• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 1 ஜூன், 2020

    அஜகர்ணம் கோகர்ணம்

                                      
    அறிவு என்பது நியாயப்படுத்தப்பட்ட உண்மையான நம்பிக்கை என தத்துவஞானி பிளேட்டோ கூறுகின்றார். இதில் மொழி அறிவு இருக்கும் பட்சத்தில் நியாயப்படுத்தலைத் தேடிப் பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. மொழியறிவை எடுத்து நோக்கும் போது அதன் தேவைப்பாடும், பிரதியீட்டுத் தன்மையும் தற்காலத்தில் அதிகரித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆங்கில மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்திருந்தாலும், அவ் ஆங்கிலத்தின் பூரண இலக்கண அறிவு இன்மையாலும், பாவனைப்பாடு இன்மையாலும் அச்சத்தின் மத்தியில் ஆங்கிலப் பயன்பாடு எம்மவரிடையே பயன்பாட்டில் இல்லை என்றே சொல்லலாம். தமிழின் ஆரம்பக்கல்வி அறிவும், மக்கள் தொடர்பாடலும் அதிகமாக இருக்கின்ற பட்சத்தில் தமிழின் ஆக்கப்பாடுகள் அதிகரித்திருப்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது. 

    மொழிக்கல்வி இன்றி விஞ்ஞானம், கணிதம் கற்பவர்கள் தம்முடைய கற்கைப் பாடநெறிக்கேற்ப தொழிலில் அமர்ந்து அந்தப் பணியில் மாத்திரமே முழுக் கவனத்திலும் ஈடுபடுவார்கள். சமூக சிந்தனையோ, வாழ்க்கை நெறிமுறைகளோ, மொழிப்பற்றோ, இனப்பற்றோ எதுவுமே தேவைப்படாது. ஆனால், கால ஓட்டத்தில் வாழ்க்கையின் இறுதிக் காலப்பகுதியில் மொழியில் தஞ்சம் அடைவதும், மொழியறிவை நாடி ஓடுவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. எதை வாசித்தாலும் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. மனதில் எழுகின்ற கருத்துக்களை சரியான வகையில் எடுத்துச் சொல்ல மொழியறிவு குறைவாக இருப்பதனால், விளக்கிச் சொல்லவும், விளங்கிக் கொள்ளவும் இயலாமல் இருக்கின்றது என கவலைப்படுகின்றவர்களை இப்போது அறியக் கூடியதாக இருக்கின்றது. 

    இருப்பினும் காலம்கடந்து மொழிப் பயன்பாட்டில் ஆர்வம் ஏற்படல் பாராட்டப்பட வேண்டியதே, அத்துடன் அவ் ஆர்வமானது மொழிப்பயன்பாடு அதிகரிப்பதற்குக் காரணமாக அமைகின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடிகின்றது. ஆனால், அம்மொழிப் பயன்பாட்டிலே பலவித குறைகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இது மொழி அழிவுக்குக் கூடக் காரணமாக அமைகின்றது. தவறுகளைச் சுட்டிக்காட்டும் பட்சத்தில் தற்போது பரவாயில்லை எல்லோரும் இப்படித்தான் பயன்படுத்துகின்றார்கள் என்று இலக்கணவழுக்கள் நிறைந்த பல சொற்களைப் பயன்படுத்தும் போக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நடைமுறையாகும். 

    சமூகவலைத் தளங்கள் பல தவறான செய்திகளைப் பரப்புவது மட்டுமல்லாமல் தமிழ் கொலைகளையும் தாராளமாக செய்கின்றன. இத்தவறுகளைத் திருத்துவதற்கு வழி உண்டா? என்றால் இருக்கிறது. தவறுகளைச் சுட்டிக் காட்டுபவர்கள் சொல்வதைக் கேட்டுத் திருத்துவது. பசுமாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும் அந்த இடத்தில் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும் அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறுகுறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்து கொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள். இவர்களை கோகர்ணம் போடுபவர்கள் என்று அழைப்பார்கள். அவர்கள் கூறியது சரியா என்று ஆய்வு செய்து திருந்த வேண்டும். அதை விடுத்து ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையை தொங்கப் போடும் அதுபோல சிலர் தங்களுடைய குறையை யாராவது சுட்டிக் காட்டினால், அவர்களை வெறுப்பார்கள். இவர்களை அஜகர்ணம் என்பார்கள். இவ்வாறு அஜகர்ணமாக இருக்கும் பட்சத்தில்; தமிழானது தூசியும் அழுக்குகளும் கலந்த தேநீரை அருந்துவது போன்ற நிலைக்கு ஆளாகிவிடும். 

    கட்டுரைச் சுருக்கம் கருதி தவறாகத் தமிழைப் பயன்படுத்துவதற்கு ஒரு உதாரணத்தை மட்டும் கூறலாம் என்று இருக்கின்றேன். வாழ்த்துக்கள் என்று எழுதுவது சரியா? வாழ்த்துகள் என்று எழுதுவது சரியா? என்றால், எல்லோரும் வாழ்த்துக்கள் என்று எழுதுகின்றார்கள். அதனால், நானும் எழுதுகின்றேன் என்று கூறிவிட முடியாது. உதாரணத்திற்கு தோப்புக்கள் என்றால், தோப்பில் இருந்து எடுக்கப்படும் கள் எனப் பொருள்படும். தோப்புகள் என்றால், பல தோப்பு எனப் பொருள்படும். அதேபோல் வாழ்த்துகள் என்பதில் வாழ்த்து பன்மையில் வந்திருக்கின்றது. வாழ்த்து என்பது கள் என்னும் பன்மை விகுதி பெற்று வருகின்றது. வாழ்த்துக்கள் என்னும் போது வாழ்த்து என்னும் சொல்லானது கள் என்னும் பொருளுடன் சேர்ந்து வருகின்றது. விகுதிக்கும் சொல்லுக்கும் வேறுபாடு அநேகமாக எல்லோரும் அறிந்திருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். 

    உயர்திணையில் பெயர் சொல்லுக்குப் பின்னே எண்ணுப் பெயர்கள் வரும். உதாரணமாக கவிஞர் இருவர்  வந்தார் என்று எழுத வேண்டும். அதேபோல், அஃறிணையில்; பெயர்ச்  சொல்லுக்கு முன்னே ஒரு வாகனம் என்று எண்ணுப் பெயர்கள் வரும். அவசியம்;; கருதி மட்டுமே எண் எழுத வேண்டும். கவிஞன் ஒருவன் வந்தான். அல்லது ஒரு கவிஞன் வந்தான் என்பது பிழை. கவிஞன் வந்தான் என்பதே சரியான இலக்கண வடிவமாகும். அந்த ஒருவன் என்னும் எண்ணுப் பெயர் அவசியம் என்றால் மட்டுமே எழுதப்படும்.

    இடது, வலது, மனது என்று எழுதுவதும் பிழையானது. இடம், வலம், மனம் என்று  எழுதுவதே சரியானது. ஏனென்றால், அத்துச்சாரியை பெறுகின்ற போது மனது அத்து மனத்து எனவே வரும். மனம் அத்து என்னும் போதே மனத்து என வரும். மனத்துக்கண் மாசிலனாயின். மனதுக்கண் என வராது. 

    இவை என்பது பன்மை. ஆனால், இவையுடன் கள் சேர்த்து இவைகள் என எழுதப்படுகின்றது. இது ஏன் என்று புரியவில்லை. பன்மையுடன் பிறகு எதற்காகப் பன்மை கள் விகுதி சேர்க்க வேண்டும்.  

    ஆத்மார்த்தமாக மனதுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் கல்வி என்பதைத் தவிர்த்து மொழியறிவு அனைத்து அறிவையும் மனிதர்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் என்பது அனுபவப்பட்ட போதே அனைவரும் அறிந்து கொள்ளுகின்றார்கள். நான் யார்? எனது மொழி என்ன? எனது வாழ்வின் தத்துவம் என்ன? எனது உடலின் அமைப்பு எப்படி இருக்கின்றது? உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய காரணிகளும் உணவுமுறைகளும் எவை? எம்மைச் சூழவுள்ள நிலப்பரப்பும், மக்களும், அவர்கள் வாழ்க்கை முறையும், அவர்களுக்கும் எங்களுக்கும் உரிய தொடர்புகளும் எவை? எம்மைத் தாங்கும் பூமி,  அது வலம்வரும் அண்டவெளி, இதன் உருவாக்கம், அதில் ஏற்படும் மாற்றங்கள்? இவ்வாறான கல்விமுறைகளும், இவ்வாறு  கற்றவற்றை எவ்வாறு பிரதியீடு செய்யலாம்? எவ்வாறு பிறருக்கு எடுத்துரைக்கலாம்? அதற்குப் பயன்படும் தொழில்நுட்பங்கள், அவற்றை எவ்வாறு கற்றுக் கொள்ளலாம்? கற்றதை எவ்வாறு பயன்படுத்தலாம்? இதற்கு எவற்றினுடைய யாருடைய உதவிகளைப் பெறலாம் என்று தேடித் தேடிப் பெறும் அறிவுதான் எம்மை அறிவாளிகளாக மாற்றுவதற்கு தூண்டல்களாக அமைகின்றன. 

    மொழியறிவு கற்பது மட்டுமன்றி அத்துடன் பலதும் கற்கும் ஆர்வம் மட்டும் இருந்து விட்டால் அம்மனிதனின் வாழ்க்கை என்பது சொர்க்கம் என்பதைப் பலரும் காலம் கடந்தே அறிந்து கொள்ளுகின்றார்கள். மொழியறிவு பெற்ற ஒருவர் பல விடயங்களைத் தேடிக் கற்பதுடன் மட்டுமன்றி அவற்றைத் தெளிவுபட விரித்துரைப்பதிலும் வல்லவராகின்றார். அறியும் சக்தியைப் போன்றதொரு கண் இல்லை. அறியாமையைப் போன்றதொரு குருடு இல்லை என்று மூனா அவர்கள் கூறியிருக்கின்றார். வெறுமனே அறியும் சக்தி இருந்துவிட்டால் மட்டும் போதாது, அதனைப் பற்றி ஆழமான அறிவைப் பெறுதலுக்குத் தேடல் அவசியம் என்பதும் அவசியமாகின்றது. அறிவைப் பெற ஐயுறுதல் அவசியம். அறிவியல், தத்துவவியல், மெய்யியல், என பரந்துபட்டு விரியும் அறிவைப் பெற ஆயுள் போதாது என்பது உண்மையே. ஆயினும் பெற்ற மொழியறிவைக் கொண்டு வெறுமனே கற்பனை உலகில் வாழ்வதைவிடுத்து அறிவியலையும் கொஞ்சம் கற்றுப் பார்த்தால் வாழ்க்கை ஆச்சரியமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமையும். 

    (உதவிக்கரம்: பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ)

    3 கருத்துகள்:

    1. மொழி அறிவோடு அறிவியலையும் கற்போம்
      அருமை
      நன்றி சகோதரி

      பதிலளிநீக்கு
    2. சமூக வலைத் தளங்களில் போலிச் செய்திகள் (Fake News) அதிகம் தான். ஆங்கே தமிழ்க் கொலையும் இடம் பெறுகிறது.
      தங்கள் பதிவு சிறந்த வழிகாட்டலாக அமைகிறது.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...