காற்றுக்கும் இலைக்கும் காதல். தட்டிவிட்டு சேர்ந்திருந்து பறந்து சென்றுவிடும். மீண்டும் மீண்டும் தன் கவனத்தை காட்டிச் செல்லும். கடற்கரைக்கும் அலைக்கும் காதல். வந்து வந்து மீண்டும் பிரிந்து சென்று விடும். தொடர்புகள் அறுவதில்லை. தொடர்ந்து இருப்பதும் இல்லை. பூமியைச் சூரியன் நெருங்க விட்டதில்லை. தூரப் போக அனுமதி தந்ததில்லை. சுற்றிச் சுற்றி வட்டமிடும் நிலை புரிந்திருந்தும் கண்காணிப்பில் வைத்துக் கொண்டே இருக்கின்றது. அணைப்பதில் சுகம் இருந்தாலும் அணைக்க விடுவதில்லை. இப்படி எத்தனையோ காதலர்கள் இளமையில் கண்ட காதலை தொடவும் முடியாது, தொலைக்கவும் முடியாது தொடருகின்றனர். தண்டவாளம் இரண்டும் ஒன்றாகச் சேர்வதில்லை. இங்கு காமம் போனது காதல் இருக்கின்றது. முறையற்ற காதலினால், இடைநடுவே முறிந்து போன காதலும் கணக்கில்லை. முடிவுரை எழுதி திருமணத்தில் கரைந்து போன காதலும் பல.
"காதலினால் சாகாம லிருத்தல் கூடும், கவலைபோம். அதனாலே மரணம் பொய்யாம். என பாரதி குயில்ப் பாடலிலே பாடினார். இது ஒரு புறம் இருக்க
எந்த உயிர்களுக்கும் காதல் உணர்வு பொதுவானது
"காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்|| என்று உயிர்கள் எல்லாம் ஒன்றிலிருந்துதான் பலவாகிப் பெருகின. அதனால் எல்லாமே எங்கள் ஜாதி என்று பாரதி பாடினார்.
எங்கள் வீட்டுப் பலகணையில் ஒரு பறவை பறந்து வந்து அமர்ந்தது. சற்று நேரங்கழித்து அதனருகே இன்னுமொரு பறவை வந்தமர்ந்தது. தன் காதலன் வந்தமர்ந்ததைப் பார்த்த பறவை சற்று நகர்ந்தது போய் நின்றது. அதுவும் விடாது கிட்டக் கிட்ட நெருங்கியது. ஊடலின் அழகான காட்சியை அமைதியாய்க் கண்காணித்தேன். நீண்ட நேர சம்பாஷணையின் அந்நியோன்யத்தின் உச்சத்தில் இறுதியாக இருவரும் ஒன்றாகப் பறந்து சென்ற காட்சி. ஊடலும் அதன்பின் வரும் கூடலும் உச்சக் காதலை உணர்த்தும் என்பதை நேரடியாக உணரக்கூடியதாக இருந்தது.
துடிஅடிக் கயந்தலை கலக்கிய நன்னீரைப்
பிடிஊட்டிப் பின் உண்ணும் களிறு, எனவும்
உரைத்தனரே||
என்னும் பாடலில் குட்டியானை கலக்கிய நீரை பெண் யானைக்குக் கொடுத்து மீதமிருந்தால் தான் உண்ணுகின்ற ஆண்யானையின் காதலை கலித்தொகை எடுத்துக் காட்டுகின்றது.
சுனைவாய்ச் சிறுநீரை எய்தா தென்(று) எண்ணியப்
பிணைமான் இனி துண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி
சுனைநீர் சிறிதளவே இருக்கின்றது. தாகத்தில் இருக்கும் பெண்மான் தன்னை எண்ணிக் குடிக்காது என்று எண்ணிய ஆண்மானானது அச்சுனைநீரில் வாயை வைத்துக் குடிப்பது போன்று பாசாங்கு செய்கின்றது என்பதை இப்பாடல் மூலம் மறைப்பொறையனார் ஐந்திணை ஐம்பதில் பாடினார்.
காதல் கொண்ட மான்களுக்கு உள்ள ஒரு வழக்கம் ஒரு பெண்மனைத் துணைக் கொள்ள எண்ணிய மான்கள் பெரிதான சத்தமிட்டுக் கத்துகின்றன. எந்த மான் பெரிதாக கத்துகின்றதோ, அந்த மானையே பெண்மான் கூடுமாம். ஆண்மான்கள் பெண்மான்கள் அறுகம்புல்லைத் தின்னுமாறு செய்து, தெளிந்த நீர் ஓடுகின்ற கானாற்றின் மணற்கரையிலே தூங்கச் செய்து அவ்வாறு தூங்கும் போது இடையூறு வராதபடி காவலும் காத்து நிற்கின்றன. இதேபோல் பெண்யானையின் பசியையும் கன்றின் பசியையும் தீர்ப்பதற்காக ஆண்யானை முற்றாத மூங்கிலின் முளையைத் தந்து அன்போடு உண்ணச் செய்விக்கும். இவ்வாறு அகநானூறு பாடல்கள் பல உயிரினங்களின் காதலை அழகாக எடுத்துக்காட்டுகின்றன.
இந்தோனேசியாவில், பலினீஸில் ~~மானுக் தேவதா" என்னும் தெய்வங்களின் பறவை என்று அழைக்கப்படும் பறவையானது, ஒரு துணையை ஈர்க்க முயற்சிக்கும்போது ஒரு இடத்தைத் தெரிவு செய்கின்றது. அந்த நிலத்திலே கிடக்கின்ற சுள்ளி, கல் போன்றவற்றையெல்லாம் தன்னுடைய சொண்டினால் அகற்றித் துப்பரவு செய்த பின் அந்த இடத்திலே நின்று நடனமாடவும் பாடவும் செய்கிறது. அந்நடனத்தில் மயங்கிய பெண் பறவை இந்நடனத்தில் மயங்கி அதனோடு இணைந்து நடனமாகி ஒன்றிணைகின்றது. இதேபோல் ஆண் மூட்டைப்பூச்சியின் இனப்பெருக்க உறுப்பு ஒரு கம்பி போன்று கூர்மையானது. இந்த ஆண் மூட்டைப் பூச்சியானது காதல் கொண்ட பெண் மூட்டைப்பூச்சியின் அடி வயிற்றிலே இந்தக் கம்பி போன்ற கூர்மையான பகுதியால் குத்தி விந்தணுக்களை உள்ளே செலுத்திவிடும். இந்த இடம் காயப்பட்டு பெண் மூட்டைப்பூச்சிக்குத் தாங்க முடியாத வலியை ஏற்படுத்திச் சில கணங்களில் மறைந்து போகும். இது இயற்கை அதற்கு அழித்திருக்கும் கொடை ஆகும். தாம் விரும்பிய காதலியை அடையக் காதலர்கள் நடத்துகின்ற நாடகங்களை இந்த ஆண் மூட்டைப் பூச்சி காட்டித் தருகின்றது.
பாலியல் முதிர்ச்சியடைந்த நத்தைகளின் தலைப்பகுதியில் னுயசவ ளுயஉ என்னுமொரு பை இருக்கிறது. அதறற்குள் ஒரு கூர்மையான கம்பி போன்று இருக்கின்றன. இது லவ் டொட்ஸ் எனப்படுகின்றது. இந்த லவ் டொட்ஸை மற்றைய நத்தையின் தலையிலே செலுத்தும். அப்பொழுது அதற்குள் இருக்கும் ஹார்மோன்; நத்தைக்குள் செல்லும் அதற்குள் இருக்கும் விந்தணுக்கள் மற்றைய நத்தைக்குள் பரவுகின்றன. காதலைப் பரிமாறும் இந்த வித்தை நத்தைகளுக்கே உரியன. இவ்வாறு உலகத்திற் பிறந்த அனைத்து உயிர்களிடத்திலும் காதல் மேம்பட்டிருப்பதையும் அதன் மூலம் உயிர்களின் விருத்தியையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றன.
இவ்வாறு காதலுக்காகத் தம்மைத் தியகம் செய்வதும், விட்டுக் கொடுப்பதும் காலம் காலமாக அனைத்து உயிர்களிடத்திலும் காணப்படுகின்ற பண்பு. தலைவனிடம் காதல் கொண்ட தலைவி அவன் தன்னை மணப்பானோ என்று அறிய தரையிலே மண் பரப்பி தன்னுடைய கண்களை மூடி விரலினால் வட்டம் வரைவாள். தொடங்கிய இடத்தில் விரல் போய் நிற்க வேண்டும். அப்போது தலைவி நினைத்தது நடக்கும் இதனைக் கூடல் இழைத்தல் என்று கூறுவார்கள். இதில் ஏதாவது தவறு வந்து விடுமோ என்று கூடல் இழைத்துப் பார்க்க அஞ்சுகின்ற பெண்களும் உண்டு. இதேபோல் காதலியை அடைவதற்காக வட்டக்கல்லைத் தூக்குவதும், ஏறு தழுவுதலும். வரைபாய்தலும், மடல்மா ஏறதலும் போன்ற சம்பவங்களை இலக்கியக் காதல் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது. தமது காதலில் வெற்றி கிடைப்பதற்காக தமது கொள்கையை விட்டுவிடாது கடைப்பிடித்து காதலர்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.
ஆனால், இன்று நட்பும், காதலும், கணவன் மனைவி உறவும், பெற்றோர் பிள்ளைகள் உறவும் என்று அனைத்தும் கேள்விக்குறியாக காணப்படுகின்றன. உண்மைக் காதல் நினைத்து ஏங்குவதில் தொடர்கிறது. திருமணமான காதல் பிரிவை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது. இருப்பினும் காதலுக்கு முடிவில்லை. காலம் உள்ளவரை தொடரும்.
மாசி மாத வெற்றிமணி பத்திரிகையில் வெளிவந்தது
கட்டுரை அருமை...
பதிலளிநீக்கு