ஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.
இன்றைய சிறுவர்கள் நாளைய பெரிய மனிதர்கள். இன்றைய சிறுவர்களைச் சிறப்பான முறையில் வளர்த்து எடுக்கும் போதே நாளைய உலகம் சிறப்பான உலகமாகத் திகழும் என்னும் நோக்கத்துடனேயே கதைகளுக்கூடாகவும் பாடல்கள் மூலமும் அறிவுரை புகுத்தும் இலக்கியங்கள் தோன்றின. சிறுவர்களுக்காக எழுதப்பட்ட இவ் இலக்கியத்தின் கதாநாயகர்களாக பிள்ளைகள் விரும்புகின்ற பிராணிகளும் விலங்குகளும் அதிகமாக வந்து போவார்கள். குழந்தைகள் கற்பனாசக்தி மிக்கவர்கள் என்பதனால் இக்கதைகளில் மிருகங்கள் பேசும், பறவைகள் பாடும். வண்ணவண்ண நிறங்களிலும் அழகான கண்ணைக் கவரும் படங்களுடனும் கவர்ச்சியாக சிறுவர்களைக் கவரும் வகையில் இவ் இலக்கியத்தைப் படைப்பார்கள்.
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலைமேலே ஏறி வா
மல்லிகைப் பூக்கொண்டு வா
என்று நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டிய தாயின் வாய்மொழி இலக்கியமாகத் தொடங்கியதே சிறுவர் இலக்கியம். பாட்டி வடை சுட்ட கதை போன்று குழந்தைகளை உறங்க வைக்கத் தாய் கூறிய கதையிலிருந்து சிறுவர் கதைகள் ஆரம்பமாகின. தாயின் ஆராரோ ஆரிவரோ என்ற தாலாட்டுப் பாடலுடன் தொடங்கியது சிறுவர் பாடல்கள்
குழந்தைகளுக்கான முதல் முதல் வெளிவந்த சிறுவர் மாத இதழாக வெற்றிமணி இடம்பெறுகின்றது. இவ்வெற்றிமணியாகிய சிறுவர் சஞ்சிகையை வெளியீடு செய்து அதன் மூலம் சிறுவர் இலக்கியங்களுக்குப் பங்களித்த M.K.S என்று அழைக்கப்படும் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களும் பெருமைக்குரியவராகக் கருதப்படுகின்றார்.
தொலைநோக்குச் சிந்தனை உள்ள ஒருவரால் மாத்திரமே இவ்வாறாக மாதம் ஒரு சஞ்சிகை அதுவும் முழுக்க முழுக்க சிறுவர்களுக்காக மட்டுமே வெளியிட முடியும். இதற்கு ஆசிரியப் பணியை அவர் மேற்கொண்டது மட்டுமல்லாமல் மாணவர்களுடன் உள்ளன்புடன் பழகியமையும் காரணமாக இருந்திருக்கின்றது.
அத்துடன் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் 1980 இல் மறைந்துவிட்டாலும், இன்றும் பேசப்படும் மனிதராக இருப்பதற்கும் ஆசிரியத்தொழிலில் மட்டுமே நின்றுவிடாது மாணவர்கள் நலன் கருதி அவர் ஆற்றிய சேவைகள் தான் காரணமாக இருந்திருக்கின்றன.
இவர் மே மாதம் 14 ஆம் திகதி 1919 ஆண்டு குரும்பசிட்டியில் ஒரு விவசாயக்குடும்பத்தில் திரு.திருமதி கந்தவனம் தம்பதியினருக்கு எட்டுப் பிள்ளைகளில் ஏழாவதாகப் பிறந்தார். கல்வியிலும் சமூகத்தொண்டிலும் நேரத்ததை அர்ப்பணித்தார். காங்கேசந்துறை வட்டாரக் கல்வி, விளையாட்டு, இவற்றின் அமைப்பாளராகவும் பரீட்சைக் காரியதரிசியாகவும் இருந்து அளப்பெரும் தொண்டுகள் ஆற்றி கல்விப்பணிப்பாளர், உதவி அரசாங்க அதிபர் போன்றோரின் பாராட்டுதலைப் பெற்றார். அகில இலங்கை ஆசிரியர் கலாசாலையின் தமிழாசிரியர் சங்க உபதலைவராகவும். நுவரெலியா, முல்லைத்தீவு கிளைகளின் தலைவராகவும் காரியதரிசியாகவும் இருந்து பெரும் தொண்டாற்றினார். காங்கேகன்துறை ஆசிரியர் சங்க கிளையை ஆரம்பத்தவர்களில், இவர் முக்கியமானவராகக் காணப்படுகின்றார்.
இவர் 1964 ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளம் குளத்தில் அரசினர் தமிழ் பாடசாலை தலைமை ஆசிரியராக இருந்த போது அங்கு பயின்ற மாணவர்களை இடையில் படிப்பை நிறுத்தி கமத்திற்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அறுவடை காலத்தில் பெற்றோருக்கு பிள்ளைகளின் உதவி தேவை என்பதனை அறிந்து அந்த நாட்களில் அரச அனுமதியுடன் விடுமுறை கொடுத்து பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் உதவினார். இதனால் மாணவர்களின் படிப்பை இடைநிறுத்தி கமத்திற்கு அழைத்துச் சென்று படிப்பை இடைநிறுத்தாது பாதுகாத்த பெருமை அமரர் சுப்பிரமணியம் அவர்களையே சாரும். பல ஆர்வம் மிகுந்த மாணவர்களை யாழ்ப்பாணம் அழைத்து வந்து மேற்படிப்பிற்கு வழிசமைத்துக் கொடுத்தார்.
மலையகத்திற்கு இடமாற்றம் கிடைக்கும் ஆசிரியர்கள், அங்கு வசதிக்குறைவு என்ற காரணத்தால் யாராவது அரசியல்வாதிகளைப் பிடித்து தமது இடமாற்றத்தை நிறுத்திவிட்டு அங்கு கல்விப்பணி புரிய போகமாட்டார்கள் என்பது நான் அறிந்த உண்மை. ஆனால், மு.க.சுப்பிரமணியம் அவர்கள் நாவலப்பிட்டி, வெலம்பொட, பூண்டுலோயா போன்ற மலையகப் பகுதிகளில் பணியாற்றி அங்கு வாழ்ந்த சிறுவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உழைத்துள்ளார். தோட்டத்தொழிலாளர் பிள்ளைகள் 5 ஆம் வகுப்புக்கு மேல் கல்வி கற்பதில்லை. அக்காலத்தில் அவர்கள் கல்வி முன்னேற்றம் தடைசெய்யப்பட்டது. அப்போது தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினராக இருந்த மு.க.சுப்பிரமணியம் அவர்கள் மாணவர்கள் கல்வி முன்னேற்றத்திற்காகப் பொராடி அவர்களை 10 ஆம் வகுப்புவரைக் கல்வியைத் தொடர வைத்த பெருமைக்குhயிவராகத் திகழ்ந்தார்.
இவ்வாறான மாணவர்களுக்கான கற்றல் வளர்ச்சிக்கு தன் எண்ணம் முழுவதையும் ஈடுபடுத்திய வேளையே யாரும் அக்காலத்தில் நினைத்திருக்காத மாதாந்த சஞ்சிகை ஒன்று மாணவர்கள் முன்னேற்றம் கருதி வெளியிட வேண்டும் என்ற தன் கனவை நனவாக்கினார். மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார்ப்படுத்தல், அவர்கள் அறிவைத் தூண்டும் விதமான அறிவியல் கல்வியை மேம்படுத்தக் கூடிய கட்டுரைகளை கற்றோரிடம் இருந்து பெற்றுச் சஞ்சிகையில் பிரசுரித்தல், மாணவர்களை எழுதத் தூண்டல் போன்ற நோக்கங்களைக் கொண்டு நாவலப்பிட்டியில் ஆசிரியராக இருந்த வேளை, தினகரன் சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளில் வந்த குறுக்கெழுத்துப் போட்டிகளின் சிறந்த விடை விமர்சனி என்னும் வெற்றி மணியை 1950 ஆண்டு வெளியிட்டார்.
1954 ஆண்டு முழுக்க முழுக்க மாணவர் பத்திரிகையாக உருவெடுத்த வெற்றிமணி மலையக மக்களின் கல்வி திட்டமிட்டு நசுக்கப்பட்ட வேளை அவர்களது கல்விக்கும் ஆற்றலுக்கும் முதற்களம் அமைத்துக் கொடுத்தது.
போட்டிகளில் வெற்றி என்பதனைக் குறிக்க வெற்றி என்பதனையும் சுப்பிரமணியம் என்பதில் உள்ள மணியினையும் இணைத்து வெற்றிமணி எனப் பெயர் இட்டார். ஓசைவடிவம் பிள்ளைகளுக்குப் பிடிக்கும். அதனால், ஷஷவெற்றிமணி டாண் டாண் எனவே விண்முட்ட ஒலித்திடுவாய். நற்றமிழாம் எங்கள் மொழி நலமுற ஒலித்திடுவாய்|| என்ற வாழ்த்து ஒலியுடன் ஒவ்வொரு இதழையும் வெளியீடு செய்திருந்தார்.
08 பக்கங்களில் ஆரம்பித்துப் பின் 16, 32, 59 என பக்கங்கள் தேவைக் கேற்ப அதிகரித்த வண்ணம் இருந்தன. தான் ஆசிரியராக கடமை புரிந்த பாடசாலைகளில் எழுத்தாற்றமிக்க ஆசிரியர்களையும் மாணவர்களையும் வெற்றிமணியில் எழுதவைத்தார்.
பிடிவாதம் பிடித்தழுது கொடுத்ததையும் விட்டெறிந்து
படுக்கையையும் விட்டெறிந்து படுத்துருண்டு கூச்சலிட்டு
கடிதான துன்பம் தந்து கண்டதெல்லாம் வேண்டுமென்றான்
கனிவாக அவை கொடுத்தான் கடுங்கோபம் கொண்டெறிந்தான்
முடியாது இவன் கோபம் நாமடக்க முடியாதென்று
முனிந்தெழுந்து நானடிக்க முற்றத்தில் வீழ்ந்தழுதான்
கொடிதான சிங்கம் புலி குவலயத்தை அடக்கிடலாம்
குலக்குழந்தை கோபமதை குணமாக்க யாருண்டிங்கே
இக்கவிதை மழலையின் பிடிவாதம் என்னும் தலைப்பில் வெற்றிமணியில் வெளிவந்த சு.சு.N.ஜோர்ஜ் அவர்களுடைய கவிதை
வெற்றமணியில் ஒரு சிறு மாணவன் மாடு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தான். அக்கட்டுரைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றிமணி வெளியிட்டு இருந்தது. மாடு பற்றி எழுதிய சிறுவனிடம் ஏன் மாடு வண்டி இழுக்கும் என்று எழுதவில்லை? எனக் கேட்டபோது, அவன் சொன்ன பதிலே ஆசிரியரை கவர்ந்தது. அவன் சொன் பதில் மாடு பாவம் வண்டி இழுக்கும் என்று சொல்ல தனக்கு கவலையாக இருக்கும் என்றானாம். ஜீவகாருண்யம் அச்;சிறுவனின் உள்ளத்தில் தெய்வீக ஒளிபாச்சியது. உடனே இக்கட்டுரையை சஞ்சிகையில் வெளியீடு செய்திருந்தார்.
மாடு
மாட்டிற்று 2 கொம்பு உண்டு.
மாட்டிற்கு ஒரு வாலுண்டு.
மாட்டிற்கு நான்கு கால்கள் உண்டு.
இக்கட்டுரையைப் பார்த்த வாசகர்கள், 'ஏன் இப்படி தரமில்லாத கட்டுரையை பிரசுரித்தீர்கள்? என்று ஆசிரியரைக் கேட்டபோது 'இந்தக் கட்டுரை வந்தபின்பே வெற்றிமணியில் பல சிறப்பான கட்டுரைகள் வரத்தொடங்கின. வாசகர்கள் படைப்பாளிகள் எல்லோருக்கும் அட இதனைவிட எம்மால் நன்றாக எழுத முடியும் என்று எண்ணத் தோன்றியது. எனவே எப்போதும் சிறப்பான ஆக்கங்கள்தான் வெளியிடவேண்டும் என்பது அல்ல. எழுத்தாளரை கிளர்ந்து எழும்வண்ணம் இப்படி சிலவற்றையும் செய்யத்தான் வேண்டும்|| என்றார். இதன் மூலம் இவருடைய ஆழ்ந்த தொலைநோக்குச் சிந்தனை புலப்படுகின்றது. ஊக்கமுள்ள ஒருவருக்கு இடம் கொடுத்தால், எதிர்காலத்தில் அவர் உச்சத்தைத் தொடுவார் என்னும் உயரிய நோக்கம் அவரிடம் இருந்ததனால், அந்த மாடு என்னும் கட்டுரை எழுதிய சிறுவன் பிற்காலத்தில் சிறந்த எழுத்தாளனாகவும் உருவெடுத்தார் என்பது யாம் அறிந்த செய்தியாகும்.
இதுமட்டுமன்றி வெற்றிமணியில் எழுதும் சிறுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் முகமாக சிலசமயம் அவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு நேரில் சென்று புத்தகங்களை வழங்கி அவர்களை மகிழ்ச்சியடையவும் வைத்துள்ளார். சிறுவர்களுக்காக இலக்கியம் படைப்பதிலும் பார்க்க சிறுவர்களே தமக்கான இலக்கியத்தைப் படைப்பது பாராட்டத்தக்கதே. மாணவர்களின் உயர்வே ஒரு நாட்டின் உயர்வு எனக் கருதி இத்தன்மையை ஊக்குவித்த அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் எல்லோராலும் போற்றப்படக்கூடியவர்.
சிறுவர்களை வாசிக்கத் தூண்டி, அவர்களை அங்கத்தவர்களாக்கி, அவர்களுக்கு அங்கத்துவ இலக்கங்களைக் கொடுத்தார். அவர்களுக்கிடையில் போட்டிகள் நடத்தி பரிசில்கள் வழங்கியுள்ளார். மாணவர்களை அங்கத்தவர்களாகச் சேர்த்து இலக்கங்கள் கொடுக்கும் போது அவர்களிடையே ஆக்கத்திறனும், எழுத்துத்திறனும் அதற்கேற்ப ஈடுபாடும் மேம்படும் என்னும் எண்ணத்தை நடைமுறைப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார். கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்குச் சிறந்த பரிசில்கள் வழங்கியுள்ளார்.
சகாராக்கல்லூரி மாத்தளை 01.06.48 - 31.01.1949
ளுவ.யுனெசநறள ஊழடடநபந நாவலப்பிட்டி 01.02.49-31.12.1949
கதிரேசன் தமிழ் பாடசாலை நாவலப்பிட்டி 01.01.1950- 02.01.1955
வெலம்பொட அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (புவுஆளு) பாடசாலை 03.01.1955-31.07.1957
பூண்டுலோயா அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 01.08.1957-1961
ஓமந்தை தமிழ் மகாவித்தியாலம். 1961. - 28.02.1964
ஓட்டுசுட்டான் காதலியார் சம்மளங்குளம் 01.03.1964 02.02.1968
குரும்பசிட்டி பொன்.பரமாநந்தர் அரசினர் தமிழ்கலவன் பாடசாலை 03.02.1968-18.03.1978
இவ்வாறு இலங்கையின் பல பாகங்களிலும் ஆசிரியத்தொழில் புரிந்து இறுதியில் அதிபராக தனது சொந்த ஊரான குரும்பசிட்டி பொன் பரமானந்தர் வித்தியாலத்தில் அதிபராக இருந்து 1977 ஆண்டு ஓய்வு பெற்று வாழும் வரை மாணவர்கள் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் வாழ்ந்து மறைந்த மு.க.சுப்ரமணியம் அவர்களை மாணவர் உலகம் என்றும் மறவாது.
இவருடைய இந்த நூற்றாண்டு காலப்பகுதியில் படைப்புலகம் இவரை நினைத்துப் பார்ப்பதுடன் பாராட்ட வேண்டியதும் அவசியமாகின்றது.
சாதனையாளர்கள் என்றும் சாவதில்லை
சாதனைகள் என்றும் மாள்வதில்லை – மனிதன்
வாழும்வரை மறக்கப்படுவதில்லை
வெற்றிமணி பற்றி அறியக் கிடைத்த பல தகவல், பலருக்குப் பயன்மிக்கது. புதிய படைப்பாளிகள் மூத்த படைப்பாளிகளைப் படித்தால் இலக்கிய உலகில் நிலைக்க முடியும்.
பதிலளிநீக்குபோற்றுதலுக்கு உரியவர்
பதிலளிநீக்குபோற்றுவோம் வாழ்த்துவோம்
மிகவும் புகழ்பெற்ற சாதனையாளர் ஒருவரின் வாழ்க்கைச் சரித்திரத்தை தங்கள் மூலம்
பதிலளிநீக்குமட்டுமே, இந்தப்பதிவின் மூலம் ஓரளவுக்கு அறிந்துகொண்டேன். அன்னாரை அவரின் நூற்றாண்டு விழாவில் நினைத்து மகிழ்வடைகிறேன். அவரின் புகழ் வாழ்க ! பகிர்வுக்கு நன்றிகள்.