• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 11 ஆகஸ்ட், 2018

    இன்னும் வாழுகின்றார்.

              

    சிதைக்குள் விழுந்தீர்களா? உடலைச் சிதைத்து விட்டார்களா?
    கணக்கும் வழக்கும் சரியாய் காலன் கணக்கிட்டு விட்டானா?
    உனக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று – என்
    நினைப்பின் பதிவு தந்தே நிம்மதியாய் உலகு துறந்தீர்களோ?
    இவ்வுலகில் என்னை விதைத்து விட்டு எவ்வுலகு சென்றீர்கள்?
    தனக்காய் வாழாது தரம் கெட்ட உலகை தவிர்த்துவிட்டீர்களா?
    வாழ்வின் கனவைத் தொலைத்து விட்டீர்களோ? தொலைந்து விட்டீர்களோ?
    நினைத்து வாழ பலவும் கண்டேன் நிம்மதியை தொலைத்தேன்
    மறந்து வாழ எதுவும் காணேன் மறைந்த வாழ்வை
    நிறைந்த நினைவாய் நினைவில் கொண்டே உலகில் உலாவுகிறேன்
    உறக்கக் கனவில் உயிராய் தோன்றும் இன்பம் கண்டேன்
    சிறக்க உலகில் சிந்தனை தந்த சிற்பியும் நீங்கள்
    மறக்க உலகில் சிந்தனை தராத சிற்பியும் நீங்களே



             இன்னும் வாழுகின்றார் தொடர்கதை ஆரம்பமாகிறது……

    அருகே யாரோ அழைப்பதுபோல் உணர்ந்தேன். என் சாயலில் யாரோ ஒருவர் என்னைத் தட்டி


     "மகள்"

     என்று அழைத்ததை உணர்ந்தேன். துடித்து எழுந்தேன். 

    நான் கேட்டேன் நிச்சயமாகக் கேட்டேன். 

    இக்குரல் என்னுள் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது. அந்த மூச்சுக் காற்றை மறப்பேனா? என் அருகே கட்டி அணைத்துப் படுத்த அந்த ஸ்பரிசத்தை மறப்பேனா?

     மெல்லிய ஆடைபோல் என் அரைக்கண்ணுக்குத் தெரிகிறது. உருவம் ஒரு மங்கலாக உணருகின்றேன். 

    ஆனால், முகம்  தெரியவில்லை. குரல் மட்டும் கேட்கிறது. 

    "என்ன படுத்திருக்கிறாய்" என்னும் தொனியில்தான் அக்குரல் அமைந்திருந்தது. துடித்து எழுகிறேன். 

    என் கால்கள் தடுமாறுகின்றன. 

    அரைத்தூக்கத்தில் மூளை தன் சுயதொழிலை நிலைக்குக் கொண்டுவர தயாராகவில்லை என்று நினைக்கிறேன். 

    அம்மா அம்மாதான் அழைத்தார். 

    அப்படி என்றால், இறந்து, உருவம் எரிந்து, எரித்த சாம்பல் கூட கரைந்து எல்லாவற்றையும் நாம் தொலைத்த போதும் அந்தக் குரல்  மட்டும் எமக்குள் கேட்கிறது என்றால், ஒலி அலைகள் இன்னும் அந்தக் குரல் அலைகளைத் தாங்கிக் கொண்டு இருக்க வேண்டும். 

    அல்லது எனது மூளையில் குரலைப் பதிவு செய்து இருக்கும் பகுதி இக்குரலை அழித்துவிடாது பொக்கிசப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

              மூளையில் பளிச்சிட்டது எனக்கு ஒரு சிந்தனை. என்னோடு வாழும், எனக்குள்ளும் பல முற்போக்குச் சிந்தனைகளை, சமூக சிந்தனைகளை விதைத்தும் இருக்கின்ற என் தந்தை நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இப்போது இருக்கின்றார். 


    இச்செய்தி மனதுக்குள் பெரும் போராட்டத்தைச் செய்கிறது. நோய் கண்ட இடமோ நுரையீரல். ஆனால்….. ஆனால் அவருடைய மூளை நன்றாகத்தானே இருக்கிறது. 

    அப்போது நினைத்துப் பார்க்கிறேன். கைகளும் கால்களும் வழமைபோல் எனக்குத் தொழிற்படத் தொடங்குகின்றன. 

    வெளிநாட்டில் நாம் உழைக்கும் பணம் எதற்கெல்லாமோ செலவு செய்யப் படுகின்றது. என்னுடைய தந்தையின் சிந்தனைகள் தொலைந்து போகாமல் பாதுகாக்க அப்பணம் பயன்படுத்தப்படலாம்  அல்லவா. 

    ஒரு மனிதன் இறந்தால் ஒரு சில நிமிடங்கள் அம்மனிதனுடைய மூளை உயிர்வாழும் என்பதை நன்றாகவே அறிந்து வைத்துள்ள எனக்கு, எனது தந்தையின் மூளைப்பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும் என்னும் விடயத்தை இதுவரை நினைத்துப் பார்க்கவில்லையே துடியாய்த் துடிக்கிறேன். 

    எப்படியும் நிருபாவைச் சந்தித்துவிட வேண்டும்.

    கணனியைக் கரைத்துக் குடித்தவள் அல்லவா! ஆராய்ச்சித் துறையை தன் உயிராக மேற்கொள்பவள் அல்லவா! தொலைபேசியை அவளை நாடி அழுத்துகிறேன். 

    வரிசையாக எண்கள் பெயருடன் வந்து விழுந்தாலும் அடிக்கடி அழுத்தும் எண்கள் முன்பக்கம் வந்து விழுகின்றன. நிருபாவின் இலக்கம்தான். விரல்கள் அழுத்தத்தைக் கொடுக்கின்றன.

    "ஹலோ…… அன்ரி. எப்படி இருக்கின்றீர்கள்?

    தொடரும்……………..

    2 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...