• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 10 ஜூலை, 2017

    அப்பா என்னவானார்!

                    



    “இஞ்ச பாருங்கோ இது நான், நான் காசு கட்டி  வாங்கின வோஸ்மெஸின். இதில்  என்ர பிளளைகள்ட உடுப்பும், என்ர உடுப்பும்தான் கழுவலாம். உங்கட ஊத்தைகள  இதுக்குள்ள போட்டுக் கழுவாதீங்க‘‘

    “அப்பிடியென்றா நானென்ன கையாலயா கழுவுறது‘‘

    “என்னென்றாலும் செய்யுங்க. ஸ்ரட்டு(நகரம்) க்குள்ள இருக்கிற பொது மெஷினில கழுவுங்க. இல்லாட்டிக் கழுவாமப் போடுங்க. எங்களுக்கு ஒன்டும் பிரச்சினையில்ல‘‘
    கணவன் இரத்தினத்திடம் கட்டளையிட்டாள், நிவேதா.

    வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கிறாளே, வேலைக்குப் போனால், அவளுக்குப் பொழுதுபோகும் என்று ஏதாவது வேலைக்குப் போ என்று நிவேதாவை வேலைக்கு அனுப்பினான் ரத்னம். இது அவனுக்கு இப்படி அடிமைத்தனத்தைத் தரும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. அடக்கமாக வாழ்ந்தவனுக்கு அவளை அடித்துத் திருத்தத் தெரியவில்லை. குடிப்பழக்கமில்லாதவனுக்கு போதை என்ர பெயரில் அவளைக் போட்டுப்பிரட்டத் தெரியவில்லை.

    வங்கிக்கணக்கை தனக்கும் மனைவிக்கும் இணைந்த வைப்பில் வைத்ததனால், உழைப்பின் ஊதியத்தை பங்கு போட்டுவிடுவாள் நிவேதா.

    “உங்கட பிள்ளைகளுக்கு நீங்கதான் காசு செலவழிக்க வேணும். என்னுடைய வருமானத்தை நம்பியா பிள்ள பெத்தனீங்கள்‘‘

    “பிள்ளைகளுக்கு ஹின்டகெல்ட் (அரசாங்கத்திலிருந்து வரும் பணம்) ல நீங்க கை வைக்கக் கூடாது‘‘

    “இது நான் வாங்கின ரி.வி நீங்க பார்க்க கூடாது. முடியுமா இருந்தா நீங்க வேற ரி.வி வாங்கிப் பாருங்க. பிள்ளைகள் பார்க்கிற நேரம் கரைச்சல் கொடுக்காதீங்க‘‘

    இத்தனை கட்டளைகளுக்கும் கட்டுப்பட்டு அவ்வீட்டில் நரக வாழ்க்கை வாழ்ந்த இரத்தினம். தன் வீட்டுப் பிரச்சினைகளை வெளியில் சொன்னால், அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் மறைத்தான்.

    அன்று இரத்தினத்திற்கு நெஞ்சுவலி பொறுக்க முடியவில்லை. வீட்டிலோ யாருமில்லை. நண்பன் சுரேஷை அழைப்போம் என்று தொலைபேசியை அழுத்தினான். அவனும் வந்து ரத்தினத்தை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றான். இதயம் கொஞ்சம் பலவீனமாக இருப்பதாக கூறிய வைத்தியர் மருந்தும் கொடுத்து வீட்டிற்கு அனுப்பினார்.

    வீட்டிற்கு வந்த நிவேதா, தொலைபேசியை பரீட்சித்துப் பார்த்தாள் ரத்தினம்  யாருடனோ கதைத்திருக்கின்றான் என்பதை அறிந்தாள்.

    “இஞ்ச பாருங்கோ. எங்க போயிற்று வாறீங்க. யாருக்கு ரெலிபோன் எடுத்தனீங்கள். உங்களிட்டச் சொல்லியிருக்கிறன். இந்த ரெலிபோன் நீங்க பாவிக்கக் கூடாதென்று. உங்கட ஹென்டியால எடுக்கலாம்தானே. என்ர பெட்டில வந்து படுத்திருக்கிறீங்க. எல்லாம் குழம்பிப் போய் கிடக்கு‘‘
     தொடர்ந்து கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.

    “நான் ஒன்றும் சும்மா. உம்மட வாசம் பிடிக்கப் படுக்கல்ல. சரியா நெஞ்சுக்குள்ள குத்திச்சு. என்ர ரூமுக்குள்ள போக முடியல்ல. அதுதான் டக்ககென்று உம்மட ரூமுக்குள்ள போய்ப் படுத்தனான்‘‘

    “சும்மா நடிக்காதீங்க. கண்டவனோட கதைக்கிறதுக்கெல்லாம். நான் காசு கட்டத் தேவயில்ல. கூப்பிட்டு வச்சு என்ர புராணம் பாடத்தானே ரெலிபோன் எடுத்த னீங்க‘‘

    “உனக்கு எத்தனை தரம் சொல்றது. ஆஸ்பத்திரிக்குப் போகத்தான் கூப்பிட்டனான். என்ர ரெலிபோனில சாச் இறங்கிப் போச்சு‘‘

    “நம்பிட்டன் நடிக்காதீங்க|‘‘

    “நீ என்ன மிருகமாடி. உனக்கு என்ன ஈவு இரக்கமில்லயா? எப்பிடி அடக்கமா மணவறையில வந்து இருந்தா. இப்பிடி பிசாசு மாதிரி இருக்கிறியே. உனக்கு நான் கொடுத்த இடம் தான் என்ன இந்தளவுக்குக் கொண்டுவந்து விட்டிருக்குது. மற்ற ஆம்பிள்ளைகள் மாதிரி நானும் உன்ன வீட்டுக்குள்ள அடைச்சு வச்சிருந்தா இப்படிக் பேச்சு வந்திருக்காது‘‘

    மனதுக்குள் இருந்ததெல்லாம் கொட்டித் தீர்த்தான்.

    “போதும். நிறுத்துங்க. நான் சொல்றதத்தான் கேட்கவேணும். இருக்கிறதென்றால், இருங்க முடியாட்டி எங்கேயாவது தொலஞ்சு போங்க‘‘

    ஆவேசமாகக் கத்திய நிவேதாவுடைய வார்த்தைகளுக்குள் இருந்த தனியே வாழும் ஆசை. இரத்தினத்திற்கு ஆத்திரத்தைக் கொண்டுவந்தது. ஆவேசம் கொண்டு அடிப்பதற்குக் கை நீட்டினான். ஓடி வந்த மகன், இரத்தினத்தைப் பிடித்துத் தள்ளி விழுத்தினான். பிள்ளைகளும் தாயுமாகச் சேர்ந்து இரத்தினத்தை வீட்டிற்கு வெளியே தள்ளினர்.

    “போடா. போ எங்கேயாவது போய்த் தொலை…..‘‘

    தாயும் பிள்ளைகளும் கத்தித் தள்ளிய இரத்தினம் வாசலுக்கு வெளியே கிடந்தான். வீட்டின் யன்னல் திறக்கப்பட்டது. அவனுடைய துணிமணிகள் வெளியே வீசப்பட்டன. அழுது அழுது ஓய்ந்த இரத்தினம் எல்லாவற்றையும் தூக்கிக் கட்டியவனாக நண்பன் சுரேஷ் வீட்டிற்குச் சென்றான்.

    “எனக்கு இது தேவையாடா? சும்மா இருந்த என்னக் கல்யாணம் செய் கல்யாணம் செய் என்று எல்லாரும் கரைச்சல் படுத்தி, ஒரு பேய என்ர தலையில் கட்டிப் போட்டுதுகள். இப்பப் பார் என்ன உழைச்சும் இப்பிடி நடுத்தெருவில நிக்கிறனே‘‘

    “ஏன்டா இப்பிச் சொல்ற உனக்கு நான் இல்லயா? என்ன வந்தாலும் பார்ப்போம். இப்பப் போய்ப் படு‘‘

    ``என்னன்டுடா நித்திர வரும். வருத்தமென்டு சொன்னால் நடிப்பு என்றாள். இப்படியும் ஒரு பொம்பிள இருக்குமாடா? பிள்ளைகளுமல்ல அவளோட சேர்ந்து என்ன அடிக்க வருதுகள். இப்பிடி ஒரு நரக வாழ்க்கை வாழ்றத விட்டிற்று என்னத்தையும் குடிச்சிட்டு செத்துப்போகலாம்‘‘

    “உனக்கென்ன விசரா. உனக்கு என்ன குறை. நல்லா உழைக்கிறா நீ உனக்கு நாங்கள் இருக்கிறகம். விட்டுப்போட்டு ஒரு வீடு எடுத்திட்டு ராசா மாதிரி வாழு. ஆனா, உன்ர பிள்ளைகளுக்கு காசு கட்ட வேண்டியது உன்ர பொறுப்பு. அதக் குடுத்திட்டு. சந்தோசமா வாழு‘‘

    “இல்லடா அவள எப்பிடியெல்லாம் வச்சிருந்தனான். ஏன் தான் கடவுள் என்னப் போட்டு இப்பிடிச் சோதிக்கிறாரோ தெரியாது‘‘

    “விடுடா அந்தக் கதைய. இனி நடக்க வேண்டியதப் பார்‘‘

    ரத்தினம் தனியே வீடெடுத்தான். நிவேதாவும் ஜேர்மனி படிப்புச் சரியில்லை என்று பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு இலண்டனில் குடியிருக்கச் சென்று விட்டாள். அவளுக்குத் தெரியாமல் பிள்ளைகள் தந்தை இரத்தினத்துடன் கதைப்பார்கள். தாயாரின் கெடுபிடிகள், பழக்கங்களை வளரும்போதும், நாலு பேருடன் பழகும் போதும் பிள்ளைகள் அறிந்து கொள்வார்கள் அல்லவா!

    காலங்கள் கடந்தன. ரத்தினத்திற்கு வயது 40. தனிமை நோயைத் துணையாகக் கொண்டது. ஆயினும் உடலுழைப்பில் சளைக்காது பாடுபட்டான்.


    பலமுறை தந்தையுடன் தொடர்பு கொள்ள முடியாத பிள்ளைகள் அப்பா என்னவானார் என்று தெரியாமல் ஜேர்மனி பொலிஸாருக்கு அறிவித்தனர். வீட்டு இலக்கத்தைத் தேடிச் சென்ற பொலிஸார் வீட்டு அழைப்பு மணியை அழுத்தியும் திறக்கப்படாத கதவினை திறந்தனர். அங்கே பிணமாகக் கிடந்த இரத்தினத்தைக் கண்டனர். இரத்தினத்தின் உடலைப் பரிசீலனை செய்த வைத்தியர் இரத்தினத்தின் உடலை விட்டு உயிர் பிரிந்து 3 நாட்களாகி விட்டன என்று உரைத்தார்.

    வியாழன், 6 ஜூலை, 2017

    கத்தியின்றி இரத்தமின்றி கொலை

             



    ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்ற ஆண்களின் தற்கொலை, இயற்கை இறப்புக்களுக்கு அவர்களின் மனைவி, பிள்ளைகளே காரணம் எனக் குற்றச்சாட்டுக்கள் வலுவாக அதிகரித்து வருகின்றது. கத்தியின்றி, இரத்தமின்றி கொலை நடைபெறுகின்றது என பெண்களில் பழி போடப்படுகின்றது. இக்கட்டுரை இது பற்றிய ஆய்வுக்குட்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் பிறந்து வளருகின்ற ஆண்பிள்ளைகள்; பற்றிய கணிப்பீடு இக்கட்டுரையில் இடம்பெறவில்லை.

                   ஆண்களின் இறப்பு வீதம் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துக்கொண்டு போவது தற்பொழுது கவலைக்குரிய விடயமாகக் காணப்படுகின்றது. இலங்கையிலிருந்து 90 சதவீத பெண்கள் திருமணம் செய்து, அல்லது திருமணம் செய்வதற்காக ஐரோப்பிய நாடுகளுக்குக் குடி புகுந்த பெண்களாகவே காணப்படுகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் கல்வியறிவு குறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

                வீட்டுச் சூழலில் அடங்கி ஒடுங்கி வாழ்ந்தவர்களுக்கு திடீரெனக் கிடைக்கின்ற சுதந்திரம் அவர்களுக்கு கட்டுக்கடங்காத சுதந்திரத்தை அளிக்கின்றது. இதைவிட முற்றுமுழுதாக பெண்களிடமே பழி போட்டுவிட முடியாது. தனிமையில் இந்நாடுகளில் வாழ்ந்த ஆண்கள் பொழுதுபோக்குக்காக நண்பர்களுடன் குடிக்க ஆரம்பித்துப் பின் குடிக்கு அடிமையாகிவிடுகின்றனர். தமது இப்பழக்கத்தை மறைத்து தாயகத்திலிருந்து பெண்களைத் திருமணம் செய்து அழைத்து வருகின்றனர். கணவனிடம் காணப்படும் இப்பழக்கம் பற்றி அறியாமலோ வாழ்க்கையிலேயே குடியை வெறுக்கும் ஒரு பெண்ணாகவோ இருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தபின் இதனை அறியும் போது தனது வெறுப்பை கணவனில் காட்டத் தொடங்குகின்றாள். இது காலப்போக்கில் பெரிய பூதாகரமாகின்றது. போதைக்கு அடிமையாகும் ஆண்கள் அளவுக்கதிகமாகக் காட்டுகின்ற அதிகாரம், ஆண்களிடம் பெண்களுக்கு ஒரு வெறுப்பு நிலையை ஏற்படுத்துகின்றது. மூர்க்கமாகத் தமது கோபத்தைக் காட்டுவதும், கையில் கிடைப்பதைக் கொண்டு அடிப்பதும், என வன்முறையில் ஈடுபடும்போது வாழ்க்கை என்பது ஒருமுறையே அதை ஏன் இப்படி நரகவாழ்க்கையாக வாழ வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் கணவன்மாரை விட்டு தனியே வாழ முற்படுகின்றார்கள்.

         அதேவேளை திருமணமாகிய பின்னர் குடியை ஆரம்பித்து அளவுக்கதிகமாகக் குடிக்கும் ஆண்கள் தாம் குடிப்பதற்கு பெண்கள்தான் காரணம் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

               இங்கு வருகின்ற போது அப்பாவிகளாக கணவனுக்குக் கட்டுப்பட்டவர்களாக வாழ்க்கையை புலம்பெயர்வில் பெண்கள் ஆரம்பிக்கின்றனர். காலப்போக்கில் மனைவிமாரின் புத்திசாலித்தனத்தை அறிந்த ஆண்கள் அவர்களை முன்னிலைக்குக் கொண்டு வருவதற்காக முதலில் மொழியை ஒரளவாவது கற்பதற்கு பாடசாலைக்கு அனுப்புகின்றார்கள். இதில் திறமைசாலிகள் வென்று விடுகின்றார்கள். முடியாதவர்கள் படிப்பென்ற பேச்சுக்கே இடமின்றி வீட்டுக்குள்ளேயே அடங்கிவிடுகின்றார்கள். பிள்ளை பெறும் இயந்திரங்களாக மாறி பிள்ளைகளைப் பெற்றெடுத்து அவர்களைப் பாடசாலைக்குக் கொண்டு செல்வதற்காகவும் மற்றைய கடமைகளைச் செய்வதற்காகவும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளுகின்றனர். இக்காலகட்டத்திலே உலகத்தையும் பிள்ளைகளை வளர்ப்பதையும் கற்றுக் கொள்ளுகின்றார்கள்.

           இக்காலகட்டத்திலேயே பெண்களுக்கான ஆசைகள் அளவுக்கதிகமாக உயர்கின்றது. மற்றையவர்கள் போலத் தாங்களும், மற்றைய பிள்ளைகளைப் போலத் தமது பிள்ளைகளும் இருக்க வேண்டும் என்ற அபரிவிதமான ஆசை மேலோங்குகின்றது. தமது தகுதி பற்றி நினைத்துப் பார்க்காது பிள்ளைகள் விரும்புகின்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுக்கும்படியும் மற்றைய பிள்ளைகள் செல்கின்ற விளையாட்டுக்கள், கலை வகுப்புக்கள் என்று எல்லாவற்றையும் தமது பிள்ளைகளும் கற்க வேண்டும் என்ற நச்சரிப்புகளை கொடுக்கின்றனர். இவ்வாறான சூழலில் கணவன் 2 அல்லது 3 வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இங்கு மனைவியே குற்றவாளி ஆகின்றாள். கஷ்டப்பட்டு உழைத்து மனைவி, பிள்ளைகளைக் கவனிக்கும் ஆண்கள் தமது குடும்பம் உயர்வான இடத்திற்கு வரப் போகின்றது எனக் கற்பனை செய்கின்றான். மாடு போல் உழைப்பவனுக்கு வீட்டுக்கு வந்ததும் புல்லுப் போடுபவர் கண் விழித்து இருப்பது அருமை. பிள்ளைகளை அடுத்தநாள் பாடசாலை அழைத்துச் செல்லவேண்டும் என்ற காரணத்தைக் காட்டி சோறை ஆக்கிப் போட்டு சுருண்டு படுத்துவிடுவாள். களைத்து வீடு வரும் கணவன் களைப்பு நீங்க ஒரு கிளாஸ் மதுவுடன் தனது உணவை அடைந்துவிட்டு  அப்படியே உறங்கிவிடுகின்றான். ஒரு கிளாஸ் 2, 3, என்று போத்தல் கணக்கிற்கு உயர்கின்றது. இதுவே திருமணத்தின் பின் மதுவுக்கு அடிமையாகும் அநேகமான ஆண்கள் நிலை.

          காலப்போக்கில் பிள்ளைகள் வளருகின்ற போது அப்பா குடிச்சுக் குடிச்சுக் கெட்டுப் போகிறார். இந்த மாட்டைத் திருத்த முடியாது. இது இப்படியே கிடந்து செத்துப் போகட்டும் என்று பலவாறாகப் பிள்ளைகளுக்கு அருகிலே வைத்து தந்தைமாரைப் பற்றிய தவறான எண்ணங்களைப் பிள்ளைகள் மனதில் பதியவைப்பது தாயாகத்தான் இருக்க முடியும். இதனால் பிள்ளைகள் தந்தையை விட்டு விலகி இருக்கின்றனர். தந்தை இல்லாத சமயத்திலே, தந்தையில் பாசத்தையும் மரியாதையையும் சொல்லிக் கொடுத்து, தந்தையின் அர்ப்பணிப்புக்கள் பற்றித் தெரியப்படுத்தி வளர்க்க வேண்டிய பாரிய கடமையை மனைவி என்பவள் மறந்துவிடுகின்றாள். தந்தையை ஒரு பிள்ளை எதிர்த்துப் பேசுகின்றது என்றால், தாய் பேசிய தாக்கமே பிள்ளை மனதில் நின்று வெளிப்படுத்துகின்றது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

            தந்தை பற்றிய தவறான எண்ணப் போக்கு மனதில் பதிந்த பிள்ளைகள் தாயுடனேயே தாய் சொல்வதே உண்மை என்று கேட்டு தந்தையை வெறுக்கத் தொடங்கும். மனைவி, பிள்ளைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஆண், கடைசியில் குடியை மணந்து அதற்குத் தன்னை அடிமைப்படுத்துகின்றான். இதனால், நோய்வாய்ப்படுகின்றான். நோயில் துன்;பப்படுகின்ற கணவனின் அருகில் இருக்க வேண்டிய வாழ்க்கைத்துணையானவள் இவ்வாறான குடித்துக் குட்டிச் சுவரான கணவனுடன் வாழமுடியாது என்று சொல்லி அவனை ஒதுக்கிவிடுகின்றாள். தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தனியே வாழுகின்றாள். இவ்வாறான பல குடும்பங்களைக் காண்கின்றோம்.

          விவாகரத்து எடுத்துவிட்டால் அரசாங்கம் தனக்குப் பணம் தந்து உதவும் என்ற துணிச்சலுடன் தனியே வாழும் பெண், அவனுக்கு வேண்டிய மருத்துவ வசதிகளைக் கூடச் சரியான நேரத்தில் கொடுக்காது விடுவதும், தேவையான உணவுவகைகள் உண்ணக் கொடுக்காது விடுவதும் ஒரு கொலை முயற்சி என்றே சொல்ல வேண்டும். புலம்பெயர்வில் அதிகமான பிள்ளைகள்; தாயார்மாருடன் சேர்ந்து கொண்டு தந்தைமாரை வெறுப்பவர்களாகவே இருக்கின்றனர். பிள்ளைகளுக்காக குடும்பப் பொறுப்பை மனைவியிடம் விட்டுவிட்டு உழைப்பதில் கவனம் செலுத்திய கணவன் இறுதியில் குடும்பமே இல்லாமல் இருப்பதுதான் இங்குள்ள சூழ்நிலை. சாதாரண சேட்டைத் தான் அணிந்து, இரவுபகல் வேலை பார்த்து மனைவிக்கு 10 பவுணில் நகையும், பட்டு ஆடையும், பிள்ளைகளுக்கு அப்பிள் கைத்தொலைபேசியும் அவுடிக் காரும் வாங்கிக் கொடுத்து அப்பாவிகளாக வாழுகின்ற ஆண்கள் நிலை பரிதாபத்துக்குரியது.

        இதேவேளை மனைவியை அடக்கி ஆள நினைக்கும் ஆண்வர்க்கத்தின் பக்கத்தில் உலகைப் படித்த பெண்கள் அடங்கி வாழ மறுப்பது யதார்த்தம். ஆண்கள் போலே தமது கவலையை மறைக்கத் தாமும் குடிக்கு அடிமையானால், இக்கதை மாற்றிப் பேசப்படுமோ? என்ற வினாவினை எழுப்புகின்றாள் பெண்;. குடித்துத்தான் கவலை மறப்போம் என்பது போலியான வார்த்தை. தனியே வேறு பொழுதுபோக்குகளை பழகிக்கொள்ளலாமே என்றால், பாவமும் பழியும் ஆண்களிலேயே அதிக வந்து விழுவதாலும் பெண்ணைப்பற்றிய அனுதாபம் சமுதாயத்தில் அதிகமாக இருப்பதாலும் பிரச்சினைகளை மறைத்து இணைந்து வாழ்வதாக வெளி உலகத்திற்குக் காட்டி மனதால் பிரிந்து வாழ்கின்ற குடும்பங்கள் புலம்பெயர்வில் அதிகமாகக் காணப்படுகின்றன.

               புரிந்துணர்வுடன் வாழுகின்ற குடும்பங்களே வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்துகின்றன. ஆண்கள் உண்மையை மறைத்து திருமணம் செய்வதும், ஆண் என்ற மமதையை காட்டுவதும், பெண்கள் தமது விரலுக்கேற்ற வீக்கம் போல் போதும் என்ற மனமே சிறப்பு தரும் என்று எண்ணி இவற்றில் அக்கறை கொள்ளவேண்டும். ஆசைகளை அளவுக்கதிகமாக வைத்தால் வாழ்க்கையை இழக்கவேண்டியே வரும். மனைவி கணவனில் வைக்கின்ற உண்மையான அன்பு அவன் கவலைகளை மாற்றச் செய்யும் என்று நான் கருதுகின்றேன். அந்த உண்மையான அன்பை மனைவி தருவதற்கேற்றவாறு வாழ வேண்டியது கணவனின் கடமையாகின்றது. துன்பப்படுபவரைக் கண்டால் இரக்கப்படும் நாம், நமது கணவன் நோயால் வாடுகின்றபோது கண்டு கொள்ளாமல் விடுவது எவ்வளவு அரக்கத்தனம். அவனில் ஆயிரம் பிழைகள் இருந்தாலும், அவன் ஒரு உயிர். ஒன்றாக வாழ்ந்து பிள்ளைகளை அவன் மூலம் பெற்று வளர்த்தோம் தானே. இறுதிக்காலத்திலாவது மன்னிப்பு என்ற அளப்பெரிய ஆயுதத்தை ஏந்தி கடைசி காலத்தில் பக்கபலமாக இருக்கலாமே. பெண்கள் என்றால் பொறுமை என்னும் இலக்கணத்தை ஏற்று மனிதப்பண்பில் வழுவாது வாழ்ந்து பாசத்துடன் வாழலாம் அல்லவா? உயிர் என்பது விலைமதிக்கமுடியாதது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

    இந்த காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து subscribe பண்ணுங்கள். நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நன்றி 

    ஞாயிறு, 2 ஜூலை, 2017

    எனக்காய் ஒரு தாய் ஏங்க என் இதயம் சிரித்திருக்கும்





    இரண்டு வயதிலே நீ இயல்பாய்த் தமிழ் பேசியபோதும், உன் குதலை மொழியால் குழைந்து குழைந்து காரணங்கள் கேட்டபோதும், இதயத்தை நிமிர்த்தி இமயம் போல் ஒரு நம்பிக்கை கொண்டிந்தேன். வருங்கால நீதிபதி ஒன்று நியாயங்கேட்க நிமிர்ந்து வளர்கின்றதென்று. என் கன்னத்தில் அழுத்தி நீ முத்தமழை பொழியும்போது என் இதயம் கசிந்து அன்பு ஊற்றுக்களாய் பெருகிக் கொண்டேயிருந்தது. உன் இதயமொழி எங்கள் வாழ்க்கை மேடையிலே சங்கீத சாம்ராஜ்யம் நடத்தியிருந்தது. 
               பூமி சுழன்றதனால் வயதும் சுருண்டு கிடக்கவில்லை. சுயமாக 6 ஆக உயர்ந்து விட்டது. முதல் வகுப்பில் நீ ஸுல்ரியூற்ற தூக்கியபோது நீ பல்கலைக்கழக அநுமதிப்பத்திரம் பெற்றுவந்த பெருமிதம் கொண்டோம். கள்ளி நீ எனக்கு எக்கஷ்டமும் தந்ததில்லை. உன் கணக்குப் பாடத்திற்கு உன் அப்பா உதவிக்கு வர நீ சந்தர்ப்பமும் தந்ததில்லை. நீ பருவ வயது கண்டால் சடங்கு செய்யத் தன் வங்கியிலே பணக்கணக்கை மட்டுமே கூட்டும் வேலையைத் தந்தைக்குக் கொடுத்திருந்தாய். ஆசிரியர்கள் எமை அழைத்து உனக்குப் புகழாரம் எங்களிடம் சூட்டும்போது, எங்கள் குடும்ப மரபணுக்கள், உங்கள் குடும்ப மரபணுக்கள் தொழிற்படுவதாய் நானும் உன் தந்தையும் போட்டா போட்டி போட்டோம். 
                 வில்லங்கம் வந்துவிட்டது. விடியாத பொழுதுகள் என்  கண்களுக்குள் வந்துவிட்டன. விட்ட சனி ஒட்டிக் கொண்டது. வெட்ட வெளியிலே உச்சிச் சூரியனுக்கு அண்மையில் மல்லாந்து கிடப்பதுபோல் உடலெல்லாம் சுட்டெரிக்கிறது. நெருப்புத் தணலில் நிற்பது போல் தவிக்கிறேன். மகளே உன் வாய்ப்பேச்சு எங்கே மாயமாய்ப் போனது. சித்திரம் கட்டிலில் கிடப்பதுபோல் சிரித்தபடி படுக்கின்றாயே! உன் கலகலத்த சிரிப்பை தன் மருந்தால் சிக்கவைத்த வைத்தியரை நான் சிறை வைக்க முடியாது தவிக்கின்றேனே! முழிக்கும் உன் கண்களுக்காய் மூடாத எம் இமைகள் விரிந்த சாளரமாய் நிலைபெற்றுவிட்டன. 
                  அறிவுவாங்கப் பாடசாலை செல்கின்றாய் என்றுதான் நினைத்தோம். நீ காய்ச்சல் அல்லவா வாங்கி வந்திருக்கின்றாய். ஆண்டவனாம் வைத்தியர் ஆண்டவனுக்கு அடுத்தபடி யாரிடம் நாம் போய் நிற்போம். வைத்தியரிடம் தானே உயிர்ப்பிச்சைப் பாத்திரம் ஏந்துவோம். 
                பச்சைக் குழந்தை உனக்கு அன்ரிபயோரிக் தரும்போது அவரைவிட நாமென்ன கற்றுவிட்டோம் என்றும் வைத்தியர் சொல்மிக்க மந்திரமில்லை என்றுமல்லவா நினைத்துவிட்டோம். பாவி கையால் தந்த அன்ரிபயோரிக் உனக்கு நஞ்சாகும் என்று அம்மா நான் நினைக்கவில்லையே! என் கையே உனக்கு நஞ்சு தந்துவிட்டதா! மகளே! இக்கையை நானே சுட்டெரிக்கப் போனேனே! உன் தந்தை அதற்கும் தடை போட்டுவிட்டாரே. என் கையைப் பார்க்க எனக்கே அருவருப்பாய் இருக்கிறது. ஒரு பிஞ்சை கட்டிலில் படுக்க வைத்துவிட்ட வைத்தியர், எப்படித்தான் தன் கட்டிலில் தூங்குகின்றாரோ புரியவில்லை. ஒரு வேளை இது இவர்களுக்குப் பழக்கமாய்ப் போய்விட்டதோ. அவதானம் தவறும் வைத்தியரும் கொலைகாரனும் ஒருவர் அல்லவா?
                                          இரவுபகலாய் இதயமில்லாத உன் உடல் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதயம் இருந்தும் என்னால் தொழிற்பட முடியவில்லை. உன்னைப் பார்க்கையிலே உள்ளமெல்லாம் வேகுதடி. ஓர் கத்தி நான் எடுத்து என் இதயத்தை வெட்டி உன் உடலினுள் புதைத்துவிட என் இதயமது  ஆவேசம் கொள்ளுதடி. ஆனால், சட்டம் என்ன கண்மூடிக் கொண்டா இருக்கிறது. உலகப் பந்தை நீ பார்க்க என் உடல் வருத்தம் பொறுத்தேனடி. என் இடுப்புவலி தாங்கி உன் உடலது கண்டு களித்தேனடி. இன்று உன் அருகே ஓர் இயந்திரம் உனக்காகத் துடிக்கும் போது, அதனைக் கையால்; தொட்டு நாளும் கண்ணில் ஒற்றிக் கொள்கிறேன். ஆண்டவனே நேரில் வந்து உன் அருகே படுத்திருப்பதாய் உணர்கின்றேன். 
                 எத்தனை காலம் அவர் அருகே அமர்ந்திருக்க முடியும். உன் போல் ஓர் இதயம் எங்கோ உனக்காய்த் துடித்துக் கொண்டிருக்கின்றது. அது எப்போ உன் உடலுள் அமரப் போகின்றது. அவசரமாய் அதைக் கேட்க ஆசையாய் இருக்கிறது. ஆனால், அங்கும் ஓர் தாய் என் போல் பின் ஏங்கித் தான் என் ஏக்கம் தீர்க்கவேண்டும். அப்போது கூட அவளுக்காய் நான் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பேன். இதயம் தேடி இரவுபகலாய் விழித்திருக்கிறாள் இத்தாய். 
      




    திங்கள், 26 ஜூன், 2017

    சீர்கெட்ட வாழ்வு

                             


    நேரமோ 10. நித்திரையோ கண்ணைச் சுருட்டுகிறது. நாள் முழுவதும் வேலை செய்து வீடு வந்து ஓய்ந்து ஒரு பிடிச் சோற்றைக் கையால் குழைத்துச் சாப்பிட்டாலேயே மனம் நிம்மதியடைகிறது. என்னதான் இரண்டாவது வேலை ரெஸ்டோரன்டில் செய்தாலும் இந்த ஐரோப்பியர்களுடைய உணவு எந்தப் பிடிப்பும் இல்லாத அவர்களைப்போலவே காரம், புளிப்பு இல்லாமல் சப்பென்று இருக்கும். கட்டிக் குழம்பை சோற்றில் ஊற்றி கையால் பிசைத்து ருசித்துச் சாப்பிடும் சுவைக்கு எதுவும் ஒப்பில்லை. பசிக் களை நீக்கினால், பாய்ந்து வரும் உறக்கம். சிறிதுநேரம் இருந்துவிட்டு உறங்கவேண்டும் என்று புத்தி பலர் புகட்டினாலும் மூளையதைப் புரிந்து கொண்டு நடப்பதாகத் தெரியவில்லையே. முடியாத காரணத்தால் ஓசையிடும் தொலைக்காட்சியை நிறுத்திவிட்ட விசாகன் எழுந்தான். படுக்கையை நெருங்கினான்.

               அழைப்புமணி ஓசை நித்திரை மயக்கத்தை நீக்கியது. இந்த நேரத்தில் யாரது வாசல்மணியை அழுத்துவது! இப்போதெல்லாம் பாரிஸ், ஜேர்மனி பகுதியில் நிம்மதியாக வாழத்தான் முடிகிறதா. களவு, கொள்ளை, கற்பழிப்பு, கொலை, அச்சுறுத்தல் அப்பப்பா... நிம்மதியைத் தொலைத்துவிட்டு வாழவேண்டிய சூழ்நிலை. பரிதாபம் பார்த்துப் படுகுழியில் விழுந்த நிலை இந்த ஐரோப்பியர்களுக்கு வந்திருக்கின்றது. பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் வீடுகள் பாதுகாப்பு மதிலோ, சாளரக் கம்பிகளோ கொண்டிருப்பதில்லை. ஆனால், இன்றைய சூழ்நிலை இவற்றுக்கெல்லாம் அவசியத்தைக் காட்டிநிற்கின்றன. மெதுவாக சாளரத்தைத் திறந்து கீழ் நோக்கி இருட்டில் பார்வையைச் செலுத்திய விசாகனுக்கு ஆச்சரியம். என்ன .... தீபன்! இவன் என்ன இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ளாமல் வந்திருக்கிறான். ஓடிப்போய் கதவைத் திறந்தான். தள்ளாடித் தள்ளாடி வாசல் படியை வந்தவனிடம் இருந்து மதுவின் வாசைன விசாகனை வந்தடைந்தது.

    'தீபன் என்னடா இது. இந்தநேரத்தில்!'

    'என்ர மச்சான் எனக்கு ஏலாதுடா. என்னால ஏலாது. இதெல்லாம் ஒரு வாழ்க்கையா... இன்றைக்கு மட்டும் நான் இங்க படுக்கட்டா. ஏன்டா நான் ஐரோப்பிய நாட்டுக்கு வந்தனான்? ஓடிஓடி உழைச்சனான்? பிள்ளைகளப் பெத்தனான்? இப்ப ஒன்றுமில்ல. ஒன்றுமில்ல. இந்தப் போத்தல் மட்டும்தான் எனக்கிருக்கு. மனிசி, பிள்ளைளகள்..........‘‘  ஓ....... என்று சத்தமாக அழுதான். ஆண்கள் அழுதால், அது விசித்திரம். பொதுவாகவே மனதைக் கல்லாக்கி எதையும் தாங்கும் சக்தி அவர்களுக்கு உண்டு. அழுவதென்றால், அவர்கள் மதுவுக்கும் மாதுக்கும் அடிமையாக வேண்டும். அப்போதுதான் அழுகையும் அவர்களை வந்தடையும்.

    அவனைச் சமாதானப்படுத்திய விசாகன். அன்று தீபனைத் தன் வீட்டில் தங்க வைத்தான். இரவு படுத்தானோ, புரண்டானோ யாரறிவார். விசாகன் நாள் களைப்பில் நன்றாகவே உறங்கிவிட்டான். விடிந்த பொழுது காலை 5 மணி கடமைக்காக எழுந்திருந்த விசாகன். ஏற்கனவே பொழுது புலர்ந்துவிட்ட தீபனைக் கண்டான்.

    “எப்படி நித்திரை? என்றவனிடம் “சுத்தமாய் இல்லை‘‘ என்று பதிலளித்துவிட்டு தேநீருக்கும் காத்திருக்காமல் வீடு செல்ல ஆயத்தமானான். விசாகன் வேண்டுதலும் பதிலளிக்காததால், நடந்தது உரைக்க விருப்பில்லை என்று உணர்ந்து கொண்ட விசாகன்.

    ‘‘மச்சான் குடிச்சுக் குட்டிச் சுவராகாதே. எப்படி இருந்தனீ. இப்படி குடிச்சுத் தேயிறியே. மனிசி பிள்ளகள நினைச்சுப் பார்க்கக் கூடாதா? என்றபோது

    ‘‘என்னது? மனிசி பிள்ளைகளா? போடா.. டேய்... “என்றபடி பதிலுக்குக் காத்திருக்காது. வெளியேறினான். சொந்தக்கதையை வெளிப்படுத்த அவன் விரும்பவில்லை என்பது அவன் சொல்லித் தெரிய வேண்டியதில்லையே.

                சொந்தவீட்டின் மேல்பகுதியில் தனியனாய் வசித்துவரும் தீபன் நிலையைப் பின் பிறர் கூறக் கேட்ட விசாகனும் மனம் மிக வருந்தினான். தாயாரிடம் சென்று உணவருந்தி வாழும் அவன் வாழ்க்கையின் சோகத்தை புரிந்து கொண்ட விசாகனும் இவன் குடிப்பது போதைக்கு அல்ல. அவன் இறப்பை அவனே தேடிக்கொள்ள என்னும் சூட்சுமம் அப்போதுதான்  விசாகனுக்குப் புரிந்தது.

                 வேலை வீடு என்று வாழ்ந்து வரும் விசாகனுக்கு பல நாள் தொடர்பில்லாத தீபன் பற்றி நினைத்துப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. அன்றொருநாள் வேலைத்தளத்திலே விரைவாகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது ஒரு தொலைபேசி தொடர்ந்து அடித்துத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது. வேலைத்தளத்திலே உத்தரவு பெற்று தொலைபேசியை அழுத்தினான். தீபனின் அம்மாவே மறுமுனையில்

    “விசாகன் என்ர பிள்ள 2,3 நாளா சாப்பாட்டுக்கு வரல்ல. பிள்ளைக்கு என்னவோ, ஏதோ தெரியாது போய்ப் பார்க்கக் கூட எனக்கு அனுமதியில்ல. அவனை ஒருக்காப் போய்ப் பார்க்கிறியா மகன். எனக்கு மனம் திக்குத் திக்கென்று அடிக்குது‘‘ தாயின் தவிப்பை சொற்கள் தாராளமாகக் காட்டின.

    “ஓமம்மா. வையுங்க. நான் மற்ற வேலைக்குப் போகமுதல் போய்ப் பார்க்கிறன். பார்த்திட்டு உங்களுக்குச் சொல்றன். நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதீங்கள். அவனுக்கு ஒன்றும் நடந்திருக்காது‘‘ என்ற விசாகன் வேலை முடிந்து தீபன் வீட்டை அடைந்தான்.

           அழைப்புமணியை அழுத்தியபோது தீபன் மனைவியே கதவைத் திறந்தாள். தீபனைப் பற்றி விசாரித்தபோது மேலே இருக்கின்றார் என்ற பதிலுடன் மேலே போகும்படிச் சைகை காட்டினாள். மேலே சென்ற விசாகனுக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. பலநாள் துப்பரவு செய்யப்படாத வீட்டினுள் கெட்ட வாடையுடன் சாளரங்கள் என்றுமே மூடப்பட்டு சாக்கடை போன்ற மணமும் அருவருப்பை அள்ளித் தந்தது. மூக்கை இறுகப் பொத்தியபடி உள்ளே நுழைந்தான். வெளிவரத் துடித்துக்கொண்டிருக்கும் வாந்தியை அடக்கியபடி கட்டிலில் சரிந்து கிடக்கும் தீபனைக் கண்டான். அருகே போய் அவனை எழுப்பியபோதே தெரிந்தது. ஐயகோ....... நெஞ்சை நிமிர்த்தி ஜாம்பவானாக விதவித ஆடையுடன் கம்பீரமாகத் திரிந்த தீபன் உயிரற்று மடிந்து கிடக்கும் நிலையது கண்டு துடித்துப் போய்விட்டான் விசாகன்.

                    கீழே ஓடிவந்து காவல்துறைக்கு தொலைபேசி அழைப்பு விட்டவுடன் காவல் துறையும் விரைவு வாகனமும் விரைந்து வந்தது. பரிசோதித்த வைத்தியர் உயிர் பிரிந்து ஒரு நாளுக்கு மேலாகிவிட்டது என்று கூறியபடி உடலை உடன் கொண்டு சென்றனர். சொந்தவீட்டிலே, அநாதைப் பிணமாக ஒருநாள் முழுவதுமாகக் கிடந்த மனிதனை ஏறெடுத்தும் பார்க்காத மனிதர்களும் வாழுகின்ற புலம்பெயர் வாழ்க்கையானது தொடரும் நாட்களில் இன்னும் மோசமான நிலைக்குத் தான் போகப்போகின்றதா என்பது பற்றி நினைக்க நினைக்க வேதனையாக இருக்கின்றது. யாரும் எப்படியும் வாழலாம் என்னும் மனங்களெல்லாம் கொடூர வஞ்சனைப் பிண்டங்களாகிப் போய்விட்டன. அன்பு, பாசம், விட்டுக்கொடுப்புக்கள், மரியாதை, சமூகபயம், எதுவுமே இன்றி சுயநலப்பிசாசுகள் வாழுகின்ற பூமியில் நாமும் வாழுகின்றோம் என்னும்போது பயமாக இருக்கின்றது.  தீபன் ஒரு தடவையாவது தனது நிலையைச் சொல்லியிருக்கலாம்.  ஆறுதலாக அதற்குரிய பரிகாரத்தை வேறுவழியில் வேறுயாரிடமாவது அறிவுரை மூலம் பெற்றிருக்கலாம். ஆனால், தமக்குள்ளேளே போட்டு மறைத்து அநியாயமாக சின்ன வயசிலே வாழாமல் மடிந்துவிட்டானே. இப்படி எத்தனை ஆண்வர்க்கம், தமது குடும்பப் பிரச்சினைகளைத் தமக்குள்ளே போட்டு மறைத்து மாண்டுபோகின்றார்கள்.  சொல்லி அழ நாதியற்று குடிக்கு அடிமையாகித் தமது விதியைத் தாமே தேடிக்கொள்ளுகின்றார்கள் என்று எண்ணிபடி வீடுநோக்கிப் புறப்பட்டான் விசாகன்.

    கௌசி

    ஜேர்மனி 

    காலம் வரக்கூடிவரும்


    கோடைகாலப் பூரிப்பில் அகன்று விரிந்து கிளைகள் பரப்பி பச்சைப் பசேலென பொன் போன்று மின்னுகின்ற இலைகள் தொங்கவிடப்பட்டுரூபவ் நகரத்தின் நடுவே பலருக்குப் பலன் தரும் மிடுக்குடன் தலைநிமிர்ந்து நின்றதுரூபவ் அந்த விருட்சம்.  அம்மரத்தில் ஓர் பறவைரூபவ் நாள் தவறாது வந்தமர்ந்து நட்புடன் தன் இன்பதுன்பங்களைப் பேசி மகிழும்.  அம்மரத்தின்  அடியில் இரண்டு இருக்கைகள்ரூபவ் வருவோர் போவோர் இளைப்பாற அமர்ந்திருப்பதும்ரூபவ் இணையுடன் சல்லாபித்திருப்பதும்ரூபவ் சிலர் சோகச் சுமைகளைச் சுமந்த வண்ணம் வெறித்து பார்வையுடன் பெருமூச்சு விட்டபடி அதனுடைய சுகமான காற்றைச் சுவாசித்திக் கொண்டிருப்பதுமாக இருப்பார்கள். அதனருகே அழகாக வரிசையாக நடப்பட்டிருந்த மலர்ச் செடிகள்ரூபவ் பூத்துக் குலுங்கிப் புதுப் பெணகள்; போல் பொலிவுடன் காணப்பட்டன. பக்கம் வரும் மனிதர்கள் அதனைப் பார்த்து மகிழத்தான் முடியும். புறிக்க முடியாது. அவர்களைப் போலவே அந்த விருட்சமும் சிலநாட்களே வாழும் அந்த மலர்களின் அழகில் காதல் கொண்டு அதன் கவர்ச்சியில் தன்னை இழந்துரூபவ் இதன் இறப்புப் பிறப்பு  இரண்டையும் கண்டு கவலையுடன் தன் சிநேகிதப் பறவையுடன் துயரைத் தேற்றிக் கொள்ளும்.
                       காற்றுடன் இணைந்து கரகாட்டம் ஆடும் அந்த மரத்தின் சிலுசிலுப்பையும்ரூபவ் சிங்காரச் சிரிப்பொலியையும்ரூபவ் பறவைகள் கூட்டமாக அதில் வந்தமர்ந்து காதல் மொழி பேசுவதையும்ரூபவ் சண்டையிடுவதையும் சல்லாபித்திருப்பதையும் கடைக்கண்ணால் பார்த்து புன்னகை புரிந்திருக்கும்ரூபவ் அம்மலர்கள். அம்மலர்களில் தேனெடுக்க வட்டமிடும் வண்ணாத்திப் பூச்சிகளின் இரம்மியமான அழகை இரசித்த வண்ணம் ஆசையால்ரூபவ் ஆறுதல் இல்லாது அவாப்பிடித்து அலையும் மனிதர்களைப் பார்த்து சிரித்தபடிரூபவ் அந்த கோடைகாலத்தின் குதூகலத்துடன்  களித்திருந்ததுரூபவ் அவ்விருட்சம்.
                       காலதேவன் கரைந்தான். இலையுதிர் காலத்தின் ஆரம்பம் நெஞ்சுக்குள் ஓர் ஏக்கம் பற்றத் தொடங்கியது. அப்போதும் மஞ்சள்ரூபவ் செம்மஞ்சள்ரூபவ் மண்ணிறம் என நிறவேடிக்கை காட்டிக் கொண்டிருக்கும் அவ் விருட்சத்தின் தோற்றத்தை ஆசையுடன் கண்வெட்டாது வியப்புடன் நோக்குமரூபவ்; அம்மலர்கள். நாட்கள் நகர்ந்தன. தன்னுடைய உடைகள் ஒவ்வொன்றாகக் கழட்டத் தொடங்கியதுரூபவ் அவ்விருட்சம். சில்லெனக் குளிர் மெல்ல மெல்ல உடலை வருடத் தொடங்கியது. தன்னுடன் உறவாடிக் களித்திருந்த காற்றும் பித்துப் பிடித்தவன் போல் பேயாட்டம் ஆடத் தொடங்கியது. அதன் ஆவேஷத்திற்கு சிலநாட்கள் போராட்டத்தின் பின் ஆடைகள் எல்லாம் பொலபொலவென களைந்து அம்மணமாகியதுரூபவ் இவ்விருட்ஷம். மகிழ்ச்சிரூபவ் குதூகலம்ரூபவ் கொண்டாட்டம்ரூபவ் அனைத்தும் அடங்கி வெட்கத்தில் தலைகுனிந்து நின்ற அம்மரத்தில் அதன் உயிர் நண்பன் ஒன்று மட்டும் பறந்து வந்து அமர்ந்தது. நிசப்தமாய் நின்ற அம்மரத்துடன் உரையாடத் தொடங்கியதுரூபவ் அப்பறவை. கவலை வேண்டாம் நண்பா! எந்தப் பிரச்சினைக்கும் ஓர் தீர்வு இருக்கிறது. பொறுத்துக் கொள். மீண்டும் நீ உயிர்த்தெழுவாய். அவ் இடைக்காலத்தில்ரூபவ் உன்னோடு உறவாட புதிய ஒரு வெண்பஞ்சுக் கூட்டம் வந்து விடும். மனிதர்கள் வெளியிடும் கரியமில வாயுவை உள்ளெடுத்துரூபவ் அவர்களுக்கான பிராணவாயுவை வெளியகற்றி அவர்களுக்குப் பிராணனை வழங்கும்ரூபவ் உன்னை வாழ்த்தி வானகம் உனக்குத் தூவும் மாசுமறுவற்ற வெள்ளைப் பூக்கள். உன்னுடலில் தாங்கிக் கொள். மீண்டும் அந்தக் கோடைவெயிலில் நீ குளிக்கும் வரை புதுவித உணர்வு உனக்குள் ஏற்படும். இப்படித் தான் இம்மனிதர்களும். ஆழமான வேதனை பிரச்சினை என்று அல்லாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால்ரூபவ் எங்கோ ஒரு மூலையில் அப்பிரச்சினைக்குத் தீர்வு இருந்து காலம் வரக் கூடிவரும். கலங்காதே களித்திரு. என்று கூறி காற்று வெளியில் தன் இறக்கைகளை விரித்த வண்ணம் உலகின் அனைத்து விடயங்களையும் உள்வாங்கி வான் வெளியில் இன்பமாய்ப் பறந்து சென்றதுரூபவ் அப்பறவை.

    நேரத்தால் அழியாத ஒரு காதல்

    மாலை நேரம் . சூரியன் தன் கடைசி ஒளிக்கீற்றை பூமியின் நெற்றியில் மெதுவாகத் தடவி விட்டு மறைந்து கொண்டிருந்தது . அந்த வெளிச்சம் போல் , ஒரு மனிதன...