வெள்ளி, 20 செப்டம்பர், 2013
சனி, 14 செப்டம்பர், 2013
டிவாகர் சிவநேசன் அரகேற்றம்
; ;
07.09.2013 அன்று ஆனந்தமாலா சிவநேசன் அவர்களின் புதல்வன் டிவாகர் சிவநேசனின் அரங்கேற்றம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நுண்கலைக்கல்லூரி அதிபர் நயினை விஜயன் அவர்கள் இவ் அரங்கேற்ற நிகழ்விற்குத் தலைமை வகித்தார்.
இளையவனாய் பலர் இதயங்களிலும் புகுந்து கொண்டு உள்ளமதில் கொள்ளை கொண்ட இசையின் மகத்துவத்தை, இசையின் துணைகொண்டு அந்நாளைப் பொன்னாளாய் மாற்றி அரங்கமதில் அமர்ந்து பார்வையாளர்களின் மனஅரங்கமதில் ஏறி நின்று தன் ஆற்றலையும், அழகையும் அற்புதத்தையும் விதைத்து நின்ற அவ்விளைஞனின் இசைஆர்வத்தையும் அறிவையும் அநுபவித்த பலருடன் நானும் இணைந்து கொண்டேன்.
நான் இசைக் கலைஞை அல்ல. ஆனால், நான் இசைக்கு அடிமையானவள். சின்னவனானாலும் டிவாகர் இசையால் என்னைவிட உயர்ந்து நின்றார். சிறுவனாய் வாழ்ந்த போது என் காதுகளில் இவர் பாடல்கள் விழுந்திருக்கின்றன. இவர் வளர்ச்சிக்காக வாயார வாழ்த்தியிருக்கின்றேன். ஆனால், இன்று எனக்குள்ளே ஆச்சரியத்தை ஆழப்பதித்து அகன்று நிற்கின்றது இவர் குரலின் உயர்ச்சி.
மண்டபம் நிறைந்த கூட்டம். பொதுவாகவே ஒருநிலைப்பாடு என்பது சாதாரண மனிதர்களுக்கு குறைவே. அதனாலேயே அதனை மேம்படுத்தும் யோகா போன்ற கலையை முயன்று கற்கின்றனர். அன்றைய நாள் நிறைந்திருந்த கூட்டத்தின் மனங்களை ஒருநிலைப்பாட்டுடன் நிறுத்தி வைத்த பெருமை டிவாகரைச் சார்ந்தது. கரவோசை கேட்டுப் பெறவேண்டிய மக்கள் மத்தியில் கேட்காமலே கரவோசையை காதுநிறைக்கச் செய்த பெருமை பார்வையாளர்களுக்கு இருந்தது. ஆரம்பம் தொட்டு இறுதிவரை அசையாது இருந்த பார்வையாளர்களை இங்கு கவனிக்கக் கூடியதாக இருந்தது. புலம்பெயர்வில் தமிழிசை தாழ்ந்துவிடவில்லை என்பதைப் பறைசாற்றி என் மனதைக் குளிரச்செய்த நிகழ்வாக பார்வையாளர்கள் இரசனை அமைந்திருந்தது.
எந்த ஒரு கலையானாலும் தனித்து நின்று புகழ் பெறமுடியாது. ஏன் தனிநபர் கூடத் தன் பெருமையயைத் தனித்து நின்று வெளிக்கொண்டுவர முடியாது. அவ்வகையில் டிவாகர் குரலுக்கு மெருகூட்ட அனுஸாந் விஜயகுலசிங்கம் மிருதங்கம் கையிலெடுத்தார். நகுஸாந் விஜயகுலசிங்கம் கடத்தை ஏந்தினார், பிரவீண் சாரங்கன் வயலினை கையெடுத்தார், இராகுலன் இராமநாதன் கஞ்சிராவின் திறமையை கொண்டு சேர்த்தார், வர்ணன் சுரேஸ்குமார் மோட்சிங்கில் முகம் கொடுத்தார், சுவித்தா பாலகுமாரன் தம்புராவில் விரல் கொடுத்தார். இத்தனை இளம் இதயங்கள் இணைந்ததனால், டிவாகர் இசையில் நிமிர்ந்து நின்றார். வளர்ந்த கலைஞர்களுக்கு ஈடாக இவ் இளங்கலைஞர்கள் காட்டிய அற்புத அரங்கானது எதிர்காலம் தமிழிசையை ஏந்திநிற்கும் என்பதைப் படம்போட்டுக் காட்டியது.
தன் புதல்வனை இந்நிலைக்கு உயர்த்திய பெற்றோரை மனதார வாழ்த்துவதுடன் நல்லதோர் நிகழ்வைக் கண்டு கழிக்க சந்தர்ப்பம் தந்தமைக்கும் நன்றிறைத் தெரிவிப்பதுடன், டிவாகர் இந்நிலைக்கு உயர தன் பொழுதுகளை அர்ப்பணித்துத் தன் திறமையை டிவாகரில் இணைத்து உயர்ந்து நிற்கும் ஆசிரியர் செல்வச்சீராளன் அவர்களை மனதாரப் பாராட்டுகின்றேன்.
வெள்ளி, 13 செப்டம்பர், 2013
மணிவிழாக் கண்ட மண்சஞ்சிகை ஆசிரியர் திரு.வ.சிவராஜா
08.09.2013 அன்று மானிடநேயன், புகலிட சாதனையாளர், மண்சஞ்சிகை ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர் என்றெல்லாம் போற்றப்படுகின்ற வைரமுத்து சிவராஜா அவர்களின் மணிவிழா நிகழ்வுகள் எழுத்தாளர்கள், உறவினர்கள் ஒன்றுசேர மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஜேர்மன் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு தந்திருந்தது.
சுவையுணவு பகிர்ந்தளித்து, நிறைவயிறு தனைத்தந்து இவ்விழாவினைக் குடும்பத்தினர் ஆரம்பித்து வைத்தனர். தம்முடைய தந்தையாரின் வாழ்வுபற்றிய குறுந்திரைப்படத்தை பிள்ளைகள் வந்திருப்போர்க்கு காண்பித்து மகிழ்ந்தனர். சிவராஜா அவர்கள் தன் வாழ்நாளின் அநுபவ மனப்புதையல்களை அலைகள் 60 என்ற நூலின் மூலம் அடையாளப்படுத்தி ஒவ்வோர் கைகளிலும் சமர்ப்பித்திருந்தார்.
இவ்விழாவில் ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்க உபதலைவரும், ஜேர்மன் தமிழ்க்கல்விச் சேவை அதிபருமாகிய ஸ்ரீஜீவகன் அவர்கள் அறிவிப்பாளராகப் பணியாற்றி இவர் சேவைகள் பற்றி சிறப்பாக எடுத்துரைத்து விழாவினை அழகாக நடத்திச் சென்றார்.
மனிதர்கள் எல்லோரும் பிறக்கின்றார்கள், வாழ்கின்றார்கள். பிறந்தோம், உழைத்தோம், உண்டோம், களித்திருந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாது எதிர்காலம் தன் பெயர் சொல்லவென மனிதர்கள் வாழ்வது அருமை. அவ்வகையில் நாடுகடந்து வாழ்ந்தாலும் தன் தாய்நாட்டுச் சொந்தங்கள் தவித்திருக்க மனம் ஒவ்வாது, அச்சொந்தங்களுக்காகத் தன் பொழுதுகளைத் தாரைவார்த்து புலம் பெயர் மக்களிடம் பணமனைநாடி, அவர்கள் மனமது திறந்து, வளமது கறந்து, தாய்நாட்டு அநாதைகள் மனம் மகிழத் தன் வாழ்நாளை அர்ப்பணித்து வாழும் மாமனிதன் சிவராஜா அவர்களை எழுத்தாளர்கள் கௌரவித்து வாழ்த்துமழை சொரிந்தனர். பாடல்களால் ஆராதனை செய்தனர்.
மலை அருவியானது வருகின்ற வழியெல்லாம் மூலிகைகளின் பலன்களைப் பெற்று மருத்துவக் குணங்களை அள்ளிவழங்கி பிணி தீர்க்கும் மருந்தாகின்றது. அதுபோல் சிவராஜா அவர்களும் வாழ்நாள்ப் படிகளில் வசதி படைத்தார். உள்ளங்களை நாடி உதவி பெற்று இலங்கை மக்களின் இன்னல்களைத் துடைக்கின்ற பாங்கினை எனதுரையில் எடுத்துரைத்தேன்.
அதேபோல் பலரும் இவரது பணிகளை எடுத்துரைத்துடன் மண் என்னும் பெயரில் இவரால் வெளியிடப்படும் சஞ்சிகையின் மூலம் தனது பணிகளை எவ்வித ஒளிவுமறைவுமின்றி வெட்டவெளிச்சமாக எடுத்துக்காட்டுவதுடன் தாயகம் அனுப்புகின்ற பணங்களை யாரிடம் எப்படி எவ்வளவு அனுப்பப்படுகிறதோ அதற்கான பற்றுச்சீட்டுக்கள் பெற்று யார் யாரிடம் பணங்கள் சேகரிக்கப்படுகின்றன போன்ற விடயங்களை ஒட்டுமொத்தமாகத் தன் மண் சஞ்சிகையில் வெளிப்படுத்துகின்ற இவரது பண்புகளைப் பலரும் பாராட்டினர்.
இவருக்கு இவ்விழாவிலே மானிடநேயன் என்னும் பட்டம் வழங்கிக் கைளரவித்தனர். இவரைப் பாடகர்கள் பாடல்கள் பாடி மகிழ வைத்தனர். ஏனையோர் தமது உரைகளின் மூலம் மகிழ வைத்தனர். ஆர்ப்பாட்டமில்லாது அமைதியாக நடந்த இவ்விழாவினைக் கண்டுகழித்த மகிழ்வுடன் நாமும் குடும்பத்தினருடன் விடைபெற்றோம்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்''
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
“ அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்ற...
-
திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...
-
என் மகளின் பதினெட்டாவது வயது பிறந்ததின விழாவிலே என்னால் வாசிக்கப்பட்ட கவிதை. வானுயர் என் விளக்கு நீ என் வயிற்றி...