• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 6 ஏப்ரல், 2015

                                                                        

    உலகம் விஞ்ஞானத்தின் ஏணியில் ஏறி செவ்வாய்க்கிரகத்தைத் தொட எத்தனித்துக் கொண்டிருக்கின்றது. மனிதர்களும் அதற்காக துணிந்து விட்டார்கள். நாம் இன்னும் பழைமையைக் கட்டிக்கொண்டு தள்ளாட முடியுமா? இலக்கியங்களோ ஊடகத்துறைகளோ உலக வளர்ச்சிக்கு ஒப்ப போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்து கொண்டிருக்காவிட்டால் அவை புதை குழியில் தள்ளப்பட்டுவிடும். Harry Potter, Der Herr der Ring   போன்ற கற்பனைத் திரைப்படங்களை உருவாக்கிய அமெரிக்கா போன்ற மேல் உலகநாடுகள், இவ்வாறான திரைப்படங்களை உருவாக்குவதில் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நாம் மட்டும் ஏன் பழங்கலைகளை மட்டும் நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்த திரைப்படத்துறைக்கு தித்திப்பாய் தலைகாட்டியது ஐ என்னும் திரைப்படம். 

                   வேணு ரவிச்சந்திரன் அவர்களின் துணிவான தயாரிப்பில், சுபா அவர்களின் எழுத்தாற்றலில், சங்கர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ஐ என்ற திரைப்படத்தில் லீ என்கின்ற லிங்கேசனாகிய நடிகர் விக்ரம் தன் உழைப்பைப் பிழிந்து எம் கண்களுக்கு விரிந்து படைத்திருக்கின்றார். இயல்பாகவே ஒரு திரைப்படம் தன் நடிப்பில் உருவாகப் போவதற்கு  கையெழுதிட்டுவிட்டால் நடிகர் விக்ரம் தன்னை அக்கதாபாத்திரமாகவே மாற்றும் முனைப்பில் ஈடுபட்டுவிடுவார். தன் உழைப்பை முற்றுமுழுதுமாக அக்கதாபாத்திரத்திற்கு தந்திடுவார். அதுவும் நடிகர் விக்ரமின் ஐம்பதாவது திரைப்படம் என்றால் கேட்கவா வேண்டும். இரண்டு வருடங்கள் இப்படத்திற்காகத் தன் உடல் அமைப்பையே  மாற்றியிருக்கின்றார். நடிகர் விக்ரமுக்கு ஒரு சபாஷ். 

                  ஒரு திரைப்படத்தின் இரசiனையைத் தூண்டும் முக்கிய அம்சம் இசை. ஆஸ்கார் புகழ் ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருப்பது ஒரு பிளஸ் பொயின்ட் ஆக அமைகின்றது. பாடலாசிரியர்கள் கபிலன், மதன்கார்க்கி இருவரின் வரிகளுக்கும்  தன் இசை மூலம் உயிர் கொடுத்திருக்கின்றார். சிற்சில இடங்களில்; இவரின் இசையே இவ்விடங்களைத் திரிலாகக் காட்டுகின்றது. 

                    சங்கர் தன் இயக்கத்தின் மூலம் நடிகர்களை அக்கதாபாத்திரங்களாக நடமாடவிட்டிருக்கின்றார். சந்தானம் தனது வழமையான நகைச்சுவையில் தன்னை வெளிக்காட்டியுள்ளார். 

                 இத்திரைப்படம் தற்போது அநேகமாக எல்லோரும் பார்த்திருப்பீர்கள் என்றே கருதுகின்றேன். ஏனென்றால் நூறு கோடி செலவில் உருவாகி ஐம்பது நாட்களில் இருநூற்று இருபத்தைந்து கோடி வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது என்றால் கேட்கவா வேண்டும். ஒரு மனிதனின் மன வக்கிரம் அவனை எவ்வாறெல்லாம் கொடூரமான செயல்களைச் செய்யத் தூண்டும் என்பதையே இத்திரைப்படத்தில் அறியக் கூடியதாக இருக்கின்றது. ஐ என்பது பொருத்தமில்லாத தலைப்பாகவே எனக்குப்படுகின்றது. காதலை முதன்மைப்படுத்த எழுந்த கதையானால் அது வேறுவிதமாக அமைந்திருக்கும். தன்னை வீழ்த்தி தன்னை மீறி ஒருவன் உயர்ந்து கொண்டு போகும் போது ஒருவனுக்கு ஏற்படுகின்ற பொறாமை உணர்வை ஒரு கும்பலுடன் சேர்ந்து அழிக்க நினைப்பதும், கூடவே இருந்து ஒரு பெண்ணை அடைய நினைக்கும் ஒருவன் ஏமாறும் போது ஏற்படும் பொறாமை உணர்வும், ஒரு வலிமையுள்ளவனை வலியிழக்கச் செய்யும் தந்திர உத்திகளே இத்திரைப்படமாக விரிந்துள்ளது. 

                  பல ஆங்கிலத் திரைப்படங்களின் கலவை போல் ஒவ்வொரு ஒப்பனைகளும் அமைந்திருக்கின்றன். Hunch back, The Fly, Schönste und das Biest போன்ற திரைப்பட ஒப்பனைகள் இதில் காணப்படுகின்றன.


                                                               Schönste und das Biest 


                                                                    நன்றி  இணையம் 

                   கதாநாயகியாக நடிக்கின்ற ஏமி ஜாக்சன் நடிப்பில் உயிரோட்டத்தை என்னால் காணமுடியாது போகின்றது. என்னவோ தெரியவில்லை எம்மவர்களுக்கு சொந்தநாட்டில் இருக்கும் அழகிகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. இயல்பாகத் தமிழ் பெண்களுக்கேயுரிய நாணம் என்னும் உணர்வை ஏமி ஜாக்சனால் கொண்டுவரமுடியவில்லை. தமிழ்நாட்டில் அழகான தமிழ் நடிகைகளை சங்கரால் கண்டுபிடிக்க முடியவில்லையா? இதன் மூலம் திரைப்படத்தின் உண்மைத் தன்மை கெட்டுவிடுகின்றது. இதனை ஏனோ எமது தமிழ் இயக்குனர்கள் புரிந்து கொள்வதில்லை. ஏமி ஜாக்சன் நடித்த ஒரு வெளிநாட்டுக்காரியை எப்படி தமிழ்க் குடும்பப் பெண்ணாக சித்தரிக்கமுடியும். மதராசுபட்டினம் என்னும் திரைப்படத்தில் ஏமி ஜாக்சன் நடித்தது சாலச்சிறந்தது. ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஏனெனில், கதைக்கருவுக்கு ஒத்துப் போகின்றது. ஆனால், இத்திரைப்படத்திற்கு கதாநாயகித் தேர்வில் சங்கர் தோற்றுவிடுகிறார். கதைக் கருவுக்கேற்ப கதாநாயகி ஒரு தமிழ்க்குடும்பப் பெண்ணே. இதற்கு எங்கேயோ இருக்கும் ஒரு ஐரோப்பியப் பெண்ணை இதில் நடிக்க வைப்பதில் சங்கர் என்ன பெருமையைப் பெறுகின்றார் என்பது எனக்குப் புரியவில்லை. மொழி என்பதும் இனம் என்பது எமது அடையாளம். இதனை ஐரோப்பிய நாடுகளில் வாழ்பவர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள். ஒரு பொய்மையை மெய்மையாகக் காட்ட ஐரோப்பியர்கள் விரும்புவதில்லை. ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தும் ஜேர்மனியர்கள் ஆங்கிலம் பேசுவதில்லை. ஏனென்றால், மொழி ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ளவே பயன்படுகிறது. இதற்கு எதற்கு வலுக்கட்டாயமாக வேற்று ஒரு மொழியைப் பயன்படுத்த வேண்டும். இதுபோலவே தான் நடிகைகளும் புரியாத மொழியை கலாச்சாரத்தை ஒரு நடிகைக்கு கொடுப்பதனால், அதன் உண்மைத் தன்மையைக் கொண்டுவர முடியாது. ஒப்பனையிலும்  இவர் காப்பியடித்தாகவே படுகிறது. ஆனால், ஒப்பனைக் கலைஞர்கள் தமது பணியைச் சிறப்பாகவே செய்திருக்கின்றார்கள். இவ்வாறான கலைஞர்கள் புதிய வடிவ அமைப்பை ஒப்பனை செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

                 இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, காட்சியமைப்புக்கள், கதை, நடிப்பு, இசை அனைத்தும் என்னைக் கவர்ந்துள்ள வேளை, சிற்சில தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டிய தேவையும் எனக்கு உண்டு. ஏனென்றால், தமிழ் திரையுலகு முன்னிலைக்கு வருவதற்கு ஒவ்வொரு தமிழனும் விரும்புவான். அதன் கடினமும் புரிந்திருப்பான். வேற்று மொழித் திரைப்படங்களைப் பார்க்கும் பொது, எப்போது எம்மொழித் திரைப்படங்களை இப்படி நாம் பார்ப்போம் என்று அங்கலாய்ப்போம். அதனால், அதன் நெளிவு, சுழிவுகளை அகலக்கண் கொண்டு பார்த்து தீர்ப்பளிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழர்களுக்கும் உண்டு. 

    ஞாயிறு, 22 மார்ச், 2015

    என் மூளையின் சிதறல்கள்



    செவி வழி செல்லும் சிறந்த சிந்தனைகள்
    மனம் செல் வழியைச் சீராக்கும்
    •                                    


    வாழும் சூழல் மனம் செல் வழியை தீர்மானிக்கும்
    சூழல் சீரானால் மனம் செல்வழியும் சீராகும்



    மனம் செல் வழி சிறப்பாக அறிவான நூல்கள் துணை 
    மனம் செல்வழி சீர்கெட சிறப்பற்ற நண்பர் துணை
    •  

    மனம் செல்வழியை பலமணி நேரம் மௌனமாய் அவதானியுங்கள்
    தினம் தினம் அதன் போக்கை திரும்பிப் பாருங்கள்




    வாழ்க்கையின் பல விசயங்கள் இறக்கும் வரை
    எம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை
    நாளும் நாளும் புதுப்புதுத் தத்துவங்கள்
    கற்றுக் கொண்டே இருக்கின்றோம்.



    துடிக்கின்ற இரத்தம் துணை நாடாது
    மடிகின்ற வேளையில்
    மடிதேடும் மனித மனம்



    ஆத்திரம் விரைவாய் வரும்வேளை
    அறிவை விரைவாய்த் தீட்டிக் கொள்ளுங்கள் 
    அமைதி விரைவாய் தோற்றம் பெறும்



    நாம் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு தடவை
    திரும்பிப் பார்ப்போம்
    திருத்தம் வேண்டின் திருத்திக் கொள்வோம்
    முன்னேற்றம் வேண்டின் முன்னேறிக் கொள்வோம்



    திறமை தேங்கி நின்று குட்டையாகிவிடல் கூடாது
    ஆறுபோல் பெருக்கெடுத்து
    அடுத்தவருக்கும் பயன்பெற வேண்டும்.



    மருத்துவன்  வாய்ச்  சொல் மருந்துக்கு ஒப்பாகும்
    ஆசிரியன் வாய்ச் சொல் அறியாமைக்கு மருந்தாகும்



    ஆத்திரக்காரன் அவசரப் பேச்சு கழகத்தின் ஆரம்பம்
    அமைதியானவன் இன்சொல் கழகத்தின் முடிவாகும்



    இளையவர் இனிய சொல்
    எதிர்கால வாழ்வுக்கு இனிமை சேர்க்கும். 





    ஞாயிறு, 15 மார்ச், 2015

    புரியாத புதிர்

                  


    எமது வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகின்றது என்று எமக்குத் தெரிவதில்லை. இன்று ஒரு மாதிரி நாளை ஒரு மாதிரி. ஏன் அடுத்த நிமிடமே ஒரு மாதிரி. 
                  
                          வெளியிருந்து வரும் காரணிகள் தவிர எமது மூளையே எம்மைச் சில சமயங்களில் ஏமாற்றிவிடுவதும் உண்டு. சரியாகச் செய்துவிட வேண்டும் என்று ஒரு விடயத்தைச் செய்யும் போது எம்மை அறியாமலே பிழை ஏற்பட்டு எமது மதிப்புக்கு பங்கம் வந்துவிடுகின்றது. பேசுகின்ற போது கூட ஒன்றை நினைத்து ஒன்றைப் பேசும் நிலமைகூட ஏற்படுவது உண்டு. இங்கு எமது மூளை எம்மை ஏமாற்றிவிடுகின்றது. பிறர் சுட்டிக்காட்டும்போது கூனிக்குறுகி நின்று விடுகின்றோம். இச்சம்பவம் சந்திக்காத மனிதர்கள்   யாருமில்லை என்று சொல்லிவிடலாம். சில சமயங்களில் சில விடயங்களில் வீட்டு வேலைக்காரி கூட அறிவாளியாய்த் தொழிற்படுவாள். என்னால் முடியும். என்னால்தான் முடியும் என்று யாரும் கர்வம் கொள்ளல் மடத்தனம். உனக்குள்ளும் மடமை ஒழிந்திருக்கிறது என்று ஒரு சமயம் உணர்ந்து கொள்வாய். அது எப்படி, எங்கிருந்து, எவ்வகையில் வெளிப்படும் என்று யாருக்கும் புரியாது.  
                  நாம் என்று நாம் நினைப்பது கூட எமக்குச் சொந்தமில்லை என்பதே உண்மை. வெளிக்காரணிகளை, எமது என்று கையாளும் போது கூட நாம் தவறிவிடுகின்றோமே. சிலவற்றில் தவறு ஏற்படும் போது திருத்த முடியாது பிறர் உதவிகளை நாடுகின்றோம். எல்லாம் தெரிந்த மனிதன் என்று உலகில் யாருமில்லை. தெரிந்ததுகூட தெளிவுறும் போது அவன் உலகில் இருப்பதில்லை. இன்று எமக்கே சொந்தமானது. நாளை வேறு ஒருவருக்குச் சொந்தமாய் இருக்கின்றது. உதாரணமாகக்  குடியிருக்கும் வீடு. சொந்தப்பெயர் கூட சில சந்தர்ப்பங்களில் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இல்லை வேறு யாருக்கோ இப்பெயர் சொந்தமாய் இருக்கின்றது. எமக்கே உரிய இதயம் கூட அறுவைச்சிகிச்சையின் போது மாற்றப்பட்டு விடுகின்றது. உனக்கென்று எதுவுண்டு மானிடனே? இதை உணர்ந்தும் ஆசையில் உழன்று மாய்கின்றாயே!
                 நான் என்று சொல்வது உடலா? அதற்கு மேலே என்று விக்ரமன் பாணியில் சொல்லும் உயிரா? அதற்குமேலே இரண்டும் கலந்த உணர்வா? அந்த நானே என்னைப் புரிந்து கொள்ள முடியாதபோது நான் எனக்குச் சொந்தமாவதில்லையே. காலம் காலமாய் அளவாய், அவதானமாய், கண்ணும் கருத்துமாய் உடல் உறுப்புக்களுக்குப் பங்கம் வராத வகையில் பார்த்துப் பார்த்து எமது உடலுறுப்புக்களுக்கு உணவு பரிமாறுகின்றோம் அல்லவா! எங்கிருந்தோ வரும் நோய் எம்மை ஏமாற்றிவிடுகின்றதே! அவதானமாய்த் தானே இருந்தேன்? எப்படி இந்நோய் வந்தது என்று திகைத்து நிற்கின்றோம் அல்லவா? காரணம்.... கேள்விக்குறி. பிரபலங்களை நோய் வந்து பின்னுக்குத் தள்ளி விடுகின்றதே. யாரோ போட்ட துப்பாக்கிக் குண்டு நடிகர் எம்.ஜி.ஆரின குரலுக்குக் கங்கணம் கட்டியதல்லவா? 19 ஆண்டுகள் பிரபல அநுபவம் பெற்ற விமானஓட்டி ட்ரிஸ்டன் லோரைன் பிரிட்டிஸ்  விமாநிறுவனத்தால் வெளியகற்றப்பட்டார். காரணம் புகழ் புரிந்த சாதனை. விமானம் மூலம் கிடைத்த விமானம் வழங்கிய நச்சுவாயு. நினைக்காத ஏதோ வாழ்க்கையில் நடந்து வாழ்க்கையையே திசை திருப்பிவிடுகின்றது. 
               எம்மை அறியாமல் எமக்குள்ளே ஏற்படுகின்ற கோபம் யாருக்குச் சொந்தமானது எமக்குத்தானே. அதை நாம் விரும்பி ஏற்றோமா? துணிவென்று பாடம் சொல்லும் நாமே இறப்பை எண்ணித் துவண்டு விடுகின்றோமே. எமக்குள் ஏற்படும் இவ்வுணர்வு துணிவென்று நிமிர்ந்து நிற்கும் எம்மை ஏமாற்றி விடுகின்றதே. காலம் கற்றுத் தரும் பாடம் கல்லூரிப் பாடத்தை விட சாலச்சிறந்தது. வாழ்க்கை கற்றுத் தரும் பாடத்தின் போதுதான் முன்னோர் எழுதிவைத்த அநுபவக்குறிப்புக்கள் மனிதன் மனதில் உறைக்கின்றது. இதனால் தான் முதியோர் வாழ்வில் தேவை மூதுரை எமக்குத் தேவை.
                         
                              முற்றுமுழுதாக வாழ்வே புரியாத புதிர் தான் 

    சனி, 28 பிப்ரவரி, 2015

    எண்ணத் திடம் சுடராய் மிளிரட்டும்


    உயிரைத் தினமும்  குடித்திடும்
    உடனிருந்தே கொல்லும்  நோய்
    வெளியே இருந்து வரும் மருந்தே - உன்
    உடல் நோயைத் தீர்க்கும்

    இடியாய் வரும் துன்பமும்  ஒருநாள்
    மழையாய் மறுதலிக்கும்
    இன்பமும் துன்பமும்
    இணைவதுதான் இவ் வாழ்க்கை
    இழந்துவிட்ட  இன்பம்
    இணைகள் சேர இணைந்துவிடும்

    பகிர்ந்தளிக்கும் துன்பம்
    படிதாண்டி ஓடிவிடும்
    எண்ணி எண்ணி மாய்வதல்ல
    இவ் வாழ்க்கை
    எதிர்நீச்சல் போட்டுவிடு
    எண்ணமதைச் செயல்படுத்து

    எள்ளிநகை யாடிட இதுவல்லோ நேரம்
    எடுத்து வைக்கும் காலடிகள்
    ஏற்றத்தைக் காட்டிவிடும்
    பனிகாலம்  உறங்கும் மரம்
    கோடையிலே குதூகலிக்கும்
    கரை வந்த அலை கடல் நோக்கி
    மீண்டும் திரும்பிவிடும்

    கன்னத்துக் கரம் கடுதியாய் விலகட்டும்
    எண்ணத் திடம் சுடராய் மிளிரட்டும் 

    புதன், 11 பிப்ரவரி, 2015

    பனித் துளியும் உலகியலும்

       


    பஞ்சுப்பொதி யுடைத்து பால்வெளி வீதிநின்று
    பாருலகு காணவென்று பறந்து வந்த பனிக்குழாம்கள் 
    விண்ணெங்கும் பரந்து வீதியெங்கும் படுக்கை போட்டு
    வீடுகளின் கூரைகளில் ஆடைகளாய் அலங்கரித்து
    விருட்சங்களின் மேனிகளை வெள்ளாடையாய்ப் போர்த்தி
    இலையிழந்த கிளைகளிலே இன்பமாய் அமர்ந்திருக்கும்
    நிலையில்லா அழகை ரசிப்பதற்கு ஆயிரங் கண்கள் போதாது

    பூமியிலே பிறப்பெடுத்த பச்சைக் குழந்தையென 
    பாவங்கள் படியாத பரிசுத்த வடிவு கொண்டு
    பறந்து வரும் பனிக்குழாம்கள் வீதிக்கு வந்தவுடன்
    சகதியும் சேறுமாய் சாக்கடை அசுத்தமாய் 
    உருமாறி உருக்குலைந்து அருவருக்கும் தோற்றமாய்
    உருமாறும் தோற்றமாம்போல் மானுட வாழ்க்கையும்
    உருவாகும் போது உன்னதமாய் மாசுமறுவற்றிருக்கும்

    பொல்லாத பூமியிலே பொன்னெனப் பிறந்தவுடல் 
    பூமிக்கு விலக்காகி வாழ்வுக்கு வஞ்சனையாகி
    பொல்லாங்கு வாழ்க்கையிலே புகழுக்காய் பொய்யுரைத்து
    நிலையில்லா வாழ்வையெண்ணி பேராசை மிகக்கொண்டு
    முறையற்ற செயல்களினால் குறையுற்ற பணிசெய்து
    அடுத்தவரை ஏமாற்றி அவருழைப்பில் குளிர்காயும்
    மானிடப் பிறப்பும் பனியழகுபோல் மாறிவிடும்



    திங்கள், 26 ஜனவரி, 2015

    இன்றைய சிந்தனை

                                         


                                                              animierte-blumen-bilder-110

    சமுகத்திற்காய் தன்னை இழப்பதும் 
    கடமையில் கருத்தாவதும் 
    ஆலயம் தொழுவதிலும் மேலான தவம் 


    சந்தேகம் 

          animierte-babys-bilder-102

    1. கல்வியில் சந்தேகம் கொள்பவன் நிறைவான அறிவு பெறுவான். வாழ்வில் சந்தேகம் கொள்பவன் வாழ்வை இழப்பான்.
    2. பிள்ளைகளிடம் இடும் சந்தேகம் என்னும் முதலீட்டின் பயன் அவர்களிடம் இருந்து பெரும் வெறுப்பு என்னும் நட்டமே 
    3. நம்பிக்கை கொண்டு வளர்க்கும் பிள்ளை முன்னேற்றம் காணும்  சந்தேகம் கொண்டு வளர்க்கும் பிள்ளை சலிப்புடன் வாழும்.
    4. பெற்ற பிள்ளையிடம் கொள்ளும் சந்தேகம், எமக்கு சஞ்சலத்தையும் அவர்களுக்கு சங்கடத்தையும் தோற்றுவிக்கும் 

                                                                  ஆழ்ந்த அன்பு     

                                     ஆழ்ந்த அன்பில்   வீழ்ந்த மனத்தை 
                                     ஆட்டிப் படைக்கும் சோதனை -  அதை 
                                     மீட்டிப் பார்க்க விரும்பாது மனம் 
                                    மீண்டும் மீண்டும் ஆழ்ந்த அன்பில் வீழும் 

                                         animierte-babys-bilder-124

    எழுத்துகளுக்கும் ஆடை கட்ட வேண்டும்

      எழுத்துகளுக்கும் ஆடை கட்ட வேண்டும்   இலக்கியம் என்பது ஒரு சமூகம் வாழுகின்ற காலத்தைத் தெட்டத் தெளிவாக வேறு சமூகத்துக்கு , அடுத்த கால கட...