• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 21 செப்டம்பர், 2021

    பனைமடலால் ஒரு மிரட்டல



    அன்பு, காதல், பாசம், பரிவு, இரக்கம், விட்டுக்கொடுப்பு இவையெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விடயம். இரு மனங்கள் இணையாத உறவு பொய்யான உறவாகவே அமையும் என்பது உண்மை. அது காதலுக்கு மட்டும் விதிவிலக்கல்ல. அண்மையில் தமிழர்கள் மத்தியில் நடந்த இரு சம்பவங்கள் என் மனதை ஆட்டிப்படைக்கின்றன. இரு மனங்கள் இணையவில்லையென்றால், மறந்து போகின்ற மனதை வளர்த்து கொள்ளாத இளமை பித்துப்பிடித்தது போலாகிவிடுகின்றது. 


    காதலியை அடைய காதலர்கள் பல யுத்திகளை கையில் எடுப்பார்கள். எவ்வாறான ஈர்ப்பு அவளிடம் தன்னை இழுத்து எடுக்கின்றது என்பதை செயலாலும் சொற்களாலும் உணர்த்துவார்கள். இதைவிட கைகளைக் கிழித்து இரத்தத்தைக் காட்டி நீ இல்லையென்றால், என்னால் வாழமுடியாது என்று பயமுறுத்துதல், கிடைக்காத வேதனையை சிகரெட் புகையால் அனுப்பவதாக வெளிக்காட்டுதல் போன்ற மிரட்டல்கள் மூலமும் காதல் தோன்றுகின்றது. இவ்வகைக் காதல் ஒருவகை மன அழுத்தத்தை ஏற்படுத்தி தியாகத்தால் துளிர்த்து காதலாய் மலர்கின்றது. 


    உயிருக்குயிராகக் காதலித்த ஒரு பெண் சில கசப்பான காரணங்களால் வேண்டாம் என்று விட்டுப் பிரிந்தால் பிடிக்கவில்லை, போய்விட்டால் என்று மனதைத்  தேற்ற வேண்டிய பெறுமதி மிக்க இளமையானது, அவளை குத்திக் கொலை செய்து விட்டு சிறையில் வாசம் செய்கிறது. 


    இன்னுமொரு இளமையானது உயிருக்குயிராகக் காதலித்த பெண் கிடைக்கவில்லையே என்று தன்னுடைய நாடி நரம்பை வெட்டி இரத்த வெள்ளத்தில் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளுகிறது. இவை இரண்டும் இன்று நேற்று தமிழர்கள் மத்தியிலும் திரைப்படங்களிலும் கண்ட காட்சிகள் அல்ல. 


    இதேபோன்று சங்ககால இலக்கியங்களிலே மடல் ஏறுதல், வரை பாய்தல் என்னும் பெருந்திணை இலக்கியங்களிலே இவ்வாறான ஒரு அழுத்தத்தை பெண்வீட்டாருக்கு அல்லது பெண்ணுக்கு ஆண் வர்க்கம் கொடுத்த தன்மையினைக் காணக்கூடியதாக இருக்கின்றது. பெருந்திணை என்பது பொருந்தாக்காமம் எனப்படுகின்றது. அன்பினைந்திணைக்கு(புணர்தல்,பிரிதல்,இருந்தல், இரங்கல், ஊடல்) அப்பால் ஏற்படும் புற ஒழுக்கங்களாகிய கைக்கிளை, பெருந்திணை என்னும் இரண்டு பகுதியிலே பெருந்திணைக்குள் அடங்குகின்ற மடலேறுதல், வரை பாய்தல் என்பன விரும்பாத பெண்ணை வலுக்கட்டாயமாக அடைய எடுக்கும் செயல்களாகும். இது இராக்கதம் என்று அழைக்கப்படும். இதேபோல் உறக்கத்தில் இருக்கும் பெண்ணிடமும் மது மயக்கத்தில் இருக்கும் பெண்ணிடமும் உடலுறவு கொள்வது பேய்நிலை என்றும் அழைக்கப்படுகின்றது. 


    ஆண்மகனானவன் உடல் முழுவதிலும் சாம்பல் பூசி, எருக்கம்பூ, ஆவரம்பூ மாலை அணிந்து பனை மடலால் செய்யப்பட்ட குதிரையிலே ஏறி அம் மடல்மாவை நண்பர்கள் அல்லது சிறுவர்கள் இழுத்து வர மன்றத்திற்கு வருவார்கள். அப்போது அப்பெண்ணிடம் காதல் கொண்ட விடயத்தைக் கூறியபடி தம் இருவருடைய படங்களையும் கீறி கையில் எடுத்துக்கொண்டு வருவான். இக்காதலை ஊரார் அறிந்து கொண்டார்கள் என்று வெட்கப்பட்ட பெற்றோர்கள், அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பார்கள். இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டும் பெண்ணைப் பெற முடியாத நிலையில் வரைபாய்ந்து(மலையில் இருந்து பாய்தல்) தம்மை மாய்த்துக் கொள்வார்கள். இது ஒரு தற்கொலை முயற்சியாகவும் பெண்ணுக்கும் அவளின் பெற்றோருக்கும் ஒரு மிரட்டலைத் தருகின்ற நிகழ்வாகவும் நடைபெற்றது. 


    அகநானூறு 322 ஆவது பாடலிலே 

    ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப

    இறு வரை வீழ்நர் 

    என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


    குறுந்தொகை 182 ஆவது பாடலிலே மாதங்கீரனார் இவ்வாறு பாடுகின்றார்


    விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்

    மணி அணி பெருந் தார் மரபிற் பூட்டி

    வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி

    ஒருநாள் மருங்கில் பெருநாண் நீங்கி

    தெருவின் இயலவும் தருவது கொல்லோ?

    கலிழ் கவின் அசை நடைப் பேதை

    மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே!


    அழகு ஒழுகும் அசைந்த நடையையுடைய தலைவி நெஞ்சம் நெகிழவில்லை. நான் அவளிடம் விடுவதற்கு அமைந்த தூது என்னவென்றால்,  சிறந்த உச்சியையுடைய பனையின் முதிர்ந்த பெரிய மடலால் செய்யப்பட்ட மணிகள் அணிந்த குதிரையின் மேலேறி பெரிய மாலை முறைப்படி அணிந்து வெள்ளை எலும்பையும் அணிந்து ஒருநாளிலே பிறர் இகழும்படியாக  நாணத்தை விட்டு தெருவிலே செல்வேன்;. அப்படிச் சென்றால், அவளை அடைய முடியும் என்பதாக இப்பாடல் அமைந்திருக்கின்றது. 


    இவ்வொழுக்கமானது எக்காலத்திலும் ஒரு பெண்ணை அடக்குமுறைக்குள் கொண்டு வருவதாகவே அமைகின்றது. இறுதியில் ஒத்துக் கொண்டால், ஆவதும் பெண்ணால், ஒத்துக் கொள்வில்லையானால் அழிவதும் பெண்ணால் என்னும் தீர்ப்பை வழங்கிவிடுவது இயல்பாகப்படுகின்றது.  


    2 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...