• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 25 ஜனவரி, 2025

    வள்ளுவர் குறளும் தற்காலமும்


    முற்கால இலக்கியக் கருத்துக்களைத் தற்காலத்தில் ஏற்று நடத்தல் என்பது சாத்தியப்படும் விடயமல்ல. காலமும் நடைமுறைகளும் இவ்வாறு இருந்தன என்பதை வரலாற்றுப் பின்னணியை அறிந்து கற்றுக் கொள்ளலாம். ஆனால், அக்கருத்துக்களை வளருகின்ற சமுதாயத்துக்குத் திணிப்பது என்பது குற்றமுள்ள காரியமாகவே இருக்கிறது. அக்கருத்துக்களை ஆராய்ந்து அதற்கேற்ப காலத்தின் கணிப்பீட்டுடன் பொருத்திப் பார்த்து ஏற்று நடப்பதே சாலச்சிறந்தது.


    கால மாற்றத்துக்கும் தொழிட்ப வளர்ச்சிக்கும் ஏற்ப மாறுப்பட கலாசாரப் பின்னணியைத் தற்போது நாம் நோக்கக் கூடியதாக இருக்கின்றது. இது காலத்தின் கட்டாயம். எம்முடைய முன்னோர்கள் இப்படியே வாழ்ந்தார்கள் என்னும் போது அக்காலகட்டத்துச் சூழ்நிலை எவ்வாறு இருந்தது என்பதை அறிய மானடவியலும், வரலாற்றுக் கல்வியும் கற்றிருக்க வேண்டியது அவசியம். 'கண்டது கற்கப் பண்டிதனாவான்' என்னும் கருத்துக்கேற்ப ஆழக்கற்று அறிவை வளர்;த்துக் கொண்டால், எதிர்கால சந்ததியின் மனஅழுத்தத்தையும் எம்முடைய மனஅழுத்தத்தையும் குறைக்கக் கூடியதாக இருக்கும். 


    காலத்துக்குக் காலம் கலாசாரங்களும் பண்பாடுகளும் மாறுபட்டுக் கொண்டு வருகின்ற நிலைமையை நாம் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. காலநிலை, இயற்கை வளங்கள், போன்றவற்றுக்கு ஏற்ப அந்நிலப்பகுதியில் வாழுகின்ற மக்களின் பழக்கவழக்கங்களும், பண்பாட்டு அம்சங்களும் அமைந்திருக்கின்றன. தம்முடைய இருப்பிடங்களை விட்டுப் புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்கள்  தாங்கள் வாழுகின்ற நாடுகளுக்கேற்பத் தம்முடைய கலாசாரத்தை மாற்றி வாழுகின்றார்கள். சூழலும் சுற்றாடலும் மனிதனின் சிந்தனைத் திறனைத் தூண்டுவதுடன் சமூக ஒற்றுமையையும் கலாசாரக் கலப்பையும் ஏற்படுத்துகின்றது. இந்த நிலைமை புலம்பெயர்ந்த மக்களின் பண்பாட்டு விழுமியங்களை மாற்றியமைக்கின்றது. இம்மக்கள் தாம் பிறந்து வளர்ந்த மண்ணுக்குச் செல்லுகின்ற போது தம்முடைய மாற்றுக் கலாசாரத்தை அங்கும் விதைப்பதை அறியக்கூடிதாய இருக்கின்றது. அறிதல் என்பது அறிவோடு சம்பந்தப்பட்டதே. எனவே கலாசாரம் கால, சூழல், மண்வளம், இயற்கை போன்றவற்றைச் சார்ந்திருந்தால், தாய் மண்ணில் வாழுபவர்கள் புலம்பெயர்ந்த மக்களின் பண்பாட்டு அம்சங்களை ஏற்று நடப்பது என்பது முற்றிலும் தவறாக அமையும். உதாரணமாக குளிர் பிரதேசங்களில் வாழுகின்றவர்கள் இசை துள்ளல் இசையாகவும் மேடை நிகழ்ச்சிகளில் ஆடிப்பாடித் துள்ளித் துள்ளிப் பாடுவதையும் நாம் கண்டிருக்கின்றறோம். இது தம்முடைய உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றது. ஆனால், வெப்பம் மிகுந்த ஆசிய நாடுகளின் இசை கர்நாடக இசையாகவும் ஒரு இடத்தில் அமர்ந்திருந்து பாடும் இசையாகவும் இருக்கும். அவர்கள் குதித்துத் துள்ளி ஆடுகின்ற போது ஏற்கனவே வெப்பம் மிகுதியில் இருப்பவர்களுக்கு மேலும் உடல் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கின்றது. அதனால், இயற்கைக்கு மீறி குளிரூட்டியுடன் கூடிய மண்டபங்களில் இசை நிகழ்ச்சியைச் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இவை சமூகவலைத்தளங்கள் கற்பித்த கலாசாரங்களாகக் காணப்படுகின்றன. 


    கைகளை காற்சட்டைப் பைக்குள் வைத்து நடக்கின்ற பண்பு குளிர்நாடுகளில் இருந்து வெப்பக் காலநிலையுள்ள நாட்டு மக்கள் பொருத்தமற்ற முறையில் கற்றுக் கொண்டதாகக் காணப்படுகின்றது. குளிர்காலங்களில் விரல்கள் விறைத்து மஞ்சள் நிறத்திற்கு வந்துவிடுவது இயற்கை. அதனால், கைகளைக் காற்சட்டைப் பைக்குள் வைத்து நடக்கின்ற வழக்கம் இருக்கின்றது. இது எப்படி வெப்பமான நாடுகளுக்குப் பொருத்தமாக அமையும். காற்றோட்டமுள்ள புடைவையும், வேட்டியும் மறைந்து இறுக்கமான காற்சட்டை எப்படிப் புகுந்தது? 

    இவ்வாறே திருக்குறளின் பொருத்தமற்ற கருத்துக்கள் காலக்கணப்பீட்டில் ஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியத்துக்குள்ளாகின்றது. 

    இல்லறவியலிலே வாழ்க்கைத் துணைநலம் என்னும் அதிகாரத்திலே 

    தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 

    பெய் எனப் பெய்யும் மழை 

    என்னும் ஒரு குறள் இருப்பது யாவரும் அறிந்தது. சிறுவர்கள் கூடக் கற்கின்றார்கள். மனனம் செய்கின்றார்கள். ஆனால், அதன் பொருள் விளங்கிக் கற்கின்றார்களோ தெரியவில்லை. 

    ''பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள 

    நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ 

    நூலின் பரிந்துரை எல்லாம் பரிமேலழகன், 

    தெளித்த உரையாமோ தெளி'' 


    என்று பெருஞ்சித்திரனார் பரிமேலழகர் உரையின் சிறப்புப் பற்றி எழுதியுள்ளார். அந்த பரிமேலழர் 

    பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழுது துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல மழை பெய்யும் என்று பரிமேலழகர் உரை சொல்கிறார்

    டாக்டர் ஆ.இராமகிருட்டினன் தன்னுடைய உரையிலே பிற தெய்வம் தொழ மாட்டாள்;ளூ தன் தெய்வமாகிய கணவனைத் துயில் எழுந்ததும் தொழுவாள். அவள் பெய் என்று சொல்ல மழை பெய்யும். தெய்வமே அவள் ஏவல் கேட்கும் என்று எழுதியுள்ளார்.

    கோ. பாரத்தசாரதி தன்னுடய உரையிலே வேறு தெய்வங்களைத் தொழாமல் தன் கணவனையே தொழுது துயிலெழும் பெண், வேண்டியபோது பெய்யும் மழைக்கு ஒப்பானவள்.

    இவ்வாறான அர்த்தப் பொருத்தங்கள் பெண் கணவனைக் கடவுளாகக் கருத வேண்டும். அவர் காலடியை வணங்கி அடிமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருப்பதை உணருகின்றோம். 

    பூமி தோன்றிய காலத்தில் இருந்து அதன் வளர்ச்சியும் கலாச்சாரங்களும் மாறு பட்டு கொண்டே  வருகின்றன. கிறிஸ்துவுக்கு முன் இருந்த பண்பாட்டு கலாசார விழுமியுங்கள் 2024 ஆம் ஆண்டு நிச்சயமாக இல்லை. தாய்வழி சமுதாயம் தந்தைவழி சமுதாயமாக மாற்றப்பட்டது. வல்கா நதிக்கரையோர சமுதாயத்தை இன்று நினைத்துப் பார்க்கவே முடியாது. 

    கணவன் குடும்பத்துக்குத் தேவையான வருவாயைக் கொண்டு வருகின்ற போது மனைவி வீட்டில் இருந்து வீட்டைப் பொறுப்பெடுத்து வேலைகளைச் செய்த காலம் வள்ளுவர் காலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்காலத்தை நாம் சிந்தனையில்; கொண்டு வரும்போது கணவனும் மனைவியும் ஒன்றாகவே காலையில் வேலைக்குப் போகின்றார்கள். இருவரும் ஒன்றாகவே சேர்ந்து காலை உணவை தயாரிக்கின்றார்கள். ஒன்றாகவே தம்முடைய அலுவலகத்துக்குச் செல்லுகின்றார்கள். ஒன்றாகவே வீட்டுக்கு வருகின்றார்கள். வேலை செய்த களைப்பிலே வருகின்ற வழியில் ஏதாவது கடையிலே தம்முடைய உணவை உண்டு விட்டு வீட்டுக்கு வந்து உறங்கிப் போகின்றார்கள்.   ஆனால் சிலர் வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகளை கவனித்துப் பின் உறங்கப் போவதும் இருக்கின்றது. ஆனால் காலையில் எழுந்தவுடன் தெய்வத்தை வணங்காது கணவனை வணங்கி எழுகின்ற பெண் என்பதை நாம் இக்காலத்தில் துளி கூட நினைத்துப் பார்க்க முடியாது. பரிமேலழகருடைய கருத்தை நாம் வாழுகின்ற காலத்துக்கு ஏற்பப் பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியம்

    கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் உரை எழுதியுள்ளார். இதனையே சற்று மாற்றி காலையில் அனுதினம் கண்விழித்துக் கணவனைத் தொழுகின்ற பெண்ணானவள், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அவனைத் தெய்வமாக நினைக்கின்றாள் என்ற ஒரு மனஉணர்வை அவனுக்கு ஏற்படுத்துகின்றாள். மூளைச் சலவை செய்கின்றாள் என்றே சொல்லவேண்டியுள்ளது. இவ்வாறான பெண் பெய் என்று சொல்ல மழை பெய்வது போலக் கணவனும் அவளுடைய காரியங்களுக்கு உடனடியாக செயற்படுவான். இச்செயலானது தன்னையும் தன் உறவினர்களையும் பேணுவதற்கும், அவளுடைய குடும்ப வாழ்க்கைக்கும் கணவனுடைய பங்களிப்பு உறுதுணையாகின்றது. இவ்வாறு இக்குறளை ஏற்றுக் கொள்வதே சாலச்சிறந்தது. அதுவே அவருடைய அடுத்து வரும் குறளாகிய 

    தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

    சொற்காத்துச் சோர்விலாள் பெண் 

    என்னும் குறளுக்கும் வலிமை சேர்க்கும்.

    காலைத் தொட்டு வணங்குதல் அடிமைத் தனம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அது வணங்கப்படுபவர்களைப் பொறுத்தது. தெய்வீகத் தன்மை பொருந்தியவராக(மனஅளவில்) இருந்தால், அவருடைய பாதங்களின் மூலம் கடத்தப்படும் நற்கதிர் வீச்சுக்கள் வணங்குபவர்களுக்குப் பலனையே தருகின்றது. எனவே எதுவும் அவரவர் மனநிலைக்கும் சூழலுக்கும் ஏற்பவே பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. 

    எழுத்தாளன் எழுதுவது வாசகர்களுக்காக மட்டுமே. அதனால், இலக்கியங்களைக் காலமும், சூழலும், கலாசாரப் படிமங்களுமே தீர்மானிக்கும்.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    வேதாத்திரி மகரிஷியின் பிரமஞான வகுப்புக்கு அறுகுணசீரமைப்பு உரை

      ஆழையாற்றில் அறிவுத் திருக்கோயில் ஆற்றி அகிலமெங்கும அமைதிக்காய் அறிவுரையாற்றி ஆழ்ந்த ஞானத்தில் அறிவியல் போதித்து அறிவே தெய்வமென்று அகத்தினி...