• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 11 மே, 2022

    இன்பத் தமிழும் நாமும் sTs தொலைக்காட்சியில் வாசித்த கவிதை



    கன்னித் தமிழே நீ காவியத்தில் புரண்டெழுந்தாய்

    காளமேகம், கம்பனெனும் கவிஞர்கள் நாவினிலே நடம்புரிந்தாய்

    சங்கத்துச் சான்றோர்கள் சபைதனிலே ஆட்சி செய்தாய்

    நக்கீரன் சொற்களிலே வற்றாத நதியானாய்

    கோவை உலா அந்தாதியென எமை ஆற்றுப்படுத்தினாய் 

    கலம்பகத்தில் களித்து நின்றாய் பாரதியில் மயங்கிநின்றாய்

    வள்ளுவன் வாக்கினுக்கு சாவா மருந்தளித்தாய் - இன்று 

    என் நாவினிலே எழுந்தருளி நா இனிக்க நான் பாட 

    தேன் இனிக்க விருந்தாகி தெவிட்டாத துணையாக வருவாய் 

    தமிழே உனக்கு முதல் வணக்கம்


    அன்னைத் தமிழை அரியணையேற்றி அழகுபார்க்கும்

    எஸ்.ரி.எஸ் தொலைக்காட்சியினருக்கும் வணக்கம் 

    அரங்கம் அதிரும் தமிழை அழகாய் அதிரவைக்கும்

    தொகுப்பாளர் சின்னராசா கணேஸ் அவர்களுக்கும் வணக்கம்

    அன்னைத் தமிழை அழகொழுக அடுக்கி வைக்க

    வண்ணமாய் வந்தமர்ந்த கவிஞர்களுக்கும் வணக்கம் 

    முத்தான தமிழை சொற்சித்திரமாய் சொல் தொடுக்கும்

    முல்லை மோகன் அவர்களுக்கும் வணக்கம்

    இன்பத் தமிழின் கவியின்பம் பருக இணைந்திருக்கும்

    அனைவருக்கும் வணக்கம்


                           இன்பத் தமிழும் நாமும் 


    அன்னைத் தமிழே நீ விழியானாய் எம் மொழியானாய்

    விழியின் றிவ்வுலகில் ஒளியில்லை

    நீயின் றிவ்வுலகில் எமக்கு அறிவில்லை

    கருவறையில் களித்திருக்க தாலாட்டாய் உள்நுழைந்தாய்

    கன்னித் தமிழாய் காலமெல்லாம் கூட வந்தாய்

    தொட்டிலிலே கண்ணுறங்க தோளினிலே சாய்ந்துறங்க

    கட்டிலிலே நானுறங்க காலமெல்லாம் கூட வந்தாய் 

    கட்டிக் கரும்பே கட்டழகுப் பெட்டகமே

    கண்ணான கண்மணியே கனியமுது சக்கரையே

    கொவ்வைப் பழமே என் கொஞ்சும் மொழியேயென

    கொஞ்சிக் கொஞ்சி எம்தாய் கொஞ்சிய மொழிகளெல்லாம்  

    எம் நெஞ்சினிலே தேனாய் இனித்ததடி 

    பாகாய் சொரிந்ததடி பக்குவமாய் நாம் வளர்ந்தோம்


    துள்ளிவிளையாடித் தோழியரோடாட்டம் போட்டு

    வள்ளிக் கிழங்கெடுத்து வரிவரியாய் கவி தொடுத்தோம்

    அரிமிளகு திரிமிளகு அன்னம் பிலாக்காய்

    அழகழகாய் சமைத்தெடுத்து அதிலுமொரு பாட்டிசைத்தோம்

    சங்கத்தமிழினிலே சஞ்சாரம் செய்து 

    பல்கலைக்கழகமதில் பாட்டோடு கூடவந்தாய்

    நற்றிணை நல்ல குறுந்தொகையென 

    எட்டுத்தொகையாக எமக்குள் நுழைந்தாய்

    முருகு பொருநாறு பாணிரண்டு முல்லையென

    பத்துப் பாட்டாக மனதுள் பதியம் போட்டாய்

    சிற்றிலக்கியம் பேரிலக்கியம் சிறப்புமிகு புதுக்கவிதை

    வற்றாத நதியாக வழமாக சொரிந்த சொற்கள்

    மனமெங்கும் தமிழாய் பூத்துக் குலங்கி பூரிப்புக் கண்டோம் 


    மனமெங்கும் பொழிந்த மாசறு தமிழே யுனை

    தெம்மாங்குத் தமிழாலே மாணவர் மனமெங்கும்

    தென்றலாய் தவழ்ந்து வர தேனாகப் பொழிய வைத்தோம்

    வாழ்வாங்கு வாழும் உன் உயர்ச்சி கண்டு களிப்படைந்தோம்

     

    பக்குவமாய் நாமிருக்க சுத்திவரும் புவியைப்போல் 

    சுத்திச் சுத்தி வந்தவர்கள் சுளை சுளையாய் 

    பாட்டிசைக்க மனசெங்கும் பவனி வந்தாய்

    வைரமுத்து கண்ணதாசன் வாலி எனும் கவிஞர்கள்

    வரிகளெலாம் வரிசைகட்டி மனதுள் மத்தளம் போட்டன

    சக்கர நாற்காலியாய் மனதுள் சங்கீதம் சுழன்றுவர 

    சாகரமாய் தமிழின்பம் இங்கிதமாய் உள்நுழைய 

    கன்னிப் பருவத்திலே எமைக் களிப்படையச் செய்தவளே


    மான் போலத் துள்ளி மயில் போல நடனமாடி

    தேன் போல சுவைத்து செங்கதிர் போல ஒளிவீசி

    வான் போல நிறைந்து வளர் மதி போல குளிர்ந்து

    குயில் போல இசைத்து என் நாடி நரம்பெல்லாம்

    மின்னோட்டமாய் நிறைந்திருக்கும் தமிழே 


    இன்று 


    கணனித் தமிழாய் காலெடுத்து வைத்தாய் 

    தொட்டு எம் கைதட்ட கம்பீரக் காட்சி தந்தாய் - இன்று

    கொரானா உலகெங்கும் கொக்கரிக்க 

    கோலோச்சும் சித்தர்தம் மூலிகைகள்

    சித்தர் தமிழாய் சிறந்து நிற்கும் முத்திரைகள்

    சித்தமெங்கும் நிறைந்திருக்கும் சிறப்பனைத்தும் 

    பண்டைத் தமிழைக் காணவைத்து வாழ்க்கைப் 

    பக்கம் பக்கமாய் எம்மோடு கூடவரும் தமிழே

    செம்புலப் பெயல் நீர்போல் அம்புவி யெங்கும் 

    அரியணையேறி அரசாட்சி செய்து அகிலம் போற்ற 

    வாழி நீ தமிழே வாழி நீ 







     


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...