• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 3 ஜூலை, 2023

  எந்தவொரு செயலுக்கும் கவலைக்கும் காலம் பதில் சொல்லும்

  காலம் என்பது மகா கெட்டிக்காரன். அதனால், ஆக்கவும் முடியும், அடக்கி வைக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்பது கண்கூடு. அடக்கி வைத்த கொரொனாவும், ஆக்கி வைக்கும் புதிய கண்டுபிடிப்புக்களும் பிரபலங்களும், அழித்துவிட்டுப் போன உயிர்களும் எமக்கு அத்தாட்சிகளாகின்றன. எத்தனையோ மனிதர்கள் வாழ்க்கையிலே காலம் கரைத்து விட்டுப் போன ஆசைகளும் முயற்சிகளும் ஏராளம். ஆழக்கடலுள் புதைந்து போன பொக்கிசம் போல மனக்கடலுள் புதைந்து கிடக்கின்ற ஆசைகளும், கவலைகளும், உண்மைகளும் அதிகம். அந்த ஆசைகள் மனதுக்குள் கறையான் அரிப்பது போல் மெல்ல மெல்ல உடலையும் உள்ளத்தையும் அழித்துவிட்டுப் போகின்றன. எந்தவொரு செயலுக்கும் கவலைக்கும் காலம் பதில் சொல்லும் என்பார்கள். காரணம் ஓடிக்கொண்டே இருக்கும் காலம் பலருடைய ஆசைகளையும் வண்டில் வண்டிலாய் ஏற்றிக் கொண்டுதான் போகின்றது. நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. இன்று இருப்பவர்கள் நாளை இல்லை. ஆனாலும் காலம் வாழாதிருக்கவில்லை. புதிய புதிய கண்டுபிடிப்புக்களையும் புதிய புதிய ஆசையுள்ள மனிதர்களையும் படைத்துக் கொண்டுதான் போகின்றது. அவர்களும் ஆசைகளை வளர்த்து மாண்டுதான் போகின்றார்கள். சாதித்துவிட வேண்டும் என்று துடிப்பவர்களும் எண்ணங்களால் கோட்டை கட்டி அழித்து விட்டுப் போனவர்களையும் காலம் சுமந்துதான் வந்தது. சிறுகதைகளின் தொடக்கப்புள்ளியையும் புதுக்கவிதைகளின் தொடக்கப் புள்ளியையும் காட்டிவிட்டு போன பாரதியாரைப் போல எழுத்துலக மேதைகளின் உத்திகளும் திறமைகளும் முடிக்க முடியாது முடிந்து போகப் புதிய வரவுகள் அதைப் பிடித்துத் தொங்கிய படி பயணத்தைத் தொடங்குகின்றன. இந்தப் பயணத்தில் நாம் கண்டதும் எம் பெற்றோர் கையாளாததும் எம்முடைய இளமைக் காலத்தின் ஏக்கங்களுக்கும் ஆசைகளுக்கும் துணை வராததுமான கணணியை 1834 ஆம் ஆண்டு சார்ள்ஸ் பாபேஜ்(charles Babage) ) கண்டுபிடித்த போது தொழில்நுட்ப வளர்ச்சியின் பல கனவுகளுடன் காலத்துடன் கரைந்து போனார். ஆனால் இன்று அப்பிள் நிறுவனம்; 5.6.2023 வெளியிட்ட விசன் புரோ (vision Pro) உருவாக்கத்தில் இருந்த இடத்தில் இருந்தபடி கண்ணாடியை மாட்டி 3k யிலே சமுகவலைத்தளங்களுடன் தொடர்பை அருகாமையிலே கொண்டு வந்து நிறுத்துகின்றது. 23 மில்லியன் பிக்சல் 4ம தரத்தில் கமெராக்களைக் கொண்டு தெளிவாக பார்க்கலாம். Magic Keyboard வரும். அதனைப் பயன்படுத்தி எல்லை தாண்டியிருக்கும் உறவுகளுடன் அருகில் இருந்து பேசலாம். எம்மைச் சுற்றி பனோராமா படங்களைப் பார்க்கலாம். இவ்வாறு ஏராளமான வசதிகளைக் கொண்டு வந்து காட்டியுள்ளது. இந்த உருவாக்கங்கள் காலத்தின் போக்கையும் மனங்களில் மாற்றங்களையும் கொண்டு வந்து காலப்பந்தயத்தை விரைவாக மாற்றுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதேபோன்று தொலைபேசி கை அடக்கத்தினுள் இருக்கும் போது சாதித்துக் காட்டுகின்ற சாதனைகள் ஏராளம். பலவிதமான App கள் பிரமிக்க வைக்கும் வசதிகளைத் தந்திருக்கின்றது. இவ்வாறு காலமானது இன்று எம்மிடம் கொண்டு வந்து நிறுத்தியுள்ள சாதனை என்னவென்றால், "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்' என்ற வள்ளுவர் குறளைப் பொய்ப்பிக்கும் வண்ணம். இதனை இதனால் இவன் முடிப்பான் என்று ஆராயாமலே உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா என எல்லோராலும் எல்லாம் முடிகின்ற காலமாகக் கொண்டு வந்து நிறுத்தி, அக்காலமானது நதிபோல ஓடிக்கொண்டிருக்கின்றது. இவர்களாலேயே முடியும் என்ற செயலை மாற்றி இன்று யாரும் எதையும் செய்து முடிக்கலாம். யூரியூப் இருந்தால் போது கவிஞன் ஆகலாம், சமையல் வல்லவன் ஆகலாம், புகைப்படக் கலைஞன் ஆகலாம், வரைபடக் கலைஞன் ஆகலாம். அது மட்டுமல்லாமல் யாருக்கும் யாரும் அறிவுரை கூற வேண்டிய அவசியமும் இல்லை. எல்லோரும் வைத்தியர்கள் எல்லோரும் மேதாவிகள் என்ற ஒரு காலத்தை இன்று கண்முன்னே காலம் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. "பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்று கணியன் பூங்குன்றனார் எழுதியதுபோல யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை. "வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான் தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - யாம்பெரிதும் வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம் காண் எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது' என்று ஒளவையார் தூக்கணாங்குருவியின் கூடு, கரையான் புற்று, தேனியின் கூடு, சிலந்தியின் வலை என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கின்றது என்னும் பாடலையும் காலம் மாற்றிவிட்டது. எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது என்பது எல்லோருக்கும் எல்லாம் எளிது என்றாகிவிட்டது. இப்போது தரம் பற்றி யாருமே சிந்திப்பதில்லை. காலம் தந்துவிட்டுப் போன காயங்களும் வலிகளும் ஆழ்மனப் புதையலுக்குள் கிடந்தாலும் மனிதம் வாழ்வதனால் பிறர் மனச் சிந்தனைகளை சீர்தூக்கிப் பார்ப்பதனால், காலத்தை வென்று வாழ தலைப்படுகின்றனர். "உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரு முண்டு' என்று வலிகளுக்கு மருந்தாக பிற வழிகளைக் காலம் கண்டுபிடித்துக் கொடுக்க அதைப்பற்றித் தொடருகின்ற வாழ்க்கையானது கால நீரோட்டத்தில் சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றது. அஞ்சலோட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் கையில் கொண்டு செல்லும் கோலைத் தொடர்ந்து ஓடுபவர்களுடைய கையிலே கொடுத்துவிட்டுக் காணாமல் போய்விடுவார்கள்.

  கருத்துகள் இல்லை:

  கருத்துரையிடுக

  வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

  அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

    இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...