காற்றுப் போல் இலேசாகப் பறந்து
கொண்டிருந்த என் மனம் இன்று மட்டும் ஏன் கனக்கிறது. கண்களை மூடித் தூங்க மனம் ஏன்
மறுக்கிறது? என்னை விட்டு வேறு எங்கோ நான்
வாழ்ந்து கொண்டிருக்கின்றேனா? துடித்துக் கொண்டிருக்கின்ற சில
உயிர்களின் கைகள் என்னை நீட்டி அசைப்பது போல உணர்வுகள் எனக்குள் ஏன் ஏற்படுகின்றன? இவ்வாறு சிந்தனைகள் மனத்துக்குள் பூதாகரமாகத்
தொடரப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த நிலா தன் பாதங்களை நிலத்தில்
பதிக்கின்றாள். பளிங்கு போல் இருக்கும் தன்னுடைய தரையின் சுத்தம் அவளை மேலும்
சிந்தனைக்குள் தள்ளுகிறது. சிறிதளவு தூசி தரையில் கண்டாலும் துடைத்துக் கழுவி
விட்டு சுத்தமான தரையில் கூடப் பாதணிகள் அணிந்து நடக்கின்ற தன்னுடய வாழ்க்கை
முறையை நினைத்துப் பார்க்கின்றாள். அப்போது நிலா அந்தப் பெண்ணுக்காகப்
பரிதாபப்படுகின்ற இந்தத் தருணங்கள் அவளை சாதாரணமான வாழ்க்கையை விட்டுத் திசை
திருப்புகின்றது.
நேற்று ஏன் நான் அங்கு போனேன்? அந்தத் தெரு இப்படித்தான் இருக்கும் என்று
அறியாதவளாக இருந்திருக்கின்றேனே! பிரெங்பேர்ட் நகரம் ஜெர்மனியின் வடமேற்கு
மாநிலத்தில் அமைந்திருந்தது. அந்த நகரத்தில் வாழந்து கொண்டிருக்கும் நிலா தன்னுடைய
நண்பியைச் சந்திப்பதற்காக அவளுடைய வீட்டிற்குச் சென்றிருந்தாள். நண்பியுடன்
நகரங்களைச் சுற்றி வலம் வந்தாள். அந்த நேரத்தில் அந்நகர புகையிரத நிலையத்தின்
பக்கம் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஆனால், அவள் பார்த்ததோ!!! வீதியெங்கும்
பரந்து விரிந்து காணப்பட்ட மனிதர்கள் என்ற பெயரிலே நடமாடும் சொம்பிக்கள்.
சொம்பிக்கள் மனிதத் தசை தேடிக் கடித்துக் குதறும். ஆனால், இவர்களோ செயற்படாத மூளையுடன் நடப்பதற்குக் கூட
வலு இழந்தவர்களாகக் கிடந்தார்கள். சிலர் தம்முடைய உடலிலே பாய்ச்சுவதற்கு ஊசி
நிலத்திலே கிடக்காதா என்று தேடிக் கொண்டு திரிந்தார்கள். அவர்களுக்கு யாரைப்
பற்றியும் கவலையில்லை, எலும்பும் தோலுமாகத் தெரிகின்ற
தம்முடைய உடைலைப் பற்றிக் கவலையில்லை. தங்களுடைய ஆடை விலகியிருக்கின்றது.
அந்தரங்கங்கள் தெரிகின்றன. எதைப்பற்றியும் அவர்களுக்குக் கவலையில்லை. இவர்களை நான்
ஏன் கண்டேன்? ஏன் இந்த பிரபஞ்சம் என்னை அங்கே
அழைத்துக் கொண்டு போனது? சிந்தனைக்கு முடிச்சுப் போட்டு
சிரசின் ஓரம் உட்கார வைத்தாள்.
எழுந்து உடை மாற்றினாள்.
வயிற்றுக்குள் ஏதாவது போடுவதற்குக் கூட அவள் மனம் இடம் தரவில்லை.
“அம்மா போயிட்டு வாறன்”
'எங்க எங்க போறாய். இன்றைக்கு வேல இல்லையே மகள்...
மகள்.... ' தாயின் கேள்விகளுக்கு நின்று
நிதானமாகப் பதில் சொல்ல அவளுக்கு அவகாசம் இல்லை.
'கொஞ்சம் பொறுங்கள் அம்மா இப்ப வந்திடுவன். ஹில்டா
வரட்டாம். ஓ.பி க்கடைக்குள்ள நிற்கிறாள்'
'ஒன்டும் வாய்க்குள்ள போடாமல் போகிறாய்.... எத்தனை
தரம் சொல்றது. குடலுக்குள்ள அசிட் அரிச்சதுக்குப் பிறகு தான் அம்மா என்டு ஓடி
வருவா... நேரத்துக்கு வந்துடுடா....'
தாயிடம் உண்மையைச் சொல்லும் சக்தி
அவளுக்கு இல்லை. அவளுக்குப் புரிய வைக்கும் சக்தி கூட அவளுக்குத் இல்லை. நிலாவின்
தாயைப் பொறுத்த வரையில் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட பைத்தியங்கள். போதைக்கு
அடிமையானவர்கள் பொல்லாதவர்கள். அவர்கள் பக்கம் போனாலே கற்புப் பறி போய்விடும்.
இவைதான் பத்மாவுக்கோ அவளுடைய வயதில் வாழுகின்ற சந்ததியினருக்கோ இருக்கின்ற எண்ணப்
போக்கு.
நிலாவின் அம்மாவுக்கு தன்னுடைய கவலை.
நிலாவுக்கோ வேறு கவலை. சமையலறை, குடும்பம், குழந்தை, பேரக்குழந்தை என்று தொடருகின்ற பெண்களுக்கு
மத்தியில் நிலாவின் அம்மாவோ உலகத்தைத் தன்னுடைய மகளுக்கு அழகாகச் சொல்லிக்
கொடுத்திருந்தாள். பிறரை நேசிக்கக் கற்றுக் கொடுத்திருந்தாள். இந்த பூமியைத்
தாண்டி சிந்திக்கவும், எதிரே நிற்பவர் சூழ்நிலையைச்
சிந்தித்துச் செயலாற்றவும் கற்றுக் கொடுத்திருந்தாள். ஆனால், அதுவே இன்று நிலா நிஜங்களின் தன்மையைச்
சீர்தூக்கிப் பார்க்கும் நிலைமைக்கு அவளை உட்படுத்தியிருந்தது.
என்ன இவள் இப்படி இருக்கின்றாள்.
வயதாகியும் கல்யாணப் பேச்சை எடுக்கவே விடுகின்றாள் இல்லை. இப்படியே போனால், இவளுடைய எதிர்காலம் என்னவாவது என்பது தாயுடைய
கவலை. காதலிக்கப் பிடிக்கவில்லை. கல்யாண வலையில் விழப் பிடிக்கவில்லை.
கட்டுக்கோப்புக்குள் பதுங்கியிருக்கப் பிடிக்கவில்லை. அவளுக்குப் பிடித்ததெல்லாம் சுதந்திரம், வாழ்க்கைச் சுதந்திரம். மூளைச் சுதந்திரம். மூளை
சிந்திக்கச் சுதந்திரமாக விட வேண்டும். வாழும் வாழ்க்கைக் காலம் முழுவதும்
உலகத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். இறந்தபின் என்ன ஆவது என்பது எல்லாம் அவளுடைய
கவலை இல்லை. இறக்கும் வரை அறிவைத் தேட வேண்டும் என்பது அவளுடைய வேதாந்தம்.
வாகனத்துச் சாவியைத் திருகுகின்றாள்.
அது குடியிருப்புப் பகுதியில் 30 வேகக்கட்டுப்பாட்டுக்குள்
கிளம்புகின்றது. ஆனால், எண்ணமோ 120 வேகத்தைத் தாண்டுகின்றது. நேரடியாக
குடியிருப்புப் பகுதியைத் தாண்டுகின்றாள். அவளைக் கேட்காமலே அவளுடைய மூளை அவளை
இரயில் நிலையத்துக்கு அண்மையில் உள்ள புகையிரத நிலையத் தரிப்பிடத்தை அணுகுகின்றது.
நிதானமாக வாகனத்தை நிறுத்துகின்றாள். வாகனம் அமைதி காண அவளுடைய பாதங்கள்
வேகமாகின்றன. அதே இடம், அதே மனிதர்கள். பற்கள் எல்லாம் நிறம்
மாறி அரைவாசியாகக் குறைந்து சீக்கெடுக்காத கேசத்திலே புழுதிப்படையலை எண்ணெயாகத்
தடவி மேலாடை சரிய கீழாடை தரைபார்த்துக் கிடக்க ஆழமாகப் புகையை இழுத்தபடி ஒரு பெண்
அமர்ந்திருக்கின்றாள்.
அவள் மடியிலே தலை வைத்து அந்த அழகான
பெண். அந்த நேரத்தில் அவளை அரவணைக்கும் தாய் அவளே. யாருக்கோ பிறந்து யார் மடியிலோ
தவழ்ந்து இன்று அந்நியமான பெண்ணின் அணைப்பிலே அவளுடைய மடியிலே முழங்காலை மடித்து
முகம் புதைத்துச் சுருண்டு கிடக்கின்றாள். கத்தியைக் கூராக்கி வைத்தாற் போல்
கூர்மையான மூக்கு. காது வரை நீண்டிருக்கும் கண்கள். அதற்குள் இருக்கும்
கவர்ச்சியில் யாவரும் அடிமையாவார்கள். அதுதான் அவளுடைய நகர் ஓரத்து வாழ்க்கைக்கு
காரணமாக இருக்கலாம். அழகானவள்தான் ஆனாலும் ஆடி ஓய்ந்த தேகம் போல் களைத்துத் துவண்ட
துணிபோல சோர்ந்து கிடக்கின்றாளே. எங்கே கண்விழித்தால், புகையின் போர்வைக்குள் போய்விடுவாளோ என்று
நினைத்து அவர்கள் இருவருக்கும் அருகே இருந்த ஒரு கல்லின் மேல் அமர்ந்தாள் நிலா.
ஏனிந்த வீதியை அரசாங்கமோ, சமூக நிறுவனங்களோ கவனிப்பதில்லை. இவர்கள் இப்படி
வாழ்வதனால், நாட்டுக்கே கெட்ட பெயர் என்று
அவர்கள் கருதுவதில்லையா? இல்லை இவர்கள் இப்படி வாழ்ந்தாலேயே
தாம் வருமானம் பெறலாம் என்று நினைக்கின்றார்களா? இல்லையென்றால், இவர்களை மாற்றவே முடியாது என்று
நினைக்கின்றார்களா? எவ்வாறான காரணம் இருந்தாலும் இந்தப்
பூமிப்பரப்பிலே வாழ வந்த உயிர்கள் அல்லவா? இவ்வாறு வாழாமல் வாழுகின்றார்களே! இவ்வாறான
சிந்தனைகள் மூளையை அரித்தெடுக்க அவளைப் பார்க்கின்றாள்.
நிலா அருகிலே வந்து இருக்கின்றாள்
என்ற அக்கறையோ அவதானமோ அவர்களுக்கு இருந்ததில்லை. நிலாவின் அசைவிலே கண்விழித்த
அந்த அழகி. அருகே இருந்த ஊசியைத் தடவி எடுக்கின்றாள். உதவிக்கு இருந்த அந்த
வயதானவளோ தன்னிடமிருந்த ஏதோ ஒரு தூளைக் கொட்டுகின்றாள். அதனை லைற்றர் உதவியுடன்
எரிக்கின்றாள். எரிந்த தூளை ஊசி மூலம் உள்ளெடுத்து காற்சட்டையைக் கீழே
இறக்கிவிட்டுத் தொடையிலே செலுத்துகின்றாள். மீண்டும் கண்கள் சொருகக் மடியிலே
விழுகின்றாள்.
நிலா அவளை மடியிலே கிடத்திய அந்தப்
பெண்ணிடம் ஹலோ என்று பேச்சைக் கொடுத்தாள். அவளும் பதிலுக்கு எந்தவித சலனமும்
இல்லாமல் ஹலோ பேற்ரா என்று தன்னுடைய பெயருடன் இணைத்தே வணக்கத்தைத் தெரிவித்த
அவளுடைய தெளிவான பேச்சைக் கேட்டு வியப்படைந்த நிலா ஏற்கனவே இவர்கள் இருவருக்கும்
வாங்கிக் கொண்டு வந்த உணவுப் பொட்டலங்கள், உடைகள், படுக்கை
விரிப்புக்கள் என்று வாங்கிக் கொண்டு வந்த அத்தனை பொருட்களையும் அந்தப் பெண்ணிடம்
நீட்டினாள். எந்தவித மறு பேச்சும் இல்லாமல் அதனை வாங்கிக் கொண்டாள்.
அதற்குள் இருக்கின்ற பொருட்களை
விளக்கினாள் நிலா. சஞ்சலம் எதுவும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்து விட்டு நன்றி
என்றாள்.
இத்தனை பேர் உலகத்தை மறந்திருக்கின்ற
இந்த வீதியிலே இவர்களிடம் மட்டும் நிலாவுக்கு ஏன் அக்கறை? இந்த பிரபஞ்சம் தன்னை இவர்களுக்காகவே அனுப்பியதாக
அவள் உணர்ந்தாள். இப்படித்தான் இவர்களுக்கு பிரபஞ்சம் உதவி வழங்குகின்றதோ!
“பேற்ரா! யார் இவள்? உனக்கு இவளைப் பற்றி ஏதாவது தெரியுமா? நான் உங்களிடம் அன்பை மட்டுமே செலுத்த
விரும்புகின்றேன். உன்னோடு உரையாட வேண்டும் போல் இருக்கிறது. என்னால் உறங்க
முடியவில்லை. உங்களுக்கு என்ன தேவையோ எல்லாவற்றையும் நான் தருகின்றேன்' என்றாள்.
உடனே அவளும் “காசு தா. நான் ஊசி
வாங்க வேண்டும்” என்று இறுக்கமாகக் கூறினாள்.
தன்னையறியாமல் இரண்டு கண்களிலும்
இருந்து வடிந்த கண்ணீரைக் கைகளால் துடைத்தெடுத்த நிலா தன்னுடைய கைப்பைக்குள்
இருந்து 50 ஒயிரோக்களை நீட்டினாள். கையிலே
பணத்தை வாங்கிய பேற்ரா ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும்
என்றாள்.
“நீ போகலாம்” என்று விறைப்பாகச் சொன்னாள்.
மீண்டும் நிலா விடுவதாக இல்லை
“உன்னுடைய மடியிலே கிடக்கின்ற இந்தப்
பெண் உன்னுடைய மகளா?
வெடித்த சிரிப்பு
அருகிலிருந்தவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. சிறிது நேரம் தொடர்ந்து
சிரித்தாள்.
“என்னுடைய மகள் எங்கே என்று
தெரியாது. நான் என்னுடைய மகளுக்குப் பாரம். அதனால், இவளை மகளாக வைத்திருக்கின்றேன். இவள்தான் இப்போது
மகள். பாசம் வைக்க மட்டுமே எனக்குத் தெரியும். இந்த ஊசி மட்டுமே எனக்குச்
சொர்க்கம்”
வயிற்றிலே சுமந்து பெற்றால்தான்
பிள்ளையா? இந்த உலகத்திலே எல்லோரும் சொந்தங்கள்
தானே. எந்தவித இரத்த சொந்தமும் இல்லாத நிலா உணவுப் பண்டங்களுடன் இவர்களின் அருகே
இருக்க முடியும் என்றால், பேற்ராவுக்கு ஏன் இந்தப் பெண் மகளாக இருக்க
முடியாது.
அந்தப் பெண்ணின் தலையைத் தடவியபடி
தானாகப் பேசத் தொடங்கினாள்.
வாழ்க்கை மனிதர்களுக்குத் தவறு
செய்யாமல் தண்டனை மட்டுமே கொடுக்குமா? பிஞ்சு
மனத்திலே நஞ்சை அள்ளிக் கொட்டிய பெற்றோர்களின் கதையும், தொடர்ந்து அவளுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட
நிகழ்வுகளும் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் நிலாவின் காதுகளுக்குள் நுழைந்தது.
வானத்திலேயிருந்து மழை மட்டும் வருவதில்லை. வெளிச்சமும் வரும். ஆனால்
வெளிச்சத்துக்கு இடம் கொடுக்காத இந்த உலகத்து மக்களின் சுய உணர்வுகளுக்கு
அப்பாவியாகும் பெண்கள் எத்தனை பேர். அவள் இங்கு வந்து கிடப்பது சரிதான். இதைவிட
என்ன பாதுகாப்பை அவளால் பெற முடியும். உலகத்தை மறந்தாலேயே உணர்வுகளைக் கடந்தாலேயே
அவளால் வாழ முடியும் இல்லையென்றால் என்றோ அவள் இந்த மண்ணுக்குள் உரமாகியிருப்பாள், புழுக்களுக்கும் பூச்சிகளுக்கும்
உணவாகியிருப்பாள்.
பேற்ரா பேசிக் கொண்டிருந்தாள். நிலா
அந்த இடத்தை விட்டு படபடவென்று விரைவாக ஓடிச் சென்று தன்னுடைய வாகனத்துக்குள்
பொத்தென்று இருந்தாள். கண்ணீரும் மூக்கும் சிந்திக் கொண்டே இருந்தன. கைக்குட்டைக்
கடதாசி பக்கெட் காலியானது.
அவளுடைய பெயர் ஜேன். ஜேன் என்றவுடன்
நிலாவுடைய நினைவுக்குள் வருவது ஸ்ரீபன் ஹாக்கிங்கின் மனைவி ஜேன் ஹாக்கிங்தான்.
அசையாத உடலுக்கும் அறிவான மூளைக்கும் அடைக்கலம் கொடுத்தவள். ஆனால், இந்த ஜேனோ மூளையை மயங்கச் செய்பவள். காமப்
பிசாசின் அடங்காத ஆர்வத்தால், ஜேனை அவர்கள் பெற்றோர்கள் பெற்றுப்
போட்டார்கள். பெற்றவர்கள் இருவரும் சண்டை சண்டை சண்டை. இருவரின் சண்டைக்குள்ளும் பிள்ளை
அழிந்துவிடக் கூடாது என்று நினைத்த சமூகநல நிறுவனம் அப்பிள்ளையை இளைஞர் நல
பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். அத்துடன் அப்பா, அம்மா என்னும் உறவு அவளுக்கு மறைந்து போனது.
மறந்து போனது.
இந்த இளைஞர் நல பாதுகாப்பு நிறுவனம்
இவளை ஒரு குடும்பத்திடம் வளர்ப்பதற்காக அனுப்புகின்றார்கள். அப்போது ஜேன்
சிறுமியாக இருந்தாள். அக்குடும்பத்து தலைவனாகிய ஆண் இவளை வேலைக்காரியை விட மோசமாக
நடத்துகிறான். காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவு படுக்கைக்குப் போகும் வரை
வேலை செய்து பிஞ்சுத் தேகம் வலியால் துடிக்கும். அங்கு தன்னால் வாழ முடியவில்லை
என்று இளைஞர் நல நிலையத்திடம் முறையிடுகின்றாள்.
அதன்பின் மீண்டும் வேறு ஒரு
குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுகின்றாள். அங்கு இரவானால், அவளுடைய அறைக் கதவு திறக்கப்படும். உள்ளே
நுழையும் அந்தக் குடும்பத்துத் தலைவன், பலாத்காரமாக
வன்மையான உறவுக்கு அவளை உட்படுத்துவான். அரும்பிய தனங்கள் அவனுடைய முரட்டுக்
கரங்களின் தாக்கத்தால் நாள் முழுவதும் வேதனையை அனுபவிக்கும். உடலின் ஒவ்வொரு
அங்கங்களும் அவளுடைய கட்டுப்பாட்டை மீறி அவனால் அனுபவிக்கப்படும் போது ஏற்படும்
போராட்டத்தால் உள் வெளிக் காயங்களுக்கு உட்படும். தன்னுடைய உடலிலே ஒரு அருவருப்பை
உணருகின்றாள். உடல் முழுவதும் புழு நெளிவது போலவும், அரிப்பது போலவும் நரக வேதனையில் துடிப்பாள்.
தனியே கிடந்து அரிக்கின்ற உடலை நகங்களின் துணையால் உராய்ந்து எடுப்பாள். அப்போது
அவளுக்குத் துணையாக அமைந்தது இந்த போதை.
போதையை உள்ளே செலுத்துகின்ற போது
தனக்கு ஏற்பட்ட வலிகளும் உடல் உபாதைகளும் இல்லாது போவதை உணருகின்றாள். வயிற்றில்
சுமந்தவள் அவளை வளர்க்கவில்லை. பொறுப்பான தந்தை அவளில் பாசத்தைக் காட்டவில்லை.
அவளை வளர்க்கப் பொறுப்பெடுத்தவர்கள் எல்லோரும் அவளை சிதைத்து விடுகின்றார்கள்.
அவளுக்கு இந்த நினைவுகள் எல்லாம் மறைக்கப்பட வேண்டும் என்றால் எதை நாடுவாள்.
அப்போது தனக்குத் துணையான அந்த போதையை நாடினாள். போதையானது ஒருமுறை உள்ளே போனால், தவிப்புடன் மீண்டும் மீண்டும் உடல் அதைத்தான்
தேடும். இதை ஆரம்பத்தில் உள்ளே எடுப்பவர்கள் உணர்வதில்லையே. பணத்துக்காக உயிர்களை
நாசம் செய்கின்ற வியாபாரிகளை விட்டு வைக்கின்ற கடவுளையும், இவ்வாறான மக்களை ஏறெடுத்தும் பார்க்காத
அரசாங்கத்தையும் எண்ணி நிலாவினுடைய மனம் முழுவதிலும் கோபக்கனல் தெறித்தது
மழைநீரை துடைத்தெறியும் வாகனத்துத்
துடைப்பம் போலக் கைவிரல்களால் முகத்தை அழுத்தித் துடைத்தாள். வேகப்பாதை தாண்டி
சிற்றூந்து வீட்டின்முன் போய் நின்றது.
“அம்மா பசிக்கிறது” என்றவளிடம்
“எங்கே மகள் இவ்வளவு நேரமும் போனாய்? ஓ.பி கடைக்குள்ளா இவ்வளவு நேரமும் நின்றாய்?
என்று பேசிய படியே சோற்றின் மேலே
அவளுக்குப் பிடித்த பொரித்த கத்தரிக்காய்க் கறியுடன் பருப்பு வெள்ளைக் கறியை
வைத்து அவளுக்குப் பிடிக்குமே என்று சுண்டங்காய் வத்தல் குழம்பையும் விட்டு
நுண்ணலை அடுப்பிலே சூடாக்கிக் கொதிக்கக் கொதிக்க உணவை முன்னே கொண்டு வந்து வைத்தாள்.
கண்களில் இருந்து கண்ணீர் வடிய
“எனக்கு ஊட்டி விடுறீங்களா அம்மா? என்று நிலா வாஞ்சையுடன் அம்மாவைக் கேட்டாள்.
‘ஏன்டா குஞ்சு அழுறாய்” என்று நிலாவை அணைத்த
வண்ணம் நிலாவுக்குத் தாய் பத்மா உணவை ஊட்டிவிட்டாள்.
-யாவும் கற்பனை அல்ல –
கௌசி
ஜெர்மனி
09.11.2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.