கதவைத் திறந்து உள்ளே நுழைந்த சுதா,
'என்ன கன்றாவியோ. கட்டிப்பிடிப்பதும், ஆக்களுக்கு முன்னால் கொஞ்சுவதும். சீ மானங்கெட்ட பொழப்பு. இதைவிட நாண்டுகிட்டு சாகலாம். இஞ்சப்பா இந்தச் சீலையிலே குத்தியிருக்கிற ஊசியைக் கழட்டி விடுங்கள். முதலில இந்த சீலையைக் கழட்ட வேண்டும். எல்லாப்பக்கமும் இறுக்கிக் கொண்டு கிடக்குது'
'இப்ப ஏன் இந்தச் சாமத்தில கத்துறாய்? திரும்பு கழட்டி விடுறேன். அவள் என்ன உன்ர பிள்ளையா? அதுகளுக்குச் சந்தோசம். அதனால சந்தோசமா கல்யாணத்தை நடத்துறாங்கள். கல்யாணத்துக்குப் போனோமா, மொய் எழுதினோமா, வாழ்த்தினோமா என்றிருந்தால் உனக்கு நல்லது. ஏனென்றால், நாங்களும் ஒரு பிள்ளையை வைத்திருக்கிறோம். புரிஞ்சு நடந்து கொள்' மனைவி சுதாவின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் ரவி.
'என்ன சொன்னீங்கள்? நாங்களும் ஒரு பிள்ளையை வைத்திருக்கிறோமா? என்னுடைய பிள்ளையை ஏன் இப்ப இழுக்கிறீங்கள். அவளை நான் நல்லாத்தான் வளர்த்திருக்கிறேன். அதுக்குத்தானே ஒரு முடிவு கட்டிப் போட்டம். இந்தக் கதை உங்களுக்குத் தேவையில்லை. அடுத்த கிழமை வந்திறங்கிறான் என்னுடைய மருமகன் விசாகன். அவனுடைய தலையிலே அவளைக் கட்டிப் போட்டிருவேன். அதற்குப் பிறகு அவனாச்சு, அவனுடைய மச்சாளாச்சு. மணி 12 ஆச்சு. என்ன கல்யாணம் நடத்துகிறார்களோ. சாமம் வரை ஆட்டம். போய்ப் படுங்கள்.'
ஜேர்மனிய ஆணுக்கும் தமிழ் பெண்ணுக்கும் நடந்த ஒரு திருமண வீட்டிற்குச் சென்று வந்த அனுபவத் தெறிப்பே இந்த சுதாவின் மனதைப்போட்டு ஆட்டி வைக்கிறது.
என்னதான் இலங்கையை விட்டு ஜேர்மனிய நாட்டுக்கு வாழ வந்தாலும் சுதாவுடைய தமிழ் கலாசாரம் விட்டுப் போகவில்லை. ஒரே மகள் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள். பலவித இனங்கள், பல்வேறுபட்ட கலாசாரங்கள், பல்வேறுபட்ட வாழ்க்கை முறைகள் இணைந்திருக்கின்ற ஜேர்மனிய நாட்டிலேயே சுதாவும் வாழுகின்றாள். அவள் மகள் ஸ்வாதியும் வாழுகின்றாள்.
ஜேர்மனிய அரசு ரவி குடும்பத்தை பணம் கொடுத்து பராமரித்த போது ஜேர்மனிய மக்கள் போல மனிதநேயம் உள்ள மக்கள் எங்கேயும் இல்லை என்று புகழ்ந்து பேசுவாள். அவர்கள் உழைப்பில் வாழ்ந்த போது ஜேர்மனிய மக்களுக்கு நாம் நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம் என்று வாய் கிழியப் பேசுவாள்.
ஜேர்மனியப் பெண்கள் சேலை உடுக்கும் போது சந்தோசப்படுவாள். அவர்கள் எங்கள் கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள் என்று பெருமிதப்படுவாள்.
ஸ்வாதியை பெற்றெடுத்த போது மருத்துவமனைத் தாதிகள் தன்னைப் பராமரித்த பக்குவத்தைச் சொல்லிச் சொல்லி, அவர்கள் தெய்வங்கள் என்று வாயாரப் புகழ்ந்து தள்ளுவாள்.
ஆனால், குடும்பத்துக்குள் அவர்களை கொண்டு வந்து சேர்க்கும் கலாசார கலப்பை அவளுடைய மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
உடைகள் மாற்றி உறங்கியவள். மறுநாள் காலை மகளை பல்கலைக்கழகம் போவதற்காக எழுப்புவதற்கு அவள் அறைக்குச் செல்கிறாள். அவளோ எழுந்திருக்கவில்லை.
'ஸ்வாதி! 7 மணியாச்சு. யுனிவேர்சிட்டிக்குப் போகல்லையா?
'இல்லம்மா. உடம்பு சரியில்லை. தலையிடிக்குது. நான் இன்றைக்குப் போகவில்லை'
'ஏன். என்னாச்சு. எழும்பு ஒரு இஞ்சித் தேத்தண்ணீர் போட்டுத் தாறன். எல்லாம் சரியாயிடும். என்ன பிள்ளையோ. கல்யாண வயசாச்சு. இன்னும் குழந்தைப் பிள்ளையைப் போல....'
'அம்மா.... என்னக் கொஞ்சம் படுக்க விடுங்க'
'இரவிரவா ஹென்டியோட(Mobile) இருக்கிறது. பிறகு தலையிடி அது இது என்று யுனிவேர்சிட்டிக்குப் போறதில்ல. நீ எப்ப படிச்சு முடிக்கிறது. அவனும் வந்து உனக்காகக் காத்திட்டு இருக்க வேண்டும்'
'அம்மா கத்தாதீங்க. என்னக் கொஞ்சம் படுக்க விடுங்கள்'
'ஓ... நான் கதைக்கிறது உனக்குக் கத்திற மாதிரித்தானே இருக்கும். என்னுடைய தலைவிதி....' என்றபடி சமயலறைக்குள் சென்று காலைச் சாப்பாட்டைத் தயார் பண்ணிக் கொண்டு நின்றாள்.
தடார் என்று ஒரு சத்தம் கேட்க ஸ்வாதி அறைக்குள் ஓடி வந்தாள். நிலத்திலே ஸ்வாதி அசைவின்றிக் கிடந்தாள்.
'ஐயோ .... என்று அலறியபடி அவளுக்குத் தண்ணீர் தெளித்து அசைத்துப் பார்த்தாள். ஸ்வாதியிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. மூச்சுப் பேச்சற்று நீட்டி நிமிர்ந்து ஸ்வாதி நிலத்தில் கிடந்தாள். உடல் விறைத்தது போல் இருந்தது.
ஓடி வந்து 112 என்னும் இலக்கத்துக்கு அழைப்பு விடுத்தாள்.
“Meine Tochter ist bewusstlos. Bitte
schicken Sie mir eine Ambulanz……”
என்னுடைய மகள் உணர்வற்றுக் கிடக்கிறாள் உடனடியாக ஒரு அம்புலன்ஸ் அனுப்பி வையுங்கள். என்னுடைய விலாசம் குறோனன்பேர்க் தெரு. நம்பர் 25. டோட்முண்ட்.
இப்போது உடனடியாக உதவப் போவது ஜேர்மன்காரனே. ஜேர்மனியில் உயிருக்கு ஆபத்து என்றால் தொலைபேசி அழைப்புக் கேட்டு அடுத்த நிமிடமே டாண்.... என்று வந்து நிற்கும் அவசர அழைப்பு வாகனம் (யுஅடிரடயnஉந). மருத்துவமனையில் உயிரைக் காப்பாற்றிய பின்புதான் பண விடயங்கள் பற்றிய பார்வையைத் திருப்புவார்கள். அதனாலேயே ஜேர்மனியை மருத்துவ வசதி கூடிய நாடு என்று எல்லோரும் கூறுவார்கள்.
வீடு வந்த மருத்துவர் ஸ்வாதிக்கு வந்திருப்பது எப்பிலெப்சி ( நுpடைநிளநை யகெயடட ) என்னும் நோய். அதனால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். வேலைக்குச் சென்ற ரவிக்கு தொலைபேசியில் விடயத்தைச் சொல்லிவிட்டு சுதாவும் அம்புலன்ஸ் வண்டிக்குள்; ஏறினாள்.
அம்புலன்ஸ் வாகனம் டோட்முன்ட் வைத்தியசாலையை நோக்கிப் பறந்தது. வழியில் செல்லும் வாகனங்கள் அம்புலன்ஸின் சைகை கண்டும், கேட்டும் அதற்காக விலத்தி வழிவிட்டன. மின்னல் வேகத்தில் பறந்து மருத்துவமனையை அம்புலன்ஸ் அடைந்தது. உத்தரவு கேட்காது வைத்தியர்கள் முதுலுதவியில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.
வீராப்பும் வாய்வெட்டும் எமக்கு ஏதாவது நடக்கும் வரைதான். எது நடந்தாலும் பறவாயில்லை. பிள்ளை உயிரோடு இருந்தால் மட்டும் போதும் என்ற நிலைக்கு சுதா வந்துவிட்டாள். வைத்தியர்கள் தான் தெய்வங்கள் என்ற நிலைக்கு வந்து விட்டாள்.
கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டு இருந்தது. வாயிலோ வார்த்தைகள் இல்லை. ரவி வரவுக்காகச் சுதா காத்திருந்தாள். வேலை இடத்திலிருந்து விடுப்பு எடுத்துத்தானே ரவி வரவேண்டும். அவனிடம் அடக்கி வைத்திருக்கும் அழுகையைக் கொட்டித் தீர்க்க வேண்டும். எப்படித்தான் தனிமையில் வாழ்வோம் என்று வீராப்புப் பேசினாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு அணைப்பை மனம் நாடுவது இயற்கை. இப்போது தன் கவலைக்கு ரவியின் அணைப்பு சுதாவுக்குத் தேவைப்பட்டிருக்கின்றது. ரவியும் அவசரமாக மகளைப் பார்க்க ஓடி வந்தான்.
ரவியும் வந்துவிட்டான். அவனைக் கண்டதும் அவனைக் கட்டியணைத்து அழத் தொடங்கிவிட்டாள்.
'இப்போது என்ன நடந்துவிட்டது. அதுதானே ஹொஸ்பிட்டலுக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டோம். அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள். பயப்படத் தேவையில்லை. அழாதே. கண்ணைத் தொடச்சுக்கோ' என்று ஆறுதல் கூறினான்.
'பிள்ளை எப்படிக் கிடந்தாள். அந்தக் காட்சிதான் எனக்குத் திரும்பத் திரும்ப வருகிறது'
'அதுதான் சொன்னேனே. கொஞ்சம் பொறு டொக்டர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்' என்று ரவி சொல்லும் போது மருத்துவரும் பெமிலி ரவி என்று அழைக்கும் சத்தம் கேட்டது.
உடனடியாக இருவரும் மருத்துவர் அறைக்குள் செல்கின்றார்கள்.
'உங்கள் மகளுக்கு நுரையீரலுக்குள் தண்ணீர் சென்றிருக்கின்றது. அடுத்து உங்கள் மகள் கர்ப்பிணியாக இருக்கின்றாள். அவவுக்கு இரண்டு கர்பப்பைகள் இருக்கின்றன. இப்போது சத்திரசிகிச்சை செய்து பிள்ளையையும் எடுக்க வேண்டும். நுரையீரலில் தங்கியிருக்கும் நீரையும் வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் இருவருக்கும் ஆபத்து. அதனால், ஒப்பரேஸனுக்கு சம்மதம் தெரிவித்து இப்படிவத்தில் கையெழுத்துப் போடுங்கள்'
என்று ஜேர்மன் மொழியில் மருத்துவர் இருவரிடமும் விளக்கிக் கூறினார். இருவரும் ஆடிப் போய்விட்டனர். முதலில் மகளின் உயிர் தான் முக்கியம். ரவி கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டான்.
சத்திரசிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரமனைச் சிறையில் அடைத்து வைத்தபோது முருகன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டாராம். அப்போது படைப்புத் தப்புத் தப்பாக நடைபெற்றதாக புராணம் சொல்கிறது. அந்த படைப்பின் தொடர்ச்சிதான் ஸ்வாதி உடலுக்குள் இரண்டு கருவறை இருக்கும் மாயமும் என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒரு கருவறை பிள்ளையைச் சுமக்க, மறு கருவறை மாதமொரு மாதவிடாய் வரச் செய்திருக்கின்றது. பின்புறம் முள்ளந்தண்டை ஒட்டிய பகுதியில் இருந்த கருவறையில் பிள்ளை வளர்ந்த காரணத்தினால், வயிறு பெருத்திருந்த அடையாளம் தெரியவில்லை. முன்புற வயிறு பெருத்துக் காணப்படவில்லை. எல்லாமே திட்டமிட்டு நடப்பது போல் நடந்திருப்பதை வைத்தியர் மூலம் ரவியும் சுதாவும் அறிந்திருந்தனர்.
19 வயதில் ஒரு பிள்ளையை மகள் சுமந்திருக்கின்றாள். இதற்குரிய எந்த அடையாளமும் இவர்களுக்குத் தெரியவில்லை. மாதமொருமுறை வருகின்ற மாதவிடாய் தவறாது ஸ்வாதிக்கு வந்திருக்கின்றது. அதுகூட ஸ்வாதி கரு சுமக்கின்றாள் என்று காட்டிக் கொடுக்கவில்லை. அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு
ரவி, சுதாவுக்கு நீண்ட நேரமாகியது.
அவமானத்திலும் அதிர்ச்சியிலும் கூனிக் குறுகி நின்றார்கள். எதுவுமே புரியவில்லை. எப்படி என்று கண்களைச் சுருக்கி வார்த்தைகள் இழந்து நின்றார்கள். முதலில் ரவிதான் பேசினான்.
'என்ன சுதா! நல்லாப் பிள்ளை வளர்த்திருக்கிறாய். பிள்ளை நல்லா வளர்ந்து பிறக்கிற பருவம் வரைக்கும், ஒரு அம்மாவாக இருந்த உனக்கு தெரியல்ல. நீயெல்லாம் மற்றக் குடும்பங்களைப் பற்றி நாக்கு வழிக்கிறாய். பிள்ளை அறையைப் பூட்டிற்று இருக்கிறாளே. என்ன நடக்குது என்று கண்காணிக்க முடியாத அளவுக்கு நீயென்ன எங்கள் வீட்டில வெட்டிக் கிழிக்கிறாய்' வார்த்தைகள் சரமாரியாக விழுந்தன.
'போதும் நீங்கள் பேசியது. முதலில் பிள்ளை பிழைச்சு வரட்டும். நல்லாத்தான் புத்தி சொல்லி நான் வளர்த்தேன். இப்படிச் செய்வாள் என்று கண்டேனா? என்றபடி மௌனமானாள்.
சில மணிநேரம் கழிந்த பின் தாதி வந்து தாயும் மகளும் சுகம். ஸ்வாதி இன்னும் கண் விழிக்கவில்லை. விழித்த பின் அறைக்குக் கொண்டு வருகின்றோம். என்று கூறிச் சுதா கையில் பிள்ளையைக் கொடுத்து விட்டுச் சென்றாள்.
கையில் கிடந்த தன் பேத்தியைப் பார்த்தாள் சுதா. ஏங்கிப் போனாள். நீலக் கண்கள், பழுப்பு நிற மயிர்கள், ஐரோப்பிய வாரிசு என்று பறைசாற்றும் மேனி நிறம். சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாத ஜேர்மனியத் தந்தைக்குப் பிறந்த பிள்ளை என்று அடையாளம் காட்டிச் சிரித்தது சுதாவின் பேத்தி.
'இப்படிச் செய்து போட்டாளே. இவளை மலை போல நம்பினேனே. எப்படி பிறருடைய முகத்தில் நான் முழிப்பது. இதைவிட செத்துப் போகலாம். ஏன் என்னை இப்படிக் கடவுள் தண்டித்திருக்கிறார்'
என்று சுதா புலம்பத் தொடங்கினாள். ஆனால், அக்குழந்தையோ அழகான இந்த உலகத்திற்கு நான் பிரசவமாகியிருக்கின்றேன். வெளியுலகில் என் முதல்நாள் அனுபவம் இந்த முகம்தான் என்று சொல்லி தன் தேடல் பார்வையை அவள் முகத்தில் பதித்தது.
ரவி குனிந்து குழந்தையைப் பார்த்தான்.
'சரி சரி புலம்பாத.... கண்ட கண்ட சாதிக்காரனுக்குப் பிள்ளையப் பெறாமல் வெள்ளைக் காரனுக்குப் பிள்ளையப் பெத்திருக்கிறாள் என்று சந்தோசப்படு'
என்றான்.
ஜேர்மனிய சூழலா
பதிலளிநீக்குபுலம் பெயர் சூழலா
சூழ்நிலையில் சிக்கிய மாதுவா
காலத்தின் கோலமா
இத்தனையும் இருக்க முருகன் படைத்தாரா?
முருகனை வம்புக்கு இழுப்பது அழகல்ல...
முருகன் படைத்தது ஒரு பெண்ணின் வயிற்றில் இரு கருப்பைகள்
பதிலளிநீக்குவித்யாசமான கரு ..சொல்லி இருக்கும் விதம் நச்.
பதிலளிநீக்குநல்ல கதை. வாழ்த்துகள். தற்கால நடைமுறை.....
பதிலளிநீக்குமிக அருமையாக மனித மனங்களை குறிப்பா நாவில் நரம்பற்ற மானிட மன எண்ணவோட்டங்களை சொல்லி செல்கிறதுக்கா உங்கள் கதை .வெளிநாட்டு வாழ்வின் அவலம் தன் மகனோ மகளோ என்ன செய்கிறார்கள் என்றே தெரியாமல் இருக்கும் பெற்றோர் அதிகம் இங்கே :(
பதிலளிநீக்குவெளி நாட்டுப் பண்பாடுகளும் இந்திய ஈழப் பண்பாடுகளும் கலந்துபோய் வெகு காலம் ஆகின்றன ; இரு பக்கத்து மக்களும் (எங்கள் குடும்பங்கள் உட்பட) இப்பண்பாட்டுக் கலப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். அப்படி இருந்தாலும் முந்திய தலைமுறையின் மனப்பாங்கு இன்னும் மாறவில்லை என்பதைக் கதை சரியாகப் பதிவுசெய்துள்ளது.- சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்திருந்த திக தலைவர் திரு வீரமணிக்கு அடியேன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தன் தலைமை உரையில் , "சொந்த பந்தங்களையும் செல்வங்கள் சொத்துக்கள் ... என எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடி வந்த நீங்கள் சாதிப்பற்றை மட்டும் விட்டு விடாமல் கையேடு கொண்டுவந்துவிட்டீர்களே" என ஈழத்து தமிழர்களைப் பார்த்து வருத்தப்பட்டார். அதனை உறுதி செய்வதுபோல் கதையின் இறுதி வாக்கியம் அமைந்துள்ளது :"'சரி சரி புலம்பாத.... கண்ட கண்ட சாதிக்காரனுக்குப் பிள்ளையப் பெறாமல் வெள்ளைக் காரனுக்குப் பிள்ளையப் பெத்திருக்கிறாள் என்று சந்தோசப்படு'
பதிலளிநீக்குஎன்றான். "சிறுகதையின் சிறப்பு கதையின் கடைசி வாக்கியத்தில் புலப்படும் என்பர் இலக்கியத் திறனாய்வாளர்கள்.இக்கதையின் இறுதி வாக்கியம் அக்கூற்றை மெய்ப்படுத்துகிறது.கதை ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ,
பிரான்சில் இருந்து .
மிக்க நன்றி சார்
நீக்குகாலத்திற்கேற்ற சூழலோ?
பதிலளிநீக்கு