08.09.2013 அன்று மானிடநேயன், புகலிட சாதனையாளர், மண்சஞ்சிகை ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர் என்றெல்லாம் போற்றப்படுகின்ற வைரமுத்து சிவராஜா அவர்களின் மணிவிழா நிகழ்வுகள் எழுத்தாளர்கள், உறவினர்கள் ஒன்றுசேர மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஜேர்மன் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு தந்திருந்தது.
சுவையுணவு பகிர்ந்தளித்து, நிறைவயிறு தனைத்தந்து இவ்விழாவினைக் குடும்பத்தினர் ஆரம்பித்து வைத்தனர். தம்முடைய தந்தையாரின் வாழ்வுபற்றிய குறுந்திரைப்படத்தை பிள்ளைகள் வந்திருப்போர்க்கு காண்பித்து மகிழ்ந்தனர். சிவராஜா அவர்கள் தன் வாழ்நாளின் அநுபவ மனப்புதையல்களை அலைகள் 60 என்ற நூலின் மூலம் அடையாளப்படுத்தி ஒவ்வோர் கைகளிலும் சமர்ப்பித்திருந்தார்.
இவ்விழாவில் ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்க உபதலைவரும், ஜேர்மன் தமிழ்க்கல்விச் சேவை அதிபருமாகிய ஸ்ரீஜீவகன் அவர்கள் அறிவிப்பாளராகப் பணியாற்றி இவர் சேவைகள் பற்றி சிறப்பாக எடுத்துரைத்து விழாவினை அழகாக நடத்திச் சென்றார்.
மனிதர்கள் எல்லோரும் பிறக்கின்றார்கள், வாழ்கின்றார்கள். பிறந்தோம், உழைத்தோம், உண்டோம், களித்திருந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாது எதிர்காலம் தன் பெயர் சொல்லவென மனிதர்கள் வாழ்வது அருமை. அவ்வகையில் நாடுகடந்து வாழ்ந்தாலும் தன் தாய்நாட்டுச் சொந்தங்கள் தவித்திருக்க மனம் ஒவ்வாது, அச்சொந்தங்களுக்காகத் தன் பொழுதுகளைத் தாரைவார்த்து புலம் பெயர் மக்களிடம் பணமனைநாடி, அவர்கள் மனமது திறந்து, வளமது கறந்து, தாய்நாட்டு அநாதைகள் மனம் மகிழத் தன் வாழ்நாளை அர்ப்பணித்து வாழும் மாமனிதன் சிவராஜா அவர்களை எழுத்தாளர்கள் கௌரவித்து வாழ்த்துமழை சொரிந்தனர். பாடல்களால் ஆராதனை செய்தனர்.
மலை அருவியானது வருகின்ற வழியெல்லாம் மூலிகைகளின் பலன்களைப் பெற்று மருத்துவக் குணங்களை அள்ளிவழங்கி பிணி தீர்க்கும் மருந்தாகின்றது. அதுபோல் சிவராஜா அவர்களும் வாழ்நாள்ப் படிகளில் வசதி படைத்தார். உள்ளங்களை நாடி உதவி பெற்று இலங்கை மக்களின் இன்னல்களைத் துடைக்கின்ற பாங்கினை எனதுரையில் எடுத்துரைத்தேன்.
அதேபோல் பலரும் இவரது பணிகளை எடுத்துரைத்துடன் மண் என்னும் பெயரில் இவரால் வெளியிடப்படும் சஞ்சிகையின் மூலம் தனது பணிகளை எவ்வித ஒளிவுமறைவுமின்றி வெட்டவெளிச்சமாக எடுத்துக்காட்டுவதுடன் தாயகம் அனுப்புகின்ற பணங்களை யாரிடம் எப்படி எவ்வளவு அனுப்பப்படுகிறதோ அதற்கான பற்றுச்சீட்டுக்கள் பெற்று யார் யாரிடம் பணங்கள் சேகரிக்கப்படுகின்றன போன்ற விடயங்களை ஒட்டுமொத்தமாகத் தன் மண் சஞ்சிகையில் வெளிப்படுத்துகின்ற இவரது பண்புகளைப் பலரும் பாராட்டினர்.
இவருக்கு இவ்விழாவிலே மானிடநேயன் என்னும் பட்டம் வழங்கிக் கைளரவித்தனர். இவரைப் பாடகர்கள் பாடல்கள் பாடி மகிழ வைத்தனர். ஏனையோர் தமது உரைகளின் மூலம் மகிழ வைத்தனர். ஆர்ப்பாட்டமில்லாது அமைதியாக நடந்த இவ்விழாவினைக் கண்டுகழித்த மகிழ்வுடன் நாமும் குடும்பத்தினருடன் விடைபெற்றோம்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்''
தொகுத்து வழங்கியமைக்கு நன்றிங்க...
பதிலளிநீக்குநிகழ்வை நேரில் பார்க்காத குறையை ஓரளவு தீர்த்ததெனலாம் இப்பதிவு.
பதிலளிநீக்குமிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.