• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 3 ஜூலை, 2023

  பனிக்குடம் நூல் அறிமுகம்


   நூல் தேட்டம்

  நூல்தேட்டப் பதிவு 894.8(1)

  தமிழ்க் கவிதைகள்

  பனிக்குடம். கௌசி (இயற்பெயர்: சந்திரகௌரி சிவபாலன்).

  தமிழ்நாடு: ஒரு துளிக் கவிதைபுதுச்சேரி,

  1வது பதிப்புஒக்டோபர் 2022. (தமிழ்நாடு: ஒரு துளிக் கவிதைபுதுச்சேரி).

  114 பக்கம்சித்திரங்கள்விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5x14 சமீ.

  பெண்கள் கருவுற்ற காலத்தில் இரண்டாவது வாரத்தில் பனிக்குடம் என்னும் பகுதி திரவத்தால் நிறைந்து

  கருப்பையில் உருவாகிறது. கருவில் வளரும் குழந்தை பாதுகாப்பாய் அந்த நீரில் மிதந்து அதன்

  பாதுகாப்பில் வளர்கின்றது. உடல் பிரசவத்திற்கு தயாரானதும் இந்தப் பனிக்குடம் உடையத் தொடங்கி திரவம் மற்ற மாசுக்களுடன் வெளியே வந்துவிடும். இந்தக் கவிதைத் தொகுதியிலும் அவ்வாறே சுகமாய்ச் சுமந்து வலியோடு வளர்த்து உயிராய் உரமாய் கனவாய் வெளியுலகில் நடமாட விட்ட உயிர்களில் அன்னையரின் மனஓசை ஒவ்வொன்றாய் வெளிப்படுத்தும் வகையில் இந்நூலின் கவித்துளிகள் அமைந்துள்ளன. அணிந்துரை வழங்கியுள்ள தேவகோட்டை முத்துமணி ‘இந்த நூலில் சுருங்கச் சொல்லி நம்முள்ளே ஒரு பொறியைப் பற்றவைத்துவிட்டு அறிவு விளக்கை வாசிப்பவரின் சிந்தையைத் தூண்டும் வண்ணம் செய்திருக்கிறார். ஒவ்வொரு வரியும் மிக யதார்த்தமாகவும் எளிய நடையுடனும் இருந்தாலும் அரிய எண்ணங்களை இக்கவி வரிகள் நம்முள்ளே விதைத்துச் செல்கின்றனஎன்கிறார். தாய்மைபெண்மைமுதுமைஅம்மா கவிதைகள் என நான்கு பிரிவுகளில் இக்கவிதைகள் விரிந்து கிடக்கின்றன. கௌரிகௌசி ஆகிய புனைபெயர்களில் தாயகத்திலும்புகலிடத்திலும் இலக்கியத்துறையில் தடம்பதித்தவர் திருமதி சந்திரகௌரி சிவபாலன். மட்டக்களப்பு மாவட்டம் - ஏறாவூரில் பிறந்த இவர்மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாவார். பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமாணி தமிழ் சிறப்புப் பட்டம் பெற்றதுடன்நுகேகொடை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வி டிப்ளோமா பட்டமும் பெற்று தன் தொழில்துறையாக ஆசிரியத் துறையை தேர்ந்தெடுத்தவர். மட்டக்களப்பு கறுவாக்கேணி தமிழ் வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்ற இவர்பின்னர் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம்நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராகவும்நீர்கொழும்பு கல்வித் திணைக்களத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றியவர்.

                  ---------------------------------------------------------------------------------------------------------

                              தமிழ் வான் அவை ஜெர்மனி

                     இணையவழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு --37

   கௌசியின் “பனிக்குடம்”  புதுக்கவிதை நூல் அறிமுக நிகழ்வு.

     காலம்;--30—04—2023

   தலைமை உரை;--கலாநிதி தமிழ்மணி அகளங்கன்  

   

       ஜெர்மனி தமிழ் வான் அவை நடத்தும் இணையவழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பின் 37ஆவது நிகழ்வாக நடைபெறுகின்ற கௌசியின் “பனிக்குடம்” புதுக் கவிதை நூல் அறிமுக நிகழ்வுக்குத் தலைமை தாங்குவதில் பெருமகிழ்வடைகின்றேன்.

       இந்நிகழ்வில் அவுஸ்ரேலியாவிலிருந்து கலந்துகொள்ளும் என்னோடு பல நாடுகளிலிருந்தும் பல தமிழறிஞர்களும், கவிஞர்களும் ஆர்வலர்களும், அன்பர்களும் கலந்து கொள்வதைப் பார்த்துப்  பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

      இந்நிகழ்வில் தொகுப்பாளராகக் கலந்து சிறப்பாக வழிநடத்திக்கொண்டிருக்கும்  திரு முல்லை மோகன் அவர்களே! சிறந்த வரவேற்புரையை வழங்கிய நற்றமிழ் நாவரசி முனைவர் வே,பூங்குழலிப் பெருமாள் அவர்களே! நிகழ்வில் உரையாற்றி வாழ்த்துரை வழங்கக் காத்திருக்கின்ற மூத்தவர் காப்பியக்கோ ஜின்னா ஷரிபுதீன் உள்ளிட்ட அறிஞர் பெருந்தகைகளே! நூலாசிரியர் கௌசி(திருமதி சந்திர கௌரி சிவபாலன்)அவர்களே! மற்றும் ஆர்வலர்களே! உங்கள் அனைவருக்கும் எனது இந்நேர வணக்கம்.

         கௌசி அவர்கள் ஓயாது இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு சிறந்த படைப்பாளி. தமிழைச் சிறப்பாகப் பயின்ற ஒரு பட்டதாரி. ஈழத் தாயகத்தின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்து தற்போது ஜெர்மனியில் வாழ்ந்துகொண்டு தாய்த் தமிழை உலகம் முழுவதும் பரப்பிக்கொண்டிருக்கும் தமிழ்ப்பற்றாளர்.

     பெண் படைப்பாளிகள் பெருகிக்கொண்டிருக்கின்ற இக்காலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் படைப்பாளிகளில் விரலுக்கு முந்தும் உற்சாகத்தோடு செயற்பட்டு வருபவர் கௌசி.

      இவரது புதுக்கவிதை நூலான பனிக்குடம் நூலின் அறிமுக நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

      பனிக்குடம் நூலில் பனிக்குடம், பெண்மை, முதுமை, அம்மா, அம்மா ஒரு ஆச்சரியம், வலிதாங்கி வாழ்வளித்த தெய்வமே, ஆகிய தலைப்புக்களில் கவிதைகள் உள்ளன. இக்கவிதைகள் பற்றி சிறப்பாக எடுத்துரைக்க இங்கே பலர் கலந்து கொள்கிறார்கள். இருப்பினும் தலைப்புக் கவிதையாக  நீண்டிருக்கும் பனிக்குடம் கவிதை பற்றி சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன்.

     தாய் வயிற்றில் பிள்ளை உருவாவதுமுதல் அது பிறந்து வளர்ந்து இறந்துபோகின்ற காலம்வரையிலான நிகழ்வுகளைப் பலர் பாடியுள்ளார்கள். பட்டினத்தாரின் “ஒருமடமாதும் ஒருவனுமாகி---“எனத்தொடர்கின்ற உடற் கூற்று வண்ணப் பாடல், அருணகிரிநாதரின் “கருவினுருவாகிவந்து---- “இத்தாரணிக்குள் மனு வித்தாய் முழைத்தழுது—“முதலான திருப்புகழ்ப் பாடல்கள், மாணிக்கவாசக சுவாமிகளின் “நான் முகன் முதலா--- எனத்தொடங்குகின்ற போற்றித் திருவகவற்  பாடல் முதலான பாடல்களில் இந்நிகழ்வுகள்  அறிவு பூர்வமாகச் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன.

        இருப்பினும் அப்பாடல்களில் ஆண்குழந்தையைப்பற்றி மட்டுமே சொல்லப்பட்டுள்ளன. கௌசி அவர்கள் பெண்குழந்தை பற்றியதாகவும் தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவு பற்றியதாகவும் உணர்வு பூர்வமாகப் பாடியுள்ளார். படிக்கப் படிக்க இன்ப உணர்வூட்டும் இக்கவிதை பற்றியும் ஏனைய கவிதைகள் பற்றியும் இங்குள்ளவர்கள் எடுத்துரைக்கவும் கௌசியை வாழ்த்தவும் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் அப்பணியை விட்டுவிட்டு தமிழிலக்கிய வானில் கொஞ்சம் பின்னோக்கிச் சிறகடித்துப் பார்ப்போம்.

         இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான சங்ககாலப் புலவர்களில் ஒளவையார் முதன்மையானவர். அவர் பாடியதாக புற நானூறு என்னும் நூலில் பதினேழு பாடல்கள் காணப்படுகின்றன. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் அவரது பாடல்கள் காணப்படுகின்றன,

     அதிய மானைச் சந்திக்கச் சென்ற முதல் நாளில் அவன் அவரைச் சிறிது தாமதித்துச் சந்திப்பதாக வாயிற் காவலனிடம் சொல்லிக் காத்திருக்கச் செய்த நேரத்தில் நீண்ட நேரம் காத்திருக்க விரும்பாதவராகி அரசனுக்கு எதிரானதாகவும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகவும் அவர் பாடிய பாடல் அற்புதமானது.

       கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி

       தன் அறியலன் கொல் என்னறியலன் கொல்.

       மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

       மழுவுடைக் காட்டகத்தற்றே

       எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே.

  “தளவாடங்களைச் செய்யும் தச்சனின் சிறப்பாக வேலை செய்யத் தெரிந்த பிள்ளைகள் உபகரணங்களோடு காட்டுக்குச் சென்றால் அவர்கள் வாழ்ந்துகொள்வார்கள்.அவர்க  ளைப்போல புலவர்களாகிய நாங்கள் ஆற்றல் படைத்தவர்கள். எங்குசென்றாலும் வாழக்கூடியவர்கள். அரசர்களில் மட்டும் தங்கியிருப்பவர்கள் அல்லர்.” என்று சொல்லி “எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே” என்று பாடியவர்.   

       அதியமானுக்கும், தொண்டைமானுக்கும் இடையே ஏற்பட இருந்த பெரும்போரைத் தவிர்க்க, அதியமான் சார்பாக தொண்டைமானிடம் தூது சென்றவர் ஒளவையார்

          மன்னனை வாழ்த்துவதற்கு “வரப்புயர---“ என்று தொடங்கி “குடி உயரக் கோன் உயரும்”என்ற ஜனநாயகக் கோட்பாட்டை முடியாட்சிக் காலத்திலேயே முழங்கியவர்.  

    வெண்ணிக்குயத்தியார் என்ற புலவர் சேரமான் பெருஞ்சேரலாதனின் புகழைஅவனது எதிரியான கரிகாற் சோழன் முன்னிலையில் பாடியவர். கரிகாற் சோழனுக்கும், சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும் வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் நடைபெற்ற பெரும் போரில் கரிகாற் சோழன் சேரமானின் மார்பில் தன் ஈட்டியைப் பாய்ச்சி வெற்றி கொள் கிறான்.

       அதற்கான வெற்றிவிழா சோழநாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது சேரமானின் புண்ணுக்கு மருத்துவர்கள் மருந்து போடுகிறார்கள். சோழனின் ஈட்டி சேரனின் மார்பை ஊடுருவி முதுகிலும் காயத்தை ஏற்படுத்திவிட்டது. அதனால் முதுகுப்புண்ணுக்கும் மருந்துபோட மருத்துவர்கள் முயல்கின்றனர்.

       முதுகுப் புண்ணுக்கு மருந்துபோட்டு உயிர்வாழ்வது அவமானம் என்று சொல்லி மறுத்து சேரமான் உயிர்துறக்க வடக்கிருக்கிறான். அப்போது சோழனின் அவைக்குச் சென்ற வெண்ணிக்குயத்தியார் சோழனின் முன்னிலையில் அவனது வெற்றி விழாவில் சேரமானைப் புகழ்ந்து

    “--------------------------------------

    நின்னிலும் நல்லன் அன்றே---

    கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை

    மிகப் புகழ் உலகம் எய்தி  

    புறப்புண் நாடி வடக்கிருந் தோனே

    என்று பாடுகிறார்.

                    திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி, கோயில் மூத்த திருப்பதிகங்கள் ஆகிய பாடல்களை கட்டளைக் கலித்துறை, வெண்பா, விருத்தம் ஆகிய யாப்புக்களில் பாடி விருத்த யாப்பே எந்தவகை உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்த ஏற்ற யாப்பு என்பதைக் காட்டியவர் காரைக்கால் அம்மையார்.

     அதனால் பல்லவர் காலத்து நாயன் மார்கள், மற்றும் சமயப் புலவர்களும், காவியப் புலவர்களும் விருத்தப் பாவைப் பாட வழிகாட்டியவர் காரைக்கால் அம்மையார். பதிகம் பாடுகின்ற மரபையும் உருவ வழிபாட்டினையும் பாடியவர் இவரே என்பர்.

               சங்க காலப் புலவர்களில் நக்கண்ணையார்நச்செள்ளையார். நப்பசலையார், பொத்தியார், பொன்முடியார், அள்ளுர் நன்முல்லையார், ஒக்கூர் மாசாத்தியார், காவற் பெண்டு, குறமகள் இளவெயினி, பேய்மகள் இளவெயினி, பாரிமகளிர் முதலான முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் பெண்புலவர்கள். இப்படி வந்த பெண்புலவர் மரபு பின்பு  இருபதாம் நூற்றாண்டுவரை ஆயிரம் ஆண்டுகளாக நலிவடைந்தது.

     புலவர் என்ற பொதுப் பாற் சொல்லுக்குள் இருந்த தமிழுலகம் புலவன் என்ற ஆண்பாற் சொல்லுக்குள் சுருங்கிப் போனது. புலவன் என்ற சொல்லுக்குரிய பெண்பாற் சொல் இல்லாமற்போக புலவர் என்பதுகூட புலவன் என்ற ஆண் பால் ஒருமைச் சொல்லுக்குரிய மரியாதை ஒருமைச் சொல்லாகப் பெருமளவு மாறிற்று.

    கவி என்ற பொதுப்பாற் சொல்லுக்குப் பதிலாக கவிஞன் என்ற ஆண்பாற் சொல் உண்டாகியது. அதற்குரிய பெண்பாற் சொல் இல்லாமலே போய்விட்டது. ஆடவன் என்பதற்குரிய பெண்பாற் சொல்லாகிய ஆடவள் மறைந்து விட்டது. கடவுள் மட்டும் மாறாமல் இருக்க இறை என்பது பால் பெற்று இறைவன், இறைவி ஆயிற்று, மன்னன், வேந்தன், ஆகிய சொற்கள் பெண்பாலை இழந்தன. அரசன் மட்டும் அரசியாயிற்று.

    இன்னும் நீட்டிக்கொண்டு போகாமல் நிறைவுக்கு வருகிறேன். பத்தொன்பதாம்  நூற்றாண்டின் பின் பெண்கள் படைப்புத்துறைக்குள் மீண்டும் வந்துள்ளனர். இப்போது சாதனைப் பெண்களாக வளர்ந்து வருகிறார்கள்.

     அந்த வழியில் கௌசிஅவர்கள் முன்னணிக்கு வருகிறார். ஜெர்மன் தமிழ் வானவை நிறுவுனராக, கவிஞராக, கட்டுரையாளராக மிளிர்கின்றார். தமிழ் நூல்களைத் தேடித்தேடிப் படிக்கின்றார். சுவைக்கின்றார். அதனை மற்றவர்களுக்கும் பகிர்கின்றார்.

     உலகளாவிய தமிழ் உறவுகளுக்குத் தமிழ் உணர்வூட்டுபவராக விளங்குகிறார். பெண்ணியம் என்பது பொத்தம் பொதுவாக ஆண்களுக்கு எதிரானது என்பதை மறுத்துப் புதுப்பாதை காட்டுகின்றார். தனது இந்நூலைத் தனது தந்தைக்கே சமர்ப்பணம் செய்துள்ளார்.

    “பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா, பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா” என்ற பாரதியின் பாடல் வரிகளைச் சொல்லி நிறைவு செய்கின்றேன்.

     கௌசி இன்னும் பல தரமான ஆக்கங்களைத் தமிழுலகுக்குத் தரவும், பெண்ணியம் பற்றிய தகுதியான வழிகாட்டியாக விளங்கிப் புகழ் பெறவும், மனதார வாழ்த்துகிறேன், பனிக்குடத்தைப்  படியுங்கள். உங்கள்பார்வைக்குள் கொண்டுவாருங்கள். இந்த வாய்ப்பை எனக்களித்த கௌசி அவர்களுக்கும் கலந்து கொண்டோர்க்கும்  நன்றி வணக்கம்.

                        வாழ்க தமிழ். வளர்க தமிழர்.

                         அகளங்கன் (இலங்கை)

                               01—05--2023    

  ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

                 

  (ஒரு வாசகன் பார்வையில்) காப்பியக்கோ ஜின்னா ஷெரிபுத்தீன் 

  இந்தக்

  கவிநூலின் காணிக்கை

  கருவுக்குக் காரணர்க்கே.

  கௌசியின்

  நெஞ்சத்தின் ஆழத்தை நிதர்சனஞ் செய்யுவது

  தாய்க்குத் தான்முதன்மை

  என்றாலுந் தந்தை!

  தாபரித்துக் காத்த தகைமைக்குச் சொந்தமதால்

  தாதைக்கே நூலைத் தந்துள்ளார் நன்றியொடு.

  நவீனமென்று எதையெதையோ

  நவிலுகின்ற காலத்தில்

  கவிஞர் கௌசியின்

  கவிவரியின் கோப்பு

  கடந்ததனைச் செல்கிறது.

  தொடக்கத்தில் வலிக்கு அவர்தரும்

  வேறுபட்ட அர்த்தங்கள்

  வாசகன் நெஞ்சத்துள்

  விதம்விதமாய் பொருள்கூறும்.

  விளக்கம் எதற்கு!

  வாசியுங்கள் பொருள் புரியும்

  வலிவருங்கால் வாய்மலர்ந்து

  வற்றாத புன்னகைக்கும்.

  வேதனையின் வெளிப்பாட்டை

  வரிசுமக்கும் விந்தைதனை

  நாமும் அறிய அவர் நவின்றுள்ளார்.

  அனுபவந்தான்.

  தொடரும் வரிகள்

  தாய்மையின் தியாகங்கள்

  தனக்கென்று எதுவுமின்றித்

  தாங்கியுள்ள சுமைக்காக!

  அல்ல! அல்ல!

  தாங்கியுள்ள துணைக்காக

  எத்தனையெத்தனைதான்!

  எண்ணில்தான் அடங்கிடுமோ!

  பனிக்குடத்துள் விளையாடும்

  பாவைக்கு நோகுமெனப்

  பக்குவமாய்ப் பதம்பதித்த

  பத்துமாத பந்தமது.

  தன்னைத் தானாகத்

  தானுணராக் காலமது.

  தாய்மைக்கு மட்டிலுமே.

  தெய்வமருள்

  திருப்பொருத்தம்.

  யாருக்குங் கிடைக்காத

  எல்லையில்லாப் பெரும்பேறு

  அற்புதமாய் அடியடியாய்

  ஆழப் பதித்துள்ளார்.

  கருவறைக்குள் குடியிருக்கும்

  கடவுளெனுங்கலையுருவம்

  தாயின்

  கருவறைப் பனிக்குடத்துள்

  புனிதக்குளிர்த் தீர்த்த்துள்

  பக்குவமாய்ப் புத்துருவம்

  படிப்படியாய்ப் பொலிவுபெறும்.

  பாருலகில் வாழும்

  பக்குவத்தைப் பனிக்குடத்துள்

  பெற்றுவிட்ட தாயும்

  பேசியுள்ளார் பாட்டரசி.

  கழுத்தைச் சுற்றியுள்ள

  கருக்கொடியைப் பூவாழ்வின்

  இறுக்கத்தைப் புகலுவது

  ஏற்புடைய உவமானம்

  பிரசவத்தின் அற்புதத்தைப்

  பேசுவதோ தூமொழியல்.

  ஆரம்பச் செவிமடுப்பு

  ஆ இ ஓ நாதவரி

  வேரறுக்கச் செய்ததென்றன்

  வேதனையை என்கின்றார்.

  ஆமாம்

  அவைதானே ஆத்மாக்கள்

  அசைபோடும்அரிச்சுவடி!

  உனக்குப் பசித்தால்

  எனக்குப் பால்சுரக்கும்”

  தாய்மைக்குக் கவிஞர்

  தேடியுள்ள தேறல்வரி!

  இதைவிடவுஞ் சொல்ல

  என்னவரி ஈங்குளதோ!

  தொடர்ந்துவரும் வரிகள்

  தாயுளத்தின் பூரிப்பும்

  தாரணியின் வாழ்வியலும்!

  தாதையின் அறிமுகமோ

  சத்தியத்தின் வெளிப்பாடு!

  கைவிரலின் ஸ்பரிசம்

  கருவறையின் உணர்வலைகள்

  உன் இதயத்துடிப்பை

  உன்விரல் நுனியில் உணருகின்றார்

  உன்றனது

  உற்பத்தி மரபணுவின்

  உதயத்தை உணர்வதுவாய்

  ஒப்பிட்டு உணர்த்துவது

  ஒப்பற்ற ஒப்பீடு

  பெண்மை

  தாயாகிப்பின்தனித்துத்

  தாவுகின்ற புத்துருவம்.

  தனித்தனியே உணர்வுகளை

  தன்னளவின் அனுபவத்தைச்

  சித்திரம்போல் வடித்துள்ளார்

  தெரிந்தறிய வாசகர்க்கு.

  ஒவ்வொரு பெண்ணும்

  உலகளவில் உணருகின்ற

  பக்குவந்தன்னைப்

  பாவரியில் வடித்துள்ளார்.

  பட்டறிந்த அனுபவங்கள்.

  வாழ்வியலைப் பரீட்சைக்கு

  வரித்திட்டால் வெற்றிபெற்று

  மீள்தல் பெரும்பேறு -என்னும்

  வினாவாடு கவிமுடியும்.

  பனிக்குட மகுடத்தில்

  பெற்றவளின் தியாகத்தை

  மனத்தூன்றச் செய்துள்ள

  முறைமை முழுமைதரும்.

  பிள்ளை புகல்வதுபோல்

  பேசுவது தனியழகு.

  விளையாட்டுப் பருவத்தை

  வரிவரியாய்ப் பேசுவதும்

  அனுபவ நிகழ்வுகளை

  அழகழகாச் சொல்லுவதும்

  கற்போர்க்கு!

  அற்றைக் காலத்தை

  அனுபவிக்கச் செய்கிறது

  கற்றறிந்த பாடங்கள்

  கதைகதையாய்ப் பொழிகையிலே

  கவிதைகளோ காதைகள்போல்.

  அம்மா பற்றிய

  அடிகள்மிக ஆழம்தான்

  அணுவணுவாய்ப் பாடமிட்டு

  அடிமனத்தில் பதியவிட.

  உயிராகி மெய்யாகி

  ஒன்றித்து மற்றொன்றாய்

  உயிர்மெய்யாய் ஒன்றான

  உறவேதான் தாயாகும்.

  வாழ்வியலைத் தமிழோடும்

  வழிமொழியும் கவி கௌசி

  அணைப்பின் சுகமும்

  அமுதளித்த உன்னதமும்

  அன்னையாய்ப் பேறுகொண்டும்

  அழியவில்லை மனத்திரையில்

  தாய்பாலை மிஞ்சிய சத்துணவு எங்குண்டு

  தாய்ப்பா சத்திற்கு மிஞ்சிய அன்பு எங்குண்டு”

  கௌசியின் கவிவரிகள்

  காலத்தால் அழியாது“

  நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

  செகம்புகழ வாழுதற்கு!

  -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  கௌசியின் பனிக்குடம்! எழுத்தாளர் பொன் புத்திசிகாமணி 

   

  இயற்கை மனமுவந்து அளித்த செல்வம்,பெண்மை.

  அதனால் எமக்குக் கிடைத்த வரம் தாய்மை.

  இது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கு மானதே.

  கண்கண்ட தெய்வம் என்கிற பதவி தாயைச் சேருகிறது.

  கௌசி தந்த இந்த பனிக்குடம் எங்களுக் கானதும் கூட,

  கருவில் எப்படி இருந்தோம் என்பதை எம்மால் அறிய முடிவதில்லை.

  இரண்டு குழந்தைகள் பிறந்ததைப் பார்த்த பின் மூன்றாவது குழந்தை வேண்டாம் என்பதை நானும் மனைவியும் முடிவெடுத்துக் கொண்டோம்.

  அந்த வேதனையைப் பார்த்த அனுபவம் எங்களுக்கு.

  இப்போதெல்லாம் மூன்றாவதையும் பெத்திருக்கலாம் என்று கதைப்பதுண்டு.

  இது எங்களின் இன்றைய தனிமை.

   

  குழந்தை மீது விருப்பம் வரும்போது தாயானவள் ,அனைத்தையும் மறந்து விடுகிறாள்.

  இந்தப் புலம்பெயர் வாழ்க்கையில் ஒவ்வொரு தந்தையும் தாயுமானவர் தான்.

  இவை எல்லாமே அனுபங்கள் தந்த பாடங்கள்.

  கௌசியின் அனுபவங்களே இன்று பனிக்குடமாக  நல்ல இலக்கியமாக எங்கள் முன் விரிந்து கிடக்கிறது.

  ஒவ்வொரு வரியும்  ,ஒவ்வொரு வலியும் இன்பத்தைத் தருகிறது.

  அனுபவத்தின் சுவடுகளாக நாங்கள் அம்மாவின் வயிற்றில் இப்படித்தான் வாழ்ந்தோம் என்பதை ஞாபகப் படுத்துகின்றன.

  நேற்றைய தினம் நண்பன் ஒருவன் வாட்சாப்பில் செய்தி ஒன்று அனுப்பியிருந்தான்.தாயை அறியாத பிள்ளை ஒருவன் தாயின் படத்தை வரைந்து அந்தத் தாயின் வயிற்றில் அவன் போய் சுருண்டு படுத்திருந்தான்.

  அந்த அளவிற்கு தாய்மையைஅவன் இழந்து தவிக்கிறான்.அதற்காக ஏங்குகிறான்.

   

  நீங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ள முதுமையைப் பற்றிச் சொல்லுங்கோ என கௌசி எனக்குக் கட்டளை இட்டிருக்கிறா.

   

  "வாழ்க்கையின் கட்டங்கள் தோறும்,வாழ்ந்து பெற்ற பட்டங்களே முதுமை" என்கிறார் கௌசி.

  இந்தச் சான்றிதழ் பெறாமலே சாகத் துணிந்தவர்களும்,வாழ்க்கையை இழந்தவர்களும்,வாழ்க்கைப் பரீட்சையில் பெறாத பட்டம் முதுமை.

   

  இதுவும் அவரது கருத்தே.

  இன்னும் சில கவிதைகள் முதுமைக்காக எழுதியிருக்கிறார்.

  எல்லாம் முதுமைக்கான வரையறைகள்.

  "அம்மாவின் பார்வைக்குள் ஆத்மா அடங்கிவிடும்.

  பார்வையிலே பாடம் நடத்தி

  பக்குவப் பண்புகளைப் புரிய வைக்கும்-அப்

  பார்வைக்குள் சக்தியைப் புதைத்து வைத்த

  புண்ணிய ஆத்மாவைப் போற்ற வேண்டிய

  காலம் தாயின் முதுமைக்காலம்."

  என்று இந்தக் கவிதை முடிகிறது. 

   

  ஒவ்வொருவரும் முதுமைக் காலத்தில் நாம் போற்றவேண்டிய தாய்க்குரிய கடமைகளைச் செய்ய வேண்டிய அவசியத்தைச் சொல்கிறது இந்தக் கவிதை.

   

  "பஞ்சு மெத்தையின் தன்மை தெரியாதவர்களே

  அம்மாவைக் கட்டி அணைத்துக் கொள்ளுங்கள்.

  நறுமணத்தை அறிய அம்மாவின்

  கன்னத்தில் முத்தமிடுங்கள்

  அம்மாவிடம் உள்ள அற்புத சக்தியால்

  மதி மயங்கிப் போவீர்கள்"

  தாய்மீது அன்பு வைத்திருக்கும் ஒவ்வொரு குழந்தையும் அறிந்து வைத்திருக்கும் செய்தி.

   

  "தன்னந் தனிமையிலே உடல் தள்ளாடும் வயதினிலே உங்கள் புன்னகையைப் பார்த்திருக்கும் மனம் போதாதோ எந்தனுக்கு

   

  நான் வணங்கும் தெய்வமெலாம்

  உங்கள் நல்ல குணம் அறியாரோ

  கோவிலுக்குக் கொடுத்ததெலாம்

  நன்மை கொண்டு வரமாட்டாதோ

  மூச்சிருக்கும் காலம் வரை

  உங்கள் முகம் பார்த்து

  நானிருப்பேன்

  காத்து நின்று போகும் என்றால்

  உங்கள் காலடியில்  உயிர் கொடுப்பேன்.

   

  கடைசி காலத்தில் மனைவி பாடுவதைப் போல் அமைந்தது இந்தப் பாடல்.

  காமத்தை மறந்து எவன் உண்மையான அன்பு வைக்கிறானோ

  அவனே முதுமையை நேசிக்கிறான்.

  என்பதை நானும் அறிகிறேன்.

   

  தாயின் கைக்கும் உடலுக்கும் இடையில்

  முகம் புதைத்துத் தூங்கும் இடமே

  இரவுப் பஞ்சணை

  கட்டியணைத்தேன் அம்மா

  உன் இதயத் துடிப்பு

  என் இதயத்தில் மத்தளம்

  கொட்டுவதேன்

  ஒரு வேளை உன் கருவறை

  கற்றுத்தந்த பாடமாக இருக்குமோ

   

  எனக்கு இறக்கை தந்த தேவதையே -உங்கள்

  விரிக்கத்துடிக்கும் இறகுகளை

  எனக்காக சுருக்கிக் கொள்ளுங்கள்

  என் பாதைக்கு இன்னும்

  வெளிச்சம் போதவில்லை.

   

  அன்று படுக்கையை நனைத்தேன்

  நீ இன்று படுக்கையை நனைக்கிறாய்

  தடக்கித் தடக்கி விழுந்தேன்

  தாவித் தாவி எனைப்பிடித்தாய்

  இன்று தடுமாறும் கால்களுக்கு தாங்கிப்பிடிக்க

  கைத்தடியாய் நான் வேணும்.

   

  சிறப்பான வரிகள்.

  கௌசியின் கவிதைகள்

  இதயத்தை வருடிச் செல்கின்றன

  அம்மாவின்

  அன்பு இதயத்தை அழைத்து வருகிறது.

  நானும் நனைத்தேன்

  கண்களின் நீராலே

  அம்மாவின் நினைவுதான் எப்போதும்

  வருகிறது.

   

  பனிக்குடம்  எங்களின்

  பணிக்குடம்.

  சிறப்புறும் ஆக்கங்கள் கௌசியால் இன்னும் வெளிவரவேண்டும்.இவ்வேளை

  அனைவரும் சேர்ந்து வாழ்த்துவோம்.

   நன்றி

  -----------------------------------------------------------------------------------------------------------------------------------------


  பனிக்குடம் - ஒரு பார்வை

   

  பனிக்குடத்தில் இன்னுமொருமுறை தோய்ந்து பிறந்தேன்  எழுத்தாளர் தேனம்மை 

  ஜெர்மனியின் ஷோலிங்கனில் நான் சந்தித்த இலக்கிய முத்து கௌசி. அங்கே தாய்மையோடு எங்களுக்கும் விருந்தோம்பினார்கள் கௌசியும் அவர் கணவரும் மகளும். அதன் முன்னரே வலைப்பூ எழுத்துக்களில் கௌசியின் பல்பரிமாணங்கள் கண்டு வியந்திருக்கிறேன். செய்திகளையும் வித்யாசமான சிறுகதைகளாக்கும் அவர் பாணி என்னை ஆச்சர்யப்படுத்தியதுண்டு. அவரின் இத்தொகுப்பில் மகளாய்இளம் மனைவியாய்தாயாய் உணர்ந்தேன். அவரின் எழுத்துக்கள் நம் உள்ளத்தோடு பேசுகின்றன. அதுவே அவரின் எழுத்தாற்றலுக்குச் சாட்சி. தொய்வில்லாத மன ஓசையின் வெளிப்பாடு. எதுகை மோனை சந்தத்தோடு புதுக்கவிதையிலும் எடுத்தி இயம்பி இருப்பது சிறப்பு. அவர் எழுத்துக்கள் பற்றித் தெரிந்திருந்தும் இது ஒரு எதிர்பாரா வாசிப்பனுபவம். இன்ப அனுபவம்.  

  பலரைத் தோற்கடித்து எனக்குள்
  உரிமையுடன் நுழைகின்றாய் நீ

  என்ற வரிகளில் குழந்தை உருவாகும் போது ஏற்படும் அறிவியல் போராட்டத்தை அறவியலுடன் எடுத்தியம்புகிறார் கவிஞர். உடல் மாற்றங்களில் மார்பகங்கள் மெல்ல வீங்கி மகவுக்கு உணவு தயாரிக்கும் என்று கூறியுள்ளது அனுபவ அற்புதம்.

  நம்மின் சிறு பதிப்பு குழந்தை என்பதை என் மறுபிறப்பாய் உன் தந்தையின் மறுபிறப்பாய் என அழகாகச் சித்திரப்படுத்தி உள்ளார். இதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம். பிள்ளைப் பேறு என்பதே மறுபிறப்புத்தானே. கணவனும் மனைவியும் பிள்ளை பிறந்தபின் தந்தையும் தாயுமாய் இன்னொருபிறப்பு எடுக்கிறார்கள்தானே.

  குழந்தை உருவானதும் இருவரும் நெகிழ்வது அழகு. என் பரிசத்தில் உன் பரிசத்தை உணர அப்பா என்று மனதுள் இசைக்கின்றார்!. வரும் குழந்தை உலகுக்கு சூரியனாய் உதித்துப் பணி செய்ய வேண்டும் என்ற பேராவல் தாய்க்கு.

  அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் இருக்கிறது என்பார்கள். கௌசியின் கவிதைகளில் அண்ட இருட்டிலும் தாயின் சுவாசத்தையே தாலாட்டாகக் கொண்டு குழந்தை ஜீவிக்கிறது. குழந்தை வயிற்றுக்குள் அடித்தாலும் உதைத்தாலும் ஆக்கினைகள் செய்யும் இன்பத்தை ஒரு தாயாக உரைக்கும்போது அதைப் படிக்கும் என்னைப் போன்ற பல தாய்கள் அந்தப் பேரின்பத்தை நினைவில் கொண்டு மகிழ்வார்கள்.

  ஒரு குழந்தையின் வரவால் உணவுக் கட்டுப்பாடுகடவுள் வழிபாடு என ஒரு தாய் தெய்வீக நிலைக்கு உயர்ந்துகொண்டே செல்கிறாள். சுகமாய்ச் சுமப்பதால் வலியும் கூட சிரிக்க வைக்கிறது ஆனந்தத்தில். நம்மின் சிறு உருவாகப் பத்து மாதம் கர்ப்பத்தில் கை கூப்பி வணங்கித் தாயிடம் கற்றுக்கொள்ளும் குழந்தையை கௌசி விவரிக்கும்போது மனம் பெருமிதத்தால் பொங்குகிறது.

  கருவறை அமைதி ஆனந்தம் உண்மையில் அந்தப் பேரின்பம் எங்குமே கிட்டுவதில்லை. உந்தி உந்தி வெளியேற கழுத்தைச் சுற்றும் காலனாய் உணவுக்குழாய் தடுக்கக் கத்தியால் தாயையும் சேயையும் பிரித்தெடுக்கிறார்கள் மருத்துவர்கள். என் மகவுகளையும் ( உணவுக்குழாய் சுற்றவில்லை ஆனால் ) இப்படிக் கத்தியால் பிரிக்கப்பட்டுப் பெற்றதால் அதன் வேதனையை என்னால் முழுவதுமாய் உணர முடிகிறது. குழந்தையின் குரலின் வசீகரம் அனைத்தையும் மறக்கடிக்கிறது.

  வாழ்க்கை தலைகீழாய் மாறுவதையும் பிரம்மாண்டப் பிரச்சனைகளை குழந்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கவிஞர் விவரித்திருக்கும் விதம் கண்டு பிரமித்தேன். தாய் தந்தையின் ஸ்பரிசம்மணத்தை நுகரும் குழந்தையும்அதற்குப் பசித்தால் பால் சுரக்கும் தாயும்எட்டி எட்டி நடை போட்டு எட்டாத உயரம் போகும் குழந்தையும்பிரபஞ்சத்தைத் தன்னோடு இணைப்பதற்குக் குழந்தை பேசும் அம் மும் வெகு அழகு.

  பருவ மாற்றத்தால் பச்சிளங்குழந்தை பருவக் குமரி ஆனதும்அவள் மாற்றத்தை உலகம் படம் பிடிப்பதும்மகள் என்னும் உலகைச் சுற்றி இருக்கும் ஓஸோன் படலமாயிருக்க விரும்புவதும்ஒரு தாயாய் விவரித்திருக்கும் விதம் சிறப்பு.

  தன் தாயின் சிறப்பாக தாயின் கரங்களே பொற்கரண்டி என்றும் சேலைத்தலைப்பின் நறுமணத்தையும்அவர் சமைக்கும் கறிச்சுவையின் அறுசுவையும் அமுது என்றும் ரசித்துக் கூறி இருக்கிறார். 

  தாயாய்த் தான் வடிக்கப்பட்டதையும் வார்த்தெடுக்கப்பட்டதையும் ஒரு இளம்பெண்ணாகவும் கூறி இருக்கிறார். சேர்க்கை என்னைச் சிந்திக்க வைக்கும்நூல்கள் எனக்கு வழியைக் காட்டும் எனப் புதுமைப்பெண்ணாய் ஆயுதமாய் எழுத்தைத் தெறிக்க விடுகிறார். இதில் மூட நம்பிக்கைகளை ஆய்வுக்கூடத்தில் கழுவ வேண்டும் என்ற வார்த்தைகள் பெரிதும் சிந்திக்க வைத்தன.

  விவேகானந்தரின் வரிகளான தனித்திரு விழித்திரு என்பதையும் கவிதையுள் அழகாகக் கொண்டு வந்துள்ளார். பெண்ணாய்ப் பிறந்ததால் விட்டுக்கொடுப்புகளோடும் தடைகளோடும் சமரசங்களோடும் வாழ நேர்வதையும் கோபத்தோடு சுட்டியிருக்கிறார். அடுத்து இளமைப் பருவத்துக்கே உரித்தான காதல் உணர்வுகளைப் பாடு பொருளாக்கி அதில் என் அருகே மிருகமாஅன்பு மனிதனா என்றும்பெண்மையை இழந்து தாய்மையைப் பெற்றதும்அழுகின்ற போது ஆறுதல் செய்வதும்அதன்பின் அன்பினால் ஆளுமை செய்வதும்இருமனம் கூடிய திருமணம் தந்த பரிசு. அதை இவரின் வார்த்தைகளில் படிக்கும் போது நமக்கும் நெகிழ்வு.

  என் உடல் ஒரு அருங்காட்சியகம்
  என் மனம் ஒரு சோதனைக் கூடம்
  இயற்கையின் படைப்புகள் எத்தனையோ
  அத்தனையும் பேரழிவுகளையும் தருகின்றன.

  என அபாரமான வார்த்தை வீச்சு. கவிஞர் எல்லாத் துறைகளிலும் துறைபோகியவர் என்பதற்கு இந்த மொத்தத் தொகுப்பும் அதில் இந்த வரிகளுமே சான்று. அண்டத்தையே பனிக்குடமாக்கும் வித்தை கைவருகிறது இவருக்கு.

  பெண்மனதின் புலம்பல்களும்தவிப்புகளும்தவறுகளுக்குத் தானே பொறுப்பேற்பதும் அத்துடன்

  அனைத்துமாய் நானிருக்க
  அவதாரம் பலவாறாக நானிருக்க
  உன்னை மிஞ்சி நான் இருக்க மட்டும்
  உனக்கு இஷ்டமில்லை

  என உண்மையை அதிரடியாய்ச் சுட்டிக் காட்டுவதும் கம்பீரம். அதேபோல் தன்னைத் தானே வடிவமைத்துத் தன்னைத் தானே ஏற்றுக் கொள்ளுதல் என உளவியல் பாடத்தையும் தன்னம்பிக்கையையும் போதிக்கிறார்!. பெண்களின் மனபலம் பற்றி உரைப்பதும் ஆணுக்கான அறிவுறுத்தலும் நெஞ்சுரம் தருகின்றன.

  முதுமை பற்றிய சித்திரம் அடுத்தது. போற்ற வேண்டிய பொக்கிஷம் முதுமை என்னும் வலிமைகண் இமைகளால் கைதட்டல் கொடுப்பதுஅற்புத சக்தியாக ஒவ்வொருவருக்குள்ளும் ஆட்சி செய்யும் தாய்பூச்சிகளுக்கும் உணவூட்டும் தாயின் நற்செயல்கள்தாயின் கைத்தடியாய் மாறவேண்டும் என்ற ஆசைவான் துகளாக வழி நடத்தி வாழ்த்திக் கொண்டிருக்கும் தேவதைஆறாயிரம் கோடி செல்களில் மிஞ்சி இருப்பவற்றுள் ஆட்சி செய்யும் இறை துகளை இறைஞ்சி இன்னும் சில காலம் அவள் தன்னுடன் வாழும் வரம் தரவேண்டும்என் உயிர்மெய் தந்தவள்நம் எல்லா உணர்விலும் வெளிப்படும் வார்த்தை அம்மா எனத் தாயின் மீதான அபரிமிதமான அன்பை எழுத்தில் காவியமாக வடித்துள்ளார் கௌசி.

  மிக அருமையான இந்தக் காவியத்தைப் படித்துப் பெருமிதத்திலும் பூரிப்பிலும் அன்பிலும் பாசத்திலும் நனைத்து விம்மிக் கிடக்கின்றேன் நான். உலகின் முதல் அன்பை எழுத்துக்களில் படைத்த கௌசிக்குப் பேரன்பும் முத்தங்களும்.

  இனி அவரின் வார்த்தைகளிலே

  நடந்தேன் வாழ்க்கைப்பாதை தோறும்
  நலமே தோன்றுமென நல்லெண்ணங்கொண்டே

  என்று நவில்கிறேன் முத்தாய்ப்பாய்.!

   -------------------------------------------------------------------------------------------

  கவிஞர் கிரேஷ் பிரதீபா - அட்லாண்டா 

  அவை நிறைக்கும் ஆன்றோருக்கும் தமிழ் உறவுகளுக்கும் தேன் தமிழ் வணக்கம்.

  கௌசி அவர்களுடைய 'பனிக்குடம்' நூல்! இந்த நூலில் இருக்கும் வாழ்க்கைப் பாடங்கள் மற்றும் அறிவியல் குறித்து ஒரு சில கருத்துக்களைப் பதியப்போகின்றேன்.

  அதற்கு முன்பு இந்த நூலை வெளியிட்டிருக்கும் உலக பெண் கவிஞர் பேரவையின் நிறுவனர் திரு. அமிர்தகணேசன் ஐயா அவர்களுக்கு புதுச்சேரி அரசின் 'கலைமாமணி' விருது வழங்கப்பட்டு இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து, அவருக்கு வாழ்த்துகள் கூறி தொடங்குகின்றேன்.

   ஒவ்வொருவருடைய வாழ்வும் உலகத்திற்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறார் கவிஞர்...

  "ஆதார வேர்களுக்கு ஆரோக்கிய நீர் வேண்டும்

  உலகுக்கு உன் வரவு உபயோகமாக வேண்டும்...

  உதிப்பதும் மறைவதும் பகலவனின் பழக்கமல்ல பணி"

  நாளும் பகலவன் உதித்து மறைந்தாலும் அவன் அந்தப் பணியைச் செய்வதனால் உலகமே இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதுபோல உன் வாழ்வு பயமுள்ளதாக இருக்க வேண்டும் என்று பிறந்த குழந்தைக்கே சொல்கின்றார்.

   அனைவருக்குமே மிக முக்கியமான மற்றுமோர்  அறிவுரை.. "சாதிக்கத் துணிந்தவர்கள் வலிகளுக்கு வசப்படுவதில்லை... முயற்சி முன்னேற்றம் தானாய் கிடைக்கும்" 

  கண்டிப்பாக இன்றைய நிலைக்கு மிகத் தேவையானது. ஒரு வலியோ ஒரு தடங்கலோ ஏற்பட்டு விட்டால் மனம் உடைந்து வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலையில் இருக்கும் சிலர் இதைப் படித்துவிட்டு முயற்சி செய்வோம் என்று ஓர் உந்துதலுடன் வாழ்வை எதிர்கொள்ள வேண்டும். இன்று கடினமாகத் தோன்றினாலும் முயற்சி செய்து கொண்டேயிருப்பேன், நாளை முன்னேற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மிகவும் தேவை. 

  "தலைகீழாய்த்  தூக்குகின்றார் வைத்தியர்

  இன்னும் இருக்கின்றது வாழ்ந்து பார்" பிறந்த குழந்தைக்கு நம்பிக்கை சொல்லும் வரிகள். குழந்தையை வளர்க்கும் பொழுது வாழ்க்கைப் பாடங்களையும் அறிவுரைகளையும் ஊட்டிக் கொண்டே வந்தால் அருமை தானே? பதின்மவயதில் வந்து அனைத்து அறிவுரைகளையும் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் அது இயலாத காரியம்.

   "சிரிப்பைக் கற்க காலம் தேவை அழுகை அவசரமாகவே ஒட்டும் வாழ்ந்து பார்த்து உணர்ந்து கொள்ளும் அற்புத கலை "என்று வாழ்வை குறித்து கூறுகின்றார். அழுகை தவறானது நல்லதல்ல என்னும் பொதுப்பிம்பத்தை இது உடைக்கும் அல்லவா?

   கள்ளமுள்ள குழந்தை உலகில் எந்த மூலையிலும் இல்லை"

  குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் இங்குப் பதியப்படுகின்றது. ஒவ்வொரு குழந்தையும் அன்புடனும் அறத்துடனும் வளர்த்து விட்டால் இந்தச் சமூகம், இந்த உலகம் இனிமையானதாக இருக்கும்.

  வாழ்க்கைப் பாடங்களுடன் .

   தான் தெரிந்து கொண்ட படைவலிமை பற்றிச் சொல்லுகின்றார். அந்த வரிகளை வாசிக்க விழைகின்றேன்.

  "அன்பு எந்தன் ஆயுதமாகும்

  அறிவு எந்தன் அணிகலனாகும்

  ....

  பொறுமை எனக்குப் புகழை புகட்டும்

  சேர்க்கை என்னைச் சிந்திக்க வைக்கும்

  ...

  நூல்கள் எனக்கு வழியைக் காட்டும்

  ..

  விரும்பா தொழில்கள் ஏற்பது இல்லை

  ...

  "அனைத்தும் வாங்கிக் கொள்ளும் குப்பைத் தொட்டியாய் மனதை வையேன்"

  "நூல்கள் வழிகாட்டும் என்று சொல்லும் கௌசியின் இந்த 'பனிக்குடம்' நூலும் பலருக்கு வழிகாட்டியாய் அமையும் என்பதில் ஐயமில்லை.

  சிந்திக்கப் பொறி தெறிக்கும் புதுமைப்பெண் ஆயுதமாய் எழுத்தை தெறிக்க விடுவாள்"

  இந்த வரிகளுக்கு அருமையான சான்றாக விளங்குகிறார் தோழி கௌசி.

   

   

  ஆசிரியருடைய அறிவியல் அறிவும் கருத்துக்களும் கவிதைகளினூடே நிறைந்திருக்கின்றன.

  "குழந்தையின் முதல் வார்த்தை அம் கபால உச்சியை திறக்கும் மந்திரம்"

  மனத்தை ஒருநிலைப்படுத்தும் ஓசையின் சிறப்பை நமக்கு பிறக்கும்போதே இறைவன் கொடுத்திருப்பதை உணர்த்தும் வரிகள். 

  மகளைப் பற்றி சொல்லும் பொழுது, உன்னைப் பற்றிய எண்ணங்களில் "ஓசோன் படையாகவே இருக்க வேண்டும் என ஆசைப்படுகின்றேன்" என்று சொல்கிறார் கௌசி. இந்த பூமியை எப்படி ஓசோன் படர்ந்து இருக்கின்றதோ அதுபோலவே மகளைச் சுற்றி நான் இருப்பேன் என்று அழகான ஓர் இணைப்பு. 

  ஆய்வுக்கூடம் ஒன்று அமைப்பேன் என்ற கவிதையில் ஆசிரியர் உடைய அறிவியல் அறிவு சமூகக் கொடுமைகளைக் களைவதற்குப் பேசுகிறது. 

  "நாவை சுடுகின்ற சுரப்பு" அடடா நாவின் சிறப்புகள் சுவைக்க மட்டுமே என்று தானே அறிந்திருக்கின்றோம்.. அதில் பொய் சொல்வதைத் தடுப்பதற்கான சுரப்பை யோசிக்கின்றார். சுரப்பிகளால் உடல் இயங்குவதை எவ்வளவு அழகாக இணைத்துப் பார்க்கிறார்.

   

  "அறிவைத் தேடும் காந்தவிசை

  மூளையை மூடிவிட்டு சமுதாயத்தை உலகத்தில் நடமாட விட வேண்டும்"

  இந்த மூளை தானே அன்பை ஒதுக்கி வைத்துவிட்டுத் தன் சுகத்தை, சுயநலத்தைத் தேடுகின்றது.. மூளையை  மூடிவிட்டு சமூகத்தை உலகத்தில் விட்டால் அங்கு அன்பு தானே பிரதானமாக இருக்கும்? ஆசிரியருடைய சிந்தனைத்திறனை வியக்கிறேன்!

  "கட்டுப்பாட்டுக் கருவியைக் கையில் வைக்க வேண்டும் "

  "புவியீர்ப்பு விசையைத் தள்ளிவிட்டு பூலோகம் எங்கும் பறக்க வேண்டும்"

  என்று பல வரிகளில் அறிவியல் எளிமையாக அமர்ந்திருக்கின்றது. வாசிப்பவரைப் புரியாமல்  கனப்படுத்தாத வரிகள்.

   

  "பாறாங்கல்லைத் தூக்கியெறிய பிறர் உதவி தேவை

  மனதுக்குள் விழுந்த சுமைக்கு என்னிடமே மருந்து இருக்கின்றது"

  வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகளுக்கு உதவியைத் தேடிப் போவது தவறல்ல, இன்றியமையாதது என்பதையும் மனத்துக்குள் இருக்கும் சுமைகளுக்கு என்னிடமே மருந்திருக்கின்றது என்று தன்னம்பிக்கையும் ஊட்டும் வரிகள் இவை!

   

   

  "சோக அனுபவங்கள் வாழ்க்கையில் ஒரு பகுதியே சோர்ந்து விடமாட்டேன்"

  என்று சோகம் வந்தவுடன் துவண்டு விடாமல் இருக்க அறிவுறுத்துகின்றார்.

  சமூகத்தில் கவிஞருடைய வரிகளை அவருடன் இணைத்து பார்க்கும் ஒரு தவறான புரிதலும் இருக்கவே செய்கின்றது. அதையும் தெளிவுபடுத்துகின்றார் கௌசி அவர்கள்.

  "வானம் அழுவது பூமி விளைவதற்காக பேனா அழுவது பேதைமை நீக்குவதற்காக"

   

  எப்படி ஒரு குழந்தையின் பிறப்பை பனி கூடத்தில் இருந்து தொடங்கி, அதன் வளர்ப்பில் பெற்றோர் மகிழ்வதையும் அவர்களுடைய கனவுகளையும் அழகாக சொல்கின்றாரோ அதைப்போலவே வாழ்வின் இறுதியில் முதுமையை பற்றியும் தெளிவாகப் பேசுகின்றார்.

  "போற்ற வேண்டிய பொக்கிஷம் முதுமை என்னும் வலிமை"

   

  "விதைக்குள் அகப்படும் விருட்சமாக உனக்குள் அகப்பட்டு கிடக்கவே ஆசைப்படுகிறேன்" என்று எப்படி  விருட்சம் விதைக்குள் இருந்து வளர்கிறதோ அதுபோல தாயிடம் இருந்து பிறப்பை பெற்றுக் கொண்ட நாம் முதுமையிலும் தாயை தேடுகின்றோம், மீண்டும் அவருக்குள் சென்று நிம்மதியாக இருக்க மாட்டோமா என்று ஒரு பொழுதேனும் ஏங்குகின்றோம் என்பதை படம் பிடித்து காட்டுகின்றார்.

   

  உடல் நலம் குன்றுவதைக் குறிப்பிடும் கவிதையில் அறிவியல் இழையோடுகின்றது. எப்படி செல்கள் ஓர் உயிரை உருவாக்குகின்றனவோ அதுபோலவே முதுமையில் அந்த செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கின்றன.

  "இறந்து கொட்டும் மூளை செல்கள் இவைதான் முதுமையின் முகவரிகள்"

   

  "கருப்பை பரிசோதனை கூடம்",

  "உந்து விசையும் உந்தியின் விசையும் ஆரம்ப கட்டத்தில் ஆரம்பமாகிறது"

   

  இப்படி பனிக்குடம் எப்படி ஓர் உயிரை வளர்த்து அதை உலகிற்குப் பரிசளிக்கின்றதோ, அது

  போலவே கௌசியின் இந்த ' 'பனிக்குடம்' நூலும் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பிறப்பிலிருந்து மூப்பு வரை சிறந்த சொல்லாடல்களோடு கருத்தாழமிக்க வரிகளில் கொடுக்கின்றது.

  சமூகத்தில் இருக்கும் குறை நிறைகள்.. அவற்றை எதிர்கொள்வதற்கான அறிவுரைகள்.. பாடங்கள் என்று ஒரு பெண்ணின் குரலாக அழகாகப் பதிவு செய்திருக்கின்றார். அன்புத் தோழி கௌசிக்கு வாழ்த்துக்களைக் கூறி அனைவரும் இந்த நூலை வாங்கி வாசிக்க வேண்டும் என்று விரும்பி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

  கிரேஸ் பிரதிபா

  அட்லாண்டா

  ஏப்ரல் 30, 2023.

  -----------------------------------------------------------------------------

  “பனிக்குடம்” கவிதை நூல் – கவிஞர் கௌசி, ஜெர்மனி

  வாழ்த்துரை - இராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா, வட அமெரிக்கா

  ஏப்ரல் 30, 2023

   

  அனைவருக்கும் வணக்கம்!

   

  முதல் மனப்பதிவு (first impression) :

  ஒரு நூலைப் படிக்க எடுக்க, “முதல் மனப்பதிவு” நன்றாக இருக்க வேண்டும். நூலின் தலைப்பு, அட்டைப்படம் மற்றும் வடிவமைப்பு படிப்போரைக் கவர வேண்டும்.  அந்த வகையில் “பனிக்குடம்” ஒரு மாறுபட்ட, அழகான தலைப்பு.  முகப்பு ஒரு புத்தாக்க ஓவியம். பின் அட்டையில் கலைமாமணி அகன் அவர்களின் வாழ்த்துரையோடு புதுச்சேரி ஒருதுளிக்கவிதை வெளியீடு, நூலுக்குச் சீரான வடிவமைப்பை அளித்துள்ளது.

  காணிக்கை:

  ஆசிரியர் கவிஞர் கௌசி தம் காணிக்கைப் பக்கத்தில்,

  “புதையலுக்குள் வைரமாக

  பொக்கிசமாகப் போற்றி வளர்த்த

  புண்ணிய ஆத்மா”

   என்று தம் தந்தையைப் பற்றிக் குறிப்பிடும் போதே வாசகனுக்கு ஓர் இணைப்பு உணர்வு வந்துவிடுகிறது.

   தோரண வாயில்:

  திரு. முத்துமணி அவர்களின் அணிந்துரை, கவிஞர் மெய்யன் நடராஜ் அவர்களின் ஆய்ந்துரை மற்றும் கௌசியின் மன ஓசை இந்நூலுக்குத் தோரண வாயிலாக அமைந்துள்ளன. கௌசி குறிப்பிட்டிருந்தபடி, இந்நூலைப் படித்து முடிக்கையில் நம் மனத்துக்குள் பனிக்குடம் உடைந்து எண்ண அலைகளைப் பிரசவிக்கத்தான் செய்தது!

   பிரிவாக்கம்:

  திட்டப்பணி மேலாண்மையில் WBS (Work break-down structure) என்று சொல்வார்கள். இதன்படி வேலைகளைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துச் செய்தால், திட்டப்பணியை முடிப்பது எளிதாக இருக்கும். அதே போல் ஆசிரியர், “தாய்மை”, “பெண்மை”, “முதுமை” என்ற பிரிவுகளாக்கி இந்நூலை அமைத்திருக்கிறார். இது  படிப்போருக்கு, ஒரு பிரிவை வாசித்து உள்வாங்கி, அசை போட்டு, அடுத்தக் கட்டத்துக்குப் போகும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

  உருவமா? உள்ளடக்கமா?

  கவிதை நூலில் உருவத்துக்குத்தான், அதாவது சொல்லும் முறைக்குத்தான் முதலிடம், உள்ளடக்கத்துக்கு அன்று என்று கூறுவோர் உண்டு. கௌசி இக்கருத்தை உடைத்தெறிந்து இரண்டையும் சரிசமமாகப் படைத்துள்ளார். வலுவான கருவை உள்ளடக்கமாகக் கொண்டு, அது எங்கும் சிதறி விடாமல், சொல்லோசையில் ஒழுங்கு முறையைப் பின்பற்றி, அழகுறக் கவிதைகளைக் கட்டமைத்திருப்பது சிறப்பு. 

  இரசனை / அழகியல் உணர்வுகள்:

  வாசகனின் இரசனை என்பது பலதரப்பட்டது. படைத்தவனின் இரசனையைக் காட்டிலும் படிப்பவனின் இரசனை பரந்துபட்டது. இதை வகைப்படுத்துதல் என்பது இயலாத ஒன்று.  இருப்பினும் நான் சுவைத்த அழகியல் உணர்வுகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

    எளிமை

  வாசகனின் அடிப்படையான எதிர்பார்ப்பு “எளிமை”. கவிதையைப் படிக்கையில்வரிகள், வாசகனின் முயற்சி அதிகம் இல்லாமல், அவனை மென்மையாகக் கொண்டு போக வேண்டும். இடையில் அகராதியைப் புரட்ட வேண்டும் அல்லது வரிகளைத் திரும்பப் படித்துப் பொருளை உணர வேண்டும் என்றால்ஒரு சராசரி வாசகன் புத்தகத்தைப் பாதியிலேயே போட்டு விட்டுப் போய் விடுவான். கௌசி இதற்கெல்லாம் இடம் வைக்காமல்எளிய சொற்கோவைகள் கொண்டு இந்நூலைப் படைத்துள்ளார்.

  ·         ஆழமான, வாழ்வியல் சார்ந்த கருப்பொருள்

  ·         கருப்பொருளுக்கு நம்மை அழைத்துப் போகும் காட்சிகள்

  ·         காட்சிகள் மனத்தில் கிளறி விடும் உணர்ச்சிகள் / இணைப்பு உணர்வு

  ·         நடைமுறைக்கேற்ற அணுகுமுறை

  ·         கவிதை வடிவம்

  ·         தாளக்கட்டு

  ·         ஒலிநயம்

  ·         கற்பனை

  ·         உவமை, உருவகம்

  ·         அன்பு, பாசம், கடமை, துணிவு

  ·         புதுமை வேட்கை

  ·         வாழ்வியல் கண்ணோட்டம்

  ·         சமுதாயச் சீர்திருத்த உணர்வு

  ·         முற்போக்கு எண்ணங்கள்

  ·         கலைக் கண்ணோட்டம்

  ·         இலக்கியப் போக்கு

  ·         அறிவியல்

   

  பிடித்த வரிகளில் ஒரு சில – நேரம் கருதி ஒரு சில மட்டுமே!

   

  மகப்பேறு நிகழவிருக்கும் வேளையைப் பற்றிச் சொல்கையில்-


  “உந்துவிசையும் உந்தியின் தள்ளுவிசையும்

  ஆரம்பக் கட்டத்தில் ஆரம்பமாகிறது” 

  என்று இயற்பியலைப் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார்.

  “என்னுள் உன் உருவம் எல்லை கடக்கிறது

  நீ வர எத்தனித்தாயா? இல்லை

  வரவுக்கு அஞ்சினாயா?”

   என்ற குழந்தைக்கான தாயின் கேள்வி எழுப்பல், நம் மனத்திலும் பல கேள்விகளை எழுப்புகிறது.

   குழந்தைக்கு நனைந்துவிட்ட உள்ளாடை மாற்றுவது என்பது இயல்பான செயல். இதைக் குறிப்பிடுகையில் ஆசிரியர்,

   “நீருக்குள் கிடந்தாய் நீந்திக் களித்தாய் – இன்று

  நனைந்துவிட்ட உள்ளாடை மாற்ற வீறிட்டு அழுகின்றாய்”

   என்று நமக்குப் பனிக்குடத்தை நினைவுபடுத்துவது புதுமை.

   ஆசிரியர், பெண்மைப் பகுதியில் ஆய்வுக்கூடம் அமைத்து, அங்குச் சமுதாயத்தை அடைக்க வேண்டும் என்று தொடங்கி, பாரதி “காணி நிலம் வேண்டும்” பாடலில் கேட்டது போல் தமது பல ஆசைகளை அடுக்குகிறார்.

   

  அவற்றுள் நான் சுவைத்த சில வரிகள்-

   “மூளைகளை முழுவதுமாய்த்

  திறக்க வேண்டும்

  மூடநம்பிக்கைப் பதிவுகளை

  முழுவதுமாக உரசிக் கழுவ வேண்டும்

  பொறாமைச் சுரப்பை சுரக்க விடாது

  முடக்க வேண்டும் – அது

  உர்ர் என்ற முகத்திற்கு

  மகிழ்ச்சி தர வேண்டும்”

   

  இதைப் படிக்கையில், “உர்ர்” என்று முறைத்துக் கொண்டிருக்கும் எவர் முகத்திலும் முறுவல் அரும்பத்தான் செய்யும்!

   கலைநுட்பம் மிகுந்த, மிகைப்படுத்தல் இல்லா இப்படைப்பை அளித்த அன்புச் சகோதரி கௌசிக்கு உலகப் பெண் கவிஞர் பேரவை மற்றும் வல்லினச் சிறகுகள் சார்பில் பாராட்டுகள்!

   தமிழ் வான் அவை அளித்த வாய்ப்புக்கு நன்றி!

  -------------------------------------------------------------

  பனிக்குடம்  பெண்மை

  ஹேமா  ராமச்சந்திரன்

   

  பேரன்புமிக்க தமிழ்கூறும் வாசகர் வட்டத்திற்கு எனது அன்பான  வணக்கங்களையும்வாழ்த்துக்களையும் முதற்கண் மகழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

  பெண் என்பவள் யார்பெண்ணியம் பற்றி பேசும் நம்மில் எத்தனை பேருக்கு இதற்கான விடை தெரியும்?

  இந்தக் கேள்விகளுக்கான பதிலை கௌசி அவர்கள்  ”தாய்தாரம்தோழிசகோதரி எனப் பன்முகம் கொண்ட  பெண்,  வலிமைக்கும் மென்மைக்கும் எடுத்துக்காட்டாக இருக்கின்றாள் என்பதை "பனிக்குடம்" என்ற இந்தக்  கவிதைத் தொகுப்பில்  "தாய்மைபெண்மைமுதுமை" என்ற மூன்று பரிமாணங்களைக் கொண்டு  அழகான கவிதை நடையில் உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்துகிறார்.

  இந்த மூன்று தலைப்புகளில் பெண்மை என்ற தலைப்பில் நான் வாசித்து இரசித்த சில வரிகளை யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” - என்ற வகையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த தமிழ்வானவை நிறுவனத்திற்கு என் நன்றிகள் பல.

  பெண்மையும் தாய்மையும் பிரிக்கமுடியாதவை. சிறந்த பெண்மையே சிறந்த தாய்மையாகும்அன்பும் அரவணைப்பும் பெண்மையின் இரு கண்கள்.

  அத்தகைய தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் வாழ்ந்த பெண் தனித்து வாழும் போது  அவள் எதிர் கொள்ளும் சவால்கள் எத்தனை எத்தனை..

  அவற்றை அழகாக விவரிக்கிறார் கௌசி. இதோ அவருடைய வரிகள்:

     இந்த வாழ்க்கைப் பாடங்கள் அப்பெண்ணுக்குள் தோற்றுவிக்கும் மனஉறுதிமனத்திண்மைமனவலிமை இவற்றைப் பாங்குற இந்த வரிகளில் வெளிப்படுத்துகிறார் கௌசி!

  அடுத்ததாக பெண் என்பவள் எவ்வளவுதான் தன்னிச்சையாக இருக்க முயன்றாலும்கருவறை தந்த சுகங்களை உலகத்திற்குத் தாரை வார்த்துவிட்டு தன்னை இழக்கவேண்டி வருகிறது. 

  பெண்ணின் சுதந்திரங்களைத்  தட்டிப்பறிக்கும் சமூகம் அவள் நொந்த போது  எங்கே போனது என்றும் கேட்டு விட்டுஅவளுடைய அவலங்கள் நீங்க கௌசியே ஒரு அறிவியல் கற்பனை விளக்கம் தருகின்றார்.  என்ன ஒரு கற்பனை கௌசி! வியந்து போனேன் நான்!

  என்னைக்  கவர்ந்த மற்றொரு பகுதி:  இதை விட உள்ளக்கிடக்கை அனுபவபூர்வமாக யாரால் சொல்ல முடியும்நம் கௌசியைத் தவிர?

  மரத்துக்குத் தெரிவதில்லை இளைப்பாறும் பறவையின் சுயநலம்”- என்று கூறும் போது பெண் எவ்விதம் ஆணின் வன்முறை மற்றும் ஒடுக்குமுறை  போன்ற முறைகேடுகளை அறியாது போகிறாள் என்றும்இத்தகைய சவால்களினால் பெண் மன ரீதியாகவும்பாலியல் ரீதியாகவும்  துன்புறுவது முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலையாக உள்ளது என்றும் எண்ணி மனம் கலங்குகிறார் கௌசி.

  மேலும் அவர்  சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைஅவலங்களைபிரச்சினைகளைச் சுட்டிக் காட்டுவதோடு நின்றுவிடவில்லை.

   அடங்கிக் கிடக்கும் ஆமைகளாய்ஒடுங்கிக் கிடக்கும் அடிமைகளாய் நாங்கள் இனி இல்லை ,  எங்களைப் புறக்கணிக்கநசுக்க நினைக்கும் எவரையும் எதிர்த்துக் குரல் கொடுக்கும் அளவிற்குத் துணிவும்மனஉறுதியும் பெற்று விட்டோம்.” -  என்று ஆண்களுக்கு  அடுத்து வரும் கவிதை வரிகளில் ஆணித்தரமாக எச்சரிக்கை விடுக்கின்றார்.

   தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்து  சமூகத்தையே மாற்றியமைக்க  வேண்டிய பொறுப்பு  நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.  

  இன்றைய சமூகம் தற்போதுள்ள கலாசார விழுமியங்களை பெண்களுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறதுஅதனை விடுத்துபெண்களின் உடல்உளநலன்களை கருத்திற் கொண்டுகலாசார விழுமியங்களில் மாற்றங்களைக் கொண்டு வருவதேசமூகம்அதாவது நாம்  செய்யவேண்டிய தலையாய  நடவடிக்கையாகும்.  

  மற்றுமொரு மிகவும் முக்கியமான பொறுப்பு பெண்ணென்ற வகையில் தாய்மார்களுக்கு  உள்ளது. அது என்னவென்றால் பெண்கள் தமது ஆண்  பிள்ளைகளுக்குச் சரியான மனப்பாங்குகளை சிறுவயது முதல் கற்பித்துஅவர்களைப்  பெண்ணினத்தைக்  கௌரவப்படுத்துபவர்களாக ஆயத்தம் செய்வது .

  அவ்வாறு செய்யப்படுமானால்பெண்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என்பது திண்ணம்.   

  பனிக்குடம் என்ற இந்தக் கவிதை நூலை அனைவரும் படித்துப் பயன் பெறலாம். அவ்வளவு எளிமையோடும்சுவையுடனும், கவிதை நயத்தோடும் எழுதப்பட்ட வரிகள்.

  இந்தக் கவிதைத் தொகுப்பை வாசித்த பிறகு ஓரிரு நாட்கள் கௌசியின் கவிதை வரிகளோடு நான் தனியே எஞ்சியிருந்தேன் என்றால் அது மிகையாகாது.

  கௌசி அவர்களுக்கு என் இதயபூர்வமான நல்வாழ்த்துகள்.

  இந்த உலகு வாழும்வரை பெண்மை என்னும் புதுவெள்ளம்  பாய்ந்து உலகை வாழ்விக்கும்!”

  பெண்ணியம் போற்றுவோம், கண்ணியம் காப்போம் 

  பெண்மையை வணங்குவோம்

  வாழ்க தமிழ் 

  வாய்ப்புக்கு நன்றி கூறி  விடை பெறுகிறேன். வணக்கம்!

   

  ஹேமா  ராமச்சந்திரன்

  டென்மார்க் 

  -------------------------------------------------------------------------------------------------------------------------------------

  "பனிக்குடத்தில் நனைந்தவன்"
  ------------------------------------------------
  " ஒரு புத்தகமென்பது எப்படி இருக்க வேண்டுமெனில்... / இந்த புத்தகம் ஒரு ஆகச்சிறந்த... / ஒரு புத்தகத்தின் சிறப்பென்பது.... " இப்படி எப்படி வேண்டுமானால் ரொம்பவும் Formal-ஆக ஒரு புத்தகம் பற்றியும் அதன் ஆசிரியர் பற்றியும் எழுதலாம், பேசலாம். ஆனால் அப்புத்தகம் உண்டாக்கும் தாக்கமென்பது வெகு இயல்பானதாய் இருக்கும்போது, அது சார்ந்து செய்யும் எல்லாமே இயல்பாகத்தான் இருக்கும்.
  இருக்காதா பின்னே..?
  நேற்றைய முன்தினம் இரவு 11.00 மணி வரை Site-இல் பிரச்சனை என்று தூங்காது கிடந்து மறுநாள் காலை 5.30 மணியிலிருந்தே அலுவலகத்தில் அலைச்சலோடு கிடந்தவனின் உள்ளுக்குள் ஒரு அலாரம் மட்டும், "டம்..டம்..டம்..டம்...(பனிக்கு)டம்" என்று டம்மடித்துக்கொண்டே இருந்தது. அந்த அலாரம், "இந்த புத்தகம் பத்தி நாமளும் ஏதாச்சும் சொல்லணுமே..?" என்ற சுய வற்புறுத்தலால் அடித்ததல்ல. மாறாய், நானும் இந்த புத்தகத்தை வாசித்திருக்கிறேன் என்ற பெருமையை வெளிப்படுத்துவதற்கு.
  இருக்காதா பின்னே..?
  அது ஏற்படுத்திய தாக்கம் அப்படி. இல்லையேல் எப்படியாவது கௌசியின் "பனிக்குடம்" பற்றி உலகத்துக்கு ஓரிரு வார்த்தைகளேனும் விளம்பிட வேண்டுமென்று வேலைக்கு இடையில் ஓடி வந்து உலகெங்கிலுமிருந்து ஆகப்பெரும் சான்றோரும் முனைவரும் தமிழ்ப்புலவரும் ஆர்வலரும் சூழ்ந்திருந்த Zoom - சபையில் அடியேனின் அவசர வார்த்தைகளும் இடம்பெற வேண்டுமென்ற எண்ணம் எழுந்திருக்குமா..? அப்படி எழுந்ததாலேயே, அக்கணம் என்னிதயத்திற்கு என்ன தோன்றியதோ, அதையே என்னிஷ்டத்துக்கு வார்த்தைகளாய் உடைத்துக் கொட்டினேன்.
  "பனிக்குடம்" புத்தகம் பற்றியும் அதன் ஆசிரியர், எனது பெரும் Inspiration "கௌசி சிவபாலன்" பற்றியும் நானுரைத்தது கொஞ்சத்திலும் கொஞ்சமே. இன்னுமவர் புத்தகங்களை/எழுத்தை கிரகிக்கும் ஆற்றலை எனக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதுதான் நிதர்சனம்.
  இருக்காதா பின்னே..?
  எத்தனை கேள்விகள்,விண்ணப்பங்கள் என்னிடம்?
  01. "யாரிந்த கௌசி..?,
  02 "அந்த புத்தகம் என் காதலிக்கு/மனைவிக்கு பரிசளிக்க வேண்டும்.."
  03. "பனிக்குடம்..பேருக்காகவே புத்தகம் வாங்கணும்.."
  04. " நீங்க எழுதுன மாதிரி இல்லையே, ரொம்ப நல்லாருக்கே..."
  05. "நான் கௌசியின் மிகப்பெரிய ரசிகை ஆகிவிட்டேன்.!"
  etc etc....
  அந்த "பனிக்குடத்தில் நனைந்தவன்" என்ற முறையில் மீண்டுமொரு முறை சொல்கிறேன், எப்படி பனிக்குடம் என்பது எப்படி பெண் ஒருத்தியின் உடலுக்குள் இயற்கை ஏற்படுத்திடும் அற்புதமோ, அதுபோலவே பனிக்குடம் புத்தகமும் ஆண் பெண் பேதம் பாராது நிறைய பேரின் உள்ளத்துக்குள் ஒரு பேரற்புதத்தை நிகழ்த்தி விட்டிருக்கிறது. நிகழ்த்தி கொண்டிருக்கிறது. இனியும் நிகழ்த்தும். அது நிகழ்த்துமந்த அற்புதத்தின் பெயர்..
  "பேரன்பு".
  ----------------------------------
  புத்தகம் : பனிக்குடம்.
  ஆசிரியர் : கௌசி சிவபாலன்.
  ---------------------------------

  --------------------------------------------------------------------------------------------------------------------------------------

  கௌசியின் பனிக்குடம்!


  இயற்கை மனமுவந்து அளித்த செல்வம்,பெண்மை.

  அதனால் எமக்குக் கிடைத்த வரம் தாய்மை.

  இது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கு மானதே.

  கண்கண்ட தெய்வம் என்கிற பதவி தாயைச் சேருகிறது.

  கௌசி தந்த இந்த பனிக்குடம் எங்களுக் கானதும் கூட,

  கருவில் எப்படி இருந்தோம் என்பதை எம்மால் அறிய முடிவதில்லை.

  இரண்டு குழந்தைகள் பிறந்ததைப் பார்த்த பின் மூன்றாவது குழந்தை வேண்டாம் என்பதை நானும் மனைவியும் முடிவெடுத்துக் கொண்டோம்.

  அந்த வேதனையைப் பார்த்த அனுபவம் எங்களுக்கு.

  இப்போதெல்லாம் மூன்றாவதையும் பெத்திருக்கலாம் என்று கதைப்பதுண்டு.

  இது எங்களின் இன்றைய தனிமை.


  குழந்தை மீது விருப்பம் வரும்போது தாயானவள் ,அனைத்தையும் மறந்து விடுகிறாள்.

  இந்தப் புலம்பெயர் வாழ்க்கையில் ஒவ்வொரு தந்தையும் தாயுமானவர் தான்.

  இவை எல்லாமே அனுபங்கள் தந்த பாடங்கள்.

  கௌசியின் அனுபவங்களே இன்று பனிக்குடமாக  நல்ல இலக்கியமாக எங்கள் முன் விரிந்து கிடக்கிறது.

  ஒவ்வொரு வரியும்  ,ஒவ்வொரு வலியும் இன்பத்தைத் தருகிறது.

  அனுபவத்தின் சுவடுகளாக நாங்கள் அம்மாவின் வயிற்றில் இப்படித்தான் வாழ்ந்தோம் என்பதை ஞாபகப் படுத்துகின்றன.

  நேற்றைய தினம் நண்பன் ஒருவன் வாட்சாப்பில் செய்தி ஒன்று அனுப்பியிருந்தான்.தாயை அறியாத பிள்ளை ஒருவன் தாயின் படத்தை வரைந்து அந்தத் தாயின் வயிற்றில் அவன் போய் சுருண்டு படுத்திருந்தான்.

  அந்த அளவிற்கு தாய்மையை, அவன் இழந்து தவிக்கிறான்.அதற்காக ஏங்குகிறான்.


  நீங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ள முதுமையைப் பற்றிச் சொல்லுங்கோ என கௌசி எனக்குக் கட்டளை இட்டிருக்கிறா.


  "வாழ்க்கையின் கட்டங்கள் தோறும்,வாழ்ந்து பெற்ற பட்டங்களே முதுமை" என்கிறார் கௌசி.

  இந்தச் சான்றிதழ் பெறாமலே சாகத் துணிந்தவர்களும்,வாழ்க்கையை இழந்தவர்களும்,வாழ்க்கைப் பரீட்சையில் பெறாத பட்டம் முதுமை.


  இதுவும் அவரது கருத்தே.

  இன்னும் சில கவிதைகள் முதுமைக்காக எழுதியிருக்கிறார்.

  எல்லாம் முதுமைக்கான வரையறைகள்.

  "அம்மாவின் பார்வைக்குள் ஆத்மா அடங்கிவிடும்.

  பார்வையிலே பாடம் நடத்தி

  பக்குவப் பண்புகளைப் புரிய வைக்கும்-அப்

  பார்வைக்குள் சக்தியைப் புதைத்து வைத்த

  புண்ணிய ஆத்மாவைப் போற்ற வேண்டிய

  காலம் தாயின் முதுமைக்காலம்."

  என்று இந்தக் கவிதை முடிகிறது.  


  ஒவ்வொருவரும் முதுமைக் காலத்தில் நாம் போற்றவேண்டிய தாய்க்குரிய கடமைகளைச் செய்ய வேண்டிய அவசியத்தைச் சொல்கிறது இந்தக் கவிதை.


  "பஞ்சு மெத்தையின் தன்மை தெரியாதவர்களே

  அம்மாவைக் கட்டி அணைத்துக் கொள்ளுங்கள்.

  நறுமணத்தை அறிய அம்மாவின்

  கன்னத்தில் முத்தமிடுங்கள்

  அம்மாவிடம் உள்ள அற்புத சக்தியால்

  மதி மயங்கிப் போவீர்கள்"

  தாய்மீது அன்பு வைத்திருக்கும் ஒவ்வொரு குழந்தையும் அறிந்து வைத்திருக்கும் செய்தி.


  "தன்னந் தனிமையிலே உடல் தள்ளாடும் வயதினிலே உங்கள் புன்னகையைப் பார்த்திருக்கும் மனம் போதாதோ எந்தனுக்கு


  நான் வணங்கும் தெய்வமெலாம்

  உங்கள் நல்ல குணம் அறியாரோ

  கோவிலுக்குக் கொடுத்ததெலாம்

  நன்மை கொண்டு வரமாட்டாதோ

  மூச்சிருக்கும் காலம் வரை 

  உங்கள் முகம் பார்த்து

  நானிருப்பேன்

  காத்து நின்று போகும் என்றால்

  உங்கள் காலடியில்  உயிர் கொடுப்பேன்.


  கடைசி காலத்தில் மனைவி பாடுவதைப் போல் அமைந்தது இந்தப் பாடல்.

  காமத்தை மறந்து எவன் உண்மையான அன்பு வைக்கிறானோ

  அவனே முதுமையை நேசிக்கிறான்.

  என்பதை நானும் அறிகிறேன்.


  தாயின் கைக்கும் உடலுக்கும் இடையில் 

  முகம் புதைத்துத் தூங்கும் இடமே

  இரவுப் பஞ்சணை

  கட்டியணைத்தேன் அம்மா

  உன் இதயத் துடிப்பு

  என் இதயத்தில் மத்தளம்

  கொட்டுவதேன்

  ஒரு வேளை உன் கருவறை

  கற்றுத்தந்த பாடமாக இருக்குமோ


  எனக்கு இறக்கை தந்த தேவதையே -உங்கள்

  விரிக்கத்துடிக்கும் இறகுகளை

  எனக்காக சுருக்கிக் கொள்ளுங்கள்

  என் பாதைக்கு இன்னும்

  வெளிச்சம் போதவில்லை.


  அன்று படுக்கையை நனைத்தேன்

  நீ இன்று படுக்கையை நனைக்கிறாய்

  தடக்கித் தடக்கி விழுந்தேன்

  தாவித் தாவி எனைப்பிடித்தாய்

  இன்று தடுமாறும் கால்களுக்கு தாங்கிப்பிடிக்க

  கைத்தடியாய் நான் வேணும்.


  சிறப்பான வரிகள்.

  கௌசியின் கவிதைகள் 

  இதயத்தை வருடிச் செல்கின்றன

  அம்மாவின்

  அன்பு இதயத்தை அழைத்து வருகிறது.

  நானும் நனைத்தேன்

  கண்களின் நீராலே

  அம்மாவின் நினைவுதான் எப்போதும்

  வருகிறது.


  பனிக்குடம்  எங்களின்

  பணிக்குடம்.

  சிறப்புறும் ஆக்கங்கள் கௌசியால் இன்னும் வெளிவரவேண்டும்.இவ்வேளை

  அனைவரும் சேர்ந்து வாழ்த்துவோம்.

   நன்றி

  எழுத்தாளர், கவிஞர் பொன்னையா புத்திசிகாமணி

  ஜெர்மனி  

  -------------------------------------------------------

  ஏற்புரை 

  இந்த நிகழ்வில் உரையாற்றியவர்கள் அனைவருக்கும் உடனேயே நன்றி தெரிவித்து விட்டேன். ஒவ்வொருவருக்கும் ஏற்பு தெரிவித்து விட்டேன். இருந்தாலும் இப்போது ஓட்டு மொத்தமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். என்னுடைய இந்த உரையிலே சிலருக்கு நன்றி சொல்ல வேண்டிய கடமை இருக்கின்றது. இன்னும் சில விடயங்கள் பேச வேண்டி இருக்கின்றது. அதனையே இவ்வுரையிலே பேசலாம் என்று இருக்கின்றேன்.

  என்னுடைய மூளைக்குள் இருந்து சிதறிய சிதறல்கள் இந்தப் பனிக்குடத்துக்குள் விழுந்து காலம் அறிந்து பிரசவமாகும் போது அதைக் கையில் ஏந்துபவர்கள் எப்படி மகிழ்ந்து அணைப்பார்கள் என்பதைக் காணும் ஆசை ஒவ்வொரு நூலாசிரியர்களுக்கும் இருப்பதுபோல் எனக்கும் இருந்தது. அதிலும் நான் இந்த நூலை எழுதிவிட்டு இதற்கான அங்கீகாரம் எனக்கு எப்படிக் கிடைக்கப் போகின்றது என்பதுதான் எனக்கு பெரிய கேள்வியாக இருந்தது. அதுவும் இது என்னுடைய முதல் முயற்சியும் புது முயற்சியும். முதலில் என்னுடைய பல்கலைக் கழகத் தோழன் சிவலிங்கம் ராஜேந்திரனிடம் அனுப்பினேன். அவர் ஒரு புத்தகப் பிரியன்.  பல நிறுவனங்கள் பரிசுத் தேர்வுக்காக இவரிடம் புத்தகங்கள் அனுப்புவார்கள். விரல் நுனியில் புத்தகப் பக்கங்களை வைத்திருப்பவர். எந்தப் புத்தகம் என்றாலும் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறானது அவருடைய நூலகம். அவர் பெரிய சந்தோஷப்பட்டார். இந்த நூலுக்குரிய பெயரை வைத்தார்.  இந்தப் பெயர் சிறப்பாகப் பலரைக் கவர்ந்திருக்கின்றது. இந்தப் புத்தகத்தின் வெற்றிக்கு இந்தப் பெயரும் காரணம். அவர் என்ன காரணம் கூறினார் என்றால், இந்த உலகத்திலே யாராலும் rejekt பண்ண முடியாத ஒரு உறவு இருக்கின்றது என்றால் அது அம்மா பிள்ளை உறவுதான். அந்த அம்மாக்கும் பிள்ளைக்கும் இருந்த முதல் உறவு பனிக்குடத்திலேதான் ஆரம்பமாகின்றது. அதனாலேயே இந்தப் பெயர் வைப்போம் என்றார். நானும் யோசித்தேன். பெண் இந்தப் புத்தகம் முழுவதிலும் ஆட்சி செய்கின்றாள். தாயாக இளம் பெண்ணாக மூதாட்டியாகப் பருவம் எடுக்கின்றாள் அதன் முதல் அத்திவாரம் போடப்படுகின்ற இடம் பனிக்குடம். அதனால் இந்த நூலுக்கு இந்தப் பெயர்தான் பொருத்தம் என்று நினைத்தேன். அடுத்து இந்த நூலை நான் எழுதியதன் பின் இந்த நூல் பற்றிய அபிப்பிராயம் அறிவதற்காக டாக்டர் அகன் ஐயாவிடம் அனுப்பி வைத்தேன். அவரும் வாசித்த பின் இந்த புத்தகத்தை உலகப் பெண் கவிஞர்கள் பேரவை ஒரு துளிக்கவிதை அமைப்பினால் வெளியீடு செய்வோம் அம்மா என்று சொன்னார். அப்போது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி பெண்ணைப் பற்றிய புத்தகம் உலகப் பெண் கவிஞர்கள் பேரவை ஒரு துளிக்கவிதை அமைப்பினால் வெளியீடு செய்வது மகிழ்ச்சியைத் தந்தது. அத்துடன் அகன் ஐயா என்னுடைய புத்தகத்தை பிடிஎப் இல் கேட்டு பெற்றே முழுவதுமாக வாசித்துப் பின் அட்டையில் எழுதித் தந்திருந்தார். 

  பின் இந்தப் புத்தக வடிவம் பெற்று புத்தகத்தை அட்லாண்டாவில் கொண்டு சென்று வெளியீடு செய்வதற்காக ஆயத்தங்களை செய்து டாக்டர் அகன் ஐயா அவர்கள் அட்லாண்டாவில் வெளியீடு செய்தார். பெண்மையை கொண்டாடுவோம் என்று இந்தப் பெண்களுக்காக முற்று முழுதாக செயற்படுகின்ற அவருடைய செயல்பாட்டிலே இன்று உலகப் பெண் கவிஞர் பேரவை இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஈரோடு தமிழன்பனின் மகனாக அவர் மூச்சாக தொழிற்படுகிறார். அவருக்கு இந்த இடத்திலே நான் நன்றி சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கின்றேன். அதன்பின் இந்த நூல் எழுதுவதற்கு அணிந்துரை தந்தவர். என்னுடைய உடன்பிறவா சகோதரன் இந்தோனேசியாவில் இருக்கும் கவிக்கிறுக்கான முத்துமணி அண்ணா அவர்கள். இன்று இந்தியா பயணம் செல்வதால் அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அவருக்கும் மிக்க நன்றி. 

  அடுத்ததாக இதற்கு எழுதுவதற்கு மெய்யன் நடராஜா என்பவரை அகன் ஐயா அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார் மிகச் சிறப்பாக புத்தகத்தில் இருக்கின்ற அத்தனை விடயங்களையும் அழகாக உள்வாங்கி ஆய்வுரை எழுதித்தந்த மெய்யன் நடராஜா அவர்களுக்கு மிக்க நன்றி அணிந்துரையையும் ஆய்வுரையையும் பார்த்தபின் எனக்கு மனதுக்குள்ளே ஒரு உற்சாகம் ஏற்பட்டது அதன் பின் புத்தகம் வெளியானது இந்த புத்தகத்தின் சிறப்பு கட்டாரில் இருந்து தான் ஆய்வுரையும் வந்தது கட்டாரில் இருந்துதான் புத்தகத்திற்கான முன்னெட்டை படமும் வந்தது

  அடுத்து நூலாக்கியவுடன் அதுதான் அகளங்கன் ஐயாவிடமும் காப்பியக்கோ ஐயாவிடமும் எனக்கு ஏசக்கூடாது என்று கேட்டுத்தான் அனுப்பினேன். யாரிடம் நாம் பாராட்டுக்கள் பெறுகின்றோம் என்பதை பொறுத்து தான் எம்முடைய தராதரம் கவனிக்கப்படும். அவர்கள் இருவரும் மரபுக் கவிதை வல்லவர்கள். அங்கிருந்தும் அங்கீகாரம் கிடைத்தது. சுவாமி வாரம் கொடுத்ததான் பின் வேறு என்ன இருக்கிறது. .  நான் எழுதியதோ புதுக்கவிதை இந்த இருவரும் சிறந்த விமர்சனம் எனக்குத் தந்து தட்டிக் கொடுத்து அந்த புத்தகத்தை சிறப்பாக பிறர் மத்தியில் பார்வைக்கு விட்டிருக்கின்றார்கள் அந்த வகையில் இருவருக்கும் மிக்க நன்றி. 

  பெண்ணின் பருவங்கள் அதில் ஏற்படும் உணர்வுகள் எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய வரிகளாக இவை இருக்க வேண்டும் என்று விரும்பினேன் அதில் வெற்றியும் கண்டேன்.

   அடுத்ததாக இந்த நூலை இளையவர்களுக்குக் கொண்டு சேர்த்த பெருமை கவிஞர் அரவிந்தையே  சாரும், அவர் போட்ட ஒரு பதிவின் மூலம் பலரின் கவன ஈர்ப்பை இந்த நூல் பெற்றது. இந்தியாவில் இருப்பவர்களுக்கு அனுப்புவதற்காக பூங்குழலியிடம் இந்தியாவில் புத்தகங்கள் கொடுத்திருந்தேன் அரவிந்த் அறிமுகம் செய்து நொடியிலிருந்து பூங்குழலிக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கள் ஏராளம் பூங்குழலி கேட்டார் என்ன கௌசி என்னை இப்படிப் படுத்திராங்களே என்று. அரவிந்துக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரை கவர்ந்த அந்த நூலுக்கு இவரை கவர்ந்த ரசிகர்கள் போட்டா போட்டி போட்டு வாங்கினார்கள் இந்த வகையில் இந்த நூல் இந்த அளவு விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வெளி வருகின்றது என்றால் அதற்குக் காரணம் அரவிந்த் என்பதும்  வெளிப்படையான உண்மை அந்த அரவிந்துக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கின்றேன். 

  அடுத்து முக்கிய காரணம் நூலின் மேலட்டைப் படம். அதனையும் அரவிந்த் தான் வரைந்தார். இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் யாருமே இந்தப் புத்தகத்தை தூக்கக்காமல் விட மாட்டார்கள். மெய் எழுத்துக்களில் வைக்கப்பட்டிருக்கும் புள்ளிகள் அதற்குள் நீந்துகின்ற குழந்தை அற்புதமாக இருக்கின்றது. அவருக்கு மிக்க நன்றி. இவர்  சாதாரண கவிஞர் மட்டுமல்ல சிறந்த ஒரு கலைஞன் அவருடைய படங்கள் தான் முதலில் என்னை கவர்ந்தன.  அதன் பின் தான் அவருடைய கவிதை என்னைக் கவர்ந்தன. அந்த கவிதைகளுக்குள் சில கவிதைகள் விசமாக இருக்கும் சில கவிதைகள் அழகியலுடன் இருக்கும் சில கவிதைகள் உள்ளத்துக்குள் ஒரு நெருடலை ஏற்படுத்தும் உள்ளத்துக்குள் ஒரு உணர்வு போராட்டத்தை தரும் இவ்வாறு பல விதமான உள்ளத்து உணர்ச்சிகளை கவிதை ஆக்கித் தரவல்லவர். அரவிந்த் உங்களுடைய நூல்கள் ஏதாவது வெளியிடுவதாக இருந்தால் அதற்கு வேண்டிய உதவிகளையும் நான் உங்களுக்கு செய்வேன்.

  இங்கு அமர்ந்திருக்கின்ற என்னுடைய நூலை விமர்சனம் செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மகிழ்ச்சியை அன்பை தெரிவித்துக் கொள்கின்றேன். 

  னிக்குடம் என்ற நூல் நான் எப்படி எழுதினேன் என்று என்னால் சொல்ல முடியாது. ன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது உண்மையில் இந்த நூல் எழுதுவதற்கு ந்தவித பெரிய பிராயத்தனங்களும் நான் எடுக்கவில்லை. தானாக தோன்றிய நினைவுகளும். தானாகவே மூளையில் இருந்து விரல்களுக்கு கொட்டிய வரிகள் தான் இந்த நூலாக வடிவெடுத்திருக்கின்றது. நான் demenzia நோயாளிகளுடன் வேலை சேகட காரணத்தால் முதுமை எப்படி இருக்கும் என்பதை உணரக்கூடியதாக இருந்தது.

  நாவல் சிறுகதை கட்டுரை தொகுப்புகள் வெளியிட்டு விட்டேன் ஒரு கவிதை நூல் வெளியிட வேண்டும் என்று நான் நினைத்தேன் அந்த கவிதையில் தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய பேரவா ஆனாலும் தந்தை இல்லாமல் எப்படி ஒரு உயிர் இந்த உலகத்தில் பிறக்க முடியும் எனவே தந்தைக்காக இந்த புத்தகத்தை சமர்ப்பணம் செய்தேன். என் உதிரத்திலேயே ஓடுகின்ற இரத்தத்தில் என் தந்தையின் சமூக பற்றும் என் தாயின் அறிவு தேடலும் கலந்து இருக்கின்றது.

  பிழைகள் இருக்கின்றதா என்று அறிய வேண்டியது அவசியம் அந்த வகையில் கலாநிதி ஜீவகுமாரன் அவர்களிடம் இந்த புத்தகத்தை அனுப்பி இருந்தேன் அவரும் உடனே வாசித்து இந்த புத்தகத்தில் இருக்கின்ற தவறுகள் எழுத்து பிழைகள் பெரிதாக எந்த எழுத்துப் பிழைகள் இல்லாமல் விட்டாலும் ஓரிரு பிழைகளை அவர் சுட்டிக் காட்டினார். அவருக்கும் மிக்க நன்றி.

  புத்தகம் வெளியிடப்பட்டதுடன் அந்தப் புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கி யார் யாருக்கு எங்கே எல்லாம் அனுப்ப வேண்டுமோ அவற்றையெல்லாம் இந்தியாவில் இருந்து பிரித்து அனுப்புவதற்கு ஆவண செய்தவர் குருஜி கோபால்ஜி அவர்கள். அவருடைய பணிப்பின் பேரில் இறையாசிரியர் சசிக்குமார் அவர்கள் புத்தகத்தை தன்னுடைய செலவிலே வாங்கி அதை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் எனக்கும் பிரித்து அனுப்பி வைத்தார். அந்த நேரத்திலே மழை தன்னுடைய வேலைப்பளு அத்தனையையும் பொருட்படுத்தாமல் அந்த நூலை என்னிடம் அவர் கொண்டு வந்து சேர்த்தார். அவருக்கும் மிக்க நன்றி.

   பூங்குழலி தன்னிடம் இருந்த புத்தகங்களை  யார் யாருக்கு சேர்க்க வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் அனுப்பி வைத்தார். இதேபோல மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் இந்நூலை வெளியீடு செய்து வைத்து அங்கு சென்று எனக்காக ஏற்புரை தந்து அனைத்துக் கடமைகளையும் செய்தார். பூங்குழலியை பற்றி நான் சொல்ல தேவையில்லை என்று என்னுடன் தொடர்பு ஏற்படுத்தினாரோ அன்றிலிருந்து இன்று வரை பூங்குழலி என்னுடைய சிறந்த ஒரு தோழியாக இலக்கியத் தோழியாக என்னுடன் பயணம் செய்கின்ற அவருக்கு மிக்க நன்றி. 

  அதேபோல் இலங்கையில் ஜீவலிங்கம். ஜீவலிங்கம் என்னுடைய முதலாவது புத்தகத்தை தவிர என்னுடைய எல்லா புத்தகங்களுக்கும் அவருடைய கைபடாமல் இலங்கையிலே யாரிடமும் போய்ச் சேர்வதில்லை அந்த அளவுக்கு எனக்கு அவருடைய உதவி இருக்கின்றது. ஏன் நான் புத்தகம் என்று சொல்லுகின்றேன் பொதுவாக எல்லா விடயங்களும் என்னுடைய ஒரு சகோதரன் எப்படி எனக்கு உதவி செய்வாரோ அங்கே இருந்து அதே போல எல்லாவிதமான உதவிகளையும் செய்கின்ற ஜீவலிங்கம் என் வாழ்க்கையிலே என்றும் மறக்க முடியாத ஒரு இடத்தில் இருக்கின்ற ஒரு என்னுடைய அன்பு சகோதரனாக அவர் விளங்குகின்றார். அவருக்கும் மிக்க நன்றி 

  அகளங்கள் அய்யாவிடம் இன்று நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குங்கள் என்று சொன்னவுடன் உடனே ஓம் என்று சொல்லிவிட்டார் நான் உச்சியிலே வைத்துக் கொண்டாடிய ஒருவர், அவர் இன்று என்னுடைய நூல் வாசித்து அதற்கு சிறந்த விமர்சனம் தந்து அதற்கு தலைமை உரையாற்றியது எனக்கு பேரின்பம் என்றுதான் சொல்ல வேண்டும். மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி. அதைப்போல் கப்பியக்கோ JInna sherifudeen ஐயா அவர்களும் பெருக்கத்து வேண்டும் பணிவு என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு அவர் ஒரு மேதை மகாமேதை அவர் பாராட்டும் எனக்குச் சிறப்புத்தான். 

  அடுத்து எல்லோரும் அந்த விமர்சனத்தை அழகாக இந்த இடத்தில் எடுத்துக் காட்டி இருக்கிறார்கள் என் உள்ளத்துக்குள்ளே ஒரு பெருமைதான் சாதாரணமாக பயந்து பயந்து நான் எழுதிய நூல் பலருடைய பாராட்டைப் பெறுகின்ற போது உண்மையில் மகிழ்ச்சியை நான் பெற்றுக் கொள்கின்றேன். என்ன மனதிலே ஒரு பெரிய குறை நான் இந்த இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணமான இருவரும் இன்று இந்த உலகத்தில் இல்லை. என்னுடைய பதவிகளுக்கெல்லாம் பெருமைப்பட்ட என்னுடைய தந்தை இன்று இல்லை. நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மனதுக்குள் பதியம் போட்ட என்னுடைய தாய் இங்கு இல்லை. என் ஆயுள் வரை என் எண்ணங்கள் உன்னைச் சுற்றியிருக்கும் ஓசோன் படையாகவேயிருக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன் என்று சொன்ன அம்மா 58 வயதிலேயே உலகத்தை விட்டுப் போய் விட்டார். ஏதோ பாவம் செய்தவர்களுக்குத் தான் இந்த இழப்பு வரும். இது வாழ்க்கை முழுவதும் தீராத குறையாக எனக்கு இருக்கின்றது.

  இந்த மூன்று வருடம் தமிழ் வானவை நிகழ்ச்சியிலே என்னுடைய ஒரு நூல் முதன்முதலாக இன்று தான் வெளியீடு செய்யப்படுகின்றது அதுவும் ஒரு வித மகிழ்ச்சியை தான் தருகின்றது. அதற்கு நான் கேட்டவுடன் மறுப்புத் தெரிவிக்காது ஆம் என்று ஒருங்கமைப்புச் செய்த ஜெர்மனி தமிழ்  ஊடகவியலாளர் காந்தகுரலோன் முல்லை மோகன் அவர்களுக்கும் நன்றி கூறி  இனி வரும் நூல்கள் அத்தனையும் தமிழ் வானவை வெளியிடாக தான் நான் செய்வேன் என்று கூறி உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன். அனைத்துக்கும் மிக்க நன்றி 

   

  கருத்துகள் இல்லை:

  கருத்துரையிடுக

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள் நூல்

  "தூங்கி எழுந்தால் பூமி உனக்குப் படுக்கை ஆகிறது. எழுந்து நடந்தால் அதுவே உனக்குப் பாதையாகிறது" - டாக்டர் அப்துல் கலாம்   எவரும...