ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பை வைத்து பூஜை, விழாக்கள் என்று தமிழர்கள் கொண்டாடினாலும், இச்சித்திரை மாதத்திற்கு ஒரு பெருமை இருக்கிறது. தமிழர்களுக்கு புதுவருடம் பிறப்பது இம்மாதத்திலேதான்.
சித்திரை மாதத்தில் இருந்தே அவ்வருட ஆரம்பம் தொடங்குகின்றது. இது சிங்களத் தமிழ் புத்தாண்டு
என்று இரு இனத்தவர்களும் இணைந்து கொண்டாடுகின்ற பண்டிகையாகவும் காணப்படுகின்றது.
சூரியனை மையப்படுத்தி கொண்டாடப்படும்
தைப்பொங்கல் போல் சித்திரை வருடப்பிறப்பும் சூரியனை மையப்படுத்தியே கொண்டாடப்படுகின்றது. தமிழர்களுக்குரிய காலக்கணிப்பீட்டை கணிப்பீடு செய்வதற்குரிய
பஞ்சாங்கங்களாக திருக்கணித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம்
என்னும் இரண்டு வகைப் பஞ்சாங்கங்கள் உண்டு. அவற்றின் கணிப்பீட்டின்படி சித்திரை மாதத்தில் சூரியன் மேட ராசிக்குள் நுழைந்து
அந்த ராசியை விட்டு வெளியேறுகின்ற காலமாக இம்மாதம் கணிக்கப்பட்டுள்ளது. சூரியன் மேட
ராசிக்குள் நுழைவது சித்திரைமாத 14ம் திகதியாகும். இதுவே தமிழர்களுக்குரிய
முதலாம் திகதியாகவும், வருடப்பிறப்பாகக் கொண்டாடும் நாளாகவும்
கருதப்படுகின்றது.
இவ்வருடப்பிறப்பிலே,
சமயம், கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்கள் வெளிப்படுத்துகின்ற
நிகழ்வுகள், விளையாட்டுக்கள் வெளிக்கொண்டு வரப்படுகின்றன.
தாயகத்தில் புதுவருடப்பிறப்பு கொண்டாடுவதற்கும் புலம்பெயர்வில் புதுவருடப்பிறப்பு கொண்டாடுவதற்கும்
பாரிய வேற்றுமை இருக்கின்றது.
தாயகத்தில் சித்திரை
வருடப்பிறப்பு அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்படுகின்றது. முந்தையதினம்
வீடு முழுமையாகத் துப்பரவு செய்து சாளரங்களுக்குப் புது ஆடை அணிவித்து விடுவார்கள். அன்றைய தினம் வீட்டின் மூத்த குடும்பப் பெண் அதிகாலைக்
கண்விழித்து, குளித்து, பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்ட நிறத்தில் புத்தாடை அணிந்து, மாவிலைத் தோரணம் கட்டி வாசற்படிகளுக்கு மஞ்சள் திலகமிட்டு, சுவாமி அறையில் சுவாமிப் படங்களுக்கு மலர்மாலைகள் அணிவித்து, குத்துவிளக்கேற்றி, ஊதுபத்தி, சாம்புராணிப் புகையை வீடு முழுவதும் பரவவிட்டு, அதன் பின் வீட்டு மற்றைய அங்கத்தவர்களை நித்திரையால் எழுப்பி சுவாமிப்படத்தின்
முன்னும் மங்களப் பொருட்களின் முன்னும் கண் விழிக்கச் செய்வாள்.
பின் அனைவரும் மருத்துநீர்
வைத்து நீராடுவர். மருத்துநீரை முதல்நாள் ஆலயத்திற்குச் சென்று வாங்கி வந்து வீட்டில்
வைத்துவிடுவார்கள். மருத்துநீர் என்பது துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, மஞ்சள், திப்பிலி, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, சுக்கு தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, போன்றவற்றை நீரில் காய்ச்சி தயாரிக்கப்படுகின்றது. இந்நீரை வீட்டிற்குக் கொண்டு வந்து வீட்டின் மூத்த குடும்பத்தலைவன்
வீட்டின் அங்கத்தவர்களுக்கு தலையில் கொன்றை இலையும் காலில் புங்கம் இலையும் வைத்து இந்நீரைத தலையில் வைத்துவிடுவார். இதன்மூலம் நல்ல
பலன்கள் கிடைக்கும் எனவும் சுகதேகியாக வாழ்வார்கள் எனவும் நம்பப்படுகின்றது.
மருத்துநீர் வைக்கப்பட்ட
அனைவரும் பின் குளித்து முழுகி வீட்டின் பூஜை அறையில் கடவுளை வழிபட்டுப்பின் வீட்டின்
மூத்த குடும்பத்தலைவனும் உழைப்பாளியுமானவரிடம் சுபமுகூர்த்த நேரத்தில் வெற்றிலையில்
பாக்கு, நெல்லுடன் பணம் வைத்து கைவிசேடம் பெறுவார்கள்.
பணம் அதிகமாகக் கையில் புரள்பவர்களிடம் வருடப்பிறப்பன்று கைவிசேடம் பெற்றால் அவ்வருடம்
முழுவதும் பணம் எமது கையிலும் நிறைந்திருக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.
பின் ஆலய தரிசனம் முடித்து
வீடு வந்து அறுசுவை உணவு உண்டு ஊரின் நிகழ்வுகளுக்குச் செல்வார்கள். அன்றைய
தினம் உறவினர்களின் சிறுவர்கள் வீடுகளுக்கு வருவதும் அவர்களுக்கு கைவிசேடம் கொடுப்பதும்
ஒரு மகிழ்வான நிழ்வாக காணப்படுகின்றது.
அவரவர் பிரதேசத்திற்கேற்ப
பாம்பரிய விளையாட்டுக்கள் சித்திரை வருடப்பிறப்பில் இடம்பெறுவது கலகலப்பானதும் மகிழ்ச்சியைத்
தருவதுமான விடயமாகும். தலையணிச் சண்டை, வழுக்குமரம் ஏறுதல்,
தயிர்ச்சட்டி உடைத்தல், காளை அடக்குதல், கொம்புமுறி விளையாட்டு, சடுகுடு, போர்த்தேங்காய் உடைத்தல், சைக்கிள் ஓட்டம், மருதன் ஓட்டம் போன்ற ஆண்கள் விளையாட்டுக்களும்,
ஊஞ்சலாட்டம், கும்மியடித்தல், பல்லாங்குழி போன்ற பெண்கள் விளையாட்டுக்களும்
இவ் வருடப்பிறப்பையொட்டி இடம்பெறுகின்றன.
இவ்வாறாக குதூகலமாகக்
கொண்டாடிய வருடப்பிறப்பைக் காலத்தின் கோலத்தால்
நாடு கடந்தாலும் தமது பண்பாட்டு கலாச்சாரங்களைப் போற்றிப் பாதுகாக்க எண்ணுகின்ற தமிழ்
மக்கள் தொடர்ந்து புலம்பெயர்பெயர் தேசத்திலும் கொண்டாடுவதற்கு விரும்பினாலும்,
அது நிறைவேற்ற முடியாத ஆசையாகவே இருந்து வருகின்றது.
அன்றைய பொழுது விடுமுறை நாளான சனி, ஞாயிறு தினமாக இருந்தால் மாத்திரமே ஆலயங்களுக்குச்
செல்லக்கூடியதாக இருக்கின்றது. ஆனாலும் இவ்வார இறுதி நாட்களில் வேலைக்குச் செல்வோர்களுக்கு
அதுவும் முடியாத விடயமாகவே இருக்கின்றது. வீட்டில் இருக்கும் பெண்கள் கூட பிள்ளைகளைப்
பாடசாலைக்கு அனுப்பி விட்டு வழமைபோல் வீட்டுக் கடமைகளைச் செய்து விட்டு தொலைக்காட்சியில்
நடைபெறுகின்ற சித்திரைப்புத்தாண்டு நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கின்றாள். ஆலயங்களோ வெகுதூரத்தில்
இருக்கின்ற காரணத்தினால், ஆலயங்களுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை
ஏற்படுகின்றது.
ஆனால்,
ஆலயங்களில் விசேட பூசைகள் இடம்பெறுகின்றன. பண்பாட்டில்
ஊறித் திளைக்கும் மக்கள் சிலர், இந்நாட்களில் வேலைத்தளங்களில் விடுமுறை
பெற்று கோயில்களுக்குச் சென்று வருவார்கள். வீட்டில் விசேட சமையல்கள் உண்டு களிப்பார்கள்.
தொலைக்காட்சியே வருடப்பிறப்பு கலை, விளையாட்டு நிகழ்ச்சிகனைக் கண்டு களிக்கும்
தளமாகப்படுகின்றது. ஆயினும் தொலைக்காட்சிகள் கூட சினிமா நட்சத்திரங்களின் பேட்டி நிகழ்ச்சிகளுக்கு
முக்கியத்துவம் அளிப்பனவாகவும், திரைப்படங்களை ஒளிபரப்புவனவாகவும்,
பண்பாட்டு, கலாச்சாரங்களைத் தத்தெடுத்த ஆடை, அலங்காரங்களுக்கும், நடன அணுகுமுறைகளுக்கு இடம் தருவனவுமாக இருப்பதனால்,
எமது எதிர்காலத் தலைமுறையினருக்கு சித்திரை வருடப்பிறப்பு
நிகழ்வுகளை எடுத்துக் காட்ட தொலைக்காட்சிகள் துணை தருவதில்லை.
வருடத்தின்
முதல்நாளை ஆண்டவனைத் தரிசித்துத் தொடங்கவேண்டும் என்னும் எண்ணப்போக்கிலேயே ஆலய தரிசனம்
அமைகின்றதே தவிர சித்திரைப் பிறப்பு என்பது ஒரு சமயசம்பந்தமான நாள் அல்ல அது தமிழர்,
சிங்களவர்களுடைய வருடப்பிறப்பு என்பதனை மனம் கொள்ள
வேண்டும். முடிந்தவரை இத்தினத்தின் சிறப்பினை
எதிர்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்துவதற்கான முயற்சியில்
ஈடுபடுவது அவசியமாகப்படுகின்றது
கருத்துக்கள் அருமை...
பதிலளிநீக்குமிக்கநன்றி
நீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசித்திரைப் புத்தாண்டு பற்றிய
சிறப்புகளைப் பகிர்ந்து
உணர வைத்துள்ளீர்கள்...
தங்களுக்கும்
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு