• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 27 ஜூலை, 2021

    சுயம்

                                                 


    ஓடி வந்து தாயைக் கட்டிப் பிடித்து அழுகின்றாள் சத்யா. 😭😭😭விஜய் ரிவி சீரியலில் மூழ்கியிருந்த கலாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன மகள்….. என்ன மகள்? என்ன நடந்தது. இஞ்ச வந்து பாருங்க. என்று கணவன் சிவத்தை அழைத்தபடி பதட்டத்துடன் மகளைப் பார்த்தாள், கலா. 😏

    புகையிரத நிலையத்தில் இருந்து ஓடியே வந்திருக்கின்றாள். அவள் வசிக்கும் பகுதியில் நாயோடு🐕 சிலர் நடப்பதைக் காணலாம். மற்றப்படி யாரும் வெளியே அநாவசியமாக திரிய மாட்டார்கள். பக்கத்து வீட்டுக்காரன் யார் என்று தெரியாதுதான் அவர்கள் வீதி மக்கள் வாழுகின்றார்கள். 

    வந்த சத்யாவின் கைகளில் இருந்து இரத்தம் 🩸வடிந்த வண்ணம் இருந்தது. என்ன இரத்தம் என்று பெரிதாகக் கத்தியபடி கைகளில் இருந்த இரத்தத்தைப் பார்க்கின்றாள். அந்த இரத்தம் சத்யாவின் கைகள் காயப்பட்டது போல் இருக்கவில்லை. 


    சத்தமாகக் கத்திய மகளைக் கலா ஒண்ணுமில்ல. ஒண்ணுமில்ல என்று அணைத்து கன்னங்களைத் துடைத்தபடி அமைதியடையச் செய்தாள். 
    ஓடி வந்த சிவமும் என்ன நடந்ததோ என்று பதட்டத்துடன் நின்றான். கண்களால் அவரை சத்தமில்லாமல் நிற்கச் செய்துவிட்டு மடியில் மகளைப் போட்டுத் தடவினாள் கலா. சத்யா ஒரு பெண்👩என்று செல்லமாக வளர்ந்தவள். 

    இரட்டைப் பின்னல் போட்டு வட்டமான கறுப்பு ஸ்ரிக்கர் பொட்டு வைத்த வட்ட பொலிவான முகமே அவளின் அடையாளம். கறுப்பும் இல்லை சிவப்பும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட பூசி மெழுகிவிட்டது போன்ற ஒரு பளபளப்பான உடல் நிறம். குறும்பான பார்வை. எதற்கும் கோபம் வராத சிரித்த முகம். பற்களால் உதட்டைக் கடித்து அவள் பார்க்கும் பார்வையிலே எத்தனை பெரிய பணக்காரனாக இருந்தாலும் காலடியிலே விழுந்து போவார்கள். 

    ஜெர்மனியில் வாழ்ந்தாலும் அடக்கமாகப் பிள்ளையை வளர்த்திருக்கின்றார்கள் என்ற பட்டத்தைத் தன் பெற்றோருக்கு வாங்கிக்  கொடுத்திருக்கின்றாள்.  பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டு இருக்கின்றாள். பாடசாலைக் காலங்களில் கூட அந்தப் பின்னலும் நீண்ட காற்சட்டையும் கூடவே வரும். அலங்காரமில்லாத அழகான பெண்ணாக இருந்த அவளை அணைப்பதற்கு ஆண்வர்க்கம் போட்டி போடும். ஆனால், இந்த தனித்தன்மை மிக்க சத்யா வேறு ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள். எந்த இராஜகுமாரனை அவள் தேடுகின்றாள் என்பது யாருக்குத் தெரியும். 👫தாய் தந்தை சொற்களுக்கு மறு வார்த்தை கூறமாட்டாள். இந்த ஜெர்மனியில் இவ்வாறான  கலாசார பெட்டகத்தை யார் காணப் போகின்றார்கள் என்ற பெருமை பெற்றோருக்கு இருந்தது.  


    இந்த ஜெர்மனி மண்ணில் இப்படி ஒரு பெண்ணா என்று பார்க்கும் சில தமிழர்கள் வெட்கப்படுவதும் தாய் கலாவிடம் “என்ன கலா உன்ர பிள்ளைக்கு கொஞ்சம் நாகரிகம் சொல்லிக் கொடுக்கக் கூடாதா? நீயே பெரிய சினிமா அக்ரஸ் மாதிரி வேலைக்கு வாறாய். உன்ர மகள் என்ன நாட்டுப் புறமாய் இருக்கிறாள்” என்று நக்கல் அடிப்பவர்களிடம் மகளுக்குச் சாதகமாக கலா பேசினாலும் அவள் மனதுக்குள் கவலை எப்போதும் அப்பிக் கொண்டிருக்கும். சத்யாவிடம் வந்து “இஞ்ச பார் சத்யா. உன்னால எனக்கு எவ்வளவு வெட்கக் கேடு. இந்த ஜெர்மனியில உன்னப் போல யாரையாவது கண்டிருக்கிறீயா? பார்க்கிற சனமெல்லாம் கேலியாகக் கதைக்குதுகள்”😆 என்று கலா அடிக்கடி கேட்பதும். அதற்கு அவளென்ன உரிஞ்சு போட்டா ஆடுறாள். இந்த சனம் கதைக்கிறதக் கதைக்கட்டும். உனக்கு விசரென்றா அங்கால போ” என்று மகளுக்கு வக்காளத்து வாங்குவான் அப்பா சிவம். சத்யாவும் அம்மா இது என்ர ஸ்ரைல். விடுங்களேன். என்று சிலுப்பி விட்டுப் போய்விடுவாள். 

    அழுகை நின்றவுடன் ஆறதலாக கலா கேட்டாள் என்ன நடந்தது சத்யா? 

    ரெயினுக்குள் இருந்து நான் இறங்கும் போது ஒரு பெடியன் என்னை இறுக்கிக் கட்டிப் பிடிச்சான். நானும் விடச் சொல்லி மல்லுக் கட்டினன். என்ர தலையெல்லாம் இழுத்து சட்டையெல்லாம் இழுத்தான். பிடிச்சு தள்ளிப் போட்டு ஓடி வந்திட்டன் என்றாள். அப்ப கையில எப்படி இரத்தம் வந்தது. எனக்குத் தெரியா அம்மா என்றாள். “சரி சரி வேற யாரும் பார்க்க இல்லலையா. இல்லம்மா யாரும் இந்த ஸ்ரேசனில இறங்கல்ல”  என்றாள். “சரி மல்லுக்கட்டும் போது ஏதாவது கீறுப்பட்டிருக்கும். இனிமேல் தனிய வராத. அப்பா இல்லாட்டி நான் ஸ்ரேசனுக்கு ரெயின் வரும்போது வந்து நின்று கூட்டி வருவோம்” என்று சொல்லிவிட்டு எழுந்தாள். அன்றைய நாள் சத்யாவின் விசும்பலுடனும் கலாவின் என்ன நடக்கப் போகுதோ என்ற ஆராய்ச்சியுடனும், சிவத்தின் மகள் பற்றிய சிந்தனையுடனும் கழிந்தது. 

    ஒன்றும் பெதிதாக நடக்காதபடியால் அப்படியே நாட்கள் நகர்ந்தன. அன்று பல்கலைக்கழகம் போவதற்காக ஆயத்தமான சத்யாவின் கைப்பைக்குள் சாப்பாட்டுப் பெட்டியை வைப்பதற்காகக் கலா கைப்பையைத்  திறந்தாள். அதற்குள் ஒரு பொம்மை இருப்பதைக் கண்டாள். இது யாருடைய பொம்மையை வைத்திருக்கின்றாள் என்று சிந்தித்தபடி மகளிடம் 
    சத்யா இந்த பொம்மை யாருடையது? என்று கேட்ட போது “பொம்மையா? தெரியாதேம்மா. சிலவேளை இது மிசேலாட அக்காட மகளுடையதாக இருக்க வேண்டும் அம்மா. விளையாடுற நேரம் மறைத்து வைத்திருக்கிறேன் போல. அப்பிடியே கொண்டு வந்திட்டன் என்று நினைக்கின்றேன் என்றாள். 

    “நீ மறைச்சு வச்சது உனக்கே தெரியாது. நல்ல பிள்ள. இப்பிடி மறதி இருந்தால், நல்……லாப் படிப்பாய். சரி சரி அந்தப்பிள்ளையிட்டப் போய்க் கொடுத்திட்டு வா” என்றாள் கலா. 

    பல்கலைக் கழகத்தில் இருந்து மிசேலா வீட்டிற்குப் போய் வரும் எண்ணத்துடன் வீட்டை விட்டு போனாள். இன்று சிவம் வேலைக்கு விடுமுறை எடுத்திருந்த காரணத்தால் சத்யா இன்று பல்கழகத்திற்கு காரில் போனாள். மிசேலா வீட்டிற்கும் போய் வர வேண்டும் என்ற காரணத்தினால் நேரமாகும் என்று சத்யா பெற்றோரிடம் சொல்லிவிட்டுப் போனாள். சத்யாதான் வர தாமதமாகுமே எங்கேயாவது போவமா என்று கேட்டான் சிவம். ஓம் எங்கேயாவது நடந்து போட்டு வருவம் என்று கலாவும் சொல்ல. 

    இருவரும் அருகே இருந்த பென்ராத் அரண்மனைக்குப் போவோம் என்று முடிவெடுத்தார்கள். அதற்கு அருகாமையில் நடப்பதற்கு பச்சைப் பசேலென்ற மரங்களும், அடர்ந்த காடுகளும், புல்வெளியும், சுவாசிப்பதற்குச் சுத்தக் காற்றும் சுகமாக வீசும் ஒரு நடப்பதற்காக பகுதி(பார்க்) இருக்கின்றது. 

    வெயிலைக் கண்டால் பழமரம் தேடும் பறவைகள் போல சனக்கூட்டம் நிரம்பி வடியும். நண்பர்கள் கூட்டம், பிள்ளைகளும் பெற்றோரும் என்று அமளி துமளியாக இருக்கும். 

    இருவரும் தாமதமாக நடப்பதற்கேற்ற பாதணிகளை அணிந்து கொண்டு தயாராகிவிட்டார்கள். நேரம் 5 மணி ஒரு 2 மணித்தியாலங்களை அங்கு கழிக்கலாம். கோடைகாலத்தில் இருட்டுவதற்கு 10 மணியாகும். அதனால், இந்த நேரமே இதமான காலநிலையாக இருக்கும் என்று இருவரும் புறப்பட்டார்கள். 

    இருப்பது ஒரு பிள்ளை என்ற காரணத்தினால், அவர்கள் இருவருடைய எண்ணம் கவலை மகிழ்ச்சி எல்லாம் சத்யாவைச் சுற்றியே வரும். “26 வயதுக்கு வந்து விட்டாள். இனி ஒரு கல்யாணம் பேசி செய்ய வேண்டும். அவளாக ஒரு பெடியனைப் பார்த்தாலும் பரவாயில்லை. சனங்களும் எப்ப கல்யாணம் எப்ப கல்யாணம் என்று கேட்குதுகள் என்ன செய்வதன்று தெரியவில்லை. எங்களை நம்பி இருப்பவளுக்கு நாமாகத்தானே ஒரு மாப்பிள்ளை பார்க்க வேண்டும்” என்று கலாவே பேச்சைத் தொடங்கினாள். 

    “இந்தத் தமிழாக்கள் எங்க போனாலும் கல்யாணத்தை ஒரு பெரிய பிரச்சினையாகத் தான் எடுக்கிறார்கள். இங்க வந்தும் இந்தக் குணம் விட்டுப் போகுதில்ல. பிள்ளைகளுக்குப் பிடிச்சால் கட்டுங்கள் தானே. எதுக்குப் போட்டுக் கரைச்சல் கொடுப்பான். அதது நடக்க வேண்டிய நேரத்தில நடக்கும்” என்று அலுத்துக் கொண்டான் சிவம்.

    பலதும் பத்தும் கணவனும் மனைவியும் பேசுவதற்கு ஏற்ற நேரம் இந்த நடைப்பயிற்சியே. இயற்கை அழகு இரசிக்கப்படும், மக்களின் விமர்சனங்கள் உரைக்கப்படும், மெல்ல மெல்ல கையில் கொண்டு செல்லும் ஐஸ் உம் உதட்டை முத்தமிட்டு வாய்க்குள் கரைந்து போகும். 

    திடீரென்று கலாவின் பார்வை இரண்டு பெண் பிள்ளைகளில் மொய்த்தது. சிவத்தின் கையை இறுகப் பிடித்தாள் கலா. “இஞ்சப்பா அங்க இருக்கிற அந்த இரண்டு பிள்ளைகளையும் பாருங்கள். நம்மட சத்யா போல இருக்குதெல்லா”

    கண்களைச் சுருக்கிச் சந்தேகத்துடன் பார்த்தான் சிவம். ஓம் ஓம் சத்யாதான். என்ன அது அந்தப் பெட்டையைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு இருக்கிறாள். மனம் படபடவென்று இருவருக்கும் தாண்டவமாடியது. விழித்த விழி நிறுத்தியது. 

    அருகே போவோமா? இல்லையா? சிந்தித்த இரு மனங்களும் போவோம் என்று முடிவெடுத்தன. அருகே இருவரும் வந்தார்கள். சத்யா பெற்றோரைக் கவனிக்கவில்லை. அவர்கள் கண்களை அவர்களால் நம்பவே முடியவில்லை. 

    அப்படி ஒரு கம்பீரத் தோற்றம். காலுக்கு மேல் கால்களைப் போட்டு இலேசாக மேல்காலை ஆடடிக் கொண்டிருந்தாள். கையிலே சிகரெட் புகையை இழுத்து உறிஞ்சியபடி புகையை தள்ளிக் கொண்டிருந்தாள். நேர் கொண்ட பார்வை. இடையிடையே தன் அருகே இருந்த பெண்ணுக்கு சில்மிசங்களைச் செய்தபடி சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாள். அவளும் சத்யா மடியில் விழுவதும் சத்யாவைக் கட்டிப் பிடிப்பதும் கொஞ்சலாகப் பேசுவதுமாக இருவரும் சுகமான மகிழ்வான ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.  

    ஆடிப்போனார்கள் கலாவும் சிவமும். தம்முடைய கண்களை அவர்களால் நம்பவே முடியவில்லை. மிக வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள். அவசர அவசரமாக வீட்டுக்கு வந்தார்கள் 

    ஆச்சார அனுஸ்டானங்களைக் கடைப்பிடித்து, அடக்கவொடுக்கமாக, எங்களுக்கு அடிபணிந்து செல்லமாக வாழும் சத்யாவையா நாம் கண்டது?
    “ஏனப்பா… ஒருமுறை போய் கதைச்சுப் பார்த்திருக்கலாம். ஒருவரைப் போல 7 பேர் இருப்பார்களாமே. அதனால், சிலவேளை அது வேற பிள்ளையாக இருக்கும்” என்று தன்னுடைய மனதைச் சாந்திப்படுத்த கலா நினைத்தாள்.

    “சீச்சி அது நம்மட சத்தியாதான். இத எப்படி அவளிட்டக் கேட்பது? இது இருவருடைய மனப் போராட்டம். மௌனமாக நேரம் நகர்கிறது. வீட்டுக்குள் வருகிறாள் சத்யா. வரும்போதே அம்மா பசிக்குது. என்ன சாப்பாடு? என்று கேட்டபடி உள்ளே நுழைகின்றாள். குளியலறைக்குள் சென்று தன்னை சுத்தீகரித்தவளாய் சமையலறைக்குள் நுழைகின்றாள். 

    புட்டை தட்டிலே போட்டபடி “மிசேலா வீட்டிற்குப் போனாயா? என்று கலா கேட்டாள். 

    இல்லம்மா அவளை பென்ராத் பார்க்கில் சந்திச்சேன். பொம்மையைக் கொடுக்க நினைச்சன். அதை மறந்து போனன். உனக்கு எங்க அந்த எண்ணம்  இருக்கப் போகிறது என்று நினைத்த கலா. 

    ஆட்டிறைச்சிக்கறியை தட்டிலே போட்டபடி “நாங்கள் வந்தாமே. எங்களைக் கண்டியா? என்றாள். இல்லையே எங்கே பென்ராத்துக்கா? நான் காணல்ல. என்று சாதாரணமாகப் பதிலிறுத்தவளாய் அமைதியாகச் சாப்பிட்டு விட்டு அம்மா நீங்கள் பாத்திரங்களை வையுங்கள் நான் கழுவி வைக்கிறன். நீங்கள் நடக்கப் போனதால களைப்பாக இருக்கும் ரிவி பாருங்கள். நான் கிச்சனை துப்பரவாக்கிவிட்டு வருகிறேன் என்றாள்.

    குழம்பிய மனதுக்குள் எப்படித்தான் சமாதான நீர் பாய்ச்ச முடியும். நம்பிக்கை சிதறடிக்கப்பட்ட  வேதனையை என்ன சொல்லித் தீர்க்க முடியும். வெடிக்கப் போகும் கவலையை அடக்கி வைத்த கலா சமயலறையை விட்டு நகர்ந்தாள். 

    சிவத்தால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. சத்யா உன்னட்ட ஒன்று சொல்ல வேணும். அம்மா சொன்னவவா?

    “என்னப்பா”
    உனக்கு ஒரு பெடியனை பார்த்திருக்கிறம். எங்கட குடும்பத்திற்கு ஏற்ற பிள்ளை. நீ சொல்லும் தராதரம் எல்லாம் இருக்கிறது. அவர்களுக்கு என்ன சொல்ல. 

    “பிரச்சினை இல்லப்பா. அடுத்த இரண்டு மாதத்தில் படிப்பு முடிகிறது தானே. உங்களுக்குப் பிடித்தால் எனக்கு சந்தோஷம். என்ன இந்த நாட்டு உருப்படாத கலாசாரத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பவர் என்றாலேயே கொஞ்சம் கஸ்டம்” என்றாள் சத்யா. 

    ஆச்சரியத்தின் உச்சிக்குப் போன சிவம், எதுவுமே பேசாமல் தலையாட்டிவிட்டு கலாவை ஓரக் கண்ணால் பார்த்தான். 

    கலாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது. என்ன மாதிரிப் பேசுறாள். உள்ளம் வேதனையால் நிறைந்தது. இப்படி ஏமாற்றி எந்த இடத்தில் எங்களை மரியாதை கெடுக்கப் போகின்றாளோ! மகளிடம் கொண்டிருந்த நம்பிக்கை ஒரு நொடியில் சுக்குநூறாகிப் போனது. அவளைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. பொத்திப் பொத்தி வளர்த்து பொல்லாத குணங்களைப் பதிய வைத்து விட்டோமோ! சிதைந்து போயிருக்கும் தனது மனது என்ன தீர்வை எடுக்கலாம் என்று தெரியாது குழம்பியது. 

    சமையலறையைத் துப்பரவு செய்து விட்டு அம்மாவின் அணைப்பைத் தேடி நெருங்கினாள் சத்யா. கலாவின் கையைப் பிசைந்தபடி அவளை ஒட்டிக் கொண்டு கலாவின் கையை எடுத்து தன்னுடைய தோளின் மேலாக எடுத்துத் தன்னைக் கட்டிப் பிடிக்க வைத்தாள். சத்யா கை படும்போது கலாவுக்கு அருவருப்பாகவும் வெறுப்பாகவும் இருந்தது. அம்மா யூரியூப்பில் வடிவேல் பகிடி பார்ப்போமா என்றாள்.அம்மாவும் மகளும் வடிவேல் பகிடி பார்த்து சிரித்து மகிழ்வது வழக்கம். இன்றைய களைப்பை சிரிப்பால் துடைத்தெறியலாம் எ;னபது சத்தியாவின் நியாயம்.

    “எனக்கு எதுவுமே வேணாம். நான் படுக்கப் போறன்” என்றபடி அவள் கையை விலக்கிவிட்டு படுக்கைக்குப் போய்விட்டாள்.

    இந்த அம்மாக்கு என்ன நடந்தது! எப்பவும் இப்படி இருக்க மாட்டாவே! சத்யாக்கு ஆச்சரியம். தானே தனியாகத் தொலைக்காட்சியில் உறைந்தாள்.
    அடுத்தநாள் சிவம் வேலையில் இருந்து வந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தான். அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்மத போது ஜெர்மனிய பொலிஸ் வாசற்கதவடியில் வந்து நின்றது. உள்ளே வரலாமா? உங்களுடைய மகளுடைய ஒரு விடயம் பற்றிப் பேச வேண்டும் என்றார்கள். கலக்கத்துடன் உள்ளே வர சிவம் அனுமதி அளித்தான். கலாவும் அந்த இடத்திற்கு ஓடி வந்தாள்.  

    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஜெர்மனிய பொலிஸ் ஒரு மாபெரும் கட்டுடலுடனும் உயரமான தோற்றத்துடனும் காணப்படுவார்கள். ஆசிய நாட்டு ஆடவர்கள் அவர்களின் நெஞ்சுப் பகுதியைத் தாண்ட மாட்டார்கள். பின்பக்கப் பாக்கெட்டுக்குள்  துப்பாக்கி சொருகப்பட்டிருக்கும். நிமிர்ந்த கட்டுடல். அவர்களைப் பார்க்க பயத்தைவிட பற்றே அதிமாக இருக்கும். பண்பாகப் பழகும் விதம் எல்லோருக்கும் பிடிக்கும் 

    துப்பாக்கி தூக்கிவரும் போராளிகளைக் கண்டு பாடசாலை மாணவர்கள் எல்லாம் படிப்பும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம் என்று அவர்கள் பின் பயிற்சி எடுப்பதற்காக ஓடினார்களே. அந்த இலங்கைப் போராளிகளைப் பார்த்தே இத்தனை ஆசைப்பட்டார்கள் என்றால், இந்த ஜெர்மனிப் பொலிஸ்காரரின் தோற்றத்தைக் கண்டால் எப்படி இருக்கும். உத்தரவில்லாமல் வீட்டுக் கதவை உடைத்தல், உள்ளே வரல் அவர்களுக்கு அனுமதி இல்லை. 

    உங்களுடைய மகளுடன் பேச வேண்டும் என்றாள். அவள் பல்கலைக்கழகம் போய்விட்டாள் என்று சிவம் கூறினான். ஈரக்குலை நடுங்குவது என்று சொல்வார்களே அந்த அனுபவத்தை அப்போது தான் கலா அனுபவித்தாள். 

    “உங்கள் மகள் ஒரு பையனைப் போட்டு அடித்திருக்கிறாள். விழுந்த ஒவ்வொரு அடியும் அவனை மரணத்திற்குக் கொண்டு போய் இருக்கும். நல்ல வேளை தப்பிக் கொண்டான். இன்று தான் கண்விழித்தான். உங்கள் விலாசத்தைப் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொண்டோம்.” என்றார்கள் 

    கலாவும் சிவமும் சத்தியாவின் நல்ல குணங்களை எல்லாம் எடுத்துச் சொன்ன போது எதுவுமே பேசாமல் சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு அவ வந்தவுடன் ஸ்டேசனுக்குக் கூட்டிக் கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டுப் போனார்கள். 

    இது என்ன புதிய பிரச்சினை. ஒன்றே ஒன்றைப் பெற்றோம். அதுவும் இப்படிப் பிரச்சினையைத் தரும் பிள்ளையாகப் போய்விட்டதே. ஆண்டவா எங்களுக்கு ஏனிந்த சோதனை? இவளுக்கு என்ன குறை வச்சம். இப்படி எங்களை மாறி மாறி மரியாதை கெடுக்கிறாளே. இப்பிடி நோஞ்சான் மாதிரி வீட்டுக்குள்ளே இருப்பவளுக்குள் இத்தனை வீரமா? ஏதோ தவறு நடக்கிறது என்று சிவமும் கலாவும் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். 

    வீட்டுக்குள் நுழைகிறாள் சத்யா. கெதியாக பேக்கை வச்சிட்டு வா. பொலிசுக்குப் போக வேணும்.

    ஏனப்பா என்ன விசயம்? 

    அங்க வா அவங்க சொல்லுவாங்க. ஒன்றும் தெரியாத சின்னக் குழந்தையா நடிக்காத. ஆரொ ஒருவனைப் போட்டு அடிச்சிருக்கிறா என்றான் சிவம். 
    நானா…. விழுந்து விழுந்து சிரித்தாள். உங்களுக்கென்ன பைத்தியமா…..
    ஓம் எங்களுக்குப் பைத்தியம்தான். அங்க வந்து சொல்லு. கொஞ்ச நாளா உன்ர நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டுதான் வர்றம் என்றாள் கலா.
    அங்க என்ன கதை. கதையை வளர்க்கிறத விட்டுப் போட்டு இங்க வந்திருக்கிறார்கள். 

    சரி யாரைத் தேடுறதென்று நீ வந்து சொல்லு ….. வா…. என்ற படி கலா வெளியே வந்தாள்.

    கதவைப் பூட்டியபடி பின் தொடர்ந்தாள் சத்யா.

    பொலிஸ் நிலையத்தில் அதிகாரியின் முன் மூவரும் இருக்கின்றார்கள். விளக்கம் எடுக்கின்றார் அதிகாரி. ஆனால், எதுவுமே தனக்குத் தெரியாது என்று சொல்லிவிடுகின்றாள் சத்யா.

    ஆனால், கையில் காயத்துடன் சத்யா வந்த சம்பவம் கலாவின் மனதுக்குள்ளும் சிவத்தின் மனதுக்குள்ளும் சமாதியாகிறது. பிடிவாதமாகத் தனக்குத் தெரியாது என்றே முடிவெடுத்த சத்யாவைப் பொலிசார் தனியே விசாரிக்கப் பெற்றோரிடம் அனுமதி கேட்கின்றார்கள். 

    சில நிமிடங்களின் பின்
    உங்கள் மகளை நாளை ஒரு மனநல வைத்தியர் வீட்டிற்கு வந்து பார்ப்பார் என்று சொல்லி அனுப்பிவிடுகின்றார்கள்.

    திரும்பத் திரும்பத் சத்யாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு சிவமும் கலாவும் துளைத்தெடுத்தார்கள். அவளும் தெரியாது என்றே பதிலளித்தாள். 
    அடுத்தநாள் வந்த மனநல டாக்டர் தனியே நீண்ட நேரம் பேசுகின்றார். நாளை மீண்டும் வருவதாகச் சொல்லிவிட்டுப் போகின்றார். ஒருவாரத் தொடர் கவனிப்பின் இறுதியில் சிவத்தையும் கலாவையும் தனியே தன்னுடைய அலுவலகம் வரும்படி டாக்டர் அழைப்பு விடுகின்றார். 

    இருவரும் டாக்டரிடம் செல்கின்றனர். டாக்டர் தனக்கு முன்னே இருக்கும் இருக்கையைக் காட்டுகின்றார். இருவரும் அமருகின்றனர். தொடர்ந்து டாக்டர் கூறிய விடயங்கள் இருவருக்கும் தூக்கி வாரிப் போட்டது. கலாவின் கண்ணீரை அடக்குவதற்கு அவளால் முடியவில்லை. 

    பல்கலைக்கழக வளாகத்தில் சத்யா தனியாக ஒரு பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருப்பது வழக்கும். தன்னுடைய நண்பர்கள் யாருடனும் பேச மாட்டாள். தனியே ஒரு சிறு குழந்தையாக மாறித் தன் கற்பனையில் உருவாக்கிய சிறு பெண்பிள்ளையுடன் இணைந்து விளையாடுவதாக பாவனை பண்ணி விளையாடிக் கொண்டிருப்பாள். அவளுக்குச் சிறுவயதில் இருந்தே சேர்ந்து விளையாடுவதற்கு ஒரு சகோதரர் இல்லாத காரணத்தினால் அவளுக்குள்ளே இருந்த குழந்தை மனம் அவளைக் குழந்தையாகவே மாற்றிவிடுகிறது. அவளுக்கு முன்னே யாரோ ஒரு குழந்தை கற்பனையில் இருக்கும். அக்குழந்தை எப்போதும் அவளுடன் பேசுவதும் விளையாடுவதும் வழக்கம்.

    ஆனால், அவள் பல்கலைக்கழக வகுப்புகளுக்கு ஒழுங்கு தவறுவதில்லை. படிப்பில் எந்தவித குழப்பமும் செய்ததில்லை. இவளுடைய இந்தப் பழக்கம் ஏனைய மாணவர்களுக்கு சந்தேகமாக இருந்தாலும் அவர்கள் அதைப் பெரிது படுத்துவதில்லை. பல்கலைக்கழகம் வருவதும் பொவதுமாக இருப்பதனால், பெரிய நட்பு வட்டம் அவளுக்கு இருந்ததில்லை. வகுப்பு முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து விடுவாள்.

    இது என்ன புதுக் குழப்பம் என்ற படி மனதால் தளர்ந்து போனார்கள் சிவம் தம்பதியினர். எத்தனை விந்துக்களை விரயம் செய்திருக்கிறேன். எங்களுடைய சுகத்திற்காக சத்யாவைத் தனியாக வாழவிட்டு நோயாளியாக்கியிருக்கின்றோம் என்று சிவத்தின் இதயம் குற்ற உணர்ச்சியால் துடியாய்த் துடித்தது. கலாவோ கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத கவலையில் உறைந்து போயிருந்தாள்.

    நா தளதளக்க “ இந்தப் புதிய பிரச்சிளை என்ன டாக்கடர்” என்றார் சிவம். 
    உங்கள் மகளுக்கு வந்திருப்பது பல ஆளுமைக்கோளாறு என்று சொல்லப்படும் மல்ரிபில் பேர்சனலிற்றி டிசோர்டர் personality disorder என்னும் நோய். அவளைத் தனியே வளர்த்திருக்கிறீர்கள். உறவுகளோ சொந்தங்களோ இல்லாத இடம். சுற்றவுள்ள குடியிருப்பாளர்களோடு தொடர்பில்லை. நண்பர்களுடன் பழகுவதற்கு விடவில்லை. இந்த நிலையில் அவள் ஆணாகத் தன்னைக் கற்பனை பண்ணிக் கொள்ளுகின்றாள். அந்த சமயத்தில்  ஆணுக்குரிய அத்தனை வலுவும் அவளிடம் வந்து சேரும். தனக்கு ஏற்ற ஒரு பெண் துணையாக  மிசேலாவுடன் பழகுகின்றாள். மிசேலா அவளுடைய காதலி. என்று சொன்னவுடன் ஸ்தம்பித்துப் போகின்றார்கள் இருவரும். 

    கலா உதடுகளைக் கடித்தபடி தலையை மேற்புறம் நோக்கிப் பார்க்கின்றாள். வடிகின்ற கண்ணீருக்கு அடைகட்ட எத்தனிக்கின்றாள். கண்ணீரோ மடைதிறந்து தாரைதாரையாக வடிகின்றது. எப்படியெல்லாம் என் மகளைத் தவறாக நினைத்திருக்கின்றேனே. என்று மனத்தின் ரணம் வலியை மிதமாக்குகின்றது. 

    “காதலியைக் காப்பாற்றுவதற்காகவே அந்தப் பையனைப் போட்டு புரட்டி எடுத்திருக்கின்றாள். அவனும் சத்யாவின் அழகுக்கு அடிமையாகி, அவளை அடையவதற்கு மிசேலா மூலம் முயற்சி செய்திருக்கின்றான். மிசேலா சத்யாவைக் காதலிப்பதை அறிந்து மிசேலாவைக் கோபத்தில் தாக்கிய போதே அவனைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியிருக்கின்றாள். சத்யாவை அவன் அணைக்க முற்படும்போது நிலைமை பாரதூரமாக மாறியிருக்கின்றது. சத்யாவினுள் இருந்த ஆண்மை மிக வேகமாகத் தொழிற்பட்டதனால், அவன் காயப்பட்டு உணர்விழந்து போயிருக்கின்றான். நிலமைக்குத் திரும்பிய சத்யா ஓடி உங்களிடம் வந்திருக்கின்றாள்.

    நானும் பொலிஸாரும் செய்த தீவிர ஆராய்ச்சிகளின் பின் தான் உண்மைகளைக் கண்டுபிடித்தோம். உண்மையில் சத்யாக்குத் தன்னுடைய நிலைமை பற்றித் தெரியாது. 3 விதமான மனிதர்களாக வாழுகின்ற சத்யா தான் வாழுகின்ற வாழ்க்கைக்கு உண்மையாகவே வாழுகின்றாள். ஆணாக வாழுகின்ற போது ஆணாகவே மாறுகின்றாள். பெண்ணாக வாழும்போது அடக்கமான பெண்ணாகவே வாழுகின்றாள்.  ஒரு வாழ்க்கைக்குள் ஒரு வாழ்க்கை அவளுக்குக் குறுக்கிடுவது இல்லை. 

    மனம் தான் எல்லாவற்றிற்கும் காரணம். அது தனக்கேற்றது போல் உருவம் எடுக்கும்தன்மை உள்ளது.

    அப்பாவி சத்யாவின் இந்த நோய்க்கு ஒரு விதத்தில் நீங்களும் குற்றவாளிகளே” என்று கூறிய டாக்டர்.

    “என்னுடைய பயிற்சிக்குத் தவறாது சத்யாவை அனுப்புங்கள். அவளைக் கவனமாகக் கையாள வேண்டியது உங்கள் பொறுப்பு” என்று கூறி கைகுலுக்கி டாக்டர் இருவரையும் வீட்டிற்கு அனுப்புகின்றார். 

    இப்போதுதான் இருவரும் சத்யா வாழ்க்கைப் பாதையின் படிகளை உன்னிப்பாக நினைத்துப் பார்க்கின்றனர். உண்மைகள் புலப்படுகின்றன. 


     

    3 கருத்துகள்:

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    அகப்பையை எறிந்துவிட்டு அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டும்

      இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும்...