சிசாலைக்கு பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு கலாக்கா போயிருக்கின்றா. அங்கே ஒரு கங்காரு ஒரு குட்டி போட்டிருக்கின்றது. அந்த கங்காரு பிறந்த குட்டியைத் தன்னுடைய காலால் தள்ளி விடுகிறது. அப்போது ஒலிவர் என்னும் பையன் ஏன் கங்காரு குட்டியை அடிக்குது என்று கேட்கின்றான். அதற்கு கலாக்கா ஒரு பிள்ளையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தால் அந்தப் பிள்ளை எப்படி வளரும். கங்காரு தன்னுடைய பையிற்குள் வளர்ந்த குட்டியை வைக்க முடியுமா? அதனால் அது தானாக வளர விடவேண்டும். என்னும் விளக்கத்தை அழகாக சொல்லுகின்றார். 

    தாயினுடைய வயிற்றிலிருந்தே பிள்ளை எல்லாவற்றையும் கேட்கும் நீங்கள் வயிற்றில் பிள்ளை இருக்கும் போது என்ன மனநிலையில் இருக்கின்றீர்களோ அது பிள்ளையின் ஆழ்மனதில் பதிந்துவிடும். தொப்பிள்கொடியுடன் உங்களுடைய கோப தாபங்களையும் பிள்ளைக்கு நீங்கள்  கொடுத்து விடுவீர்கள் அதற்குப் பிறகு என்ன பிள்ளை பிறந்தபின் சிடுமூஞ்சியாகத்தான் இருக்கும். வயிற்றில் இருக்கும் போது மகிழ்ச்சியோடு இருந்தால், பிள்ளை மகிழ்ச்சியாகவே இருக்கும். உங்களுக்கெல்லாம் பிரகலாதன் கதை தெரியும். மனத்தை விட ஆழ்மனம் ளரடிஉழnஉழைரள அiனெ வலிமை மிகுந்தது. அந்த  ஆழ்மனம் கருவிலே உருவாகிவிடும். எனவே உங்களுக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை இருக்கிறதா? உங்களுக்கும் இந்த உலகத்துக்கும் சரியான ஒரு மனிதனைக் கொடுக்க விரும்புகின்றீர்களா? அன்றிலிருந்து அவதானமான ஒரு பெற்றோராக நீங்கள் மாற வேண்டும். அதிலும் கவனம் எடுக்க வேண்டும். இதற்கு அம்மா மட்டும் பொறுப்பில்லை. அம்மாவைக் கரிந்து கொட்டுகின்ற அப்பா இருந்தால் அதனையும் வயிற்றுக்குள் இருந்து பிள்ளை கேட்கும். அதுவும் பிள்ளையின் தலைவிதி அதுவும் இதையெல்லாம் கேட்க வேண்டும். பிள்ளை வளருகின்ற போது சூழலும் பிள்ளையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனையும் கவனத்தில் எடுக்க வேண்டும். பிள்ளைப் பெறுவதும் வளர்ப்பதும் ஒரு தற்செயலான விடயமாக இருக்கக் கூடாது. அது ஒரு தெய்வீக உணர்வு

    படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும் 

    உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக் 

    குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, 

    இட்டும் தொட்டும், கவ்வியும், துழந்தும் 

    நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும், 

    மயக்குறு மக்களை இல்லோர்க்குப் 

    பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே. 

    பலவற்றையும் படைத்துப் பலரோடும் சேர்ந்து உண்ணும் பெருஞ்செல்வம் உள்ளவரானாலும் என்ன? மெல்லமெல்லக் குறுகுறு நடந்து சென்று தம் சிறிய கையை நீட்டி, உணவருந்துகின்ற பாத்திரத்திலிருக்கின்ற நெய்யுள்ள சோற்றிலே கையை வைத்து அந்தக் கையாலேயே பெற்றோரைக் கட்டிக்கொண்டும், வாயாற் கவ்வியும், கையால் அளைந்தும், தம்முடைய உடம்பெல்லாம் அந்தப் பிள்ளை சிதறடிக்கின்ற போது அக் குறும்புகளால் உணவு வீணாகிறதே என்ற நினைவை மயக்கிப் பெற்றோரை இன்பத்தால் மகிழச் செய்யும் மக்களை இல்லாதவர்க்கு தாம் வாழுகின்ற நாட்களெல்லாம் பயனில்லாத நாட்கள். இப்படியான குறும்பு செய்த குழந்தையை சமூகக் குற்றவாளியாக மாற்றாமல் இருப்பது பெற்றோர்களாகிய உங்கள் கையிலேதான் இருக்கின்றது என்று கூறி. நீங்கள் இந்தப் புத்தகம் வாசித்து முடிக்கும் போது ஒரு முழுமனிதனாக மாறுவீர்கள்.

    சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று சிரிசா இருந்தா திருத்திக்கோ தவறு சிறிசா இருந்தா திருத்திக்கோ. தெரிந்தும் தெரியாது நடந்திருந்தால் அது திரும்பவும் வராமல் பார்த்துக்கோ என்ற சினிமாப் பாடலை உங்களுக்கு எடுத்துக் காட்டி தவறு திரும்பவும் வராமல் இந்த நூலை வாசியுங்கள் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். இப்போது இந்தப் பறவைக் கதைக்குள் வருகின்றேன். 

    அளவுக்கு மீறிய அன்புஇ எதிர்பார்ப்பு  இவைதான் அந்தப் பறவையைக் கொன்றது. 

    ஒரு பறவை முட்டையில் இருந்து வெளியே வருகின்றபோது அதன் இறக்கைகள் மெதுவாக அசையும் கால்கள் துடிக்கும் முட்டைகளின் சுவர்களில் முட்டி மோதும். இது தானே இயற்கை. சுப பிரசவம்।  அதை அப்படியே விட்டிருந்தால் இந்நேரம் அழகான பறவையாகப் பறந்திருக்கும்.. இப்படித்தான் நாமும் நம் பிள்ளைகளுக்கு வலி தெரியக் கூடாது என்று கஷ்டம் தெரியக் கூடாது என்று வளர்த்து அவர்களாகத் தம்முடைய பாதையைக் கண்டு பிடிக்க விடுவதில்லை. இந்த நூல் அதற்கான தெளிவை எங்களுக்கு எடுத்துக் காட்டுகின்றது.  

    இந்தப் புத்தகம் ஒவ்வொருவருடைய புத்தக அலுமாரியில் இருக்க வேண்டிய புத்தகம். இன்றுதான் என்னுடைய கைகளில் கிடைத்தது பிரின்ற் எடுத்து நான் வாசித்து முடித்த போது என்னுடைய இரண்டு கைகளாலும் கட்டி அணைத்து கலாக்காவுக்கு இறுக ஒரு முத்தம் தர வேண்டும் போல் இருந்தது. இந்த வாழ்க்கையில் எத்தனை அனுபவங்கள், எத்தனை வாசிப்பு அனுபவங்கள், எத்தனை பிரயத்தனம், இவ்வளவு கஸ்டப்பட்டு உழைத்த இந்த நூல் கட்டாயம் எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டியது அவசியம். முழுவதுமாக நீங்கள் வாசிக்கா விட்டாலும் 11 ஆவது அத்தியாயம் கட்டாயம் நீங்கள் வாசிக்க வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் பிள்ளைபிடி காரர்கள் என்று சொல்லப்படுகின்ற இந்த நாட்டு அரசாங்க நிறுவனங்கள் உங்களுடைய பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு போகாதிருக்க குழந்தைகளின் பாதுகாப்புச் சேவைச் சட்டங்களை இதில் கூறுகின்றார். தூக்கிக் கொண்டு போகும் குழந்தைகளை 11 விதமாக வகைப்படுத்துகின்றார். அவற்றையெல்லாம் நீங்கள் கட்டாயம் வாசித்து அறிந்திருக்க வேண்டியது அவசியம்;. 


    புதன், 8 மார்ச், 2023

    ஆண்களை விஞ்சி வாழ்வது நோக்கமல்ல. ஆண்களில் தங்கி வாழப் பிடிப்பதில்லை


    மகளிருக்காக ஒரு தினம் கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில் நான் கல்பனா சவ்லா பற்றியோ மேரி கோம் பற்றியோ ஆராயப் போவதில்லை.  தற்காலப் பெண்கள் பற்றியே சிந்திக்கத் தொடங்குகின்றேன். 

    அன்றைய ஒளவையாரின் திறமையும் துணிச்சலும், ஆண்டாளின் பிடிவாதமும், வெள்ளிவீதியாரின் உணர்வு வெளிப்பாட்டுத் தைரியமும் இடைப்பட்ட காலத்தில் எங்கே போனது என்று பூதக்கண்ணாடி போட்டுத் தேடியபோது தற்காலம் மீண்டுமாய் நிமிர்கிறது. தாய்வழி சமுதாயம் தந்தை வழி சமுதாயமாக மாறியது எப்படி? ஒரு குடும்பத்தை வழி நடத்தத் தெரிந்த பெண்ணுக்கு நாட்டை வழி நடத்தத் தெரியாதா? ஊதாரிக் கணவனைக் கண்டிப்போடு வழிநடத்தி வீட்டுக் கணக்கை போட்டுக் கொடுப்பவள் அந்தத் தலைவனுடைய மனைவி அல்லவா? 

    "தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற

     சொற்காத்துச் சோர்விலாள் பெண்|2

    ஒரு நாட்டை ஆளுவது என்பது மீன் குழம்பு வைப்பது போலே இருக்குமா? இல்லை பிள்ளையைக் குளிப்பாட்டுவது போல இருக்குமா என்ற கேள்வி ஆண்கள் மத்தியில் எழுந்ததற்குக் காரணம் என்ன? தமது இயலாமையை அதிகாரமாக சொல்லத் தெரிந்த தைரியமே. குழந்தை வளர்ப்பு என்பது சாதாரணமான விடயம் இல்லை. எதிர்கால சமுதாயம். நாளைய நாட்டுப் பிரஜைகள் அறிஞர்கள், ஜனாதிபதிகள் ஆவர். பிள்ளையின் பார்வையிலேயே அதனுடைய உள் உணர்வுகளைப் புரியக் கூடியவள் தாய். தாயின் பார்வையே பிள்ளைக்குப் பாடம் நடத்தும். பெரியவர்கள் மத்தியில் அடக்கமில்லாமல் இருக்கும் போது தாயின் கண்களே பிள்ளைக்குக் கட்டளை போடும். தாய் என்னும் பதவி ஒரு சாதாரண பதவியாகக் கொள்ள முடியுமா? இது எல்லாம் ஒரு புறம் இருக்க 

    இக்காலப் பெண்கள் அக்காலப் பெண்கள் போல இல்லை என்னும் குற்றச்சாட்டு இருக்கின்றது. சங்ககால ஒளவையார் சங்க இலக்கியங்களில் குறுந்தொகையில் 15 பாடல்களும், நற்றிணையில் 7 பாடல்களும், அகநானூற்றில் 4 பாடல்களும், புறநானூற்றில் 33 பாடல்களும் பாடியிருக்கின்றார். இன்னும் எத்தனையோ பாடியிருக்கலாம். ஆனால், கடல்கோள்களுக்குத் தப்பி இத்தனை மட்டுமே எமக்குக் கிடைக்கின்றன.  கல்வியறிவால் உயர்ந்த ஒளவாயார் குலோத்துங்கன் சோழன் அவையிலே கம்பரை 

    "எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே

    மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்

    கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே

    ஆரையடா சொன்னாயது."

    என்று அவலட்சணம், எருமை, மூதேவி, குட்டிச் சுவர், குரங்கு என்று பாட்டால் வைதிருக்கும் தைரியமும், அதியமான நெடுமான் அஞ்சியின் அன்புத் தோழியாக இருந்ததுடன் அவர் அளித்த கெட்டிக் கரையையுடைய பட்டாடை பெற்றுக் கொண்டதுடன், பழைய கள்ளை பொற்கிண்ணத்தில் பருகக் கொடுத்து மன்னன் உணவு பரிமாறிய சம்பவங்களும் அறியக்கிடக்கின்றன. ஆனால், ஒரு பெண் ஆணுடன் நட்பு வைத்துக் கொள்வது அடங்காப்பிடாரித்தனம், கற்பை மீறிய செயல் என்று இப்போதும் சிலருடைய கூற்றுக்களுக்கு எதிராகப் பெண்கள் இப்போது டீநளவல வைக்கத் தொடங்கிவிட்டார்கள்.  அதற்கும் மேலே என்று காதலனுக்கும் மேலே டீநளவல இடம் நட்பு வைத்திருக்கின்றார்கள்.

    "வானிடை வாழுமவ் வானவர்க்கு 

    மறையவர் வேள்வியில் வகுத்தஅவி 

    கானிடைத் திரிவதோர் நரி புகுந்து 

    கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப 

    ஊனிடை யாழி சங்குத்தமார்க் கென்று 

    உன்னித்தெழுந்த வென் தடமுலைகள் 

    மானிடவர்க்கென்று பேச்சுப்படில் 

    வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே" 


    என்று அக்காலத்தில் பாடும் ஆண்டாள் தைரியம் யாருக்கு வரும். இன்று பெண்களின் கவிதைகளில் அதிகமாக ஆபாசம் இருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் மேலோங்கி வரும் நிலையில் ஆணென்ன பெண் என்ன? அந்தப் பால் வேறுபாடுகளே தேவையில்லை என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். இன்று ஆண்களின்  பாலியல் தொல்லைகளை அநந வழழ என்று ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக எடுத்துக் கூறுகின்றார்கள்.

    "ஏதிலாளன் கவலை கவற்ற

    ஒருமுலை அறுத்த திருமா உண்ணி என்னும் நற்றிணைப் பாடலிலே                             

    பகைவன் செய்த கொடுமையானது உள்ளத்தை அரித்தெடுக்கத் தன் ஒரு முலையை அறுத்துக் கொண்ட திருமாவுண்ணியும், நீதி தவறிய நாட்டை வாதாடித் தீயால் அழித்த சிலப்பதிகார நாயகி கண்ணகியும் தைரியத்துக்கு எடுத்துக்காட்டுக்கள். கணவன் நல்லவனா கெட்டவனா என்பது கேள்விக்குறி. ஆயினும் அச்செயலை அவன் செய்திருக்க மாட்டான் என்னும் நம்பிக்கையும், அம்மன்னனின் நீதி தவறிய செயலும் அவளுக்கு மனதில் தீயாய் பற்றி எரிந்தது. திருமாவுண்ணி அதன் பின் வாழ்ந்தாளா என்பது கேள்விக்குறி. ஆயினும் செயலைத்தான் நாம் நோக்கவேண்டிள்ளது. 

    அக்காலத்திலும் கணவனுக்குப் பயந்து பெண் அடங்கிக் கிடக்கவில்லை. சமூகத்தின் கேள்விகளுக்கு அவள் பயப்படவில்லை. "ஐயோ சாமி நீ எனக்கு வேண்டாம்" என்று தூக்கி எறிந்துவிட்டுப் போக அவளுடைய கல்வியும், தன்னம்பிக்கையும், துணிச்சலும் கைகொடுக்கின்றன. 

    காரைக்காலம்மையார் சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்தவர். அவருடைய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகமே பிறகால பல்லவர்கால இலக்கிய வடிவமான பதிகத்திற்கு அடியெடுத்துக் கொடுத்தது. பிடிவாதமும் முற்போக்கு சிந்தனையும் உள்ளவர். கணவனோடு மட்டுமே சிவனடியார்களுக்கோ விருந்தினர்களுக்கோ உணவு பரிமாற முடியும் என்றிருந்த அக்கால வழக்கத்தை உடைத்து கணவன் அனுப்பிய மாங்கனியின் ஒன்றை கணவனுக்குத் தெரியாமலே சிவனடியாருக்குப் படைத்தவர். அதனைக் கணவனுக்குத் தெரியாமல் மறைத்தவர். அத்துடன் உணவை ஒறுத்து உடலை மெலிய வைத்து ஊர் ஊராகச் சென்று சிவத்தொண்டு புரிந்தவர். 

    "ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆகத்

    தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து இங்கு உன் பால்

    ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப்

    பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார்"

    வேறு மனைவியை மணந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன் தன்னைக் கடவுளாக வணங்குங்கள் என்று ஊராருக்குச் சொல்ல இவனுக்காகத் தாங்கிய உடல் தேவையில்லை என்று பேய்வடிவம் பெற்றதாக வரலாறு கூறுகின்றது. அதாவது அயபநசளரஉhவ என்று வேறு ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். 

    இது கடவுள் பற்றினால் என்று எடுத்துக் கொள்ள முடியாது. தோல்வியின் கண் மனமாற்றமே என்று உளவியலாளர்கள் கருதுகின்றார்கள். 

    இந்த தைரியம் இக்காலப் பெண்களிடம் மிதமாகவே இருக்கின்றது.  நல்ல காரியம் ஆற்ற வேண்டுமானால், துணையுடன் ஆற்ற வேண்டும். துணை விரும்பவில்லை என்றால், உங்களுடைய ஒத்துழைப்புத் தேவையில்லை. என்னால் தனியே காரியமாற்றத் தைரியமிருக்கின்றது என்று செயலாற்றத் தொடங்கிவிடுகின்றனர்.  

    பொறுமை, பூமி என்று பெண்ணுக்கு புகழாரம் சூட்டியதால், கவலைகளை மனதுக்குள் போட்டு அடக்கி அடக்கி குடும்பத்தில் என்ன பிரச்சினைகள் இருந்தாலும் மறைத்து வாழ்ந்த பெண்களே இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார்கள். ஆனால், இன்று 

    நீர்கால்   யாத்த  நிரைஇதழ்க்  குவளை

    கோடை ஒற்றினும்   வாடா தாகும் (குறுந்தொகை)

    குவளை மலர்கள்  நீரின்றி வாடி மீண்டும் நீர் வரும்போது உயிர்த்து எழுவதுபோல், மாரியில் உறங்கும் மரங்கள் கோடையில் துளிர்ப்பது போல் மீண்டும் எழுவர் பெண்கள். 

    முன்னேற்றப் பாதையில் திருமணம் தடையானால் திருமணம் செய்து வாழ்வதையே வெறுக்கின்றனர். ஆண்களை மிஞ்சி வாழ்வது நோக்கமாக இருப்பதில்லை. ஆண்களைத் தங்கி வாழப் பிடிப்பதில்லை. எதிர்வரும் காலம் பெண்கள் வாழ்க்கையில் சாதனையில் உயர்ந்து செல்ல சிறந்த வழிமுறைகளைக் காட்டிக் கொண்டே இருக்கும். அதனால், பெண்கள் எண்ணங்களுக்குத் தடை போடத் தேவையில்லை. 



    சனி, 4 பிப்ரவரி, 2023

    காதல் என்பது எதுவரை?



    காதல் என்பது எதுவரை, கல்யாணக் காலம் அதுவரை, கல்யாணம் என்பது எதுவரை கழுத்தினில் தாலி வரும் வரை என்பது கவிஞர் பாடல். அப்படியானால் காதல் கல்யாணத்தினுடன் முடிந்து விடுவது இயற்கையா? அதன் பின் தொடருவது என்ன? இங்கு காதலுடன் திருமணத்தை தொடர்பு படுத்துவதுதான் கேள்விக்குறியாக இருக்கின்றது. காதல் என்பது உலகத்து உயிர்கள் எல்லாவற்றுக்கும் பொதுவானது. அவையெல்லாம் தாலி கட்டிக் குடும்பம் நடத்தவில்லை. மாடப்புறா கூரை மேல் இருந்து கொஞ்சிக் குலாவுவதும், ஏரிக்கரையினிலே யானை தும்பிக்கையை ஏந்திக் காதலியைத் தடவுவதும், தரையைப்; பெருக்கி ஒரு பறவை நடனம் ஆடிக் காதலியை ஈர்ப்பதுவும் தாலி கட்டுவதற்காகவா? காதல் என்பது அதற்கு அப்பாற்பட்டது. இரு மனங்களின் சங்கமம். அது எல்லை தாண்டிச் சிந்திக்க வைக்கும். உயிரைக் கூடத் துச்சமாக எண்ண வைக்கும். ஒரு கணப்பொழுதில் உள் நுழைந்து மறு கணப்பொழுது மகிழ்ச்சியைத் தந்து உள்ளத்திற்குள் கூடு கட்டிக் கொண்டாடும். 

    சின்னச் சின்ன நிகழ்வுகளை சரித்திர சாதனைகளாகப் போற்றும். எத்தனை வருடங்கள் கடந்தாலும் இன்றே ஆரம்பித்த உணர்வைத் தரும். இந்தக் காதலினால், எத்தனை முதிர் கன்னிகள் திருமண வாழ்க்கையை தரிசிக்காமல் இருக்கின்றார்கள். சட்டம் போட்டு திருட்டை ஒழிக்க முடியாது. சட்டம் போட்டுத் திருட்டுக் காதலைத் தடை செய்ய முடியாது. புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் சந்ததி மூன்றாவது தலைமுறையைக் கண்டுவிட்டது. இப்போது இரண்டாவது தலைமுறையின் திருமண வாழ்க்கை பற்றிய ஏக்கத்தை முதலாவது தலைமுறை தாங்கிக் கலங்குகின்ற காலம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இக்கட்டுரை இது பற்றிய ஆய்வாக தொடர்கிறது.

    புலம்பெயர்ந்த போது தமிழர்களுக்கு புகுந்த நாட்டு மொழியும் புரியவில்லை. அந்த மனிதர்களின் வாழ்க்கை முறையும் புர்pயவில்லை. அதிகமானவர்கள் தம்முடைய கிராமத்திலேயே இருந்து வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து விட்டு ஒரு அந்நிய கலாசாரத்துக்குள் நுழைகின்றார்கள். தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக பலவற்றை விட்டுக் கொடுத்தவர்களுக்குத் தம்முடைய பிள்ளைகளின் திருமண வாழ்க்கையை மட்டும் விட்டுக் கொடுக்க விரும்பம் இருந்ததில்லை. வெள்ளைக்காரனின் பாடசாலையில் வெள்ளக்காரனிடம் படிக்கலாம், வெள்ளைக்காரன் உணவுகளை உண்ணலாம், வெள்ளைக்காரனை நம்பி அவன் தரும் மருந்தை நோய்க்காக அருந்தலாம், அந்த மருத்துவரிடம் உடலை ஒப்படைக்கலாம், அவன் கட்டிய வீட்டில் குடியிருக்கலாம். ஆனால், அவனுக்குத் தன்னுடைய மகளைக் கட்டிக் கொடுக்க முடியாது. என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் எல்லாம் பெறுவோம் எம்முடைய குடும்பத்துக்குள் வெள்ளைக்காரனை நுழைய விடமாட்டோம் என்று கங்கணங்கட்டியதால், இன்று தாலிக்கயிறு கட்ட முடியாத முதிர் கன்னிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் அதிகமாகி விட்டனர். இந்தக் கயிறு தேவையா என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

    கல்வி கற்கின்ற போது எந்த வெளிநாட்டுக்காரனையும் காதலித்துவிடாதே என்று கூடவே பாடசாலைக்குக் கூட்டிக் கொண்டு போய்விட்டு பாடசாலை முடிந்தவுடன் வாசலில் காவல் இருந்து கூட்டி வந்து போர்க் குதிரைக்கு வடம் கட்டியது போல் படிப்பைத் தவிர வேறு எதையும் நினைத்துப் பார்க்காது வளர்த்துவிட்டு, அந்தப்பெண் முதிர் கன்னியானவுடன் தமது முடியாமையால், யாரையாவது காதலித்தால் கல்யாணம் செய்து தருவோம் என்று பெற்றோர் கூறுகின்ற போது காதல் என்ன கடையில் வாங்கும் பொருளா? இளமையும் காதல் உணர்வும் இறந்து போன பருவத்தில் காதலிக்கச் சொன்னால், எப்படிக் காதல் வரும் என்று கலங்கி நிற்கின்றனர் பாரதிதாசன் சொன்ன 

    " கோரிக்கையற்றுக் கிடக்கும் வேரிற் பழுத்த பலாக்கள்"

    "கன்றும் உண்ணாது கலத்திலும் படாது

    நல்லான் தீம்பால் நிலத்துஉக் காஅங்கு

    எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது 

    திதலை அல்குல் என்மாமைக் கவினே"


    எனக் குறுந்தொகைப் பாடலிலே  பசு மாட்டினுடைய  பால் பாத்திரத்திலும் எடுக்காமல். கன்றுக் கட்டியும் அருந்தாமல் வீணாக நிலத்திலே சிந்தினால், யாருக்குப் பயன் இருக்கப் போகிறது அவள் அழகு பசலை நோயினால், அழிந்து போகின்றது என்பது போல் புலம்பெயர்ந்த பல கன்னிகள் அழகிழந்து ஏங்கி நிற்கின்றனர். 


    பூக்களிலே நானுமொரு 

    பூவாய்ப் பிறப்பெடுத்தேன் 

    பூவாகப் பிறந்தாலும் 

    பொன்விரல்கள் தீண்டலையே 

    பொன்விரல்கள் தீண்டலையே - நான் 

    பூமாலையாகலையே 


    என்னும் நாட்டுப் புறப்பாடலிலே பெண்ணின் ஏக்கம் புரிகிறது. இதேபோல


    மனைவி ஆகாமலே கன்னி கழியாமலே

    தாய் ஆகாமலே தாலாட்டுப் பாடாமலே

    பாட்டி ஆகிவிட்டேன் வயதான ஒரே காரணத்தால் 


    என்னும் ஒரு அற்புதமான கவிதையைப் பெயர் அறியாத ஒரு கவிஞன் பாடியிருக்கிறார். 


    இவ்வாறு காதலித்தவனைக் கைப்பிடிக்க முடியாது நல்ல வெயிலிலே ஒரு இடத்தில் வைக்கப்பட்ட நெய்யைக் கைகள் இல்லாத ஒரு வாய் பேச முடியாத ஒருவன் காவல் காத்து நிற்பது போல அழிந்து போகின்ற இளமையும் காமமும் உணர்ந்தும் பேசமுடியாது நிற்கின்ற முதிர் கன்னிகளைத் தரிசிக்கின்ற கலாசாரப் பெட்டகங்கள் இன்னும் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழுகின்றார்கள். 


    இந்த நிலையில் தம்முடைய இறுக்கங்களைத் தளர்த்தப் பல பெற்றோர்கள் முன் வந்தாலும், பெண்கள் கண்டவுடன் காதலிக்கும் வயது கடந்துவிட்டதால் தமக்குரிய ஆண்களைத் தரம் பிரித்துப் பார்க்க அவர்கள் மனம் நினைக்கின்றது. வாழ்ந்து பார்த்துக் காதலிப்போம், சேர்ந்து வாழ்ந்து பார்த்து திருமணம் செய்வோம் என முடிவெடுக்கின்றனர். காதல் யாருடனும் வரலாம் கல்யாணம் ஒருவருடனேயே வரவேண்டும் என்று தத்துவம் பேசுகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில், கல்யாணம் அவசியம் தானா? என்ற கேள்விகளை முதிர்கன்னிகள் எழுப்பத் தொடங்கிவிட்டனர். பண்பட்டவர்கள் தமிழர்களா? வெள்ளையர்களா? ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய சூழ்நிலை எம்மவர் மத்தியில் நிழலாடுகின்றது. 


    மீண்டும் வருகின்றேன். காதல் என்பது எதுவரை? 

    February வெற்றி மணி பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை 


     


    சனி, 7 ஜனவரி, 2023

    உண்மை நட்பை இலக்கியங்களில் மட்டுமே காண முடியும்




    மனித வாழ்க்கையிலே உள்ள உறவுமுறைகளிலே நட்பு என்னும் உறவே மிதமாகப் பேசப்படுகின்றது. பெற்றோரிடம் மனைவியிடம் கூறத் தயங்கும் விடயங்களைத் துணிந்து நண்பர்களிடம் உரைக்கின்ற வழக்கம் பரந்த உலகம் முழுவதிலும் அனைத்து மனித வர்க்கத்திடமும் இருக்கின்றது. நண்பன் தனக்காக எதையும் விட்டுக் கொடுப்பான் தன்னுடைய உயிரையும் தருவான். தன்னுடைய இரகசியத்தைக் காப்பாற்றுவான் என்னும் நம்பிக்கைகள் இருந்து வருகின்றது. இந்த வழக்கம் தற்காலத்தில் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றதா என்பதும் இலக்கியத்தில் நட்பு எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பதும் ஆராயப் புகுந்தால் கால மாற்றத்திற்கேற்ப இலத்திரனியல் உலகில் மனங்கள் அந்தப் பண்புகளை மறந்து விடுகின்றார்கள் என்பதே உண்மை. இலக்கியத்தில் உண்மை நட்பு இருக்கின்றது. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இருக்கின்றதா என்றால் அது இருக்கின்றது ஆனால், கேள்விக்குறியாகவே இருக்கின்றது 

    தளபதி திரைப் படத்திலே பாசம் வைக்க நேசம் வைக்கத் தோழன் உண்டு வாழ வைக்க, அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே. உள்ள மட்டும் நானே, உசிரைக் கூடத்தானே என் நண்பன் கேட்டால்  வாங்கிக்கன்னு சொல்லுவேன். நட்பைக்கூடக் கற்பைப் போல எண்ணுவேன். என்னும் பாடலாசிரியர் வாலி அவர்களின்; வரிகளிலே நண்பன் என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை மனதிலே கொண்டு வந்து பதிக்கின்றார். நட்பாலே நெஞ்சைத் தைத்து, ஒரு விழி அழ மறுவிழியாய் அழுத நட்புக்களும், ஒரு பருக்கைச் சோறும் தட்டில் இல்லாது வழித்து வழித்து உணவுண்டு, விரல்கள் வறண்டு போகும் வரை பேசிப் பேசிச் சிரித்து ஆட்டம் போட்ட நட்புகள்  போன இடம் இன்று தெரியவில்லை. அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்து நண்பர்களின் இறுக்கத்தை நினைத்து ஏங்க வைக்கும் காலமாக இக்காலம் விளங்குகிறது. 

    இன்பத்திலும் துன்பத்திலும் அருகிலே இருக்கும் ஒரு உறவு நட்புறவு. அந்த  நட்புக்கு இலக்கணம் வகுக்கும் வள்ளுவர் ஆடை விழுகின்ற போது ஓடிச் சென்று அந்த ஆடையைப் பற்றுகின்ற கைகளைப் போல நண்பர்கள் இருக்க வேண்டும் என்கிறார். நட்பின் முக்கியத்துவம் கருதி நட்பு, நட்பு ஆராய்தல், தீ நட்பு, கூடா நட்பு பழைமை என்று 5 அதிகாரங்களுக்குள் அறிவுரைகளை அள்ளிக் கொட்டியிருக்கின்றார். அக்காலத்திலும் இக்காலத்து நட்புப் போல் அதிகமாக இருந்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. அறிவுக்கும் நட்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அறிவுடையவர்களுடைய உறவு வளர்பிறையைப் போல வளர்ந்து கொண்டே போகும். நாளும் நல்ல செய்திகளையும் அறிவுப் பரிமாற்றங்களையும் செய்கின்ற போது அதன் வளர்ச்சி பல்கிப் பெருகும். ஆனால், பேதையர் நட்பு தேய்ந்து போய் நின்று விடுவதை இலக்கியக் கூற்றாக மட்டுமன்றி இன்றும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. 

    நட்பின் இலக்கணம் கூற விழைந்த ஒளவையாரும் குளம் வற்றி நீரின்றி கவலையுடன் இருக்கும் குளத்தை ஒட்டி உறவாடிய பறவைகள் நாடி வருவதில்லை. அதே போல உண்மை நண்பன் என்று உறவாடிய நண்பர்கள், தேவையில்லை என்று அறிந்தவுடன் விலகிச் செல்வதை உண்மை நட்பின் இலக்கணம் இல்லை என்று ஒளவை எடுத்துரைக்கின்றார்.  ஆனால், அக்குளத்தினுடனே இருந்து கொடிகளும், ஆம்பலும், நெய்தலும்,  வாடி வதங்கும் அவ்வாறுதான் உண்மை நட்பு என்றும் கூடவே இருக்கும்.  என்று  நட்புப் பற்றி ஒளவையார் கூறுகின்றார். 

    கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை

    இடையாயார் தெங்கின் அனையர் தலையாயார்

    எண்ணரும் பெண்ணை போன்று இட்டஞான்று

    இட்டதே  தொன்மையுடையார் தொட

    என நாலடியார் 3 வகையான நண்பர்களை எமக்கு இனம் காட்டுகிறார். பாக்கு மரத்துக்கு தண்ணீர் விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறான நட்புக்கு உதவி பண உதவி மாத்திரமல்ல என்பதே இங்கு எடுத்துக் காட்டவேண்டிய விடயமாக இருக்கின்றது. எப்போதும் உதவி கேட்டு நீதான் உலகத்திலேயே சிறந்த நண்பன் என்பவர்கள். ஒருநாள் கிடைக்கவில்லை என்றால், அக்காலத்தில் ஊர் முழுவதும் ஆனால், இக்காலத்தில் உலகம் முழுவதும் மூடாத வாயாக வட்சப் அழைப்பு தொடர்ந்து கொண்டேயிருக்கும். வசை புராணம் பாடி அடுத்தவர்களிடம் அந்த நபரில் இருந்த நன்மதிப்பைப் பிடிங்கி எடுத்துவிடுவார்கள். ஆனால், தென்னைமரம் தினமும் இல்லாவிட்டாலும் அடிக்கடி நீர் விட்டால் தன்னை எம்மோடு இணைத்து வைத்துக் கொள்ளும். ஆனால் பனை இருக்கிறதே விதையிடும் போது நீர் விட்டால் போதும் அந்த அடிப்படை அறிவை வைத்துக் கொண்டு காலம் முழுவதும் தானாக நீர் பெற்றுப் பயனைத் தரும்.  முதன்முதல் கண்டபோது ஏற்பட்ட உணர்வு எவ்வித எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் காலம் முழுவதும் புத்தம் புது மலர் போல மலர்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறான நட்பைப் பெறுவது அரிது. பெற்றால் பிரிவது அரிது. மனதால் தேடுவதும் தற்காலத்தில் தேடிக் கிடைக்காததும் இவ்வாறான நட்பே ஆகும்.  

    இலக்கிய காலத்திலே ஒளையார் அதியமான், கர்ணன் துரியோதனன், கோப்பருஞ்சோழன் பிசிராந்தையார், பாரி கபிலர் போன்றோர் நட்பை இலக்கியங்களிலே மன்னனுக்கும் புலவர்களுக்கும் இடையிலே இருந்த சிறப்பினை நாம் அறிந்திக்கின்றோம். அதேபோல், மணிமேகலைக்கு சுதமதியும், மாதவிக்கு வசந் மாலையும், கண்ணகிக்கு தேவந்தியும் காப்பியத் தோழிகளாக இருந்தனர். சங்ககாலப் பாடல்களிலே குடிமக்களிடத்தில் தோழமை உறவை எடுத்துப் பார்க்கும் போது தலைவிக்கும்  தலைவனுக்கும் இடையிலே ஏற்படும் கற்பொழுக்கம், களவொழுக்கம் ஆகிய இரண்டிலும் தோழியின் பங்கு அளப்பெரியது. தோழி என்பவள் தலைவியின் வளர்ப்புத்தாயாகிய செவிலித்தாயின் மகளே ஆவாள். சிறுவயதில் இருந்து ஒன்றாகவே வளருகின்றார்கள். தலைவனுடன் தலைவி காதல் வசப்படுகின்ற போது அக்காதலுக்குத் தூதாக வருபவளும், தலைவியின் குரலாக இருப்பவளும் தோழியே. அவளுக்கு நேர்மையாகவும், கண்டிப்பாகவும்,  அறிவுரை போதிப்பவளும் அவளே. தலைவனுடைய செயல்களை எப்போதுமே சந்தேகக் கண் கொண்டே நோக்குவாள். தலைவனும் தலைவியும் திருமணம் செய்து வாழுகின்ற கற்பொழுக்கத்திலே பரத்தையர் வழிப்பிரிந்த தலைவனுக்கு தலைவியோடு இணைந்து வாழவேண்டும் என்று அறிவுரை கூறுபவளும் தலைவன் தலைவியரிடையே ஏற்படும் ஊடலைத் தீர்த்து வைப்பவளும் அவளே. 

    ஆனால், தற்காலத்திலே தூது போன தோழி தலைவனைத் தன் வயப்படுத்தி தலைவியைப் பிரியச் செய்கின்ற செயல்களையும், தோழியிடம் நல்லவர் போல் நடித்து அவளுடைய நல்லெண்ணம் கொண்டவர்களிடம் அவளைப் பற்றி அவதூறு பேசுகின்ற தோழமையும் இலத்திரனியல் காலத்தில் நடைமுறை வாழ்க்கையில் மிதமிஞ்சியே காணப்படுகின்றன. உறவுகளிலே போலி என்ற வார்த்தையில்  நட்பு என்ற உறவே முன்னிலை வகிக்கின்றது. கூடவே இருந்து குழி பறிக்கின்ற குணத்துடனே கைகொடுக்கும் போது எதிர்மறை ஆற்றலைச்(நேபயவiஎந நுநெசபல) செலுத்தி விடக்கூடிய தன்மையும் நண்பர்களுக்கு உண்டு. அதனாலேயே தமிழர்கள் எச்சரிக்கையாக கைகூப்பி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வார்கள். எனவே யார் உங்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றார்களோ அவர்கள் உங்களிடம் எச்சரிக்கையாக இருக்கின்றார்கள் என்று அறியக் கூடியதாக இருக்கும். உன் பிள்ளை மருத்துவராகி விட்டானா? உன் பிள்ளைக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்து விட்டானா? நீ நல்ல வாகனம் புதிதாக வாங்கி விட்டாயா? உனக்குச் சம்பளம் இந்த வேலையில் அதிகமாகக் கிடைக்கின்றதா? நீ வருடா வருடம் சுற்றுலா போகின்றாயா? நீ இவ்வளவு காலமும் தொடர்ச்சியாக இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றாயா? நானும் அதைச் செய்ய வேண்டும். என்னால் முடியுமோ முடியாதோ வரிந்து கட்டிக் கொண்டு குழப்பியடிக்க முயற்சிப்பேன்.; இப்படி அடுக்கிக் கொண்டு போகும் பொறாமை நட்புக்கள் மனதுக்குள் புழுங்கி வெளியிலே பற்களைக் காட்டிச் சிரிக்கும். எங்களைக் கட்டி அணைத்துக் கைகொடுத்து சிறப்பு, வாழ்த்துகள் என்று சொல்லும். அதனால், நம்பிக் கெடும் கோமாளிகளாக யாரும் இருக்கக் கூடாது. சிலருக்கு ஒரு சூடு. ஆனால், பலரும் சூடு வாங்கிக் கொண்டு ஏமாந்து கொண்டு வருந்துகின்றார்கள். அவர்களிடம் அவதானம் தேவை. புலம்பெயர்ந்த வாழ்க்கையில் எல்லாம் கிடைக்கின்றது. ஆனால், எப்படிக் கிடைக்கின்றது என்பதே முக்கியம். எல்லாராலும் எதையும் செய்ய முடியும். ஆனால், எப்படிச் செய்கின்றார்கள் என்பதே முக்கியம். அதனால், அவதானத்தை கைக் கொண்டு ஓடும் புளியம் பழமும் போல் வாழ்வதுதான் இக்காலத்துக்கு உரியதாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. இவ்வாறான நட்புகளுக்கு மத்தியில் எம்முடைய நெஞ்சைத் தம்முடன் இணைத்துத் தைத்துத் தொடரும் நட்புக்களும் இருக்கவே செய்கின்றன. அவர்களை காலம் இனங்காட்டிக்கொண்டே இருக்கும். 

    எனவே நாம் உண்மை நட்பை இலக்கியங்களில் மட்டுமே அன்றி நிஜத்திலும் கண்டிப்பாகக் காணலாம். 



    நேரத்தால் அழியாத ஒரு காதல்

    மாலை நேரம் . சூரியன் தன் கடைசி ஒளிக்கீற்றை பூமியின் நெற்றியில் மெதுவாகத் தடவி விட்டு மறைந்து கொண்டிருந்தது . அந்த வெளிச்சம் போல் , ஒரு மனிதன...