• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 8 மார்ச், 2023

    ஆண்களை விஞ்சி வாழ்வது நோக்கமல்ல. ஆண்களில் தங்கி வாழப் பிடிப்பதில்லை


    மகளிருக்காக ஒரு தினம் கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில் நான் கல்பனா சவ்லா பற்றியோ மேரி கோம் பற்றியோ ஆராயப் போவதில்லை.  தற்காலப் பெண்கள் பற்றியே சிந்திக்கத் தொடங்குகின்றேன். 

    அன்றைய ஒளவையாரின் திறமையும் துணிச்சலும், ஆண்டாளின் பிடிவாதமும், வெள்ளிவீதியாரின் உணர்வு வெளிப்பாட்டுத் தைரியமும் இடைப்பட்ட காலத்தில் எங்கே போனது என்று பூதக்கண்ணாடி போட்டுத் தேடியபோது தற்காலம் மீண்டுமாய் நிமிர்கிறது. தாய்வழி சமுதாயம் தந்தை வழி சமுதாயமாக மாறியது எப்படி? ஒரு குடும்பத்தை வழி நடத்தத் தெரிந்த பெண்ணுக்கு நாட்டை வழி நடத்தத் தெரியாதா? ஊதாரிக் கணவனைக் கண்டிப்போடு வழிநடத்தி வீட்டுக் கணக்கை போட்டுக் கொடுப்பவள் அந்தத் தலைவனுடைய மனைவி அல்லவா? 

    "தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற

     சொற்காத்துச் சோர்விலாள் பெண்|2

    ஒரு நாட்டை ஆளுவது என்பது மீன் குழம்பு வைப்பது போலே இருக்குமா? இல்லை பிள்ளையைக் குளிப்பாட்டுவது போல இருக்குமா என்ற கேள்வி ஆண்கள் மத்தியில் எழுந்ததற்குக் காரணம் என்ன? தமது இயலாமையை அதிகாரமாக சொல்லத் தெரிந்த தைரியமே. குழந்தை வளர்ப்பு என்பது சாதாரணமான விடயம் இல்லை. எதிர்கால சமுதாயம். நாளைய நாட்டுப் பிரஜைகள் அறிஞர்கள், ஜனாதிபதிகள் ஆவர். பிள்ளையின் பார்வையிலேயே அதனுடைய உள் உணர்வுகளைப் புரியக் கூடியவள் தாய். தாயின் பார்வையே பிள்ளைக்குப் பாடம் நடத்தும். பெரியவர்கள் மத்தியில் அடக்கமில்லாமல் இருக்கும் போது தாயின் கண்களே பிள்ளைக்குக் கட்டளை போடும். தாய் என்னும் பதவி ஒரு சாதாரண பதவியாகக் கொள்ள முடியுமா? இது எல்லாம் ஒரு புறம் இருக்க 

    இக்காலப் பெண்கள் அக்காலப் பெண்கள் போல இல்லை என்னும் குற்றச்சாட்டு இருக்கின்றது. சங்ககால ஒளவையார் சங்க இலக்கியங்களில் குறுந்தொகையில் 15 பாடல்களும், நற்றிணையில் 7 பாடல்களும், அகநானூற்றில் 4 பாடல்களும், புறநானூற்றில் 33 பாடல்களும் பாடியிருக்கின்றார். இன்னும் எத்தனையோ பாடியிருக்கலாம். ஆனால், கடல்கோள்களுக்குத் தப்பி இத்தனை மட்டுமே எமக்குக் கிடைக்கின்றன.  கல்வியறிவால் உயர்ந்த ஒளவாயார் குலோத்துங்கன் சோழன் அவையிலே கம்பரை 

    "எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே

    மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்

    கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே

    ஆரையடா சொன்னாயது."

    என்று அவலட்சணம், எருமை, மூதேவி, குட்டிச் சுவர், குரங்கு என்று பாட்டால் வைதிருக்கும் தைரியமும், அதியமான நெடுமான் அஞ்சியின் அன்புத் தோழியாக இருந்ததுடன் அவர் அளித்த கெட்டிக் கரையையுடைய பட்டாடை பெற்றுக் கொண்டதுடன், பழைய கள்ளை பொற்கிண்ணத்தில் பருகக் கொடுத்து மன்னன் உணவு பரிமாறிய சம்பவங்களும் அறியக்கிடக்கின்றன. ஆனால், ஒரு பெண் ஆணுடன் நட்பு வைத்துக் கொள்வது அடங்காப்பிடாரித்தனம், கற்பை மீறிய செயல் என்று இப்போதும் சிலருடைய கூற்றுக்களுக்கு எதிராகப் பெண்கள் இப்போது டீநளவல வைக்கத் தொடங்கிவிட்டார்கள்.  அதற்கும் மேலே என்று காதலனுக்கும் மேலே டீநளவல இடம் நட்பு வைத்திருக்கின்றார்கள்.

    "வானிடை வாழுமவ் வானவர்க்கு 

    மறையவர் வேள்வியில் வகுத்தஅவி 

    கானிடைத் திரிவதோர் நரி புகுந்து 

    கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப 

    ஊனிடை யாழி சங்குத்தமார்க் கென்று 

    உன்னித்தெழுந்த வென் தடமுலைகள் 

    மானிடவர்க்கென்று பேச்சுப்படில் 

    வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே" 


    என்று அக்காலத்தில் பாடும் ஆண்டாள் தைரியம் யாருக்கு வரும். இன்று பெண்களின் கவிதைகளில் அதிகமாக ஆபாசம் இருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் மேலோங்கி வரும் நிலையில் ஆணென்ன பெண் என்ன? அந்தப் பால் வேறுபாடுகளே தேவையில்லை என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். இன்று ஆண்களின்  பாலியல் தொல்லைகளை அநந வழழ என்று ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக எடுத்துக் கூறுகின்றார்கள்.

    "ஏதிலாளன் கவலை கவற்ற

    ஒருமுலை அறுத்த திருமா உண்ணி என்னும் நற்றிணைப் பாடலிலே                             

    பகைவன் செய்த கொடுமையானது உள்ளத்தை அரித்தெடுக்கத் தன் ஒரு முலையை அறுத்துக் கொண்ட திருமாவுண்ணியும், நீதி தவறிய நாட்டை வாதாடித் தீயால் அழித்த சிலப்பதிகார நாயகி கண்ணகியும் தைரியத்துக்கு எடுத்துக்காட்டுக்கள். கணவன் நல்லவனா கெட்டவனா என்பது கேள்விக்குறி. ஆயினும் அச்செயலை அவன் செய்திருக்க மாட்டான் என்னும் நம்பிக்கையும், அம்மன்னனின் நீதி தவறிய செயலும் அவளுக்கு மனதில் தீயாய் பற்றி எரிந்தது. திருமாவுண்ணி அதன் பின் வாழ்ந்தாளா என்பது கேள்விக்குறி. ஆயினும் செயலைத்தான் நாம் நோக்கவேண்டிள்ளது. 

    அக்காலத்திலும் கணவனுக்குப் பயந்து பெண் அடங்கிக் கிடக்கவில்லை. சமூகத்தின் கேள்விகளுக்கு அவள் பயப்படவில்லை. "ஐயோ சாமி நீ எனக்கு வேண்டாம்" என்று தூக்கி எறிந்துவிட்டுப் போக அவளுடைய கல்வியும், தன்னம்பிக்கையும், துணிச்சலும் கைகொடுக்கின்றன. 

    காரைக்காலம்மையார் சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்தவர். அவருடைய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகமே பிறகால பல்லவர்கால இலக்கிய வடிவமான பதிகத்திற்கு அடியெடுத்துக் கொடுத்தது. பிடிவாதமும் முற்போக்கு சிந்தனையும் உள்ளவர். கணவனோடு மட்டுமே சிவனடியார்களுக்கோ விருந்தினர்களுக்கோ உணவு பரிமாற முடியும் என்றிருந்த அக்கால வழக்கத்தை உடைத்து கணவன் அனுப்பிய மாங்கனியின் ஒன்றை கணவனுக்குத் தெரியாமலே சிவனடியாருக்குப் படைத்தவர். அதனைக் கணவனுக்குத் தெரியாமல் மறைத்தவர். அத்துடன் உணவை ஒறுத்து உடலை மெலிய வைத்து ஊர் ஊராகச் சென்று சிவத்தொண்டு புரிந்தவர். 

    "ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆகத்

    தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து இங்கு உன் பால்

    ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப்

    பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார்"

    வேறு மனைவியை மணந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன் தன்னைக் கடவுளாக வணங்குங்கள் என்று ஊராருக்குச் சொல்ல இவனுக்காகத் தாங்கிய உடல் தேவையில்லை என்று பேய்வடிவம் பெற்றதாக வரலாறு கூறுகின்றது. அதாவது அயபநசளரஉhவ என்று வேறு ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். 

    இது கடவுள் பற்றினால் என்று எடுத்துக் கொள்ள முடியாது. தோல்வியின் கண் மனமாற்றமே என்று உளவியலாளர்கள் கருதுகின்றார்கள். 

    இந்த தைரியம் இக்காலப் பெண்களிடம் மிதமாகவே இருக்கின்றது.  நல்ல காரியம் ஆற்ற வேண்டுமானால், துணையுடன் ஆற்ற வேண்டும். துணை விரும்பவில்லை என்றால், உங்களுடைய ஒத்துழைப்புத் தேவையில்லை. என்னால் தனியே காரியமாற்றத் தைரியமிருக்கின்றது என்று செயலாற்றத் தொடங்கிவிடுகின்றனர்.  

    பொறுமை, பூமி என்று பெண்ணுக்கு புகழாரம் சூட்டியதால், கவலைகளை மனதுக்குள் போட்டு அடக்கி அடக்கி குடும்பத்தில் என்ன பிரச்சினைகள் இருந்தாலும் மறைத்து வாழ்ந்த பெண்களே இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார்கள். ஆனால், இன்று 

    நீர்கால்   யாத்த  நிரைஇதழ்க்  குவளை

    கோடை ஒற்றினும்   வாடா தாகும் (குறுந்தொகை)

    குவளை மலர்கள்  நீரின்றி வாடி மீண்டும் நீர் வரும்போது உயிர்த்து எழுவதுபோல், மாரியில் உறங்கும் மரங்கள் கோடையில் துளிர்ப்பது போல் மீண்டும் எழுவர் பெண்கள். 

    முன்னேற்றப் பாதையில் திருமணம் தடையானால் திருமணம் செய்து வாழ்வதையே வெறுக்கின்றனர். ஆண்களை மிஞ்சி வாழ்வது நோக்கமாக இருப்பதில்லை. ஆண்களைத் தங்கி வாழப் பிடிப்பதில்லை. எதிர்வரும் காலம் பெண்கள் வாழ்க்கையில் சாதனையில் உயர்ந்து செல்ல சிறந்த வழிமுறைகளைக் காட்டிக் கொண்டே இருக்கும். அதனால், பெண்கள் எண்ணங்களுக்குத் தடை போடத் தேவையில்லை. 



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...