• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 1 ஜூலை, 2018

    ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் அணுகுவதும் இணைவதும் முறையா!

          

      ஒரு திருமண பந்தத்தின் சிறப்பு ஒரு உயிரை உலகத்திற்கு உருவாக்குதல். ஆணும் பெண்ணும் சேர்ந்து அற்புதமாக ஒரு குழந்தையை உலகத்திற்குக் கொண்டுவருகின்றார்கள். இது இயற்கையும் கூட. இந்த இயற்கையின் மூலமே இனவிருத்தி நடைபெற வேண்டும் என்பது நியதி. ஆனால், தற்காலத்தில் பரவலாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் விடயமாகக் கருதப்படுவது ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் சேருகின்ற ஓரினச் சேர்க்கை.

              உலகத்தில் 20 வீதமானவர்கள் ஆணுக்கு பெண் தன்மையும் பெண்ணுக்கு ஆண் தன்மையும் உள்ள மாறுபட்ட குணமுள்ளவர்களாகத்தான் பிறக்கின்றார்கள். இவ்வாறு  பிறப்பது இயற்கைக்கு மாறுபட்டதாக இருந்தாலும். இது இயற்கைதான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

    ஒரு தாயின் வயிற்றிலிருந்து ஒரு உருவம் பிறக்கின்றது. அது மனிதன் பிறப்பில் ஆணாகப் பெண்ணாகப் பெயர் பெறுகின்றது, ஆனால், இது ஆண் என்றும் பெண் என்றும் அடையாளம் கொடுத்தது மனிதனே என்பதும் உண்மை. வளர்ப்பில் வேறுபட்ட குணாதிசயங்களை ஊட்டி வளர்த்த போது அது பெண்ணென்றும் ஆணென்றும் தன்னை அடையாளப்படுத்துகின்றது.

             ஒவ்வொரு ஆணுக்கும் சில பெண் தன்மைகள் இருப்பது இயற்கை அதுபோல், ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தன்மை இருப்பதும் இயற்கை. வேலைத்தளத்திலே பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண் தன்னை ஒரு ஆண்போல் நடையுடை பாவனையில் காட்டிக் கொள்ளுவாள். சில ஆண்கள் வெட்கப்படுவதிலும் சில நடவடிக்கையிலும் பெண்போல் நடந்து கொள்வான். இது எப்படி ஏற்படுகின்றது என்றால், இயற்கையில் தாய் தந்தையிடம் இருந்து 23 குரோமோசோம் சோடி சேர்கின்ற போது ஒரு குழந்தை உருவாகின்றது. தாயின் xx என்னும் குரோமோசோம் தந்தையின் xy என்னும் குரொமோசோம் இணைந்து பிள்ளை வயிற்றில் உருவாகின்றது. இப்போது தாயிடமிருந்து ஒ மட்டுமே வரும். தந்தையிடமிருந்து x அல்லது y வரும். எனவே  முதலில் அம்மாவிடம் இருந்து வரும் குரோமோசோம் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது. எனவே 42 நாட்கள் பெண்ணுக்குரிய உறுப்புகள் தோன்றுகின்றன. சூலகங்கள் கூடத் தோன்றி பின் வேறாகின்றது. பின்னரே ஆணாயின் ஆண்களின் உடல் உறுப்புக்களாக மாறுகின்றன. எனவே ஆரம்பத்தில் எல்லோரும் பெண்களாகவே உருவெடுக்கின்றார்கள் என்பது விஞ்ஞான ரீதியில் அறியப்பட்ட உண்மையாகும்.

           இவ்வாறு இயல்பாகவே பெண் தன்மையைப் பெற்ற ஒரு ஆண் தன் நிலைமையை வெளியில் சொல்ல முடியாது வேதனையை அனுபவிக்கும் நிலமையும் முடியாத பட்சத்தில் தற்கொலை செய்து கொள்ளுகின்ற நிiலைமையும் பண்பாட்டுப் போர்வைக்குள் கிடக்கும் மனிதர்களுக்கு  பெரும் சவாலாக அமைகின்றன. இயற்கையை மீற முடியாது என்று சொல்லும் எம்மவர்கள் இவ்வாறான மனிதர்களை கண்டிப்பதும் அவர்களின் மனவேதனையை மேலும் தூண்டும் விதமாக வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு மனிதர்களும் தமக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அல்லது தமது பிள்ளைகள் இவ்வாறான ஹோமோன்களின் மாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

                        மகாபாரத யுத்த காலத்தில் யுத்தத்தில் பங்கெடுப்பதற்காக இலங்கையிலிருந்து சென்ற மகாவீரன் அறவான் என்பவன் தன் வில்வித்தைச் சிறப்பை கிருஸ்ணரிடம்  காட்டியபோது அவனது திறமையை உணர்ந்த கிருஸ்ணர் தனது சூழ்ச்சியைப் பயன்படுத்தி அறவானிடம் ஒரு கோரிக்கை வைக்கின்றார். உன்னுடைய இந்த அம்பைப் பயன்படுத்த முன் உன்னை நீயே கொல் என்று கூறுகின்றார். அதற்கு இறப்பதற்கு முன் எனக்குத் திருமணம் செய்யும் ஆசை இருக்கின்றது என்று அறவான் கேட்கின்றான். அதற்கு கிருஸ்ணர் மோகினி என்னும் பெண்ணாக மாறி அறவானைத் திருமணம் செய்கின்றார். இது மகாபாரத கதையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு. இங்கு கிருஸ்ணர் பெண்ணாக மாறுகின்றார். இது ஒரு ஆண் பெண்ணாகத் தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மைக்குள் அடங்குகின்றது. இதுபோல் புராணக் கதைகளிலும் அறிந்திருக்கின்றோம். ஆகவே ஒரு ஆண் ஆணையே விரும்புவதும், ஆண் தனது உடல் உறுப்புக்களை மாற்றி பெண்ணாக மாறுவதும் தற்போது வெளிப்படையாக நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

             எனவே இயற்கையை மீற முடியாது. அதற்கு இடம் கொடுத்தலாகாது என்பவர்கள் காலம் காலமாகக் கட்டிக்காத்து வந்த தமது பழக்கவழக்கங்களையே காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்வதைக் கண்கூடாகக் காண்கின்றோம். இயற்கையாகத் தோன்றுகின்ற நரையை மறைத்து "டை" போடுகின்றோம். இயற்கை நகத்திற்கு சாயம் பூசுகின்றோம். காதலுக்கு மறுப்புத் தெரிவித்து கடுமையாகக் கண்டித்த நாம், இப்போது காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளுகின்றோம். சாதிக்கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்த நாம், அதை மீறிப் சாதி, மத, இன பேதமின்றி பயணிக்கின்றோம். இவ்வாறு மாற்றத்திற்கு உள்ளான நாம், இயற்கையாகவே ஒரு மனிதனின் உடல்மாற்றத்தைக் கேவலமாக கருதுவது எந்தவிதத்தில் நியாயமாகின்றது.

          ஒரு மனிதனின் ஆசாபாசங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாது ஒவ்வொரு மனிதர்களினதும் மன உணர்வுகளை அழிக்க நினைப்பதும்  கொலைக்குச் சமனாகும்.

    ஜூலை வெற்றிமணி பத்திரிகையில் வெளியாகியுள்ளது





    2 கருத்துகள்:

    1. இயற்கையை இழிவுபடுத்துவது எந்தவிதத்திலும் தப்பு தான்...

      பதிலளிநீக்கு
    2. இதைப்படித்தபோது சிவாஜிகணேசன் நடித்த தெய்வ மகன் நினைவிற்கு வந்தது.தனக்குப் பிறக்கப்போகும் மகன் தன்னைப்போல கோரமான முகத்துடன் இருக்கக்கூடாது என்று வேதனைப்படுவார். மன வேதனைகளை சுமப்பது மிகவும் சிரமம். அவரவர்கள் உணரும்போதுதான் அந்த வலி தெரியும்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...