• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 17 ஜூன், 2018

    இலங்கையில் வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் என்னும் நூல் வெளியீட்டுரை







    விரைந்து செல்லும் பொழுதுகளில் விடியலைத் தேடும் மனிதர்கள் மத்தியில் எனக்காகவும் இன்றைய பொழுது புலர்ந்திருக்கின்றது. இன்றைய பொழுதிலே இச்சிறுகதை நூல் வெளியீட்டு விழாவினைச் சிறப்பிப்பதற்காக வருகை தந்திருக்கின்ற பிரதம விருந்தினர்கள் பேராசிரியர் துரை மனோகரன் அவர்களுக்கும், பேராசிரியர் ம.ரகுநாதன் அவர்களுக்கும், சிறப்பு விருந்தினர்கள் கலாகீர்த்தி உடுவை எஸ். தில்லைநடராசா அவர்களுக்கும் தினக்குரல் பிரதம ஆசிரியர் பாரதி அவர்களுக்கும் ஊற்று வலையுலக கலைஞர்கள் அமைப்பு, யாழ் இலக்கியக்குவியம் உறுப்பினர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசக நெஞ்சங்களுக்கும், உறவினர் நண்பர்களுக்கும் அன்பு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

                 எண்ணங்களுக்கு வலிமையுண்டு என்று வலுவாக நம்புபவள் நான். இது நடக்க வேண்டும் என்று மனதுக்குள் ஆழமாகப் பதியமிட்டுவிட்டோம் என்றால் அது நிச்சயம் நடக்கும். மூளையிடம் தவமிருந்தால், நிச்சயம் வரம் கிடைக்கும். என்னுடைய அன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய ஆசிரியர் பேராசிரியர் துரைமனோகரன் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாட்களின் தவம் என்னுடைய நூலுக்கு அவரை அணிந்துரை எழுத வைத்துள்ளது. அவரின் முன்னிலையில் இந்த நூல் வெளியிடப்பட வேண்டும் என்று ஜேர்மனியில் இருந்து ஆசைப்பட்டேன். அக்கனவை நனவாக்கித் தந்தார் யாழ்பவாணன் அவர்கள். துரைமனோகரன் சேரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கினார். ஒரு மாணவிக்கு இதைவிடப் பெறும் பேறு கிடைக்கப் போவதில்லை என்று கருதுகின்றேன்.
               வாழ்க்கைச் சூழல் பல பாடங்களை எமக்குக் கற்றுத் தருகின்றது. சிந்திக்கத் தெரிந்த மனிதன் இது சரியா பிழையா என மூளைக்குள் போட்டு பழுது பார்ப்பான். பிழையெனப்படுவதை தட்டிவிட்டுப் போகும் மூடப்பிறவிகளாக நாம் வாழக்கூடாது. சரியெனப்படுவதை சொல்லத் தயங்கும் கோழைகளாகவும் நாம் வாழக்கூடாது. அனைவருக்கும் இலகுவில் வசப்படக்கூடிய இலக்கியம் சிறுகதை இலக்கியம். இதன் மூலம் தெளிந்த நீரோடைபோல் மனிதன் உலகில் வாழ எம்மால் இயன்ற அருமருந்துகளைத் தந்துவிட்டுப் போகவேண்டிய கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது. அக்கடமையைச் செய்ய சரியான வழி எது என தீர்மானிக்கும் போது குறுகச்சொல்லி விளங்க வைக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. இது காலத்தின் கட்டாயமும் கூட. அதிகம் எழுதாதீர்கள் என்னும் கட்டளையை உள்வாங்கியே என் சிறுகதைகள் சிறிய கதைகளாக படைக்கப்பட்டன. கதை எழுதி கதாசிரியர் என்னும் பெயர் பெற வேண்டும் என்னும் நோக்கம் சிறிதளவு கூட என்னிடத்தில் இருந்ததில்லை. ஆனால், எதையும் ஏற்றுக் கொண்டு போகும் பாவியாகவும் நான் இருப்பதற்கு நான் தயாராகவில்லை. எழுது எழுது என்று என் மூளையிட்ட கட்டளையை உள்வாங்கியே இன்று உங்கள் கைகளில் என் நூல் வந்து அமரப் போகின்றது. இனிமேல் இந்த நூலுக்குச் சொந்தக்காரி நான் அல்ல. நீங்கள் ஒவ்வொருவருமே அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டியவர்கள் நீங்கள் என்று கூறி
             இந்த நூல் இந்த அளவில் நூலாக உருப்பெற்று உங்கள் கைகளுக்கு வந்திருக்கின்றது என்றால், அதில் அடங்கியிருக்கின்ற பாரிய வேலைப்பழு சொல்லித் தீராது. ஆனால், அத்தனை பொறுப்புக்களையும் தன் தலைமேல் கொண்டு கடினத்தையும் இலகுவாகக் காட்டி என் கருத்துக்களையும் உள்வாங்கி இந்நூல் வெளிவரவும் வெளியீட்டுக்கும் முக்கிய காரணகர்த்தாவாகிய யாழ்பாவணன் ஜீவலிங்கம் அவர்களுக்கு என்னுடைய நன்;றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன். என்னுடைய முக்கோணமுக்குளிப்பு நூலை மலேசியாவில் வெளியீடு செய்து வைத்ததோடு மட்டுமல்லாமல் என்ன உதவியென்றாலும் கேளுங்கள் அக்கா நான் செய்வேன் என்று முழுமூச்சாகத் தமிழுக்கும் கலைகளுக்கும் பெரும் பணியாற்றும் என் உடன் பிறவாச் சகோதரன் இந்நிகழ்வுக்குத் தலைமைதாங்கும் ஊற்றுவலையுலகக் கலைஞர்கள் மன்றத்தலைவர் ரூபன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். கல்வியிலும் தரத்திலும் பெருமையிலும் போற்றப்படும் பிரமுகர்கள் புலம்பெயர்ந்து வாழும் எம்முடைய இலக்கிய தாகத்திற்கு மதிப்பளித்து என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என்னுடைய நூல் வெளியீட்டுக்கு வருகை தந்திருப்பது தமிழுக்கும் இலக்கியத்துக்கும் அவர்கள் கொடுத்திருக்கின்ற முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. பேராசிரியர் துரை மனோகரன் அவர்களுக்கும், பேராசிரியர் ம.ரகுநாதன் அவர்களுக்கும், சிறப்பு விருந்தினர்கள் கலாகீர்த்தி உடுவை எஸ். தில்லைநடராசா அவர்களுக்கும் தினக்குரல் பிரதம ஆசிரியர் பாரதி அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். வரவேற்புரை வழங்கிய ரேகா சிவலிங்கம் அவர்களுக்கும், 21ம் நூற்றாண்டில் சிறுகதை என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றிய மூத்த எழுத்தாளர் ஐ. சாந்தன் அவர்களுக்கும், வெளியீட்டுரை வழங்கிய வேலணையூர் தாஸ் அவர்களுக்கும், நான் உலகுக்குச் சொல்ல வந்தது என்ன என்பதை நுண்மான் நுழைபுலம் தேடி ஆய்வுரை ஆற்ற வந்திருக்கின்ற கு.றஜீவன் அவர்களுக்கும் விரிவுரையாளர் தி.செல்வமனோகரன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவிப்பதுடன் மட்டுமல்லாமல் சிறப்புப் பிரதியைப் பெறுபவர்களுக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். எத்தனை தவறுகளை நாம் சுட்டிக்காட்டினாலும் மனம் சோராது எமக்கு ஒத்துழைப்புத்தந்து அழகாக இரண்டாவது தடவையும்  இந்நூலை வடிவமைத்துத்தந்த அன்ட்ரா பிரின்ரஸ்க்கும் என் நன்றியை தெரிவிக்கின்றேன். இதைவிட என்னை யாரென்று அறியாமலே இங்கு வருகைதந்து இவ்விழாவைப் பெருவிழாவாக்கிக் கொண்டிருக்கும் தமிழை நேசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது உறவினர்களுக்கும் மிக்க நன்றியைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.

    5 கருத்துகள்:

    1. சுருக்கமான மிக மிக அற்புதமான உரை.வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    2. நல் வாழ்த்துகள் கௌரி.
      மேலும் சிறப்புகள் பெறுக!
      வேதா. இலங்காமிலகம்.
      டென்மார்க்.- 17-6-2018

      பதிலளிநீக்கு
    3. விழா சிறப்பாக இடம்பெற்றது.
      அருமையான சிறுகதை பற்றிய எண்ணங்களைப் பெற முடிந்தது.
      பாராட்டுகள்!

      பதிலளிநீக்கு
    4. வாழ்த்துகள்.
      மேலும் வளமையுடன் வளர்க!

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    உள்ளத்தின் குரல் - பிரேம் ராவத்

      உள்ளத்தின் குரல் ஆசிரியர்:   பிரேம் ராவத் வெளியீடு: 2024 12 அத்தியாயங்களில் 357 பக்கங்கள்   இரைச்சல் மிகுந்த உலகத்தில் நிம்மதியை...