• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 13 அக்டோபர், 2018

    காலமும் நேரமும் பெரிய மேதாவிகள்




    வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களைக் கடக்கும் போதும் காலப் பாதையின் கட்டுமாணங்கள், கனவுகள், காட்சிப்படிமங்கள், இடர்கள், இமயாப் பொழுதுகள், மூளைப்பதிவுகள்  எம்மை வழிநடத்துகின்றன. சில நேரங்களில் நாம் நினைக்கின்ற விடயங்கள் எமக்கு நடக்காமலே போகலாம். சில நேரங்களில் நாம் நினைக்கின்ற விடயங்கள் அப்படியே நடந்தும் விடலாம், சில நேரங்களில் நாம் நினைக்காத விடயங்கள் எமக்கு நடக்கலாம் இதற்கு காரணம் சந்தர்ப்பம் சூழ்நிலை என்று கூறினாலும் எம் மனது என்றோ போட்ட கணக்கு அது இன்று நிறைவேறியுள்ளது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட் டொன்றாகும்
    அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
    நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
    எனையாளும் ஈசன் செயல்

    என்று நல்வழியிலே ஒளவையார் கூறியிருக்கின்றார். இதைத்தான் நேரம் வரக் கூடிவரும் என்றும் கூறுவார்கள். எப்படித்தான் நீரூற்றி வளர்த்தாலும் பருவத்தால் அன்றிக் கனி தராது மரம்.  

    அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி
    எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
    உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
    பருவத்தால் அன்றிப் பழா

    என மூதுரையிலே அதே ஒளவையாரே கூறியிருக்கின்றார். அவர்கள் அன்று கூறினார்கள். அதை எப்படி இன்று ஏற்றுக் கொள்வது? என்று சந்தேகப்பட்டு விட முடியாது. நாம் முன்னெடுக்கின்ற காரியங்கள் பல தடைகள் வந்து இறுதியில் அதற்குரிய காலமும் நேரமும் வருகின்ற போது வெற்றியையே தருகின்றது என்பதை அனுபவப் பாடமாக நாம் கற்றிருக்கின்றோம். பலமுறை முயற்சி செய்து தோல்வி கண்டு இறுதியிலே வெற்றியடைந்தார்  தோமஸ் அல்வா எடிசன். ஒவ்வொரு முறை தோற்கும் போதும் ''இவ்வளவு பொருள்களைக் கொண்டும் பல்பை எரிய வைக்க முடியாது'' என்ற உண்மையைக் கற்றுக் கொண்டேன் என்கிறார் தோமஸ் அல்வா எடிசன். தவறுகள் எமக்குக் கற்றுத் தரும் பாடம் எந்த நூல்களும் கற்றுத் தருவதில்லை. காலம் ஏற்படுத்தும் காயத்தின் வலி இன்பத்தின் முதலீடு என்றே கருத வேண்டும். தன் மீது விழும் ஒவ்வொரு அடியும் தன்னைச் சிற்பமாக்கும் என்று கல்லுக்குத் தெரியாது" என்று அல்பேர்ட் ஐன்ஸ்ரைன் கூறியிருக்கின்றார். எனவே ஒவ்வொருமுறையும் காயப்படும் போதும் ஏதோ ஒரு பெரிய மகிழ்ச்சி காத்திருக்கின்றது என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நம்பிக்கை என்பது புயல் காற்றில் துவண்டு விழும் மெல்லிய மலர் அல்ல. அசையாமல் நிற்கும் இமயமலை போன்றது" என்று காந்தியடிகள் கூறிய வார்த்தைகளை மனதிலே கொள்ள வேண்டும்.  உலகில் வென்றவர்கள் எல்லாம் எமக்குச் சொல்லித்தரும் பாடம் இதுவாகவே இருக்கின்றது.

               ஏனென்றால், காலம் கற்றுத்தரும் பாடம் எந்த ஆசிரியனும் கற்றுத்தர முடியாது. காலமும் நேரமும் அறிஞர்களை விட மேதாவிகள். இலையுதிர்காலம் வந்தால் நாம் விரிவுரை நடத்தாமலே மரங்கள் இலைகளை உதிர்த்துக் காட்டிவிடும். காலத்தையும் நேரத்தையும் எந்தவிதத் தடையும் போட்டுத் தடுத்துவிட முடியாது. அது கவலைகளைத் துடைத்தெறிந்துவிட்டுப் போகும். துன்பங்களைக் கழுவிவிட்டு கண்டுகொள்ளாமலே போய்விடும். சிலநேரங்களில் காயங்களையும் தந்துவிட்டுப் போகும். ஆனால், நடக்க வேண்டிய நல்ல விடயங்கள் சில நேரத்தில் சொல்லிக் கொள்ளாமலே நடந்துவிடும்.

             செல்லுகின்ற வாழ்க்கைப் பாதையிலே பல விடயங்களைக் கற்றுக் கொள்ளுகின்றோம். அதன் படியே தொடருகின்றோம். பிரதிஸ்டம், அனுமானம், ஸ்வாதி என்னும் மூன்று விடயங்கள் மூலம் எமது வாழ்க்கை தொடருகின்றது. இதில் பிரதிட்சம் என்பது கண் முன்னால்  காண்பதை விளங்கிக் கொள்ளல், அனுமானம் என்பது இது இப்படி இருப்பதினாலே அது அப்படி இருக்கும் நீ இதைப் பெறவில்லையென்றால், உனக்கு இது நடக்கும் என்று நினைத்துப் பார்த்தல், ஸ்வாதி என்பது முன்னோர்களின் மொழி. அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல். இவ்வாறு முன்னோர்கள் சொன்னதை அப்படியே சில விடயங்களில் ஏற்றுக் கொள்ளுகின்றோம்.   இல்லையென்றால், அவற்றைக் கொண்டு எம்மைத் தீர்மானிக்கின்றோம். இல்லையென்றால், கண்முன்னால் காண்பது மட்டுமே சரி என்று எடுத்துக் கொள்ளுகின்றோம். ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கும் போது பிரதிஸ்டம், அனுமானம், சுவாதி இதில் ஏதாவது ஒன்றைப் பிரதியீடு செய்து பார்க்கின்றோம். அனைத்தும் எமது மூளைப்பதிவுகளாகி எம்மை வழிநடத்துகின்றன.

                   ஆணி அடித்து மரத்தில் வைத்தது போல் ஆழமான சிந்தனைகள், அதேபோல இருளில் கிடக்கும் சிந்தனைகள் இவற்றையெல்லாம்  எழுத வைக்கும் பல நிகழ்வுகள் அத்தனையும் எமக்குக் காலம் போதிக்கும். வாழ்க்கையும் நேரமும் எங்களுடைய இரண்டு ஆசிரியர்கள். எப்படி நேரத்தை பாவிக்க வேண்டுமென்று வாழ்க்கை எங்களுக்குக் கற்பிக்கின்றது. நேரம் வாழ்க்கையை எங்களுக்குக் கற்பிக்கின்றது. ஒரு கவலையில் நாம் இருக்கின்ற போது நேரம் நீண்டு கொண்டு போவதுபோல உணருகின்றோம். ஆனால், ஒரு ஆசையை நாம் நிறைவேற்ற வேண்டுமென்றால், அதே நேரம் மெதுவாக ஊர்ந்து செல்வது போல உணருவோம். அனைத்தும் எம்முடைய உணர்வுகளே. ஆனால், காலமும் நேரமும் எம்மை வழிநடத்திக் கொண்டே இருக்கின்றன.

                அறிவெனப்படுவது படித்த அறிவு, பட்ட அறிவு என்று இரண்டு வகைப்படுகின்றது. இதில் படித்த அறிவை விடப் பட்ட அறிவே எம்மைப் பட்டை தீட்டுகின்றது. அதனாலேயே வயோதிபர்கள் இறக்கின்ற போது ஒரு நூலகமே எரிகின்றது என்கின்றார்கள். அவர்களிடமே பட்ட அறிவு பல பக்கங்களை விளக்கமாக எடுத்துக்காட்டியிருக்கின்றது. அறிவைத் தேடிப் பெற காலம் கைகொடுக்க அக்காலத்தின் காட்சிப் படிமங்களையும், மூளைப்பதிவுகளையும், எமக்குள் ஏற்படும் எதிர்காலக் கனவுகளையும் முயற்சி, நம்பிக்கை, உண்மை என்னும் துணைக்கருவிகள் கொண்டு தொழிற்படுவோம். எமக்குக் காலம் நல்ல நேரத்தை தேடித்தரும். 


    இம்மாத வெற்றிமணி பத்திரிகையில் வெளிவந்த என்னுடைய கட்டுரை

    3 கருத்துகள்:

    1. அன்புச் சகோதரிக்கு
      வணக்கம் தங்கள் கட்டுரை
      "காலமும் நேரமும் பெரிய மேதாவிகள்"
      அனுப்பியமைக்கு நன்றி .உடனடியாகப் பதில் எழுத இயலவில்லை.
      தாமதத்துக்குப் பொறுத்தருள்க !

      ஒளவையில் தொடங்கிக் 'காலமும் நேரமும் பெரிய மேதாவிகள்' என்ற தத்துவக் கருத்தைச் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள் ; உங்கள் எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. ஆங்காங்கே நல்ல பல கருத்துக்கள் பளிச்சிடுகின்றன :
      " தவறுகள் எமக்குக் கற்றுத் தரும் பாடம் எந்த நூல்களும் கற்றுத் தருவதில்லை."

      " நம்பிக்கை என்பது புயல் காற்றில் துவண்டு விழும் மெல்லிய மலர் அல்ல. அசையாமல் நிற்கும் இமயமலை போன்றது||" (என்ற காந்தி அடிகள் கூற்று).

      " காலமும் நேரமும் அறிஞர்களை விட மேதாவிகள்."

      " வாழ்க்கையும் நேரமும் எங்களுடைய இரண்டு ஆசிரியர்கள். எப்படி நேரத்தை ப் பாவிக்க வேண்டுமென்று வாழ்க்கை எங்களுக்குக் கற்பிக்கின்றது. நேரம் வாழ்க்கையை எங்களுக்குக் கற்பிக்கின்றது"

      " அறிவெனப்படுவது படித்த அறிவு, பட்ட அறிவு என்று இரண்டு வகைப்படுகின்றது. இதில் படித்த அறிவை விடப் பட்ட அறிவே எம்மைப் பட்டை தீட்டுகின்றது."

      இதனைத்தான் திருவள்ளுவர் ,
      "நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றுந்தம் உண்மை அறிவே மிகும் " என்பார். பட்டறிவுதான் உண்மை அறிவு.

      பிழை இல்லாத் தமிழ் மகிழ்ச்சி தருகிறது.
      சில இடங்களில் சிறு பிழைகள் உண்டுதான் ; அவற்றைக் களைதல் நன்று
      காட்டாக :

      " நாம் முன்னெடுக்கின்ற காரியங்கள் (பல தடைகள் வந்து இறுதியில் அதற்குரிய காலமும் நேரமும்
      வருகின்ற போது )வெற்றியையே தருகின்றது ன
      என்பதை அனுபவப் பாடமாக நாம் கற்றிருக்கின்றோம்."

      " பல முறை முயற்சித்து..."
      முயற்சித்து, பயணித்து, மரணித்து, தியானித்து ...என இக்காலத்தில் எழுதுகின்றனர் .
      இப்படி எழுதுவது தவறு. முயற்சி செய்து, பயணம் செய்து, மரணம் எய்தி, தியானம் செய்து... என்றே எழுதுதல் வேண்டும்.

      தமிழ் அடிப்படை இலக்கணப்படி
      பெயர்ச் சொல்லில் இருந்து வினைச் சொல் பிறவா !
      முயற்சி, பயணம், மரணம், தியானம்... பெயர்ச் சொற்கள்.
      இவை துணை வினைகளைக்கொண்டே வினைச் சொல்லை உருவாக்கும்.

      "ஒவ்வொரு அடியும் தன்னைச் சிற்பமாகும் என்று கல்லுக்குத் தெரியாது||"
      சிற்பமாக்கும் எனப் பிறன் வினையாக வருதல் வேண்டும்..

      நல்ல கருத்துள்ள கட்டுரையைப் படைத்தமைக்கு அடியேனின் பாராட்டுகள்.
      இனி அடிக்கடி, தங்கள் வலைப் பூவைப் (blog ) பார்வையிட வருவேன்.

      நனி நன்றியன்
      பெஞ்சமின்


      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...