• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 26 மார்ச், 2022

    என்னைக் கவர்ந்த வேதாத்திரி மகரிஷியும் ஆன்மீக அனுபவமும்



    அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி 

    அருளொடு நிறைந்ததெது தன் அருள் வெளிக்குளே 

    அகிலாண்ட கோடியெல்லாந் தங்குப் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்

    தழைத்ததெது மனவாக்கினில்

    தட்டாமல் நின்றதெது சமய கோடிகளெல்லாந்

    தந்தெய்வம் எந்தெய்வமென் 


    என்னும் தாயுமானவர் வரிகளையும் 

    தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

    தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

    தன்னை அறியும் அறிவை அறிந்த பின்

    தன்னையே நேசிக்கத் தானிருந்தானே

    என்ற திருமூலர் பாடலையும் உங்கள் முன் வைத்து இன்று இன்றைய வேதாத்திரி மகரிஷி அவர்களுடைய பிறந்தநாளிலே என்னுடைய அனுபவங்களை சிறிது பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கின்றேன். 

    முடிவில்லாத இந்த உலகத்தில், பூமியின் ஒவ்வொரு பகுதியில் அதாவது வெவ்வேறு நாடுகளில் இருந்தபடி நாம் அனைவரும் சுழன்று கொண்டிருக்கின்றோம். நாம் அனைவரும் வெவ்வேறு நாடுகளில் சுழன்று கொண்டே வாழ்ந்து கொண்டிருந்தாலும் இந்தத்தருணம் எல்லோரும் ஒரு மையத்தில் ஒரே நோக்கத்துடன் ஒரே சிந்தனையுடன் ஒருவரின் ஆசியுடன் இந்த ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றோம். அதுதான் எம்முடைய மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வழிகாட்டல். 

    காலம் போடுகின்ற கணக்கை கட்டிப் போடவோ தீர்மானிக்கவோ எங்களால் முடியாது. எங்களை மீறி நடக்கின்ற சக்தியை அடக்கி வைக்கின்ற பக்குவமும் எமக்குக் கிடையாது. அது போகின்ற பாதையிலே நாம் நாமெல்லோரும் பயணம் செய்கின்றோம். ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் ஒவ்வொரு வரலாறு இருக்கின்றது. அந்த வரலாற்றுப் பாதையிலே இன்றைய நாள் இங்கு கூடியிருக்கின்றோம் என்றால் அது காலம் போட்ட கட்டளை. அதுவும் மகரிஷி அவர்களுடைய 111 ஆவது பிறந்த நாளிலே எம் ஒவ்வொருவருக்கும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்திக்கின்றது. இது எப்படி நடந்தது என்பதற்கு என்னால் சொல்ல முடியாது. ஆனால் நடந்திருக்கின்றது. என்னை ஆட்டிப் படைக்கும் சக்தி உங்கள் எல்லோரையும் ஒன்றாக இணைத்திருக்கின்றது. இதற்கு நாம் யாரும் காரண கர்த்தாக்கள் இல்லை என்பதே உண்மை. எம்மையெல்லாம் வழிநடத்துவதற்கு இந்தப் பிரபஞ்சம் இருக்கின்றது. அங்கே வான் துகளாக மகரிஷி எம்மை எல்லாம் வழி நடத்திக் கொண்டிருக்கின்றார். 

    வேதாத்திரி மகரிஷி அவர்களை எனக்கு விளக்கிக் காட்டியவர் டாக்டர் கோபால்ஜி அவர்கள். அவரே குருவாக இருந்து மகரிஷி என்னவெல்லாம் கூறினாரோ அவருக்குக் கற்பித்தாரோ என்ன அனுபவங்களைத் தந்தாரோ அவற்றையெல்லாம் மனதில் பதித்து எங்களுக்கு அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றார். 

    நிச்சயமாக ஆன்மீகம் என்பது ஒரு அனுபவம். இது பிறர் சொல்லி எமக்கு ஏற்படுவதில்லை. ஆனால், எமக்குள்ளாகவே ஒரு உணர்வு தோன்ற வேண்டும். அதற்கு எமக்கு உள் உணர்வு ஏற்பட வேண்டும். ஆர்வமும் விருப்பமும் இருக்க வேண்டும். அந்த உணர்வைத் எமக்குத் தூண்டுபவராக குரு கோபால்ஜி அவர்கள் இருக்கின்றார். குரு கோபால்ஜி அவர்களிடம் 

    நாடிசுத்தி, தண்டுவட சுத்தி, பிரணாயாமம், ஆதார சக்கரங்களை தூண்டுதல். தெய்வீக மையம் மூன்றாவது கண் திறத்தல், தீட்சை அது பற்றிய விளக்கம், ஆக்கினை தவம், துரிய தவம் சாந்தி தவம், துரியாதீத தவம், பிரபஞ்ச நவக்கிரக தவம், பஞ்சேந்திரிய தவம்,  சித்தர்களின் நீள் ஆயுள் பயிற்சி, காயகல்ப யோகம், சாந்தி தவம், கண்ணாடிபயிற்சி, தீபப்பயிற்சி, உடற்பயிற்சி, அறுகுண சீரமைப்பு, உடல் வருடுதல், அக்குபிரஷர் பயிற்சி, டீழனல யனெ ஆiனெ சுநடயஒயவழைn போன்ற பயிற்சிகளை கற்றோம். உடல்நலமும் உளநலமும் தூயசிந்தனையும் கொண்ட வாழ்க்கையை எமக்கு  குரு கற்பித்தார். குறுகிய காலப்பகுதியிலே இவ்வளவு விடயங்களும் நாம் கற்பது என்பது இக்காலப்பகுதியில் இலகுவான காரியம் இல்லை. இந்த அருள் எமக்குக் கிடைப்பது என்பது ஒரு பாரிய கொடுப்பினை என்றுதான் நான் கருதுகின்றேன். தாரமும் குருவும் தலைவிதிப்படி என்பார்கள். எமக்கு இவ்வாறான குரு கிடைத்தமைக்கு இந்த நேரத்தில் குருஜி அவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். 

    வேதாத்திரி மகரிஜி அவர்களின் தியான முறைகள் என்னை மிகவும் கவர்ந்ததற்குக் காரணம். அவர் அறிவியலுடன் ஆன்மீகத்தை விளக்கியதுதான். உடல், மனம், ஆன்மா பற்றிய தேடலை விஞ்ஞான விளக்கத்துடன் கற்பித்திருக்கின்றார். பிரபஞ்சம் பற்றிய பார்வையை தியானமுறைக்குள் கொண்டு வந்திருக்கின்றார். உடற்பயிற்சி, அக்குபிரஷர், அறுகுணசீரமைப்பு  போன்றவை மூலம் உடலையும் மனதையும் சீரமைப்பதற்குரிய பயிற்சிகளைக் கொடுத்திருக்கின்றார். 

    தவம் செய்வதற்கு நாம் இமயமலை தேடிப் போகத் தேவையில்லை. சந்நியாசியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. பிரமச்சரியம் கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களையும் கடந்து வாழ்ந்து தான் மனிதன் இறக்க வேண்டும். ஒவ்வொரு காலப்பகுதியிலும் தவம் செய்வதற்குரிய முறைகள் இருக்கின்றன. அதற்கு எமது உடலிலுள்ள 7 சக்கரங்களும் மனிதனின் 70 ஆயிரம் நாடிகளின் உயிராய் ஒவ்வொரு உணர்வுகளைத் தூண்டக்கூடியனவாக இருக்கின்றன. அவற்றை சரியான அளவிலே நாம் பயன்படுத்துகின்ற போதுதான் நாம் இந்த உலகிலே சீரான வாழ்க்கையை வாழ முடியும். அதற்கு உடல், உள, தியானப் பயிற்சிகளை மகரிஷி வடிவமைத்துக் கொடுத்திருக்கின்றார். 

    உதாரணமாக மூலாதாரம் சரியான முறையில் செயற்பட்டாலேயே பசி தூக்கம் ஒழுங்காக வேலை செய்யும். அட்ரீனல் சுரப்பிகள் இதனுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. பாலியல் சக்தியை ஒழுங்குபடுத்த சுவாதிஸ்டானம் உள்ளது. மணிப்பூரகம் இதிலிருந்து உடலியக்கச் சக்தி உடலெங்கும் பரப்பப்படுகிறது. அன்பு பாசம் இரக்கத்தின் இருப்பிடம் அநாகதம் இருக்கின்றது. விசுப்தி குரல்வளைச் சக்கரம் என்று சொல்லப்படுவது. இதுவே எண்ணங்களை வெளிப்படுத்தவும் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் காரணியாக இருக்கிறது. ஆகாயதத்துவத்தைக் குறிக்கிறது. ஆக்கினை சக்கரம் ஞானம், பேரறிவு, தொலைதூர சிந்தனை இவற்றை வழங்குகிறது. பிட்ரூய்ட் சுரப்பி இதன் கட்டுப்பாட்டிலுள்ளது. சகஸ்ரகாரம் என்றும் துரியம் என்றும் சொல்லப்படும் சக்கரம் பிரபஞ்சத்திற்கும் எமக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்ற சக்கரம். இவ்வாறு ஒவ்வொரு சக்கரங்களிலும் மனதைப் பதித்து தியானம் செய்கின்ற போது அவற்றின் ஆற்றலை மேம்படுத்துகின்றோம். அப்படியென்றால் அவற்றின் ஆற்றல் எமக்குத் தேவை அல்லவா? அந்த ஆற்றலை மேம்படுத்தாமலும் குறைக்காமலும் ஒரு சீராக வைத்துக் கொள்வதற்காக தியானமுறைகளிலே நாளொன்றுக்கு ஒரு தியானம் என்ற வகையிலே  வகைப்படுத்தி மகரிஷி எமக்குக் கொடுத்திருக்கின்றார். பாலியல் சக்தி எமக்குத் தேவையில்லை என்று சுவாதீஸ்டானத்தின் பயிற்சியைக் மகரிஷி வழங்காமல் விட்டிருக்கலாம். ஆனால், உயிர் உருவாக்கம், மனித வளம் உலகத்திற்குத் தேவை என்பதை உணர்ந்தவரே மகரிஷி அவர்கள். அதனால், அனைத்து சக்கரங்களுக்கும் சக்கரா தியானத்தைக் கொடுத்திருக்கின்றார். 

    எம்முடைய வாழ்க்கைப் பயணத்திலே நாம் பலரைச் சந்திக்கின்றோம். பலரோடு பழகியிருக்கின்றோம். அதன் மூலம் நல்ல நினைவுகளும் கவலையான நினைவுகளும் எமக்குள்ளே கலந்திருக்கின்றன. கலந்த அந்த நினைவுகளைக் கழுவித் துடைக்க முற்படுகின்றோம். ஆனால், அது எம்மால் முடிவதில்லை. சில நினைவுகள் எம்முடன் இரண்டறக் கலந்து எம்மை ஆட்டிப் படைக்கும். இந்த சமயத்திலே எம்மை நாம் கட்டுப்படுத்தி வாழ வேண்டியது அவசியமாகின்றது. இதற்குத் தியானம் அவசியம் என்னும் அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கின்றது.

    எங்களுடைய உடலும் எங்களுடைய உடலின் தொழிற்பாடும் இந்த பிரபஞ்சமும் பேராச்சரியம் என்று எனது தேடல் விரிவடைகின்றது. நாட்களின் வளர்ச்சியில் தேடல்களின் பயனாகத்தான் எம்முடைய ஆயுள்காலம் விரிவடைகின்றது. இதுவரை காலமும் எமக்குள்ளே இருந்த எண்ண ஓட்டங்கள் தற்போது வேறு திசைக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. மனிதன் வாழ்க்கை முழுவதும் ஒரு கற்றல் தொழிற்பாட்டிலேயே அவனை அறியாமல் ஈடுபட்டிருப்பான். பொதுவாகவே எமக்குள் நுழைகின்ற ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் விளக்கம் தேடிக் கொண்டிருக்கின்ற நாம் அதற்குரிய தெளிவான விடையைக் கண்டு பிடிக்கும் போதுதான் உண்மையிலே மனம் முழுவதும் மகிழ்ச்சியடைகின்றோம். அந்த தேடலின் வெற்றி கிடைத்த பின்புதான் அதில் முழுவதுமாக ஈடுபடவும் முனைகின்றோம். 

    பொதுவாகவே அறிவியல் பற்றியும் ஆத்மா பற்றியும் பலவித ஆராய்ச்சிகளில் நான் ஈடுபடுகின்றேன். இவ்வாறு பூரணமான சிந்தனையின் வெளிப்பாடுதான் சிறந்த அறிவும் சிறந்த ஞானமுமாக அமைகின்றது. 

    எண்ணம் என்பது எம்மை கட்டிப்போட வைக்கின்றது ஒவ்வொரு சிந்தனைக்குள்ளும் நாம் பரந்துபட்ட வினாக்களை எழுப்புகின்றன போதுதான் ஒரு விடையை நாம் காணுகின்றோம் யார் சொன்னார் இவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார் என்று சொன்னார் சாக்ரடீஸ். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று சொன்னார் திருவள்ளுவர். இந்த இருவருடைய  எண்ணங்களையும் நாம் எடுத்து பார்க்கின்றபோது எமக்குள்ளே தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறான வார்த்தைகள் திருவள்ளுவர் போன்றவர்களால் கூறப்பட்டது. எண்ணம் என்பது எம்மை தூய்மைப் படுத்துவதாக இருந்தால் அந்த எண்ணத்தை நாம் விரிவுபடுத்த வேண்டியது அவசியம் ஜீவ சக்தியை நாம் அதிகரிக்க வேண்டுமென்றால் எம்முடைய எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும் அந்தத் தூய்மையான எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு எமக்குள்ளே வினாக்கள் வர வேண்டியது அவசியம் அந்த வினாக்களுக்குத் தெளிவு ஏற்படுத்தி சந்தேகங்களை தீர்த்து பரிசுத்தமான எண்ணம் உள்ளவர்களாக நாம் மாற வேண்டும் என்ற அனுபவம் எனக்கு கிடைத்திருக்கின்றது.

    எல்லாம் வாழ்க்கையிலே ஒரு பாவனையில் தான் ஆரம்பிக்கின்றது. ஒரு புனைகதை ஒரு சிறு கதையோ ஒரு சக்தியோ எல்லாம் கற்பனையிலேதான் காணுகின்றோம். ஒரு பாவனை என்று சொல்வதை தெளிவாக உணர வேண்டும் என்றால் அது ஒரு கற்பனையில் தான் நாம் முதலில் கடவுளை காணுவோம். இறைசக்தி உள்ளே பெறுகின்றது என்று கற்பனை பண்ணுகிறோம் அது எங்கள் உடல் முழுவதும் பரவுவதாக எண்ணுவோம் காலப்போக்கில் எமது மூளை அதை உள்வாங்கி மூலாதாரத்தில் பதிவு செய்துவிடும். பயிற்சி செய்கின்ற போது அந்த மூலாதாரத்தில் இருந்து எழுகின்ற எண்ணங்கள் எம்மை ஆட்டிப்படைக்கும். 

    கற்பனையில் உள்நுழைந்த கடவுள் தன் உண்மையான ரூபத்தை எமக்கு காட்டுவார் என்பதுதான் என்னுடைய தெளிவான அனுபவமாக நான் காணுகின்றேன். எங்களுடைய அத்தனை சக்தியும் இரண்டு கைகளையும் கூப்பி வைக்கின்ற போது வலம் இடம் என்றும் இடது வலம் என்றும் மாற்றப்படுகின்றது. அப்போது இருக்கின்ற அந்த அலைகள் உடல் முழுவதும் செலுத்தப்படுகின்றது நான் ஒரு சக்தி மயமான ஒரு உடலைத் தாங்கிய மனிதனாக காணப்படுவோம் அப்போது எங்களுடைய கைகளை பிறரிடம் கொடுக்கின்ற போது அந்தக் கைகளில் இருக்கின்ற எண்ண அலைகள் பிறருக்கு பாய்ச்சப்படுகின்றது. இவ்வாறுதான் குருஜி வேதாத்திரி மகரிஷியிடம் இருந்து பெற்ற ஆற்றலை குருஜி தன்னுடைய கைகள் மூலமாக எமக்கு பரப்புகின்றார் என்பதை நான் அனுபவம் மூலம் உணருகின்றேன். 

    எமக்குத் தெரியாமல் எம்முடைய உடலுக்குள்ளே ஒரு இயந்திரத்தை தாங்கிக் கொண்டு இருக்கின்றோம். அவை எமக்கு உள்ளே இருப்பதை எம்முடைய கண்களால் பார்க்க முடியாது. ஆனால் இருக்கின்றது இதை நாம் அறிந்திருக்கின்றோம். அப்படியென்றால் சிறுவயதிலிருந்து நாம் கற்ற கல்வியின் மூலமாக எந்த இடத்தில் எது இருக்கின்றது என்பதை கற்று அறிந்து இருக்கின்றோம். பிறர் கூறக் கேட்டு  இருக்கின்றோம். நமக்குள்ளே  உணர்ந்திருக்கிறோம்.  ஆனால் அந்த உடலுக்குள்ளே இருக்கின்ற உறுப்புகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.  ஏனென்றால் அதை நாம் காண்பதில்லை. எந்த ஒரு இயந்திரமாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் அதைச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.  இல்லாவிட்டால் அந்தப் பொருள்  பழுதாகிப் போய்விடும். நோய் ஏற்படுகின்றபோது உடனடியாக கிடைக்கின்ற மருந்துகளை பாவித்துவிட்டு அது சுகமாகி விட்டது என்று  இருந்து விடுகின்றோம்.  அது பற்றி எந்தவித சிந்தனையும் இல்லாமல் மனம் போன போக்கிலே போகின்றோம். இதேவேளை உள்ளே மனம் என்ற ஒன்று இருக்கின்றது என்பதை அறிந்திருக்கின்றோம். ஆனால் அதை சீர் அமைப்பதற்கு அழகு படுத்துவதற்கு சிந்தித்துப் பார்ப்பதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். எங்களுடைய அகமாகிய மனம் தூய்மையானதாகவும் அழகாகவும் இருந்தால்  முகம் அழகு பெறும். அந்த அகத்தைத் தூய்மை செய்வதற்காக அறுகுண சீரமைப்பு என்னும் ஒரு பாடத்தை நாம் கற்றோம். இவை ஒன்றும் எமக்குத் தெரியாத விடயம் இல்லை. தெரிந்ததுதான் ஆனால் செயல் படுத்தாமல் இருந்தோம். ஏனென்றால் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவத்தை கொடுத்து எமக்கு அவசியப்பட்டதை நம் நினைத்துப் பார்க்காத காரணம் தான். இப்போது எம்மை நாம் உடலைவிட உள்ளத்தை தூய்மைப்படுத்தும் தியான வாழ்க்கை வாழுகின்றோம்.  இனி எங்கள் உடலும் சுத்தம் உள்ளமும் சுத்தம் அடையும் என்ற நம்பிக்கையும் அனுபவமும் எமக்குக் கிடைத்திருக்கின்றது. 

    “உள்ளத்தில் ஒளி உண்டானால், வாக்கினில் ஒளி உண்டாகும்" என்று பாரதி பாடியுள்ளார். அடிமனதில் இருந்து நல் வாழ்த்தாக அது வரவேண்டும். அது கேட்காமலே எமக்குக் கிடைக்க வேண்டும். எம்மைத் தேடி வரவேண்டும். 

                 வாழ்த்துகின்ற போது எமக்கு ஏற்படுகின்ற மனநிலை அதனைக் கேட்கும் போதும் ஏற்படுகின்றது. இந்த வாழ்த்தும் சந்தர்ப்பம் இரண்டு மனங்களும் ஒருமித்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் சந்தர்ப்பமாக இருக்கின்றது. உள்ளம் என்னும்போது அது எண்ணங்களின் உறைவிடம். ஒரு மனிதன் தன்னுடைய எண்ண அலைகளைக் கடத்தக் கூடிய ஆற்றல் பெற்றிருக்கின்றான். உடல் முழுவதும் பாய்ச்சப்படும் மின்சார அலைகளை நாம் பல இடங்களில் உணர்ந்திருக்கின்றோம். நகரும் படிகளில் கை வைக்கும் சிலருக்குத் திடீரென கைளில் மின்சாரம் அடிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை உணர்ந்திருக்கின்றீர்கள். காந்தக் கதிர்விசை எம்மிடம் இருப்பதைச் சில சமயங்களில் எங்கள் தலைசீவும் சீப்பை எமது தலைமயிருக்கு மேலே பிடிக்கும் போது அத்தலைமயிரைச் சீப்பு கவர்ந்து இழுப்பதைக் கண்டிருப்பீர்கள். நாம் எதிர்பார்க்காமலே சிலரில் மிதமிஞ்சிய பாசம் ஏற்படுகின்றது, ஈர்ப்பு ஏற்படுகின்றது. சிறுகுழந்தைகளிடம் இதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இவையெல்லாம் உடலுக்குள் ஏற்படுகின்ற ஹோமோன்களாலும் எமது உடல் தனக்குள்ளே செயற்படுகின்ற செயற்பாடுகளாலுமே ஏற்படுகின்றது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    Britain‘s Got Talent, Ameriaca’s  Got Talent, Germany Super Talent போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். அந்த நிகழ்ச்சிகளில் சிலர் Mind Reading  செய்து காட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். மனக்கட்டுப்பாடு, மனவசியம் போன்றவற்றைச் சரியான முறையில் கற்றுத் தம் மனதை கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பவர்கள், மற்றவர்கள் மனதைப்படித்து விடுகின்றார்கள். அல்லது தம்முடைய மனதில் உள்ளவற்றை அவர்களுக்குச் செலுத்திவிடுகின்றார்கள். அப்போது தொடுகை முறை பயன்படுத்தப்படுகின்றது. அவர்களுடைய நெற்றிப்பொட்டிலே தொடுகின்ற போது ஒருவித மின்சாரம் பாய்ச்சப்படுவதாக பரிசோதனையின் போது அனுபவித்தவர்கள் கூறுகின்றார்கள். சுவாமிகள் செய்கின்ற கட்டிப்பிடி வைத்தியம் கூட இவ்வாறுதான் அமைகின்றது. அவர்கள் கைகளை தங்கள் கைகளுள் அழுத்துகின்ற போது எண்ண அலைகள் மற்றவருக்குப் பாய்ச்சப்படுகின்றது. இதனாலேயே வாழ்த்துபவர்கள் தலையிலே கைவைத்து தம்முடைய நல்ல எண்ணங்களை  வாழ்த்தப்படுபவர்களுக்குச் செலுத்துகின்றார்கள். 

    இதனாலேயே மாதா, பிதா, குரு வாழ்த்தைப் பெறும்போது நம்பி அவர்கள் கால்களில் விழுகின்றோம. அவர்களும் கைகளால் தலையைத் தொட்டு வாழ்த்தி வாழ்த்தப்படுபவர்களை எழுப்புகின்றார்கள். ஏனென்றால், பெற்றோர் தம்முடைய பிள்ளைகள் கெட்டுப் போகட்டும் என்று ஒருநிமிடம் கூட நினைக்க மாட்டார்கள். நல்ல ஆசிரியர் தன்னுடைய மாணவன் வளர்ச்சியிலே தன் வளர்ச்சியைக் காண்பார். தனது மாணவன் உயர்வுக்குத் தன்னை அர்ப்பணிப்பார். அவரே உண்மையான ஆசிரியர். அதனால், இவ்வாழ்த்துக்கள் நாம் அச்சம் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டிய வாழ்த்துகள். உண்மையில் வாழ்த்துதல் என்பது Elektronik Power போன்றது. நல்ல மனதுடன் இல்லாமல் உள்ளே ஒன்றை வைத்து ஒருவர் வாழ்த்தினால் அது எம்மை அழித்து விடும் அணுகுண்டு போன்றது. மின்சாரம்  எம்மைத் தாக்காமல் இருப்பதற்கு றப்பரினால் சுற்றி பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். அந்த றப்பர் இல்லாவிட்டால் அந்த மின்சாரம் எம்மை அழித்துவிடும். அதிலிருந்து எம்மை நாம் பாதுகாக்க வேண்டுமென்றால், அதை மிஞ்சிய சக்தி எமக்கு இருக்க வேண்டும்.அந்த சக்தியைப் பெறுவதற்கு நாம் தியானம் செய்ய வேண்டியது அவசியமாகின்றது என்கின்ற அனுபவத்தைப் பெற்றேன்.

    எத்தனை தகவல்களைக் கொடுத்தாலும் அதை வாங்கிச் சுருக்கி வைத்திருக்கும் கணனி. ஏன் கைத்தொலைபேசியில் எவ்வளவு தகவல்களைச் சேகரிக்கின்றோம். அலைகள் எவ்வளவையும் சுருக்கவும் முடியும் பெருக்கவும் முடியும். அவ்வாறுதான் காந்த அலைகள். காந்த சக்தியை அடிப்படையாகக் கொண்டுதான் உடலும் உயிரும் இயங்கும். மனம் எந்தவகையில் இயங்கினாலும் ஜீவகாந்த சக்தியைத்தான் தாக்கும். ஒரு பொருளைப் பார்க்கும் போது எமது ஜீவ சக்தி வீணாகின்றது. அதேபோல் ஒரு வேலையைச் செய்கின்ற போது ஜீவகாந்த சக்தி செலவாகின்றது. அதனைப் பெருக்குவதறகு பயிற்சி தேவை என்னும் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டேன்.  

    இவ்வாறு பேசவிட்டால் என்னுடைய அனுபவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். களைத்துப் போன உங்களுக்கு என்னுடைய வார்த்தைகள் இவ்வளவு போதும் என்று நினைக்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கிய அமைப்பினர்க்கு மிக்க நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வளர்க வேதாத்திரியம். உலகமெங்கும் வேதாத்திரி மகரிஷியின் புகழ் ஓங்க வேண்டும். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன். வாழ்க வையகம்



    வியாழன், 10 மார்ச், 2022

    தமிழ் வான் அவை சாதனைப் பெண் 2022




    தமிழ் வான் அவை நடத்தும் சாதனைப் பெண் 2022
    ´``´`´´``´`´`´´``´´``´´`´``´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`´`
    இந்தியா, இலங்கை,அமெரிக்கா,ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து ஒவ்வொரு சாதனைப் பெண்களைத் தெரிவுசெய்து சாதனைப் பெண் 2022 விருது வழங்கிக் கௌரவிக்கின்றோம்


    திகதி : 13.03.2022
    நேரம்: ஐரோப்பிய நேரம் பி.பகல் 19.30
    இந்திய இலங்கை நேரம் பி.பகல் 15.00
    இங்கிலாந்து நேரம் பி.பகல் 14.00
    Zoom ID: 2509770769
    P.Word : 246810
    அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். சாதனைப் பெண்களை வாழ்த்தி அவர்களின் பெருமையைப் போற்றுவோம்.
    இப்பாடலை வழங்கிய சுவாமி விபுலானந்த அழகியற் கற்கை நெறி மாணவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்





     

    புதன், 23 பிப்ரவரி, 2022

    காதலின் 6 வகை நிலைகள் பற்றிய கலந்துரையாடல்


      தமிழ் வான் அவை நடத்தும் இணைய வழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு 27.02.2022 அன்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருக்கின்றது . காதலர் மாதம் என்ற காரணத்தினால் காதலின் 6 வகை நிலைகள் பற்றி 6 அறிஞர்கள் உரையாற்ற இருக்கின்றார்கள். அவர்களின் உரைகளில் இடம்பெறும் பாடல்களுக்கு பாடகர்கள் பாட இருக்கின்றார்கள். கீழுள்ள இணைப்பை அழுத்தி அனைவரும் கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றேன் 

    https://us02web.zoom.us/j/2509770769?pwd=M0kyckx0aHdVL0xNeGR4MnRzYkVGdz09



     





    புதன், 9 பிப்ரவரி, 2022

    கூடல் இழைத்தல்

     



    காற்றுக்கும் இலைக்கும் காதல். தட்டிவிட்டு சேர்ந்திருந்து பறந்து சென்றுவிடும். மீண்டும் மீண்டும் தன் கவனத்தை காட்டிச் செல்லும். கடற்கரைக்கும் அலைக்கும் காதல். வந்து வந்து மீண்டும் பிரிந்து சென்று விடும். தொடர்புகள் அறுவதில்லை. தொடர்ந்து இருப்பதும் இல்லை. பூமியைச் சூரியன் நெருங்க விட்டதில்லை. தூரப் போக அனுமதி தந்ததில்லை. சுற்றிச் சுற்றி வட்டமிடும் நிலை புரிந்திருந்தும் கண்காணிப்பில் வைத்துக் கொண்டே இருக்கின்றது. அணைப்பதில் சுகம் இருந்தாலும் அணைக்க விடுவதில்லை. இப்படி எத்தனையோ காதலர்கள் இளமையில் கண்ட காதலை தொடவும் முடியாது, தொலைக்கவும் முடியாது தொடருகின்றனர். தண்டவாளம் இரண்டும் ஒன்றாகச் சேர்வதில்லை. இங்கு காமம் போனது காதல் இருக்கின்றது. முறையற்ற காதலினால், இடைநடுவே முறிந்து போன காதலும் கணக்கில்லை. முடிவுரை எழுதி திருமணத்தில் கரைந்து போன காதலும் பல. 



    "காதலினால் சாகாம லிருத்தல் கூடும், கவலைபோம். அதனாலே மரணம் பொய்யாம். என பாரதி குயில்ப் பாடலிலே பாடினார்.  இது ஒரு புறம் இருக்க 


    எந்த உயிர்களுக்கும் காதல் உணர்வு பொதுவானது 


    "காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள் 

    கடலும் மலையும் எங்கள் கூட்டம்

    நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை

    நோக்க நோக்கக் களியாட்டம்|| என்று உயிர்கள் எல்லாம் ஒன்றிலிருந்துதான் பலவாகிப் பெருகின. அதனால் எல்லாமே எங்கள் ஜாதி என்று பாரதி பாடினார். 


    எங்கள் வீட்டுப் பலகணையில் ஒரு பறவை பறந்து வந்து அமர்ந்தது. சற்று நேரங்கழித்து அதனருகே இன்னுமொரு பறவை வந்தமர்ந்தது. தன் காதலன் வந்தமர்ந்ததைப் பார்த்த பறவை சற்று நகர்ந்தது போய் நின்றது. அதுவும் விடாது கிட்டக் கிட்ட நெருங்கியது. ஊடலின் அழகான காட்சியை அமைதியாய்க் கண்காணித்தேன். நீண்ட நேர சம்பாஷணையின் அந்நியோன்யத்தின் உச்சத்தில் இறுதியாக இருவரும் ஒன்றாகப் பறந்து சென்ற காட்சி. ஊடலும் அதன்பின் வரும் கூடலும் உச்சக் காதலை உணர்த்தும் என்பதை நேரடியாக உணரக்கூடியதாக இருந்தது. 


    துடிஅடிக் கயந்தலை கலக்கிய நன்னீரைப்

    பிடிஊட்டிப் பின் உண்ணும் களிறு, எனவும்

    உரைத்தனரே|| 


    என்னும் பாடலில் குட்டியானை கலக்கிய நீரை பெண் யானைக்குக் கொடுத்து மீதமிருந்தால் தான் உண்ணுகின்ற ஆண்யானையின் காதலை கலித்தொகை எடுத்துக் காட்டுகின்றது. 


    சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்

    பிணைமான் இனி துண்ண வேண்டிக் - கலைமாத்தன்

    கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்

    உள்ளம் படர்ந்த நெறி


    சுனைநீர் சிறிதளவே இருக்கின்றது. தாகத்தில் இருக்கும் பெண்மான் தன்னை எண்ணிக் குடிக்காது என்று எண்ணிய ஆண்மானானது அச்சுனைநீரில் வாயை வைத்துக் குடிப்பது போன்று பாசாங்கு செய்கின்றது என்பதை இப்பாடல் மூலம் மறைப்பொறையனார் ஐந்திணை ஐம்பதில் பாடினார். 


    காதல் கொண்ட மான்களுக்கு உள்ள ஒரு வழக்கம் ஒரு பெண்மனைத் துணைக் கொள்ள எண்ணிய  மான்கள் பெரிதான சத்தமிட்டுக் கத்துகின்றன. எந்த மான் பெரிதாக கத்துகின்றதோ, அந்த மானையே பெண்மான் கூடுமாம். ஆண்மான்கள் பெண்மான்கள் அறுகம்புல்லைத் தின்னுமாறு செய்து, தெளிந்த நீர் ஓடுகின்ற கானாற்றின் மணற்கரையிலே தூங்கச் செய்து அவ்வாறு தூங்கும் போது இடையூறு வராதபடி காவலும் காத்து நிற்கின்றன. இதேபோல் பெண்யானையின் பசியையும் கன்றின் பசியையும் தீர்ப்பதற்காக ஆண்யானை முற்றாத மூங்கிலின் முளையைத் தந்து அன்போடு உண்ணச் செய்விக்கும். இவ்வாறு அகநானூறு பாடல்கள் பல உயிரினங்களின் காதலை அழகாக எடுத்துக்காட்டுகின்றன.


    இந்தோனேசியாவில், பலினீஸில் ~~மானுக் தேவதா" என்னும் தெய்வங்களின் பறவை என்று அழைக்கப்படும் பறவையானது,  ஒரு துணையை ஈர்க்க முயற்சிக்கும்போது ஒரு இடத்தைத் தெரிவு செய்கின்றது. அந்த நிலத்திலே கிடக்கின்ற சுள்ளி, கல் போன்றவற்றையெல்லாம் தன்னுடைய சொண்டினால் அகற்றித் துப்பரவு செய்த பின் அந்த இடத்திலே நின்று நடனமாடவும் பாடவும் செய்கிறது. அந்நடனத்தில் மயங்கிய பெண் பறவை இந்நடனத்தில் மயங்கி அதனோடு இணைந்து நடனமாகி ஒன்றிணைகின்றது. இதேபோல் ஆண் மூட்டைப்பூச்சியின் இனப்பெருக்க உறுப்பு ஒரு கம்பி போன்று கூர்மையானது. இந்த ஆண் மூட்டைப் பூச்சியானது காதல் கொண்ட பெண் மூட்டைப்பூச்சியின் அடி வயிற்றிலே இந்தக் கம்பி போன்ற கூர்மையான பகுதியால் குத்தி விந்தணுக்களை உள்ளே செலுத்திவிடும். இந்த இடம் காயப்பட்டு பெண் மூட்டைப்பூச்சிக்குத் தாங்க முடியாத வலியை ஏற்படுத்திச் சில கணங்களில் மறைந்து போகும். இது இயற்கை அதற்கு அழித்திருக்கும் கொடை ஆகும். தாம் விரும்பிய காதலியை அடையக் காதலர்கள் நடத்துகின்ற நாடகங்களை இந்த ஆண் மூட்டைப் பூச்சி  காட்டித் தருகின்றது.

    பாலியல் முதிர்ச்சியடைந்த நத்தைகளின் தலைப்பகுதியில் னுயசவ ளுயஉ என்னுமொரு பை இருக்கிறது. அதறற்குள் ஒரு கூர்மையான கம்பி போன்று இருக்கின்றன. இது லவ் டொட்ஸ் எனப்படுகின்றது. இந்த லவ் டொட்ஸை மற்றைய நத்தையின் தலையிலே செலுத்தும். அப்பொழுது அதற்குள் இருக்கும் ஹார்மோன்; நத்தைக்குள் செல்லும் அதற்குள் இருக்கும் விந்தணுக்கள் மற்றைய நத்தைக்குள் பரவுகின்றன. காதலைப் பரிமாறும் இந்த வித்தை நத்தைகளுக்கே உரியன. இவ்வாறு உலகத்திற் பிறந்த அனைத்து உயிர்களிடத்திலும் காதல் மேம்பட்டிருப்பதையும் அதன் மூலம் உயிர்களின் விருத்தியையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றன.


    இவ்வாறு காதலுக்காகத் தம்மைத் தியகம் செய்வதும், விட்டுக் கொடுப்பதும் காலம் காலமாக அனைத்து உயிர்களிடத்திலும் காணப்படுகின்ற பண்பு. தலைவனிடம் காதல் கொண்ட தலைவி அவன் தன்னை மணப்பானோ என்று அறிய தரையிலே மண் பரப்பி தன்னுடைய கண்களை மூடி விரலினால் வட்டம் வரைவாள். தொடங்கிய இடத்தில் விரல் போய் நிற்க வேண்டும். அப்போது தலைவி நினைத்தது நடக்கும் இதனைக் கூடல் இழைத்தல் என்று கூறுவார்கள். இதில் ஏதாவது தவறு வந்து விடுமோ என்று கூடல் இழைத்துப் பார்க்க அஞ்சுகின்ற பெண்களும் உண்டு. இதேபோல் காதலியை அடைவதற்காக வட்டக்கல்லைத் தூக்குவதும், ஏறு தழுவுதலும். வரைபாய்தலும், மடல்மா ஏறதலும் போன்ற சம்பவங்களை இலக்கியக் காதல் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது. தமது காதலில் வெற்றி கிடைப்பதற்காக தமது கொள்கையை விட்டுவிடாது கடைப்பிடித்து காதலர்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். 


    ஆனால், இன்று நட்பும், காதலும், கணவன் மனைவி உறவும், பெற்றோர் பிள்ளைகள் உறவும் என்று அனைத்தும் கேள்விக்குறியாக காணப்படுகின்றன. உண்மைக் காதல் நினைத்து ஏங்குவதில் தொடர்கிறது. திருமணமான காதல் பிரிவை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது. இருப்பினும் காதலுக்கு முடிவில்லை. காலம் உள்ளவரை தொடரும். 


    மாசி மாத வெற்றிமணி பத்திரிகையில் வெளிவந்தது 


    செவ்வாய், 4 ஜனவரி, 2022

    தாயம் தரும் ஆதாயம்


    ''சூதும் வாதும் வேதனை செய்யும்'' என்பது கொன்றை வேந்தன் சிறுவயதில் எமக்குக் கற்றுத் தந்த பாடம். சூதாடுதலும் தேவையற்ற வாக்குவாதம் செய்தலும் துன்பத்தையே தரும் என்று கூறப்பட்ட கருத்துக்கு மகாபாரதம் ஒரு எடுத்துக்காட்டாகக் காணப்படுகின்றது. தருமன் சூதாட்டத்திலே தன்னுடைய நாடிழந்து, மானம் இழந்து, மனைவியுடனும் தம்பியருடனும் காட்டுக்குப் போன கதை யாவரும் அறிநததே. இந்தக் கதையின் களம் தமிழ்நாடாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், இது நாம் கற்ற பாடமாக இருக்கின்றது. பந்தயப் பொருள் வைத்து ஆடுகின்ற போது வஞ்சிக்கும் எண்ணம் தோன்றலாம். ஆசையை மீதப்படுத்தலாம். இதனாலேயே குதிரை ஓட்டம், சீட்டாட்டம், (சூதாட்டம்) தாயம் போன்றவை அச்சத்தைத் தரும் விளையாட்டுக்களாகக் கருதப்படுகின்றன. சங்க இலக்கியத்தில் பரத்தை தன் மகளிடம்

    ''தீயவர் செல்வம் ஒழிய நம்மையும் கள்ளையும் சூதையும் நான்முகன் படைத்தாவாறே'' 

    என்று சொல்கின்றாள்.

    இருந்தும் இன்றும் கூட கேளிக்கைகள் கொண்டாட்டங்களிலே சீட்டுக்கட்டுடன் சீட்டாட ஆயத்தமாகின்றவர்களையும் தாயமாடி அந்தச் சத்தத்தினால் வீட்டை இரண்டாக்குபவர்களையும் காணக்கூடியதாகவே இருக்கின்றது. இங்கு இவை களிப்பூட்டும் விளையாட்டுக்களாக காணப்படுகின்றன. இவ்விளையாட்டுக்கள் எந்தப் பந்தயப் பொருளையோ பணத்தையோ வைத்து விளையாடுபவை அல்ல. இதைவிட இக்கொரொனா காலப்பகுதியில் வீட்டுக்குள் இருந்து விளையாடுவதற்கு ஏற்ற விளையாட்டுக்களாக இவை இருக்கின்றன. இவற்றில் தாயம், என்றும் தாயக்கட்டை என்றும் விளையாடுகின்ற விளையாட்டை எடுத்து நோக்கினால்,  இது ஒரு விடயத்தில் கவனம் செலுத்துகின்ற ஒரு பயிற்சி விளையாட்டாகவும், மூளைக்கு நல்ல பயிற்சி அளிக்கும் விளையாட்டாகவும், ஆளுமைப் பண்பை மனதில் பதித்து தலைமைப் பண்பைக் கொண்டுவரும்  ஒரு விளையாட்டாகவும் கருதப்படுகின்றது.  

    ''தாயமும் தாரமும் தருவேன் உனக்கு'' என்று இராமன் சுக்கிரீவனிடம் கூறுகின்றான். அதாவது தலைமையோடு உன்னுடைய தாரத்தையும் தருகின்றேன் என்னும் போது தiலைமைப் பண்பை தாயம் என்னும் சொல் எடுத்துக் காட்டுகின்றது. தாயக்கட்டை உருட்டுகின்ற போது அதில் கவனம் செலுத்தி அதில் விழுகின்ற எண்ணிக்கையை எடுத்து முழுக்கவனத்தையும் செலுத்தி, எந்தக் காயை எந்த இடத்திற்கு நகர்த்த வேண்டும் என்ற புத்தியை சரியான முறையில் செலுத்தி அந்தக் காயை நகர்த்த வேண்டும். அந்தக் காய்க்கு குறி வைத்திருப்பவர்களின் கண்களைக் கட்டி முன்னேறிச் செல்லும் போது ஒவ்வொருவராக விழுத்த வேண்டும். இறுதியில் அக்காய் வெற்றிக்கனியாக முடி சூட்டும் போது அக்கனி தலைமைக் கனியாகின்றது. இங்கு எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுகின்ற போது தலைமையைப் பெறுகின்ற ஆளுமையை பெறலாம் என்னும் உணர்வு ஊட்டப்படும் மதிக்கூர்மையுள்ள விளையாட்டாகக் காணப்படுகின்றது.

    இக்காலத்தில் விளையாட்டுத் தொடங்கும் முன் தாயம் என்று 1 விழுத்த வேண்டும். ஒன்று விழுத்தும் வரை விளையாடுபவர்கள் விளையாட்டைத் தொடங்க முடியாது. தாயக்கட்டைகளை ஒவ்வொருமுறையும் உருட்ட வேண்டும். ஆனால், சங்ககாலத்திலே முதலில் 5 விழுத்த வேண்டும் என்று அதன் விளையாட்டுக் கட்டுப்பாடு இருந்திருக்கின்றது. இக்காலத்தில் 6 விழுந்தால் திரும்பவும் தாயக்கட்டைகளை வீசுவதற்கு அனுமதி உண்டு. அக்காலத்தில் 10 விழுந்தால் மறுபடியும் ஒருமுறை கையாட்டமாக உருட்டி அந்த எண்ணிக்கையையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.  ஆனால், அக்காலத்தில் விளையாட்டிலே பத்து என்ற எண்ணிக்கையை பெற்றவன் மனம் மகிழ்வதை கலித்தொகை 136 ஆவது பாடலிலே 

    முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம்   

    பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள்

    அத் திறத்து நீ நீங்க, அணி வாடி, அவ் ஆயம்

    வித்தத்தால் தோற்றான் போல், வெய் துயர் உழப்பவோ?

    முத்துப் போன்ற மணலில் நீ என் தலைவிக்கு அருள் செய்தாய். அப்போது அவள் கவறு விளையாட்டில் பத்து எண்ணிக்கை உருவம் பெற்றவள் போல மகிழ்ந்தாள். அவளை விட்டுவிட்டு நீ நீங்கியபோது அவள் வாடி அந்த ஆயத்தாரின் தந்திரத்தால் தோற்றவர் போல துன்பத்தில் உழல்கின்றாள். இப்படி அவள் உழலலாமா? என்று தாய விளையாட்டில் பெறுகின்ற இன்பத்தைத் தலைவனில் பெற்ற இன்பத்தில் ஏற்றி இப்பாடல் பாடப்பட்டுள்ளது. 

    சிறுதாயம் விளையாட்டிற்குப் புளியங்கொட்டைகள் பயன்படுத்தப்பட்டன. வெள்ளை நிறமாக அப்புளியங்கொட்டைகள் வரும் வரை கல்லின் மேல் அல்லது கெட்டியான தரையின் மேல் ஒரு பக்கமாகத் தேய்ப்பார்கள்.  சிலர் புளியங்கொட்டைகளைத் தேய்ப்பதற்குப் பதிலாக இரண்டாகப் பிளந்து கொள்வார்கள். நான்கு புளியங்கொட்டைகளை ஒரு பகுதி வெண்மையாகவும், மறுபுறம் கருமை நிறம் உள்ளதாகவும் இருக்கும்படி தாயக் கொட்டையைத் தயாரித்துக்கொள்கின்றனர். புளியங்கொட்டையைக் குலுக்கித் தரையில் போடும் போது விழும் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.

    ''நறு வீ தாழ் புன்னைக் கீழ் நயந்து நீ அளித்தக்கால்,

    மறுவித்தம் இட்டவன் மனம் போல, நந்தியாள்

    அறிவித்து நீ நீங்கக் கருதியாய்க்கு, அப் பொருள்   

    சிறுவித்தம் இட்டான் போல், செறிதுயர் உழப்பவோ?


    புன்னை மரத்தடியில் நீ இவளுக்கு அளி செய்தாய். அப்போது அவள் மறுவித்தம் அதாவது மறு தாயம் பெற்றவள் போல மனம் மகிழ்ந்தாள். நீ பொருளீட்ட நீங்கக் கருதியபோது அப்பொருள் சிறுவித்தம் பெற்றவள் போல செறிந்த துயரில் வருந்துகிறாள். இவள் இப்படி வருந்தலாமா? என்று தோழி தலைவனிடம் கேட்கின்றாள். சிறு வித்தம் என்றால் விரும்பாத எண்ணிக்கை என்பது பொருள். 

    எனவே வாழ்வியலை புலப்படுத்துகின்ற இலக்கியங்கள் தாம் விளையாடுகின்ற விளையாட்டுக்களைக் கூட தம்முடைய பாடல்களில் கொண்டு வந்திருப்பது புலப்படுகின்றது. 



    சனி, 11 டிசம்பர், 2021

    அன்றைய தொய்யில் இன்றைய Tatoo ஆரம்பமும் தொடர்ச்சியும்



    தோல் பேர்த்திய உடலிலே வகைவகையான வண்ணங்களில் பிடித்தவர்களின் உருவங்கள், காதலர்களின்  பெயர்கள், குறியீடுகள் என்று உடல் முழுவதும் பச்சை குத்திக் கொண்டு வலம் வருகின்றவர்களை இன்று உலகம் முழுவதும் காணுகின்றோம். காதல் தோல்வி ஏற்பட்டுவிட்டால், பச்சை குத்திய காதலியின் பெயரை அழிக்க முடியாது அதற்கு மேலே கீறிக் கிழித்துக் கொண்டு வாழுகின்றவர்களையும் அறிகின்றோம். 

    இது இன்று நேற்று வந்த வழக்கமில்லை. எனது பாட்டியினுடைய கையிலே ஒரு பச்சை குத்தப்பட்டிருந்தது. இதைத்தான் அழிக்கமுடியாதே! குத்தும் போது இத்தனை வேதனையுடன் இதன் குத்தத்தான் வேண்டுமா என்று கேட்டதற்கு இறந்த பின் கடவுள் எங்களிடம் எனக்கு என்ன கொண்டு வந்தாய் என்று கேட்டால் காட்டுவற்காகத்தான் பச்சை குத்துவார்கள் என்று சொன்னார். அக்காலத்தில் குறவர் என்றொரு இனத்தவர்கள் மார்பு, கை, கால், முன்னங்கை, புயம் போன்ற இடங்களில் பச்சை குத்துவார்கள். அவர்கள் மஞ்சள்தூளையும் அகத்திக்கீரையையும் தீயிலே எரித்துக் கரியாக்கி அக்கரியை நீரிலே குழைத்து மையை தயாரிப்பார்கள். இந்த மையை கூர்மையான ஊசி அல்லது கத்தியால் தொட்டுத் தொட்டுத் தோலில் குத்திக்குத்தி உருவங்களை வரைவார்கள். ஒருமுறை குத்தினால், குத்திய பச்சை வாழும் காலம் வரை எம்முடன் தொடர்ந்து வரும்.  

    இப்பச்சைக் கலாசாரத்தின் முன்னோடிகளாக ஜப்பான் சுதேசிகளான அயனுகளும் நியூசிலாந்தின் பழங்குடியினரான மவோரிகளும் காணப்படுகின்றார்கள். அவர்களிடமிருந்து மங்கோலியரிடமும் அங்கிருந்து ரோமரும் கிரேக்கரும் உலகமெங்கும் பரவவிட்டனர் என்று சொல்லப்படுகின்றது. 

    ஜெர்மனியக் கப்பல் ஒன்று ஒஸ்ரியா வந்து அங்கிருந்து உலகச்சுற்றுலா மேற்கொள்வதற்காக சென்றபோது ஐஸ் இல் உறைந்து கிடந்த ஒரு உடலை 1991 புரட்டாதி மாதம் 19 ஆம் திகதி ötztal Alps  மலைத்தொடரில் கண்டெடுத்தனர். சுருங்கி வற்றிப்போன இந்த உடலை ஒஸ்ரியா பரிசோதனைக் கூடத்திலே வைத்து உலக மருத்துவர்கள் எல்லோரும் ஆராய்ச்சி செய்தபோது இந்த உடம்பானது கி.மு 3350 - 3105 காலப்பகுதி எனக் கண்டறியப்பட்டது. அத்துடன் அந்த உடலிலே 61 இடங்களில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. இது கண்டெடுக்கப்பட்ட இடம் இத்தாலிக்கு அருகாமையில் இருந்ததனால், இந்த உடல் எங்களுடையது என்று உரிமை கொண்டாடிய இத்தாலியர்கள், அந்த உடலை எடுத்துக் கொண்டு போய்த் தம்முடைய அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார்கள். 




    இவ்வாறு உலகமெங்கும் பரந்து கிடக்கும் இந்தப் பச்சை குத்துதல் என்னும் கலை பழந்தமிழ் இலக்கியங்களிலே தொய்யில் என்று அழைக்கப்பட்டது. இந்தத் தொய்யில் அழிக்கக் கூடியது. சந்தனம், குங்குமம், செம்பஞ்சுக் குழம்பு, பச்சைக் கருப்பூரம் ஆகியவை தொய்யில் எழுதப் பயன்பட்ட மூலப்பொருட்களாகக் காணப்பட்டன. சித்திரங்கள் போன்ற உடலோவியம் வரையப்படும். காதலனோ கணவனோ கூடுதலுக்கு முன் பெண்ணின் மார்பின்மீதும், தோளின் மீதும் இத்தொய்யில் வரையும் மரபு அக்காலத்தில் இருந்தது. 

     நக்கீரனாரின் அகநானூற்றுப் பாடலில் தலைவிக்குப் பொட்டிட்டு, மலர்களின் மகரந்தத்தை மார்பில் அப்பி, தொய்யில் வரைந்து மலர் பரப்பிய படுக்கையில் பகற்பொழுதிலும் தலைவன் கூடியிருந்ததாகவுள்ளது. இப்பொழுதுபோல் அக்காலத்திலும் பல வண்ணங்களில் வரையப்பட்டிருந்தது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் மனைவியின் தோள்களில் இருந்த தொய்யில்; வெள்ளை நிறத்தில்  இருந்ததாக  நெடுநல்வாடையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களைத் தழுவுவதிலும் காண்பதிலும் நுகர்வதிலும் இன்பம் காணும் ஆண்கள் பலவகை நறுமணம் கலந்த தொய்யிலைப் பெண்கள் மார்பு, மேனிகளில் வரைவது வழக்கமாக இருந்தது. 

    கண்ணகியின் மார்பிலே அவளுடைய பணிப்பெண்கள் ஏன் பெரியமுத்து மாலையைச் சூட்டியுள்ளார்கள். தொய்யில் எழுதினால் போதுமே என்று ஓரிடத்தில் கோவலன் கூறுகின்றான். 

    ''அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப,

    பிரிந்து உறை சூழாதி ஐய! விரும்பி நீ,

    என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின்

    மைந்துடை மார்பில் சுணங்கும், நினைத்துக் காண்:

    சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது    

    ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்;

    இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்

    வளமை விழைதக்கது உண்டோ ? உள நாள்,

    ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ கை

    ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்,            

    ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதுஅரோ,

    சென்ற இளமை தரற்கு!

    காதலி காதலனுக்கு அறிவுரை கூறுகின்றாள். தண்ணீர் உண்ணத் தாகம் எடுப்பது போல, பொருள் தேடவேண்டும் என்னும் ஆசை துரத்துகிறது என்பதற்காக காதலனே என்னைப் பிரிந்து வாழ எண்ண வேண்டாம். விருப்பத்தோடு என் தோளில் தொய்யில் எழுதினாயே அதை எண்ணிப்பார். அது உன் மார்பில் கோடுகளாகப் பதிந்துள்ளது அதையும் எண்ணிப்பார். சென்றவர்கள் எல்லாம் கொண்டு வரப் பொருள் கொட்டிக் கிடப்பதில்லை. அதேபோல் பொருளீட்டாதவர்கள் உண்ணாமல் பட்டினி கிடப்பதுமில்லை. இளமையும் காமமும் இணையப் பெற்றவர் விரும்பும் செல்வம் வேறேதாவது இருக்கிறதா? உயிரோடு உள்ள வரையில் ஒரு கையால் துணைவரைத் தழுவிக்கொண்டு, மற்றொரு கையால் கூறுபட்டுக் கிடக்கும் ஆடையை உடுத்திக்கொள்ளும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை. இளமை போய்விட்டால் திரும்ப வராது. எனவே இளமையைப் பாதுகாத்துக் கொள் என்கிறாள். 


    பாகுபலி படத்திலே கதாநாயகன் கதாநாயகிக்குத் மயில் இறகால் தொய்யில் வரைவதை அழகாகக் காட்டியுள்ளார்கள். நற்றிணை, கலித்தொகை, மதுரைக்காஞ்சி, சீவகசிந்தாமணி, மேருமந்திரபுராணம், கம்பராமாயணம்;, அம்பிகாபதிக் கோவை போன்ற பல இலக்கியங்களில் பேசப்பட்ட தொய்யில் கலையானது 15ஆம் நூற்றாண்டிற்குப்பின் அழிந்து போனது. பின் பச்சை குத்துதலாக உருமாறி பின் இன்று Tattoo கலையாக மாறியுள்ளது.





     


    சனி, 27 நவம்பர், 2021

    செலவு அழுங்குவித்தல்

     


    சங்க இலக்கியங்களிலே மிகவும் அற்புதமான பாடல்களால் எம்முடைய இதயங்களில் நிலைத்து நிற்பவை அகத்திணைப் பாடல்கள். அதிலே செலவு அழுங்குவித்தல் என்னும் பகுதி நெஞ்சை அள்ளக்கூடிய பகுதியாகும். பொருள் வழிப் பிரிதலும் பிரிவை விரும்பாது அதனை தடுக்க எடுத்துக்கூறுகின்ற காரணங்களும் "செலவு அழுங்குவித்தல்" என்ற கருத்தமைந்த பாடல்களில் அழகாக கையாளப்பட்டுள்ளன. அழகும் சுவையும் நிறைந்த இந்த இலக்கியத்தை சுவைக்க தமிழ் வான் அவை நடத்தும் இணைய வழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு நிகழ்வில் கலந்து சிறப்பியுங்கள். இலக்கிய இன்பம் பருக ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றேன்.

    திகதி: 28.11.21 ஞாயிற்றுக் கிழமை

    இந்தியாவில் இருந்து முனைவர் க. ரேவதி அவர்களும்
    சிங்கப்பூரில் இருந்து முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் அவர்களும் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்கள்.
    மதிப்புரை வழங்க முனைவர் கோ.கீதா
    முனைவர் இரா. குணசீலன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

    ஆணும் ஆணும் குழந்தை பெற விஞ்ஞானம் சாத்தியமாக்குமா?

      ஆண் பெண் என்னும் இரு பால் பிரிவினர் உயிரினங்களிடையே காணப்படுகின்றன . இவை பால் கவர்ச்சியின் மூலமும் இயற்கை அமைப்பின் மூலமும் ஒன்றோடு ஒன...