• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 26 அக்டோபர், 2013

    மறுபக்கப் பார்வையில் கடந்தகால இலக்கியங்கள்.




     சென்ற காலங்களில் இளமைப்பருவங்களில், கற்றவற்றை மீட்டிப்பார்க்கும் வேளையில், உள்ளத்தில் புதைந்து மீண்ட சில கற்றவை சிந்தனையைத் தட்டிவிட்டது. உள்ளத்தில் தாக்கத்தைத் தந்ததோ! மனதின் உள்ளத்தைத் தெளிவாக்கியதோ! பிறருக்கும் புரியவைக்கவேண்டும் என்று எண்ணியதோ! நீண்டநாட்களாய் நீங்காது எண்ணத்தில் சிக்கி வெளிவரத் தயங்கிய வார்த்தைக் கோர்வைகளை தவிக்கவிடாது இன்று தந்துவிடுகின்றேன்.

               கல் தோன்றி மண்தோன்றா காலத்திலே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி. அவர் மொழி தமிழ்மொழி. அதில் ஆழ்ந்த நாட்டம் கொண்டதனால், தமிழைப்பட்டப் படிப்பில் மேற்கொண்டேன். மனம் ஒன்றிக் கற்றேன். தமிழன் என்று பெருமை கொண்டேன். கட்டடக்கலையில், கவிப்புலமையில், தமிழன் மேல்நோக்கி நின்ற மகத்துவத்தை எண்ணி எண்ணி வியந்தேன். தமிழ்ப் பெருமை பேச தமிழ் இலக்கியங்களைக் கற்கவேண்டும். ஏனெனில் அடுத்தது காட்டும் பளிங்குபோல் அக்காலத்தை இலக்கியங்கள் பிரதிபலித்துக் காட்டும் என்பது திண்ணமே. அதாவது தமிழ்மொழி, தமிழ் இனம் அவற்றின் உட்கிடக்கைகள் பற்றியும் வரலாற்றுப்பார்வைகள் பற்றியும் அறியவேண்டுமானால், இலக்கியப்பக்கங்களை ஊடுருவிச் செல்லவேண்டும். தற்கால இலக்கியங்களை எடுத்துநோக்கினால், அக்காலத்திலும் இலக்கியங்கள் இப்படித்தான் எழுதப்பட்டனவோ என்னும் எண்ணம் உச்சந்தலையில் உதைக்கின்றது.

              தமக்கென்று தலைவர்களைத் தாமே உருவாக்கி அவர்களுக்கு முடிசூட்டி மஞ்சத்தில் அமர்த்திவிடுகின்றனர். விரும்பியோ விரும்பாமலோ கட்டாயத்தின் பெயரில் தலைவர்களைத் தலைமேல் கொண்டாடவேண்டிய சூழலை மக்கள் கொள்கின்றனர். ஈவுஇரக்கமற்ற மனிதனை தெய்வமாய்ப் போற்றுகின்றனர். மனிதர்களைத் தெய்வமாக்கி பாலாபிஷேகம் செய்கின்றனர். கவிதைகளில் தாலாட்டுப் பாடுகின்றனர். அடுத்ததலைமுறை இவையெல்லாம் உண்மையென நாம் கற்றுவந்த இலக்கியக்கல்வி போல் எதிர்காலமும் கற்கவேண்டிய சூழ்நிலை மேற்கொள்ளுகின்றனர்.

              இலக்கியத்திற்கு வர்ணனைகள் இயல்பு, அணிகள் அவசியம், அலங்காரங்கள் விதந்திருக்கும். ஆனால், காலத்தின் தவறான கருத்துக்கள் பொய்யான தரவுகள் மெய்யாக்கப்படலாமா? இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறலாமா? சாதாரண மனிதர்களை அவதாரங்களாக்கலாமா? இவ்வாறான முற்றிய பக்தியில் ஆன்மீகக் கடவுளர்கள் எல்லாம் இவ்வாறான அவதாரங்கள் தானோ! என்று எண்ணத்தோன்றுகின்றது.

             சங்ககாலம் அறியும் நோக்கில் சங்ககால இலக்கியங்களை உற்றுப் பார்க்கும்போது எல்லைமீறிய காதலர்கள், கொடூரமான போர்க்கோலங்கள், சித்திரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான அகோர போர்வெறி பிடித்த மன்னர்களா அக்காலத்துத் தமிழ் மன்னர்கள்! இவ்வாறாக மன்னர்கள் வீரத்தைப் பாடுவதாய் உண்மையைத்தான் பாடினார்களா! இல்லை பொன்னுக்கும் பொருளுக்கும் புகழ்ந்து பாடினார்களா! புகழ்ந்தே பாடியதானால், இவ்வாறான புகழை விரும்பிய  மன்னர்களா அக்காலத் தமிழ்மன்னர்கள். சோழர்காலத்துப் பாடப்பட்ட கலிங்கத்துப்பரணியிலே சயங்கொண்டார் ஊழிப்போரிலே பேய்கள் இறந்த எலும்புகள் விறகாகாவும், தசைகள், இரத்தங்கள் உணவாகவும் உண்டு ஊழிக்கூத்து ஆடியதாகப் பாடியிருக்கின்றார்.

             ஒளவையார் மன்னனைப் புகழ்ந்து பாடும்போது எதிரிகளை வெட்டிவெட்டி இரத்தக்கறை படிந்துபடிந்து கூர்மை இழந்த வாளையுடைய மன்னனே! என்று புகழ்ந்து பாடியிருக்கின்றார். இறந்து பிறந்த குழந்தையை மார்பில் வாளால் வெட்டிப் புதைத்ததாக இலக்கியம் காட்டுகிறது.

              பல்லவர் காலத்தின் வரவில் என் பார்வை திரும்புகிறது. சமணம், சைவம், வைணவம் என்று மதச்சண்டை கொண்டு ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்டப் பொல்லாத உத்திகளைக் கையாண்டிருக்கின்றார்கள்.  சமணர்களை அழிக்க கழுவேற்றல் என்னும் மிருகத்தனமான தண்டனை வழங்கப்பட்டிருப்பதை படித்தபோது நெஞ்சமே புண்ணாகியது. நினைவுகள் நிலைத்து அழுதுபுலம்பியது. உயிரின் மகத்துவம் புரிந்தும் மனிதர்கள் உயிர்களைக் குடித்த வேதனை புலம்பியது. இதுபோன்ற ஒருகாட்சி தசாவதாரம் என்னும் திரைப்படத்தில் காட்டப்பட்டிருந்தது.  இதனைப் பார்க்கும் போது ஆண்டபரம்பரை மீண்டுமொரு முறை ஆளநினைப்பது எப்படி என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழர்கள் என்று தலைநிமிர முடிகின்றதா?

             மனிதர்கள் நாகரிக வளர்ச்சியில் புதுமைகள் காண்பதா? பழைமையைக் கூறிக்கூறிக் காலத்தைக் கழிப்பதா? இன்றைய இலக்கியங்கள் அன்றைய இலக்கியங்களில் சந்தேகத்தைக் கொண்டுவரலாமா? எல்லாம் புனைகதைகள் என்று விரக்தி நாம் கொள்ளலாமா? காலத்தைக் காட்டலாமா? இல்லைக் காலத்ததின் பொய்புனைவுகளைக் காட்டலாமா? மண்டைகுழம்பி எல்லோரையும் நான் குழப்பவில்லை. வழிவிடுவோம். இன்றைய தலைமுறை புதுயுகம் காண நாம் பின்னே நின்று சிந்திக்கத் தெரியாதவர்களாக அவர்களைத் திசை திருப்பாது இருப்போம். இதுவே புலம்பெயர்ந்ததன் புண்ணியமாக இருக்கட்டும்.

             கடந்து வந்த பாதையில் கறைபடிந்த நிகழ்வுகளை மீட்டிப் பார்த்தபோது எமக்குள்ளும் இவ்வாறான அழுக்குகள் இருக்கின்றன என் எண்ணத் தோன்றியது. அடுத்தவரைச் சுட்டிக் காட்டும்போது எம்மை நோக்கி மூன்று விரல்கள் திருப்பப்படுகின்றதை நினைத்துப் பார்த்தேன். அதற்காக நான் இனத்தை நேசிக்காதவளாகிவிட முடியாது. இனப்பற்று இல்லாதவளாகிவிட முடியாது. மொழியை மதிக்காதவளாகிவிட முடியாது. மறுபக்கப் பார்வையே பகுத்தறிவின் மூலம்.

       

    14 கருத்துகள்:

    1. அருமையான பகிர்வு. அனைத்தையும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. மிக்க நன்றி சார் . எனக்குள்ளே இன்னும்பல கேள்விகள் கேட்கப்படாமலே இருக்கின்றன

        நீக்கு
    2. எதையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆராய்ந்து , காலத்தையும் கணக்கில் கொண்டு உணர்வது அவசியம். எந்தக் காலத்திலும் might is right என்றே இருந்ததாகத் தெரிகிறது. இலக்கியங்களைப் படிக்கும்போது மொழியின் மீதிருந்த ஆளுமையே என்னை ஈர்த்திருக்கிறது. அதே போல் புராண அவதாரக் கதைகளையும் கடவுளரின் செயல்களை வர்ணிப்பதைப் படிக்கும்போதாகட்டும். அதில் இருக்கும் நல் விஷயங்களும் அபரிமிதமான கற்பனைகளும் என்னை ஈர்க்கும். எந்த குழப்பமும் வேண்டாம். நாம் நினைப்பதைப் பகிரத்தானே இணையம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. நன்றி அய்யா. உண்மைதான் நான் கூட அப்படித்தான். ஆனால் எப்போதும் மனிதர்கள் ஒரே மாதிரித்தான் இருந்திருக்கின்றார்கள். பழைய பெருமை பேசுவதை விட்டு விட்டுப் புதிதாய் வாழப்பழகிக் கொள்வோம். அதில்பரிவும்பாசமும் பொங்க வேண்டும்

        நீக்கு
    3. ஆழமான அற்புதமான
      பாரபட்சமற்ற அவசியம் அனைவரும்
      தீவீர பரிசீலனைக்கு ஒருமுறை உட்படுத்த வேண்டிய
      விஷயங்களை அடக்கிய பதிவு
      இதற்கு நிச்சயமாக ஒரு சிறு பின்னூட்டத்தில்
      பதில் சொல்ல இயலாது
      பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்


      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. உண்மைதான் நீண்ட நாட்களாய் எழுதலாமா வேண்டாமா என்று என் மனதினுள் அல்லாடிய விடயங்கள். ஆனால் பரிசீலனை செய்யா விட்டாலும் மனம் பதித்தாலே போதுமானது .

        நீக்கு
    4. நல்லது கெட்டது இரண்டும் உண்டு... நாம் எடுத்துக் கொள்வதைப் பொறுத்து... வித்தியாசமான சிந்தனை... பாராட்டுக்கள்...

      பதிலளிநீக்கு
    5. நல்லதைத்தானே எடுத்துக்கொள்ள வேண்டும். கெட்டதிலும் நல்லதைத் தேடவேண்டுமேன்பதனாலேயே பழந்தமிழ் இலக்கியங்களின் நயத்தை நாடுகின்றேன். நல்ல விடயங்களைத் தேடுகின்றேன். பழமை இல்லாது புதுமை இல்லை தானே. நீங்கள் கூறியது போல் இரண்டிலும் நல்ல விடயங்கள் எங்கிருந்தாலும் பெற்றுக் கொள்வோம். பிழைகளைத் தொட்டுக் காட்டத் தயங்காதிருப்போம்

      பதிலளிநீக்கு
    6. எதையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆராய்ந்து , காலத்தையும் கணக்கில் கொண்டு உணர்வது அவசியம்.
      நல்லதை நாடுவோம்

      பதிலளிநீக்கு
    7. ராஜதந்திரம், ராஜதர்மம், என்று தவறுகள் கௌரவப் படுத்தப் படுகின்றன. இருப்பினும் பளமையிலும் சரி புதுமையிலும் சரி நல்லனவும் தீயனவும் உண்டு. அன்னம் போல் பிரித்து எடுத்துக் கொள்வோம். காலம், வாழும் சூழலுக்கு ஏற்றபடி அமைப்பதும் அவசியமாகிறது. எனவே ஆராய்ந்து நல்லவற்றை தேடி எடுப்பதும் அவசியமே. தோன்றியவை நியாயமானதே.
      தொடர்ந்து தோன்றுபவற்றை கொட்டிவிடுங்கள். ஆவலாக உள்ளேன்.
      நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. நன்றி சகோதரனே . உங்கள் வருகையை வரவேற்கின்றேன்.வருகின்ற காலம் சிறப்பாய் அமைய நல்லதே தேடி பயணிப்போம்

        நீக்கு
    8. கருத்தகள் சிந்தனையைத் துண்டுகிறது.
      வளமுடன் பெருகட்டும்.
      இனிய வாழ்த்து.
      வேதா. இலங்காதிலகம்.

      பதிலளிநீக்கு
    9. Thambirajah Pavanandarajah

      உங்கள் தேடல் எனக்குள் பல சிந்தனை களை தூ ண்டி விட்டது போர் என்று வந்து விட்டால் மனிதன் மிருகமா கவே மாறிவிடு கிறான் இதற்கு எந்த இனமும் விதி வில க்கல் ல அமெ ரிக்கா வின் ஹிரோசிமா மீதான அணு குண்டு தாக்குதல் ஹிட்லரின் யூத இனம் மீதான கொடுமைகள் நமது இனத்தின் மேல் நடந்த கொடுமைகள நவீனகாலத்தில் நடந்த இப்படி யான போர் களுக்கு க்கு நிறைய சாட்சிகள் உண்டு ஆனால் இலகியம்களில்வ்ருபவை கள் புலவர் களின் கற்பனைகளால் மிகைபடுதப்பட் டவைகள் இவை கள் தொட ர்ந்து விவாதிக்கப்ப ட வேண்டிய நல்ல தேடல்கள் வாழ்த்துக்கள் கௌரி

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...