• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 26 மார்ச், 2022

    என்னைக் கவர்ந்த வேதாத்திரி மகரிஷியும் ஆன்மீக அனுபவமும்



    அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி 

    அருளொடு நிறைந்ததெது தன் அருள் வெளிக்குளே 

    அகிலாண்ட கோடியெல்லாந் தங்குப் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்

    தழைத்ததெது மனவாக்கினில்

    தட்டாமல் நின்றதெது சமய கோடிகளெல்லாந்

    தந்தெய்வம் எந்தெய்வமென் 


    என்னும் தாயுமானவர் வரிகளையும் 

    தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

    தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

    தன்னை அறியும் அறிவை அறிந்த பின்

    தன்னையே நேசிக்கத் தானிருந்தானே

    என்ற திருமூலர் பாடலையும் உங்கள் முன் வைத்து இன்று இன்றைய வேதாத்திரி மகரிஷி அவர்களுடைய பிறந்தநாளிலே என்னுடைய அனுபவங்களை சிறிது பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கின்றேன். 

    முடிவில்லாத இந்த உலகத்தில், பூமியின் ஒவ்வொரு பகுதியில் அதாவது வெவ்வேறு நாடுகளில் இருந்தபடி நாம் அனைவரும் சுழன்று கொண்டிருக்கின்றோம். நாம் அனைவரும் வெவ்வேறு நாடுகளில் சுழன்று கொண்டே வாழ்ந்து கொண்டிருந்தாலும் இந்தத்தருணம் எல்லோரும் ஒரு மையத்தில் ஒரே நோக்கத்துடன் ஒரே சிந்தனையுடன் ஒருவரின் ஆசியுடன் இந்த ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றோம். அதுதான் எம்முடைய மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வழிகாட்டல். 

    காலம் போடுகின்ற கணக்கை கட்டிப் போடவோ தீர்மானிக்கவோ எங்களால் முடியாது. எங்களை மீறி நடக்கின்ற சக்தியை அடக்கி வைக்கின்ற பக்குவமும் எமக்குக் கிடையாது. அது போகின்ற பாதையிலே நாம் நாமெல்லோரும் பயணம் செய்கின்றோம். ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் ஒவ்வொரு வரலாறு இருக்கின்றது. அந்த வரலாற்றுப் பாதையிலே இன்றைய நாள் இங்கு கூடியிருக்கின்றோம் என்றால் அது காலம் போட்ட கட்டளை. அதுவும் மகரிஷி அவர்களுடைய 111 ஆவது பிறந்த நாளிலே எம் ஒவ்வொருவருக்கும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்திக்கின்றது. இது எப்படி நடந்தது என்பதற்கு என்னால் சொல்ல முடியாது. ஆனால் நடந்திருக்கின்றது. என்னை ஆட்டிப் படைக்கும் சக்தி உங்கள் எல்லோரையும் ஒன்றாக இணைத்திருக்கின்றது. இதற்கு நாம் யாரும் காரண கர்த்தாக்கள் இல்லை என்பதே உண்மை. எம்மையெல்லாம் வழிநடத்துவதற்கு இந்தப் பிரபஞ்சம் இருக்கின்றது. அங்கே வான் துகளாக மகரிஷி எம்மை எல்லாம் வழி நடத்திக் கொண்டிருக்கின்றார். 

    வேதாத்திரி மகரிஷி அவர்களை எனக்கு விளக்கிக் காட்டியவர் டாக்டர் கோபால்ஜி அவர்கள். அவரே குருவாக இருந்து மகரிஷி என்னவெல்லாம் கூறினாரோ அவருக்குக் கற்பித்தாரோ என்ன அனுபவங்களைத் தந்தாரோ அவற்றையெல்லாம் மனதில் பதித்து எங்களுக்கு அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றார். 

    நிச்சயமாக ஆன்மீகம் என்பது ஒரு அனுபவம். இது பிறர் சொல்லி எமக்கு ஏற்படுவதில்லை. ஆனால், எமக்குள்ளாகவே ஒரு உணர்வு தோன்ற வேண்டும். அதற்கு எமக்கு உள் உணர்வு ஏற்பட வேண்டும். ஆர்வமும் விருப்பமும் இருக்க வேண்டும். அந்த உணர்வைத் எமக்குத் தூண்டுபவராக குரு கோபால்ஜி அவர்கள் இருக்கின்றார். குரு கோபால்ஜி அவர்களிடம் 

    நாடிசுத்தி, தண்டுவட சுத்தி, பிரணாயாமம், ஆதார சக்கரங்களை தூண்டுதல். தெய்வீக மையம் மூன்றாவது கண் திறத்தல், தீட்சை அது பற்றிய விளக்கம், ஆக்கினை தவம், துரிய தவம் சாந்தி தவம், துரியாதீத தவம், பிரபஞ்ச நவக்கிரக தவம், பஞ்சேந்திரிய தவம்,  சித்தர்களின் நீள் ஆயுள் பயிற்சி, காயகல்ப யோகம், சாந்தி தவம், கண்ணாடிபயிற்சி, தீபப்பயிற்சி, உடற்பயிற்சி, அறுகுண சீரமைப்பு, உடல் வருடுதல், அக்குபிரஷர் பயிற்சி, டீழனல யனெ ஆiனெ சுநடயஒயவழைn போன்ற பயிற்சிகளை கற்றோம். உடல்நலமும் உளநலமும் தூயசிந்தனையும் கொண்ட வாழ்க்கையை எமக்கு  குரு கற்பித்தார். குறுகிய காலப்பகுதியிலே இவ்வளவு விடயங்களும் நாம் கற்பது என்பது இக்காலப்பகுதியில் இலகுவான காரியம் இல்லை. இந்த அருள் எமக்குக் கிடைப்பது என்பது ஒரு பாரிய கொடுப்பினை என்றுதான் நான் கருதுகின்றேன். தாரமும் குருவும் தலைவிதிப்படி என்பார்கள். எமக்கு இவ்வாறான குரு கிடைத்தமைக்கு இந்த நேரத்தில் குருஜி அவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். 

    வேதாத்திரி மகரிஜி அவர்களின் தியான முறைகள் என்னை மிகவும் கவர்ந்ததற்குக் காரணம். அவர் அறிவியலுடன் ஆன்மீகத்தை விளக்கியதுதான். உடல், மனம், ஆன்மா பற்றிய தேடலை விஞ்ஞான விளக்கத்துடன் கற்பித்திருக்கின்றார். பிரபஞ்சம் பற்றிய பார்வையை தியானமுறைக்குள் கொண்டு வந்திருக்கின்றார். உடற்பயிற்சி, அக்குபிரஷர், அறுகுணசீரமைப்பு  போன்றவை மூலம் உடலையும் மனதையும் சீரமைப்பதற்குரிய பயிற்சிகளைக் கொடுத்திருக்கின்றார். 

    தவம் செய்வதற்கு நாம் இமயமலை தேடிப் போகத் தேவையில்லை. சந்நியாசியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. பிரமச்சரியம் கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களையும் கடந்து வாழ்ந்து தான் மனிதன் இறக்க வேண்டும். ஒவ்வொரு காலப்பகுதியிலும் தவம் செய்வதற்குரிய முறைகள் இருக்கின்றன. அதற்கு எமது உடலிலுள்ள 7 சக்கரங்களும் மனிதனின் 70 ஆயிரம் நாடிகளின் உயிராய் ஒவ்வொரு உணர்வுகளைத் தூண்டக்கூடியனவாக இருக்கின்றன. அவற்றை சரியான அளவிலே நாம் பயன்படுத்துகின்ற போதுதான் நாம் இந்த உலகிலே சீரான வாழ்க்கையை வாழ முடியும். அதற்கு உடல், உள, தியானப் பயிற்சிகளை மகரிஷி வடிவமைத்துக் கொடுத்திருக்கின்றார். 

    உதாரணமாக மூலாதாரம் சரியான முறையில் செயற்பட்டாலேயே பசி தூக்கம் ஒழுங்காக வேலை செய்யும். அட்ரீனல் சுரப்பிகள் இதனுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. பாலியல் சக்தியை ஒழுங்குபடுத்த சுவாதிஸ்டானம் உள்ளது. மணிப்பூரகம் இதிலிருந்து உடலியக்கச் சக்தி உடலெங்கும் பரப்பப்படுகிறது. அன்பு பாசம் இரக்கத்தின் இருப்பிடம் அநாகதம் இருக்கின்றது. விசுப்தி குரல்வளைச் சக்கரம் என்று சொல்லப்படுவது. இதுவே எண்ணங்களை வெளிப்படுத்தவும் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும் காரணியாக இருக்கிறது. ஆகாயதத்துவத்தைக் குறிக்கிறது. ஆக்கினை சக்கரம் ஞானம், பேரறிவு, தொலைதூர சிந்தனை இவற்றை வழங்குகிறது. பிட்ரூய்ட் சுரப்பி இதன் கட்டுப்பாட்டிலுள்ளது. சகஸ்ரகாரம் என்றும் துரியம் என்றும் சொல்லப்படும் சக்கரம் பிரபஞ்சத்திற்கும் எமக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்ற சக்கரம். இவ்வாறு ஒவ்வொரு சக்கரங்களிலும் மனதைப் பதித்து தியானம் செய்கின்ற போது அவற்றின் ஆற்றலை மேம்படுத்துகின்றோம். அப்படியென்றால் அவற்றின் ஆற்றல் எமக்குத் தேவை அல்லவா? அந்த ஆற்றலை மேம்படுத்தாமலும் குறைக்காமலும் ஒரு சீராக வைத்துக் கொள்வதற்காக தியானமுறைகளிலே நாளொன்றுக்கு ஒரு தியானம் என்ற வகையிலே  வகைப்படுத்தி மகரிஷி எமக்குக் கொடுத்திருக்கின்றார். பாலியல் சக்தி எமக்குத் தேவையில்லை என்று சுவாதீஸ்டானத்தின் பயிற்சியைக் மகரிஷி வழங்காமல் விட்டிருக்கலாம். ஆனால், உயிர் உருவாக்கம், மனித வளம் உலகத்திற்குத் தேவை என்பதை உணர்ந்தவரே மகரிஷி அவர்கள். அதனால், அனைத்து சக்கரங்களுக்கும் சக்கரா தியானத்தைக் கொடுத்திருக்கின்றார். 

    எம்முடைய வாழ்க்கைப் பயணத்திலே நாம் பலரைச் சந்திக்கின்றோம். பலரோடு பழகியிருக்கின்றோம். அதன் மூலம் நல்ல நினைவுகளும் கவலையான நினைவுகளும் எமக்குள்ளே கலந்திருக்கின்றன. கலந்த அந்த நினைவுகளைக் கழுவித் துடைக்க முற்படுகின்றோம். ஆனால், அது எம்மால் முடிவதில்லை. சில நினைவுகள் எம்முடன் இரண்டறக் கலந்து எம்மை ஆட்டிப் படைக்கும். இந்த சமயத்திலே எம்மை நாம் கட்டுப்படுத்தி வாழ வேண்டியது அவசியமாகின்றது. இதற்குத் தியானம் அவசியம் என்னும் அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கின்றது.

    எங்களுடைய உடலும் எங்களுடைய உடலின் தொழிற்பாடும் இந்த பிரபஞ்சமும் பேராச்சரியம் என்று எனது தேடல் விரிவடைகின்றது. நாட்களின் வளர்ச்சியில் தேடல்களின் பயனாகத்தான் எம்முடைய ஆயுள்காலம் விரிவடைகின்றது. இதுவரை காலமும் எமக்குள்ளே இருந்த எண்ண ஓட்டங்கள் தற்போது வேறு திசைக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. மனிதன் வாழ்க்கை முழுவதும் ஒரு கற்றல் தொழிற்பாட்டிலேயே அவனை அறியாமல் ஈடுபட்டிருப்பான். பொதுவாகவே எமக்குள் நுழைகின்ற ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் விளக்கம் தேடிக் கொண்டிருக்கின்ற நாம் அதற்குரிய தெளிவான விடையைக் கண்டு பிடிக்கும் போதுதான் உண்மையிலே மனம் முழுவதும் மகிழ்ச்சியடைகின்றோம். அந்த தேடலின் வெற்றி கிடைத்த பின்புதான் அதில் முழுவதுமாக ஈடுபடவும் முனைகின்றோம். 

    பொதுவாகவே அறிவியல் பற்றியும் ஆத்மா பற்றியும் பலவித ஆராய்ச்சிகளில் நான் ஈடுபடுகின்றேன். இவ்வாறு பூரணமான சிந்தனையின் வெளிப்பாடுதான் சிறந்த அறிவும் சிறந்த ஞானமுமாக அமைகின்றது. 

    எண்ணம் என்பது எம்மை கட்டிப்போட வைக்கின்றது ஒவ்வொரு சிந்தனைக்குள்ளும் நாம் பரந்துபட்ட வினாக்களை எழுப்புகின்றன போதுதான் ஒரு விடையை நாம் காணுகின்றோம் யார் சொன்னார் இவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார் என்று சொன்னார் சாக்ரடீஸ். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று சொன்னார் திருவள்ளுவர். இந்த இருவருடைய  எண்ணங்களையும் நாம் எடுத்து பார்க்கின்றபோது எமக்குள்ளே தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறான வார்த்தைகள் திருவள்ளுவர் போன்றவர்களால் கூறப்பட்டது. எண்ணம் என்பது எம்மை தூய்மைப் படுத்துவதாக இருந்தால் அந்த எண்ணத்தை நாம் விரிவுபடுத்த வேண்டியது அவசியம் ஜீவ சக்தியை நாம் அதிகரிக்க வேண்டுமென்றால் எம்முடைய எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும் அந்தத் தூய்மையான எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு எமக்குள்ளே வினாக்கள் வர வேண்டியது அவசியம் அந்த வினாக்களுக்குத் தெளிவு ஏற்படுத்தி சந்தேகங்களை தீர்த்து பரிசுத்தமான எண்ணம் உள்ளவர்களாக நாம் மாற வேண்டும் என்ற அனுபவம் எனக்கு கிடைத்திருக்கின்றது.

    எல்லாம் வாழ்க்கையிலே ஒரு பாவனையில் தான் ஆரம்பிக்கின்றது. ஒரு புனைகதை ஒரு சிறு கதையோ ஒரு சக்தியோ எல்லாம் கற்பனையிலேதான் காணுகின்றோம். ஒரு பாவனை என்று சொல்வதை தெளிவாக உணர வேண்டும் என்றால் அது ஒரு கற்பனையில் தான் நாம் முதலில் கடவுளை காணுவோம். இறைசக்தி உள்ளே பெறுகின்றது என்று கற்பனை பண்ணுகிறோம் அது எங்கள் உடல் முழுவதும் பரவுவதாக எண்ணுவோம் காலப்போக்கில் எமது மூளை அதை உள்வாங்கி மூலாதாரத்தில் பதிவு செய்துவிடும். பயிற்சி செய்கின்ற போது அந்த மூலாதாரத்தில் இருந்து எழுகின்ற எண்ணங்கள் எம்மை ஆட்டிப்படைக்கும். 

    கற்பனையில் உள்நுழைந்த கடவுள் தன் உண்மையான ரூபத்தை எமக்கு காட்டுவார் என்பதுதான் என்னுடைய தெளிவான அனுபவமாக நான் காணுகின்றேன். எங்களுடைய அத்தனை சக்தியும் இரண்டு கைகளையும் கூப்பி வைக்கின்ற போது வலம் இடம் என்றும் இடது வலம் என்றும் மாற்றப்படுகின்றது. அப்போது இருக்கின்ற அந்த அலைகள் உடல் முழுவதும் செலுத்தப்படுகின்றது நான் ஒரு சக்தி மயமான ஒரு உடலைத் தாங்கிய மனிதனாக காணப்படுவோம் அப்போது எங்களுடைய கைகளை பிறரிடம் கொடுக்கின்ற போது அந்தக் கைகளில் இருக்கின்ற எண்ண அலைகள் பிறருக்கு பாய்ச்சப்படுகின்றது. இவ்வாறுதான் குருஜி வேதாத்திரி மகரிஷியிடம் இருந்து பெற்ற ஆற்றலை குருஜி தன்னுடைய கைகள் மூலமாக எமக்கு பரப்புகின்றார் என்பதை நான் அனுபவம் மூலம் உணருகின்றேன். 

    எமக்குத் தெரியாமல் எம்முடைய உடலுக்குள்ளே ஒரு இயந்திரத்தை தாங்கிக் கொண்டு இருக்கின்றோம். அவை எமக்கு உள்ளே இருப்பதை எம்முடைய கண்களால் பார்க்க முடியாது. ஆனால் இருக்கின்றது இதை நாம் அறிந்திருக்கின்றோம். அப்படியென்றால் சிறுவயதிலிருந்து நாம் கற்ற கல்வியின் மூலமாக எந்த இடத்தில் எது இருக்கின்றது என்பதை கற்று அறிந்து இருக்கின்றோம். பிறர் கூறக் கேட்டு  இருக்கின்றோம். நமக்குள்ளே  உணர்ந்திருக்கிறோம்.  ஆனால் அந்த உடலுக்குள்ளே இருக்கின்ற உறுப்புகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.  ஏனென்றால் அதை நாம் காண்பதில்லை. எந்த ஒரு இயந்திரமாக இருந்தாலும் பொருளாக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் அதைச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.  இல்லாவிட்டால் அந்தப் பொருள்  பழுதாகிப் போய்விடும். நோய் ஏற்படுகின்றபோது உடனடியாக கிடைக்கின்ற மருந்துகளை பாவித்துவிட்டு அது சுகமாகி விட்டது என்று  இருந்து விடுகின்றோம்.  அது பற்றி எந்தவித சிந்தனையும் இல்லாமல் மனம் போன போக்கிலே போகின்றோம். இதேவேளை உள்ளே மனம் என்ற ஒன்று இருக்கின்றது என்பதை அறிந்திருக்கின்றோம். ஆனால் அதை சீர் அமைப்பதற்கு அழகு படுத்துவதற்கு சிந்தித்துப் பார்ப்பதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். எங்களுடைய அகமாகிய மனம் தூய்மையானதாகவும் அழகாகவும் இருந்தால்  முகம் அழகு பெறும். அந்த அகத்தைத் தூய்மை செய்வதற்காக அறுகுண சீரமைப்பு என்னும் ஒரு பாடத்தை நாம் கற்றோம். இவை ஒன்றும் எமக்குத் தெரியாத விடயம் இல்லை. தெரிந்ததுதான் ஆனால் செயல் படுத்தாமல் இருந்தோம். ஏனென்றால் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவத்தை கொடுத்து எமக்கு அவசியப்பட்டதை நம் நினைத்துப் பார்க்காத காரணம் தான். இப்போது எம்மை நாம் உடலைவிட உள்ளத்தை தூய்மைப்படுத்தும் தியான வாழ்க்கை வாழுகின்றோம்.  இனி எங்கள் உடலும் சுத்தம் உள்ளமும் சுத்தம் அடையும் என்ற நம்பிக்கையும் அனுபவமும் எமக்குக் கிடைத்திருக்கின்றது. 

    “உள்ளத்தில் ஒளி உண்டானால், வாக்கினில் ஒளி உண்டாகும்" என்று பாரதி பாடியுள்ளார். அடிமனதில் இருந்து நல் வாழ்த்தாக அது வரவேண்டும். அது கேட்காமலே எமக்குக் கிடைக்க வேண்டும். எம்மைத் தேடி வரவேண்டும். 

                 வாழ்த்துகின்ற போது எமக்கு ஏற்படுகின்ற மனநிலை அதனைக் கேட்கும் போதும் ஏற்படுகின்றது. இந்த வாழ்த்தும் சந்தர்ப்பம் இரண்டு மனங்களும் ஒருமித்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் சந்தர்ப்பமாக இருக்கின்றது. உள்ளம் என்னும்போது அது எண்ணங்களின் உறைவிடம். ஒரு மனிதன் தன்னுடைய எண்ண அலைகளைக் கடத்தக் கூடிய ஆற்றல் பெற்றிருக்கின்றான். உடல் முழுவதும் பாய்ச்சப்படும் மின்சார அலைகளை நாம் பல இடங்களில் உணர்ந்திருக்கின்றோம். நகரும் படிகளில் கை வைக்கும் சிலருக்குத் திடீரென கைளில் மின்சாரம் அடிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை உணர்ந்திருக்கின்றீர்கள். காந்தக் கதிர்விசை எம்மிடம் இருப்பதைச் சில சமயங்களில் எங்கள் தலைசீவும் சீப்பை எமது தலைமயிருக்கு மேலே பிடிக்கும் போது அத்தலைமயிரைச் சீப்பு கவர்ந்து இழுப்பதைக் கண்டிருப்பீர்கள். நாம் எதிர்பார்க்காமலே சிலரில் மிதமிஞ்சிய பாசம் ஏற்படுகின்றது, ஈர்ப்பு ஏற்படுகின்றது. சிறுகுழந்தைகளிடம் இதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இவையெல்லாம் உடலுக்குள் ஏற்படுகின்ற ஹோமோன்களாலும் எமது உடல் தனக்குள்ளே செயற்படுகின்ற செயற்பாடுகளாலுமே ஏற்படுகின்றது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    Britain‘s Got Talent, Ameriaca’s  Got Talent, Germany Super Talent போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். அந்த நிகழ்ச்சிகளில் சிலர் Mind Reading  செய்து காட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். மனக்கட்டுப்பாடு, மனவசியம் போன்றவற்றைச் சரியான முறையில் கற்றுத் தம் மனதை கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பவர்கள், மற்றவர்கள் மனதைப்படித்து விடுகின்றார்கள். அல்லது தம்முடைய மனதில் உள்ளவற்றை அவர்களுக்குச் செலுத்திவிடுகின்றார்கள். அப்போது தொடுகை முறை பயன்படுத்தப்படுகின்றது. அவர்களுடைய நெற்றிப்பொட்டிலே தொடுகின்ற போது ஒருவித மின்சாரம் பாய்ச்சப்படுவதாக பரிசோதனையின் போது அனுபவித்தவர்கள் கூறுகின்றார்கள். சுவாமிகள் செய்கின்ற கட்டிப்பிடி வைத்தியம் கூட இவ்வாறுதான் அமைகின்றது. அவர்கள் கைகளை தங்கள் கைகளுள் அழுத்துகின்ற போது எண்ண அலைகள் மற்றவருக்குப் பாய்ச்சப்படுகின்றது. இதனாலேயே வாழ்த்துபவர்கள் தலையிலே கைவைத்து தம்முடைய நல்ல எண்ணங்களை  வாழ்த்தப்படுபவர்களுக்குச் செலுத்துகின்றார்கள். 

    இதனாலேயே மாதா, பிதா, குரு வாழ்த்தைப் பெறும்போது நம்பி அவர்கள் கால்களில் விழுகின்றோம. அவர்களும் கைகளால் தலையைத் தொட்டு வாழ்த்தி வாழ்த்தப்படுபவர்களை எழுப்புகின்றார்கள். ஏனென்றால், பெற்றோர் தம்முடைய பிள்ளைகள் கெட்டுப் போகட்டும் என்று ஒருநிமிடம் கூட நினைக்க மாட்டார்கள். நல்ல ஆசிரியர் தன்னுடைய மாணவன் வளர்ச்சியிலே தன் வளர்ச்சியைக் காண்பார். தனது மாணவன் உயர்வுக்குத் தன்னை அர்ப்பணிப்பார். அவரே உண்மையான ஆசிரியர். அதனால், இவ்வாழ்த்துக்கள் நாம் அச்சம் இன்றி ஏற்றுக் கொள்ள வேண்டிய வாழ்த்துகள். உண்மையில் வாழ்த்துதல் என்பது Elektronik Power போன்றது. நல்ல மனதுடன் இல்லாமல் உள்ளே ஒன்றை வைத்து ஒருவர் வாழ்த்தினால் அது எம்மை அழித்து விடும் அணுகுண்டு போன்றது. மின்சாரம்  எம்மைத் தாக்காமல் இருப்பதற்கு றப்பரினால் சுற்றி பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். அந்த றப்பர் இல்லாவிட்டால் அந்த மின்சாரம் எம்மை அழித்துவிடும். அதிலிருந்து எம்மை நாம் பாதுகாக்க வேண்டுமென்றால், அதை மிஞ்சிய சக்தி எமக்கு இருக்க வேண்டும்.அந்த சக்தியைப் பெறுவதற்கு நாம் தியானம் செய்ய வேண்டியது அவசியமாகின்றது என்கின்ற அனுபவத்தைப் பெற்றேன்.

    எத்தனை தகவல்களைக் கொடுத்தாலும் அதை வாங்கிச் சுருக்கி வைத்திருக்கும் கணனி. ஏன் கைத்தொலைபேசியில் எவ்வளவு தகவல்களைச் சேகரிக்கின்றோம். அலைகள் எவ்வளவையும் சுருக்கவும் முடியும் பெருக்கவும் முடியும். அவ்வாறுதான் காந்த அலைகள். காந்த சக்தியை அடிப்படையாகக் கொண்டுதான் உடலும் உயிரும் இயங்கும். மனம் எந்தவகையில் இயங்கினாலும் ஜீவகாந்த சக்தியைத்தான் தாக்கும். ஒரு பொருளைப் பார்க்கும் போது எமது ஜீவ சக்தி வீணாகின்றது. அதேபோல் ஒரு வேலையைச் செய்கின்ற போது ஜீவகாந்த சக்தி செலவாகின்றது. அதனைப் பெருக்குவதறகு பயிற்சி தேவை என்னும் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டேன்.  

    இவ்வாறு பேசவிட்டால் என்னுடைய அனுபவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். களைத்துப் போன உங்களுக்கு என்னுடைய வார்த்தைகள் இவ்வளவு போதும் என்று நினைக்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கிய அமைப்பினர்க்கு மிக்க நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வளர்க வேதாத்திரியம். உலகமெங்கும் வேதாத்திரி மகரிஷியின் புகழ் ஓங்க வேண்டும். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன். வாழ்க வையகம்



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...