அம் என்று அடையாளம் காட்டி
அம்மாவை அழைத்த போது
உலகமே தன் காலடியில் என்ற
மகிழ்ச்சியைக் கண்ட தெய்வம் அம்மா
குழந்தையின் முதல் வார்த்தை அம்.
அம் கபால உச்சியை திறக்கும் மந்திரம்.
இயற்கை ஆன்மீக சக்தியை இழுக்கும் மந்திரம்.
இம் மந்திரமே குழந்தை முதல் மொழி
வாழ்க்கையை தன்னோடு இணைப்பதற்கு
பேசத் தொடங்கும் முதல் மொழி அம்.
உலகத்தை காட்டியதும் அம்மா.
அப்பாவை தெரியப்படுத்தியதும் அம்மா.
கருவறை சுகம் இவ்வுலகில்
என்றும் எங்கும் எப்போதும் கிடைப்பதில்லை.
கருவறை அமைதி, ஆனந்தம்
எங்குமே கிடைப்பதில்லை.
தொட்டிலிலே தாலாட்ட, தோளினிலே கைதட்ட,
மடியினிலே தலைதடவ தாய்
கரங்கள் போல் சிறந்த கருவி
எங்குமே படைக்கப்படுவதில்லை.
சோற்றுப் பருக்கைகளை கறியுடனே குழைத்தெடுத்து
நிலவைக் காட்டி சோறூட்டிய அனுபவ இன்பம்
இனி என்றுமே கிடைக்கப் போவதில்லை.
அம்மாவின் சேலைத் தலைப்பில் முகம் துடைக்கையிலே
வருகின்ற வாசனைக்கு வரைவிலக்கணம் கிடையாது.
அம்மாவின் கறிச்சுவைக்கு இணையாக
எந்த அறுசுவையும் கிடையாது
பள்ளிப் பருவத்திலே துள்ளித் திரியும் போது
துடுக்கடுக்கிய அம்மாவின் அந்த மந்திர வார்த்தைக்கு
இணையான மந்திரம் உலகத்தில் எங்குமே இல்லை.
அம்மாவின் ஒரு பார்வை போதும் எம்மைக் கட்டிப் போட
அம்மாவின் ஒரு சொல் போதும் எமைத் திருத்தி வழி நடத்த
மழைக்குக் குடையானாள், பனிக்கு நெருப்பானாள்,
நித்திரைக்குப் போர்வையானாள், நோய்க்கு மருந்தானாள்,
வயதான பாட்டியும் தன் தாய்க்குக் குழந்தைதான்
கொழுத்த பையனும் தன் தாய்க்கு ஒல்லிதான்
உடல் முழுதும் மலம் தடவி பிள்ளை வந்தாலும்
சந்தனம் எனக் கைகளால் கழுவி விடும் தாயை
அநாதை விடுதிகளில்; யாரோ பராமரிக்க விடுகின்றார்;.
சேர்த்து வைக்கும் சொத்தெல்லாம்
அம்மா என்ற சொத்துக்கு ஈடாகாது
இத்தத்துவம் அம்மா எனும் பேரின்பத்தை
இழந்தவர்களுக்கே புரியும்
அன்னையர் தின வாழ்த்துகள் - என்றும்...
பதிலளிநீக்குஅன்னையர் தின வாழ்த்துகள்
பதிலளிநீக்கு