• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    புதன், 5 மார்ச், 2025

    உலகம் அமைதி பெற

     


    இன்றைய உலகிலே முக்கியமாகப் பேசப்பட வேண்டிய ஒரு விடயம் உலக அமைதி. உலக அமைதி என்று  சொல்லுகின்ற போது அது இடவாகு பெயராக அமைந்திருக்கின்றது. உலக மக்களின் அமைதியைக் குறிக்கின்றது. அதற்குள்ளாகவே உலக சமாதானமும் அடங்கி விடுகின்றது. உலகம் சமாதானமாக இருந்தாலேயே வாழுகின்ற ஒரு வாழ்க்கையை நிம்மதியாக நிறைவு செய்வோம். நாம் அன்பாலே உலகு செய்யவில்லை, வன்பாலேயே உலகு செய்திருக்கின்றோம். அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைக்கும் பக்குவம் மனங்களுக்கிடையே ஏற்படாத காரணமே மனங்களைச் சிதைத்து உலகத்தின் அமைதியைக் கெடுக்கின்றது.

    உலக அமைதி முதலில் குடும்பத்தால் சீரழிகின்றது. குடும்பத்துக்குள் கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடுகளால் நடைபெறுவது குடும்பச் சண்டை. இதனால், மன அமைதி குன்றுகின்றது. சகோதரர்களிடையே பணவிடயங்கள் உரிமைப் போராட்டங்கள் ஏற்படுகின்றன. இதனால், பாரத யுத்தமே கண்டது எம்முடைய தமிழ்நாடு. இதனைவிட குடும்ப அமைதியின்மை மனிதர்களிடம் மனஅழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. அதன் மூலமாக பலவிதமான பிரச்சினைகளை குடும்பம் எதிர்நோக்க வேண்டி வருவதுடன் தொடர் கொலைகள் நடைபெறுவதற்குக் காரணமாக அமைகின்றன என்று மனநலவியலாளர்கள் ஆய்வுகள் மூலம் எடுத்துரைக்கின்றார்கள்.

    பேராசையும் எமக்கு உரிமையில்லாதவற்றில் நாம் ஆசைப்படுதலும் குடும்பம் அமைதி இழந்து உலக அமைதியைக் கெடுக்கின்றன. இதனால், இராவண வதை, வாலி வதை போன்ற யுத்தங்கள் கண்டது தமிழ்நாடு. இவ்வாறான காரணங்களினால், குடும்ப அமைதி குன்றி அது அடுத்த கட்டமாக நாட்டின் அமைதியின்மையாகவும் உலக அமைதியின்மையாகவும் மாற்றம் பெறுகின்றது.

    எந்த ஒரு விடயமும் முதலில் வீட்டில் இருந்து நாட்டுக்குப் பரவிப் பின் நாட்டில் இருந்து உலகத்துக்கு பரவுகின்றது. நாடும் வீடும் உலகமும் விளங்க வேண்டுமென்றால், முதலில் வீட்டுக்குள் அமைதி  கிடைக்க வேண்டும். அதற்குரிய வழிகளை ஒவ்வொரு வீட்டு அங்கத்தவர்களும் நாம் பேண வேண்டியது அவசியம். 

     

    ஐரோப்பிய நாடுகளில் இருக்கின்ற நாம் இன்று மனப் பதட்டத்துடன் இருக்கின்றோம். ஒரு உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்து அதன் வடு இன்னும் மாறுவதற்கு முன்னே மீண்டும் ஒரு உலக யுத்தத்தைச் சந்திக்கப் போகின்றோமோ என்ற அச்சம் எங்களுடைய மனத்திலே நிறைந்திருக்கின்றது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலே நடக்கின்ற யுத்தத்தை நோக்கி எம்முடைய கவனம் ஒவ்வொரு நாளும் இருக்கின்றது. ஐரோப்பியர்களின் தலையீட்டால் நாம் வாழுகின்ற ஐரோப்பிய நாடுகள் அணுகுண்டுத் தாக்குதலுக்குள் அகப்பட்டு விடுமோ என்ற அச்சம் இங்கு வாழுகின்ற அனைவரின் மனங்களிலும் இருக்கின்றது.

     கல்லும் கத்தியும் கொண்டு மனிதன் உணவுக்காகப் போராடிய காலத்தில் போராட்டம் என்பது மிருகவதையில் மட்டுமே இருந்தது. அன்று தொடங்கி மனிதனுக்குள் கொலை என்ற உணர்வு ஆழமாகப் பதிந்து அது சந்ததி சந்ததியாக மரபணுக்கள் மூலம் கடத்தப்பட்டு வருகின்றது. இனக்குழுக்களாகப் பிரிந்து மனிதன் பின் ஊர்களாக விரிவடைந்து நாடுகளாகப் பெருகி மனித சமுதாயம் வளர்கின்ற போது உக்கிரம் அடைந்து நான் எனக்கு என்ற உரிமைப் போராட்டமாக மாறியது. ஒரு நாட்டை தம்முடைய கைப்பிடிக்குள் கொண்டு வர ஒரு நாடு எத்தனிக்கும் போது மற்றைய நாடுகளை அடிமைப்படுத்துகின்ற அடிமைத்தனம் முன்னிலைக்கு வருகின்றது.

     இதற்கு என்ன செய்யலாம் என்று பார்த்தால் சூரியன் தன் கட்டுப்பாட்டுக்குள் இந்தப் பால்வீதியை வைத்திருப்பதைப் போல் ஒரு குடைக்குள் ஆட்சி இருந்துவிட்டால், இந்த உலக யுத்தம் என்பது இல்லாமல் போய்விடும். இதைத்தான் வேதாத்திரி மகரிசி அவர்கள் நிலவுலகுக்கோர் ஆட்சி என்றார்.  உலகத்தையே தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று ஜெர்மனிய முன்னாள் ஜனாதிபதி ஹிட்லர் நினைத்தார். அதற்கு அவர் கையாண்ட அணுகுமுறை தவறாக அமைந்திருந்தார்.  ஒரு குடைக்குள் ஆட்சி என்று வருகின்ற போது இலங்கையில் நடந்தது போல உள்நாட்டு யுத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. அதனால் மனங்களைத்தான் நாம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    நிலவுலகுக்கோர் ஆட்சிக்கான காலம் கடந்து விட்டது. இதை நாம் நினைத்தாலும் நடத்த முடியாத நிலையிலே உலகம் நிற்கின்றது. எப்போது நிலப்பகுதிகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என்று ஐவகை நிலங்களாகப் பிரிக்கப்பட்டதோ அவ்வாறு அவ்வவ் நிலங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்தார்களோ வாழ்ந்தார்களோ அன்றிலிருந்தே உலகம் பிரிக்கப்பட்டு விட்டது. தனக்கென ஒரு ஆட்சி, தனக்கென ஒரு சட்டம், கல்வி முறை, என நாடுகள் ரீதியாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. மொழி, இன, மத ரீதியாக மனிதன் பிரிக்கப்பட்டுவிட்டான். ஒன்றை ஒன்று வெல்ல போரிட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி விட்டான். 

     இந்த யுத்த குணம் மனிதனிடம் மட்டும்தானா? என்று நாம் சிந்திக்கின்ற போது கூர்ப்பு விதியின் படி குரங்கில் இருந்து தான் மனிதன் பரிணாம வளர்ச்சி கண்டான் என்றால், அந்தக் குரங்குக் கூட்டங்கள் தம்முடைய பகுதியைப் பிற குரங்கு இனங்களோ வேறு மிருகங்களோ ஆக்கிரமிக்கின்ற போது உக்கிரமாகப் போரிட்டிருக்கின்றார்கள். இப்போதும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இதேபோலப் பிற உயிரினங்களில் உதாரணமாக மீனைப் பார்த்தால் ஒரு இன மீன் தன்னை நோக்கி வரும் வேறு ஒரு இனத்திடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு வகையான வாயுவைப் பின்புறமாகச் செலுத்தும். அதனுடைய மணத்ததைச் சுவாசிக்க முடியாதும் அந்த நச்சுக் காற்றை உள்வாங்க முடியாமலும் அம்மீனைத் தொடராது தம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஓடிவிடும்.

     இவ்வாறு தற்காப்புக்காகத், தனக்குரிய உரிமையை விட்டுக்கொடுக்காமல் வைத்திருப்பதற்காகவும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், பிற்பட்ட காலத்தில் அதையும் மீறி ஆசை மேலீட்டினாலும் தலைமைத்துவ வேட்கையாலும் யுத்தமாக வெளிப்பட்டிருக்கின்றது. இலங்கையை யுத்தம் பற்றிச் சிந்தித்தால், உரிமைப் போராட்டமானது சகோதர படுகொலை, புத்து ஜீவிகள் படுகொலை என்று தன் இனத்தைத் தானே அழித்தது மட்டுமல்லாமல் உள்நாட்டு யுத்தமாக மாறி ஒரு இனத்தை அந்நாட்டு அரசாங்கமே அழித்த யுத்தமாக உருமாறியது. இவ்வாறு தம்முடைய தேவையும், தம்முடைய தேவையை நிறைவேற்றுவதற்கு மனிதன் எத்துணை அளவுக்கும் போவான் என்பது உறுதியாகின்றது.

     இன்னும் ஒருபுறம் தமிழர்களுடைய இலக்கியங்களை எடுத்து நோக்கினால், ஒரு நாட்டின் மன்னன் தன்னுடைய நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு மக்களுக்கு வருகின்ற இடையூறிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை அவனுக்கு இருந்தது.

     மனுநீதிகண்ட சோழன் புராணத்தில்

     

    மாநிலங்கா வலனாவான்

     மன்னுயிர்காக் குங்காலைத்

    தானதனுக் கிடையூறு

       தன்னால்தன் பரிசனத்தால்

    ஊனமிகு பகைத்திறத்தால்

       கள்வரால் உயிர்தம்மால்

    ஆனபயம் ஐந்துந்தீர்த்

       தறங்காப்பா னல்லனோ

     என்று பெரிய நிலவுலகத்திற்கு அரசனாவான், நிலை பெற்ற உயிர்களைக் காக்குங் காலத்திலே அந்த உயிர்களுக்குத் தன் காரணமாயும், தன் கீழ்ப் பணிபுரியும் அமைச்சர் முதலானோரின் காரண மாயும், குற்றத்தை விளைவிக்கும் பகைவர்கள் காரணமாயும், கள்வர் காரணமாயும், பிற உயிர்கள் காரணமாயும் வருகின்ற துன்பங்களால் வரும் ஐந்து அச்சங்களையும் நீக்கி அறத்தை வழுவாமல் காப்பவன் அல்லனோ? என்று மன்னன் அவன் கடமை கூறப்பட்டுள்ளது.

     

    ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

    சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

    வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

    நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

    ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

    களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

     பெற்றுப் பாதுகாத்தல் தாயினுடைய கடமையாம். தன் குலத்துக்குரிய படைக்கலப்பயிற்சியாகிய கல்வி அதற்குரிய அறிவு அதற்குரிய செய்கைகள் ஆகிய இவற்றால் நிறைந்தவனாகக் செய்தல் தகப்பனுக்குக் கடமையாகும். படைக்கலத்தைத் திருத்தமாகச் செய்துகொடுத்தல் கொல்லனுக்குக் கடமையாகும்;. ஒளியுடன் விளங்குகின்ற வாளைக் கையிலே ஏந்தி போர்க்களத்திலே பகைவர்களின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீள்வது அம்மகனுடைய கடமையாகும் என்று களத்துக்கு வீரரை அனுப்பும் வீரமரபு  பற்றிப் புறநானூற்றிலே பொன்முடியார் எடுத்துக் கூறுகின்றார். இங்கு களிறு எறிந்து பெயர்தல் என்பது தாக்க வரும் யானையை ஓடச் செய்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். அதுவே சரியாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

     மனித இனம் குழுவாக வாழ்ந்த காலத்திலும் அக்குழுவின் தலைவன் மக்களைக் காப்பாற்ற வேண்டும் அதற்கு போரிட்டே ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

     தமிழர்களின் அடையாளமாகக் காதலும் வீரமும் கூறப்படும் போது வீரம் என்ற தலைப்பிலே கொலைதான் முன்னிலையில் பார்க்கப்படுகின்றது. ஒரு சமூகத்திலே ஒரு தனிமனிதன் கொலை செய்யப்படுகின்றான் என்றான் அந்தக் கொலை செய்பவனுக்குக் கொலைக்குற்றத்துக்கான தண்டனை கொடுக்கப்படுகின்றது. அதே கொலையை எமது உரிமைப் போராட்டத்திற்காகச் செய்கின்ற போது அது தமிழனின் வீரமாகப் பார்க்கப்படுகின்றது. இப்போராட்டமே இலங்கையிலும் போராளிகள் உரிமைக்காகப் போராடுகின்ற போது அரசாங்கத்தை மறைந்திருந்து தாக்கினார்கள். அரசாங்கம் போராளிகளை அழிப்பதற்காக குறி வைத்துத் தாக்கினார்கள். இங்கு குற்றம் என்று பார்த்தால் அது இரு தரப்பினரிடமும் இருக்கின்றது. ஆனால், நாம் என்ன சொல்கின்றோம் தமிழர் வீரம் மிகுந்தவர்கள். அரசாங்கத்தை எதிர்த்துப் போரிட்டார்கள் என்று மார்பு தட்டிக் கொள்ளுகின்றோம். தனியே செய்தால் அது கொலை. கூட்டமாகச் செய்தால் அது வீரம் என்று எம்முடைய மன அகராதியிலே பதிந்து வைத்திருக்கின்றோம். ரோஜாப்பூவை எடுத்துப் பார்த்தால் அது எப்படிப் பார்த்தாலும் அது ரோஜாவே. அதுபோலவே உயிர்களைக் கொல்வது அது எந்த வடிவமாக இருந்தாலும் அது கொலையாகவே கருதப்படும்.

     

    பாரி என்னும் குறுநில மன்னனை அழிப்பதற்கு சேர சோழ பாண்டிய மூவேந்தரும் ஒன்றாக இணைந்து அழித்தார்கள். தம்மை விஞ்சி பாரி என்னும் குறுநில மன்னன் உயர்ந்து நிற்பான் என்று அஞ்சினார்கள். உலகத்துக்கு நல்லவனாக வாழக்கூட மனித இனம் இடம்தராது என்னும் கசப்பான உண்மையையும் நாம் இவ்விடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.போரினால் வருகின்ற அழிவு துன்பங்களில் இருந்து நாடு அமைதியடைய வேண்டும் என்று மன்னர்கள் எண்ணினார்கள். அதற்குரிய முயற்சிகளும் மேற்கொண்டிருந்தார்கள். தொண்டைமான் என்னும் மன்னன் தன்னுடைய படைக்கலங்களின் வலிமையைப் பற்றிப் பெரிதாக எண்ணியதால் அறியாமையில் அதியமானுடன் போரிட எண்ணினான். அதனால், அதியமான் அப்போரை தடுத்து நிறுத்துவதற்காக  ஒளவையாரை தொண்டைமானிடம் தூது அனுப்பினார். அங்கு படைக்கலங்களை தொண்டைமான் ஒளவையாருக்குக் காட்டினார். ஒளவையாரும்

     இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்

    கண்டிர ணோன்காழ் திருத்திநெய் யணிந்து

    கடியுடை வியனக ரவ்வே யவ்வே

    பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து

    கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்

    உண்டாயிற் பதங்கொடுத்

    தில்லாயி னுடனுண்ணும்

    இல்லோ ரொக்கற் றலைவன்

    அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே.

     இந்தப் படைக்கலங்கள் பீலி யணியப்பட்டு மாலை சூட்டப்பட்டு உடலிடம் திரண்ட வலிய காம்பை அழகுபடச் செய்யப்பட்டு நெய்யிடப்பட்டு காவலையுடைய அகன்ற கோயிலிடத்து இருக்கின்றன. ஆனால், செல்வம் இருந்தால் உணவு கொடுத்து இல்லையாயின் உள்ளதனைப் பலரோடுகூட உண்ணும்; தலைமயையுடைய எம் வேந்தன் அதியமானுடைய கூரிய நுனியையுடைய வேலோ பகைவரைக் குத்துதலாற் கங்கும் நுனியும் முரிந்து கொல்லனது பணிக்களரியாகிய குறிய கொட்டில் இடத்திலே கிடக்கின்றன. என்று தொண்டைமான் படைக்கலங்களைப் புகழ்வது போல பழித்து தொண்டைமானுக்கும்  அதியமானுக்கும் இடையிலே நடைபெறவிருந்த போரை நிறுத்துவதற்காக ஒளவையார் பாடினார்.

     எழுத்து முதலில் இலையில் ஆரம்பித்துப் பின் பனையோலையில் தொடர்ந்து அதன்பின் கல்லிலே எழுதப்பட்டு பத்திரிகைக்கு வந்தது போல் ஆயுதங்களும் கல்லில் தொடங்கி பல வடிவங்களாகி கி.பி 6 ஆம் நூற்றாண்டிலே இரும்பின் பயன்பாடு ஆரம்பிக்கத் தொடங்கியபின் இரும்பு ஆயுத்தங்கள் பாவனைக்கு வந்தன. அதன்பின் மிகவும் மோசமான நிலைக்கு போராட்டங்கள் வந்துள்ளன. அதன்பின் மனிதன் தற்போது அணுகுண்டு அச்சத்துக்கு ஆளாகியுள்ளான்.  ஜப்பானில் ஹிரோசிமா, நாகசாக்கி நகரங்களில் 1945 இல் வீசப்பட்ட அணுகுண்டின் தாக்கம் இன்றும் பிறக்கும் குழந்தைகளில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

     இவ்வாறு போரினால் ஏற்படுகின்ற அழிவுகள், குடும்ப அழிவுகள் ஏற்படாது உலகம் அமைதி பெறவேண்டும்  என்றால், எவ்வாறான நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்று பல அறிஞர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த ரோக்கத்தோன் அமைப்பும் தொடர் உரை நிகழ்வாக உலக அமைதிக்காக நடத்திக் கொண்டிருக்கின்றது. பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.

     

    போரில்லா நல்லுலகம் வர வேண்டும் என்பதற்காக உலக சமாதான இயக்கத்தை 10 ஆம் திகதி ஆவணி மாதம் 2002 முதல் 13.8.2002 வரை ஆழியாரில் உலக அமைதி மாநாட்டை வேதாத்திரி மகரிஷி அவர்கள் நடத்தினார்.  அந்த மாநாட்டிலே ஐக்கியநாடுகள் தகவல் மைய இயக்குனர் திரு பீட்டர் ஸ்ரார்ஸ்ரெபிக் அவர்கள் நேரிலே வந்து உலக சமாதான திட்டம் பற்றிய மகரிஷியின் தீர்மானத்தைப் பெற்றுக் கொண்டார். அந்த உலக சமாதானத் திட்டங்களைத் தற்போது யுனெஸ்கோ நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவின் அமைப்பிலே சேர்த்திருக்கிறார்கள்.

     வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலக அமைதிக்காக போரில்லா நல்லுலகம் வேண்டுமென்கிறார். அதற்குப் பலமதங்கள், பல கடவுள் பழக்கம் குறித்து ஆய்ந்து உண்மை ஒன்றைத் தேர்ந்தெடுத்தல் என்று தன்னுடைய 14 தத்துவங்களில் இவற்றையும் வலியுறுத்தியிருக்கின்றார். அமைதி வரவேண்டும் என்பதற்காகப் புத்த மதம் பகைவரை நேசி என்று போதிக்கின்றது. ஆனால், அதன் வழி நடப்பவர்கள் செய்கின்றார்களா? யார் சொன்னார் எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு நாம் எவர் சொன்ன சொல்லையும் சொந்த அறிவால் நினைத்துப் பார்க்க வேண்டும் அல்லவா? எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண வேண்டும் அல்லவா? அப்படித் தாமாகத் தமது சிந்தனையாற்றலால் இந்த இவுலகை மாற்ற முற்படவேண்டும். ஆனால், இப்போது மதத்தின் பெயரால் பல படுகொலைகள் நடக்கின்றன. அதனால், நாம் புத்தரையும், இயேசுவையும், அல்லாவையும் பதவி இறக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் சொல்லிய அறிவுரைகளை யாருமே கேட்டு நடப்பதில்லை.

     

    நோய் உள்ளவர்களுக்குத்தானே மருந்து கொடுக்க வேண்டும். அதுபோல குறைகள் நிறைந்த உலகத்துக்குத்தான் அறிவுரைகள் தேவை. திருவள்ளுவர் 1330 குறள்களில் உலகம் உய்வதற்காகப் பல அறிவுரைகள் கூறினார். அறிவுடமை என்பது பிறர் உயிர்களுக்கு நீ செய்யும்  உதவிதான் அறிவு என்று எடுத்துரைத்தார். கொல்லாமை போதிக்கப்பட்டது. நீதி நூல்கள், ஆசாரக்கோவை போன்ற நூல்கள் அறிவுரை கூறி மக்களை நல்வழிப்படுத்தும் நூல்கள் எழுந்தன. வள்ளலார் தோன்றினார் வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினார். எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் பார்க்கச் சொன்னார். ஆனால், இன்று உலகநாடுகளில் என்ன நடக்கின்றது?

     அசோகச் சக்கரவர்த்தி யுத்தகளத்திலே இறந்து கிடக்கின்ற உயிர்களைப் பார்க்கின்றான். அந்த வேளை ஒருதாய் போரிலே விழுப்புண் ஏற்பட்டு இறந்த தன்னுடைய மகனின் உடலை மடியிலே போட்டு அழுகின்றாள். அவளுக்குத் தாகம் எடுக்கின்றது தண்ணீர் கேட்கின்றாள். அசோகச் சக்கரவர்த்தி அவளுடைய கையில் நீர் கொடுக்கின்றான். நீ யார்? என்று அவள் கேட்கின்றாள். அசோகச் சக்கரவர்த்தி என்று அவன் சொன்ன போது, தண்ணீரை ஊற்றிவிட்டு இறந்த இந்த பிணங்களின் மேல் நடந்தா நீ அரசாளப் போகின்றாய் என்று பலவாறாகப் பேசுகின்றாள். அவளுடைய ஆவேசமான பேச்சு அசோகச் சக்கரவர்த்தியை அன்புதான் இன்ப ஊற்று அன்புதான் உலக மகா சக்தி என்று மனமாற்றத்தைக் கொண்டு வந்தது.

     மிருகங்கள் நாட்டுக்குள் வந்தால் மயக்க மருந்து போட்டு அவற்றை மீண்டும் காட்டுக்குள் கொண்டு விடுகின்றார்கள். அதேபோல மனித மனங்களில் இருக்கும் போராடும் குணத்தை ஏதாவது மருந்து மாத்திரைகள் மூலமாகக் குணமாக்க வேண்டும். அதற்கு மருந்து பக்கவிளைவுகளைக் கொண்டு வரும் என்று நினைப்பவர்கள். தியானம் மூலமாக மனத்தை அடக்கும் மனவளக் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

     வேதாத்திரி மகரிஷி அவர்கள் தியான வழிமுறைகளைப் பலவாறாக வடிவமைத்துக் கொடுத்திருக்கின்றார். அதன்படி வீட்டில் இருந்தபடி தியானம் செய்கின்ற போது பிரம்மஞானம் பெறக்கூடியவர்களாக மாறுகின்றோம். ஞானம் என்றால் அறிவு அந்த அறிவை பிரம்ம ரிஷிகள் போல காட்டுக்குப் போய்த்தான் பெற வேண்டும் என்றில்லை என மகரிஷி சொல்கின்ற போது வீட்டில் இருக்கும் போதே ஞானம் பெறலாம். அத்துடன் ஆசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம், பாலுணர்வு இந்த ஆறு குணங்களையும் அறுகுண சீரமைப்பை செய்கின்ற போது நான் என்னுடைய வாழ்நாளிலே யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் செய்ய மாட்டேன் துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன் என்று சங்கற்பம் எடுத்துக் கொள்வோம். இந்த ஆறு குணங்களையும் சீரமைத்து விட்டோமானால்நாம் திருந்திவிடுவோம். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தியான வழியிலும் அறுகுண சீரமைப்பு வழியிலும் தன்னை உட்படுத்திக் கொள்ளுகின்ற போது தன்னை சிறப்பான மனிதனாக்குவான். அவனுக்கு மருந்து மாத்திரைகள் தேவையில்லை. வீட்டில் ஆரம்பித்த அமைதி நாட்டிலும் பிரதிபலிக்கும் உலக அமைதி கிடைக்கும்.

     வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலக அமைதி பற்றி சிந்தித்து அன்பொளி என்ற மாதஇதழை 1957 ல் ஆரம்பித்தார். 1958 ல் உலக சமுதாய சேவா சங்கம் ஆரம்பித்தார். முதல் அயல்நாட்டு மன்றத்தை வோஷிங்டனில் லழபய ளுநசஎiஉந ஊநவெநச என்ற பெயரிலும் பின் நேற துநசஉல இலும் ஆரம்பித்தார். உலகமெங்கும் வேதாத்திரியம் ஒலித்தது. 9.1.1975 இலே ஐக்கியநாடுகள் நிறுவனத்தில் உலக அமைதிக்கு ஆன்மீகத்தின் வளர்ச்சி முக்கியம் என்று ஆற்றிய உரை மக்களைக் கவர்ந்தது. பின் சிக்காக்ககோவிலும் கிளை ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு அவர் வாழ்ந்த காலத்தில் உலக அமைதிக்காக அயராது உழைத்தார்.

     யாதும் ஊரே யாவரும் கேளிர். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று கணியன் பூங்குன்றனார் பாடியது எல்லாருக்கும் தெரியும். ஆனால், அவர் கூறிய சகோதரத்துவம் எல்லாரும் உறவினர்கள் என்னும் மனப்பாங்கு மக்களிடம் வளர வேண்டுமே. அடுத்தவரை நேசிக்கும் பக்குவம் வருகின்றவர்களுக்குத்தான் மிருக வதை, உயிர்க் கொலை செய்வதற்கு அச்சம் ஏற்படும்.

     காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்

    கடலும் மலையும் எங்கள் கூட்டம்;

    நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;

    நோக்க நோக்கக் களியாட்டம்.

     என்று பாரதி கூறுவதுபோல இயற்கையை நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

     முதலில் மனிதன் தன்னைக் காதலிக்க வேண்டும். இதனையே வள்ளுவர்

     "தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்

    துன்னற்க தீவினை பால்' என்றார்

     ஒருவன் தன்னை விரும்பினால், தான் செய்கின்ற பாவங்கள் தனக்கு மீண்டும் வந்து தன்னையே தாக்கும் என்ற பயத்தினால், எந்தத் தீய வினைகளையும் செய்ய மாட்டான். எனவே ஒருவன் தன்னைக் காதலிக்க வேண்டும்.

     பெண்கள் தாம் அடிமை என்றோ, அடக்கமாக இருக்க வேண்டியவர்கள் என்றோ தாமாக எண்ணக் கூடாது. உரிமை என்பது ஆண் பெண் என்ற பாகுபாட்டுடன் அமையக் கூடாது. ஏற்கனவே பாரதியும், பெரியாரும் பல இடித்துரைத்திருக்கின்றார்கள். அந்த பாரதிக்கு பெண் உரிமை போதிக்க நிவேதிதா என்ற பெண்ணே தேவைப்பட்டது. பெண்கள் தாமாகத் தம்முடைய உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும். 1924 வரை பெண்களுக்கு முலை வரி விதிக்கப்பட்டிருந்ததை அறிந்திருக்கின்றீர்களா? பிற்படுத்தப்பட்ட பெண்களும் தலித் பெண்களும் மார்பகம் வளரத் தொடங்க முலைவரி செலுத்த வேண்டும். வரி வசூலிப்பவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, பூப்பு எய்திய தலித் பெண்களிடமிருந்து முலை வரியை வசூலிப்பார்கள். பெண்ணின் மார்பகங்களின் அளவைப் பொறுத்து வரி வசூலிப்பவர்களால் வரி அளவு மதிப்பிடப்பட்டது.

     அதேபோல் தாழ்த்தப்பட்ட மக்கள் மேலாடை அணிவதில்லை. வீடுகளில் கதவு வைக்க முடியாது. பெண்கள் உடன்கட்டை ஏறுதல். இவ்வாறான அடக்குமுறைகள் பெரும் போராட்டங்களின் மூலமே நீக்கப்பட்டது. ஆயினும் இன்னும் சில பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மணிப்பூரில் நடந்த பிரச்சினை இன்றும் புத்தர், காந்தி பிறந்த மண்ணிலே நடைபெறுவது அவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக அமைகின்றது.

     இவ்வாறான ஆணாதிக்கம் தடுக்கப்படும் போது இயல்பாகவே பெண்கள் மனதளவில் பாதிக்கப்படுவது நீக்கப்பட்டு மனஅமைதி ஏற்படுகின்றது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குடும்பங்களில் சம உரிமை, பெண்களை மதிக்கின்ற மனப்பாங்கு, அடக்குமுறைத் தவிர்ப்பு வருகின்ற போது குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைந்து, அந்த வீட்டிலேயே ஒன்றாக வளருகின்ற குழந்தைகள் மனநிலை பாதிப்பற்ற சிறப்பான குழந்தைகளாக வளர வாய்ப்பு ஏற்படுகின்றது. நாட்டின் தேவைகளைத் தாமாக முன் வந்து தீர்த்து வைக்க வேண்டும். அளவுக்கு மீறிப் பணத்தைச் சேகரித்து வைப்பவர்கள். பஞ்சம் பட்டினியால் வாடுபவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

     நாம் எவ்வாறு நடந்து கொள்ளுகின்றோமோ அது எமக்குத் திரும்பவும் வரும் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது எம்முடைய இலங்கை மண்ணிலே நாம் கண்டு கொண்ட ஒரு தத்துவமாகவே இருக்கின்றது. செய்கின்ற வினைக்கேற்பப் பிரதிபலனை நாம் அனுபவிப்போம் என்பதே மந்திரம். பல மொழி பேசுகின்ற பல இன மக்களைப் பாதுகாத்து வசதி வாய்ப்புக்களைச் செய்து கொடுத்திருக்கும் நாம் வாழுகின்ற ஐரோப்பிய நாடானது அனைத்து மக்களையும் அணைத்து வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்திருக்கின்றது. ஐரோப்பிய நாடுகளில் அனைத்து மக்களுடனும் சேர்ந்து விட்டுக் கொடுத்து  வாழுகின்ற நாம் ஏன் எம்முடைய தாய் நாட்டிலும்  ஒற்றுமையாக, சகோதரத்துவ மனப்பாங்குடன் வாழ முயற்சிக்கக் கூடாது. மகிழ்ச்சியும் சந்தோசமும் அமைதியும் எம்முடைய மனதுக்குள் இருந்தே வரவேண்டும்.

     கனவு காணுங்கள் கனவு காணுங்கள்

    கனவு காணுங்கள் - அந்தக்  கனவுகளை

    எண்ணங்களாக மாற்றுங்கள்.

    எண்ணங்களை செயல்படுத்துங்கள் என்றார் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள்

     உலக அமைதி பற்றி ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டியது அவசியம். அதை எண்ணங்களாக மாற்றிச் செயற்படுத்த வேண்டும். வாழ்க்கை என்பது ஒருமுறைதான். அந்த வாழ்க்கையை நாம் மகிழ்ச்சியாகவும் பிறரை மனத்தால் கூட வருத்தாமலும் வாழ உறுதி எடுக்க வேண்டும். இயற்கையை வழிபட்ட மனிதர்கள் நாய் கடிக்கும் என்று நாயைக் கொல்ல சிந்திக்காது நாயை வைரவக் கடவுள் என்று வணங்கினார்கள். கடிக்க வரும் பாம்பை அடித்துக் கொல்லாமல் நாகதம்பிரான் என்று கடவுளாக வணங்கினார்கள். அவ்வாறே எம்மைத் தாக்குபவர்களையும் தூற்றுபவர்களையும் வாழ்த்துதல் என்ற உயர்ந்த பண்புடன் வாழ்த்திக் கொண்டே இருப்போம். அந்த வாழ்த்து திரும்பவும் எங்களை வந்தடையும். உலகத்தைச் சுத்தப்படுத்த இயற்கை மழையைத் தூவி தூசிகளை அகற்றுகின்றது. அதுபோல் உலகம் அமைதி பெற எம்மை நாம் தயார் படுத்திக்கொண்டு பகையை ஒழித்து, அனைத்து உயிர்களிடமும் சாதி, மத, இன பேதமின்றி அன்பைச் செலுத்தி, வேற்றுமையை வெறுத்து, ஒற்றுமையை நிலைநாட்டி, ஆயுதப் போராட்டத்தை எதிர்த்து, அன்புவழி உலகை இன்பத்தில் ஆழ்த்துவோம். அன்புதான் இன்ப ஊற்று, அன்புதான் உலக மகா சக்தி.

     கௌசி

    ஜெர்மனி

    13.08.2023

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    திங்கள், 3 மார்ச், 2025

    வாசி.. நேசி.. யோசி..

    எனக்கு என்ன நடக்கின்றது என்பது எனக்கே தெரியாது. என்னைச் சுற்றிப் புத்தகங்கள் பறப்பது போலவும், என்னை நோக்கி வருவது போலவும் உணர்கிறேன். எங்கே போனாலும் என் அருகே ஒரு புத்தகக் கட்டு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கூடிக் கும்மாளம் இடுகின்ற மனிதர்களிடம் ஏதாவது நல்ல புதுமை இருக்கிறதா என்பதை தேடுகிறேன். நான் மட்டும் ஏன் இப்படி இருக்கின்றேன்? என்பது என்னுடைய அம்மாவின் கேள்வி. சுற்றிச்சுற்றி வருகின்ற அத்தனை கடதாசியும் எனக்குப் பல செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பது போல எனக்குப்படுகிறது.  அருகே வருகின்ற ஒரு கடதாசியை எடுத்துப் பார்க்கின்றேன். அதில் ஆழமான அறிவியல் கருத்து ஒன்று இருக்கிறது. பேனாக்கள் மைகளை நிரப்பிய வண்ணமே இருக்கின்றன. கடதாசிகள் எழுத்துக்களை நிரப்பிய வண்ணமே இருக்கின்றன. புதிய புதிய கருத்துக்கள் என்று நான் தேடுபவை அத்தனையும் ஏற்கனவே வந்த கருத்துக்கள் போல எனக்கு தென்படுகின்றன. நான் ஏன் இப்படி இருக்கின்றேன்? எனக்குள்ளே நானும் பல தடவை கேட்டுக் கேட்டுப் பார்த்தாயிற்று. கண்களுக்கு மையிடுகின்ற காலத்தில் கண்களுக்கு எழுத்துக்களைத் துளிகளாக விடுகின்றேன்.

     அம்மா அடிக்கடி கோயிலுக்கு போய் வருவார். அப்படி என்னதான் வேண்டி கேட்கின்றாரோ தெரியவில்லை. யாரோ ஒரு மனிதன் ஆகாயத்தில் இருந்து கொண்டு இவர்கள் எல்லாம் கேட்பது எல்லாம் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார் என்று தான் இவர்களெல்லாம் நம்புகின்றார்கள். என்னைப் பொறுத்த அளவில் என்னுடைய மூளை தான் கடவுள். எனக்கு மூளை கடவுள் போல் உலகத்தில் பிறந்த அத்தனைக்கும் மூளை தான் கடவுள். கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தது போல நாங்கள் எல்லாம் மூளையான் என்னும் இயந்திரத்துடன் தான் பிறந்திருக்கின்றோம். அதுதான் என்னை வாழவைக்கின்றது. வழி நடத்துகின்றது. அதற்குத் தீனி போட வேண்டும் அல்லவா அதுதான் நான் புத்தகங்களைத் தேடுகின்றேன்.

     


    இரவு ஒரு மணி அம்மா கண்ணை விழித்து பார்க்கிறாள். படுக்கையறையில் வெளிச்சம். “இந்த லைட்டை ஆஃப் பண்ணாம படுத்திருக்கிறாள். எத்தனை தடவை சொன்னாலும் இவளுக்கு விளங்குவதாயில்லை” என்று கூறியபடி  அம்மா என்னுடைய அறைக்குள் வந்தாள். நான் தூங்கவில்லை கையிலே புத்தகத்தை மிக ஆர்வமாக வாசித்துக் கொண்டிருந்தேன்.

    “இன்னும் நீ படிக்கலையா?  இப்படி நித்திரை முழிச்சு முழிச்சுப் படிச்சு படிச்சு M.A பரீட்சை பாஸ் ஆகியிருந்தாலும் பரவாயில்லை. என்ன செய்யப் போற. மற்ற பிள்ளைகளைப் பார். அது அது பாட்டு, டான்ஸ் என்று சுத்தித் தெரியுதுகள். நீ மட்டும் எந்த நேரமும் ஒரு மூலையில் இருந்தபடி புத்தகத்தோடு வாசிப்பு. வாசிப்பு.. வாசிப்பு"

    என்று முணுமுணுத்தபடி அம்மா என்னுடைய புத்தகத்தைப் பறித்தாள்.

    "விடுங்கள் அம்மா"

    "இப்ப எத்தனை மணி புள்ள. நாளைக்கு வேலை இருக்குதல்லோ. அட இன்னும் இந்தப் புத்தகத்தைத் தானா கையில வைத்திருக்கிறாய்? 

    “அம்மா போன போக்கில் பார்த்துட்டுப் போறதுக்கு இது என்ன கதைப் புத்தகமா? நல்லா ஆழமா இரண்டு மூன்று தடவை வாசித்தால் மட்டும் தான் மூளையில் இருக்கும். இது ஆய்வு சம்பந்தமான புத்தகம்.”

     

    “மூளையில் பதித்து என்ன செய்யப் போகிறாய்? நாலு பேருக்கு நீ சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள். அவரவர்கு அவரவர் வேலை.”

     

    “யாருக்கும் சொல்வதற்கு நான் படிக்கவில்லை நான் தெரிந்து கொள்வதற்குப்  படிக்கிறேன் அம்மா”

     

    “அதுதான் தெரிந்து வைத்து என்ன  செய்யப் போகிறாய்?

     

    “உங்களுக்கு அதெல்லாம் விளங்காது”

     

    “சரி..  சரி என்னென்றாலும் செய்" என்று கூறியபடி மீண்டும் வந்து படுக்கையில் படுத்து விட்டாள்.

     

    “இவள் ஏன் இப்படி இருக்கிறாள். புத்தகத்தை தூக்கிக்கொண்டு புத்தகப் புழுவாக இருக்கிறாளே. இவளுடைய வயது பிள்ளைகள் எப்படி எல்லாம் தங்களுடைய பொழுதைக் கழிக்கின்றார்கள். கண்டதையும் படித்துப் படித்து அறிவு தான் வீங்கிப்  போய்க் கிடக்கிறது.

     

    என்ர பிள்ளை அறிவாளி என்று சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள். பரிட்சையில் பாஸ் பண்ணி சான்றிதழ்  எடுத்தால் மட்டும் தான் அவர்கள் அறிவாளி என்று நினைக்கிற சமுதாயம் ஆயிற்று.  இவளுக்கு ஏன் இது இன்னும் விளங்குதில்லை என்று சத்தமாகத் தனக்குத் தானே பேசியபடி அம்மா படுக்கையில் விழுந்தாள்.

    இப்போது என் கையில் இருப்பது காலம் என்னும் ஸ்டீபன் ஹாக்கிங் புத்தகம். ஒவ்வொரு பக்கங்களையும் மிக ஆழமாக இருட்டிலும்  புத்தகத்தில் லைட் பூட்டி  வாசிக்கின்றேன்.

     இதை எடுத்து நான் ஒன்றும் விரிவுரை நடத்தப் போவதில்லை. ஆனால், என்னுடைய அறிவின் எல்லையை இந்த புத்தகங்கள் தான் தீர்மானிக்கும் என்று முழு நம்பிக்கை என்னிடம் இருந்தது. உழைப்புக்குத் தக்க ஊதியம் தருகின்ற ஒரு தொழிலை வைத்திருக்கின்றேன். நான் செய்கின்ற கணினித் தொழிலில் முன்னேற்றத்தை காண்கின்றேன். ஆனால் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணமோ எனக்குத் தோன்றவில்லை.

     

    அடுத்தவர்களுக்குச் சான்றிதழ் காட்ட வேண்டுமென்ற அவசியம் எனக்கு இல்லை.  அன்றும் அப்படித்தான் வீட்டிலிருந்து கணினியில் வேலை பார்ப்பதனால் 5:00 மணிக்கு வேலை முடிந்தபின் கையிலே புத்தகத்தைத் தூக்கிக்கொண்டு வாசிகசாலையில் இருந்து அமைதியாக புத்தகம் வாசிப்பதற்கு வீட்டை விட்டுக் கிளம்பினேன்.

     

    கதவைத் திறந்து காற்று போல் வீதிக்கு வந்தேன். வெளியே வந்த என்னை, சித்தி சிவாஜினி அழுத கண்ணீருடன் எதிர் கொண்டாள். என்னைக் கண்டதும் அவளுடைய அழுகை ஆர்ப்பாட்டமாகியது.

    "ஏன் சித்தி அழுகின்றீர்கள்" என்று அவளை  அணைத்துக்கொண்டு கேட்டேன். நான் கேட்டபோது அவளுடைய அழுகை மேலும் அதிகரிக்கின்றது. அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் உள்ளே வருகின்றேன். தன்னுடைய தங்கையினுடைய நிலைமையைக் கண்ட அம்மா  "என்ன நடந்தது என்ன நடந்தது" என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கி விட்டாள். 

    "அம்மா சித்திக்கு குடிக்கிறதுக்கு ஏதாவது கொண்டு வாங்க" 

    என்று கூறி அம்மாவை அனுப்பிவிட்டு சித்தியின் அருகே அமருகின்றேன். 

    "சித்தி! முதலில் கண்ணை துடையுங்கள். அழுகையை நிப்பாட்டுங்கள். நீங்கள் என்ன விடயம் என்று சொன்னால் தான் எதையும் நாங்கள் செய்ய முடியும். இந்த உலகத்தில் முடியாதது என்று எதுவுமே இல்லை. நாம் முயற்சி செய்து  பார்க்கின்ற போது தான் எந்தப் பாரிய விடயத்தையும் சரி செய்ய முடியும். நீங்கள் சொல்லுங்கள் என்னால் முடிந்த எல்லாவற்றையும் உங்களுக்கு நான் செய்வேன்" என்று நான் கூறினேன்.

     

    "கிருத்திகா! உனக்குத் தெரியும் தானே உன்னுடைய தங்கச்சி பிரியா கொஞ்ச நாளாக சுகவீனமாய் இருக்கின்றாள் என்ற விஷயம்"

    "ஓம் அதுக்கென்ன சித்தி மருந்து எடுக்குறா தானே. காலையில் டாக்டர்கிட்ட போறதென்று சொன்னீங்களே! அதுக்கு என்ன சித்தி இப்ப?

    "டாக்டர் கைய விரிச்சிட்டார் மகள். இது என்ன வருத்தம் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையாம்" என்று தொடர்ந்து கண்ணீர் விடத் தொடங்கினாள். தாய் பிள்ளை பாசம் என்பது விபரிக்க முடியாதது. இதற்கு விலங்கு, பறவை, பூச்சி, புழுக்கள் எதுவுமே விதிவிலக்கல்ல.

    தேநீரைக் கொண்டு வந்து கொடுத்த அம்மாவும் சித்தியுடன் இணைந்து விட்டார்.

    "கொஞ்சம் ரெண்டு பேரும் நிறுத்துறீங்களா? சித்தி அழுகையை நிறுத்துங்கள் . ரீயைக் குடியுங்கள். வாங்க முதல் வீட்டை போவோம்.  எனக்கு பிரியாவின் மருந்துகள், டாக்டர் தந்த Prescription விபரங்கள், எல்லா விஷயங்களையும் எடுத்து என்னிடம் தாருங்கள்"  என்றேன். 

    தேநீரை அவசரமாக அருந்திவிட்டு என் பின்னே தொடர்ந்தாள் சித்தி. கையிலே மடிக்கணினியை எடுத்துக்கொண்டு விரைவாக வாகனத்தைச் சென்றடைந்தேன். சித்தியின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என் இதயத்துக்குள் படபட என்று அடித்துக் கொள்கிறது.  ஆனால் அதை நான் வெளியில் காட்டவே இல்லை. என்ன செய்யலாம் என்ற சிந்தனை மட்டும் எனக்குள் ஓடியது. 

    வாகனத்திலிருந்து சித்தியை இறக்கி சித்தியின் வீட்டுக்குள் நுழைந்த போது பிரியா கன்னங்கள் ஒட்டியவளாய் குழி விழுந்த கண்களுடன் மெலிந்த  தேகத்துடன் கட்டிலில் படுத்திருப்பது தெரிந்தது. அவர்களுடைய வரவேற்பு அறைக் கதிரை கட்டிலாக மாறி இருந்தது. வழமையாக என்னை ஓடிவந்து கட்டியணைத்து "அக்கா..." என்று ஆசையோடு அழைக்கின்ற பிரியா கிழித்துப் போட்ட காகிதம் போல மெத்தையிலே கிடந்தாள். அவளருகே சென்று அவளுடைய தலையைத் தடவியபடி "நான் பார்த்துக் கொள்கிறேன் பிரியா" என்று அன்பாக அவளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தேன். அறைக்குள் ஓடி சென்ற சித்தி கையில் சில பத்திரங்களையும், மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டு என்னருகே வந்தாள். 

    மடிக்கணினியை திறந்தேன். ChatGpt க்கு மாத்திரைகள், மருத்துவரின் குறிப்புக்கள்,  பிரியாவின் உடல் நிலை, பற்றிய சகல விடயங்களையும் விபரமாக எழுதினேன். எழுதி அடுத்த நிமிடத்தில் படபட என்று பல குறிப்புகளும் செய்ய வேண்டிய முறைகளையும் மருந்துகளையும் ChatGpt  எழுதிக் கொடுத்தது. அவை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவசரமாக சித்தியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றேன். அவசரமாக மருத்துவரை பார்க்க வேண்டும் என்று தகவல் கொடுத்தேன். காத்திருக்கும் படி முன் பக்கம் இருந்த பணியாளன் கூறினான்.

     சில நிமிடங்கள் காப்பியை மிஷினில் இருந்து எடுத்து குடித்துக் கொண்டே காத்திருந்தேன். சித்தியோ பதட்டத்துடன் மூக்கு சிந்தியவாறு இருந்தார். சிறிது நேரத்தில் மருத்துவரின் அழைப்பிற்கேற்ப மருத்துவரின் முன்னே அமர்ந்தேன். டாக்டர். பிரென்டாதான் பிரியாவினுடைய மருத்துவர். டாக்டர் என்ற பெருமையோ கர்வமோ அவரிடம் இருந்ததில்லை. எமது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் மருத்துவரை சந்திப்பது என்றால் உடனே அனுமதி கிடையாது. அவர்களிடம் எம்முடைய அபிப்பிராயங்களை தெரிவிக்கின்ற போது நீங்கள் என்ன டாக்டரா? என்று கேட்பார்கள். கையிலே கொடுத்த பத்திரங்களை பார்த்த டாக்டர் பிரெண்டா கண்களை உயர்த்தி மெல்லிய சிரிப்புடன் ஒரு முறை கிருத்திகாவைப் பார்த்தாள். “வாட் எ கிரேட்” என்று கிருத்திகாவைப் பார்த்துக் கூறியவாறு பிரியாவை மருத்துவமனையில் சேர்க்கும்படி உத்தரவு தந்தாள்.

    பிரியாவினுடைய அம்மாவைப் பார்த்து “கிருத்திகா உங்களுக்குச் செய்திருப்பது சாதாரணமான விடயம் இல்லை. நாங்களே நினைத்துப் பார்க்காத ஒரு மருந்து மருத்துவத்தை எங்களுக்கு கிருத்திகா கொண்டு வந்து தந்திருக்கின்றாள். அவள் காட்டிய இந்த வழியிலே சாதகம் இருக்கின்றதா? பாதகம் இருக்கின்றதா என்பதை மருந்துகளை நான் கவனித்த போதும், பயிற்சிகளை நான் உற்று நோக்கிய போதும் உணர்ந்து கொண்டேன். எத்தனை படித்து பட்டம் பெற்றாலும் சொந்த அறிவு என்ற ஒன்று இருக்க வேண்டும். சந்தர்ப்பத்துக்கு ஏற்றது போல் மூளையைப் பயன்படுத்துகின்ற உத்தி தெரிந்திருக்க வேண்டும். அது எங்களால் முடியவில்லை கிருத்திகாவுக்கு முடிந்திருக்கின்றது. இந்த செயற்கை நுண்ணறிவு சில விடயங்களில் தப்பிதமாக இருந்தாலும் சில விடயங்களில் உயிருக்குக் கை கொடுக்கின்றது என்பதை இதன் மூலம் அறிந்து கொண்டேன். வெல்டன் கிருத்திகா என்று என்னைப் பாராட்டிய டாக்டர் பிரெண்டா, என்னையும் சித்தியையும்  வீட்டுக்கு அனுப்பிவிட்டு பிரியாவினுடைய சிகிச்சைக்கு ஆயத்தங்கள் செய்வதற்காக எழுந்து சென்றாள்.

    வெளியே வந்த சித்தி என்னைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து நன்றி பாராட்டினாள். உன்னுடைய அம்மா கொடுத்து வைத்தவள். உன்னைப் போல ஒரு பிள்ளை பெற்றெடுப்பதற்குப் பாக்கியம் பெற்றவள். என்னதான் படித்துப் பட்டம் எடுத்தாலும், அடுத்தவர்களுக்காகத் தம்மை இழந்து உதவுகின்ற பக்குவமே மனிதர்களுக்குத் தேவை. அந்த விஷயத்தில் நீ கடவுள் மகள்” என்று கூறினாள்.

    “சித்தி அன்புதான் இறக்கை போல உலகத்தைப் பாதுகாக்கும். அது காற்றைவிட  அடுத்தவர்களில் வேகமாகப் பரவக்கூடியது’ என்று கூறிய வண்ணம் இருவருமாக வீட்டிற்கு சென்றோம். வாசலுக்கு ஓடி வந்த அம்மாவிடம் சித்தியே முழு விடயங்களையும் மகிழ்ச்சி ததும்பக் கூறினாள். ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்த அம்மா மெல்லிய புன்சிரிப்புடன் “கெட்டிக்காரி” என்றாள். 

    என்னுடைய வாசிகசாலைத் திட்டம் இன்று நிறைவேறாத காரணத்தாலே கட்டிலில் அமர்ந்து தலையணையை மடியிலே வைத்து அதன்மேல்  IPAD ஐத் திறந்தேன். Moon Reader Pro வில் நான் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களில் கலீல் ஜிப்ரான் அவர்களின் தீர்க்கதரிசி என்னும் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த வரிகள் முன்னே தென்பட்டன.

    “நீங்கள் அன்பு கொண்டால் கடவுள் எம் உள்ளத்தில் இருக்கிறார் என்று கூறாதீர்கள். மாறாக இறைவன் உள்ளத்தில் நாங்கள் உள்ளோம் என்று கூறுங்கள். அன்பின் பாதையை வகுக்க நீங்கள் முயல வேண்டாம். உங்களை ஒரு பொருட்டாக அவ் அன்பு கருதுமானால் அதுவே உங்கள் பாதையை வகுக்க வழி காட்டும். 

    வரிகளை எனக்குள் வசமாக்க அம்மா கதவைத் திறந்தாள்.

    “உன்னோடு ஒரு நிமிடம் பேசலாமா?

    “அம்மா.. இது என்ன புதிதாக இருக்கிறது என்று எழுந்து அம்மாவை இறுகக் கட்டியணைத்தேன்.

    “உனக்காக நான் திருமணத்துக்கு பையனை பார்க்க போவதில்லை. உனக்கு பிடித்தவனை உனக்குப் பிடித்தால் நீ திருமணம் செய்து கொள். இல்லையென்றால், அவனோடு வாழ்ந்து உனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகின்றபோது திருமணம் செய். வாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தான் அது அவரவர்க்கு எப்படி வாய்க்கின்றதோ அதன்படி வாழ வேண்டியதுதான். இது எங்கள் சமுதாயத்திற்கு பிடிக்காததாக இருந்தாலும், நாம் வாழுகின்ற சிறிது காலப்பகுதிக்குள் என்ன பெரிய சாதிக்க போகின்றோம். மற்றவர்கள் கூறுகின்ற வார்த்தைகளை என் காதுக்குள் போட்டு அதன் வலியை மனத்துக்குள் கொண்டு வந்து, நான் வாழுகின்ற இந்த கொஞ்சக் காலத்துக்குள் என் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை. மகிழ்ச்சி என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. அவர்களுடைய சுதந்திரத்திற்குள் நாங்கள் புகுந்த விளையாடக் கூடாது. திருமணம் என்பது ஜெனடிக் ஒப்பந்தம். இரண்டு பாலினருடைய மரபணுக்கள் கலந்து ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க சமுதாயம் ஏற்படுத்திய சடங்கு. ஆரோக்கியமான தலைமுறை உருவாக ஆரோக்கியமான இருவர் இணைய வேண்டும். அதை நான் உனக்குச் சொல்லித் தரத் தேவை இல்லை” என்று சொல்லி படி எழுந்தாள். 

    அம்மாக்கு என்ன நடந்தது?  ஸ்தம்பித்து நின்றேன்.


    24.02.2025

     

     

     

    சனி, 25 ஜனவரி, 2025

    வள்ளுவர் குறளும் தற்காலமும்


    முற்கால இலக்கியக் கருத்துக்களைத் தற்காலத்தில் ஏற்று நடத்தல் என்பது சாத்தியப்படும் விடயமல்ல. காலமும் நடைமுறைகளும் இவ்வாறு இருந்தன என்பதை வரலாற்றுப் பின்னணியை அறிந்து கற்றுக் கொள்ளலாம். ஆனால், அக்கருத்துக்களை வளருகின்ற சமுதாயத்துக்குத் திணிப்பது என்பது குற்றமுள்ள காரியமாகவே இருக்கிறது. அக்கருத்துக்களை ஆராய்ந்து அதற்கேற்ப காலத்தின் கணிப்பீட்டுடன் பொருத்திப் பார்த்து ஏற்று நடப்பதே சாலச்சிறந்தது.


    கால மாற்றத்துக்கும் தொழிட்ப வளர்ச்சிக்கும் ஏற்ப மாறுப்பட கலாசாரப் பின்னணியைத் தற்போது நாம் நோக்கக் கூடியதாக இருக்கின்றது. இது காலத்தின் கட்டாயம். எம்முடைய முன்னோர்கள் இப்படியே வாழ்ந்தார்கள் என்னும் போது அக்காலகட்டத்துச் சூழ்நிலை எவ்வாறு இருந்தது என்பதை அறிய மானடவியலும், வரலாற்றுக் கல்வியும் கற்றிருக்க வேண்டியது அவசியம். 'கண்டது கற்கப் பண்டிதனாவான்' என்னும் கருத்துக்கேற்ப ஆழக்கற்று அறிவை வளர்;த்துக் கொண்டால், எதிர்கால சந்ததியின் மனஅழுத்தத்தையும் எம்முடைய மனஅழுத்தத்தையும் குறைக்கக் கூடியதாக இருக்கும். 


    காலத்துக்குக் காலம் கலாசாரங்களும் பண்பாடுகளும் மாறுபட்டுக் கொண்டு வருகின்ற நிலைமையை நாம் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. காலநிலை, இயற்கை வளங்கள், போன்றவற்றுக்கு ஏற்ப அந்நிலப்பகுதியில் வாழுகின்ற மக்களின் பழக்கவழக்கங்களும், பண்பாட்டு அம்சங்களும் அமைந்திருக்கின்றன. தம்முடைய இருப்பிடங்களை விட்டுப் புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்கள்  தாங்கள் வாழுகின்ற நாடுகளுக்கேற்பத் தம்முடைய கலாசாரத்தை மாற்றி வாழுகின்றார்கள். சூழலும் சுற்றாடலும் மனிதனின் சிந்தனைத் திறனைத் தூண்டுவதுடன் சமூக ஒற்றுமையையும் கலாசாரக் கலப்பையும் ஏற்படுத்துகின்றது. இந்த நிலைமை புலம்பெயர்ந்த மக்களின் பண்பாட்டு விழுமியங்களை மாற்றியமைக்கின்றது. இம்மக்கள் தாம் பிறந்து வளர்ந்த மண்ணுக்குச் செல்லுகின்ற போது தம்முடைய மாற்றுக் கலாசாரத்தை அங்கும் விதைப்பதை அறியக்கூடிதாய இருக்கின்றது. அறிதல் என்பது அறிவோடு சம்பந்தப்பட்டதே. எனவே கலாசாரம் கால, சூழல், மண்வளம், இயற்கை போன்றவற்றைச் சார்ந்திருந்தால், தாய் மண்ணில் வாழுபவர்கள் புலம்பெயர்ந்த மக்களின் பண்பாட்டு அம்சங்களை ஏற்று நடப்பது என்பது முற்றிலும் தவறாக அமையும். உதாரணமாக குளிர் பிரதேசங்களில் வாழுகின்றவர்கள் இசை துள்ளல் இசையாகவும் மேடை நிகழ்ச்சிகளில் ஆடிப்பாடித் துள்ளித் துள்ளிப் பாடுவதையும் நாம் கண்டிருக்கின்றறோம். இது தம்முடைய உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றது. ஆனால், வெப்பம் மிகுந்த ஆசிய நாடுகளின் இசை கர்நாடக இசையாகவும் ஒரு இடத்தில் அமர்ந்திருந்து பாடும் இசையாகவும் இருக்கும். அவர்கள் குதித்துத் துள்ளி ஆடுகின்ற போது ஏற்கனவே வெப்பம் மிகுதியில் இருப்பவர்களுக்கு மேலும் உடல் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கின்றது. அதனால், இயற்கைக்கு மீறி குளிரூட்டியுடன் கூடிய மண்டபங்களில் இசை நிகழ்ச்சியைச் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இவை சமூகவலைத்தளங்கள் கற்பித்த கலாசாரங்களாகக் காணப்படுகின்றன. 


    கைகளை காற்சட்டைப் பைக்குள் வைத்து நடக்கின்ற பண்பு குளிர்நாடுகளில் இருந்து வெப்பக் காலநிலையுள்ள நாட்டு மக்கள் பொருத்தமற்ற முறையில் கற்றுக் கொண்டதாகக் காணப்படுகின்றது. குளிர்காலங்களில் விரல்கள் விறைத்து மஞ்சள் நிறத்திற்கு வந்துவிடுவது இயற்கை. அதனால், கைகளைக் காற்சட்டைப் பைக்குள் வைத்து நடக்கின்ற வழக்கம் இருக்கின்றது. இது எப்படி வெப்பமான நாடுகளுக்குப் பொருத்தமாக அமையும். காற்றோட்டமுள்ள புடைவையும், வேட்டியும் மறைந்து இறுக்கமான காற்சட்டை எப்படிப் புகுந்தது? 

    இவ்வாறே திருக்குறளின் பொருத்தமற்ற கருத்துக்கள் காலக்கணப்பீட்டில் ஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியத்துக்குள்ளாகின்றது. 

    இல்லறவியலிலே வாழ்க்கைத் துணைநலம் என்னும் அதிகாரத்திலே 

    தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 

    பெய் எனப் பெய்யும் மழை 

    என்னும் ஒரு குறள் இருப்பது யாவரும் அறிந்தது. சிறுவர்கள் கூடக் கற்கின்றார்கள். மனனம் செய்கின்றார்கள். ஆனால், அதன் பொருள் விளங்கிக் கற்கின்றார்களோ தெரியவில்லை. 

    ''பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள 

    நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ 

    நூலின் பரிந்துரை எல்லாம் பரிமேலழகன், 

    தெளித்த உரையாமோ தெளி'' 


    என்று பெருஞ்சித்திரனார் பரிமேலழகர் உரையின் சிறப்புப் பற்றி எழுதியுள்ளார். அந்த பரிமேலழர் 

    பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழுது துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல மழை பெய்யும் என்று பரிமேலழகர் உரை சொல்கிறார்

    டாக்டர் ஆ.இராமகிருட்டினன் தன்னுடைய உரையிலே பிற தெய்வம் தொழ மாட்டாள்;ளூ தன் தெய்வமாகிய கணவனைத் துயில் எழுந்ததும் தொழுவாள். அவள் பெய் என்று சொல்ல மழை பெய்யும். தெய்வமே அவள் ஏவல் கேட்கும் என்று எழுதியுள்ளார்.

    கோ. பாரத்தசாரதி தன்னுடய உரையிலே வேறு தெய்வங்களைத் தொழாமல் தன் கணவனையே தொழுது துயிலெழும் பெண், வேண்டியபோது பெய்யும் மழைக்கு ஒப்பானவள்.

    இவ்வாறான அர்த்தப் பொருத்தங்கள் பெண் கணவனைக் கடவுளாகக் கருத வேண்டும். அவர் காலடியை வணங்கி அடிமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருப்பதை உணருகின்றோம். 

    பூமி தோன்றிய காலத்தில் இருந்து அதன் வளர்ச்சியும் கலாச்சாரங்களும் மாறு பட்டு கொண்டே  வருகின்றன. கிறிஸ்துவுக்கு முன் இருந்த பண்பாட்டு கலாசார விழுமியுங்கள் 2024 ஆம் ஆண்டு நிச்சயமாக இல்லை. தாய்வழி சமுதாயம் தந்தைவழி சமுதாயமாக மாற்றப்பட்டது. வல்கா நதிக்கரையோர சமுதாயத்தை இன்று நினைத்துப் பார்க்கவே முடியாது. 

    கணவன் குடும்பத்துக்குத் தேவையான வருவாயைக் கொண்டு வருகின்ற போது மனைவி வீட்டில் இருந்து வீட்டைப் பொறுப்பெடுத்து வேலைகளைச் செய்த காலம் வள்ளுவர் காலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்காலத்தை நாம் சிந்தனையில்; கொண்டு வரும்போது கணவனும் மனைவியும் ஒன்றாகவே காலையில் வேலைக்குப் போகின்றார்கள். இருவரும் ஒன்றாகவே சேர்ந்து காலை உணவை தயாரிக்கின்றார்கள். ஒன்றாகவே தம்முடைய அலுவலகத்துக்குச் செல்லுகின்றார்கள். ஒன்றாகவே வீட்டுக்கு வருகின்றார்கள். வேலை செய்த களைப்பிலே வருகின்ற வழியில் ஏதாவது கடையிலே தம்முடைய உணவை உண்டு விட்டு வீட்டுக்கு வந்து உறங்கிப் போகின்றார்கள்.   ஆனால் சிலர் வீட்டுக்கு வந்து வீட்டு வேலைகளை கவனித்துப் பின் உறங்கப் போவதும் இருக்கின்றது. ஆனால் காலையில் எழுந்தவுடன் தெய்வத்தை வணங்காது கணவனை வணங்கி எழுகின்ற பெண் என்பதை நாம் இக்காலத்தில் துளி கூட நினைத்துப் பார்க்க முடியாது. பரிமேலழகருடைய கருத்தை நாம் வாழுகின்ற காலத்துக்கு ஏற்பப் பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியம்

    கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் உரை எழுதியுள்ளார். இதனையே சற்று மாற்றி காலையில் அனுதினம் கண்விழித்துக் கணவனைத் தொழுகின்ற பெண்ணானவள், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அவனைத் தெய்வமாக நினைக்கின்றாள் என்ற ஒரு மனஉணர்வை அவனுக்கு ஏற்படுத்துகின்றாள். மூளைச் சலவை செய்கின்றாள் என்றே சொல்லவேண்டியுள்ளது. இவ்வாறான பெண் பெய் என்று சொல்ல மழை பெய்வது போலக் கணவனும் அவளுடைய காரியங்களுக்கு உடனடியாக செயற்படுவான். இச்செயலானது தன்னையும் தன் உறவினர்களையும் பேணுவதற்கும், அவளுடைய குடும்ப வாழ்க்கைக்கும் கணவனுடைய பங்களிப்பு உறுதுணையாகின்றது. இவ்வாறு இக்குறளை ஏற்றுக் கொள்வதே சாலச்சிறந்தது. அதுவே அவருடைய அடுத்து வரும் குறளாகிய 

    தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

    சொற்காத்துச் சோர்விலாள் பெண் 

    என்னும் குறளுக்கும் வலிமை சேர்க்கும்.

    காலைத் தொட்டு வணங்குதல் அடிமைத் தனம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அது வணங்கப்படுபவர்களைப் பொறுத்தது. தெய்வீகத் தன்மை பொருந்தியவராக(மனஅளவில்) இருந்தால், அவருடைய பாதங்களின் மூலம் கடத்தப்படும் நற்கதிர் வீச்சுக்கள் வணங்குபவர்களுக்குப் பலனையே தருகின்றது. எனவே எதுவும் அவரவர் மனநிலைக்கும் சூழலுக்கும் ஏற்பவே பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. 

    எழுத்தாளன் எழுதுவது வாசகர்களுக்காக மட்டுமே. அதனால், இலக்கியங்களைக் காலமும், சூழலும், கலாசாரப் படிமங்களுமே தீர்மானிக்கும்.


    யாதவஷேம் நூல் விமர்சனம்

    ஒரு புத்தகம் படிக்கும் போது கலாசாரம், மொழி, வரலாறு, மனித உணர்வுகள் போன்றவற்றை வெகுவாக நாம் கற்றுக் கொள்ளலாம். அதற்கு உதாரணமாக திகழ்கின்ற புத்தகம் தான் யாத்வஷேம். இந்த நூலை நேமிசந்த்ரா என்னும் கன்னட எழுத்தாளர் எழுதியுள்ளார். இதனைத் தமிழில் கே. நல்லதம்பி அவர்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். 2022 ஆம் ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது இந்த நூலுக்கு கிடைத்திருக்கின்றது. 

    இந்த நூலின் பெயர் யாத் வஷேம் என்பது மரணம் அடைந்த ஆறு மில்லியன் யூதர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற இடம் வாலன் பேர்க் என்பவர் தான் இதனை அமைத்திருந்த இது ஹிட்லருடைய யுத்த காலத்தில் ஜெர்மனி பெர்லினில் இருந்து தப்பித் தன்னுடைய தந்தையுடன் வந்த ஒரு பத்து வயது சிறுமி ஹ்யானா கூறுகின்ற கதை. வந்த ஒரு வருடத்தில் தந்தை இறந்து விடுகின்றார். தனித்து நின்ற பிள்ளையை கன்னட மொழி பேசுகின்ற ஒரு குடும்பம் எடுத்து வளர்க்கின்றது. அந்தக் குடும்பத்திலேயே இருக்கின்ற விவேக்கை ஹ்யானா திருமணம் செய்கின்றாள். திருமணமாகி குழந்தை பெற்றெடுக்கின்றாள். தமிழ் பெண்ணாகவே அனிதா என்ற பெயருடன் அவர்களுடன் வாழுகின்றாள். அவளுடைய எழுபதாவது வயதில் மகன் பல வருடங்களாக கனவு சுமந்த அனிதாவை அவருடைய அம்மாவையும் சகோதரர்களையும் தேடிச் செல்ல விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கின்றான். தனது மனைவியின் சுமையை இறக்கி வைப்பதற்காக விவேக் ஹ்யானாவை அழைத்துக் கொண்டு இஸ்ரேல், அமெரிக்கா, ஜெர்மனி, ஆம்ஸ்ரடாம், என்று தேடுகின்றான். தன்னுடைய தாய் சகோதரர்களை அவள் கண்டுபிடிக்கின்றாளா என்பது தான் இந்த கதையின் முடிவு. இதை அறிவதற்கு நிச்சயமாக நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும். ஒவ்வொரு இடமாக அவள் செய்கின்ற போது அந்த இடத்தில் நடந்த சம்பவங்கள் காட்சிகள் மனதை உருக்குகின்ற சம்பவங்கள் அனைத்தையுமே வாசிக்கக் கூடியதாக இருக்கும். ஜெர்மனியில் யூதர்கள் பற்றிய எத்தனையோ திரைப்படங்களை தொலைக்காட்சியில் நான் பார்த்திருக்கின்றேன் ஆனால் இந்த புத்தகத்தை வாசிக்கின்ற போது நெஞ்சுக்குள்ளே ஏதோ ஒரு அழுத்தத்தை இந்த புத்தகம் ஏற்படுத்துகின்றது. 

    ஜூதர்கள் பாதிக்கப்பட்டார்கள் யூதர்களால் பாலஸ்தீனர் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று இறுதி பகுதியில் அனிதா என்ற கதாபாத்திரம் சொல்லுகின்ற போருக்கு எதிரான நியாய தீர்ப்புகள் மிக சிறப்பாக அறிவுறுத்தலாக அமைந்திருக்கின்றன. 

    இறுதிப் பகுதியில் அவசியம் இல்லாத யுத்தத்தையும் மனிதநேயமற்ற கொலையையும் கண்டிக்கும் வண்ணமாக இக்கதையின் நாயகி ஹ்யானா பேசுவதாக கதை முடிந்திருக்கின்றது. 

    இப்போது இஸ்ரேல் வந்திருக்கின்றாள். இஸ்ரேல் என்றால் 3000 ஆண்டுகள். பழமையான வரலாறு இருக்கின்றது. வெற்றி கொண்ட அரசன் என்பதுதான் அதன் பொருள். ஹீப்ரோ மொழியில் பாலஸ்தீனம் என்றால் பாலஸ்தீனர்களின் பெருமை என்று பொருள். 

    யூத மதத்தவர்களுடைய மொழியையும் பழக்கவழக்கங்களையும் இந்த நூலிலே நாம் கற்றுக் கொள்ளலாம் அவர்களுடைய சபாத் என்னும் சனிக்கிழமை விரதம் பார்த் மிஸ்வாக் என்னும் பூப்புனித நீராட்டு விழா போன்ற பல விடயங்களை நாம் கற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அவர்களுடைய உடலை எப்படி புதைக்கின்றார்கள்? 60 லட்சம் யூதர்களும் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள். 

    பிராமணர்கள் பிராமணர்கள் அல்லாதவர்களில் உள்ள பிராமணர்கள் அதாவது குஞ்சுடிகர்கள், அவர்களுடைய பழக்கவழக்கங்கள் பிராமணர்களுடைய பழக்க வழக்கங்கள், பெங்களூர் கோரிப்பாளையத்தில் காணப்படும் யூதர்களுடைய சமாதிகள் புனித டோராவின் சொல்லப்பட்டிருப்பவை ஆபிரகாமின் பிள்ளைகள் பெற்ற விபரம், ஹீப்ரு மொழி சொற்கள்விஷவாயு, டி கம்ப்ரஷன் அறை, DachauStaft in München. Holocaust Museum I Washington, அழுகைச் சுவர், ஜெருசலேம் பற்றிய விளக்கங்கள்

     60 லட்சம் யூதர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டனர் சில புத்தகங்கள் இதுவரை நீங்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளுக்கு ஒரு தீர்ப்பாக அமைவதை நீங்கள் அறியக்கூடியதாக இருக்கும் உங்களுக்கு தீர்ப்பை நீங்களே வழங்குவீர்கள். உன்னையே இந்த புத்தகத்தை வாசித்த போது என்னுடைய பல அறியாமைகள் நீங்கின. ஒரு நூலுக்காக இந்த எழுத்தாளர் சேகரித்த அனுபவங்களையும் அறிவையும் எம் போன்ற வாசகர்களுக்கு பயன்படுத்தியமைக்கு அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் இது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்


    சனி, 4 ஜனவரி, 2025

    உள்ளத்தின் குரல் - பிரேம் ராவத்

     


    உள்ளத்தின் குரல்

    ஆசிரியர்:  பிரேம் ராவத்

    வெளியீடு: 2024

    12 அத்தியாயங்களில் 357 பக்கங்கள்  


    இரைச்சல் மிகுந்த உலகத்தில் நிம்மதியை காண்பது எப்படி?

    என்பதை உள்ளத்தின் குரல் என்ற பெயருடன் பிரேம் ராவத் அவர்கள் எழுதியுள்ளார்.

     

    இவர் 1957-இல் இந்தியாவின் ஹரித்துவார் இல்  பிறந்துள்ளார். ஹரித்துவார் என்றால் கடவுளை அடைவதற்கான வாசல் என்று பொருள். அமைதி என்ற விஷயம் பற்றி உரையாற்றுகின்ற சிறந்த பேச்சாளரான ஸ்ரீ ஹன்ஸ்ஜி மகராஜன் மகனாகத்தான் இவர் பிறந்தார். இவருக்கு எட்டரை வயதாக இருக்கும் போது இவருடைய தந்தை இறக்கின்றார். அதன்பின் அவருடைய வாழ்வில் குறிக்கோள் அவருக்குத் தெளிவானது. அவர் எவ்வாறு மக்களிடம் அமைதியை ஏற்படுத்தச் செய்தாரோ அதனையே பிரேம் ராவத் அவர்கள் செய்யத் தொடங்கினார்.

     

    ஒரு விமானம் செலுத்தும் பணிபுரிந்த இவர் மனத்தின் அமைதியை மற்றவர்களுக்கு கொண்டு வருவதற்கு அவர்களைச் செலுத்துகின்ற ஒரு தூண்டியாக பயன்படுகின்றார். 13 வயதில் இருந்து மகிழ்ச்சி மற்றும் அமைதியின் நடைமுறைச் செய்தியை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் கொண்டு வருவதற்கான ஒரு சர்வதேச முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

     

    சர்வதேச மட்டத்தில் மிக அதிக அளவில் விற்பனையான Peace of Possible என்ற புத்தகத்தின் ஆசிரியராகவும் இருக்கின்றார். இந்தப் புத்தகம்  Hear  yourself  என்ற இவருடைய புத்தகத்தின் தமிழ் வடிவமாக இருக்கின்றது.

    வாழ்க்கை பற்றிக் கூறுகின்ற போது நாம் 70 ஆண்டுகள் வாழ்ந்தோம் என்றால் 25.550 நாட்கள் வாழ்வோம். நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் 36.500 நாட்கள் மட்டுமே. ஒரு சுவரில் இருந்த ஒரு கதவு வலியாக உயிர் பெற்று வந்து இன்னொரு இன்னொரு சுவரின் கதவு வழியாக நாங்கள் வெளியேற வேண்டியது அவசியம். சிலர் இரண்டாவது சுவருக்கு அப்பால் என்ன இருக்கின்றது என்று நினைக்கின்றார்கள். ஆனால் இரண்டு சுவர்களுக்கும் இடையில் இருப்பது என்ன என்றுதான் அறிய ஆவலாக நான் இருக்கிறேன் என்று பிரேம் ராவத் அவர்கள் கூறுகின்றார்.

    உன்னையே நீ அறிவாய். உன் உள்ளத்தின் அமைதியே உலகத்தின் அமைதி. அதை அடைவது எப்படி என்பவற்றை இந்த நூலுக்குள் புதைந்து கிடக்கின்றது. தன்னை அறிவதே விவேகத்தின் ஆரம்பம் என்கிறார் அரிஸ்டாட்டில் தன்னை உணர்தலின் மூலம் கிடைக்கும் அமைதியிலிருந்து நமக்கு சந்தோஷம், தெளிவு, நிறைவு, அன்பு, வலிமை, போன்ற உணர்வுகளும்  நல்லனவையும் அமையப் பெறும்.

    எகிப்திய லக்சர் கோவிலின் உட்புறத்திலே ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த மனிதா உன்னையே நீ அறிந்து கொள் அப்போது தெய்வங்களை நீ அறிந்து கொள்வாய் என்ற வார்த்தைகளில் இருந்து தான் சாக்ரடீஷன் இந்த உன்னையே நீ அறிவாய் என்ற வரிகள் வந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றார். உன் கலாச்சாரத்தை அறிந்து கொள் உன் சமூகத்தை அறிந்துகொள் ஏற்று குறிப்பிடவில்லை உன்னை நீ அறிவாய் என்றுதான் மிகத் தெளிவாக பொறிக்கப்பட்டிருக்கின்றது. தன்னை அறிவது தான் விவேகத்தின் ஆரம்பம்.  நம்முள்ளே விவேகம் நிறைந்த ஒரு உண்மை நிலை உள்ளது எனவும் சீன தத்துவஞானி ஆன லாவோ சூ சொல்கின்றார் உங்கள் நண்பர்களை அறிந்து கொள்வது புத்திசாலித்தனம் ஆனால் உங்களை நீங்கள் அறிந்து கொள்வது தான் உண்மையான விவேகம். இதற்குக் கவிஞர் ரோமி சொல்லிய கவிதையை எழுத்தாளர் கொண்டு வருகின்றார். நேற்று நான் புத்திசாலி அதனால் உலகை மாற்ற விரும்பினேன். இன்று நான் விவேகி அதனால் என்னையே நான் மாற்றிக் கொண்டேன் என்று இதனை 600 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் என்பவர் “நமது உலகத்தில் எல்லோரும் மனித இனத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என சிந்திக்கிறார்களே தவிர தம்மைத் தாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஒருவரும் சிந்திப்பதில்லை என்று சொல்லுகின்றார். இவ்வாறு விவேகத்துக்கான விளக்கம் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.

     

    மனம் பற்றி இவர் சொல்லுகின்ற போது நமது மனம் ஒழுங்காக செயல்படுவதற்கு அதனுள் போடப்பட்ட அனைத்து விஷயங்களையும் சார்ந்திருக்கும் அதே வேளையில் இதயமானது மரபணுக்களைச் சார்ந்தே செயல்படுகிறது என்கின்றார்.

     

    பிரான்ஸ் தேசத்து எழுத்தாளர் ஆந்துத சென் எக்ஸ்யுபெரி  பூரணத்துவம்   என்பது மேலும் சேர்த்துக் கொள்ள எதுவுமில்லை என்பது அல்ல.  ஆனால் மேலும் நீக்கிவிட எதுவுமில்லை என்பதுதான் என்கிறார்.

     

    எங்களுக்கு விருப்பமான ஒரு ஆடையை அணிந்து கொண்டு வேலை எல்லாம் செய்தால் அது அழுக்காகும் ஆனால் பின் அதை நாம் கழுவித்தான் தூய்மையாகுவோம் தூய்மையை அதில் கொண்டு சேர்க்க மாட்டோம். அதே போல் தான் எங்களுக்குள் இருக்கின்ற அமைதியைக் கண்டறிவது அமைதியை சேர்ப்பதில்லை தேவையற்றவற்றை அகற்றுகின்றீர்கள். தன்னை அறிவது என்பது உங்கள் உண்மையான இயல்பை பிரகாசிக்க அனுமதிப்பது.

    மைக்கல் அஞ்சலோவிடம் சிறந்த சிற்பத்தை எப்படி ஆக்கினார்கள் என்று கேட்டபோது அவர் சொன்ன டேவிட்டின் இல்லாத பகுதிகளை அகற்றி விட்டேன் என்று கூறினார். அப்படி அகற்றுகின்ற போது தத்துரூபமாக நாம் எம்மை  உணர்வோம்

     

    ஒருமுறை புத்தர் சீடன் ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது நகரத்தில் இருந்த யாவரும் அவரை நீங்கள் நல்லவரல்ல.  நீங்கள் அதை செய்வதில்லை இதை செய்வதில்லை என விமர்சித்துக் கொண்டே இருக்கிறீர்கள் என்றார்கள். புத்தர் இவர்கள் எல்லாம் உங்களை விமர்சிப்பது உங்களுக்கு கவலையாக இல்லையா என புத்தரின் சீடன் அவரிடம் கேட்டான்.  புத்தர் தம் வீடு திரும்பும் வரை காத்திருந்து தன்னுடைய ஒரு  கிண்ணத்தை எடுத்து அந்த சீடனை நோக்கி நகர்த்தினார்.  இது யாருடைய கிண்ணம்? என சீடனிடம் அவர் கேட்டார் சீடன் இது உங்களுடையது என்றான்.  அந்த கிண்ணத்தை மேலும் சீடனுக்கு சிறிது அருகிலே நகரத்தினார். இது யாருடைய கிண்ணம் இப்பொழுது கூட இது உங்களுடைய கிண்ணம் என்று சொன்னார். இப்படியே தொடர்ந்து அவர் செய்து கொண்டிருந்தார். சீடரும் தொடர்ந்து இது உங்களுடைய கிண்ணம் என்று கூறிக்கொண்டிருந்தான். இறுதியில் அந்த கிண்ணத்தை எடுத்து சீடரின் மடியில் வைத்துவிட்டு இப்பொழுது இது யாருடைய கிண்ணம் என்று கேட்டார் இப்பொழுதும் இது உங்களுடையது தான் என்றான். சரியாகச் சொன்னாய் என்ற புத்தர் கூறினர் இந்தக் கிண்ணத்தை உன்னுடையது என்று நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இது உங்களுடையது அல்ல. மற்றவர்களின் விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது என்னுடையது அல்ல என்று கூறினர்

     

    இவ்வாறு பல கதைகள், தத்துவஞானிகளின், கவிஞர்களின் கருத்துக்களை எடுத்துக்காட்டி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதைகள் மூலமாக விளக்கி இந்த நூலை ஆசிரியர்  தந்திருக்கின்றார்

     

    வாழ்க்கை பற்றி சொல்லுகின்ற போது வாழ்க்கை ஒரு வறண்ட பாலைவனம் போல தோன்றினாலும் அங்கு ஒரு அற்புதமான தோட்டத்தை உருவாக்க தேவையான விதைகள் அவை முளைப்பதற்கு சரியான சூழ்நிலைக்காக மண்ணுக்குள் காத்துக் கிடக்கின்றன. நாம் பிறந்த கணத்திலிருந்து அதை நம்முள்ளே இருக்கின்றன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த விதைகள் செழித்து வளர தேவையான நீரை தொடர்ந்து ஊற்றுவதும் தெளிவு என்னும் ஒளி வர இடம் அளிப்பதும் தான் அதை நாங்கள் செய்கின்றபோது அந்த பாலைவனம் மலர்ந்து பலவிதமான வர்ண பூக்களால் பூத்துக் குலுங்கும். அமைதி தன்னைத்தானே வெளிப்படுத்த விரும்புவது நான் அங்கே இருப்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று அது விரும்புகிறது அமைதி மலர விரும்புகின்றது. நமது சூழ்நிலைக்கு எதுவாக இருந்தாலும் நமது சுற்றுச்சூழல் எப்படி இருந்தாலும் நாம் நமது உள்ளார்ந்த இயற்கை முழுமையாக வெளிப்படுத்த ஒரு வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும்

     

    ஒருமுறை கலிபோர்னியாவில் சாந்தா குரூசில் ஒரு நிகழ்விலே இவர் பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது ஒருவர் யோகாசனத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். இவரும் யோகாசனம் ஒரு பூஜ்ஜியம் என்று கூறினார். கோபமடைந்த அவர் தனக்கு எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை என்று சென்றுவிட்டார். அதன்பின் அறையில் இருந்தவரிடம் பூஜ்ஜியத்தை ஒன்றுக்கு முன்னால் வைத்தால் ஒன்று ஒன்றாகவே இருக்கு பூஜ்ஜியம் பூஜ்ஜியமாகவே இருக்கும். பூஜ்ஜியத்தை ஒன்றுக்கு பின்னால் வைத்தால் கிடைப்பது பத்து இன்னொரு பூச்சியத்தைச் சேர்த்தால் நூறு. அதனால் அது தான் சிறப்பான பதில் என்று நான் நினைத்தேன் என்று கூறினார்.

     

    ஆழ்ந்த அமைதி என்பது நமக்குள்ளே ஓடிக் கொண்டிருக்கின்ற ஒரு நதி போன்றது. சில சந்தர்ப்பங்களில் நாம் வளமும் இல்லாத, நிறமும் இல்லாத நிழலும் இல்லாத எதுவுமே வளராத வறண்ட நிலத்தில் இருப்பதாக உணரலாம். அங்கே அதன் பின்னர் கடினமான மண்ணில் இருந்து அமைதியின் துளிகள் பொங்கி எழுந்து ஒளியில் மின்னி விழுந்து பழைய ஆற்று படுக்கையை தேடி வறண்டு பிளவு பட்ட நிலத்தில் பாயத் தொடங்கும் நீர்க்குமிழிகள் மேல் எழுந்து பள்ளத்தாக்கில் நகர்ந்து செல்லுகின்ற போது பல விஷயங்கள் நடைபெறுகின்றன.

     

    ஆற்றங்கரையில் புல் தளிர்கள் வளரத் தொடங்குகின்றன. வறண்ட பூமியிருந்த விதைகள் முளைவிட்டு மலர தொடங்குகின்றன. அந்த புள்ளையும் தழைகளையும் உண்பதற்காக வண்டுகள் வரத் தொடங்குகின்றனர் பெரிய வண்டுகள் சிறிய வண்டுகளை உண்ண விரும்புகின்றன அத்துடன் அவை உணவு தேடிய அலையும் பறவைகளையும் கவர்கின்றன. அந்தப் பறவைகள் பல்வேறு விதைகளை அங்கு கொண்டு வருகின்றன. இப்போது செழிப்பாக இருக்கின்ற நிலத்தில் விதைகள் விழுகின்றன. அங்கே மரங்கள் வளருகின்றன. பழங்களின் பாரத்தால் மரக்கிளைகள் வளைகின்றன. பூச்சிகளின் சத்தம், பறவைகளின் ஒலிகள், காற்றை இசையினால் நிரப்புகின்றன. இந்த காட்டில் இருந்து வருகின்ற நறுமணம் உயிரினங்களுக்கு அழைப்பு விடுவதாய் இருக்கும். ஒவ்வொரு தாவரத்தின் மற்றும் பிராணியின் பரிணாம வளர்ச்சி தனித்துவமான கூறுகளைக் கொண்டுள்ளது. ஆனாலும் அவை அனைத்திற்கும் செழித்து வளர்வதற்கு தண்ணீர் தேவை வாழ்வை நலச் செய்வதற்கான தண்ணீர் அமைதி அமைதி ஒன்றுதான்

     

    இவர் பேராசை பற்றி சொல்லுகின்ற போது பேராசை என்பது நாம் விரும்பும் ஒன்றை மேலும் அதிகமாக பெறும் வரை நாம் ஆனந்தம் அடைய முடியும் என்று ஒரு உணர்வுதான் ஏற்படும். ஆனால் நம்முடன் என்ன இருக்கிறதோ அதற்கு நன்றி உணர்வோடு இருக்கின்ற போது நிறைவான உணர்வை நாம் நெருங்குகின்றோம். அந்த நன்றி உணர்வுடன் நாம் நம்மை முழுமையாக இணைத்துக் கொண்டவுடன் பேராசைக்கு ஒரு முடிவு வந்துவிடும் என்கின்றார்.

     

    விருப்பங்கள் இருப்பதில் தவறில்லை அவை நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை சேர்க்கின்றன. அவற்றால் பணப்பரிமாற்றம் இடம்பெறுகின்றன. மக்கள் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள் உங்களுக்கு இன்றைக்கு பிடித்தது நாளைக்கு பிடிக்காமல் போகலாம் அதுதான் விருப்பத்தினுடைய இயல்பு விருப்பங்கள் மாறாவிட்டால் அது அர்த்தமற்றது. விருப்பம் என்பது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.  விருப்பம் ஒருபோதும் திருப்தி படுவதில்லை. நாம் நம்முடைய தேவைகளை மறந்து விருப்பங்கள் மீது அதிகமாக கவனம் செலுத்துகின்றோம் பழகப் பழக பாலும் புளிக்கும் என்ற பழமொழி படி இந்த மக்களுடன் அதிக நேரத்தை செலவிடுகிறோமோ அவர்களை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விடுவோம். நம் வாழ்விலே அத்தியாவசியமான தேவைகளைப்  பொறுத்தவரையில் பெரும்பாலும் இப்படித்தான் நடக்கிறது நாம் எத்தனை பேர் இன்று காலை விழித்தவுடன் நன்றி கூறுகின்றோம்

     

    கவிஞர் கபீரின் ஒரு கவிதையை எடுத்து வருகின்றார். அதாவது,

     

    எள்ளுக்குள் எண்ணெய் இருப்பது போல

    சிக்கி முக்கி கல்லில் தீப்பொறி இருப்பது போல்

    தெய்வீகம் உனக்குள் இருக்கிறது

    உன்னால் முடிந்தால் அதைக் கண்டு கொள்.

     

    என்கிறார். இந்த உலகத்திலே மனிதர்களுடைய வாழ்க்கை முடிவடையும். பூமியின் வாழ்நாளும் முடிவடையும், நட்சத்திரங்களும் அழிந்து போகும் உருவமற்ற தெய்வீகமானது நிலைத்திருக்கும். நாம் உயிரோடு இருக்கும் காலம் முழுவதும் தெய்வீகம் நமக்குள்ளே செயல்படுகிறது. அதனால் நமக்குள்ளே ஒரு அற்புதமான ஆசீர்வாதமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த தெய்வீகம் நன்மை தீமைகளுக்கு அப்பாற்பட்டது. நீங்கள் தெய்வீகத்தின் மதிப்பை உணர அதை அதனுடைய கண்களாலேயே பார்க்க வேண்டும். உங்களுக்குள் இருக்கின்ற தெய்வீகத்தை உங்கள் கண்களால் பார்க்க வேண்டும். அந்த தெய்வீகத்தை கொண்டிருக்கின்ற பாத்திரம் தான் நீங்கள்.

     

     

    பிளவர் மேன்டிஸ் என்னும் பூச்சி  தான் அமர்ந்திருக்கும் பூவின் வடிவத்தை எடுக்கக் கூடியது. அதைக் கடந்து செல்லும் வேறொரு பூச்சி அதை பூவொன்றே நம்புகிறது. அந்த ஆபத்தான பிளவர் மேன்டிஸ்  அசைந்து தன்னுடைய உண்மையான வடிவத்தை வெளிப்படுத்தும் தருணத்தில் அது பூச்சி அது பூ அல்ல என்பதை பறந்து சென்ற பூச்சி புரிந்து கொள்கிறது.  இதேபோல வாழ்க்கை என்றால் என்ன என்பதை உண்மையில் நாம் எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறோம். பூவை மட்டும் காணும் அந்த பூச்சியை போல ஒரு நொடிப் பொழுதிற்கு உண்மை தென்பட்டாலும் நாம் மாயையினுள் மீண்டும் திரும்பி விடுகின்றோம்.

     

    இவ்வாறு பல கதைகள் பல அறிஞர்களின் கருத்துக்கள் கவிஞர்களின் கவிதைகள் எல்லாவற்றையும் கையாண்டு இந்தப் புத்தகத்தின் மூலமாக மனித வாழ்க்கையில் அமைதியைக் கொண்டு வருவதற்கான பல வழிமுறைகளை ஆசிரியர் கையாண்டு இருக்கின்றார். 13 வயதில் ஆரம்பித்த இவருடைய இந்தப் பயணம் இன்னும் தொடர்கிறது.

     

    357 பக்கங்களுடன் நிறைவாக இருந்த இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது மனத்துக்குள் ஒரு தெய்வீக உணர்வு ஏற்படும்.  அமைதியை தேட வேண்டிய அவசியத்தை உள்ளுணர்வு உணர்த்தும். அவசியம் ஒவ்வொரு மனிதனும் வாசிக்க வேண்டிய ஒரு நூல் இது.

     

    எழுத்துகளுக்கும் ஆடை கட்ட வேண்டும்

      எழுத்துகளுக்கும் ஆடை கட்ட வேண்டும்   இலக்கியம் என்பது ஒரு சமூகம் வாழுகின்ற காலத்தைத் தெட்டத் தெளிவாக வேறு சமூகத்துக்கு , அடுத்த கால கட...