அண்மையில் என் மனதை வருடிய நிகழ்வொன்றை உங்கள் முன்னிலையில் கொண்டு வருகின்றேன்.
காலம் தமிழனை திசை மாறி, கண்டம் மாறி ஓடச் செய்தாலும் தமிழன், செல்லும் இடமெங்கும் தன் திறமையை வெளிக் கொண்டுவந்து தலைநிமிர்ந்து நிற்பான். இதற்கு எடுத்துக்கட்டாக புலம்பெயர்ந்த இளஞ்சந்ததியினர் உலகளாவிய ரீதியிலே புரிகின்ற சாதனைகள் சிறப்பாக அமைகின்றன.
ஜேர்மனிய Geldern நகரிலே நடைபெற்ற பாடசாலை மாணவர்கள் நடத்திய நிகழ்வொன்று என் நெஞ்சத்தை நெருடியது. சிறந்த நெறியாள்கையில் Geldern பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்திய ஒரு நாடகம். இந்நாடகத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராம் பரமானந்தன் என்னும் இளைஞன், தன் குரலாலும் நடிப்பாலும் பலரைக் கவர்ந்திழுத்தார். முற்று முழுதாக ஜேர்மனிய கலாச்சார நாட்டிய நாடக அமைப்பில் பாடல்களாலும் வசனங்களாலும் அமைந்திருந்த இந்த நாடகத்திற்கான பயிற்சி சுமார் 1 வருடமாக நடைபெற்றது. குரல் பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, ஆடை அலங்காரம் என இதற்கான தயாரிப்பு அற்புதமாக நடைபெற்றது. 40 மாணவர்களில் இப்பாத்திரத்திற்காக ராம் பரமானந்தன் தெரிவுசெய்யப்பட்டிருந்தார் என்பது பெருமைக்குரிய விடயமாகும். இவருக்கு மாத்திரம் 11 பேர் ஆடை, அலங்காரம், ஒலி,ஒளி போன்ற அனைத்து விடயங்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தமை சிறப்பு வாய்ந்ததாக அமைகின்றது. இவர் கர்நாடக இசையையும் கற்று டிப்ளோமா தேர்வில் வெற்றியீட்டியுள்ளார். ஆங்கிலப்பாடல்கள், தமிழ் சினிமாப்பாடல்கள் பாடுவதிலும், நடனங்கள் ஆடுவதிலும், கவிதை எழுதுவதிலும் திறமைசாலி என்பது குறிப்பிடத்தக்கது.
300 ஆயிரம் ஒயிரோக்கள் செலவில் பிரமாண்டமான தயாரிப்பில் வெளியான இந்நாடகத்திற்கு 140 பேர் பணியாற்றியிருந்தார்கள். மேடை ஒழுங்கு, நடிப்பு, நடனம், ஒப்பனை, ஆடை அலங்காரம், ஒலி, ஒளி அமைப்பென நிகழ்வு களைகட்டியிருந்தது. 7 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்நாடகத்தில் பங்குபற்றிய அனைத்து நடிகர்களும் தமது நடிப்பை மாத்திரமன்றி பாடல்களையும் சிறிதும் களைப்பின்றி அற்புதமாகப் பாடியிருந்தனர்.

இதிலிருந்து தப்பி காட்டுக்குள் தப்பி ஓடிய இளவரசி ஒரு நாடகக் குழுவிடம் அடைக்கலம் பெறுகின்றாள். இந்நாடகத்தில் உண்மை இளவரசன் நடிக்கின்றான். இவ் இளவரசியும் இதில் இணைந்து கொண்டு நடிக்கும் போது அவளில் நாட்டம் கொண்டு இவ்விளவரசன் இவ் இளவரசியை மணக்கின்றான். அதே ஒப்பனையுடன் அரண்மனைக்கு திரும்பி வந்த இளவரசி தன் முகமூடியைக் கழட்டி மகாராணியை வெற்றி கொள்கின்றாள். அப்போது கண்ணாடியிலுள்ள மந்திரம் மறைய விடுதலை பெற்ற அரக்கன் விடுதலை பெற்று வெளியே வருகின்றான்(ராம்). அரக்கன் வெளியே வர நாடகக்குழுவினர் அனைவரும் இறக்கின்றனர். இளவரசி அரக்கனை வென்று மின்சி பாடுகின்றாள். இதுவே இந்நாடகத்தின் மூலக் கதையாக அமைந்திருந்தது. இடையிடையே பாடல்கள் நாடகத்திற்கு மெருகேற்றியது. கதாபாத்திரங்கள் தமது குரலாலே மேடையில் பாடி நடித்தது அற்புதமான விடையமாக இருந்தது. பார்வையாளர்களாக வந்திருந்தவர்களில் oberhausen நகரைச் சேர்ந்தவர்கள் அந்நகரில் இந்நாடகத்தை நடத்தும்படி கேட்டதற்கமைய இந்நாடகம் அங்கும் மேடையேறுகின்றது.
மேலைத்தேய கற்றல், நடனங்கள், பாடல்கள், நடிப்பு, தொழில் என்று பலபக்கங்களில் தம் திறமைகளை வெளிக்காட்டிவரும் எமது இளந்தலைமுறையினர், எம் பெயர் சொல்ல வரும்காலங்களில் தலைநிமிர்ந்து நிற்பார்கள் என்பதற்கு ராம் பரமானந்தன் நடிப்பில் காட்டிய நுணுக்கங்களும், ஜேர்மனி மொழியில் பாடிய பாடல்களின் இனிமையும் எடுத்துக்கட்டாக அமைகின்றன. அத்துடன் இந்நிகழ்வுக்கு வந்திருந்த Berlin , Hamburg இசைக்கல்லூரி ஆசிரியர்கள், இவரை தமது இசைக்கல்லூரியில் கல்வி கற்கும் படி பரிந்துள்ளனர். பெற்றோர்க்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்த ராம் பரமானந்தன் பாராட்டப்பட வேண்டியவர். இவர் மேலும் மேலும் வாழும் நாட்டு மக்களுடன் இணைந்து பல மேடைகள் ஏறவேண்டும் என்று தமிழ் இனத்தின் சார்பாக வாழ்த்துகின்றேன்.
இந் நாடகம் மீண்டும் ஜேர்மனிய ஒபர்கௌசன் நகரில் 10.06.2015 அன்று மேடையேறுகின்றது.
Theater OberhausenWill-Quadflieg-Platz 1
46045 Oberhausen
Minsi பாடலுக்கு ஒரு உதாரணம்
https://youtu.be/QmT7XeXNrDo