இணையம் உலகத்தைத் தத்தெடுக்காத காலம், திறமைகளும், புகழும், சோகங்களும், நிகழ்வுகளும் சில மனிதர்களையே சென்றடைந்த காலம். அவ்வாறான காலத்திலேயே புகழடைந்தவர்களை சினிமாவும், வானொலிகளுமே அடையாளப்படுத்தின. தமிழ் சினிமாவிலே நடிப்பென்றால், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் என்று உலகமே கொண்டாடிய காலத்திலே அவரோடு போட்டிபோட்டு நடிகையர் திலகம் என்று பெயர் பெற்றவர்தான் சாவித்ரி….. இவர் எப்போது இறந்தார்? எங்கே இறந்தார்? எப்படி இறந்தார்? என்னும் கேள்விகளுக்கு எம் போன்ற மனிதர்கள் விடை சொல்ல முடியாது இருந்தோம். காரணம் தெரியப்படுத்த வசதிகள் இருந்ததில்லை. இப்போது யார் தும்மினாலும் கடும் நோயில் விழுந்துவிட்டார், யார் சிறிதாகச் சறுக்கினாலும் விபத்துக்குள்ளாகிவிட்டார் என்று தலைப்புக்களைப் போட்டு Youtube இல் வெளிவந்துவிடும்.
நடிகையர் திலகம் சாவித்ரி எப்படி வாழ்ந்தார் வீழ்ந்தார் என்பதை நடிகையர்திலகம் என்னும் திரைப்படத்தைப் பார்த்தபோதுதான் அறியக்கூடியதாக இருந்தது. நிச்சயமாக இத்திரைவிமர்சனம் செய்ய வேண்டும் என்று என் மனதில் பட்டது. இத்திரைப்படம் பற்றிய விமர்சனங்கள் தாறுமாறாக வந்திருப்பது உண்மைதான். சாவித்ரி அவர்களுடன் பழகியவர்களை வைத்து இப்படம் வெளிவந்திருக்கின்றது என்பது அவருடைய மகள் சாமுண்டீஸ்வரி அவர்கள் தெரியப்படுத்தியிருக்கின்றார்.
கீர்த்தி சுரேஸின் சாவித்ரி கதாபாத்திரம் அவரின் நடிப்புக்கு முத்திரை பதிக்கின்றது. நடிகையாக இருந்து மகாநதியாக மாறிய சாவித்ரி அவர்களைப்பற்றிப் பெருமைப்பட வைக்கின்றது. மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஜெமினிகணேசனாக நடித்திருப்பது அவருக்குப் பெருமை சேர்க்கிறது. கைகளை காற்சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டும், கைகளை பின்புறம் கட்டிக்கொண்டும் நடக்கும் ஜெமினிகணேசனை துல்கர் சல்மான் கொண்டுவந்து முன்நிறுத்தினார்
மதுரராணியாக பத்திரிகையாளராக நடிகை சமந்தாக் காதல் காட்சிகள் தேவையில்லாமல் இத்திரைப்படத்தில் கொண்டுவந்து சேர்த்து சாவித்திரியின் கதையைச் சுருக்கியிருக்கின்றார்கள். அக்காலத்தில் பெயரும் புகழும் பெற்ற நடிகர் திலகம் சிவாஜிக்கணேசன் பற்றிய சில விடயங்களாவது இத்திரைப்படத்தில் காட்டப்படும் என்று எதிர்பார்த்தேன் எதுவுமேயில்லாது கதைக்குத் தேவையற்ற சமந்தா காதல் கதை இப்படத்தின் தரத்தைக் குறைப்பதாக இருக்கின்றது. . 45 வருடங்கள் வாழ்ந்த நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் பற்றி 2 மணித்தியாலங்கள் பேசுவதற்கு விடயங்கள் டைரக்டருக்கு கதாசிரியருக்கு இல்லாமல் போனது கேள்விக்குறியாக இருக்கிறது.
நடிகை சாவித்திரி மருத்துவமனையில் அட்மின் ஆகியிருக்கிறார். அவர் பற்றி ஒரு கதை எழுதுங்கள் என்னும் கடமை சமந்தாவிடம் ஒப்படைக்கப்படுகின்றது. அதன்பின்தான் கதை ஓட்டம் ஏற்படுகின்றது. சாதாரண பெண்ணாக நடனத்தில் ஆர்வம் கொண்டு நாடகத்தில் இணைந்து பிரபல நடிகையாகி நடிகர் ஜெமினிகணேசனை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து அவர் மூலம் அனைத்தும் கற்றுத் தன் திறமையினால், புகழ் உச்சிக்குப் போனவர். சாவித்திரி அவர்கள். அவருக்கு சினிமா உலகத்தையே காட்டியவர் ஜெமினிகணேசன்தான். ஆனால், ஜெமினிகணேசன் அவர்களுடைய சபலப்புத்தியினால், அவரைவிட்டு தனியாக வாழ்ந்து குடிக்கு அடிமையாகி கோமா நிலைக்கு ஆளாகி உயிர்துறந்தார் என்று கதை ஓட்டம் செல்கிறது. முதன்முதலாகக் குடிப்பழக்கத்தை ஜெமினிக் கணேசன் மூலம் சந்தர்ப்ப வசத்தால் அருந்துகின்றார். அதுவே வாழ்க்கையின் கசப்புக்குத் துணைபோகின்றது. சிற்சில காட்சிகள் மனதுக்கு இதமாக இருக்கின்றன. ஒரு கண்ணில் மட்டும் இரண்டு துளிகள் கண்ணீர் வரவேண்டும் என்று இயக்குனர் கூற கிளிசரின் இல்லாமலேயே இரண்டு துளிகள் கண்ணீரை வரச் செய்த காட்சியை கீர்த்தி சுரேஸ் அவர்கள் சிறப்பாக நடித்திருந்தார். முதன்முதலாக மது அருந்தும் போது துலகர் சல்மான் அவர்கள் பார்க்கின்ற பார்வை அவரின் நடிப்பை மேம்படுத்துகின்றது. ஒருகட்டத்தில் ஜெமினிக்கணேசனுடன் பேசவேண்டும் என்று சாவித்ரி நினைக்கின்றார். தொலைபேசி எடுத்து அழைக்கின்றார், ஹலோ,ஹலோ என்று அழைத்த ஜெமினிகணேசன் அவர்கள் இவர்தான் என்று புரிந்து கொண்டு அம்மாடி என்று அழைக்கின்றார். இக்காட்சி மனதை நெகிழ்வைக்கின்றது.
குடி ஒரு மனிதனை அது பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி எப்படிப் பாதிக்கும் என்பதை இப்படம் எடுத்துக் காட்டுகின்றது. சந்திரன் தோன்றி வளர்ந்து தேய்ந்து மறைவது போலவேதான். மனிதனுடைய வாழ்க்கையில் எதுவும் நிலையில்லை. அரண்மனையில் வாழ்ந்தவர்கள் கூட ஒருநாள் பரிதாபமாக இருக்க இடமில்லாமல் அலைவார்கள் என்பது எல்லோருக்கும் பாடமாக இருக்க வேண்டும். திறமைசாலிகள் கூட ஒருநாள் தடுமாறிவிடுவார்கள் என்பதுவும் இப்பாடம் கற்றுத் தருகின்றது. நாடக நடிகையாகி, சினிமா நடிகையாகி, திரைப்படத் தயாரிப்பாளராகி, டைரக்டராகி இலட்சக்கணக்கில் சம்பாதித்து இறுதியில் ஒன்றரை வருடங்கள் ஜடமாகக் கோமாநிலையில் இருந்து உயிர்துறந்த நடிகையர் திலகம் சாவித்ரி அவர்களுடைய வாழ்க்கை மற்றைய நடிகைகளுக்கும் பாடமாக அமைய இத்திரைப்படம் அமைந்திருந்தது.
பொதுவாக இவ்வாறான ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது மிகவும் சிரமமே. மாறுபட்ட கருத்துகளும், எதிர்ப்புகளும் இருந்தபோதிலும் இப்படம் மிகவும் நுட்பமாக எடுக்கப்பட்டது என்பதை மறுக்கமுடியாது. படக்குழுவினர் பாராட்டப்படவேண்டியவர்கள். கீர்த்தி சுரேஷ் மிகவும் சிறப்பாகச் செய்துள்ளார். ஒவ்வொரு படக்காட்சியையும் பாலசந்தர் படத்தைப் பார்ப்பதைப் போல ரசித்துப் பார்த்தேன். சாவித்திரி என்ற பிரம்மாண்டத்தை நம்முன் இக்கதாநாயகி மிகவும் அநாயாசமாக முன்வைத்துள்ளார்.
பதிலளிநீக்கு