• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 27 ஆகஸ்ட், 2018

    வயோதிபம் வாழ்வில் வராமல் போகுமா!



    அழகு எதில் இருக்கின்றது என்றால், அது பார்ப்பவர் கண்களில் இருக்கின்றது. இளமையும் அழகுதான் முகத்தில் ரேகை படர்ந்த முதுமையும் அழகுதான். வாழ்வது அவசியமென்றால், முதுமையையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதும், ஆதரிப்பதும் அவசியமே.  முதுமை அருகே இருப்பது இளமைக்கு தொந்தரவு என்று நினைப்பதும், முதுமையைப் பாதுகாக்க இளமைக்கு காலம் கைகொடுக்கவில்லை என்று இளையவர்கள் கலங்குவதும், பிள்ளைகள் மகிழ்ச்சிக்கு இடையூறு எம்மால் வந்துவிடக்கூடாது என்றும், அமைதியாக யார் தொந்தரவும் இன்றி வாழவேண்டும் என்றும், இல்லை கடைசி காலத்தில் கலகலப்பாக பேரப்பிள்ளைகளைக் கொஞ்சி விளையாடி நான் வாழவேண்டும் என்று முதுமை நினைப்பதும் அவரவர் மனநிலையையும் வாழ்ந்த சூழலையும் பொறுத்தது.

                 வயதானவர்கள் என்னும் போது தமது வேலைகளைத் தாமே செய்து கொண்டு தமது பிள்ளைகளுக்கு தம்மாலான உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்ற வயதானவர்கள் என்றும், தம்மால் தமது வேலைகளைச் செய்யமுடியாது, சுயமாக நடந்து திரியமுடியாது, தமது உணவுகளைத் தாமே எடுத்து உண்ணமுடியாது, தமது நினைவுகளை இழந்து காணப்படுகின்ற முதியவர்கள் என்றும் இரண்டுவிதமாக வேறுபிரித்துப் பார்க்கலாம்.
                
                  வயதானவர்களை இளையவர்கள் தம்மோடு வைத்திருந்தால், அவர்கள் தொழில் ரீதியான வளர்ச்சிக்கும் பிள்ளைகளின் உடல் அறிவு வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்பது உண்மை. அதுகூட பிள்ளைகளின் சொந்த பிரச்சினைகளுக்குள் தலையிடாத வரையிலேயே சாத்தியமாகும். பிள்ளைகள் திருமண பந்தத்துள் இணைந்து தமக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கியபின் பெற்றோர்கள் உண்மையில் அவர்கள் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டியது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடமையாக இருக்கின்றது. இவ்வாறான வயதானவர்களில் சிலர், தமக்கென்று ஒரு பொழுதுபோக்கை வைத்திருக்கும் பட்சத்தில் அவர்கள் பேரப்பிள்ளைகளே தமக்குப்பாரமாகக் கருதுகின்ற மனநிலை அவர்களுக்கு ஏற்படுகின்றது. ஒரு குழந்தை ஒரு இடத்தில் நீண்ட நேரம் விளையாடாதது போலவும், ஒரு கதையைத் திருப்பித் திருப்பிக் கதைப்பது போலவும் வயதானவர்கள் எவ்வளவு நேரம்தான் பிள்ளைகளுடன் விளையாடுவது, அவர்களின் வேலைகளைச் செய்வது எமக்கென்றும் ஓய்வுதேவை என்று கூறுகின்ற வயதானவர்கள் இருக்கவே செய்கின்றார்கள்.

              வாழ்க்கையின் பூரணத்துவம் நாம் பெற்ற பிள்ளைகளுடன் முடிவதில்லை. தமது பிள்ளைகளைக் கொஞ்சி விளையாடிய சுகம் திரும்பவும் பேரப்பிள்ளைகளைக் கொஞ்சுவிளையாடுவதற்கு இயற்கை கொடுக்கும் வரம் என்பதை உணரவேண்டும்.  இந்த சுகம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அந்தக் கன்னங்களின் அழகு, பஞ்சு உடலின் ஸ்பரிசம், அக்குழந்தைகளின் சுட்டித்தனம், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரவணைப்போடு கொடுக்கும் பதில்கள் இவையெல்லாம் நாம் வாழ்ந்த வாழ்வின் பூரணத்துவம் என்பதுடன் சொர்க்கம் என்பதையும் வயதானவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். சுகம் என்று நினைத்தால் சுகம். தொல்லை என்று மனம் நினைத்தால், அது தொல்லை.

                    இதேவேளை இளையவர்களை நோக்கும்போது, தாம் வளர்வதற்கும் தாம் கற்பதற்கும் தமது உடல்நிலை உறுதியாவதற்கும் தமக்கென ஒரு சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கும் பெற்றோரைப் பயன்படுத்தும் பிள்ளைகள் தமக்கென ஒரு வாழ்க்கை அமைந்தபின் தேவைப்படாத பொருளை தூக்கி எறிவதுபோல் எறிந்துவிடுவது அல்லது சுமையாக எண்ணுவது வழமையாகப்படுகின்றது. காலச்சுழற்சியில் என்றோ ஒருநாள் எல்லோரும் மறையத்தான் போகின்றார்கள். இளையவர்கள் பிரிந்தபின் கலங்குவதைவிட வாழப்போகும் சிறிதுகாலமாவது அவர்களைச் சகித்துக் கொள்வோம் என்று நினைக்க வேண்டியது அவசியம். எதிர்காலத்தில் தமது நிலை என்ன என்று சிந்தித்துப் பார்த்தாலே பெற்றோரைத் தவிக்கவிடும் பிள்ளைகள் திருந்திவிடுவார்கள்.

              திருமணம் செய்து ஒன்றோ இரண்டோ வருடங்களில் பிள்ளைகளைப் பெற்று அதன்பின் பிள்ளைகளுக்காக வாழ்ந்து அதன்பின் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்தபின் நிம்மதியாகக் கணவனுடன் ஒருவருக்கொருவர் துணையுடன் வாழ நினைக்கும் தம்பதிகள் தமது பிள்ளைகளுக்காக தமது துணையைத் தவிக்கவிட்டுவிட்டு தமது பிள்ளைகளின் பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை தலைமேல் கொண்டு அவர்களுடன் சென்று விடுகின்றனர். மீண்டும் அந்த ஆண் தன் பாலிய வயதுத் தனிமைக்குத் திரும்புகின்றான். இதுவும் சுகமே என்று சொல்லும் கணவன்மார்களுக்கும் ஒரு கையை இழந்த துயரம் இருக்கவே செய்யும்.

             ஒரு வயதானவர் இறந்தால் ஒரு நூலகம் அழிகின்றது என்பது உண்மை. அனுபவம் கற்றுத்தரும் பாடம் எந்த ஆசானும் கற்றுத் தருவதில்லை. அதனாலேயே பேரப்பிள்ளைகளைத் தமது பெற்றோரிடம் வளர்க்கப் பிள்ளைகள்  கொடுக்கின்றார்கள் என்று சொன்னால், அது நிச்சயமாக இல்லை. இப்போதும் பிள்ளைகள் பெற்றோரைப் பயன்படுத்துகின்றார்கள் என்பதுவே உண்மை. ஆனாலும், தாய் மனமோ தந்தை மனமோ வலிகளைத் தாங்கி வரங்களைக் கொடுக்கின்றார்கள் என்பதுவே உண்மை.

             தமது எண்ணங்களைத் துலைத்து, நடக்கத்துணை, இருக்கத்துணை, உணவு உண்ணத்துணை என்று துணையில்லாமல் வாழமுடியாத வயதானவர்களை வீட்டில் வைத்திருக்க முடியுமா? இது இன்றைய கேள்வி. முடியும் என்று மனதால் நினைப்போர் அதற்கான வழிகளைத் தேட வேண்டியது அவசியம். ஜேர்மனியைப் பொறுத்தவரையில் பணம் இருந்தால் பல நிறுவனங்கள் கைகொடுக்கின்றன. மருத்துவக் காப்புறுதி நிறுவனத்தின் பங்களிப்புடன் பெற்றோருக்காகச் சிறு தொகையை பிள்ளைகள் வழங்கினால், வீட்டிற்கு வந்து வயதானவர்களுக்குப் பல துறைகளில் உதவி வழங்க இந்நிறுவனங்கள் கைகொடுக்கின்றன. உடற்பயிற்சி, மூளைத் தொழிற்படுவதற்கான பயிற்சி, நடைப்பயிற்சி, உணவு தயாரித்துக் கொடுத்தல், சரியான நேரத்திற்கு மருந்து மாத்திரைகளைக் கொடுத்தல், காற்று வாங்கக் கூட்டிக்கொண்டு போதல், அவர்களுக்கு விருப்பமானவற்றை வாசித்து விளக்கம் கொடுத்தல், நினைவுகளைத் திரும்பக் கொண்டுவருவதற்கான பயிற்சிகளைக் கொடுத்தல், மருத்துவரிடம் கூட்டிக் கொண்டு போதல், ஆலயம் அழைத்துச் செல்லுதல் போன்ற உதவிகளைத் தமது கண்காணிப்பிலே செய்யக் கூடிய வசதி வாய்ப்புக்களைப் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளலாம்.

               இல்லை எங்கள் வீட்டில் எங்கள் பெற்றோருக்கு இடமில்லை என்று நினைப்பவர்கள் வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொடுத்து இவ்வாறான வசதிகளைச் செய்து கொடுக்கலாம். தேவையேற்படும் போது மட்டும் பெற்றோரைப் போய்ப் பார்க்கலாம். அதுவும் இல்லையென்றால், வயோதிபர் மடங்களில் சேர்த்துவிடலாம். தாயைப் பார்ப்பதுபோல் தெய்வங்களாகப் பவனி வரும் எத்தனையோ தாதிகள் இவ்விடங்களில் பணிபுரிகின்றார்கள். அங்கும் தமது பொறுமையைச் சோதிக்கும் வயதானவர்களை சரியான முறையில் பார்க்காத தாதிகள் உண்டு என்று பிறர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆனாலும், ஆதரவற்று பிள்ளைகளின் நச்சரிப்பில் மனவலியுடன் வாழ்வதைவிட பணம் கொடுத்து சரியான நேரத்தில் தொழிலாகத் தமது கடமையைச் செய்கின்ற தாதிகள் மேலானவர்கள் அல்லவா!
            



    4 கருத்துகள்:

    1. தற்காலச் சூழல் குறித்த தங்கள் ஆதங்கம் இழையோடும் பதிவு மிக மிக அருமை பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    2. கூடி வாழ்தல் கோடி இன்பம்
      இன்று நிலைமை மாறிப்போய்விட்டது
      நன்றி சகோதரியாரே

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    உள்ளத்தின் குரல் - பிரேம் ராவத்

      உள்ளத்தின் குரல் ஆசிரியர்:   பிரேம் ராவத் வெளியீடு: 2024 12 அத்தியாயங்களில் 357 பக்கங்கள்   இரைச்சல் மிகுந்த உலகத்தில் நிம்மதியை...