• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 21 ஜூன், 2014

    ஜெர்மன் தமிழ் கல்விச் சேவை 25 ஆவது ஆண்டுவிழாவில் என்னால் ஆற்றப்பட்ட உரை



    அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
    ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
    பின்னருள்ள தருமங்கள் யாவும்
    பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
    அன்ன யாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல்

    என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை உங்கள் முன் சமர்ப்பித்து கல்விச் செல்வம் மகா செல்வம். அதில் தமிழ் இலக்கியச் செல்வம் தனிப்பெரும் செல்வம். அந்த சுவைமிக்க  எங்கள்  செல்வமாகிய தமிழ் இலக்கியத்தின் சுடராக விளங்கக் கூடிய சிறப்பு விருந்தினர் இலக்கியச் சுடர் இராமலிங்கம் அவர்களே, ஏழைக்கு எழுத்தறிவித்தல் புண்ணியம். ஆனால் தமிழ் மொழி இங்கு தேவை தானா என்று தளம்பிக்க் கொண்டிருக்கும் புலம்பெயர் மக்களிடையே  எதிர்காலத் தலைமுறைக்கு தமிழ் மொழியை வித்திடுதல் வித்திடுதல் மாபெரும் புண்ணியம் அதனை ஐரோப்பிய நாடுகளில் செய்து கொண்டிருக்கக் கூடிய ஜெர்மன் தமிழ் கல்விச் சேவை தலைவர் ஸ்ரீ ஜீவகன் அவர்களே, வலிமை உள்ளது வாழும் என்னும் கோட்பாட்டுக்கு இணங்க 25 ஆண்டு காலமாகச் சேவை ஆற்றிக்கொண்டிருக்கும் தமிழ் கல்விச் சேவையின் ஆண்டுவிழாவைச் சிறப்பிக்க வந்திருக்கும் மாணவர்களே, ஆசிரியர்களே, பெற்றோர்களே, மற்றோர்களே உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
                           
     முதலிலேயே சொல்லி விடுகின்றேன். பேசிக் கொல்லும் கொலையை நான் செய்யப்போவதில்லை. குறிக்கப்பட்ட  ஓரிரு விடயங்களை மாத்திரம் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டு விடை பெறுகின்றேன். கல்விச் சேவையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றைய தமிழ் விரும்பிகள் அனைவரும் இங்கு நிறைந்திருக்கின்றீர்கள். மாறுபட்ட கலாச்சாரத்தில், பன்மொழி பேசும் மக்களிடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இவ்வாறான நாட்டிலே பிறந்து வாழுகின்ற எம்முடைய எதிர்காலத் தலைமுறையினர். தமிழ் மொழியை ஆர்வமாகக் கற்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் விரும்பிக் கற்கக் கூடிய சூழ்நிலையை அவர்களுக்குக் கொடுத்தலே எமது கடனாக இருக்க வேண்டும். அதற்கு கற்பிக்கும் நடைமுறையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. சுதந்திரமான கற்றல் முறையேதான் கற்கும் ஆவலை தூண்டும். நாம் என்னசெய்கின்றோம். ஒரு பாடத் திட்டத்தை வைத்திருக்கின்றோம். அது அவசியமானது தான். ஆனால் அதற்குள்ளேயே எண்ணங்களைச் சுருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது அவசியமற்றது. மாணவர்கள் பேசும் சுதந்திரத்தை யார் கொடுக்கின்றார்கள். எதிர்த்து கேள்வி கேட்கும்போது, தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்வதற்கு யார் முன் வருகின்றார்கள். அறிந்து வந்து சொல்கின்றேன் என்று எத்தனை ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். அந்த விஷயத்தை விடு. இது இப்போது அவசியமா? நீ பெரிய மேதாவி. கேட்கிற கேள்வி. இப்படி ஏதாவது சொல்லி வாயை அடைத்து விடுகின்றார்கள். ஏனென்றால், நாமும் அவ்வாறான கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்கள் தானே. பூமியைப் பாயாய் சுருட்டினார் என்ற போது அதை நம்பியவர்கள் தானே. ஆனால் இக்கால மாணவர்கள் அப்படி இல்லை. எங்கிருந்து கொண்டு பாயைச் சுருட்டினார் என்று கேட்கக் கூடியவர்கள். இது இலக்கியச் சுடர் அவர்களுக்குத் தெரிந்ததே.  கடவுள் உலகத்தைப் படைத்தார் என்னும் போது எங்கிருந்து கொண்டு படைத்தார் என்று கேட்கின்ற மாணவர்கள் வாழுகின்ற சூழலில் கற்பிக்கும் தொழிலைக் கையில் எடுத்திருக்கின்றீர்கள். கற்பிக்கும் விடயம் இக்காலத்துக்குப் பொருந்தக்கூடிய முறையில் இருக்கின்றதா என்னும் அவதானம் ஆசிரியர்களுக்குத் தேவையானது. எத்தனை காலத்துக்கு மதி போல் முகம் என்று உவமை அணிக்குச் சொல்லப் போகின்றீர்கள். இப்போதுள்ள மாணவன் சொல்வான் குன்றும் குழியும் நிறைந்ததுதான் மதி என்று. heidi klum ஒட்டிய முகத்தைத்தான் model இற்கு எடுப்பார். அதனால் வட்டமுகம் போல் இருப்பதெல்லாம் இக்காலத்திற்கு ஆகாது. அதனால் விரும்பும் படியான உதாரணத்தை எடுத்துக் காட்டவேண்டும். உதாரணமாக முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிக்கள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ இது வைரமுத்து பாடல் வரிகள் இதில் தற்குறிப்பேற்ற அணி இருக்கின்றது. இப்படி சினிமாவைப் பயன்படுத்துங்கள். அதனால் எந்த இடத்தில் எவ்வாறாக விடயத்தை கற்பிக்கின்றோம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
    இங்கு வள்ளுவர் பாடசாலையும் இருக்கின்றது. திருக்குறள் போட்டிகள் நடத்தப்படுகின்றது திருக்குறளை கற்பிக்கும் போது முதலில் உரையை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதன் பின் குரலுக்கு வரலாம். உதாரணத்திற்கு

    பொள்என ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
    உள்வேர்ப்பர் ஒள்ளி யாவர்”

    என்னும் குறளைக் கற்பிக்கும் போது, அதன் பொருள் புரியாத மாணவன் குழம்பிப் போவான். ஏனென்றால் வள்ளுவர் காலத்தில் அவன் வாழவில்லை. அவர் காலத்து சொற்கள் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை. அவர் கூட இப்போது வாழ்ந்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டார். எனவே அறிவுடையவர்கள் பகைவர் தீங்கு செய்தவுடன் வெளிப்படையாக கோபம் கொள்ளாமல் அவர்களை வெல்வதற்கு உரிய காலம் வரும் வரை மனதுக்குள்ளே சினத்தை வைத்துக் காத்திருப்பார்கள்  என்னும் போது. achso அப்பிடிச் சொல்றதானே. நேரே விஷயத்துக்கு வருவீங்களா.... என்று கூறி speed ஆகப் போய்க் கொண்டே இருப்பார்கள். எனவே உரையை கற்பிக்க வேண்டும். உரைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன்பின் தான்  குறளை அறிமுகப்படுத்த வேண்டும்.  தொடர்ச்சியாக குறள் கற்பிக்கும் போது இந்த மனிசன் வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே குந்திக் கொண்டிருந்து எழுதிக் கொண்டிருந்தாரென்றால், நாமா இதற்குப் பழி?. அந்த மனிஷி வாசுகியிடம்  கேட்டுப் பார்க்க வேண்டும் குடும்ப நிலைமையை. இங்கு போல் அப்போதும் மன்னர்மார் sozial hilfe கொடுத்துக் கொண்டிருந்தார்களோ என்ரெல்லாம் எண்ணத் தொடக்கி விடுவார்கள். அதனால் சந்தர்ப்பத்திற்கேற்ப குறள் கற்பிக்கும் போதே ஆவல் தூண்டப்படும். உரைமூலம் குறள் கற்பித்து விட்டோம். இப்போது உரை இக்காலத்துக்குப் பொருந்துகின்றதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

                
    வள்ளுவர் கருதியது என்ன? நல்ல சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே. அதனால் 

    அவர் எடுத்துக்காட்டிய விடயங்கள் பிள்ளைகளை சென்றடைய வேண்டுமென்றால் அவர் 

    குறளுக்கு கூறிய உரை இக்காலத்துக்குப் பொருந்துகிறதா என்று அறியவேண்டும். 

    இப்போதுதான் திருக்குறளுக்குப் பல உரைகள் வந்துவிட்டன. ஏனென்றால், வள்ளுவர் 

    என்ன எண்ணினார் என்பது முழுவதுமாக எம்மால் புரிந்து கொள்ள முடியாது.
                      
    இத் திருக்குறளை எடுத்துப் பார்த்தால் பரிமேழலகர் உரை சொல்கின்றது. வேறு தெய்வங்களை வழிபடாது. தன் கணவனை தொழுது துயில் எழும் பெண், பெய் என்று சொல்ல மழை பெய்யும் என்று. அதேவேளை கோ. பார்த்தசாரதி அவர்களுடைய உரை சொல்கின்றது தன் கணவனைத் தொழுது துயில் எழும் பெண், வேண்டிய போது பெய்யும் மழைக்கு ஒப்பாவாள் என்று சொல்கின்றது. எனவே காலத்துக்கு ஏற்ப கருத்தையும் நாம் மாற்றிவிட வேண்டும். இல்லை.  
                ``பாலெல்லாம் நல் ஆவின் பாலாமா பாரிலுள்ள
                 நூலெல்லாம் வள்ளுவன் செய் நூலாமோ – நூலிற்
                 பரித்த உரையெல்லாம் பரி மேலழகன்
                 தெரித்த உரையாமோ தெளி

    என்று கூறி இக்காலத்துக்குப் பொருந்துகின்றதோ இல்லையோ அதைப் போட்டுப் பிள்ளைகளுக்குப் புகுத்துவதனால் என்ன இலாபத்தைக் காணப்போகின்றோம். அதேவேளை திருக்குறளில் நாம் கை வைக்க உரிமை கிடையாது. ஆனால் கருத்து அது முக்கியம்.
     .
    . கணக்குப் பாடத்தைக் கற்கின்ற மாணவன் அதைக் கற்கும் போது எந்தவித உணர்ச்சியும் அடைவதில்லை. அதில் தன் மூளையை ஈடுபடுத்துவான். ஒருவேளை தன்னை மறந்து கணக்கில் ஈடுபடுவான். ஆனால் இலக்கியம் கற்கும் மாணவன் அப்படி இல்லை. அதில் தன்னை இழந்து விடுகின்றான். எனவே நாம் கற்பிக்கின்ற சூழல், காலம்  கருத்தில் கொண்டே  கற்பிக்கின்றபோது கற்பிக்கும் பலனைப் பெற முடியும்.
                
       பெற்றோர்களே உங்களிடம் தாழ்மையாக வேண்டிக் கேட்கின்றேன்.உங்கள் அறியாமையை உங்கள் பிள்ளைகளிடம் விட்டுச் செல்லாதீர்கள். சொர்க்கமோ நரகமோ அது இங்கு தான் உண்டு. நன்மையோ தீமையோ அதுவும் உங்களிடம்தான் உண்டு. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று பூங்குன்றனார் பாடியுள்ளார். எது தேவையோ அதுதான் நிலைக்கும், மனிதனின் வால் அப்படித்தான் இல்லாமல் போனது. பகுத்தறியும் பண்பை உங்கள் பிள்ளைகளுக்குப் பழக்குங்கள். அது கூடாது,இது கூடாது, அது ஆகாது, இது மங்கலம் அது அமங்கலம் என்றெல்லாம் மடமையைப் புகுத்தாதீர்கள்.தேவை அற்ற திணிப்புக்கள் கட்டுப்பாடுக்கள் வேண்டாமே. பூமிவயத்தில் எமது வயது ஒரு அணு அளவு கூட இல்லை. அதனால் எமக்கு எந்த உரிமைகளும் இவ்வுலகில் இல்லை. வாழுகின்ற போதே மகிழ்ச்சியுடன் நாமும் வாழ்ந்து எமது பிள்ளைகளையும் மகிழ்ச்சியுடன் வாழவைப்போம். ப்ளீஸ்  update பண்ணுங்க..        

                               இதேபோல் மாணவர்களும் அவதானிக்க வேண்டியது. கேள்வி கேட்கின்ற போதுதான் அறியாமை விலகும் ஆற்றல் பெருகும். சைவ சமயத்தில் சந்தேகம் வந்த போதுதான் சைவ சித்தாந்தம் தோன்றின. உங்கள் வாழ்க்கையை மாற்றக் கூடிய சிந்தனை உங்கள் சந்தேகங்கள். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போம். அதேபோல் வாய் விட்டு கேள்விகள் கேட்டால் சந்தேக நோய் விட்டுப் போம். ஆனால் அதை தீர்க்கக் கூடியவர்களிடமே கேட்க வேண்டும். அது நல் ஆசானால் மட்டுமே முடியும் என்று நினைக்க வேண்டாம். உங்கள் பெற்றோராலும் முடியும். இப்போதுதான் கையுக்குள் உலகத்தைக் கொண்டு செல்கின்றார்களே. தமிழ் மொழி உலக மொழிகளில் மூன்றாவது இடத்தில் கணணி உலகில் இடம் பிடித்திருக்கின்றது. முதலாவது ஆங்கிலம், அடுத்து ஹீப்ரு மொழியை மெருகேற்றி  இட்டீஸ் மொழியாகப் உயிர்ப்பித்து இஸ்ரேலியர்கள் இன்று இரண்டாவது இடத்தில் கணணி உலகில் பிரவேசிக்கின்றார்கள். மூன்றாவது இடத்தில் இருக்கும் தமிழ் மொழியை முதலாவது இடத்திற்குக் கொண்டு வருவதற்காக கணணி உலகு தமிழர்கள் எமது தமிழ் பொக்கிஷங்களை எல்லாம் புகுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதனால் எல்லோராலும் எல்லாவற்றையும் அறிய முடியும். மாணவர்களே உங்கள் பணி சிந்திப்பதுதான்.   சிந்தியுங்கள் சிறப்பான வினாக்களைத் தொடுங்கள். அதன் மூலம் அறிவைப் பெருக்குங்கள். நீங்கள் வாழுகின்ற நாட்டவர்களிடையே உங்கள் திறமை வெளிவரட்டும். தமிழின் சிறப்பு புலப்படட்டும், உலகின் முதல் இனம் என்று எமக்குள்ளே பழங்கதைகள் பேசிப்பேசிக் கொண்டிருத்தலை விட்டுவிட்டு அந்நிய நாட்டில் சகல கல்வி வசதிகளும் பெற்றுக் கொள்ளக்கூடிய தமிழன் என்று தலைநிமிர்ந்து சொல்லக்கூடிய திறமையைக் காட்டுங்கள் என்று கூறி. தமிழ் கல்விச் சேவையை மனமாரப் பாராட்டி, அற்புதமாக நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கின்ற மாணவர்களை வாழ்த்தி, இசையால் எம்மை வசமாக்கிய இசை ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்து வாய்ப்புக்கும் நன்றி கூறி விடை பெறுகின்றேன். நன்றி வணக்கம்

    விழாவில் இடம்பெற்ற காட்சிகள் சில  


             சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட 
    இலக்கியச் சுடர் இராமலிங்கம் அவர்களின் உரை 


                                            
                                     ஜெர்மன் தமிழ் கல்விச் சேவையில் நீண்ட காலம் பணியாற்றிய 
                                                 உறுப்பினர்களுக்கு பாராட்டு 




    கல்விச் சேவையின் கீழ் இயங்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கு பாராட்டு 



                   ஜெர்மன் தமிழ் கல்விச் சேவை தலைவர் ஸ்ரீ ஜீவகன் அவர்களுக்கு 
        தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரால் செந்தமிழ் ஊர்தி  என்னும்
    பட்டமளித்து பாராட்டப்பட்டது 


    சிறப்பு விருந்தினர் கௌரவிப்பு 





    16 கருத்துகள்:

    1. அற்புதமான உரை. அழகழகான படங்கள். பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு
    2. ``சிந்தியுங்கள் சிறப்பான வினாக்களைத் தொடுங்கள். அதன் மூலம் அறிவைப் பெருக்குங்கள். நீங்கள் வாழுகின்ற நாட்டவர்களிடையே உங்கள் திறமை வெளிவரட்டும். ``தமிழுக்கு பெருமை சேர்க்கும் உங்கள் உரைக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. உங்கள் முதல் பிரவேசத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

        நீக்கு
    3. நல்ல உரை.
      நல்ல படங்கள்
      நன்றி
      இனிய வாழ்த்து.
      வேதா. இலங்காதிலகம்.

      பதிலளிநீக்கு
    4. அருமையான உரை
      வாழ்த்துக்கள் சகோதரியாரே

      பதிலளிநீக்கு
    5. எழுச்சிமிகு உரை..

      //அந்நிய நாட்டில் சகல கல்வி வசதிகளும் பெற்றுக் கொள்ளக்கூடிய தமிழன் என்று தலைநிமிர்ந்து சொல்லக்கூடிய திறமையைக் காட்டுங்கள்//
      இவ்வரிகளை மிகவும் ரசித்தேன்..

      நன்றி..

      பதிலளிநீக்கு
    6. தங்களை போன்றவர்களால்தான் தமிழ் உலகெங்கும் ஒலி தோங்குகிறது தமிழன் என்ற நிலையில் பெருமை கொள்கிறேன் சகோதரியே... வாழ்க உமது தொண்டு.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. தமிழன் கடலில் போட்டாலும் தமிழ் என்ற முத்தைத் தாங்கிக்கொண்டே மேல் எழுவான்

        நீக்கு
    7. அருமையான உரை சகோதரி. மிக்க மகிழ்ச்சி.

      பதிலளிநீக்கு
    8. வெளியிட்ட படங்களில் தமிழ் கற்கும் மாணவர்களும் இடம் பெற்றிருந்தால் உங்கள் சேவை எங்கு சென்றடைகிறது என்றும் தெரிந்திருக்கும் அன்னிய மண்ணில் தமிழ் கற்கும் வாய்ப்பு பெறுபவர்களுக்கும் கற்பிப்போருக்கும் வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...