தமிழ் தாய்மார் தம் கணவனுக்குக் கொடுக்கும்
முக்கியத்துவத்தை விடத் தம் மகன்மாருக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்
முதன்மையானது. பெற்றது முதல் பார்த்துப் பார்த்து வளர்த்தெடுத்து அவர்கள் தேவைகளை
அளவுக்கதிகமாகவே செய்வதில் தந்தையை விடத் தாய் முனைந்து நிற்பாள். பெண்
பிள்ளைகளுக்குக் கூட அந்த அளவிற்கு அவள் இடம் கொடுப்பதில்லை. உணவில் கூட அதை
அண்ணாக்கு கொடு. அது அண்ணாவிடம் கேட்க வேண்டும். அதை அண்ணாக்கு என்று வை என்று
முழுக் கவனத்தையும் தமது ஆண்பிள்ளையிடம் செலுத்துகின்றாள். கழிவறை சுத்தம்
செய்வதில் இருந்து அனைத்துக் கடினமான வேலைகளையும் இரவு பகல் பாராமல் செய்து பிள்ளைகள்,
பிள்ளைகள் என்று படோபகாரமான வாழ்க்கையை வாழ வைக்கின்றாள். விலைகூடிய பொருள்களை
வாங்கிக் கொடுத்து கஷ்டம் தெரியாமல் வளர்த்தேடுக்கின்றாள். ஆனால், பிள்ளைகளோ
பெற்றோருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துப் பார்ப்பதில்லை.
பெற்றோர் தரும் பாசத்தின்
காரணமாக கட்டுகடங்காது சுதந்திரத்தைப் பெறும் பிள்ளைகள், தாயின் பாசத்தையோ
தந்தையின் பாசத்தையோ கடமை என்று முடிவெடுத்து அதைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.
இதை உணர்ந்தே அன்று ``பெற்றமனம் பித்து. பிள்ளை மனம் கல்லு” என்னும் பழமொழியைக்
கூறியிருக்கின்றனர்.
பிள்ளைகள் கேட்டதெல்லாம் கொடுக்கும் உரிமை மட்டும் பெற்றோருக்கு உண்டு. தம்
தேவைகளுக்கு முடிவெடுக்கும் உரிமை தமக்கே உண்டு என்று தெளிவாக இருக்கின்றார்கள்.
கண்டிப்பாகப் பெற்றோர் எடுத்துரைக்கும் வார்த்தைகள் தமக்கு விரோதமானது என்று
நினைக்கின்றார்கள். பெற்றோர்களும் தாம் வாழுகின்ற நாடு, சூழலுக்கு ஏற்ப
சிந்தித்து வாழ்வதற்கு நினைப்பதில்லை. தமது
இரத்தத்தைப் பாலாக்கிக் கொடுக்கும் தாய்மார் தமது இரத்தமே தமது பிள்ளைகளிடம்
ஓடுகின்றது என்று தமது முடிவைத் தமது பிள்ளைகளில் திணிக்கப் பார்க்கின்றார்கள்.
இதனால் விபரீதமான நிலைமைகள் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுகின்றது.
பல்வேறுபட்ட கலாச்சார, மொழி வேறுபாடுள்ள நண்பர்களுடன் ஐரோப்பிய நாடுகளில்
வாழுகின்ற பிள்ளைகள். வேற்று கலாச்சாரத்தில் வாழுகின்ற பிள்ளைகளைக் காதலிப்பது
தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. இக்காதலை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை எமது
பெற்றோர் பெற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை. காதல் என்பது ஒத்த அன்பினரான இரு மனங்களுக்கிடையே
ஏற்படுகின்றது. அது இனம், மதம், மொழி வேறுபாடு பார்த்து வருவதில்லை என்பதை
எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சந்தர்ப்பம், சூழ்நிலைகள் இக்காதல் என்னும்
வலையில் எமது இளம் சந்ததியினரை விழ வைக்கின்றது. இச் சந்தர்ப்பத்தை
ஏற்படுத்தியதும் நாம் தான் என்று சொல்வதற்கு நிச்சயமாக மாற்றுக் கருத்து இல்லை. இதனைச்
சாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்கள், சில காலங்கள் கவலையில் ஆழ்ந்து பின் மகிழ்ச்சியுடன்
வாழ்வது கண்கூடு. இதை அறியும் பிள்ளைகள் அதற்கேற்றாப் போல் வாழுகின்றனர். சில
பிள்ளைகள் தமது ஆசை நிறைவேறாவிட்டால் தமது வாழ்க்கையைத் தாமாகவே முடித்துக் கொள்ளுகின்றனர்.
இதை விட வாழ்க்கையில் ஏற்படுகின்ற சின்னச் சின்னப் பிரச்சனைகளைக் கூட
எதிர்கொள்ள முடியாது, அரிய வாழ்க்கையின் பெறுமதி உணராது தமது பிரச்சினைகளின் வடிகாலைத் தேடிக்
கண்டுபிடித்து தீர்த்து வைக்கும் தைரியம் அற்றவர்களாக எமது எதிர்கால வாரிசுகள்
வாழ்வது வேதனைக்குரிய விடயமாக இருக்கின்றது.
பெற்று எடுத்து அவர்கள் தேவைகள் எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்து, சத்துணவு
கொடுத்து வளர்த்தெடுத்த தேகத்தை நெருப்புக்கு வாரிக் கொடுக்க எந்தத் தாய் தந்தையினரின்
மனம்தான் இடம் கொடுக்கும்.
வாழ்க்கை மனிதனுக்கு ஒரு முறைதான். ``கூன்,
குருடு, செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது”
என்று அவ்வைப் பிராட்டி சொல்லி
இருக்கிறார். அவ்வாறு எந்தக் குறையும் இல்லாமல் பிறக்கும் நாம், வாழ எமக்குக்குக்
கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்க வேண்டும் அல்லவா! திடீரென கிடைக்கின்ற உணர்ச்சிகளுக்கு அடிமையாகி எமது வாழ்க்கையை
முடித்துக் கொள்வது எவ்வளவு மடத்தனமானது.
நாம் எடுக்கின்ற தீர்மானங்கள் அடுத்த
நொடிப் பொழுது மாறிப் போவதை நாம் வாழ்க்கையில் எத்தனை முறை அவதானித்து
இருக்கின்றோம். எமக்கே வேடிக்கையாக இருக்கும். நாள் முழுவதும் அழுது தீர்க்கும்
விடயமாக இருக்கும். அடுத்த நாளே சிரித்து மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும்.
இவ்வாறுதான் மனிதன் வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கின்றது. வாழ்க்கை முழுவதும்
சந்தோசத்தை அனுபவித்த மனிதர்கள் இருக்கின்றார்களா? அப்படிக் கூறினார்கள் என்றால்
அது நடிப்பு என்றே கருத வேண்டும். கடவுளே தஞ்சம் என்று இருப்பவர்கள் கூட கடவுளின்
சோதனை என்று கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
எனவே இன்பமும் துன்பமும், கஷ்டமும்
நஷ்டமும், வெற்றியும் தோல்வியும், வரவும் செலவும், துக்கமும் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும்
இழப்பும், பிறப்பும் இறப்பும் இயற்கை என்று நம்பும், ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை
நாம் கொள்ள வேண்டும். எதிலும் ஆழமான நம்பிக்கை வைத்தல் கூடாது. ஐரோப்பிய நாடுகளில்
எப்படியும் வாழலாம் என்னும் சுதந்திரம்
இருக்கும் போது இறப்பை ஏன் நாடவேண்டும். இன்பத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும்
அதேவேளை துக்கத்தையும் பகிந்து கொள்ள ஏன் விரும்புவதில்லை. பகிர்ந்து கொள்ளும்
துக்கம் அரைவாசியாகக் குறைவது இயற்கை.
வாழ்க்கையில் ஏற்படும்
இழப்புக்களுக்கு மாறாக வாழ்க்கையை வேறுமாதிரி வாழ்ந்து பார்க்கலாமே! ஆதரவற்றவர்களுக்கு
உதவ முன்வரலாமே, வாழ்க்கையைப் பிறருக்காக அர்ப்பணித்து வாழ்ந்து பார்க்கலாமே!
அதில் வரும் சுகத்தில் கவலையை மறக்கலாமே! குறுகி நிற்கும் மனத்தை விரித்துப்
பார்க்கலாமே. வாழ்க்கையில் சாதனை படைத்துக் காட்டலாமே!
வாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தான். நாமாக எமது
வாழ்க்கையை முடிக்க எந்த உரிமையும் எமக்குத் தரப்படவில்லை. வாழ்ந்து முடித்து பூரண
மனிதனாக வாழும் போதுதான் பிறந்த பிறப்புக்கு அர்த்தம் இருக்கின்றது.
சுயமாகத் தம் உயிரை மாய்த்துக் கொண்ட பிள்ளைகளை
இழந்த அனைத்துப் பெற்றோர்க்கும் இக்கட்டுரை சமர்ப்பணம்
அருமை
பதிலளிநீக்குஅருமையான அலசல் சகோ.
பதிலளிநீக்குநமது குழந்தை கஷ்டப்படக்கூடாது என்று எந்த பெற்றோர் நினைக்கின்றார்களோ... அங்கு அந்த குழந்தை கெட்டுப்போக வழியாகிறது.
இது எனது அனுபவம் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கஷ்டத்தை பக்குவமாக கொடுக்க வேண்டும் மனதை கல்லாக்கி கொண்டு இன்றைய சூழல் அப்படி.
அருமை
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள்...
பதிலளிநீக்குஉண்மைதான் சகோதரி.... மிக அருமையான பதிவு......
பதிலளிநீக்கு