முயற்சி, முன்னேற்றம்,
வளர்ச்சி,
திறமை
போன்றவைக்குத் தடையாக இருப்பவை அச்சம், பயம், நோய், நோயால் ஏற்படும் வலி போன்றனவாகும். அதனாலே “உடல்
வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்” என ஒரு சித்தர் பாடுகின்றார். “சுவர் இருந்தாலேயே
சித்திரம் வரைய முடியும்” என்று பழமொழி சுட்டிக்காட்டுகின்றது. நம்பிக்கை, தைரியம்
போன்றவற்றால் சில நோய்களை நாம் விரட்டியடிக்க முடியும். நோயிலும் இரண்டு
வகையுண்டு. ஒருவகை நோய் எம்மைக் கட்டுப்படுத்தி வைக்கும். அடுத்தவகை நோயை நாம் கட்டுப்படுத்தி வைப்போம். நாம் எப்படி நோயைக்
கட்டுப்படுத்தி வைக்க முடியும் என்பதற்கும், எமக்கு இருக்கும்
நம்பிக்கையின் மூலம் அச்சத்தை நீக்கி சவால்களை எப்படி எதிர்கொள்கின்றோம்
என்பதையும் பற்றிச் சிந்திப்போம்.
உள்ளுணர்வுகளைப்
பலப்படுத்தும் போது எமது எண்ணங்களால், மூளைக்கு நாம் கட்டளையிடுகின்றோம். நாம் இடும்
கட்டளையை ஏற்று மூளை கட்டளைக்கு அடிபணிகின்றது. தன்னுடைய கட்டளையை நிறைவேற்றும்
பொருட்டு அதில் தன்னுடைய சிந்தனையைச் செலுத்துகின்றது. வலியையும் வேதனையையும்
மறந்து விடுகின்றது. அந்தச் செய்தியை எம்முடைய உணர் உறுப்புக்களுக்கு அனுப்பும்
தொழிலை விடுத்து, நாம் ஊக்கத்துடன்
செலுத்துகின்ற கட்டளைக்கு ஏவலாளியாகின்றது. அதனால், நோயினால் ஏற்படுகின்ற வலியை
நாம் மறக்கின்றோம். மகாத்மா காந்திக்கு வயிற்றில் ஒரு தடவை சத்திரசிகிச்சை
அளிக்கப்பட இருந்தது. மயக்க மருந்து செலுத்துவதற்கு வைத்தியர்கள் கேட்டார்கள்.
மயக்க மருந்து தேவையில்லை. நான் பகவத்கீதையை வாசிக்க ஆரம்பித்து 5 நிமிடங்களின்
பின் சத்திரசிகிச்சையை ஆரம்பியுங்கள் என்றாராம். அதன்படி மயக்கமருந்து அற்ற
சத்திரசிகிச்சை முடிவடைந்தபின் முடிந்துவிட்டது என்று வைத்தியர் கூற, அப்படியா!
முடிந்துவிட்டதா! என்று சாதாரணமாகக் கேட்டாராம். இவ்வாறு புலன்களை
ஒருநிலைப்படுத்தும்போது வலி எமக்கு அடிமையாகின்றது.
நம்பிக்கையின் மூலம்
சவால்களை எவ்வாறு வெல்லுகின்றோம் என்பதற்கு மலையேறுபவர்களும், எரிமலையின்
அருகே நின்று ஆராய்ச்சி செய்பவர்களும் எமக்கு சாட்சிகளாக அமைகின்றார்கள்.
இலக்கியங்கள் பல சம்பவங்களை அடையாளப்படுத்துகின்றது. அபிராமிபட்டர் ஒரு அமாவாசை
தினத்திலே தன்னை மறந்து அம்மனைத் துதித்துக் கொண்டிருந்த வேளை சரபோஜி மன்னன் அங்கு
வந்தான். இவர் யாரென அபிராமிப்பட்டரைப் பார்த்து மன்னன் கேட்ட போது இவன் ஒரு பித்தன்
என்று பிறர் கூறினர். இதன் உண்மையை அறிய விரும்பிய மன்னன். பட்டரிடம் இன்று என்ன
திதி என்று கேட்க அவரும் அம்மன் பிரகாசத்தில் மூழ்கியிருந்த காரணத்தினால், பௌர்ணமி என்று
கூறிவிட்டார். ஆனால், அமாவாசை தினத்தில் பௌர்ணமி என்று கூறிவிட்டேனே என்று மனம்
வருந்திய அபிராமிபட்டர் தன்னுடைய நம்பிக்கையின் பிரகாரம் அரிகண்டம் பாடி அம்மன்
அருளால் பௌர்ணமி தோற்றத்தைக் காட்டித் வெற்றி கண்டார். இதில் நம்பிக்கை எங்கே
புலப்படுகின்றது என்றால், அரிகண்டம் பாடுவதிலேயே ஆகும். ஒரு ஆழமான குழியை வெட்டி
விறகை அடுக்கித் தீ மூட்ட வேண்டும். அதன் மேல் ஒரு விட்டமும் 100 கயிறுகளிலான
உறியையும் கட்ட வேண்டும். அதற்கு மேல் அமர்ந்து கொண்டு பாடல் பாட வேண்டும். தமது
நோக்கம் முடியும் வரை ஒவ்வொரு பாடல் முடிய ஒவ்வொரு கயிறாக வெட்ட வேண்டும். நினைத்த
காரியம் முடியவில்லை என்றால், தீக்குள் விழுந்து சாம்பராகிவிடுவார்கள். ஆபத்து
இருக்கின்றது என்று தெரிந்தும் துணிந்து செயல்படுவது நம்பிக்கை என்ற வலுவான
ஆயுதத்தை தாங்குவதனாலே ஆகும்.
இதேபோல் நந்திவர்மன்
என்னும் பல்லவ மன்னன் தன்னுடைய தந்தை இறந்தபின் மன்னனுடைய இரண்டாவது மனைவியின்
பிள்ளைகளான 4 தம்பிமாரைத் துரத்திவிட்டு ஆட்சி செய்கின்றான். அதில்
ஒருவர் தமிழில் திறமை மிக்கவர். இவர்; துறவு மேற்கொண்டிருந்த சமயத்தில் பாடல் பாடி
பிச்சை எடுத்து உணவு உண்பது வழக்கம். ஒரு கணிகை வீட்டின் முன் இவர்
வானுறு மதியை அடைந்ததுஉன்
வதனம்
மறிகடல் புகந்ததுஉன்
கீர்த்தி
கான்உறு புலியை அடைந்ததுஉன்
வீரம்
கற்பகம் அடைந்ததுஉன்
கரங்கள்
தேன்உறு மலராள் அரிஇடம்
புகந்தாள்
செந்தழல் அடைந்ததுஉன் தேகம்
நானும்என் கலியும் எவ்விடம்
புகுவேம்
நந்தியே நம்தயா பரனே
என்னும் பாடலைப் பாடிய போது
அப்பாடலை எழுதி வைத்துக் கொண்ட கணிகை அப்பாடலைத் தன்னுடைய மாடத்தில் நின்று
பாடினாள். நந்தி என்னும் மன்னன் பெயரைக் கேட்ட காவலர்கள் மன்னனிடம் இதுபற்றிக் கூற,
தமிழ்மேல்
பற்றுக் கொண்ட மன்னனும் அவளை அழைத்து அப்பாடல் பற்றி வினவுகின்றார். யாரால்
பாடப்பட்ட பாடல் என அறிந்த மன்னன் அப்புலவரை அழைத்து வரும்படிக் கூற புலவரும்
மன்னனிடம் வந்தார். அப்போது மன்னன் புலவனிடம் கலம்பகம் பாடும்படிப் பணித்தான்.
புலவரும் பச்சை ஓலையால் நூறு பந்தல் போடவேண்டும். ஒவ்வொரு பாடல் பாடும் போதும்
மன்னன் பந்தலில் அமர்ந்திருந்து கேட்க வேண்டும். பாடல் முடிந்தபின் அப்பந்தல்
எரிக்கப்படும். நூறாவது பந்தலின் மேல் விறகு அடுக்கப்படும் அதன்மேல்
அமர்ந்திருந்து பாடல் கேட்க வேண்டும். பாடல் முடிந்ததும் விறகு தீப்பற்றி எரிய
நீயும் எரிந்து இறக்க வேண்டும் என்று கேட்பதற்குப் பணிந்த மன்னன், நந்திக்கலம்பகம்
முழுவதும் கேட்டு உயிர் துறந்தான் என்னும் வரலாறு இலக்கிய உலகம் ஏற்றுக் கொண்டது.
பாடல் கேட்டால் என் உயிர் இழப்பேன் என்னும் நம்பிக்கை கொண்ட மன்னன் தமிழ் மேல்
கொண்ட காதலால் உயிர் துறந்தான். “நந்திக்கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்”
இவ்வாறு கொண்ட கொள்கையில் பிடிவாதமும் துணிவும் கொண்டவர்கள் உயிரைத் துச்சமாக
மதித்து தம் முயற்சியில் தம்முடைய முன்னேற்றங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றத்
துணிந்து நிற்பார்கள்.
எனவே மனமே முருகனின்
மயில்வாகனம் என்ற குறியீடு இதிலிருந்து எமக்குப் புலப்படுகின்றது. வானத்தில் மயில்
பறக்காது என்றாலும், முருகன் உலகத்தைச் சுற்றிவந்தார் என்னும் புராணக்கதையானது,
எம்மால்
முடியாது என்றால், மனமே முடியச்செய்துவிடும் என்பதையே உணர்த்துகின்றது.
அருமையான கட்டுரை சகோதரி...
பதிலளிநீக்குஅருமையான கண்ணோட்டம்
பதிலளிநீக்குநம்பிக்கையின் சக்தியை இப்பதிவில் காணமுடிகிறது.