ஒரு சிறிய கதை ஒன்றுடன் என்னுடைய உரையை ஆரம்பிக்கின்றேன். சொல்கிறேன். குருவிக்கதை. ஒரு உழவன் தோட்டத்தில் வேலை செய்வதற்குச் செல்லுகின்றான். அங்கே ஒரு குருவிக் கூட்டைக் காணுகின்றான். அங்கே ஒரு முட்டை சிறிய வெடிப்போடு இருக்கிறது. அடுத்த நாளும் போய்ப் பார்க்கின்றான். இன்னும் கொஞ்சம் வெடிப்பு. இந்த முட்டையைப் பார்ப்பதே அவனுக்கு ஒவ்வொருநாளும் பழக்கமாகப் போகின்றது. ஒருநாள் அந்த முட்டைக்குள்ளே இருந்து ஒரு குங்சு வெளியே வருவதற்கு தன்னுடைய சிறகுகளால் முட்டி மோதிக் கொண்டிருப்பதைக் காணுகின்றான். பாவம் அந்தக் குருவி வெளியே வரக் கஷ்டப்படுகின்றது என்று நினைத்து அந்த முட்டையின் வெடிப்புத் துவாரத்தை கொஞ்சம் பெரிதாக உடைத்து விடுகின்றான். அந்தக் குருவி கஷ்டமில்லாமல் வெளியே வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன். அடுத்த நாள் பார்க்கிறான் எந்தவித அசைவும் இல்லை. அதற்கடுத்தநாள் போகின்றான். அந்த முட்டையைச் சுற்றி எறும்புகள் ஊர்ந்தது கொணடிருக்கின்றன. அந்த குருவிக்குஞ்சு இறந்து விட்டது. இந்தக் கதை இப்படியே இருக்க இந்த புத்தகத்துக்குள் நாம் இப்போது போவோம்.
திருமூலருடைய திருமந்திரத்திலே ஒரு பிள்ளையைக் கருத்தரிக்க முன் ஆணும் பெண்ணும் எவற்றைக் கையாள வேண்டும் என்று சொல்லியிருக்கின்றது. அதேபோல் ஒரு பிள்ளையைப் பெற்றவுடன் எப்படிப் பிள்ளையை வளர்க்க வேண்டும் என்பதை இந்தப் புத்தகம் சொல்லியிருக்கின்றது. குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கடமை இல்லை. அது ஒரு கலை. அது மட்டுமல்ல அறிவியல், உளவியல் சார்ந்தது. பாட்டி தாத்தா கூடத் தம்முடைய பிள்ளைகளை வளர்க்கும் போது விட்ட பிழைகளை திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம். இதற்கெல்லாம் ஒரு கைநூலாகப் பல உளவியலாளர்களின் கருத்துக்களை எல்லாம் உள்வாங்கி இரவு பகலாக ஆய்வு செய்து இந்த சமூகத்துக்காக திருமதி கலாநிதி ஜீவகுமாரன் அவர்கள் இந்த நூலை உங்கள் கைகளில் ஒப்படைக்கின்றார்.
இந்த நூலின் பெயர் உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. நிற்க இடமும் நீளமான நெம்புகோலும் இருந்தால் பூமியையே நகர்த்துவேன் என்றார் ஆர்க்கிமீடிஸ். அதேபோல் நீண்ட தடி இருந்தால் நிலாவைத் தொட்டு விடுவோம் என்று இந்த நூலின் முன்னட்டையிலே குழந்தைகள் தொடுவது போல் படம் வரையப்பட்டுள்ளது. இவர்கள் பார்வை பூமி நோக்கி இருக்கவில்லை. எம்மைத் தாண்டி ஏதோ ஒன்று இருக்கின்றது என்பதை அறியும் ஆவலாக முயற்சித்துப் பார்ப்பவர்களாக இருக்கின்றார்கள். இந்த நூலுக்கு ஏன் இந்த முன்னட்டை என்று சிந்தித்துப் பார்த்தால், குடும்பம், மக்கள், பணம் என்று ஒரு குறுகிய வட்டதுக்குள் பெரியவர்கள் வாழுகின்ற போது குழந்தைகள் உலகம் வேறு ஒரு ஆராய்ச்சிப் பாதையை நோக்கிப் போவதாக இருக்கின்றது. அப்படியான குழந்தைகளை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதைத்தான் இந்த நூல் எடுத்துரைக்கின்றது. அதனாலேயே இந்த நூலுக்கு ஆசிரியர் இந்தப் படத்தைத் தந்திருக்கின்றார். பின்பக்கத்தில் ஆசிரியரைப் பற்றி பதிப்பகத்தார் பரணீதரன் அவர்களின் குறிப்பு வந்திருக்கின்றது. இலக்கிய அப்பாக்களாகிய எழுத்தாளர் திரு.கு.சின்னப்பா பாரதி, டெல்லி நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஹரிஹர பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் இந்த நூலைச் சமர்ப்பணமாகத் தந்திருக்கின்றார். பேராசிரியர் மௌனகுரு அவர்கள் வாழ்த்துரை தந்திருக்கின்றார். ஞானம் சஞ்சிகை ஆசிரியர் ஞானசேகரம் அவர்கள் அணிந்துரை தந்திருக்கின்றார். விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அது இந்த மண்டபத்துக்குரிய விலை அல்ல. புத்தகக் கடைக்குரிய விலை.
இந்த நூலாசிரியரைப் பற்றி உங்களில் அநேகம் பேருக்குத் தெரிந்திருக்கும். இவர் இந்த நூலை எழுதாமல் விட்டிருந்தால், அவர் வாழுகின்ற நாட்டுக்கு வஞ்சகம் செய்தவராகவே கருதப்படுவார். இலங்கையிலே இவர் கலைமாணிப் பட்டம் பெற்றிருக்கலாம். ஆனால் இங்கு மனிதவாழ்விலே தொட்டில் முதல் சுடுகாடுவரையிலான புரிந்துணர்வு, பராமரிப்பு, அன்பு, அறிவு ஆகியன வாழ்வாதாரங்களாக இருப்பதனால் அதுசம்பந்தப்பட்ட அறிவைப் பெற்றுக் கொள்வதும், நடைமுறைப்படுத்துவதுமான கல்வியைக் கற்றுக் கொண்டார். அதில் குழந்தை வளர்ப்புத்துறை முக்கியமானதாக இருந்தது. அதைவிட குழந்தைகளுடைய பாடசாலையிலே அவர்களுடனேயே பணி புரிந்தது மட்டுமல்லாமல் டென்மார்க்கில் தமிழ்க் குடும்பங்களிலே ஏற்படுகின்ற பிரச்சினைகளை அவர்களிடம் சென்று கேட்டுத் தெரிந்து அதனை டெனிஸ் மொழியில் மொழிபெயர்த்து இங்குள்ள அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துகின்ற தொழிலைச் செய்பவர். அதனால், இந்த நூலை எழுதாமல் விட்டிருந்தால், பெரிய பழி இவரை வந்து சேர்ந்திருக்கும். அதேபோல இந்த நூலை வாசிக்காமல் விட்டீர்களானால், உங்களுடைய பிள்ளைகள் தவறு விடுகின்ற சந்தர்ப்பங்களில் என்ன காரணம் என்று தெரியாதவர்களாக ஆவீர்கள். இந்தத் தொழிலும் சரி இந்த நூலும் சரி ஒரு தொண்டு என்றுதான் சொல்ல வேண்டும். தன்னுடைய அனுபவங்களின் தெளிவை இந்த நூலாகத் தந்திருக்கின்றார். அதற்கு உளவியலாளர்களுடைய எடுத்துக்காட்டுக்களைத் துணையாக எடுத்திருக்கின்றார்.
12 அத்தியாயங்களிலே 8 சாராம்சங்களுக்கு விடை காண்பதுதான் இந்த நூலாக இருக்கின்றது என்று ஆசிரியர் தன்னுடைய முன்னுரையிலே அறியத் தந்துள்ளார்.
1. நமது சொத்துக்களாக நமது பிள்ளைகளை கருதலாமா? அவர்களைத் தனிப்பட்ட மனிதர்களாக எப்படி வளர்க்க வேண்டும்
2. குழந்தைகளின் வளர்ச்சிக் கட்டங்களை எவ்வாறு புரிந்து கொண்டு பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.
3. அடித்து வளர்ப்பது சரியா? எப்படி அடிக்காமல் வளர்க்கலாம்.
4. கட்டுப்பாடுகள் குழந்தை வளர்ப்புக்கு ஏன் அவசியம்
5. நாம் விழிப்புணர்வுள்ள பெற்றவர்களாக இருப்பது எப்படி?
6. எமது மக்கள் இந்த புலம்பெயர்ந்த சூழ்நிலையில் கலாசாரச் சிக்கல்களை எப்படிப் புரிந்து கொள்வது?
7. எங்களுடைய வளர்ப்பிலே தவறுகண்ட அரசாங்கம் பிள்ளைகளை ஏன் எப்படி பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுக்கின்றது?
8. உங்களுடைய பிள்ளைகள் உங்களுடைய பிள்ளைகள் அல்ல என்னும் கூற்றை எவ்வாறு புரிந்து கொள்வது
இவைதான் அந்த சாராம்சங்கள். அதாவது என்னுடைய எண்ணம் பகவத்கீதை பக்கம் போகிறது குருஷேத்திர யுத்தத்திலே பகவான் கிருஸ்ணபரமாத்மாவால் அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட 18 அத்தியாயங்கள் அடங்கிய 700 சுலோகங்கள். இதுதான் பகவத் கீதை. இது மனிதவாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கின்ற அத்தனை நூல்களையும் கசக்கிப் பிழிந்தால் அதுதான் பகவத்கீதை. அதேபோல குழந்தை வளர்ப்பு பற்றிய அத்தனை நூல்களையும் கசக்கிப் பிழிந்தால், வருவது உங்களுடைய பிள்ளை உங்களுடைய பிள்ளை அல்ல என்கின்ற இந்த நூல். இது ஒரு வாழ்க்கைத் தத்துவம். இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்தால், குழந்தைநல உளவியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக நீங்கள் விளங்குவீர்கள். இதைக் கேட்டவுடன் 10 மாதம் சுமந்து தாலாட்டிப் பாராட்டி கண்முழித்து பிள்ளைகளின் நோய் துன்பங்களை அனுபவித்து நாங்கள் வளர்க்கி;ன்ற பிள்ளைகள் எங்களுடைய பிள்ளைகள் இல்லையா? என்ன விசர்க் கதை. இதற்கு ஒரு மேடை இதற்கு ஒரு மைக், இதற்கு ஒரு புத்தகம். எழும்புங்க நடையைக் கட்டுவோம் என்று யாரும் கிளம்பி விடாதீர்கள். இதையேதான் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களும் சொல்லியிருக்கிறார். தனியே கலாநிதி ஜீவகுமாரன் அவர்கள் மட்டும் சொல்லவில்லை. எதற்கும் ஜீவா அண்ணனையும் இதற்கு அத்தாட்சியாகச் சேர்ப்போம்.
அப்துல்கலாம் எதைச் சொன்னார் என்றால், உங்களுடைய டென்மார்க் வைத்தியசாலை ஒன்றில் செய்திப்பலகையில் எழுதப்பட்டிருக்கின்ற ஒரு கவிதையைத்தான் அவர் சொன்னார். அது என்னவென்றால், 1902 ஆம் ஆண்டு உலகப் புகழ் பெற்ற சூஃபிக் கவிஞர் கலீல் ஜிப்ரான் அவர்கள் எழுதிய ஒரு கவிதை. இதனை இந்த நூலில் ஆசிரியர் தந்திருக்கின்றார்.
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல.
அவர்கள் இயற்கையின் (கடவுளின்) குழந்தைகள்
உங்கள் மூலமாக வந்திருக்கிறார்களே அன்றி உங்களிடம் இருந்து அல்ல.
உங்களுடன் இருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல.
உங்களுடைய அன்பை அவர்களுக்குத் தரலாம். உங்களுடைய எண்ணங்களை அல்ல.
அவர்களுக்கு என்று தனிச்சிந்தனைகள் உண்டு. உடலுக்குத்தான் பாதுகாப்புத் தர முடியும் ஆன்மாக்களுக்கு அல்ல. இதில் அற்புதம் என்னவென்றால், நீங்கள் வில். உங்களிடம் இருந்து எய்யப்படும் உயிருள்ள அம்பு குழந்தைகள். அம்பு எதை அடைய வேண்டும் என்ற இலக்கை வில் தீர்மானிப்பதில்லை. அம்பை எய்பவன்தான் தீர்மானிப்பான். நீங்கள் அம்பை எய்பவன் அல்ல. நீங்கள் அந்த வில்லுத்தான். அந்த அம்பை எய்பவர் நீங்கள் இயற்கை என்று எடுத்துக் கொண்டால் இயற்கை. கடவுள் என்றால் கடவுள்.
அதனால், இந்த நூலை வாசிக்கத் தொடங்குவதற்கு முன் இதுதான் நீங்கள் முற்றுமுழுதாக மனதிலே பதிக்க வேண்டிய விடயம். அடுத்தது நீங்கள் வாழுகின்ற கலாசார சூழல் இதனையும் மனதில் கொள்ள வேண்டும். எமது பெற்றோர்கள் புலம்பெயாந்தது குற்றம். பலவிதமான கலாசார மாணவர்கள் கற்கின்ற பாடசாலையிலே பிள்ளைகளைப் படிக்கச் அனுப்பியது குற்றம். அப்படி இருக்கும் போது தம்முடைய ஆசைகளைப் பிள்ளைகளில் திணிப்பது குற்றம், தங்களுடைய கலாசாரத்திலேயே பிள்ளைகள் வளர வேண்டும் என்று அடம்பிடிப்பது குற்றம், இப்படிப் பல குற்றங்களைத் தங்களிடம் வைத்திருந்துவிட்டு பிள்ளைகள் வளர்ந்தபின் யோசித்து யோசித்து மனநிலை பாதிப்படைவது பாரியகுற்றமாக இருக்கின்றது. இதனை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் என்றால்,
பிள்ளை வயிற்றில் உருவாவதில் இருந்து பெற்றோர் கவனம் எடுக்க வேண்டும். வளருகின்ற காலங்கள் முழுவதும் கவனம் எடுக்க வேண்டும். இதைத்தான் இந்தப் புத்தகம் உங்களுக்குச் சொல்லுகிறது.
இந்த ஆசிரியருடைய சுவாரஸ்யம் என்னவென்றால், நன்றாகக் கதை சொல்லுவார். இதனை விட மகாபாத்திர கதாபாத்திரங்களுடன் கனவில் பேசியிருக்கின்றார். கதை சொல்லுவதென்றால், கதைகள் மூலமாக, சம்பவங்கள் மூலமாக பசுமரத்தாணி போல் மனதிலே சில விடயங்களைப் பதித்து விடுவார். அதற்கான தீர்வுகளும் தந்துவிடுவார். அதனால், இங்கு ஒலிவர், சங்கர் போன்ற கதாபாத்திரங்களை இந்தப் புத்தகத்தில் நடிக்க வைத்திருக்கின்றார்கள்.
இப்போது உங்களுடைய பிள்ளை என்ற காரணத்தாலேயே உங்களுடைய ஆசாபாசங்களை பிள்ளைகளில் வலுக்கட்டாயமாகத் திணிக்கின்றீர்கள். அதற்குப் பிள்ளைகள் அடங்கவில்லை என்றால், வன்முறையைக் கையாளாதீர்கள். வன்முறை என்றால், தடியெடுத்து அடிக்க வேண்டும் என்றில்லை. நீங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கின்ற ரோச்சரே வன்முறைதான். இதற்காக கலாநிதி அவர்கள் புத்தருடைய காலத்திலே வாழ்ந்த அங்குலிமால் கதையை எடுத்துக்காட்டியிருக்கின்றார். அங்கு விமானத தாங்கிக்என்றொரு அரக்கன் இருந்தான். அவன் 1000 மனிதர்களைக் கொல்வதாக சபதம் எடுத்திருந்தான். கண்ணெதிரே காணுகின்றவர்களை கொன்று அவர்களுடைய கட்டைவிரலை வெட்டி மாலையாகப் போட்டுக்கொண்டு திரிந்தான். அந்த ஊர் மக்கள் எல்லாம் பயந்து வெளியே வராமல் இருந்தார்கள். அவ்வழியே வந்த புத்தரிடம் அவனெதிரே போகாதீர்கள் என்று தடுத்தார்கள். ஆனால் புத்தர் எதையும் கேட்காமல் அவன் முன்னே போய் நின்றார். அவனுக்கோ பெரும் ஆச்சரியம். எனக்கு முன்னே துணிந்து இவர் வந்திருக்கின்றாரே என்று உன்னுடைய இறுதி ஆசை என்ன என்று கேட்டான். அவரும் அருகே இருந்த மரத்தின் கிளையை வெட்டு என்றார். மீண்டும் வெட்டியதை ஒட்டு என்றார். அவனால் முடியாது என்று தன்னுடைய இயலாமையை நினைத்து வருந்துகி;றான்.
நீ வெட்டுவதை மட்டும் வைத்துக் கொண்டு பெரிய வீரன் என்று எப்படிக் கூற முடியும் என்கிறார். இப்படித்தான் வன்முறையால் திருத்தலாம் என்று நினைப்பவர்களும் அங்குலிமாமா போன்றவர்களே தான். வெட்டப்படும் மரம் போன்றவை எங்கள் குழந்தைகளின் உள்ளமும் உணர்வுகளும். இந்த வன்முறை என்பது உங்களுடைய வீட்டுக்குள் இருந்து ஆரம்பித்து நாட்டுக்குள் சென்று உலகத்திற்குப் பரவுகின்றது.
என்னுடைய யூரியூப் சனலில் இந்த சீரியல் கில்லர் என்று ஜெப்ரி டாமர், ஜோசப் கசவைணநட போன்றோரைப் பற்றிப் பதிவுகள் போட்டிருக்கின்றேன். சிறுவயதிலே அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் வளர்ந்த பின் எவ்வாறு தொடர் கொலைகாரர்களாகவும், போதைவஸ்துக்கு அடிமையானவர்களாகவும் அவர்களை மாற்றியிருக்கின்றது என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு சிறுவயதில் எம்மையறியாமல் நாங்கள் செய்கின்ற தவறுகள் வளர்ந்தபின் அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் விளைவு நிச்சயமாகக் கிடைக்கும். அதைத்தான் செயல் விழைவுத் தத்துவம் என்று வேதாத்திரி மகரிஸி சொல்லுவார். நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே மாறுகின்றோம். அதேபோல் நாம் என்ன செய்கின்றோமோ அது எம்முடைய பிள்ளைகளிலே பிரதிபலிக்கும்.
பிள்ளைகளை முன்னே வைத்துக் கொண்டு நாம் தொலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தால், பிள்ளை சாப்பிடவில்லை என்றால், உங்களுடைய ரெலிபோனைக் கொடுப்பது இப்படியான காரியங்கள் செய்தால், உங்களுடைய பிள்ளைகளும் அதைத்தான் செய்யப் போகின்றார்கள். சரி ரெலிபோன் இல்லாமல் சாப்பிடப்பழக்க வேண்டும் என்று ஒருநாள் நீங்கள் முடிவெடுத்து தொலைபேசியைக் கொடுக்காமல் விடுகின்றீர்கள்.முதல் நாள் அடம்பிடிக்கும் ஏனென்றால், நீங்கள் பழக்கிவிட்டீர்களே. நீங்கள் என்ன செய்வீர்கள். இவனைத் திருத்த முடியாது என்று ரெலிபோனைத் திரும்ப கொடுத்துவிடுவீர்கள். ஒரு பிள்ளை ஒரு பழக்கத்தை தொடங்கினால், அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு 21 நாட்கள் எடுக்கும். ஆனால், எங்களுடைய பெற்றோர்களுக்கு அந்தப் பொறுமை இல்லை. உடனே செய்ய வேண்டும் என்றால், பிள்ளை வைன் கொடுத்து ஆடவிடும் பொம்மையா? அதனால், பொறுமையும் தொலைநோக்கு சிந்தனையும் இருக்க வேண்டும்.
மகாபாரத யுத்தம் முடிந்து பாஞ்சாலி பல விதவைகளைக் காணுகின்றாள். மனதாலே சரியாக வேதனைப்பட்டுக் கண்ணனிடம் சொல்கிறாள் என்னால்தானே இந்த யுத்தம். நான் தானே இதற்குக் காரணம் என்கிறாள். அதற்கு கண்ணனும் நீ மட்டும் காரணம் இல்லை. நீ கொஞ்சம் தொலைநோக்குப் பார்வையை கொண்டிருந்திருந்தால் இவ்வளவு துன்பம் வந்திருக்காது என்கிறார். அது என்னவென்று பாஞ்சாலி கேட்கக் கண்ணன் கூறுகிறார். நீ கர்ணனை அவமானப்படுத்தியிருக்கக் கூடாது ஐந்து பேரைத் திருமணம் செய் என்று குந்தி சொன்ன போது நீ சம்மதித்திருக்கக் கூடாது, துரியோதனன் விழுந்தபோது அவமானப்படுத்திச் சிரித்திருக்கக் கூடாது இப்படியெல்லாம் நீ செய்யாது விட்டிருந்தால் இவ்வாறு வந்திருக்காது என்கிறார்.
இதுபோலவேதான் இப்படி நடக்கும் என்று நாம் சிந்திப்பதில்லை. ஆத்திரத்தில் ஏதாவது செய்துவிட்டு அதற்குப் பின் நாம் வருந்துவோம். அது பிள்ளைகளில் எப்படி பிரதிபலிக்கும் என்று பல எடுத்துக்காட்டுக்களை இந்த நூலிலே ஆசிரியர் கொண்டு வந்திருக்கிறார்.
பாஞ்சாலிக்கு கண்ணன் சொல்லியது தொலைநோக்குப் பார்வை எமது பெற்றோர்களுக்குக் கூட இல்லை. என்ன மனிதனுக்கு இவ்வளவு தான் என்று கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக எங்களுடைய பார்வை ஒரு எல்லைக்கு அப்பால் போகாது. அதேபோல் இந்த பூமியிலே எத்தனையோ விதமான நுண்அங்கிகள் சிறிய பூச்சிகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், அவை போடுகின்ற சத்தத்தை எம்மால் கேட்க முடியாது. இவ்வாறு எம்முடைய புலன்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.
பூமிக்கு மேலே நீங்கள் நிற்கின்றீர்கள் உங்களைக் கவர்ந்து வைத்திருக்கின்ற புவியீர்ப்பு விசையை நீங்கள் பார்க்க முடியாது, காற்றைக் கண்களால் காணமுடியாது. ஏன் நீங்கள் இப்போது பார்க்கும் சூரியன் இப்போது இருக்கும் சூரியன் அல்ல. 8 நிமிடத்தின் முன் எப்படி இருந்தது என்பதையே நாம் பார்க்கின்றோம். இந்தப் பிரபஞ்சத்தில் நாம் இருக்கின்ற இடம் ஒரே இடமல்ல ஒரு நிமிடத்தின் முன் எங்கோ இருந்தோம் பூமி பிடித்து வைத்திருப்பதால் டென்மார்க்கில் இந்த ஹோல் இற்குள் இருக்கின்றோம். இது உண்மையல்ல. உங்களுடைய உடல் ஒரு ஆச்சரியம். இவ்வாறுதான் சில விடயங்கள் உங்களை மீறித்தான் நடக்கின்றன. இவ்வாறுதான என்று கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. அவற்றை மாற்ற முடியாது. உங்களைக் கேட்டு உங்களுடைய பிள்ளை பிறக்கவில்லை. நீங்கள் விரும்பியது போல அப்பிள்ளை இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவர்களை அவதானமாக வளர்த்து விட வேண்டிய கடமை மட்டுமே உங்களுடையது.
பூதக்கண்ணாடியால் தொலைதூரத்தை நாங்கள் பார்ப்பது போல எங்களுடைய பிள்ளைகள் எங்கே சென்றாலும் என்ன செய்தாலும் அவர்களில் அவதானம் எமக்குத் தேவை. நேரம் இல்லை என்று பிள்ளைகள் கையில் தொலைபேசியைக் கொடுத்துவிட்டோ, தொலைக்காட்சியைப் போட்டு விட்டோ நீங்கள் போனால், உங்களை விட உங்கள் பிள்ளை வேறு ஒரு கவன ஈர்ப்புக்குள்ளேயே போகும். அது பெருத்து பலூன் வெடிப்பது போல ஒருநாள் வெடிக்கும். அதனால், என்ன வேலை இருந்தாலும் ஒரே இடத்தில் இருந்து கொண்டு எங்கேயோ ஹரியானா மாநிலத்தில் குருஷேத்திரத்தில் நடக்கின்ற காட்சிகளை சஞ்சயன் திருதராட்டினனுக்கு பார்த்துச் சென்னான் இல்லையா அதேபோல் உங்கள் பார்வை எங்கே இருந்தாலும் பிள்ளைகளில் இருக்க வேண்டும்.
பிள்ளைகளின் வளர்ச்சிக் கட்டங்களை ஒவ்வொன்றாக உளவியல் ரீதியாக ஆழமாக நோக்க வேண்டும். இந்தப் புத்தகம் அழகாக அந்த வளர்ச்சிக் கட்டங்களை எடுத்துக் காட்டியிருக்கிறது. குழந்தை பிறந்து 2 வயது வரை, ஒன்றரை வயதில் இருந்து 3 வயது வரை, 3 வயதில் இருந்து 4 வயது வரை, 4 முதல் 7 வயது வரை, 7 வயது முதல் 12 வயது வரை, 12 முதல் 18 வயது வரை இப்படிப் பருவங்கள் தோறும் நடக்கின்ற குழந்தையின் மாற்றங்கள் தாமாக எப்படி வளருகின்றார்கள் இதையெல்லாம் அற்புதமாக இந்தப் புத்தகம் தந்திருக்கின்றது.
ஒருநாள் ஒரு மிருகக்காட்சிசாலைக்கு பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு கலாக்கா போயிருக்கின்றா. அங்கே ஒரு கங்காரு ஒரு குட்டி போட்டிருக்கின்றது. அந்த கங்காரு பிறந்த குட்டியைத் தன்னுடைய காலால் தள்ளி விடுகிறது. அப்போது ஒலிவர் என்னும் பையன் ஏன் கங்காரு குட்டியை அடிக்குது என்று கேட்கின்றான். அதற்கு கலாக்கா ஒரு பிள்ளையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தால் அந்தப் பிள்ளை எப்படி வளரும். கங்காரு தன்னுடைய பையிற்குள் வளர்ந்த குட்டியை வைக்க முடியுமா? அதனால் அது தானாக வளர விடவேண்டும். என்னும் விளக்கத்தை அழகாக சொல்லுகின்றார்.
தாயினுடைய வயிற்றிலிருந்தே பிள்ளை எல்லாவற்றையும் கேட்கும் நீங்கள் வயிற்றில் பிள்ளை இருக்கும் போது என்ன மனநிலையில் இருக்கின்றீர்களோ அது பிள்ளையின் ஆழ்மனதில் பதிந்துவிடும். தொப்பிள்கொடியுடன் உங்களுடைய கோப தாபங்களையும் பிள்ளைக்கு நீங்கள் கொடுத்து விடுவீர்கள் அதற்குப் பிறகு என்ன பிள்ளை பிறந்தபின் சிடுமூஞ்சியாகத்தான் இருக்கும். வயிற்றில் இருக்கும் போது மகிழ்ச்சியோடு இருந்தால், பிள்ளை மகிழ்ச்சியாகவே இருக்கும். உங்களுக்கெல்லாம் பிரகலாதன் கதை தெரியும். மனத்தை விட ஆழ்மனம் ளரடிஉழnஉழைரள அiனெ வலிமை மிகுந்தது. அந்த ஆழ்மனம் கருவிலே உருவாகிவிடும். எனவே உங்களுக்குக் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை இருக்கிறதா? உங்களுக்கும் இந்த உலகத்துக்கும் சரியான ஒரு மனிதனைக் கொடுக்க விரும்புகின்றீர்களா? அன்றிலிருந்து அவதானமான ஒரு பெற்றோராக நீங்கள் மாற வேண்டும். அதிலும் கவனம் எடுக்க வேண்டும். இதற்கு அம்மா மட்டும் பொறுப்பில்லை. அம்மாவைக் கரிந்து கொட்டுகின்ற அப்பா இருந்தால் அதனையும் வயிற்றுக்குள் இருந்து பிள்ளை கேட்கும். அதுவும் பிள்ளையின் தலைவிதி அதுவும் இதையெல்லாம் கேட்க வேண்டும். பிள்ளை வளருகின்ற போது சூழலும் பிள்ளையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனையும் கவனத்தில் எடுக்க வேண்டும். பிள்ளைப் பெறுவதும் வளர்ப்பதும் ஒரு தற்செயலான விடயமாக இருக்கக் கூடாது. அது ஒரு தெய்வீக உணர்வு
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும் தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே.
பலவற்றையும் படைத்துப் பலரோடும் சேர்ந்து உண்ணும் பெருஞ்செல்வம் உள்ளவரானாலும் என்ன? மெல்லமெல்லக் குறுகுறு நடந்து சென்று தம் சிறிய கையை நீட்டி, உணவருந்துகின்ற பாத்திரத்திலிருக்கின்ற நெய்யுள்ள சோற்றிலே கையை வைத்து அந்தக் கையாலேயே பெற்றோரைக் கட்டிக்கொண்டும், வாயாற் கவ்வியும், கையால் அளைந்தும், தம்முடைய உடம்பெல்லாம் அந்தப் பிள்ளை சிதறடிக்கின்ற போது அக் குறும்புகளால் உணவு வீணாகிறதே என்ற நினைவை மயக்கிப் பெற்றோரை இன்பத்தால் மகிழச் செய்யும் மக்களை இல்லாதவர்க்கு தாம் வாழுகின்ற நாட்களெல்லாம் பயனில்லாத நாட்கள். இப்படியான குறும்பு செய்த குழந்தையை சமூகக் குற்றவாளியாக மாற்றாமல் இருப்பது பெற்றோர்களாகிய உங்கள் கையிலேதான் இருக்கின்றது என்று கூறி. நீங்கள் இந்தப் புத்தகம் வாசித்து முடிக்கும் போது ஒரு முழுமனிதனாக மாறுவீர்கள்.
சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று சிரிசா இருந்தா திருத்திக்கோ தவறு சிறிசா இருந்தா திருத்திக்கோ. தெரிந்தும் தெரியாது நடந்திருந்தால் அது திரும்பவும் வராமல் பார்த்துக்கோ என்ற சினிமாப் பாடலை உங்களுக்கு எடுத்துக் காட்டி தவறு திரும்பவும் வராமல் இந்த நூலை வாசியுங்கள் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். இப்போது இந்தப் பறவைக் கதைக்குள் வருகின்றேன்.
அளவுக்கு மீறிய அன்புஇ எதிர்பார்ப்பு இவைதான் அந்தப் பறவையைக் கொன்றது.
ஒரு பறவை முட்டையில் இருந்து வெளியே வருகின்றபோது அதன் இறக்கைகள் மெதுவாக அசையும் கால்கள் துடிக்கும் முட்டைகளின் சுவர்களில் முட்டி மோதும். இது தானே இயற்கை. சுப பிரசவம்। அதை அப்படியே விட்டிருந்தால் இந்நேரம் அழகான பறவையாகப் பறந்திருக்கும்.. இப்படித்தான் நாமும் நம் பிள்ளைகளுக்கு வலி தெரியக் கூடாது என்று கஷ்டம் தெரியக் கூடாது என்று வளர்த்து அவர்களாகத் தம்முடைய பாதையைக் கண்டு பிடிக்க விடுவதில்லை. இந்த நூல் அதற்கான தெளிவை எங்களுக்கு எடுத்துக் காட்டுகின்றது.
இந்தப் புத்தகம் ஒவ்வொருவருடைய புத்தக அலுமாரியில் இருக்க வேண்டிய புத்தகம். இன்றுதான் என்னுடைய கைகளில் கிடைத்தது பிரின்ற் எடுத்து நான் வாசித்து முடித்த போது என்னுடைய இரண்டு கைகளாலும் கட்டி அணைத்து கலாக்காவுக்கு இறுக ஒரு முத்தம் தர வேண்டும் போல் இருந்தது. இந்த வாழ்க்கையில் எத்தனை அனுபவங்கள், எத்தனை வாசிப்பு அனுபவங்கள், எத்தனை பிரயத்தனம், இவ்வளவு கஸ்டப்பட்டு உழைத்த இந்த நூல் கட்டாயம் எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டியது அவசியம். முழுவதுமாக நீங்கள் வாசிக்கா விட்டாலும் 11 ஆவது அத்தியாயம் கட்டாயம் நீங்கள் வாசிக்க வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் பிள்ளைபிடி காரர்கள் என்று சொல்லப்படுகின்ற இந்த நாட்டு அரசாங்க நிறுவனங்கள் உங்களுடைய பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு போகாதிருக்க குழந்தைகளின் பாதுகாப்புச் சேவைச் சட்டங்களை இதில் கூறுகின்றார். தூக்கிக் கொண்டு போகும் குழந்தைகளை 11 விதமாக வகைப்படுத்துகின்றார். அவற்றையெல்லாம் நீங்கள் கட்டாயம் வாசித்து அறிந்திருக்க வேண்டியது அவசியம்;.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.