• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 12 மார்ச், 2019

    ''வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை''நூல் விமர்சனம்




    இலக்கணச் செங்கோல், யாப்புச் சிம்மாசனம், எதுகைப் பல்லக்கு, தனிமொழிச் சேனை, பண்டித பவனி, இவை எதுவுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை

    என்னும் கவிஞர் மு.மேத்தா அவர்களின் வரிகளை முன் வைத்து நெடுந்தீவு முகிலன் அவர்களுடைய வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை என்னும் கவிதை நூலுக்குள் நுழைகின்றேன். இது பெண்கள் பற்றி பேசப்பட்ட கவிதைத் தொகுப்பு. உடைந்த நிழலின் குரல் என்னும் கவிதையில் தொடங்கி முடிவுறாத துயர்களுக்கான முற்றுப்புள்ளி வரை 70 கவிதைகள்  இருக்கின்றன. காதல் துயரங்களும், தவிப்புக்களும், பிரிவுகளும், அதனால் வேதனைகளும், விபச்சாரங்களும் ஆண்களின் காமம்பசிக்கு ஆளாகும் பெண்களின் அவலங்களும் நாட்டை நேசித்த பெண்ணின் கனவு, எனத் தன்னை ஒரு பெண்ணாகப் பாவனை செய்து அந்த இடத்தில் நின்று முகிலன் சிந்தித்திருப்பது வரவேற்கத்தக்கது. தான் கண்கூடாகக் கண்ட பல பெண்களின் உண்மை நிலைகளைத்தான் இந்நூலில் தந்திருப்பதாகச் சொல்லுகின்றார்.

    கண்களை சமாதனப்படுத்தினேன் - ஆனால்
    அழுகையினை எழுத்துகளில் கொட்டி விடுகிறேன் என்கிறார்.


    தமிழர்களுடைய சமுதாயத்தை மட்டுமே கருத்தில் கொண்டு,  இந்தக் கவிதைகளை உள்வாங்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கின்றேன். முகிலன் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எங்களுடைய தாயகப் பெண்களின் அவலங்கள் பற்றி சிந்திக்கின்ற தன்மையினை அறியக் கூடியதாக இருக்கின்றது. ஏனென்றால், அநேகமான கவிதைகள் தாயகத்தை கவிதைக் களமாக வைத்தே எழுதியிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

    என்னைப் பொறுத்தவரையில் நான் எதையுமே ஒரு பக்கமாகச் சிந்தித்துப் பார்ப்பவள் இல்லை. எதனையும் பெரும்பாலும் எதிர்நிலையில் நின்றும் சிந்திப்பவள் என்பதை அநேகமாக என்னோடு பழகுபவர்கள் புரிந்து கொள்வார்கள். பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளைப் போலவே ஆண்களுக்கும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்களும் உள்ளுக்குள் அழுகின்றார்கள் என்பதை இந்த மண்டபத்தில் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். அடுத்த நூல் முகிலன் அவர்கள் ஆண்களுக்காகவும் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன். என்ன ஆண்கள் தங்களுடைய பிரச்சினைகளைப் பிறரிடம் பேசுகின்ற போது ஒரு தீர்வை எதிர்பார்த்துப் பேசுவார்கள். ஆனால் பெண்கள் தமக்கு ஒரு ஆதரவு அரவணைப்பு இவற்றையெல்லாம் எதிர்பார்த்தே பேசுவார்கள். இதனாலே தான் என்னவோ பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு பாரதி, பாரதிதாசன், பெரியார், முகிலன் போன்ற ஆண்கள் பேசவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

    பொதுவாக கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் வருவது இயற்கை. இரண்டு வெவ்வேறுபட்ட மனநிலையுள்ள மனிதர்கள் அல்லவா. சண்டை முடிந்தபின் கணவன் மனைவியிடம் வந்து இஞ்சப்பா நான் இப்படித்தான் கோபம் வந்தால், நாய் போல குலைப்பேன், சிங்கம் போல உறுமுவேன், புலி போலப் பாய்வேன், என்ன செய்வது கொஞ்சம் பொறுத்துப் போ. என்று சமாதானப்படுத்தினால் அடுத்த விநாடி என்னப்பா ரீ பொட்டுக் கொண்டு வரட்டா என்று கேட்பாள் மனைவி. இவ்வாறான அனுசரணையுள்ள வார்த்தைகளுக்காக ஏங்குபவர்கள்தான் பெண்கள். இதனாலேயே இத்தனை பிரச்சினைகள் பெண்ணுக்குள் இன்னும் முடிவுறாது இருக்கின்றன.

    எங்களுடைய சமுதாயத்திலே பெண்களுக்கு ஒரு தப்பான விடயம் நடந்தால், அது சரித்திரமாக பேசப்படுகின்றது. இதுவே ஆணுக்கு நடந்தால், வெறும் சம்பவமாகக் கருதப்படுகின்றது. தீராதவலி சுமந்து, ஆணாதிக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள பெண்கள் புலம்பெயர்ந்த சமுதாயத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது உண்மையே.
           
    வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை. நூலின் பெயரே உட்கிடக்கை என்ன என்பதைச் சொல்லிவிடுகிறது அல்லவா. அட்டைப்படமே இதற்கு அடையாளம் காட்டிவிடுகிறது. இதனாலேயே  ஆறும் அது ஆழம் இல்லை. அதில் விழும் கடல் ஆழம் இல்லை. ஆழம் எது அது பொம்பளை மனசுதான் என்று பாடினார்கள்.  பெண்களின் மனசுக்குள் ஒழிந்திருக்கும் சோகமும் துக்கமும் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

    புலம்பெயர்ந்த தேசத்திலே பிறந்து வாழுகின்ற  இளந்தலைமுறையினருக்கு இந்த நூலைக் கையளித்து எமது பெண்கள், தாய்மார் எவ்வாறு வாழுகின்றார்கள், எவ்வாறு பிள்ளைகளை வளர்க்கின்றார்கள் என்பதைக் காட்டிப் பாடம் கற்பிக்கலாம் என்பதை நான் உறுதியாக சொல்லுகின்றேன். ஆனால், இது எந்த அளவிற்கு அவர்களால்  புரிந்து கொளள முடியுமோ எனக்குத் தெரியாது.
     
    கவிதை வடிவம் பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும். ஏனென்றால், காலத்துக்குக் காலம் அக்காலத்திற்கேற்ப எல்லாம் மாறிக் கொண்டிருக்கின்றன. அதுபோலவே கவிதை வடிவங்களும் மாறுகின்றன. வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி ?
    எங்களோடு வயலுக்கு வந்தாயா! நாற்று நட்டாயா!
    இவ்வாறு அடுக்கு வசனமாகப் பேசப்பட்ட திரைப்பட வசனம் மாறி நான் ஒருமுறை சொன்னா அது நூறு முறை சொன்னதுபோல என்பது போன்ற பஞ்ச் டயலொக் திரைப்படத்தில் மாறிப் போய்விட்டது. அதேபோல்
    உன் கையிலா கடிகாரம்?
    கடிகாரத்தின் கையில்    நீ! 

    என்று புதுக்கவிதை வடிவம் மாறிவந்திருக்கின்றது.

    வால்ட் விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற புதுக்கவிதையைப் படித்திருந்த பாரதி அதைப் போலத் தமிழிலும் புதுமை படைக்கவேண்டும் என்ற ஆர்வத்தால் காட்சிகள் என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதினார்.  அதற்கு அவர் இட்ட பெயர் “வசன கவிதை“ என்பதாகும்.     

    அது செய்யுளுக்கும் உரைநடைக்குமிடையிலுள்ள இடைவெளியை குறைத்தது.  அதுபோல முகிலனும் தன்னுடைய ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு சிறிய கதையை அடக்கி விடுகின்றார். இவரைக் கவிவழி கதை சொல்லி என்று அழைக்கலாம். கண்முன்னே ஒரு காட்சிப்படிமத்தைக் கொண்டு வந்து நிறுத்துகின்றார்.
    சங்ககாலத்தில் கூட இவ்வாறான பாடல்கள் இருந்திருக்கின்றன. காட்சிப்படிமங்களில் கைதேர்ந்தவர்கள் சங்ககாலப் புலவர்கள்

    சுனைவாய்ச் சிறுநீரை எய்தா(து) என்றெண்ணிய
    பிணைமான்  இனி(து) உண்ணவேண்டிக் கலைமான் தன்
    கள்ளத்தின் ஊச்சும் சுரம்என்ப காதலர் உள்ளம் படர்ந்த நெறி

    இங்கு பெண்மான் ஆண்மான் நீரருந்தும் காட்சி எமக்கு கவிதை மூலம் படம் பிடித்துக் காட்டப்படுகின்றது. ஏன் எல்லோருக்கும் தெரிந்திருக்குமே பாரதிதாசனுடைய

    கூடத்திலே மனப்பாடத்திலே – விழி
    கூடிக்கிடந்திடும் ஆணழகை
    ஓடை குளிர்மலர்ப் பார்வையினால் - அவள்
    உண்ணத் தலைப்படும் நேரத்திலே
    பாடம் படித்து நிமிர்ந்த விழி - தனிற்
    பட்டுத் தெறித்தது மானின் விழி
    ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் - இவன்
    ஆயிரம் ஏடு திருப்புகிறான்.

    இந்த வரிகளின் மூலம் ஒரு காட்சிப்படிமம் கண்ணுக்கு முன்னுக்கு வந்து நிற்கின்றது. இது ஒரு வித்தியாசம் என்ன என்றால், முகிலனுடைய ஒரு கவிதையில் ஒரு காட்சிப்படிமம் இல்லை ஒரு சிறிய கதையே காட்சிப்படிமமாகக் காட்டப்படுகிறது. இதனாலேதான் இவரை கவிவழிக் கதை சொல்லி என்று அழைத்தேன்.

    இவ்வாறுதான் முகிலனுடைய முதற் கவிதையாகிய உடைந்த நிழலின் குரல் என்னும் கவிதையிலே

    கிழிந்த பழைய சேலைக்கு ஆயுள் அதிகம் - அதை விட்டால் அவள் எதை உடுத்துவாள்.
    வயிறு நிறைய ஊட்டி விட்டு - அடிப்பானையில் மிஞ்சிய கருக்கலை வடித்த கஞ்சியோடு கலக்கி பசியாறுவாள்.
    அவளுக்கென்று எதுவும் இருந்ததாயில்லை.. நான் எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வயலுக்குக் கூலிக்குப் போவாள்.
    கலப்பையும் மண்வெட்டியும் - கொப்பளம் போட்ட அவள் வறுமை கரக்களை பார்த்து இரக்கப்படாத நாள் இருக்கவே இருக்காது.
    சும்மாடு இல்லாமல் தலையில் விறகு கட்டோடும் இடுப்பில் தண்ணிக் குடத்தோடும் மாலைக்கருக்கலில் வீடு வருவாள்.
    படலை திறக்கும் சத்தம் கேட்டதும் புழுதியோடு ஓடுவேன். - என்னை தனிமையில் விட்டுப் போன கவலையோடு தூக்கி அணைப்பாள்.
    தாலி அறுந்த போது - அவள் பட்ட துன்பத்திற்கு ஆறுதல் சொல்லும் வயதில் நான் இல்லை...
    ஆண்டு சில கடந்ததும் அடுத்த கலியாணம்
    கேட்டு வந்த போது - அவள் என்னை விட்டுப் போகவில்லை...
    வாழ்க்கையின் பாதிதூரம் கடப்பதற்குள் - அவள் முழுதாவே நின்மதியை தொலைத்து விட்டாள்.
    எலும்பையும் தோலையும் கொண்டு இயங்கும் பிராணியாய் நகர்ந்து கொண்டு ...
    பகலில் வியர்வையையும் - இரவில் கண்ணீரையும் எனக்குத் தெரியாமலே சிந்தினாள்.
    வலியோடு வாழப் பழகி விட்ட அவள் ஒரு நாள் காலையில் திண்ணை ஓரத்தில் பிரேதமாகக் கிடந்தாள்.
    எனக்குத் தெரிந்து நான் அழுத முதல் நாள் அதுவே...
    சுற்றமும் சொந்தமும் கூடி எனக்கு ஆறுதல் சொன்னார்கள். - அவளை கொழுத்துவதற்குக் கொள்ளியையும் தூக்கி தந்தார்கள்.
    எரிந்து அவள் சாம்பலானாள் - நானே என் அப்பனை போலவே குடிக்கு அடிமையானேன்.
    ஆண்டு சில கடக்க எனக்கும் கலியாணம் கேட்டு வந்தார்கள். - நான் மறுத்து விட்டேன்.
    தனிமையில் என் தாய் பட்ட துயர் அறிவேன் - எப்படி இன்னொரு பெண்னை விதவையாக்கிடுவேன்.


    இது ஒரு உரைச் சித்திரம் போல் இருக்கின்றதல்லவா. இறுதி வரிகளில் ஒரு தெறிப்பு அது மின்னலென வந்து விழும். ஆசிரியர் சமூகத்திற்காக அஞ்சுகிறார். தகப்பனின் குடியால் தன்னுடைய தாய் இந்த நிலைக்கு ஆளான காரணத்தால் இப்போது தாயின் துயரைத் தாங்க முடியாதவராய்த் தானும் குடிக்கின்றார். இன்னும் ஒரு பெண்ணைத் தன் தாயைப் போல் ஆளாக்க விரும்பவில்லை என்பதை இக்கவிதை மூலம் காட்ட வருகின்றார். இதையே இந்த ஆண் குடியை விட்டுவிடலாம் என்று ஏன் நினக்கவில்லை. குடியை விடுவதா இன்னுமொரு பெண்ணைத் திருமணம் செய்வதா என்று சிந்தித்து குடியைத் திருமணம் செய்கிறார். இக்கவிதை அப்பா செய்த தவறை நியாயப்படுத்துவதாக அமைகின்றது. இல்லையென்றால், ஆண்கள் சமுதாயம் இப்படித்தான் இருக்கிறது என்பதை முகிலன் அடையாளங் காட்டுகிறாரா? அதாவது யதார்த்தத்தைப் பேச வருகிறாரா? இல்லை ஆண்வர்க்கம் இப்படித்தான் என்று சொல்ல வருகின்றாரா? இதற்கு ஆசிரியர்தான் பதில்சொல்ல வேண்டும். சொல்வார் என்று நினைக்கிறேன்..

    வார்த்தைகளுக்குள் சூட்சுமம் வைக்கும் கலையை இவர் கற்றதனால்தானோ என்னவோ இவர் கவிதைகளை என்னால் ஓரம் கட்ட முடியவில்லை.

    இவர் கவிதைகளில் மனதுக்குள் அரித்துக் கொண்டே இருக்கின்ற சில வரிகள் நான் வாசித்த பல விடயங்களைத் தூசி தட்டி எழுப்பிக் கொண்டு வருகின்றது.

    அற்ப சுகத்திற்காக அவள் உடம்பை கிழித்தவர்கள் எல்லோரும் - அவள் இதயத்தில் ஆணி அடித்தவர்கள் தானே.
    அந்த காயம் ஆறும் முன்னரே திரும்பவும் - இன்னொருவன் திருகும் கொடுமை...
    இந்த மோசமான சூழ்நிலையினுள் மோகத்தில் முழுமையடைவதற்காக - அவளுக்கு காதல் கடிதம் எழுதியவர்களும் இருக்கிறார்கள்.
    காமத்திற்கும் வயது ஓய்வு இருக்கிறது என்றே நானும் நினைத்திருந்தேன் - அந்த கிழவியின் எலும்பிலும் இரை தேடி அலைகிறதே நாய்கள்.
    இந்தக் கவிதையை படித்தபோது 
    Junko Farunta என்னும் ஒரு பெண் சீனாவில் 44 நாட்கள் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு 100 பேர்களால் கற்பழிக்கப்பட்டு அங்கங்கள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டாள். காரணம் காமமும் பசியும் தன் காதலுக்கு அவள் இனங்காத காரணமும் ஆகும். இதைவிட Ted Bendy என்னும் ஒரு ஆண் அரக்கன் தன்னுடைய தாய் தன்னுயை அக்காதான் என்னும் போது மிருகமாகின்றான். காதலியினால் காதல் தோல்வியடைகின்றான். அவளைத் திரும்பவும் காதலித்து ஏமாற்றி, மானபங்கப்படுத்தி கொல்லுகின்றான். இவ்வாறு கிட்டத்தட்ட 100 பெண்களை கொலைசெய்துள்ளான்.  ஏன் இலங்கையில் வித்யா கொலை எல்லோராலும் அறியப்பட்டதே. இவ்வாறு பெண்களைப் போகப் பொருளாக நினைக்கும் சாக்கடை சமுதாய நிலை அழியும் வரை, தசை தின்னும் கழுகுகள் வாழும்வரை இவ்வாறான முகிலன்கள் தோன்றிக் கொண்டுதான் எழுதிக் கொண்டுதான் இருப்பார்கள்.

    உள்ளத்தை விட்டு அகலாத கவிதை ஒன்று ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசத்தைப் போல ஒரு சிறிய பெண்ணின் கதையைப் பேசுகிறது. இதனைப் படித்துவிட்டு எனக்குள்ளே பல கேள்வி எழுந்து கொண்டிருந்தன.

    இதயம் உடைந்த தருணம் என்ற கவிதை

    மழை பெய்துகொண்டிருந்தது. சேரிப் புறத்திலே கூரை சரிந்து பாழ் அடைந்த வீட்டில் வசிக்கும் உன்னைப் பார்க்க வருகின்றேன். “ஒற்றை குடையோடு"
    என்னை தூரத்தில் பார்த்ததும் ஓடி வருகிறாய். மெதுவாய் உன்னைத் தழுவி என்னில் சாய்த்துக் கொண்டு உனது உறவுக்காரர்களை விசாரித்தேன்.
    நீ பேசவே இல்லை மௌனத்திலும் முனகலோடு என்னை இறுகப் பிடிக்கிறாய். "மழையை ரசித்தபடி"
    உன் மேனி குளிரில் நடுங்க என் நடை தள்ளாடியது. குடை ஈடாடியது - இருந்தும் உனது உறவுக்காரர்களைப் பற்றியே விசாரித்தேன்.
    குடை வழியாக ஒழுகும் மழை நீருடன் கை நீட்டி விளையாடுகிறாய். எந்த சலனமு மில்லாமலே...
    பேசாமலே நானும் நடந்தேன்
    எனது மாளிகை நெருங்க - திரும்பவும் உனது உறவுக்காரர்களை விசாரித்தேன்.
    “திடுக்கிட்டு அம்மா என அலறினாய்"
    மழை முற்றாகவே நின்ற பிறகும் குடைக்குள் தூறியது...
    அது அந்த ஆறு வயது சிறுமியின் விழிகளில் இருந்து....


    இவருடைய கவிதைகளில் இறுதியில் ஒரு தெறிப்பு இருக்கும். அது ஆசிரியருடைய உத்தி. இந்தக் கவிதையை வாசிக்கும் போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது. ஆரம்பத்தில் இருந்து வாசித்துக் கொண்டு செல்லும் போது ஒரு பெண் என்னும் நிலையை உணர்ந்திருப்போம். ஆனால். இறுதியில் அது ஒரு சுயத்தை மறக்கும் ஒரு சிறுமி என்று முடிக்கப்படுகின்றது. யார் அது அநாதையா, இல்லை. சிறுபிள்ளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் சிறுமியா? என்னால் இன்றும் சிந்தித்து முடிவு எடுக்க முடியவில்லை.
    உன் மேனி குளிரில் நடுங்க என் நடை தள்ளாடியது. குடை ஈடாடியது - இருந்தும் உனது உறவுக்காரர்களைப் பற்றியே விசாரித்தேன்.
    இவ்வரிகளைப் பார்க்கின்ற போது குடைக்குள் அழைத்து வருபவர் கூட அச்சிறுமியை தப்பான முறையில் பயன்படுத்த எத்தனிக்கிறாரோ என்று நினைக்கிறேன். யார் அந்தச் சிறுமி நீங்கள்  எதுவாக எண்ணுகின்றீர்களோ அதுவாக அச்சிறுமி இருப்பாள். இதுதான் சிறந்த இலக்கியத்திற்கு எடுத்துக்காட்டாகப்படுகின்றது. வேறுவேறு புர்pதல்களை இக்கவிதை ஏற்படுத்தும். ஒரு எழுத்தாளன் ஆசிரியராகவோ, பாதிரியாராகவோ இருக்கக் கூடாது. ஏனென்றால் இவர்கள் தியறியைத்தான் பேசுவார்கள், இந்த தானாக யோசிக்காமல் யதார்த்தத்தைப் பற்றிச் சிந்திக்காமல் கற்பிப்பார்கள். ஆனால், எழுத்தாளன் யதார்த்தத்தப் பேசவேண்டும். தானாக சிந்திக்கின்ற சுதந்திரம் இருக்க வேண்டும். தான் சமுகத்தில் பெற்ற அனுபவத்தைப் பேச வேண்டும். வாசகர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். இத்தகைய பண்பு முகிலன் அவர்களிடம் இருக்கிறது. டுகைந என்னும் ஆங்கிலப் படத்தில் வேற்றுக்கிரகத்திற்குச் சென்ற ஆய்வுகூடம் திரும்பிய சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், என்ன நடந்தது என்று தெரியாமல் படத்தை முடித்திருக்கும் போது ஏற்படும் மனஏக்கம் இந்த வகையில் முகிலனுடைய கவிதைகளிலும் இருக்கின்றன. நிச்சயமாக  21ஆம் நூற்றாண்டு சிறந்த இலக்கியமாக இவருடைய கவிதைகள் போற்றப்பட வேண்டியதே.

    கவிதைகளை வாசித்துக் கொண்டு போகின்ற போது எமக்கு மனதுக்குள் தோன்றுகின்ற படிமம் முடிவில் முற்றாக மாறிவிடும். மாற்றிவிடுவதுதான் முகிலனுடைய கவிதாயுக்தி என்று முழுவதையும் படித்தபோது உணர்ந்து கொண்டேன். உதாரணத்திற்கு ஒரு கவிதை

    பெண்களின் தோழன்

    இப்போதும் எப்போதும் நான் பெருமையாய்ச் சொல்லிக் கொள்ள எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான்.
    யார் என்னை விலகி போனாலும் - அவன் என்னை விட்டு இருக்கவே மாட்டான்
    வராதே போதும் நீ போ என நான் சொன்னாலும் - எனது பேச்சை கேட்காமல் மீறி வந்து விடுவான்.
    அவனுக்கும் எனக்குமான உறவு தொடர்பு எவ்வளவு காலம் என்று கூட எனக்கு நினைவில் இல்லை...
    அவனைப் போல் எனக்கு ஆறுதல் சொல்லவும் எவராலும் முடியாது.
    என்னோடே அவன் நிறைய பழகி கொண்டதால் அவனை பிரிந்திருக்க நானும் விரும்புவதில்லை..
    முன்னறிவிப்பு இன்றி சொல்லாமல் கொள்ளாமல் அவ்வப்போது வந்து நிற்ப்பான்
    நான் எல்லாம் சொல்லி அழுவதும் அவனிடம் மட்டுமே
    அவன் பெயரை சொல்லவே எனக்கு கண்ணீர் வருகிறது - அவன் பெயரும் கண்ணீர் தான்


    அண்மைக்காலக் கவிதைகளிலே என் நெஞ்சில் நிறைந்து என்ன ஆட்டிப்படைக்கும் இரண்டு கவிதைகள் ஒன்று உமா என்னும் இளம் கவிஞன் எழுதிய கவிதை அடுத்தது கவிதைக்கு இறுதிக்கவிதை என்னும் முகிலனுடைய கவிதை.

    சோமாலியத் தாய் பற்றிய கவிதையை கவிஞர் உமா எழுதுகிறார்

    வெளியில் இவ்வளவு காற்றிருக்க ஏனடா மகனே. என் முலையில் வாய் வைத்து காற்றைக் குடிக்கின்றாய்.
    ஏனடா அழுகின்றாய்
    சத்தியமாய்த் தெரியாது எனக்கும் தாய்ப்பாலின் சுவை என்னவென்று
    ஏனென்றால் உன் பாட்டியின் முலைகளுடன் பாலுக்காகப் போராடித்
    தோற்றுப் போனவள் நான்.


    வறுமையை இதைவிட எப்படிச் சொல்ல முடியுமோ  எனக்குத் தெரியாது. அவ்வளவு அற்புதமாக இருக்கின்றது.
        
    முகிலனுடைய என் இதயம் உடைந்த தருணம், என்னும் கவிதை என்னை அறியாமலே எனக்குக் கண்ணீரை வரவைத்துவிட்ட கவிதை.

    கவிதைக்கு இறுதிக்கிரியை அதில் ஒருசில வரிகளை உங்களுக்கு வாசித்துவிடுகின்றேன்.

    நெல் குத்தி உன் கை எனக்குச் சோறு தந்தது. நான் உனக்கு வாய்க்கரிசி தூவி - அந்தியெட்டியில் சுண்ணம் இடித்தேன்.
    காடு போய் கடகம் நிறைய - தும்பங்காயோடும் தூதுவளையோடும் வீடு வருவாய். நான் சுடுகாடு போய் உன் எலும்பையும் சாம்பலையும் அள்ளிக் காடு மாத்தினேன்.
    உறியில் தொங்கும் உன் கறியை சுவைக்க பூனையும் புகட்டிலே படுத்திருக்கும் - நான் அறுசுவையில் சமைத்து உன் உருவப்படத்துக்கு வாழையிலையில் படைக்கிறேன்.
    உயிரோடிருக்கும் போது உன்னை நான் எங்கும் கூட்டிப்போனதில்லை - உன் எட்டுச்செலவுக்கு ஊரையே கூப்பிடுகிறேன்.
    கழுத்தில் காதில் ஒன்றும் இருக்காது ஒரு சேலையையே மாத்தி உடுத்துவாய் - நான் பட்டு வேட்டியில் பூநூலோடு உனக்கு புண்ணியதானம் செய்கிறேன்.

    வெறுங்காலோடு வெளியே போய் வெயிலில் பொசுங்கி வீடு வருவாய் - நான் வீட்டுக்கிரித்தியத்தின் போது ஐயருக்கு... செருப்பும் குடையும் கொடுத்தேன்.

    இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் யாவுமே இருக்கிறது - ஆனால்
    என்னோடு நீ இல்லை...

    சந்தமென்று அலங்காரச் சொற்களை அகராதி தேடி எழுதுகின்ற கவிஞர்களுக்கு மத்தியில் கடலில் காணப்படும் பனிமலை போல் இருக்கின்ற முகிலன் கவிதைகள் சிறப்பு. வரிகளால் வாசகர்களை கட்டிப் போடுகின்றீர்கள். எழுத்தினால் இதயங்களைக் ஆட்டிப்படைக்கின்றீர்கள். உண்மையில் நீங்கள் கார்முகிலன்தான். காளமேகம் பாடினார் இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணுாறும் அம்மென்றால் ஆயிரம்பாட்டாகாதோ- சும்மா இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாமாயின் பெருங்காள மேகம் பிளாய் என்றார். அதுபோல் நீங்கள் இன்னும் கார்முகிலனாய் பல கவிதை நூல்களைத் தரவேண்டும். இங்கு வந்திருக்கின்ற அனைவரையும் கேட்டுக் கொள்ளுகிறேன். புத்தகங்கள் அலுமாரியை அலங்கரிக்கும் அலங்காரப் பொருள் அல்ல. முழுவதுமாகப் படியுங்கள். பிடித்தவற்றை நான் இப்போது உங்களிடம் சொன்னேன் அல்லவா அதேபோல் பிறரிடம் சொல்லுங்கள். உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள் எதாவது இருக்குமென்றால் ஆசிரியரிடம் நேரடியாகப் பேசுங்கள். படைப்பை மட்டுமே வைத்துக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். படைப்பாளியை நாம் மறந்துவிடவேண்டும் என்று கூறி

    எழுத்தாளர்கள் சும்மா இருக்கவில்லை. முன்மாதிரியாக இருக்கின்றார்கள். புத்தகங்கள் உயிரோடு இருக்கின்றன. எழுத்தாளர்கள் மறைந்து விடுகின்றார்கள். அதனாலேயே  எழுத்தாளர்கள், கலைஞர்கள் இறக்கும்போது காலம் ஆனார்கள் என்கின்றார்கள்.

    2 கருத்துகள்:

    1. மிகச் சரியான விமரிசனம்.
      படித்தவுடன்
      "வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை'' நூலைப் படிக்கத் தூண்டுகிறது.

      பதிலளிநீக்கு
    2. நூலினைப் படிக்கத்தூண்டுகிறது தங்களது விமர்சனம்

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...