மருத்துவமனைக் கட்டிலில் உறவுகள்; சுற்றவர நிற்கின்றனர். உழைப்பு உழைப்பு என்று பம்பரமாய்ச் சுற்றி வந்த கால்கள் படுக்கையில் விழுந்து நான்கு மாதங்களாகிவிட்டன. 56 வயதான பிரேம் ஒட்சிசன் வயருக்குள் அடிமையாகி விட்டான். புகைக்கும் மதுவுக்கும் அடிமையானவர்கள் மத்தியில் செயற்கை ஒட்சிசனுக்கு அவனுடைய மூளை அடிமையாகிவிட்டது. சிறிது சிறிதாகத் தொடங்கிய வியாதி ஒவ்வொரு உறுப்புகளுக்குள்ளும் பாதிப்பைத் தந்து கொண்டிருக்கின்றது. உடலிலே இதுதான் முக்கிய உறுப்பு என்று இருக்கிறதா? ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுக்கு முக்கியமாகப்படுகிறது. உறுப்புக்களை ஒன்றாய்ச் சேர்த்து இயங்க வைக்க ஒட்சிசன் என்னும் முக்கிய காரணி போதுமான அளவில் இருக்க வேண்டுமே.
பிரேம் அருகே அவனுடைய கட்டிலின் அருகாமையில் அமர்ந்திருக்கிறாள் சுருதி. வீட்டுக் கூரையில் மழை ஓய்ந்து துளி துளியாகக் கொட்டுவதுபோல் சுருதி கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுகின்து.
"அழுது அழுது நீயும் உடம்பைக் கெடுக்கப் போகின்றாயா? ஆவதைப் பார். நானில்லாத உலகத்தில் வாழப் பழகிக் கொள்'' பிரேமுடைய வார்த்தைகள் கேட்ட மாத்திரத்தில் சுருதி மனத்தை யாரோ பிய்த்து எடுப்பதுபோல் உணர்கின்றாள்.
அன்று அவள் வேலை நிமித்தம் வேறு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இந்தது. 3 நாட்கள் கருத்தரங்கு. விடுதியில் தங்க வேண்டும். பிரேமிடமிருந்து தன்னைப் பிய்த்துக் கொண்டு போக வேண்டிய சூழ்நிலை. அன்றும் பிரேம் சொன்னான்.
"நானில்லாத உலகத்தில் வாழப் பழகிக் கொள்'' அப்போது அவன் வாயைத் தன்னுடைய கைகளால் பொத்தினாள். ஷஷஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும். வாயில் இருந்து வருகின்ற சொற்களுக்கு எவ்வளவு வலிமை இருக்கின்றது என்று தெரியுமா? இப்பிடிச் சொன்னால் நான் போக மாட்டேன்|| என்று சொல்லி அவள் ஆர்ப்பாட்டம் பண்ணியதை இன்று நினைத்துப் பார்க்கிறாள்.
இருவருடைய வாழ்க்கையிலே தம்முடைய அன்பைக் கூறுபோட ஒரு குழந்தை என்னும் பந்தம்கூட இருந்ததில்லை. பணத்தோடு பண்பும் பரிவும் அன்பும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்ளும் வகையிலே சிறப்பாகவே கிடைத்திருந்தது. இந்த நாட்டில் இருவருக்கும் உறவினருக்குத்தான் பஞ்சம் நட்புக்குக் குறைவேயில்லை. உனக்கு நான் எனக்கு நீ என்னும் அற்புத பந்தத்தை இந்த உறவு கொடுத்தது. பூமிக்குள் விழுந்துவிட்டால் என்றோ ஒரு நாள் வெளியே வரத்தானே வேண்டும். ஆளுக்காள் தேதியில் மாற்றம் இருக்கும். ஆனால் அனைவரும் பூமிக்கு விடை கொடுக்க வேண்டியவர்களே. கைகளில் தாங்கிய சுருதியை டப்பென்று கீழே போடுவது என்றால், இலகுவான காரியமா? ஆனால், அவளை அவன் போட்டுத்தான் ஆக வேண்டும்.
நீண்ட நாளைக்கு இந்த செயற்கைச் சுவாசம் கொடுக்க முடியாது சுருதி. செயற்கை சுவாசத்தை அகற்றுவதற்கு உங்களுடைய ஒப்பிதல் தேவை. உறவினர்களுக்கு சொல்லி அனுப்புங்கள் என்று வைத்திய சாலையில் சொல்லிவிட்டார்கள். அவருடைய உறுப்புக்கள் விடைபெறத் துடிப்பதையும் அவை அழுகின்ற காட்சியையும் மருத்துவர்கள் அவதானிக்கின்றார்கள் போலும். சுவிஸ், கனடா, இங்கிலாந்து, பரிஸ், இலங்கை, ஜெர்மனி என்று எல்லோரும் வந்தாயிற்று. அண்ணன்மார், தங்கை, மாமன் என்று சுற்றி வர கண்ணீர் மல்க நிற்கின்றனர்.
பியாற்றா மட்டுமே அங்கு பம்பரமாய்ச் சுழலுகின்றாள். அவளுடைய கண்களும் பனித்துப் போய்த்தான் இருக்கின்றன. இருவருக்கும் உறவில்லாச் சொந்தமாக இருந்தவள் அவள்தான். நாள்தோறும் வீட்டுக்கு வந்து அனைத்து பணிவிடைகளும் பார்க்கின்ற போலந்து இனத்தவள். வீட்டிற்கு வேலைக்காரி. ஆனால் இருவருக்கும் அன்புத் தோழி. அவளுடைய வேலை முடித்து வீட்டிற்குப் போகும் முன்பு பிரேம், சுருதி இருவரும் வேலைத் தளத்திலிருந்து வீட்டுக்கு வந்துவிடுவார்கள். மூவரும் ஒன்றாக அமர்ந்திருந்து பலதும் பத்தும் பேசிக் கொண்டே காபி அருந்துவார்கள். அன்பும் பணமும் ஒரு இடத்தில் கிடைப்பதாக இருந்தால், யார்தான் மனத்தை தாரை வார்க்காமல் இருப்பார்கள். பியாற்றா தயாரித்து வைத்த இரவுணவை இருவரும் உண்பார்கள். ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே அவளுக்கு தன்னுடைய வீட்டில் நிற்பதற்காக விடுமுறை கொடுத்திருந்தார்கள். சனிக்கிழமை சுருதியும் பியாற்றாவும் சேர்ந்து இலங்கை உணவு சமைத்து உண்பார்கள்.
இத்தனை உறவுகள் பிரேமுக்கும் சுருதிக்கும் இருப்பதை இன்று தான் பியாற்றா காணுகின்றாள். கடைசி காலத்தில்தான் உறவுகள் வரும் என்பது புலம்பெயர்ந்த மக்களுக்கு ஒன்றும் புதிய வாசகம் இல்லை. இன்றாவது புலனம் உறவைத் தக்க வைத்துக் கொள்ளத் துணையாக இருக்கிறது. எல்லோருக்கும் காபி பரிமாறுகிறாள்.
ஆனால், சுருதி உணவு உண்டு மூன்று நாட்களாகி விட்டது. வாயில் நீர் படுவதற்கு பியாற்றாவே வர வேண்டும். மரத்துப் போன அவள் உணர்வுகளுக்கு ஆதரவு நீரும் அவளே பாய்ச்ச வேண்டும். காபியைக் கையில் கொடுத்துவிட்டு அருகே அமருகின்றாள்.
பியற்றா! என்று அழைக்கும் பிரேமை நிமிர்ந்து பியாற்றா பார்க்கிறாள்.
"நீ சுருதியுடன் எப்போதும் கூட இருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பியாற்றா இருப்பியா.. .. .. ?
என்று பிரேம் கேட்ட போது அவனுடைய கைகளைப் பிடித்து மௌனமாய் கலங்குகின்றாள்.
திடீரென்று நீண்ட காலத்தின் பின் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து போன சுருதியினுடைய அண்ணன் குடும்பம் உள்ளே நுழைகின்றார்கள்.
"என்ன இது சுருதி! வராதவர்கள் எல்லாம் வருகிறார்கள். ஒட்சிசன் வயரை எனக்குக் கழட்டிவிடப் போகிறார்களோ? என்று பிரேம் கேட்ட போது
"அவர்கள் உங்களைப் பார்க்க வரவேண்டும் என்று சொன்னார்கள் அதுதான் வரச் சொன்னேன்'' என்று சுருதி சமாளித்தாள்.
"பார் சுருதி எங்களுக்கு எவ்வளவு சொந்தக்காரர்கள். இவ்வளவு பேர் இருந்தும் நாங்கள் தனிமையாகத்தானே இருந்திருக்கிறோம். நீ எத்தனை தடவை சொல்லியிருக்கிறாய். யாரை நம்பி இந்தப்பூமியில் பிறந்தோம். வாழ்ந்து காட்டவில்லையா? என்று அதுபோலத்தான் நீ நல்லா இருப்பாய். உனக்குத் தைரியத்தை நிறையவே நான் தந்திருக்கிறேன்.
அருகே வந்தவர்கள் பிரேமுடைய கைகளைப் பிடித்து எப்படி இருக்கிறீர்கள்? என்று கேடட போது.
"பார்க்கிறீர்கள் தானே ஏதோ உயிரோடு இருக்கிறேன். மருத்துவம் என்னை உயிரோடு வைத்திருக்கிறது'' என்கிறான்.
சுருதிக்கு 35 வயதாக இருக்கும் போது அறுவைச் சிகிச்சை மூலம் அவளுடைய கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது பல விடயங்களை நினைத்து அவள் கலங்கிப் போகிறாள். அப்போது அவன் கூறிய வார்த்தைகள் அவளுக்கு ஆறுதல் அளித்தன.
"எப்படி சுருதி இருக்கிறாய்? என்று பிரேம் கேட்ட போது ஏதோ உயிரோடு இருக்கிறேன். என்று அவள் சொன்ன போது
"அதுபோதாதா சுருதி. கருப்பை பிள்ளை உருவாக்கும் ஒரு இயந்திரம். அவ்வளவுதான். எனக்குத்தான் நீ நல்ல பிள்ளையாக இருக்கிறாயே. வேலையால் வந்தால் என்ன வாங்கி வந்தீர்கள் என்று கேட்கிறாய்? சிலவேளை அடம்பிடிக்கிறாய். அங்கே இங்கே கூட்டிப் போகச் சொல்லி கரைச்சல் தருகிறாய். என்று பிரேம் சொல்ல. அது இல்லை உங்களுக்கு வாரிசு .. .. .. என்று அவள் வாயெடுத்த போது
"கொஞ்சம் வாயை வைத்துக் கொண்டு இருக்கிறீயா? நாம் இருக்கும் வரைதான் அதெல்லாம். நாம் போய்விட்டால் இந்த உலகத்தில் நாம் ஒரு கழித்தல் கணக்கு. இதெல்லாம் உலகத்தில இருக்கும் வரைதான் போனாப்பிறகு ஒன்றுமே இல்லை. உடம்பு ஒரு கூடு. உயிர் எங்கேயோ எதுவாகவோ யாராகவோ.. .. .. இதெல்லாம் என்னிடம் சொல்லாதே. தைரியமாக குணமாகி வீட்டுக்கு வா என்று ஆறுதல் கூறினான்.
இன்று அவன் கூறியது போல் அவனுடைய இடம் வெற்றிடமாகப் போகப் போகிறது. இந்த உலகக் கணக்கிலே அவன் ஒரு கழித்தல் கணக்கு. மருத்துவர் வருகிறார். பிரேமுடைய காலன் வைத்தியர் வடிவில் உள் நுழைகிறார். பிரேமைச் சுற்றியுள்ள வயர்களைப் பார்க்கிறார். இதயத் துடிப்பைக் காட்டும் இயந்திரம் ஓடிக் கொண்டிருக்கின்றது.
"ஹலோ பிரேம். வீ கேட்ஸ் எப்படி இருக்கிறாய்'' என்று கேட்டபடி அவனைத் தடவுகின்றார். இது அவனுடைய வாழ்க்கையின் கடைசிக் கட்டம். இறப்பின் நேரம் யாருக்கும் தெரிவதில்லை. தெரியாமல் இருப்பதுதான் சிறப்பு. தெரிந்துவிட்டால் உலகத்தை விட்டுப் போக யாருமே விரும்ப மாட்டார்கள். புரியாத கவலை, தவிப்பு, ஏக்கம் எல்லாம் கூடவே வரும். பிரேம் விடயத்தில் பிறருக்கு இறுதி நாள் நிச்சயமாகத் தெரிந்து விட்டது. ஆனால் நேரம் தான் தெரியவில்லை.
சுருதி மனதுக்குள் வேண்டாத தெய்வங்கள் எல்லாவற்றையும் இன்று வேண்டுகின்றாள். அதிசயம் நடக்காதா? மிராக்கில் என்று டொக்டர் சொல்ல மாட்டாரா என்ற தவிப்பு. இதே தவிப்பு பியாற்றாவிடமும் இருந்தது. ஏனென்றால், பிரேமுடைய நோய் இன்ப துன்பங்களுக்கும் நெருக்கமாக இருந்த உறவுகள் இவர்கள் இருவரும்தானே. டொக்டர் உள்ளே வந்ததில் இருந்து நெஞ்சுக்குள்ளே ஒரு பாறாங்கல்லால் அழுத்துவது போல ஒரு உணர்வு. இவ்வளவுதானா வாழ்க்கை! இதற்குத்தானா இத்தனை காலம் இவருடைய வாழ்க்கை எனக்குச் சொர்க்கத்தைக் காட்டிவிட்டுப் போகின்றது! இவரில்லாமல் எப்படி நான் வாழப் போகின்றேன்.
சுருதியின் மனதிலும் ஒருவித வெறுமை.
மருத்துவர் சுருதியைத் திரும்பிப் பார்க்கிறார். ருற் மியர் லைட் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்றபடி பிரேம் அறியாதபடி வயரைக் கழட்டுகின்றார். தன்னுடைய ஒரு நோயாளிக்கு நிரந்தர உறக்கத்தைக் கொடுத்து அவருடைய உயிரின் வலிக்கு விடுதலை கொடுத்த பெருமூச்சுடன் வெளியேறுகின்றார். இவை வைத்தியர் பணியின் கசப்பான பக்கங்கள். ஒருவிதத்தில் இதுவும் ஒரு கொலையாகவே இநதச் சமூகம் பார்க்கின்றது. அதனாலேயே கருணைக் கொலை என்று அற்புதமான பெயரில் கருணையைச் சேர்த்திருக்கின்றது.
சுருதி கண்ணீரைத் தடுக்கத் தடுக்கப் பார்க்கின்றாள். அவள் கண்கள் அவளை மீறி கொந்தளிக்கின்றன. விழிநீர் தாரைதாரையாக வழிகின்றது.
சுருதியைப் பார்த்த பிரேம் ஏன் இப்படி அழுகின்றாய்? தடக்கித் தடக்கி வருகின்ற வார்த்தைகளை வெளிவிட்டபடி சுற்றியுள்ள அனைவரையும் பார்க்கின்றான். பேச்சு முதலில் தடைப்படுகின்றது. யாருடைய முகத்திலும் உணர்ச்சியில்லை. ஒரு மரணத்தின் ஒவ்வொரு நொடியையும் பார்த்துக் கொண்டிருக்கின்ற கல் நெஞ்சக்காரர்களாக எல்லோரும் இயலாமையின் விளிம்பிலே நிற்கின்றார்கள்.
இமைகள் மெல்ல மெல்லத் திரையிடப்படுகின்றன. அந்தப் பார்வைக்குள் இரு உருவங்கள் மட்டுமே இறுதி வரை உச்சியிருந்து உள்ளங்கால்கள் வரை பார்க்கப்பட்டு முடிக்கப்படுகின்றன. பிரேம் கண்களை முதலில் மூடுகின்றான். இதயத் துடிப்பு மெல்ல மெல்ல அடங்குகின்றது. மூச்சு தன் பயணத்தின் விசையை மெல்ல மெல்ல இழக்கிறது. இறுதியில் நின்று விடுகின்றது. ஓ... ... என்று பெரிய சத்தத்துடன் வெடிக்கிறது சுருதியினுடைய அழுகை. அவளை இறுக்கி அணைக்கிறாள் பியாற்றா. திறந்த வாயை அடித்து மூடுகின்றாள்.
அருகே வந்து அனைவரும் இறுதி அஞ்சலியைச் செலுத்துகின்றார்கள். சுருதியை அணைத்து அனுதாபம் தெரிவிக்கின்றார்கள். பிரேமினுடைய உடலை வைத்தியசாலை தொழிலாளிகள் கட்டிலுடன் எடுத்துச் செல்கின்றார்கள்.
நடைப்பிணமான சுருதி மற்றவர்களுடன் விடைபெறுகின்றாள். ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தின் முடிவுரையைக் கண்ட கனத்த மனத்துடன் உறவுகள் புடைசூழ பியாற்றாவின் அணைப்புடன் மருத்துவமனையை விட்டு சுருதி வெளியேறுகின்றாள்.
குறித்த நாளில் ஈமக்கிரியைகள் நடந்து முடிந்தன. அயல்நாட்டிலிருந்து வந்திருந்த உறவினர்கள் விடைபெற்றனர். பிரேம் இல்லாத வாழ்க்கைக்கு அவள் ஆயத்தமாக வேண்டும். இடமும் மனமும் மாற்றம் பெற வெண்டுமென்றால் எங்காவது வேறு நாட்டுக்குப் போக வேண்டும். அருகே இருக்கும் இங்கிலாந்து சிறப்பாக இருக்கும் என்று இருவரும் முடிவு எடுத்தனர்.
மலிவான விமானச் சீட்டை இணையத்தளம் மூலம் பெற்றனர். British Airways விமானம் புறப்படத் தயாராகியது. பியற்றாவும் சுருதியும் ஒரு சூட்கேசுடனேயே பயணத்தை ஆரம்பித்தனர். விமானத்தள கெடுபிடிகள் எல்லாம் முடித்து விமானத்தினுள் ஏறி இருக்கும் போது அப்பாடா என்றிருக்கும். 1 மணித்தியாலமே ஜேர்மனியில் இருந்து இங்கிலாந்து செல்வதற்கு நேரம் எடுக்கும். ஆயினும் சிற்றூண்டிப் பரிமாற்றம் எல்லாம் சிறப்பாகக் கிடைக்கும். இருவருக்கும் அருகருகே இருக்கைகள்.
அப்பாடா என்று கண்களை மூடினாள் சுருதி. விமானம் வானத்தில் மிதந்தது. பியாற்றா விமானப்பணிப்பெண் கொடுத்த Sekt செக்ற்றை கையில் எடுத்தபடி சிந்தனையில் ஆழ்ந்து போனாள். பியாற்றா மெல்லிய நீண்ட உருவம். ஜெர்மனியரைப் போன்று எடுப்பான கத்தி மூக்கு, கண்களில் கவர்ச்சி இயற்கையாகவே படைக்கப்பட்டுள்ளது. எந்த முனிவனும் தடுமாறி விடும் அழகானது வஞ்சகமில்லாமல் அவளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. சத்தமில்லாது மெல்லிய குரலில் அவள் பேசுகின்ற போது காலை நேரப் பூங்குயிலின் பூபாளம் போல் இதமாக இருக்கும். இத்தனை அழகு அவளிடம் குடி கொண்டிருந்தாலும் ஒத்தையாய் யாருடைய துணைமின்றி போலந்து வறுமையின் காரணமாக ஜெர்மனிக்கு உழைப்புக்காகத் தஞ்சம் புகுந்தவள்தான். இப்போது சுருதி வீட்டில் முழுநேர உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைத்ததனால், அவள் பொழுது இந்த இரண்டு ஜீவன்களின் நன்மை தீமைகளுக்கு வளைந்து கொடுத்து வாழ்வதாக அமைந்து போனது.
பிறருக்காகவும் சின்ன புழு பூச்சிக்காகவும் தம்மை இழக்கின்ற வெள்ளையர்களின் நல்ல குணங்களுக்கு இந்த பியாற்றா ஒரு எடுத்துக்காட்டு. நல்ல நண்பியாகவும் நல்ல எஜமானியாகவும் இரு வேடம் எடுத்திருந்த பிரேம் சுருதி வாழ்க்கையில் பியாற்றா ஒரு பிரிய முடியாத நம்பிக்கை மிக்க தோழி.
மெல்லக் கண்களைத் திறக்கின்றாள் சுருதி.
"Trinks du etwas? ஏதாவது குடிக்கிறீங்களா? Ja….. orangen saft besser. அவளுக்காக ஆரஞ்சு பழ ஜுஸ் விமானப்பணிப் பெண்ணிடம் வாங்கிக் கொடுக்கின்றாள். காற்றுப் போல உடம்பு இருக்கிறது இல்லையா பியாற்றா என்றபடி ஜுஸ் குடித்துப் பேசிக் கொண்டிருக்க விமானம் தளம் இறங்குகின்றது. அங்கிருந்து Beach Hotel க்கு பயணமானார்கள்.
இங்கிலாந்து வந்தடைந்து ஹொட்டல் அறைக்குள் நுழைகின்றார்கள். தனித்தனியாக இரண்டு படுக்கை அறைகள். தனிமை இருவருக்கும் தேவைப்பட்டது. மரணவீட்டுக்கு வந்தவர்கள் ஆறதலாக இருந்தாலும் அமைதியாக வாழ்க்கை நடத்திப் பழகிய அவர்களுக்கு இந்த அமைதி தேவைப்பட்டது. இலங்கையில் மரண வீடு என்றால், 30 நாட்கள் ஓயாத உறவினர்கள் கலகலப்பு இருக்கும். உறவை இழந்து துடிப்பவர்களுக்கு அதை நினைக்கவே இடம்தராது உறவினர்களின் ஒத்தாசை இருக்கும். ஆனால், புலம்பெயர்ந்த மண்ணில் ஆகக் கூடியது 5 நாட்கள் தான். பின் எல்லோரும் தம்முடைய இடங்களுக்குத் திரும்பிவிடுவார்கள். ஆனால், புலம்பெயர்ந்த மக்களுக்கு அதிகம் பேர் வீட்டில் இருப்பதுவும் பிடிக்காது. அமைதியைத்தான் நாடுவார்கள். பெற்ற பிள்ளைகளைக் கூடக் கூட வைத்திருக்காமல் தனிமையில் சுதந்திரம் தேவை என்று வாழுகின்ற வயதானவர்கள் வாழுகின்ற நாட்டின் வாடை தமிழர்களுக்கும் தொற்றிவிட்டது.
அறைக்குள் சென்று உடை மாற்றி மதிய உணவுக்குப் போய்விட்டு கடற்கரை போவதுதான் அவர்களுடைய திட்டமாக இருந்தது. பியாற்றா தன்னுடைய அறைக்குள் சென்றாள்.
சூட்கேசை வைத்துவிட்டு குளியலறைக்குள் சென்றாள். முன்னே இருந்த கண்ணாடியில் தன்னுடைய முகத்தை ஒரு தடவை பார்க்கிறாள். நிலைத்து நின்றன கண்கள். திரும்பி வந்து சூட்கேசைத் திறந்து அதனுள் இருந்த சிறிய கைப்பையைத் திறந்து அதற்குள் இருந்த பிரேமின் புகைப்படத்தை எடுக்கின்றாள். அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து வெளியே வருகின்றது. முழுமையான டொய்ச் மொழியைக் கற்றுத் தந்த குடும்பத் தலைவன் அல்லவா! அதையும் மீறி
"பிரேம். ஏன் எங்களை விட்டுவிட்டுச் சென்றீர்கள். என் மனத்தின் வேதனைக் குரல் உங்களுக்குக் கேட்கிறதா? வேதனையை சொல்லி அழ சுருதிக்கு சாட்சி உண்டு. சொல்லாமல் அழத்தான் எனக்கு தகுதி உண்டு. நீங்கள் யார்? ஏன் எனக்குள் நுழைந்தீர்கள். எனக்குள் எஜமான் என்ற அனுபவத்தைப் புதைக்காமல் அன்புச் சுரங்கம் என்ற அனுபவத்தைக் கொடுத்துவிட்டு எங்கேயோ போய்விட்டீர்களே! ஒரு நாளே உங்களை அணைத்த எனக்கு இப்படித் தவிப்பு இருந்தால், உங்களுடனேயே வாழ்ந்து உங்களை இழந்த சுருதியின் நிலையை நினைத்துப் பார்க்கவே முடியாது இருக்கின்றதே. பரிசுத்தமான எங்களுடைய உறவு இருக்க எனக்குப் பரிசுத்தமான அன்பைத் தருகின்ற சுருதிக்கு நான் நயவஞ்சகியாக வேண்டுமா? கூடவே பயணம் செய்வோம் என்று நினைத்தேனே. என்னை இப்படித் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே. உங்கள் இருவருடைய ஆழமான பாசத்தில் ஒரு அணு அளவைக் கூட இழக்க நான் தயாராகவில்லை. அதேவேளை எனக்குள்ளே புதைந்து போன உங்கள் காதலை மறைத்து வாழ என் மனமும் ஒத்துக் கொள்ளவில்லை. பிரேம்! நீங்கள் யார்? எனக்கு நீங்கள் எஜமானா? இல்லை என் உயிருக்குள் ஊசலாடும் உன்னத ஆத்மாவா?
சத்தமாக அழுது அழுது தன்னுடைய மனத்துக்குள் விழுந்த பாறாங்கல்லைக் கரைக்க முயலுகின்றாள். மீண்டும் குளியலறைக்குள் போகின்றாள். கண்ணாடி முன்னே நின்று விம்மி விம்மி அழுகின்றாள். இவ்வாறு நேரத்தைக் கடந்ததும் போதே வெளியே போக வேண்டிய அவசியம் புரிகின்றது. வீங்கிய முகத்தை மறைக்க மேக்அப்பை அப்புகிறாள். ஆனால், அகத்தைக் காட்டும் கண்ணாடி அல்லவா முகம். சுருதி கதவைத் தட்டும்போது சுதாகரித்துக் கொண்டே கதவைத் திறக்கிறாள்.
was ist los என்ன நடந்தது. சுருதியின் கேள்விக்கு ஒன்றுமில்ல. அம்மாக்குக் கொஞ்சம் சுகமில்லையாம்.
"அப்பிடியென்றால், நீ போலந்துக்கு டிக்கட் புக் பண்ணிப் போ. நான் Urlaub ஐ முடித்து விட்டு வருகின்றேன் என்றாள் சுருதி. nein இல்லை இல்லை. நான் சமாளித்துக் கொள்ளுகிறேன். அம்மாவுடன் அடிக்கடி கதைக்கிறேன் என்றாள் பியாற்றா. காசு ஏதும் வேண்டுமென்றால், சொல்லு அனுப்புவம். இல்லை சுருதி நான் சமாளிக்கிறேன். நாங்கள் சாப்பிடப் போவோம். என்றபடி இருவரும் வெளியேறினார்கள்.
"உண்மையாகவே பிரச்சினை இல்லையா பியற்றா. நான் இங்கு தனியாகச் சமாளிப்பேன்'' என்றாள் சுருதி. அப்படி பிரச்சினை என்றால் நான் சொல்வேன்தானே என்று பியாற்றா கூறியபடி உணவகம் சென்று இங்கிலாந்து ஸ்பெஷல் Fish and Chips சாப்பிட்டார்கள். பியாற்றா பன்றி இறைச்சிப் பிரியையாக இருந்தாலும் இங்கிலாந்து ஸ்பெஷலைச் சாப்பிட விரும்பினாள்.
அதன்பின் கடற்கரைக்குச் சென்றார்கள். கடற்கரை மணலிலே கால் புதைத்து இருவரும் அமர்ந்திருந்தார்கள். கடற்கரை மண்ணிலே காணப்படும் கற்களை எறிந்தபடி உரையாடல் நடைபெற்றது. பிரேமின் நிகழ்வுகளை இரை மீட்டிக் கொண்டிருந்தார்கள். வாலிப்பான உடற்கட்டும், ஜிம்முக்குப் போய்த் தன்னுடைய உடலிலே மிகுந்த அக்கறையையும் கொண்டிருந்த பிரேம் எப்படி இந்த நோய்க்கு ஆளாகி 56 வயதில் எங்களை விட்டுப் போனார் என்று பலவாறாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவனுடைய அன்பும் துடுதுடுப்பும் நகைச்சுவைப் பேச்சும் பிடித்துத்தான் இறைவன் தன்னுடன் வைத்திருக்க அழைத்துச் சென்றுவிட்டார் என்று பியாற்றா சொல்லியபடி ஐஸ் வாங்கி வரட்டுமா என்றாள். இந்தா எனக்கு Erdbeergeschmack ஸ்ரோபெர்ரி சுவையில் வாங்கி வா என்று பணத்தைக் கொடுத்தாள். எப்படியாவது அந்த இடத்தை விட்டு 2 நிமிடம் நகர வேண்டும் போல் இருந்த பியாற்றா விடைபெற்றாள்.
வாங்கி வந்த ஐஸ்சை சுருதி கைகளுக்குள் புதைத்த போது அவளுடைய இதயம் உருகி கண்களினூடாகப் பனித்தது. என்ன நடந்தது பியாற்றா. உண்மையைச் சொல் வீட்டுக்குப் போக வேண்டுமென்றால், போ. என்று அவளை அணைத்தாள் சுருதி. திடீரென அவளுடைய கைகளைப் பிடித்த பியற்றா என்னை மன்னித்துவிடுங்கள் சுருதி. நான் இவ்வளவு காலமும் உங்களுக்கு ஒரு உண்மையை மறைத்து வந்தேன். ஆனால், உண்மையைச் சொல்லாமல் போலியாக இனியும் உங்களுடன் வாழ முடியாது. என்னை மன்னிப்பேன் என்று சொல்லுங்கள. அப்போதுதான் என்னால் சொல்ல முடியும் என்று அழுது புலம்பினாள்.
என்ன.. .. .. என்ன? என்னவாக இருந்தாலும் சொல்லு. பிரேம் போனதற்குப் பிறகு எனக்கு எந்தப் பிரச்சினையும் பெரிதாகப் படமாட்டாது என்றாள் சுருதி. பியாற்றா வாய் திறக்கிறாள்.
உங்கள் இருவரையும் என் கடவுள் போல நினைக்கிறேன். உங்களுக்குக் குழந்தை பிறக்காது என்று நீங்கள் சதா அழுது புலம்புவதும் பிரேம் ஆறுதல் கூறுவதும், தன்னுடைய மனத்துக்குள் தனக்கு ஒரு வாரிசு இல்லையே என்று மனத்தால் அழுவதையும் நான் உணர்ந்து கொண்டேன். உங்கள் இருவரையும் சிரிக்க வைக்க எனக்கு குழந்தை என்னும் ஒரு கலகலப்பான உயிர் தேவை என்று பட்டது. உண்மையிலேயே பிரேம் மூலமாக ஒரு பிள்ளையை உங்களுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. அதேயளவுக்கு எனக்கு அளவுக்கு மீறிய ஆசிய நாட்டவர்களின் கட்டுடலிலும் ஆசை அதிகம் இருந்தது. ஆசிய நாட்டவர்களுடைய உடலின் நிறமும் தேகமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பிரேமின் கட்டுடலில் நான் இழந்து போன தருணங்கள் பல. கட்டுமஸ்தான அவருடைய உடலிலே பல தடவைகள் பதிந்து வந்த என்னுடைய பார்வை ஒரு தடவையாவது அவரை அணைக்க வேண்டும் என்று துடித்தது. இதிலே உங்களுக்கு வஞ்சிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கடுகளவும் இருந்ததில்லை. ஆனால், பிள்ளையைப் பெற்றுத் தந்துவிட்டுத் தலைமறைவாகிவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன்.
நீங்கள் செமினார் போன சமயத்திலே ஒருநாள் பிரேமுடைய உடலை ஒரு தடவை வருடினேன். ஆச்சரியமாக இருந்தது. என்னை எப்படி நான் இழந்தேன். பிரேம் தன்னை மறக்க எப்படி நான் வசியம் செய்தேன் என்று சத்தியமாக எனக்குத் தெரியாது. ஆண்களின் பலவீனம் அடித்து உடைக்கப்படும் சந்தர்ப்பத்தை என்னால் உணர முடிந்தது. புதிதாகப் பூத்த மலராக நானும் வெட்கத்திலும் குற்ற உணர்விலும் உறைந்து போனவராக பிரேமும் தன்னைச் சுதாகரித்து எழுந்த போது அவரும் ஒரு சராசரி மனிதன் தானே. அவர் ஒன்றும் முனிவர் இல்லையே என்று அறிந்து கொண்டேன்.
என் வாழ்க்கையில் முதலும் கடைசியும் அந்தநாள்தான். பிரேமினுடைய உடல் என்னைத் தேடிய நாள் நான் பிரேமினுடைய உடலைத் தேடிய நாள். உடல் சுகம் இத்துடன் முடிந்தது என்று முடிவு எடுத்தேன். வெள்ளைக் காரர்கள் உடலுக்கு ஏங்குபவர்கள் என்பது எல்லோருடைய எண்ணமுமாக இருக்கின்றது. அப்படி இல்லை. என்னைப் போலும் எத்தனையோ பெண்கள் இருக்கின்றார்கள். சுருதி என்னுடைய மனப்பாரத்தை இறக்கி விட்டேன். பிரேம் இந்தப் பாரத்தை உன்னிடம் சொல்ல முடியாமல் எத்தனை நாட்கள் தவித்திருப்பார். உனக்குத் தெரியுமா சுருதி பிரேம் என்னையும் உண்மையாகக் காதலித்தார் என்கின்ற உண்மை. அன்பு என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தமாவதில்லை. அது பல வடிவங்கள் எடுக்கும். உன்னிலே வைத்திருக்கின்ற காதலுக்கு எந்த அளவுக்கு இறுக்கம் இருக்கின்றதோ. அதே அளவுக்கு இல்லாவிட்டாலும் என்னிலும் காதல் இருந்தது. இதை நான் அன்றைய நாள் உணர்ந்து கொண்டேன். ஆனால், இன்று நாம் இருவரும் ஒரு உண்மையான காதலை இழந்திருக்கின்றோம். உனக்கு ஆறுதல் சொல்ல என்னால் மட்டும்தான் முடியும். எனக்கு ஆறுதல் சொல்ல உன்னால் மட்டும்தான் முடியும். எங்கள் இவருடைய கவலையையும் பகிர்ந்து கொள்ள இன்றைய நாள் என்னுடைய மனம் திறந்ததாக எண்ணிக் கொள்ளுகிறேன் என்று அவள் சொல்லி முடித்தபோது அவளுடைய மூக்குச் சிந்திய பேப்பரும் கண்ணீர் சிந்திய பேப்பரும் அருகே நிரம்பிக் கிடந்தன.
சுருதி சர்வசாதாரணமாக அவளை அணைத்துக் கொண்டாள்.
"எத்தனை நாள் உன்னுடைய இந்தக் கவலையை நீ மனத்துக்குள் வைத்துப் புளுங்கியிருப்பாய். இன்று நீ வெளிப்படுத்தியதைப் புரிந்து கொள்ள முடியாத நான், ஒரு மனநலவைத்தியர் என்று சொல்வதற்குத் தகுதியில்லாதவள். பிரேமுடைய எண்ணங்களுடன் நான் வாழுகின்றேன். இன்று கூட அவரைத் தப்பானவர் என்று நினைக்க என்னுடைய மனம் ஒப்புக் கொள்ளவில்லை. அதேபோல் உன்னில் குற்றம் சொல்லி உன்னை ஒதுக்கி வைக்க எனக்கு அறுகதையில்லை. எங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு நாம் வாழுவோம். ஓகே Sei glücklich. immer mit der Ruhe மகிழ்ச்சியாக இரு. இலகுவாக இந்தப் பிரச்சினையை எடுத்து அமைதியாக இரு. என்று சுருதி சொன்னாள்.
இருவரும் இறுக்கமாகக் கட்டியணைத்தனர். பியாற்றாவினுடைய இதய பாரம் குறைந்தது. அழுத்தமான அந்த இருவருடைய அணைப்பிலும் அன்பு விஞ்சி நின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.