இருபது வருட என் ஜேர்மனிய வாழ்விலும் முப்பது வருட என் கணவன் வாழ்விலும் பதினெட்டு வருட என் மகளின் வாழ்விலும் மனநிறைவாய் மகிழ்ந்தே நிறைந்திருந்து எமது சுகத்திலும் துக்கத்திலும் துணை நின்று தோளோடு தோள் சேர்த்து அன்பாயும் ஆதரவாயும் வாழ்ந்த திரு. கணேசலிங்கம் என்னும் ஓருயிர் உலக வாழ்க்கையை மனதாலோ மனமின்றியோ துறந்து இன்று சாம்பலாய் புட்டிக்குள்ளே புகுந்துவிட்டது. இவ்வுலக வாழ்க்கையை என்றுமே இலகுவாய் எடுப்பதுடன் தன்னைச் சுற்றியுள்ளோரை சிரிக்க வைத்துத் தானும் சிரித்து, தனக்குள் கவலை இருந்தாலும் தன்னைச் சுற்றியுள்ளோருக்கு சிறிதளவும் காட்டாது சுதந்திரமாய் வாழ்ந்த அந்த உள்ளம் இன்று பலரை கலங்க வைத்து கண்ணினுள் மட்டும் இடம்பிடித்து தோற்றம் இழந்து விட்டது.
உறவெல்லாம் கூடி ஓர் ஊராய்க்
குழுமி நின்று
கதறி அழுதழுதும் எம் துயரம்
தீராது தீராது
ஆறுதலும் அரவணைப்பும்
யார் தருவார் உமைப்போல்
கூடிக்கும்மாளமிட்டோம்
குடும்பங்களாய் குதூகலித்தோம் - இன்று
மீளாத்துயில் கொண்ட செய்தி
கேட்டு
நெஞ்சமெல்லாம் வெந்து
துடிக்கின்றோம்
இல்லையென்ற வார்த்தை உங்கள்
இதயத்தில் இல்லை
உதவி என்னும் சொல் உங்கள்
உதிரத்தின் சொத்து
உறக்கமது போதும் எழுந்துதான்
வாருங்கள் - எங்கள்
கலக்கமது தீர்க்க கண்களைத்தான்
திறந்திடுங்கள்
கம்பீரத் தோற்றமது கட்டிலிலே
கிடக்குதையோ
ஓயாது பேசும் வாய் பேச்சிழந்து
போனதையோ
கணேசலிங்கண்ணன்!! எமை
விட்டுத்தான் போனீரோ!
உள்ளே நோய் வளர்த்து உறவுகளைச்
சிரிக்க வைத்து
காலனுக்கு விருந்து வைக்க
விரைந்துதான் போனீரோ!
காலனுந்தான் கயவனோ எம்
கலகலப்பை
கவர்ந்து சென்று விட்டான்
ஐயகோ!
எங்கள் உறவுப் பாலத்தை
அறுத்துவிட்டான்
உயிர்மூச்சைப் பறித்துவிட்டான்
ஐயகோ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்தனை செய்து
கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகின்றோம்
ஆறாத்துயரில் தவிக்கும் குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும்
ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்பதிவு மூலம் நான் அறிந்தவை கேட்டவற்றை அலசிப்
பார்க்க விரும்புகின்றேன். செலவு என்று கூறி அவர் விரும்பிய உணவெல்லாம் அவர் போல்
உருச் செய்த பொம்மை முன் படைத்து
உருத்தாளர் மாத்திரமே படைப்புக்களை உண்டு. அவர் உண்டார் என்று மனத்தால் நினைத்து
நீருள் எறிந்து விடுகின்றனர். நிகழ்வில் கலந்து கொண்டோர் அவ்வீட்டில் உணவுண்டு
கழித்து, விடை பெற்றனர். ஆனால் அவ்வீட்டுணவு தம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல
துடக்கென்று ஒதிக்கினர். துடக்குணவு உண்பது தவறில்லை எடுத்துச் செல்வது மட்டுமே
துடக்கென்றால் கூடவே கேட்டுக் கொண்டிருக்கும் என் மூளை சும்மா இருக்குமா? எழுதிக்
கொண்டே இருக்கும் என் விரல்கள் பொறுத்திருக்குமா? தன்னோடு வாழும் வரை உறவு, இறந்துவிட்டால்
பேய். கேட்பதற்கே நாக் கூசுகின்றது
உயிரே போயிற்றாம், உடலுள்
இயந்திரங்கள் எல்லாம் எரிந்திட்டாம், வாயில்லை கையில்லை ருசியறிய நாவில்லை வெறும்
காற்றாகிப் போன உயிருக்கு, உணவுண்டு வாழும் பாக்கியமும் தேவையும் இனியில்லை. இவ்வாறிருக்க
உணவு படைத்தலின் காரணம் தான் என்ன? என்னால் புரிந்து கொள்ளும் ஓருணர்வு உணவை
ஆக்கினோம், அவர் வாழ்ந்த காலங்களில் அவருக்காய் உவந்தளித்தோம். இன்றோ இனி மேலோ
எம்மால் அவருக்காய் உணவு சமைத்து வழங்க முடியாது என்னும் அந்த ஆற்றாமையை நீக்க ஓர்
நாள் அவர் விரும்பிய உணவுகளைப் படிக்கின்றோம். இது ஒரு குழந்தைத்தனமே என்பதில்
தவறில்லை ஆனாலும் மனத் திருப்திக்காகப் படிக்கின்றோம். பலரை அழைத்து உணவை
வழங்குகின்றோம் என்றால் அதுகூட அவர் வாழ்ந்த போது பலரை அழைத்து உணவு வழங்கினார். அந்த
நினைவை இன்றைய நாளில் செய்கின்றோம் என்று மனம் சாந்தி கொள்கின்றோம்.
அதனை விடுத்து அவர் வந்து
உணவு அருந்துவார். அவரவர் வீட்டிற்கு வயிற்றில் கொண்டு போம் உணவும் கையில் கொண்டு
சென்றால் பறித்துண்ண கூடவே வந்து வீட்டில்
குடியிருந்து கொள்வார் என்பதெல்லாம் மூடத்தனமாகப் படுகின்றது.
உயிரின் தோற்றம் இறப்பில்
முடிந்துவிடுகின்றது. மிருகங்கள் பறவைகள் போன்றே மனித உயிரும் இறப்புடன்
முடிந்துவிடுகின்றது. அது ஆவியாக வருகின்றது என்பதெல்லாம் சுத்தப்பொய்யான பேச்சு. படைக்கப்பட்ட
பொருட்கள் போலவே உடலும் வடிவமைக்கப்பட்டு நோய்கண்டோ, விபத்து ஏற்பட்டோ
அழிந்துவிடுகின்றது. அழிவின் பின் வாழ்வென்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இறந்தவர்களுடன்
பேசுதல் என்பதெல்லாம் ஏற்ருக்க்கொல்லக் கூடியதா! பேச்சு என்பது மூளை, நாக்கு,
காற்று அனைத்தும் சம்பந்தப்பட்டது. இது எதுவுமே இல்லாத ஆவி எப்படிப் பேசும்?
ஆரம்பத்தில்
ஒரு செல்லேயான உயிர் பற்பலவாய் விரிவடைந்து உலகெங்கும் உயிர் மயமாய் ஆனது.
மனிதனாய் உருவான பின்தான் இந்த மூட நம்பிக்கைகளும் தொடங்கியது. தன் சிறப்பே அறியாத
மனிதன் தனக்கு மீறிய சக்தி பற்றிச் சிந்திக்கத் தொடங்கி விட்டதுவே. ஆவிகளின்
நடமாட்டமாகிப் போய்விட்டது.
பிறந்தவர் இறப்பது உலக இயற்கை.
இதனையே
“காயமே பொய்யடா,
வெறும் காற்றடைத்த வெறும் பையடா”
“ஊரெல்லாம்
கூடி அழுதிட்டுப்
பேரினை நீக்கிப்
பிணமென்று பேரிட்டு
சூரை யங்
காட்டிடைக் கொண்டு எரித்திட்டு
நீரினுள்
மூழ்கி நினைப் பொழிந்தனர”
விட்டுவிடப்
போகிறது உயிர்
உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்”
என்னும் சித்தர்
பாடல்கள் சிந்தைக்குள்ளே வந்து வந்து உணர்த்துகின்றன. மன்னாதி மன்னனும் இறுதியில் பிடி
சாம்பலாவார். உலகில் எதுவுமே நிலை இல்லை. இது தெரிந்திருந்தும் மனிதன் நிலையான
வாழ்வென்று ஆசையில் வீழ்ந்து அழுந்துகின்றான். உயிர் உள்ளவரையே அனைத்தும் உயிர் போன பின் வெறும் சூன்யம். எதுவுமே இல்லை. எனவே வாழும் வாழ்க்கையை இரசிக்கத் தொடங்குவோம்
அவராத்மா சாந்தியடையட்டும்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
மிக்க நன்றி
நீக்குதிரு தங்கத்துரை கணேசலிங்கம் அவர்களின் குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குநன்றி
பதிலளிநீக்குஎனது ஆழ்ந்த இரங்கல்கள்... சகோதரி தங்களை வலைச்சரத்தில் கோர்த்திருக்கிறேன் வருகை வந்து காண அழைக்கிறேன்
பதிலளிநீக்குஅன்புடன்
கில்லர்ஜி