• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    ஞாயிறு, 30 நவம்பர், 2014

    கண்ணீர் அஞ்சலி

                         
            மண்ணில்                                 விண்ணில்                                                   15.12.1940                                          17.11.2014                                 
                           திரு. தங்கத்துரை கணேசலிங்கம் 

      இருபது வருட என் ஜேர்மனிய வாழ்விலும் முப்பது வருட என் கணவன் வாழ்விலும் பதினெட்டு வருட என் மகளின் வாழ்விலும் மனநிறைவாய் மகிழ்ந்தே நிறைந்திருந்து எமது சுகத்திலும் துக்கத்திலும் துணை நின்று தோளோடு தோள் சேர்த்து அன்பாயும் ஆதரவாயும் வாழ்ந்த திரு. கணேசலிங்கம் என்னும் ஓருயிர் உலக வாழ்க்கையை மனதாலோ மனமின்றியோ துறந்து இன்று சாம்பலாய் புட்டிக்குள்ளே புகுந்துவிட்டது. இவ்வுலக வாழ்க்கையை என்றுமே இலகுவாய் எடுப்பதுடன் தன்னைச் சுற்றியுள்ளோரை சிரிக்க வைத்துத் தானும் சிரித்து, தனக்குள் கவலை இருந்தாலும் தன்னைச் சுற்றியுள்ளோருக்கு சிறிதளவும் காட்டாது சுதந்திரமாய் வாழ்ந்த அந்த உள்ளம் இன்று பலரை கலங்க வைத்து கண்ணினுள் மட்டும் இடம்பிடித்து தோற்றம் இழந்து விட்டது.



    உறவெல்லாம் கூடி ஓர் ஊராய்க் குழுமி நின்று
    கதறி அழுதழுதும் எம் துயரம் தீராது தீராது
    ஆறுதலும் அரவணைப்பும் யார் தருவார் உமைப்போல்
    கூடிக்கும்மாளமிட்டோம் குடும்பங்களாய் குதூகலித்தோம் - இன்று
    மீளாத்துயில் கொண்ட செய்தி கேட்டு
    நெஞ்சமெல்லாம் வெந்து துடிக்கின்றோம்
    இல்லையென்ற வார்த்தை உங்கள் இதயத்தில் இல்லை
    உதவி என்னும் சொல் உங்கள் உதிரத்தின் சொத்து
    உறக்கமது போதும் எழுந்துதான் வாருங்கள் - எங்கள்
    கலக்கமது தீர்க்க கண்களைத்தான் திறந்திடுங்கள்
    கம்பீரத் தோற்றமது கட்டிலிலே கிடக்குதையோ
    ஓயாது பேசும் வாய் பேச்சிழந்து போனதையோ
    கணேசலிங்கண்ணன்!! எமை விட்டுத்தான் போனீரோ!
    உள்ளே நோய் வளர்த்து உறவுகளைச் சிரிக்க வைத்து
    காலனுக்கு விருந்து வைக்க விரைந்துதான் போனீரோ!
    காலனுந்தான் கயவனோ எம் கலகலப்பை
    கவர்ந்து சென்று விட்டான் ஐயகோ!
    எங்கள் உறவுப் பாலத்தை அறுத்துவிட்டான்
    உயிர்மூச்சைப் பறித்துவிட்டான் ஐயகோ!
    உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து
    கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகின்றோம்

    ஆறாத்துயரில் தவிக்கும் குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

                  
                          இப்பதிவு மூலம் நான் அறிந்தவை கேட்டவற்றை அலசிப் பார்க்க விரும்புகின்றேன். செலவு என்று கூறி அவர் விரும்பிய உணவெல்லாம் அவர் போல் உருச் செய்த பொம்மை முன்  படைத்து உருத்தாளர் மாத்திரமே படைப்புக்களை உண்டு. அவர் உண்டார் என்று மனத்தால் நினைத்து நீருள் எறிந்து விடுகின்றனர். நிகழ்வில் கலந்து கொண்டோர் அவ்வீட்டில் உணவுண்டு கழித்து, விடை பெற்றனர். ஆனால் அவ்வீட்டுணவு தம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல துடக்கென்று ஒதிக்கினர். துடக்குணவு உண்பது தவறில்லை எடுத்துச் செல்வது மட்டுமே துடக்கென்றால் கூடவே கேட்டுக் கொண்டிருக்கும் என் மூளை சும்மா இருக்குமா? எழுதிக் கொண்டே இருக்கும் என் விரல்கள் பொறுத்திருக்குமா? தன்னோடு வாழும் வரை உறவு, இறந்துவிட்டால் பேய். கேட்பதற்கே நாக் கூசுகின்றது 

                உயிரே போயிற்றாம், உடலுள் இயந்திரங்கள் எல்லாம் எரிந்திட்டாம், வாயில்லை கையில்லை ருசியறிய நாவில்லை வெறும் காற்றாகிப் போன உயிருக்கு, உணவுண்டு வாழும் பாக்கியமும் தேவையும் இனியில்லை. இவ்வாறிருக்க உணவு படைத்தலின் காரணம் தான் என்ன? என்னால் புரிந்து கொள்ளும் ஓருணர்வு உணவை ஆக்கினோம், அவர் வாழ்ந்த காலங்களில் அவருக்காய் உவந்தளித்தோம். இன்றோ இனி மேலோ எம்மால் அவருக்காய் உணவு சமைத்து வழங்க முடியாது என்னும் அந்த ஆற்றாமையை நீக்க ஓர் நாள் அவர் விரும்பிய உணவுகளைப் படிக்கின்றோம். இது ஒரு குழந்தைத்தனமே என்பதில் தவறில்லை ஆனாலும் மனத் திருப்திக்காகப் படிக்கின்றோம். பலரை அழைத்து உணவை வழங்குகின்றோம் என்றால் அதுகூட அவர் வாழ்ந்த போது பலரை அழைத்து உணவு வழங்கினார். அந்த நினைவை இன்றைய நாளில் செய்கின்றோம் என்று மனம் சாந்தி கொள்கின்றோம்.

                         அதனை விடுத்து அவர் வந்து உணவு அருந்துவார். அவரவர் வீட்டிற்கு வயிற்றில் கொண்டு போம் உணவும் கையில் கொண்டு சென்றால் பறித்துண்ண கூடவே வந்து  வீட்டில் குடியிருந்து கொள்வார் என்பதெல்லாம் மூடத்தனமாகப் படுகின்றது.

                         உயிரின் தோற்றம் இறப்பில் முடிந்துவிடுகின்றது. மிருகங்கள் பறவைகள் போன்றே மனித உயிரும் இறப்புடன் முடிந்துவிடுகின்றது. அது ஆவியாக வருகின்றது என்பதெல்லாம் சுத்தப்பொய்யான பேச்சு. படைக்கப்பட்ட பொருட்கள் போலவே உடலும் வடிவமைக்கப்பட்டு நோய்கண்டோ, விபத்து ஏற்பட்டோ அழிந்துவிடுகின்றது. அழிவின் பின் வாழ்வென்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இறந்தவர்களுடன் பேசுதல் என்பதெல்லாம் ஏற்ருக்க்கொல்லக் கூடியதா! பேச்சு என்பது மூளை, நாக்கு, காற்று அனைத்தும் சம்பந்தப்பட்டது. இது எதுவுமே இல்லாத ஆவி எப்படிப் பேசும்?

    ஆரம்பத்தில் ஒரு செல்லேயான உயிர் பற்பலவாய் விரிவடைந்து உலகெங்கும் உயிர் மயமாய் ஆனது. மனிதனாய் உருவான பின்தான் இந்த மூட நம்பிக்கைகளும் தொடங்கியது. தன் சிறப்பே அறியாத மனிதன் தனக்கு மீறிய சக்தி பற்றிச் சிந்திக்கத் தொடங்கி விட்டதுவே. ஆவிகளின் நடமாட்டமாகிப் போய்விட்டது.

                        பிறந்தவர் இறப்பது உலக இயற்கை. இதனையே  

    “காயமே பொய்யடா, வெறும் காற்றடைத்த வெறும் பையடா”
    “ஊரெல்லாம் கூடி அழுதிட்டுப்
    பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு
    சூரை யங் காட்டிடைக் கொண்டு எரித்திட்டு
    நீரினுள் மூழ்கி நினைப் பொழிந்தனர”

    விட்டுவிடப் போகிறது உயிர்
    உடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்”

    என்னும் சித்தர் பாடல்கள் சிந்தைக்குள்ளே வந்து வந்து உணர்த்துகின்றன. மன்னாதி மன்னனும் இறுதியில் பிடி சாம்பலாவார். உலகில் எதுவுமே நிலை இல்லை. இது தெரிந்திருந்தும் மனிதன் நிலையான வாழ்வென்று ஆசையில் வீழ்ந்து அழுந்துகின்றான். உயிர் உள்ளவரையே அனைத்தும் உயிர் போன பின் வெறும் சூன்யம். எதுவுமே இல்லை. எனவே வாழும் வாழ்க்கையை இரசிக்கத் தொடங்குவோம் 


    ஞாயிறு, 16 நவம்பர், 2014

    திருக்குறள்

                       



    "ஓதற் கெளிதா யுணர்த்தற் கரிதாகி
     வேதப் பொருளாய் மிகவிளங்கித் – தீதற்றோர்
     உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள முருக்குமே
     வள்ளுவர் வாய்மொழி மாண்பு''

    என மாங்குடி மருதனார் திருக்குறளின் புகழை  மனதார வாழ்த்தியுள்ளார். எக்காலம் வாழ்ந்தாலும் மனிதன் அக்காலத்திலும் தவறுகள் செய்துகொண்டே இருப்பான் என்பதற்கு, நாம் வள்ளுவரைக் கற்கும் போதும், நாம் வாழுகின்ற அநுபவங்களை உற்று நோக்கும்போது உணரக்கூடியதாக இருக்கின்றது. திருக்குறளைப் புரிந்து கொண்டு எம்மிடமுள்ள   அழுக்குகளை அகற்ற, கற்பதற்கு இலகுவாகவும் கருத்தில் கொள்வதற்கு எளிமையாகவும் இருக்கும் திருக்குறளை கற்கவேண்டிய அவசியம் எமக்கு இருக்கின்றது. 
                     
    ஆரம்பத்தில் எழுத்தாணியால் ஏட்டிலே எழுதப்பட்ட திருக்குறளின் தாய் நான்தான் என்று வள்ளுவர் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. எனது மொழி தமிழ்மொழிதான் என்று எந்த இடத்திலும் வரிகளால் வடிக்கவில்லை. திருக்குறள் என்று பெயர் கூட வைக்கவில்லை. முப்பால் என்றே ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. பின் குறள் வெண்பாவால் எழுதப்பட்டதனால் குறள் எனப்பட்டு, அதன் சிறப்பு நோக்கி திரு என அடைமொழி கொடுக்கப்பட்டு திருக்குறள் எனப்பட்டது. வள்ளுவர் தன் நூலில் எந்த இடத்திலும் தமிழ் என்றோ கடவுள் என்றோ ஒரு இடத்திலும் எழுதவில்லை. ஒரு கடவுளின் பெயர் கூட அதில் எழுதி வைக்கவில்லை.

    திருக்குறள் பிறரைச் சென்றடைவதற்கு முதற்காரணமானவர் ஒளவையாரே. தமிழச்சங்கத்திலே திருக்குறள் அரங்கேற ஒளவையாரே சிபாரிசு பண்ணி அரங்கேறச் செய்தார். 


    "தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும்
     கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்"

            என்று அவரே திருக்குறளின் பெருமையைப் பாராட்டியுள்ளார். 

              அதன்பின்தான் புலவர்கள் போற்றினர். ஆனால், 1812 ஆம் ஆண்டுதான் முதன்முதல் திருக்குறள் அச்சிடப்பட்டது. அதுவே உலகெங்குமுள்ள மக்களைச் சென்றடைவதற்குக் காரணமானது. ஆனால் வள்ளுவரை நாம் இனம்காணக் காரணமானவர்கள் உரையாசிரியர்களே அவர்கள் இல்லையென்றால், திருக்குறளைத் துளிகூடப் புரிந்து கொள்ளமுடியாமல் போயிருக்கும். எனவே வள்ளுவருக்குக் கொடுக்கும் அதே அந்தஸ்தை உரையாசிரியர்களுக்கும் நாம் கொடுக்கவேண்டியது அவசியமாகின்றது. அதுவே காலமாற்றத்திற்கேற்ப புரிந்து கொள்ளும்படியாக அமைவதே சிறப்பாகின்றது. 

                     திருக்குறளை எழுத்தெண்ணிப் படிக்கும்போது அதன் பொருள் மனதுள் அடங்கி மனதைத் திருத்தும் பணியைச் செய்கின்றது. எழுத்தெண்ணிப் படித்தல் என்னும் போது திருக்குறள் 1330 குறள்களால் எழுதப்பட்டது. மொத்த சொற்கள் 14,000. மொத்த எழுத்துக்கள் 42,194. அதிகாரங்கள் 133. அறத்துப்பாலிலுள்ள குறள்பாக்கள் 380. பொருள்பாலிலுள்ள குறள்பாக்கள் 700. காமத்துப்பாலில் 250. னி என்ற எழுத்துத்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 1705 தடவைகள். ஒள என்ற எழுத்து வரவில்லை. தமிழ் எழுத்துக்கள் 247 இல்,37 எழுத்துக்கள் இடம்பெறவில்லை. அனிச்சம், குவளை என்னும் மலர்களும் நெருஞ்சிப்பழம் என்னும் ஒரு பழமும் குன்றிமணி என்னும் ஒரு விதையும், பனை, மூங்கில் என்று இரு மரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் கோடி என்னும் சொல் ஏழு இடங்களிம், ஏழு என்னும் சொல் எட்டுக் குறள்களிலும் இடம்பெற்றுள்ளது( தகவல்- இணையம்)  என்று எழுத்தை எண்ணிப் படிப்பதில்லை. அதில் வந்திருக்கின்ற எழுத்துக்களை எண்ணிப் பார்த்தல் அதாவது நினைத்துப் பார்த்துப் படிக்க வேண்டும். 

                
               உதாரணமாக "அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு'' எழுத்துக்களெல்லாம் அகரம் முதலாக உள்ளது. அதுபோல் உயிர்களுக்கெல்லாம் இறைவன் முதலாக இருக்கின்றார். என்னும் போது இங்கு யாராவது எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதல் என்பதை எண்ணிப்பார்த்து அதாவது நினைத்துப் பார்த்து எழுத்துக்களுக்கெல்லாம் முதலாவது அகரம் என்று எப்படிச் சொல்லமுடியும் என்று எண்ணிப் பார்க்கும்போது தமிழ் எழுத்துக்களுக்கு   முதலாக அகரம் இருப்பது போல் என்று விளங்கிக் கொள்ளமுடியும் வள்ளுவரும் வெற்றிகொள்வார்.

                      திருக்குறள் ஒரு வாழ்வியல் கூறும் இலக்கியம். வாழ்வியலை உணர்வு ரீதியாகப் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் திருக்குறளைப் படிப்பதில் பயனே இல்லை. 
            
                வள்ளுவரின் இந்த தற்புகழ்ச்சி இல்லாத பண்பே அவரின் நூலை   உலகப் பொதுமறையாக கொண்டுவந்திருக்கிறது. கடவுள் மனிதனுக்கு சொன்னது கீதை மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் என்னும் அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றது. 26 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வள்ளுவர் தனது நூலென்று எழுதாததற்கு அவரது தற்புகழ்ச்சி அற்ற பண்பே காரணமாகின்றது. அவரே ஓரிடத்தில் சொல்கின்றார். தற்புகழ்ச்சி தற்கொலைக்குச் சமம் என்று. அர்ச்சுனன் போர்க்களத்தில் வில் கூட்டத் தயங்கிக் கொண்டிருந்த போது இவ்வாறு என் உறவுகளைக் கொல்வதை விட நான் தற்கொலை செய்துவிடுவேன் என்று கூறினானாம். அப்போது  கிருஸ்ண பரமாத்மா அர்ச்சுனா! உன்னை நீ புகழ் என்றாராம். அப்போது அர்ச்சுனர் என்னை நான் புகழ்தல் ஒரு பண்பல்ல என்றாராம். அப்போது பறவாயில்லை உன் வில்லைப்பற்றி புகழ் உன் வீரத்தைப் பற்றிப் புகழ் என்றாராம். அவனும் புகழ்ந்தானாம். அப்போது கிருஸணர் சரி நீ தற்கொலை செய்துவிட்டாய் இப்போது போருக்குத் தயாராகு என்றாராம். (தகவல்- இணையம்) எனவே தற்புகழ்ச்சி தற்கொலைக்குச் சமம். ஆனால், இப்போது என்ன நடக்கிறது. தாமே தம்மைப்பற்றி புகழ்வது மட்டுமல்ல, தாம் பொய்யாகத் தம்மைப் புகழ்கின்றார்கள் என்று பிறர் அறிவது கூடத் தெரியாது புகழ்வார்கள். எனவே நாம் வாழுகின்ற வாழ்க்கையில் எதனை எடுத்துப் பார்த்தாலும் திருக்குறள் அதில் எமக்குப் பாடம் கற்பிக்கும். 

    மற்றவர்களுக்கு நன்மை செய்வது பற்றி கூறியிருக்கின்றார். 

    "நல்லாற்றல் உள்ளும் தவறுஉண்டு  அவரவர் 
    பண்புஅறிந்து ஆற்றாக் கடை''

    நாம் யாருக்கு நன்மை செய்கின்றோம் என்று தெரிந்து கொண்டு பணியாற்று என்கின்றார்.  அதாவது
      
                      "உதவி உதவி வரைத்தன்று உதவி
                       செயப்பட்டார் சால்பின் வரைத்து ''


              மூன்றடியால் உலகளந்தார் வாமன அவதாரத்தில் விஷ்ணு, (மாபலிச்சக்கரவர்த்தி கதை) இந்த இரண்டடியால் உலகளந்தார் வள்ளுவர். அதனால்தான்  பண்பற்ற ஒருவனுக்கு இரண்டு கொடுக்க வெண்டும் என்கிறேன். அந்த இரண்டுதான் இந்தத் திருக்குறள். எங்கள் முப்பாட்டனை வளருகின்ற எங்கள் சமுதாயம் மறக்காமல் இருக்க, முதுமொழியாம் எங்கள் தமிழ் மொழி என்பதற்கு ஆதாரமாய் விளங்கும் திருக்குறளை போற்றி வாழ்வோம். அள்ள அள்ளக்குறையாத அட்சய பாத்திரமாம் இந்நூலை ஆழ்ந்து ஆழ்ந்து ஆராய்ந்து ஆராய்ந்து அநுபவிப்போம்.  

    ஞாயிறு, 26 அக்டோபர், 2014

    நமக்கு நாமே எதிரி



    மூளைக்குள்ளே ஓர் உலகம் 
    உடலுக்குள்ளே ஓர் ஆலை
    தோல் போர்த்திய தேகத்துள்ளே
    தொடர்ந்து ஓடும் குருதியோட்டம் 
    உருவம் முழுதும் செல்கள் தொகுப்பு
    உணர்ந்து பார்த்தால் உருவம் போலி
    அழகாய்த் தோன்றும் உருவம் பொய்
    அற்புத உடலின் உயிரோட்டம் மெய்
    உடலே உயிரை நிதமும் காக்கும் - இதைப்
    புரியா துடலை மனிதன் 
    உருக்குலைத்து சீரழிப்பான் உண்மை


    கருவினுள் உருவாகும் குழந்தை தேடும் உணவை கருத்துடன் தாயும் பகிர்ந்தளிப்பாள். எம்மைக் காக்கவே உடலும் தன்னைத் தயார்படுத்தும். உறுப்புக்களும் தேவைக்கேற்றாற் போல் உருவாக்கப்பட்டிருக்கும். செல்களினாலான உறுப்புக்களும் வௌ;வேறு விதமாகப் படைக்கப்பட்டிருக்கும். 

                 சுருங்கிவிரியும் பகுதி மென்மையான செல்களாலும் இதயம் போன்ற பகுதிகள் கடுமையான செல்களாலும் ஆக்கப்பட்டிருக்கின்றன. உடல் முழுவதும் தன் ஆட்சியை மேற்கொள்ளும் செல்கள். கண்ணுக்குத் தெரியாது எம்மில் முழுவதுமாகக் காணப்படுகின்றது.

     

    உடலில் ஓர் இடத்தில் காயம் ஏற்பட்டால், இரத்தமாய்க் கொட்டிக் கொண்டேயிருக்கும் காயம் நாட்செல்ல குருதிச் சிறுதட்டுக்களால் சுகமாகி மீண்டும் அப்பகுதி வழமை நிலைக்குத் திரும்புகின்றதே. அடிபட்ட இடத்தில் இறந்த செல்களுக்குப் பதிலாக வேறு செல்கள் பிரிவடைந்து உடனடியாக காயம் முழுவதையும் மூடிக்கொள்ளும். மூடிக் கொண்டதும் உடல், செல்களுக்கு பிரியும் வேலையை நிறுத்தும்படி உத்தரவிட செல்கள் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வேலையை நிறுத்தும் காயமும் மாறிவிடும். ஆட்டி வைப்பவனும் ஆடுபவனும் உடலுள் இருக்க  நாமோ வெளியே மருத்துவம் தேடி ஆடிக் கொண்டிருக்கின்றோம். 75 முதல் 100 டிரில்லியன் செல்கள் எமது உடலுள் ஆட்சி செய்கின்றன.    எமது செல்களில் கிட்டத்தட்ட 3000 விதமான புரோட்டீன்கள் உண்டு. இவை இரத்தத்தில் கலக்கக் கூடாது. அப்படிக் கலந்தால், இரத்தத்திலுள்ள புரோட்டீன்கள் சமீபாடடையாது. இந்நிலையில் செல்கள் தமக்குள் இருக்கும் புரொட்டின் உடலினுள் சேரவிடாது தற்கொலை செய்து கொள்ளும். 

    ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா. ஆனால் இதுவே உண்மை. 



    மூக்கினுள் நுழைய எத்தனிக்கும் கிருமிகளை மணிக்கு 100 மைல் வேகத்துடன் உடல் வெளியகற்றும். இதன் மூலம் 100,000 கிருமிகள் உடலிலிருந்து வெளியேறும். ஆனால் நாமோ வெட்கப்பட்டு மூக்கை மூடுகின்றோம். ஆனால் தும்மலைத் தடுத்தால் உயிர் போகும் ஆபத்தும் உண்டு. அதனாலேயே ஒருவர் தும்மினால், 100 என்று தமிழரும் Gesundheit   என்று ஜேர்மனியரும் God bless you என்று ஆங்கிலேயரும் சொல்கின்றார்கள். 

    பழுதடைந்த உணவுகளை நாம் உட்கொண்டுவிட்டால் உடலானது வாந்தியாக வெளியகற்றிவிடும்.
    தேவையான உணவுகளை நாம் உட்கொண்டால் அதை சத்தாக மாற்றி தேவையான உடலுறுப்புக்களுக்கு அனுப்பும். இக்கரிசனை எம்முடலுக்கிருக்க நாமோ எதிலும் அக்கறையின்றி  சாக்கடையினுள் அழுக்கைப் போடுவதுபோல் கண்டதையும் உண்டு உடலைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றோம்.

                         பேரிடிபோல் சத்தம் வரவே எம் கைகள் எமையறியாது காதுகளை ஏன் இறுகப் பொத்துகின்றன.








    காதுவழி செல்லும் ஒலி செவிப்பறையைத்தாக்குவதுடன் அதனூடு சென்று உடலுக்கும் ஊறு விளைவிக்கின்றது. அத்துடன் இதயநரம்புகள் சார்ந்த இதயப்பாதிப்பும் ஏற்படுகின்றது. ஓரே ஒரு தடவை எட்டுமணி நேரத்துக்கு மிகையான சத்தம் கூடிய கூடிய சூழ்நிலையில் இருந்தால், இரத்தஅழுத்தமானது அழுத்தத்தில் ஐந்து முதல் பத்து புள்ளிகள் கணிசமான ஏற்றத்துடன் அயர்வு ஏற்படும். அத்துடன் நரம்புகள் இறுகவதால் இரத்த அழுத்தமும் கூடுகின்றது. இதனால், இதயக்கோளாறுகள் ஏறபடுகின்றன.  ஆனால், சிந்திக்கின்றோமா? களியாட்டங்கள், வைபவங்கள், கொண்டாட்டங்கள் அனைத்திலும் காதுகிழிய ஒலிபெருக்கிகளை ஒலிக்கவிட்டு இதுவே மகிழ்ச்சி என்று ஆரவாரம் செய்கின்றோம். 



                     எம்மைச் சுற்றி, எம்மை நோக்கி வரத் துடிக்கும் நோய்க்கிருமிகள் உடலினுள் புகுந்துவிட்டால் உடலிள்ளே வாள், கத்தி ஏந்தி போருக்கு நிற்கும் இரத்தஅணுக்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். எம்மைக் காக்க எமக்குள்ளே ஓர் நண்பன் இரத்த அணுக்களினுள் வெண்குருதி சிறுதுணிக்கையே இத்தொழிலை எமக்கடிமையாய்ச் செய்கின்றது. முதலில் உள்வராமல் தடுக்கும். வந்துவிட்டால் உடலைத் தாக்காமல் பாதுகாக்கும். அது ஏந்தும் வாள், கத்தி யாதென்று தெரியுமா? முதலில் "பகோசைட்". இவை பக்டீரியா முதலில் இரத்தத்தால் பக்குவமாக்கும். பின் அழிக்கும். இரத்தத்தால் பக்குவமாக்கும் பொருள் யாதென்று தெரியுமா? அதுவே ஆப்ஸனின்.  பார்த்துப் பார்த்து பணி செய்ய பக்குவமாய் உடல் எமக்குள் தொழிலாளியாய் இருக்க நாமோ சூழலைக் கெடுக்கின்றோம். ஆலைகள் அமைக்கின்றோம். இயந்திர மயத்தில் இ.றப்பதற்கு வழி தேடுகின்றோம். 
                   
                 எங்கிருந்தோ ஆபத்து வரும்போது முதலில் நம் தலையைத் தானே இரு கரங்களினாலும் பொத்திப் பிடிக்கின்றோம். எம்மை அறியாமலே அதன் அவசியத்தை நாம் உணர்கின்றோமா இல்லையா? 

    மூளையே நமது தலைமையகம். அதன் ஆட்சியில்தான் அனைத்தும் அடக்கம். மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இரத்தஓட்டம் தேவையான அளவு ஒட்சிசனை மூளைக்குக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் மூளையும் தொழிற்படமுடியும். நாமென்ன செய்கின்றோம். இரத்தோட்டம் அதிகரிக்கச் செய்யும் உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்கின்றோமா? கணனி முன் இருந்து காலத்தைக் கழிக்கின்றோம். 
               
                             மூளையின் அவசியம் கருதி ஒரு பாதுகாப்புக் கவசத்தினுள்ளேயே அது அமைக்கப்பட்டிருக்கும். இக்கவசத்திற்கும்  மூளைக்குமிடையே ஒரு நீர்த் தன்மை (Cerebrospinal Fluid) பரவி இருக்கும். இது ஓடுகின்ற போதும் நடக்கின்ற போதும் அதிர்வு ஏற்படாமல் பாதுகாக்கும். மூளை தொழிற்படும் போது ஏற்படுகின்ற இரசாயணக்கழிவுகளை இந்த Cerebrospinal Fluid ஏ உறக்கத்தின்போது மூளைச் செல்களினூடாக ஊடுருவிப்போய் வெளியகற்றுகின்றது. பிற உறுப்புக்களுக்காகத் தொழிற்படும் மூளை தனக்காக ஓய்வெடுத்து தன்னிலுள்ள நச்சுத் தன்மையை வெளியகற்றும் நேரம் உறக்கமல்லவா? ஆனால், நாம் என்ன செய்கின்றோம்.  இரவிரவாகக் கண்விழித்து தூக்கத்தைக் கெடுத்து chat  பண்ணுகின்றோம். Party கொண்டாட்டங்கள் தொலைக்காட்சி என்று உறங்கும் நேரத்தைத் தொலைக்கின்றோம். 

                                 ஏதும் பறந்தாலோ, கையை யாரும் முன்னே அசைத்தாலோ, மனதைக் கெடுக்கும் காட்சி ஏதும் கண்டாலோ முதலில் மூடுவது எம் கண் இமைகளே. கண்ணையும் கருத்தையும் பாதுகாக்க கண்இமை கைகொடுக்க கண்ணீர் துணையாக, நாமென்னவோ பார்க்கக் கூடாதவற்றைப் பார்த்து கணனி ஒலியின் பாதிப்பை உணர்ந்தும் அதற்கேற்ப சொல்லப்பட்ட தூரத்தில் கணனியை வைத்து வாசிக்காது, கண் இமைத்து வாசிக்காது, கண்களை காயவைத்து கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றோம். 

                 செய்வதெல்லாம் செய்து விட்டு நேர்த்திக்கடனென்றும் நேர்மையற்ற மருத்துவரென்று, போதாத காலமென்றும், பொல்லாத உலகென்றும் அடுத்தவரைக் குறைகூறி அழிவது நாமே. 
                    
                      இப்போது சொல்லுங்கள் எமக்கு யார் எதிரி?

    நன்றி 









    சனி, 11 அக்டோபர், 2014

    எழுந்திடு பெண்ணே! எழுந்திடு!

        

                                                       எழுந்திடு பெண்ணே! எழுந்திடு!
           உன் இமைக் கதவுகளை இழுத்து மூடாதே
           உன் இதயமது இருண்டுவிடும்
           உன் பஞ்சுமெத்தையிலே முட்கள் பரந்து கிடக்கட்டும்
           உன் இருக்கையிலே இரும்பு ஆணிகள் நிமிர்ந்து நிற்கட்டும்
           தூங்கிவிடாதே தூரிகை கொண்டு உன் வாழ்வோவியம் தீட்டு
           பாதையிலே ரோஜாக்கள் மட்டும் விரிந்து கிடப்பதில்லை
           கல்லும் மண்ணும் விதந்து கிடக்கும் பூமியிலே
           வீர நடை போட்டு நிமிர்ந்து செல்
           உன் இரத்தச்சுவடுகள் இரத்த சரித்திரம் பேசட்டும்
           பூமியைச் சுருட்டி எடுத்து உருட்டி விளையாடு
           நச்சுப்பாம்புகள் அதில் நசுக்கப்படட்டும்
           மறைந்த உண்மைகள் விஸ்வரூபம் எடுக்கட்டும்
           பெண்ணே! உன் மனிடப்பிறப்பு மாய்ந்துவிடுவதற்காகவல்ல
           காலத்தை வென்று காவியம் படைக்க


    ஆணும் ஆணும் குழந்தை பெற விஞ்ஞானம் சாத்தியமாக்குமா?

      ஆண் பெண் என்னும் இரு பால் பிரிவினர் உயிரினங்களிடையே காணப்படுகின்றன . இவை பால் கவர்ச்சியின் மூலமும் இயற்கை அமைப்பின் மூலமும் ஒன்றோடு ஒன...