• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 30 டிசம்பர், 2013

    படிதாண்டிய பொழுது


                               
    கண்ணுக்குள்ளும் கருத்துக்குள்ளும் அது புகுந்துவிட்டால், கள்ளமும் தவிப்பும் துணிவும் எங்கிருந்துதான் வருகின்றது என்பது புரியாது. புரிகின்ற வயதுதான், தெளிவான மனதுதான், எங்கிருந்துதான் அது பொங்குகின்றது. சூடேற்றும்போதுதான் பால் பொங்குகின்றது. சர்க்கரை சேர்க்கும்போதுதான் தின்பண்டங்கள் இனிப்பாகின்றன. பிரச்சினைகள் வருகின்ற போதுதான் துன்பமும் வந்தடைகின்றது. அதுபோல், ஒரு மனதுள் வேறு ஒரு மனது இணைந்து புகுந்துவிட்டால் காதல் அணைகடந்து பொங்கும். இதை வயதுக்கோளாறு என்பதா? உடலுள் உற்பத்தியாகி உலகையே உலுக்கும் ஹோமனின் தொழிற்பாடு என்பதா?
             எதுவாக இருந்தாலும் இதுவே மிருதுளாவிற்கும் நித்திரையைத் தொலைத்தது. நினைவுகளை ஒருமுகப்படுத்தியது. எதிலும் எவற்றிலும் அவன் நினைவே அவளை ஆட்டிப்படைத்தது. என்றோ ஒருநாள் ஒரு நிகழ்வில் பவனைச் சந்தித்தாள். எத்தனையோ இளைஞர்கள் அந்நிகழ்வில் எதிர்ப்பட்டாலும், பவனே அவள் கண்களுக்கு மன்மதனாய்த் தெரிந்தான். காந்தக்கண்கள் அவன் முகத்தையே கவர்ந்திழுத்துக் கொண்டன. நிகழ்வு முடிந்தது. ஆனால், அவன் நினைவு தொடர்ந்தது. இளையவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இவ்விடயத்தில் மிக அதிகமே. பெற்றார் கட்டளைக்கு அடிபணியும் எண்ணமும் ஷஷஉங்களை மீறி உங்களுக்குத் தெரியாது எந்த ஒரு பெடியனையும் நான் காதலிக்கப் போவதில்லை|| என்று உத்தரவு தந்த சொல்லானது, செயலால்  மாறுபடும். இவ்வாறுதான் மிருதுளா நடவடிக்கையும் நாளும் பொழுதும் நிதானமாய் வளர்ந்தது.
             “எப்படி பவனுடன் தொடர்பு கொள்வேன். என் சிந்தைக்குள் சிறைப்பட்டுவிட்ட அவன் மனதுக்குள் நான் எப்படிச் சிறைப்பட முடியும். எனது வீட்டிலோ கட்டுப்பாடு. யாருமே அறியாது, வேறு ஒரு பெயரில் நான் நுழைந்து விளையாடும், சிரித்துக் கும்மாளம் இடும், உலகத்து நண்பர்கள் அனைவருடனும் பக்கத்திலிருந்து பழகுவது போல் கைகுலுக்கும் முகப்புத்தகத்துக்குள் நுழைந்து பக்கம் பக்கமாய்த் தேடலாமா! இல்லை என் பவனைத் தேடித்தரும்படி ரிவிட்டர்  பறவையை சிறகடிக்க விடலாமா! இல்லை லிங்கடினுக்கூடாகத் துருவித் துருவித் தேடலாமா! இல்லை ஸ்கைப் ஐடியை பெயர் கொடுத்துத் தேடலாமா! ஓகோ எம்.எஸ்.என் மூலம் அறியலாமா! ஓகோ உலகமெல்லாம் சட் பண்ணும் வோட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாமா! சா..... எதுவுமே கைகொடுப்பதாக இல்லையே. ஒருவேளை அவனும் என்னைப் போல் தந்திரமாக வேறு ஒரு பெயரில்தான் சமூகத்தளங்களினூடாக சல்லடை போடுகின்றானோ! இவ்வாறு மிருதுளா தன் எண்ணங்களால் நாட்களை ஏக்கத்துடனும் வலியுடனும் நகர்த்தினாள்.
              எங்கோ போகிறது இவ்வுலகு? உலகத்து மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கவும், கலாசாரம் பண்பாடு அனைத்தையும் ஒன்று கலக்கவும் முகந்தெரியாதவர்களுடன் எழுத்தின் மூலமும் பேச்சின் மூலமும் தொடர்புகொள்ளவும் பலவிதமான இணையத் தொடர்புகள் தற்போது உலகப்பந்தில் உலாவருகின்றன. இதை உதவிக்காய் எடுக்கும் மக்களில் இளையோர் பெரும்பங்கு வகிக்கின்றனர். தேவைகருதி தொழிற்படும் இத்தளங்களினால் சமுதாய சீர்கேடுகள் கட்டுக்கடங்காது செல்வது தவிர்க்கமுடியாதுள்ளது.

              சட்டென அவள் எண்ணத்தில் அவ்விழாவில் பவனுடன் சரளமாக சிரித்துச் சிரித்துப் பேசிய தன் ஒரு நண்பியின் நினைவுகள் தட்டியது. உடனே அவள் விரல்களும் அந்நண்பியின் தொலைபேசி நம்பரைத் தட்டியது.
    “சத்யா... நான் மிருதுளா..”
    “என்னடி! ரெலிபோனே எடுக்காத நீ. இன்றைக்கு என்னைத் தேடி எடுக்கிறாய். என்ன நடந்தது அம்மையாருக்கு? எங்கே இருந்துடி என்ர நம்பரைச் சுட்டநீ” ஆச்சரியத்தில் அளவுகடந்த ஆர்வம் அவள் நண்பி சத்யாவிற்கு.
    “இல்லை. சும்மாதான். உனக்கு பவனுடைய முகநூல் பெயர் தெரியுமா?
    “ஆஹா...... இது புதிசா இருக்கே? என்ன விசயம்? மனசுக்குள்ள தூண்டில் போட்டாச்சோ? என்னவா இருந்தாலும் என்னட்டச் சொல்லிப்போடு மவளே. பிறகு உன்ர அம்மாட்ட நான் தப்ப முடியாது. இருந்தாலும் மிருதுளாக்கு ஒன்டென்றால், என்ர இதயம் தாங்காதுப்பா....”
    “சும்மா போடி. எதுக்கெடுத்தாலும் சந்தேகம்... ஏன் பிரெண்டா பழகக் கூடாதா? சும்மா நோண்டிக் கொண்டு.... தெரிந்தா சொல்லு. இல்லாட்டி விடு. அவரென்ன பெரிய மன்மதனா? கெஞ்சிக் கெஞ்சி பெயரை எடுக்க....”
    “சரிசரி.... அலட்டாத..... நிஜம். இதுதான் அவன்ட பேஸ்புக் பெயர். விசயம் முடிந்தது என்று கைவிட்டுறாத அம்மா..... எனக்கும் எழுது. அல்லது ரெலிபோன் எடு...”
    “இதென்னடி புதுசா இருக்கு. புதினமான பெயர் வச்சிருக்கான்...”
    “இப்பிடித்தான் எல்லோரும். சொந்தப் பெயர் மறைத்து. நல்லபிள்ளைகளுக்கு ஆடுதுகள். நான் அப்பிடியில்லப்பா. செய்றதை வெளிப்படையாச் செய்ய வேண்டும். எதுக்கு ஒளிவு மறைவு. இப்பிடியானவர்கள் தான் பிழைகளை தயங்காம செய்றாங்க. சிலருக்கு 2, 3 பேஸ்புக் பெயர்கள் இருக்கு. கவனம் மிருதுளா. பேஸ்புக் பொல்லாத ஊடகம். பார்த்து நடந்துக்க. நான் சொல்லிப்போட்டன். மற்றது உன்ர இஸ்டம்.... நான் வைக்கிரன்டி”
                 தகவல் தந்த நண்பியைத் தாண்டிப் பாய்ந்தது மனம் சின்னத் தகவல்தான் ஆனால், சிந்தையை நிறைக்கும் தகவல். யார் சொல்லித்தான் அறிவுரை கேட்கப் போகிறது மனம். அதற்குத்தான் நிலையான குணமே இல்லையே. அது அடிக்கடி பாயும் குரங்குதானே. ஒன்றை நினைத்துவிட்டால், சுற்றிச்சுற்றி அதற்குள்ளேயே நின்று சுழலும். அது மிருதுளாவுக்கு பவனைச் சுற்றிச் சுற்றியே சுழல்கிறது.
                  ஓடிப்போய் லப்டொப்பைத் திறந்தாள். பட்டனை அழுத்தினாள்.
     “இதோ வந்திட்டன்....”|
    என்று கூறிப் பணிவிடைக்குத் தயாரானது லப்டொப். முகப்புத்தகம் பந்திவிரித்து முன்னே வந்து அமர்ந்தது. தன்னுடைய அழகான படத்துடன் விரிந்த பக்கத்துக்குள் மிருதுளா நுழைந்தாள். விழுந்து கிடந்த பற்பல செய்திகள் அவள் சுவைப்பதற்காய் சிவப்பு வெளிச்சம் காட்டி வரவேற்றது.
    “இவை என்ன சுவை? என் சுவை பவனே... அச்சுவையன்றி எச்சுவையும் இன்றெனக்கு தித்திக்கும் சுவையல்ல....”
    என்ற வண்ணம் முகப்புத்தகத்தில் நிஜம் கொடுத்தாள். நிழற்படம் கண்முன்னே நிஜமானது. ஆகா......... ஆயிரம் மின்வார்ட் மின்சாரம் அவள் மனதுள் பாய்ந்தது. படபடவென்று ஒரு மெசேஜ்
    “என்னை நண்பியாக ஏற்றுக்கொள்வீர்களா?
    அழகான பெண்ணென்றால், நிராகரிப்பார் யாருண்டு. குணமெல்லாம் இரண்டாம் பட்சம்தானே. பழகியபின் தெரிவதுதான் குணம். பார்த்தவுடன் பதிவது முகமதின் பொலிவுதானே. மனதை வெளிக்காட்டும் பண்பு முகத்தில் இருக்குமானால், இந்த அழகுக்கு அடிபணியும் பண்பு என்பது உலகில் இல்லாமலே இருந்திருக்கும்.               
              பவனுக்கு மனதுக்குள் பெரிதான ஆர்வம் பதியவில்லையானாலும், அழகொன்று ஆர்வமாய் அழைக்கிறது. பேசித்தான் பார்ப்போமே. சம்மதம் தெரிவித்தாயிற்று. தொடர்ந்தது மொழியூடு உளப்பாங்கு வெளிப்பாடு. வளர்ந்தது காதலென்னும் உறுதிப்பாடு. உள்ளத்தை எப்படித்தான் தொலைத்தாளோ! தன் மதத்தையே மறந்துவிட்டு வேறு மதத்தில் மயங்கிக்கிடக்கும் மனமுள்ளவன், தன் மனதுள் சேர்ந்திருப்பாளை பிரித்தெறிய எவ்வளவு நேரமாகும் என்று மிருதுளா நினைத்துப் பார்க்கவில்லை.
                வீட்டிலிருப்பார் காலை எழுந்திருக்க நேரமாகும் என்பதை அறிந்து கொண்ட மிருதுளா விடிகாலை வேளை கண்முழுப்பாள். மெதுவாக பூனை பதுங்கிவருவதுபோல் வரவேற்பறையை நாடுவாள். பவனுடைய இலக்கங்களை மெல்லத்தட்டுவாள். எதிர்பார்த்திருந்த அவனோ ஒரு அழைப்பிலேயே முழித்துக் கொள்வான். கள்ளத்தனம் மனதுள் புகுந்து கொண்டால், மனக்கட்டுப்பாடும் அடக்கமும் பயமும் இருப்பிடம் இன்றி மறைந்துவிடும்.
    “நித்திரையைத் தொலைத்துவிட்டேன். எப்போது விடியும் என்று காத்திருப்பதனால், கண்ணில் உறக்க வாசனையே மறந்துவிட்டேன். என்னைப்பாடாய்ப் படுத்தும் இந்நோய் மறைய என்னதான் செய்வேனோ தெரியாது பவன்....”
    தித்திக்கும் அவள் பேச்சில் உலகத்தையே மறந்துவிடுவான் பவன். எடுத்துரைக்கும் வார்த்தைகள் நாடிநரம்புகளை மீட்டிப்பார்த்தது. குரலோ இனிமை, வடிவழகோ சொர்க்கம். வார்த்தைகளோ மனத்தூண்டில். இத்தனையும் கசக்கிப்பிழிய எப்படியோ அவளைச் சந்திக்கவேண்டும் என்று முடிவாய் முடிவெடுத்தான்.
    “எவ்வளவு நாட்கள்தான் இப்படி அருகே அமர்ந்திருக்காது. எங்கோ இருந்து நீ என்னைக் கொல்வது. சந்திக்கவேண்டும். சேர்ந்தே இருந்து கதைபேச வேண்டும். உன் மூச்சுக்காற்றின் சுவாசத்தை அருகே நான் உணர வேண்டும். எனக்கு நீ. உனக்கு நான் என்று நாமாகவே நிச்சயித்துவிட்டோம். நாளும் பொழுதும் உனக்காகவே ஏங்கும் என் ஏக்கத்தை பேச்சு ஒன்றும் வெளிப்படுத்திவிடாது அது வெறும் வார்த்தை ஊடகமே. நீ என் வாழ்வு, உயிர் மூச்சு. என்னைக் கொல்லாதே. உன்னைக் காணவேண்டும். நேரடியாக ஓராயிரம் வார்த்தைகள் பேசவேண்டும். சந்திப்போம், அளவுகடந்து எனக்குள் பாயும் ஆர்வநீரை வேறு பாதைக்குத் திசைதிருப்பிவிடாதே. பிளீஸ்........” பவனின் வார்த்தைகளில் தன் உறுதிப்பாட்டை மிருதுளா துடைத்தெறிந்தாள்.
                      ஜேர்மனி Nordreihn westfalen   இல் பிரபல்யமான நகரம் டுசுல்டோப். அதன் புகையிரதத் தளத்தில் பவனின் ஆசை நிறைவேற்றப்படும் நாள். பொதுவாகவே காதலர்கள் கைகுலுக்கும் புiயிரதநிலையம். இங்கு உண்மைக்காதலும் உறவாடும். பொய்யான காதலும் புகலிடம் தேடும்.
                       இருவரும் இருவேறு ரயிலில் வந்து ஒரு இடத்தில் சந்தித்தனர். கண்டவுடன் இருகரங்களும் குலுக்கும்போது மனதும் பரிமாறிக் கொண்டது. சட்டென்று மிருதுளாவை இறுக்கமாய் பவன் கட்டிப்பிடித்தான். அது அவளுக்குப் பயமாக இருந்தாலும், பிடித்துக் கொண்டது. இளமைப்பருவத்தின் இதமான சுகங்கள் இணையும்போது ஒதுக்கிக் கொள்ள இதயம் இடம்தராது. சிலநிமிடங்கள் தம்மை மறந்து இமைகள் இறுகப்பற்றிக்கொள்ள இருந்தவர்களை இரயலின் இரைச்சல் இடைநிறுத்தியது.
                       முறையான கட்டுப்பாடு கலாச்சார உணர்வுகளுடன் வளர்க்கப்படும் இளையவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வது வழமை. கலாசாரத்தை ஊட்டி வளர்ப்பதற்கும் மனதுக்குள் பதிய வைப்பதற்கும் வேறுபாடு உண்டு. ஊட்டி வளர்த்த பிள்ளை இன்று மதிமயங்கி நிற்கின்றாள் என்றால், கவனம் எடுத்ததில் தவறுண்டு என்றுதானே கருதவேண்டும். பெற்றோரோ பண்பை மதிப்பவர்கள். கலாசாரத்தில் கவனம் எடுப்பவர்கள். பிள்ளை தடுமாறுகின்றது என்றால், அங்கு கலாசாரக் கட்டுப்பாடு விரும்பாதவகையில் ஊட்டப்பட்டுள்ளது என்றுதானே அர்த்தம்.
                       கையிலே வைத்திருந்த கோலாப் போத்தலை மிருதுளா கைகளுக்குள் பவன் திணித்தான். தானும் ஒரு கோலாவைப் பருகினான்.
    ஷஷகுடி மிருதுளா.... நாங்கள் ஸ்ரட்டுக்குள் போவோமா. அங்கே ஒரு இடம் இருக்கிறது. நாங்கள் ரெண்டு பேரும் தனியாகக் கதைத்துக் கொண்டிருக்கலாம். கோக் பருகியபடி இருவரும் கைகோர்த்தவண்ணம் நடந்தனர். நடை தொடர நிதானம் மெல்லமெல்ல மிருதுளா கட்டுப்பாட்டை தாண்டி விடைபெற்றது. கோக் தந்த மயக்கம் பவன் தோள்களில் சாய்ந்தது. குடிபானத்துள் கரைந்து தன் குணம் மாறிய கோலா மிருதுளா போக்கை தடம்மாறச் செய்தது.
                   ஏமாந்தவளைத் தன் வழிக்குக் கொண்டுவர பவனுக்கு நாளாகவில்லை. தமிழனென்னும் பெயரில் தரங்கெட்ட வாழ்வைத் திறமான வாழ்வென்று வாழும் நற்குணங்கெட்ட கேடி பவன் என்று புரியாத அப்பாவி மிருதுளா, கட்டிலில் சல்லடையானாள். தன் இச்சைக்கு மிச்சம் வைக்காது அமைதியாய் நடந்தேற்றிய காமத்து களியாட்டம், காட்சிப்படமாக்க எடுத்த முயற்சியிலும் வெற்றி கண்டான். தன்னிலை மறந்து துவண்டுகிடந்த மிருதுளா விழித்துக் கொண்டாள்.
    “என்ன நடந்தது பவன். உடம்பெல்லாம் ஒரே அலுப்பாக இருக்கிறதே. எப்படி நான் இங்கே...... இது யாருடைய வீடு? என்ன நடந்தது....?
    “மிருதுளா.... நீ மயங்கிப் போயிட்டாய். அதுதான் உன்னை இங்கே கொண்டுவந்தேன். இது என்னுடைய பிரண்ட்டினுடைய வீடு. நீ எழும்பும்வரைதான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். வா போவோம்”
    “என்ன கதைக்கிறீங்கள்? மயங்கினால், ஹொஸ்பிட்டலுக்கெல்லோ கொண்டு போகவேணும். இது என்ன யாரோ ஒருவருடைய வீட்டிலே கொண்டு படுக்க விட்டிருக்கின்றீர்கள்”
    “ஹொஸ்பிட்டலுக்குப் போனால், உங்கட வீட்டில தெரிஞ்சிருமெல்லா மிருதுளா... என்ன கதைக்கிறாய் நீ?
                சட்டென்று எழுந்தாள். கால்கள் தடுமாறின. உடம்பெல்லாம் உலுக்கி எடுத்தது வலி. பவனுடைய சேட்டை இறுகப்பிடித்தாள். அவனை ஒருதரம் முறைத்துப் பார்hத்தாள்.
    “உண்மையைச் சொல் பவன். என்னை என்ன செய்தாய்? சொல் பவன் என்ன செய்தாய்?
    “உன்னை நான் என்ன செய்வது? வா வீட்டிற்குப் போகலாம்....”
    “இல்லை. உண்மையைச் சொல்... “
    “என்ன உண்மை உனக்கு வேண்டும். வருவதாய் இருந்தால், வா! இல்லை எப்படியாவது போ!
                 இறுக்கமாகப் பேசிய அவன் வார்த்தைகளால், கலங்கிப் போனாள் மிருதுளா. பெற்றோரை மதிக்காது தன் காதல் பெரிதென்று நம்பி இரகசியமாய் வந்தது பிழையாகப் போய்விட்டதோ என்று மனதுக்குள் பயம் பற்றிக் கொண்டது. ஆனால், தனக்கு ஏதோ நடந்துவிட்டது என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது. ஆனால், இனிப் புரிந்துதான் என்ன செய்ய முடியும். பெண்களுக்கு தவறு நடந்துவிட்டால் அது கலங்கம். ஆண்களுக்கோ அது வெறும் சம்பவம்.
                 
              வீதிக்கு வந்தாள். தனியே நடந்தாள். இரயிலில் ஏறினாள். வீட்டின் வாசல் அழைப்புமணியை அழுத்தினாள். கண்கள் குளமாகத் தாய்,
    “எங்கே மிருதுளா போன நீ. உன்ர ரெலிபோனுக்கு ரிங் பண்ணி ரிங் பண்ணி அலுத்துப் போனன். என்ன நடந்ததோ ஏது நடந்ததோ என்று பயந்து கொண்டிருக்கிறன். கெதியா வாறதென்று தானே சொன்னாய். நெஞ்செல்லாம் நடுங்குது. உனக்கு என்னவாவது நடந்தால் என்னால தாங்கமுடியுமா பிள்ள. எனக்கு உன்ன விட்டால் வேற யாரிருக்கிறா பிள்ள.....” பாசத்தின் பரிதவிப்பு இங்கு பதறுகிறது. இப் பாசத்தின் பெறுமதியைப் புரியாத இளம் உள்ளங்கள் பெற்றோரைத் தவிக்கவிடுகின்றன.
                    ஏதோ ஒரு காரணத்தை இதற்காகவே தயார்படுத்தத் தெரிந்தவர்கள் தானே பிள்ளைகள். பெற்றோரின் கண்களைக் கட்டுவதாக எண்ணித் தம் கண்களையே குருடாக்கும் இளந்தலைமுறையினரே இன்று அதிகம். காலத்தின் விசையிலே கணனித்திரையில் இவள் அலங்கோலக்காட்சியைக் கண்டுகளித்த இளையவர்கள் செய்தி இவள் காதுகளில் கசிந்தது. 
                     நம்பிக்கைத் துரோகம் என்னும் ஆயுதம் தாங்கிய பவன் இப்போது வேறு பெயரில் முகப்புத்தகத்தில் தரிசனம் தருகின்றான். தன் தொடர்பை முறித்துக் கொண்ட பவனின் செய்கைகளை ஆதாரத்துடன் காவல்துறைக்கு தெரியப்படுத்திய மிருதுளா, இன்று துடைத்தெறியப்பட்ட தன் பெண்மையை எண்ணித் துவண்டுவிடவில்லை. தன் அறிவென்னும் கருவி கொண்டு அறியாமையை அகற்றி வாழத் துணி;ந்துவிட்டாள். ஆண்வர்க்கத்தின் மத்தியில் கேடுகெட்ட சில மனித மிருகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் துறையில் தன்னை அர்ப்பணித்தாள். அறியாத வயதில் புரியாத பருவத்தில் தவறிவிட எத்தனிக்கும் இளந்தலைமுறையினருக்கு கட்டுபாடற்ற அறிவுரைகளைக் கச்சிதமாய்ப் புகட்டுகின்றாள். இணையத்திலே தனக்காய் ஒரு தளம் அமைத்து குழுக்களாய் பெண்கள் குழாம் அமைத்தாள். ஸ்கைப்பிலே குழு அழைப்பு மூலம் பலரை ஒன்றாக அழைத்து இளையவர்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கின்றாள்.

    வாசகர்களே! உங்கள் எண்ணங்களைப் பதியவிடுங்கள்

    முகநூல்  கருத்துக்கள் இதில் இணைத்துள்ளேன்










    வியாழன், 26 டிசம்பர், 2013

    சொர்க்கம் எங்கே



          


    ஆணே ஜாக்கிரதை உன் கடிவாளமோ  பெண்ணின் கையில்
    உடல்பலம் உன்னிடம் மனபலம் பெண்ணிடம்
    உடல் பலம் ஒருநாள் குன்றிப்போம்
    மனபலம் குன்றுவதில்லை புரிந்துகொள்
    உன்  அருகே அவள்  இருந்தால் நீ அழகு
    அவளின்றி நீ செல்லும் விழாக்கள் அழகோ சொல்
    அவளின்றி நீ வாழும் இல்லமும் அழகோ சொல்
    தூண்டி விளங்கிடும் விளக்குப் போல்
    உலகில் நீ விளங்கிட தூண்டுபவள் அவளே – உன்னைத்
    துலங்கச் செய்பவள் அவளே  
    பெண்ணின் திறம் குறைந்திடில்  
    உந்தன் நடையும் நிமிருமோ சொல்
    அழகாய் இருப்பாள் அழகைக் கொடுப்பாள்
    அறிவாய் இருப்பாள் அறிவைக் கொடுப்பாள்
    நிலையாய்  உன் பெயர் உலகில் நிலைத்திட
    உனக்காய் வாரிசை திடமாய்ச் சுமப்பாள்
    சுற்றம் சேர்ப்பாள் சொந்தம் காப்பாள்
    இயங்கா உன்னை இயங்க வைப்பாள்
    வற்றாத கடலென வாழ் இன்பம் தருவாள்
    தன்னைத் தாழ்த்தி உன்னை உயர்த்துவாள் – நீ
    தேடிப்பெற்ற செல்வம் அவளே – உன்னைத்
    தாங்கி நிற்கும் பூமியும் அவளே
    பொறுமையும் பண்பும் புகழிடம் கொண்டதால்
    பூமியை விஞ்சியும் வாழ்ந்திடத் துணிவாள் – அவள்
    பூகம்பமாய் வெடித்துப் பொங்கி எழுந்தால்
    பூமியில் நீயும் வாழ்ந்திடத் தகுமோ
    புழுதியில் விழுந்து சாக்கடையாவாய்  
    புரிந்து கொண்டு பரிந்து வாழ்ந்தால் – இப்
    பூமியே உனக்கு சொர்க்கம் ஆகும்


    திங்கள், 23 டிசம்பர், 2013

    நத்தார் செய்தி




    Christmas scraps, graphics, animate gif images



    உலகெங்கும் இன்று உன்னதப் பெருநாள்

    உலகுய்ய இறை தூதன் உதித்திட்ட நாளென உலகுரைக்கும் நாள்

    கிருமிகள் அகற்றிடும் சாணமே அவர் முதற் சுவாசம் – மனிதன்

    வெட்டித் தள்ளிய வைக்கோலே முதற் பஞ்சணையாகும்

    ஒதுங்கத் தயங்கும் ஓரிடத்தில் அவர் முதல் வருகையாகும் – இன்று

    உலகமே கொண்டாடிடும் முதல் நாளும் அதுவாகும் – இன்று

    விரிந்து பரந்த உலகெங்கும் அவர் பரந்து வாழும் இடங்களாகும்

    நிறைந்தவர் வாழ் மனங்களில் மனிதக் கிருமிகள் அகன்றிட வேண்டும்

    இறை செய்தி கொண்டே இவ்வுலகு வந்த தூதரென

    இவ்வுலகு உரைத்தாலும் இறைமைந்தன் நானென

    இவர் உரைத்து யாரும் கேட்டதில்லை  

    மனிதனே மனிதனை உயர்த்துகிறான்

    மனிதனே மனிதனைக் கடவுளாய் மாற்றுகிறான்

    யுகம் யுகமாய் மனிதர்கள் தோன்றுகிறார்

    உலகுய்ய தம்மை உலகுக்காய் தருகின்றார்

    எவர் வந்து பிறந்தாலும் மனிதன் தனை மாற்றுவதில்லை

    தமக்குள்ளே பேதமைகள் காட்டிடுவார்

    தமை விஞ்சி மேலோருவன் தலை எடுக்க தடுத்திடுவார்

    வீண் பெருமை வளர்த்திட்டு வீண் வாதம் செய்திடுவார்

    விளங்காத பொருள்களையும் விரும்புவதாய்க் காட்டிடுவார்

    விளக்கங்கள் தெரிந்தெதையும் புரிந்துகொள்ள விரும்பிடார்

    புரிந்து கொண்ட விளக்கத்தையும் பயத்தினால் மறுத்திடுவர்

    விளங்க ஒண்ணா மனித மனம் விளங்க வேண்டி

    விடியலும்தான் மனித மனம் காண வேண்டி – மீண்டுமாய்

    இறை தூதன் வந்துலகில் பிறக்க வேண்டும்

    விடிவெள்ளி மனித மனங்களில் ஒளிர வேண்டும்

    அனைவருக்கும் இனியநத்தார் தின வாழ்த்துகள்

     Free Pictures


    புதன், 18 டிசம்பர், 2013

    வாழ்க்கைப் பாடம்




    மனிதர்களுக்குத் தவிர்க்கமுடியாத ஒன்று உண்டென்றால், அது வாழ்தலே. எவ்வித ஈடுபாடும் இல்லாமல், எம்மை அறியாமலே பெறுவது எது என்றால், அது அநுபவமே. அநுபவம் என்றால், என்ன என்று ஒருவன் ஒரு துறவியிடம் கேட்டானாம், அவரும் அநுபவித்துப்பார் என்றாராம். எமக்குள்ளே நுழைந்து எதிர்பார்க்காமல் எம்மிடம் வந்து இணைந்துகொள்ளும் அநுபவத்தை நாம் வாழ்ந்து பார்த்துத்தான் உணரமுடியும். அதேபோல் வாழ்க்கையை வாழ்ந்தே ஆகவேண்டும். துன்பத்தைக் கண்டு துவண்டுவிடுகின்றீர்களா? அதனால்தானே இன்பத்தின் இனிமையை உணருகின்றீர்கள். இரவு தோன்றும் போதுதானே பகலின் மேன்மையை நாம் உணருகின்றோம். குளிர்காலம் வருகின்றபோதுதானே கோடை காலத்தின் மேன்மை உணரப்படுகின்றது. வெயிலில்தானே நிழலின் அருமை புரிகின்றது. பாவங்கள் தோன்றும் போதுதானே மனிதாபிமானம் வெளிப்படுகின்றது. நோயின்போதுதானே உடல்நலத்தின் சுகம் புரிகின்றது. 

            எனவே, வாழ்க்கை வாழ்வதற்கே. துன்பத்தைக் கண்டு துவண்டுவிடாமல் நல்லதோர் அநுபவப்பாடம் கற்ற உணர்வுடன் மனதைத் திருப்திப்படுத்தி வாழ்க்கையின் இனிமையை இறப்புவரைத் தேடிக் கொண்டே இருப்போம். வாழ்வின் சிக்கல்களை பிறர் எடுத்துக் கூறும்போது யாருக்குமே அதன் தாக்கம் புலப்படாது. நோயின் தக்கத்தைப் போல அதை அநுபவித்துப் பார்க்கும் போதுதான் உண்மை புரியும். எனவே தான் அநுபவம் சொல்லிப்புரிவதில்லை. அநுபவித்துப் புரியவேண்டும் என்னும் கருத்து இருக்கின்றது. இதுவே எமது வாரிசுகள் எம்மைக் கலங்கவைக்கும்போது எமது அநுபவத்தில்தான் சொல்கின்றோம் என்றால், அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எமது வயது வருகின்றபோது அவர்களாகவே உணர்ந்து கொள்வார்கள். 


    வாழுகின்ற வாழ்க்கை சுகந்தமோ சுமையோ சுகமாக ஏற்றுக்கொள்ளுங்கள். 

    இன்பமும் துன்பமும் இணைந்த வாழ்க்கைப் பாதையில் நீரோடைபோல் வளைந்து கொடுத்துச் சமாளித்து கடந்தது செல்லுங்கள். 

    வெள்ளி, 13 டிசம்பர், 2013

    பற்று



            
    பற்றின் பற்று பற்றே
    பற்றில்லா வாழ்வில் பற்று தூசே
    பண்பான வாழ்வதனை
    பற்றுப்போல் பற்றுக்கொள்


    பொருள்:

    இல்வாழ்க்கையின் ஆதாரம் நட்பே. ஆசையற்ற வாழ்வில் செல்வம் தூசாகவே கருதப்படும். பசைபோல் பண்பான வாழ்வை ஒட்டிக்கொள்.

    1.    இல்வாழ்க்கை
    2.    ஆதாரம்
    3.    நட்பு
    4.    ஆசை
    5.    செல்வம்
    6.    பசை
    7.    ஒட்டிக்கொள் விளக்கம்:


    தெளிவுரை:
    இல்லறம் என்னும் நல்லறத்திலே இணைகின்ற ஆண்பெண் என்னும் இருவரும் தம்பதிகளாய் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உண்மை நட்புடன் உறவாடவேண்டும். உண்மை நட்பு கணவன் மனைவியிடம் இணையவில்லை என்றால், அவ்வாழ்க்கையில் அடிமைத்தனம் உருவாகும். பாசவுணர்வு அற்றுப்போம். ஆண்ஆதிக்கம் அதிகரிக்கும். ஒளிவுமறைவின்றி  சுகதுக்கங்களை பறிமாறி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நட்புடன் பழகும்போது  இல்வாழ்க்கையானது கட்டுக்கோப்புடனும்  உறுதியுடனும் அமைந்து கொள்ளுகின்றது. எனவேதான்  இல்வாழ்க்கைக்கு  நட்பு ஆதாரமாகக் கருதப்படுகின்றது.

                        அடுக்கடுக்காய் ஆசைகளை அடுக்கிக் கொள்ளும் மனிதர்களுக்கு அந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காகச் செல்வம் தேவைப்படுகின்றது. பணமென்றால், பிணமும் வாய் திறக்கும் என்பது பழமொழி. செல்வத்தைத் தேடித்தான் மனிதன் கடல்கடந்து நாடுவிட்டு நாடு மாறிப் பெற்றோர்  உற்றோரைப் பிரிந்து செல்கின்றான். நாம் புகழைத் தேட ஆசைப்படுகின்றோமா? அதற்கும் பணம் தேவை. நண்பர்கள், உற்றாரை மகிழ்ச்சிப்படுத்த ஆசைப்படுகின்றேமா? அதற்கும் பணம் தேவைப்படுகின்றது. ஆசைப்பட்ட பொருள்களைக் கொள்வனவு செய்ய ஆசைப்படுகின்றோமா? பணம் தேவைப்படுகின்றது. உங்களை உங்கள் இல்லத்தை அழகு செய்யவேண்டுமா? அதற்கும் பணம் தேவை. எனவே ஆசைகள் பெருகப்பெருக அதை நிறைவற்ற செல்வம் எமக்கு அவசியமாகின்றது. எப்படித்தான் இதை யாரும் மறுத்தாலும் அதை அவர்கள் மனதளவில்புரிந்து கொள்ளாமல் இல்லை. எமக்கு எத்தனையோ ஆசைகள் இருக்கும்போது அதற்கான செல்வங்களைத் தேடிச் சேகரிக்கும் போது ஒன்றை மட்டும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அதுவே   பண்பு, மனிதப்பண்பு. இப்பண்பு நிலை தடுமாறுகின்ற போது எவ்வளவு செல்வங்களைக் குவித்து வைத்தாலும் மனைவியை நண்பியாகக் கருதி வாழ்ந்தாலும் உலகத்தின் முன்னே வெறும் தூசியாகவே கருதப்படுவோம். எம்மைத் தட்டிவிட்டுத் திரும்பிப் பார்க்காது உலகம் சென்றுவிடும்.

                            கெட்டவழியிலே சேகரிக்கும் செல்வமோ, நட்போ, சுகங்களோ நிலப்பதில்லை. அதைப் பண்பட்ட வழியில்  திருத்தமான, கள்ளமில்லா மனதுடன் சேகரிக்கும்போதே நின்று நிலைக்கக் கூடிய தன்மையைப் பெறுகின்றது. அதனாலேயே பசையைப் போல் பண்பை எம்முடன் ஒட்டிக் கொள்ளவேண்டும் என்று கூறினேன். பண்பானது பசைபோல் எம் வாழ்வில் ஒட்டிக் கொள்ளும்போது பண்பற்ற காரியங்களில் ஈடுபடத் தலைப்படமாட்டோம். இதனையே வள்ளுவர் பண்பில்லாத ஒருவர் ஈட்டிய பெருஞ்செல்வம், நல்ல பாலானது அது ஊற்றி வைக்கப்பட்ட கலத்தின் தீமையால் கெட்டாற்போன்றது என்கின்றார்.

    "பண்பு இலான் பெற்ற பெரும்செல்வம் நன்பால்
     கலம்தீமை யால்திரிந் தற்ற" 


    எனவே மனைவியுடன் நட்புடன் இல்லறவாழ்க்கையில் ஈடுபடும் ஒருவன், தன் தேவைக்காக ஆசையுடன் செல்வத்தைத் தேடும்போது  பண்புடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஆசையற்ற மனிதன் தன் வாழ்வில் செல்வத்தைத் தூசாகவே கருதுவான் என இப்பொறிக்கவிதை கூறுகின்றது.

               

    வீடுகள் வாழ்வின் படிமங்கள்

    வீடுகள் வாழ்வின் படிமங்கள் 'மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்' சுவர் கொண்ட வீடல்ல வீடு நினைவுகள் குடியிருக்கும் இடமே வீடு. தாய் காத்த வ...