• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 7 மார்ச், 2019

    பெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்



    பெண்களின் உளவியல் பற்றிப் பேசும் உரிமை பெண்களுக்கே உண்டு. அவள் உள் உணர்வுகளும், தெளிவடையாது மனதுக்குள் தோன்றுகின்ற தவிப்புக்களும், வெளியே சொல்ல முடியாது சமூகத்தின் கண்களுக்கு திரையிடத் துடிக்கும் துடிப்புக்களும், அவளை அவளாக வாழமுடியாது செய்து விடுகின்றன. பெண் என்பவள் தன்னுடைய மனதை மையமாக வைத்து ஆராய வேண்டியது அவசியமாகின்றது. மொத்தத்தில் தம்முடைய மனதைக் கொன்றுவிட்டே பல பெண்கள் தம்முடைய வாழ்க்கைக்குப் பாதை போட்டிருக்கின்றார்கள்.

                       மூச்சுவிடத் தெரியாது ஒரு குழந்தை பிறக்கும்போது டாக்டர் பிறந்த குழந்தையை தலைகீழாகப் பிடித்து முதுகிலே தட்டி மூச்சுவிடச் செய்கின்ற போது முதல் முறையாக மூச்சுவிட்டாலேயே உலகத்தில் வாழலாம் என்று அக்குழந்தை ஆழ்மனதிலே பதிக்கின்றபோது, அக் குழந்தை நினைக்காமலே நித்திரையில் கூட மூச்சுவிடுகின்ற தன்மையைப் பெறுகின்றது. இது போன்றுதான் சிறுவயதிலே ஆழ்மனதிலே பதியப்படுகின்ற பதிவுகள் மனிதனை முழுவதுமாக ஆட்டிப்படைக்கின்றன. ஆண்களின் உளவியலின் படி தமக்கு ஏற்படுகின்ற கருப்பை இழப்புப் பொறாமை, மார்பக இழப்புப் பொறாமை, தாய்மை இழப்புப் பொறாமை, போன்ற பொறாமைகளால் பெண்களை அடக்கி வைக்க முற்படுகின்றனர். குழந்தைகளைப் பெறுதல், அதற்குத் தம்மைத் தயார்படுத்தல், குழந்தைக்குப் பாலூட்டுதல் போன்ற முயற்சிகளைத் தம்மால் செய்ய முடியாத இயலாமையின் வெளிப்பாடாகப் பெண்களை அடக்கி ஆள முற்படுகின்றனர் என்பது உளவியல் உண்மையாகப்படுகின்றது.

                 உயிர்ப்படைப்பாக்கங்களின் முயற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு இலக்கியப்படைப்பாக்க முயற்சிக்கு வழியில்லாமல் போகிறது. ஆயினும் அவற்றையும் மீறி எழுதுகின்ற பெண்கள் தம்முடைய பெண்ணியல் சார்ந்த பிரச்சினைகளை எழுதுவதற்குத் தயங்குகின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். பெண் சுதந்திரம் என்ற போர்வையில் தம்முடைய எழுத்துக்கு முலாம் பூசுகின்றார்கள்.

    பொதுவாக சங்ககாலத்துப் பெண்புலவர்களில் 32 பெண்பாற்புலவர்களே சங்கப் பாடல்களில் எமக்கு இனங்காட்டப்படுகின்றார்கள். அவர்களில் உயிர்களைப் படைக்க முடியாத அதிகமான பெண்களே அதிகமான பாடல்கள் புனைந்திருப்பது அறியக் கூடியதாக உள்ளது. அவர்கள் காரைக்கால் அம்மையார், ஆண்டாள், ஒளவையார், நக்கண்ணையார், ஆதிமந்தியார், வெள்ளிவீதியார் போன்றோர் ஆவார்கள். இவர்களில் அகப்பாடல்களை மட்டுமே பாடிய வெள்ளிவீதியார் பாடல்கள் பெண் உளவியல் சம்பந்தமாக சிந்தனையைத் தூண்டுவனவாகக் காணப்படுகின்றன. இவர் பாடல்களில் வெண்மை என்னும் சொல் அதிகமாக இடம்பெற்றதனால் வெள்ளிவீதியார் என்னும் பெயர் இவருக்கு வரக் காரணமாக இருந்தாலும் ஆடைமலறயல  என்று சொல்லப்படுகின்ற பால்வீதியைக் குறிப்பதுவாகவும் எடுத்துக்கொள்ளலாம். நாம் காணும் விஞ்ஞான உலகத்தை சங்ககாலத்திலேயே கண்டுதேறிய மக்கள் இவருக்கு இப்பெயரைச் சூட்டியிருக்கலாம். இதேவேளை வெள்ளி என்பது வானத்திலிருக்கின்றது. வீதி என்பது நிலத்தில் இருக்கின்றது. இவை இரண்டும் சேராதது போல் இவருடைய காதல் நிறைவேறாத காதலால் இவ்வாறு அழைக்கப்பட்டார் என்று கூறுவாரும் உண்டு. இவர் பாடல்கள் கற்புநிலை அற்று காமம் நிறைந்த பாடல்களாகவே காணப்படுகின்றன.

               இப்பாடல்களில் வெள்ளிவீதியார் பாடல்கள் நிறைவேறாக் காதலினால், தன்னை விட்டுப்பிரிந்து சென்று எவ்வித தொடர்பும் இல்லாத தன் தலைவனை நினைத்துப் பாடும் அகத்திணைக்குரிய பாடல்களே முழுவதுமாக இருக்கின்றன. காதல் தோல்வியைச் சந்தித்த இவர் பாடல்கள் பெண் உளவியலின்படி சிந்திக்கத்தக்கனவாக இருக்கின்றன என்பதை முனைவர் மு.பழனியப்பன் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ளிவீதியாரைத் தன் காதலன் ஏன் விட்டுப்பிரிந்தான் என்பது கேள்விக்குறி. வெள்ளிவீதியாரிடம் இருக்கும் உயிர்ப்படைப்பாக்கத் திறன், இலக்கியப்படைப்பாக்க இயல்பு தலைவனுக்கு அச்சத்தையும் இவள் எனக்கு அடங்கி நடப்பாளா என்னும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று சான்றுகள் காட்டி விளக்குகின்றார். இது இன்றும் இயல்பாகவே ஒரு ஆணிடம் உள்ள அச்ச உணர்வாகக் காணப்படுகின்றது.

       வெள்ளிவீதியார் பாடல்களில் பெண் உளவியல் எவ்வாறு எடுத்துக்காட்டப்படுகின்றது என்று நோக்கினால்,
     

    "கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
     நல்ஆன் தீம்பால் நிலத்து உக்காஆங்கு
     எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது
     பசலை உணீஇயர் வேண்டும்
     திதலை அல்குல் மாமைக் கவினே"

    இனிய சுவையுடைய பசுவின் பாலானது அதனுடைய கன்றாலும் அருகப்படாமல் பாத்திரத்திலும் கறக்கப்படாமல் நிலத்திலே சிந்துவதுபோல எனக்கும் பயனின்றி என் தலைவனுக்கும் உதவாமல் என் அழகு பசலை நோய் உண்ணும் நிலையைப் பெற்றுவிட்டதே என்று பாடுகின்றாள். பசலை நோய் எனப்படுவது தலைவனை பிரிந்து வாடும் தலைவிக்கு உடல் மெலிந்து, உடல் அழகு போய், முகப்பொலிவு இழந்து, கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் கழன்று விழும் நிலை ஏற்படல். இதனை ஒரு பெண் ஆண் இல்லாமல் தனிமையில் பசலைநோய் வாய்ப்பட்டு நிற்கும் நிலையை வெள்ளிவீதியார் அழகாகப் பாடுகின்றார்.

    இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
    நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல
    ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
    கையில் ஊமன் கண்ணில் காக்கும்
    வெண்ணெய் உணங்கல்போலப்
    பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்க அரிதே

    என்னைப் பற்றித் தப்பாகக் கருதும் உறவினர்களே! ஞாயிறு கதிர் பரப்பும் வெப்பமாகிய பாறையிலே வைக்கப்பட்டிருக்கின்ற வெண்ணெய் கையிழந்த ஊமையால் காவல் காக்கப்படுகின்றது. அவ்வெண்ணெய் அவனால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது உருகி அழிவது போல காமநோய்  பரவிய எனது உடலில் உள்ள உயிரும் அழியப் போகிறது முடிந்தால், நீங்கள் என்னுடைய காதல் நோயைத் தடுத்து நிறுத்துங்கள் என்கின்றாள். இவ்வாறு தலைவனைப் பிரிந்து வாடுகின்ற ஒரு பெண் அவனுக்காகக் காத்திருந்து அவனைத் தேடிச் செல்லும் மன உறுதியையும் கொண்டிருக்கின்றாள் என்பதை

    நிலம் தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
    விலங்கிரு முந்நீர் காலில் செல்லார்
    நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
    குடிமுறை குடிமுறை தேரின்

    கெடுநரும் உளரோ நம் காதலோரே

    என்னும் பாடலிலே தலைவன் நிலத்தை அகழ்ந்து அதனுள் புகுந்து செல்ல முடியாது. வானின் உயரே பறந்து செல்ல முடியாது. பெரிய கடலிலே காலால் நடந்து சென்றிருக்க முடியாது. எனவே ஒவ்வொரு நாடு தோறும், ஊர்தோறும், குடிதோறும், சென்று தேடினால், நிச்சயமாகக் கண்டுபிடித்து விடலாம் என்கிறார். இப்போதுள்ள முகநூல் இல்லாத சமயத்திலேயே ஒரு பெண் இவ்வாறு சிந்திக்கின்றாள் என்றால், அவள் காதலுக்காக எவ்வாறு மனவுறுதி பெற்றிருக்கின்றாள் என்பது அறியக்கூடியதாக இருக்கின்றது.

             பலகாலம் ஒரு பொருளை நினைத்து ஏங்குபவர்கள், கனவிலே அப்பொருள் கிடைத்துவிட்டதாக நினைத்து நிறைவு பெறுவதைக் குறிக்கும் பாடல்களும் வெள்ளிவீதியார் பாடல்களில் காணப்படுகின்றது.

             தொல்காப்பியப் பொருளதிகாரத்திலே மண்கலத்திலே நீருள்ளது என்பதை அதன் கசிவு காட்டுவது போல ஒரு பெண்  தன் வேட்கையை உணர்த்த வேண்டும் எனப்படுகிறது. இப்போது கூட ஒரு பெண் தன் உணர்வுகளை சமுகத்திடையே வெளிப்படையாகக் கூறத் தயங்கும் நிலை காணப்படுகின்றது. ஆனால், சங்க காலத்திலேயே வெளிப்படையாகத் தன் உணர்வுகளைப் பாடிய ஒரு முற்போக்குவாதியாகவே வெள்ளிவீதியாரை நான் காண்கின்றேன். 


    மார்ச் மாத வெற்றிமணி பத்திரிகைக்காகஎழுதப்பட்டது

    1 கருத்து:

    1. ந. சந்திரக்குமார்9 மார்ச், 2019 அன்று 1:57 AM

      வாழ்த்துகள் ....அருமையான கட்டுரை; வெள்ளிவீதியாரின் படல்களுக்கு நல்ல விளக்கங்கள்.ரசித்துப் படிக்க முடிந்தது. நிறைய புதிய தகவல்கள். மிகவும் நன்றி!

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    உள்ளத்தின் குரல் - பிரேம் ராவத்

      உள்ளத்தின் குரல் ஆசிரியர்:   பிரேம் ராவத் வெளியீடு: 2024 12 அத்தியாயங்களில் 357 பக்கங்கள்   இரைச்சல் மிகுந்த உலகத்தில் நிம்மதியை...