• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வெள்ளி, 11 அக்டோபர், 2013

    பகுத்தறிவு

                   

    ஏன் என்று கேட்காதுவிட்டால், மடையர் நாம் என்று காட்டிவிடும் அறிவு. நாம் ஆறறிவு மனிதர்களா? இல்லையெனில் 5 அறிவு மிருகங்களா? என்று புரியாது போய்விடும். மிருகங்கள், பறவைகள் பலவற்றின் குணநலங்களை எடுத்தாராயும்போது அவையே தம் வாழ்வுக்குத் தேவையான அறிவு கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தலையாட்டித் தொடரும் ஆட்டு மந்தைகள் போல் வழிவழியாகத் தொடரும் பழக்கவழக்கம் என்றோ, ஊரோடு ஒத்தோடாவிட்டால், சமூகம் எம்மை ஒதுக்கிவிடும் என்றோ, ஆச்சரியமானதாக இருக்கின்றது என்றோ, எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்றார்களே! அதில் ஏதோ உண்மை இருக்கும் என்றோ எதையும் நம்பிவிடக்கூடாது.

             அன்றே உலகப்பொதுமறை தந்து முக்காலத்தையும் ஒன்றே முக்கால் வரிகளால் அளந்த வள்ளுவர் பகுத்தறிவு காடடிவிட்டார்.
    ''எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு''

    எவர் சொன்னாலும் அதன்  உண்மைப்பொருளைக் காணவேண்டும் அதுவே அறிவு.
    ''எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
     மெய்ப்பொருள் காண்பது அறிவு''

    எந்தப்பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் அந்தப்பொருளின் உண்மையான இயல்பை அறிவது அறிவு.

     "ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
     மெய்யுணர்வு  இல்லாதவர்க்கு"

    உண்மையைக் கண்டறிந்து ஆராய்ந்து தெளிவடையாதவர்கள், தம் ஐம்புலன்களையும் அடக்கி எத்தகைய துறவு வாழ்க்கையில் வெற்றி கண்டிருந்தாலும் அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனப் பகுத்தறிவைப் போதித்துப் போனார். 
                 
     ''யார் சொன்னார், எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார்'' என்று சாக்ரடீஸ் சொல்லியிருக்கின்றார்.

    இவ்வாறு உண்மைத் தன்மையை அறிவது மட்டுமல்ல எமது கடமை. அதை அறியாதவர்களுக்கு அறியச்செய்வது ஒவ்வொருவரதும் கடமையாகின்றது.

    ''கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
    சொல்லா நலத்தது சால்பு''

    தவம் என்று சொல்லப்படுவது கொல்லாத நலத்தை அடிப்படையாகக் கொண்டது. சால்பு எனப்படுவது பிறரது குற்றங்களை எடுத்துச் சொல்லாத நலத்தை அடிப்படையாகக் கொண்டது சால்பு என்று வள்ளுவர் கூறிவிட்டார் என்பதற்காக அவர் கூறிய "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்'' என்னும் குறளை நாம் மறந்துவிடக்கூடாது. தீமை கண்டு குற்றங்களையாது எடுத்துச் சொல்லித் திருத்தாது. போனால்போகட்டும் என்று நாம் வாழ்ந்தோமேயானால், வாழிடச் சாக்கடையுள் நாமும் புரண்டே எழவேண்டியவர்கள் ஆகிவிடுவோம்.

      வால்மீகியின் ராமாயணத்திலும்  உலகாயுதக் கொள்கை பற்றிக் கூறப்பட்டுள்ளது.  அக்காலத்திலேயே கடவுள் மறுப்புக் கொள்கை இருந்திருக்கின்றது.  பார்ப்பனருக்குரிய எவ்வித சடங்குகளும் கடைப்பிடிக்காத ஜாபாலி என்னும் அந்தணர் தசரதர் அவையில் இருந்திருக்கின்றார். வசிட்டர் நல்ல நாள் குறித்துக் கொடுத்தும் அந்நாளில் முடி சூட்டு விழா நடைபெறாது. ராமன் காடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டத்தை ராமனுக்கு எடுத்துரைத்து, நல்லநாள், கேட்ட நாள் என்பதெல்லாம் இல்லை என்று பகுத்தறிவு போதித்துள்ளார்.

           பகுத்தறிவு என்பது பொருட்கள், நிகழ்வுகளின், கருத்துக்களின் கூறுகளை அவதானித்து ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து ஆதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும், அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. மெய்ப்பொருளை அல்லது உண்மையைக் கண்டறிவது என பகுத்தறிவு பற்றி விக்கிப்பீடியா எடுத்துரைக்கின்றது. பெரியார் அறிவு எனப்படுவதே பகுத்தறிவுதான்  என்கிறார்.

                 சைவசமயத்தில் சந்தேகம் தோன்றியபோதே சைவசித்தாந்தம் தோன்றியது. இவ்வாறு சந்தேகங்கள் தோன்றும் போதே அவற்றுக்கான தெளிவும் ஏற்படுகின்றது.

               2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புத்தர் "கடவுளாவது ஆத்மாவாவது இவையெல்லாம் சுத்தப்புரட்டு. எதையும்அறிவு கொண்டு சிந்தித்துப் பார்த்து புத்திக்கு எது சரியென்று படுகின்றதோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமேயொழிய கடவுள் சொன்னார் முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதே. வெகுகாலத்திற்கு முன் சொல்லப்பட்ட கருத்தாயிற்றே. வெகுகாலமாகப் பின்பற்றிவந்த கருத்தாயிற்றே என்பதற்காக ஏற்றுக்கொள்ளாதே.அறிவு கொண்டு அலசிப்பார் எது உன்புத்திக்குச் சரியென்று படுகிறதோ அதனை ஏற்றுக்கொள்'' என்று அறிவைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தைக் கூறியுள்ளார்.

                பகுத்தறிவுக் கொள்கை அக்காலப் புலவர்களின் பாடல்களில் காணப்படுவதைப்பார்க்கின்றபோது

    18ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த சீர்காழி அருணாசலக்கவிராயர் நடகத்தமிழுக்கு உயிரளித்தவர். இவர் சிந்திக்கப்பல பாடல்களை யாத்துள்ளார்
     
        ''மிகப்பட்ட வெம்பசியால் வெம்பருந்தின் வாயில்
         அகப்பட்ட கோழிப்பார்ப் பானேன் - நகப்பட்ட
         கல்லையோ கைதொழுதேன் காகமணு காமலையில்
         இல்லையோ ரத்னகிரியே''
        
    அளவுகடந்த பசியால் மிகக் கொடிய பருந்தின் வாயில் கிடைத்த கோழிக்குஞ்சு போலானேன். யான் கல்லையா கடவுள் என்று கும்பிட்டேன். இல்லையே காகமும் அணுகாத இரத்னகிரி மலையை அல்லவா நானும் வணங்கினேன். அந்த ரத்னகிரி போன்ற சிவன் இப்போது இல்லையோ என்று கேட்கின்றார். இலங்கை முள்ளிவாய்க்காலிலே மொத்தமாய் உயிர்கள் பறிக்கப்பட்ட போதும் இதேபோன்ற கேள்வியே பலர் மனதுள் கேட்கப்பட்ட கேள்வியானது. இல்லையோ என்னும் அச்சம் தோன்றும் போதே இருக்கிறதா என்ற கேள்வியும் எம்மத்தியில எழுகின்றது.

       ''வெண்ணெயுற்று நெய்தேட வேண்டுமா தீபமுற்று
        நண்ணு கனறேட னன்றாமோ – என்மனத்தை
        நாடிச் சிவனிருக்க நாடாமனூர்தோறும்
        தேடித் திரிவதென்ன செப்பு?

    ஏ, உள்ளமே உனக்கென்ன பேதைமை? வெண்ணெய் கையிலிருக்கும் போது நெய்யைத் தேட வேண்டிய அவசியமென்ன? விளக்கு இருக்கும்போது அனலைத் தேடிப்பிடிக் முனைவது சரியா? என்மனதை நாடிச் சிவன் இருக்கும்போது அவனை அகத்துள் பார்க்காமல் ஊரூராய்ச் சென்று கோயிலுக்குள் சென்று பார்ப்பதும் ஏன்? அதற்குக் காரணம் கூறு எனத் தன் பாடலில் சிந்திப்பதாய் வரிகள் தந்திருக்கின்றார்.  ஷஷஉள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்|| எனத்  திருமூலர் கூறிய வரிகள் இங்கு தென்படுகின்றன.
    சிலேடைப்பாடல்களும், நகைச்சுவைப்பாடல்களும் பாடுவதில் சிறப்புப் பெற்ற காளமேகப்புலவர்

     ''இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
      அம்மென்றா லாயிரம்பாட் டாகாதோ – சும்மா
      இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாயின்
      பெருங்காள மேகம் பிள்ளாய்''

    என்று தன் பெருமையை அதிமதுரக்கவிராயிடம் கூறியுள்ளார். அவரது பாடல்களிலே பகுத்தறிவுப் பாடல்கள் பல காணப்படுகின்றன.

    பாடல்களில் ஒன்று
            
              ''தாதிதூ தோதீதூ தத்தைதூ தோதாதூ
               தூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்த
               துத்தித்த தாதே துதித்துத்தேத் தொத்தீது
               தித்தித்த தோதித் திதி''

                   தோழியின் தூதோ தீதானது. கிளி தூதுபோய்க் கூறாது. பாங்கியின் தூதானது நாட்களைக் கடத்தி வைக்கப்படும் தூதாகும். இறைவனைத் தொழுது தொடர்ந்தால், நல்ல பயனளிக்காமல் வீணாகப் போகும். பூந்தாதையொத்த தேமல் என் மீது விரைவாகப் பாய்ந்து மேலும் அதிகமாகாமல் சுவையான காதலனுடைய பெயரைக் கூறி என்னைக் காப்பாற்றி வைப்பாயாக. என ஓசைச்சுவைமிக்க பாடலிலே சொல்லை ஆட்சி செய்திருக்கும் பாங்கு மெச்சத்தக்கது. அதிலே இக்கால பகுத்தறிவுக் கொள்கையினையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

                     தேதுதித்து தொத்து தீதி என இறைவனைத் தொழுது தொடர்ந்தால், நல்ல பயனளிக்காமல் வீணாகப் போகும். எனப் பாடியிருப்பதை மனம் பதிக்கக் கூடியதாக இருக்கின்றது.

               எலி வாகனத்திலே வருகின்ற பிள்ளையாரைப் பார்வையுற்ற காளமேகப்புலவர்,

            ''முப்பான் மழுவும், முராரிநிருச் சக்கரமும்
             பார்ப்பான் கதையும், பறிபோச்சோ – மாப்பார்
             வளமிகுந்த மும்மதத்து வாரணத்தை ஐயோ!
             எலியிழுத்துப் போகிறதென்ன?

    என பருத்த உடலும், மிகுந்த வலிமையும், மும்மதமும் பொழிகின்ற களிற்றினைப் போன்ற முகப்பையுமுடைய விநாயகனை எலி கொண்டு போகிறதே ஏன்? இந்தப் பிள்ளையைப் பெற்றதாகச் சொல்லப்படுகின்ற சிவபெருமானின் மழுவாயுதமும், திருமாலின்சக்கரமும், பிரமனுடைய தண்டாயுதமும், எங்கேனும்பறிபோயிற்றோ?  என்று நகைச்சுவையாகப் பாடியிருக்கின்றார்.

             
              ''அப்ப னிரந்துண்ணி யாத்தாள் மலைநீலி
              ஒப்பரிய மாம னுறிதிருடி – சப்பைக்கால்
              அண்ணன் பெருவயிற னாறுமுகத் தானுக்கிங்
              கெண்ணும் பெருமை இவை''

    ஆறுமுகனைப் பார்க்கும் போது காளமேகம் அறிவு ஆறாய் ஒழுகுகிறது. தந்தையோ பிச்சை எடுத்து பிழைப்பவர், தாயோ மலையரசன் மகள், மாமனோ வெண்ணெய் திருடித் தின்பவன், அண்ணனோ சப்பைக்கால் உடையவன், இவையெல்லாமே  உனக்குப் பெருமையாக உள்ளன. என புராணங்களின் கதையை ஏளனம் செய்வதாய் இப்பாடலிலே காட்டியுள்ளார்.

               இவ்வாறு பெரியார் அவர்களும் கடவுள் பற்றி எண்ணற்ற வினாக்கணைகள் தொடுத்துச் சென்றுள்ளார். விஞ்ஞானிகளும் விண்முட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர். இயற்கையின் பலபக்கப் பரிமாணங்களை ஆராய்ச்சிகளில் தெளிவுபடுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.

                ஆனால், பகுத்தறிவாளர்கள் எனக் கருதப்படுவோர் பலர் தனியே கடவுள் இல்லை என்று வாதிடுவது மட்டுமே பகுத்தறிவு என்று கருதிக் கொண்டிருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமாகின்றது. நம் அறிவுக்குப் புலப்படாத விடயம் எதுவாக இருந்தாலும் அதை அறிந்து கொள்ளத் தேட முற்படுவதும், நடந்து கொண்டிருக்கும் சில விடயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாது அதற்குரிய உண்மை காரணத்தைத் தேடிக் கொள்ள முனைவதும் அவசியமல்லவா? எதிரியாக எம் கண்ணுக்குப் புலப்படுபவன் வேறு பலர் கண்களுக்கு நல்லவனாகத் தெரிவதும், நல்லவன் என்று நாம் ஏற்றுக் கொள்பவன் பலர் கண்களுக்குத் துரோகியாகப் புலப்படுவதும் நோக்கி அதுபற்றி ஏன் என்ற கேள்வியை முன்வைத்து ஆராய்ந்து பார்ப்பதும் ஒரு பகுத்தறிவின் பாற்படுகின்றது.

               ஒருவன் பார்க்கும் பார்வையில் உண்மைத் தன்மையைத் தேடும்போது சமூகத்திடையே அவன் பற்றிய நோக்கு பலர் பார்வைக்குக் கேள்விக்குரியாகத் தென்படும். ஆனால், மனதுக்கு ஒவ்வாமல், இருக்குமோ இல்லையோ, சரியோ தவறோ என்னும் ஆராய்ச்சியில் ஈடுபடாது, எதுவாகவாவது இருக்கட்டும் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றார்களே! அப்படி ஏற்றுக் கொண்டாலேயே பலர் பார்வைக்கு நாம் நல்லவர்களாகத் தெரிவோம். பேரும் புகழும் எமக்குக் கிட்டும் என தப்பான ஒருவிடயத்திற்குத் துணைப்போவது மனிதனாக ஆறறிவு படைத்தமைக்குத் துரோகம் செய்வதாக முடியும். எதிர்காலச் சந்ததியினரையும் தப்பான வழிக்கு இட்டுச் செல்வதாக அமையும். மூடநம்பிக்கைகள் மலிவடைந்து மனிதநேயப்பண்புகளும் மழுங்கடிக்கப்படும்.

                    எனவே பகுத்தறிவு என்பது தனியே கடவுட்கோட்பாட்டை முறியடிப்பதல்ல. மனிதன்வாழும் பண்புகளின் நடத்தைகளின் தன்மை பற்றியும் ஆராய்வது என்பதில் மனம்பதிக்கவேண்டும்.
     













    5 கருத்துகள்:

    1. குறள்களோடு அலசல் அருமை... வாழ்த்துக்கள்...

      பதிலளிநீக்கு
    2. //எனவே பகுத்தறிவு என்பது தனியே கடவுட்கோட்பாட்டை முறியடிப்பதல்ல. மனிதன்வாழும் பண்புகளின் நடத்தைகளின் தன்மை பற்றியும் ஆராய்வது என்பதில் மனம்பதிக்கவேண்டும். //

      பகுத்தறிவுடன் பகுத்தறிந்து சொல்லியுள்ள மிகவும் அருமையான பகிர்வுக்கு நன்றிகள்.

      பதிலளிநீக்கு
    3. எனவே பகுத்தறிவு என்பது தனியே கடவுட்கோட்பாட்டை முறியடிப்பதல்ல. மனிதன்வாழும் பண்புகளின் நடத்தைகளின் தன்மை பற்றியும் ஆராய்வது என்பதில் மனம்பதிக்கவேண்டும். /
      /
      ஆழமாக கருத்துடைய அற்புதமான பதிவை
      அருமையான ஆதாரங்களுடன் எளிமையான
      விரிவான விளக்கத்துடன் சொல்லிச் சென்றது
      மனம் கவர்ந்தது
      பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த
      நல்வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    4. பகுத்தறிவு என்பது தனியே கடவுட்கோட்பாட்டை முறியடிப்பதல்ல. மனிதன்வாழும் பண்புகளின் நடத்தைகளின் தன்மை பற்றியும் ஆராய்வது என்பதில் மனம்பதிக்கவேண்டும். “////
      ஆழமான கருத்துப் பதிவு. நன்றி

      பதிலளிநீக்கு
    5. நாம் நாம் தானா...
      என்னுடையது நிதர்சனமா...
      நான் என்பது நான் தானா..
      எனக்கானது நிலைதானா
      நான் வாழ்கிறேனா
      வாழ வைக்கப்படுகிறேனா
      இதழ் வழிக் கசிபவை
      இன்சொல் தானா..
      நான் கொண்ட மாண்புகள்
      பண்போடு உள்ளனவா..
      பகுத்தறிவின் ஆழ அகலங்களை
      அலசி ஆராய்ந்து
      நம்மை பட்டைதீட்டிக்கொள்ள
      உதவும் அற்புதமான படைப்பு சகோதரி..

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...