• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    திங்கள், 20 ஜூன், 2011

    அன்னைக்குப் பெருமை



                       

                                        சொந்தமென பந்தமென நானிருந்தேன்
                                        சொல்லாமல் பிரிந்து சென்ற மாயமென்ன
                                        கள்ளமென காதலது கலந்துவிட்டதால்
                                        கன்னியென போட்டுவைத்த கட்டுக்காவல்
                                        கடந்து சென்று கலங்கவைத்தாள் கன்னியவள்

    என் மனதிற்குள் பூட்டிவைத்த அழகுக் கல் ஒன்று, அன்பு என்னும் உப்புநீர் பட்டு கரையும், தாயன்பைப் புரிந்து கொண்டு பந்தத்தைத் தங்க வைக்கும் என்றெல்லாம் மனக்கணக்குப் போட்டுவைத்திருந்தேன். ஆனால், தன் மனக்கோட்டையினுள் சிற்பமாய்ச் செதுக்கி வைக்கவென மருமகன் என்று நான், அழைக்க வேண்டிய மன்மதன் கவர்ந்து சென்றுவிட்டான். எங்கே சென்றார்? என்ற எண்ணம் மட்டுமன்றி, எப்படி வாழ்கின்றார்? என்ற எண்ணமும் மேலோங்க ஆராயத் தொடங்கினேன். அடிக்கடி வந்து போகும் என் மகள் செல்லச் சிரிப்பும் செல்வாக்கு வாழ்வும் நிலைகுலைந்து தடுமாறி விடுமோ என்று தாயன்பு தவித்தது. என தோழி;யை வேவு பார்க்க அனுப்பினேன். சென்றவள் திரும்பி வரும் நாளை, எந்தன் மனமும் கண்களும் தேடி ஏங்கித் தவித்திருந்தன. 
                                     தோழியும் வந்தாள், என் காதில் தேனள்ளிச் சொரிந்தாள். படகுக் காரில் பறந்து வந்த என்மகள், பளிங்கு வீட்டினுள் நுழைந்தாளாம். விலையுயர்ந்த ஆடையை வீட்டாடையாய் உடுத்தினாளாம். அதிநவீன சமையலறையினுள் புழுவடிவாய் நழுவிவிழும் நூடில்ஸ்ஸை ஆயிரம் தடவை உருசி பார்த்து சமைத்தாளாம். உள்நுழைந்த கணவனை அன்பாய் அழைத்து அக்கறையாய்ப் பரிமாறினாளாம். அவனும் ஆஹா.... அபாரச்சுவை என்று கூறித் தித்திப்பாய் ஒரு முத்தமும் தந்தானாம் என மறைவினின்று பார்த்த என் தோழி மகிழ்வாய் என் காதில் தீஞ்சுவை தந்தளித்தாள். 
              
     விலையுயர்ந்த ஆடை, அதிநவீன சமையலறை, படகுக்கார், பளிங்குவீடு அத்தனையும் அவள் சீர் சிறப்புமிக்க வாழ்வைப் படம் பிடித்துக் காட்டியது. தன் கையாலே உணவைச் சமைத்து பரிமாறும் பக்குவத்தில் அவள் பொறுப்புணர்ச்சியும், அன்பும் ஆழமாய்த் தெரிந்தது. உணவின் சுவையை இரசித்த என் மருமகன் வெளிப்பாட்டின் தன்மையில் மனங்கோணாது என் மகளை என் மருமகன், தன் மனச்சிறையில் வைத்திருக்கும் மாண்பை எண்ணி மனமகிழ்ந்தேன். இதைவிட சீர்பெற்ற வாழ்வை எங்கே யான் என் மகளுக்குப் பெற்றுக் கொடுக்கப் போகின்றேன் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டு மனதார அவள் வாழ வாழ்த்துகளை வழங்கினேன்.
        இக்காட்சி ‚
                ''முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
                  கழுவுறு கலிங்கம், கழாது, உடீஇ,
                  குவளை உண்கண் குய்ப்புகை கழுமத் 
                  தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
                  'இனிது' என் கணவன் உண்டலின்
                  நுண்ணுதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே''

    எனச் செவிலித்தாய் நற்றாய்க்குப் பகர்ந்ததாயான குறுந்தொகைப் பாடலை என் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியது.
               
     காதல் என்பதும், காதலனுடன் களவொழுக்கம் மேற்கொள்ளலும், உடன்போக்கும் எக்காலத்தும் நடைபெறும் நிகழ்வே. தக்க காதலனுடன் தன் மகள் மணாளனின் மணமென்னும் அரியணையில் சிறப்பாய் வீற்றிருந்தாள், சிந்தையில் சஞ்சலம் கொள்ளாது வாழ்த்துதலே அன்னைக்குப் பெருமை.




    பொருள் விளக்கம் அறிய விரும்பிய வாசகருக்காக:

    இப்பாடல் கூடலூர்கிழாரினால், குறுந்தொகையில் பாடப்பட்ட 167 ஆவது பாடல்


    விலைமதிப்பற்ற பட்டாடையை அணிந்த தலைவி, காந்தல் போன்ற மெல்லிய விரல்களால், தயிரைப் பிசைகின்றாள். புளிக்குழம்பு அடுப்பிலே வைக்கப்பட்டிருக்கின்றது. தன்னுடைய கைகளைக் கழுவாது தான் அணிந்திருக்கும் பட்டாடையில் கைகளைத் துடைத்தபடி தாளிதம் செய்கின்றாள். அடுப்பிலே வைக்கப்பட்ட குழம்பிலிருந்து வரும் புகை கண்களில் கண்ணீரை வரச் செய்கின்றது. இவ்வாறு செய்து பரிமாறப்பட்ட உணவை உண்ட கணவன் இனிது என்று தலைவியைப் பாராட்டுகின்றான். இதுவே பாடலின் பொருள். தனித்தனிச் சொல்லாக பொருள் கூறமுடியாது. ஏனெனில், அதற்குரிய நூல் என் கைவசம் இல்லை. நாம் கூட பொருள் அற்ற பாடப்புத்தகத்திலேயே விரிவுரையாளரின் கருத்தைக் கேட்டுப் படித்தோம். நான் கற்றதை நினைவுறுத்தி பொருள் விளங்காத சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க இணைத்திருக்கின்றேன்.


    11 கருத்துகள்:

    1. சகோதரி குறுந்தொகைப் பாடலின் கருத்தையும், வார்த்தைகளின் கருத்தையும் எழுதினால் தானே ஆக்கம் முழுமை பெறும். கழுவுறு கலிங்கம் கழாது, உடிஇ இப்படிப் பல கருத்து எல்லோருக்கும் புரிய எழுதினால் உதவியாக இருக்குமென்பது என் தாழ்மையான அபிப்பிராயம். எனக்கும் புரியவில்லை. www.kovaikkavi.wordpress.com.

      பதிலளிநீக்கு
    2. உங்கள் தமிழ் ஆளுமை வியக்க வைக்கிறது. (எனினும், நூடில்ஸ் என்றபின் உருசி என்பானேன்?)

      பதிலளிநீக்கு
    3. எக்காலத்திலும் தாய்மையின் சிறப்பு
      என்பது தன்னிகர் அற்றது என்பதை
      மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்
      தரமான பதிவு
      தங்கள் பதிவை தொடர்வதில்
      பெருமிதம் கொள்கிறேன்

      பதிலளிநீக்கு
    4. அருமை.தொடர்ந்து எழுதுங்கள்.

      பதிலளிநீக்கு
    5. arumaiyana padhivu,pagirvukku nandri...simply super....

      பதிலளிநீக்கு
    6. கவிஞரே! இப்பாடலின் பதவுரை கீழே:
      முளி தயிர் பிசைந்த - முற்றிய தயிரைப் பிசைந்த, காந்தள் மெல் விரல் - காந்தள் மலரைப் போன்ற மெல்லியவிரலை, கழுவுறு கலிங்கம் - துடைத்துக் கொண்ட ஆடையை, கழாஅது உடீஇ - துவையாமல் உடுத்துக் கொண்டு, குவளை உண்கண் - குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில், குய் புகை கமழ - தாளிப்பினது புகை மணப்ப, தான் துழந்து அட்ட - தானே துழாவிச் சமைத்த, தீ புளி பாகர் - இனிய புளிப்பையுடைய குழம்பை, கணவன்- தன் தலைவன், இனிது என உண்டலின் - இனிதென்று உண்பதனால், ஒள்நுதல் முகன் - தலைவியின் முகமானது, நுண்ணிதின் மகிழ்ந்தன்று - நுண்ணிதாக மகிழ்ந்தது. இந்த குய்புகை என்ற சொல்லாட்சி மிக இனிதானது. தாளிக்கும் போதில் வரும் குய்ய்யென்ற ஓலை மற்றும் புகை.

      பதிலளிநீக்கு
    7. இப்பதவுரையைத் தேடித் தந்தமைக்கு மிக்கநன்றி. நான் இருக்கின்ற நாட்டில் பதவுரை கிடைக்க மாட்டாது. எப்போதோ கற்றது இப்போது முற்றுமுழுதாக வேறுபட்ட சூழல். நூல்களும் கைவசம் இல்லை. ஆனால், கற்றவிடயம் உள்நின்று உறுத்தும். வெளியே பதப்படுத்தி கக்குவதற்கு. கேட்டுக் கொண்டமைக்கு அமைய பதவுரை தந்தமைக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

      பதிலளிநீக்கு
    8. என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (1/11/11 -செவ்வாய் கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...