2025 மார்கழி மாதம் தாய்வீடு சஞ்சிகையில் என்னைப்பற்றி வந்த கட்டுரை
காதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் ‘’காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாருமில்லை’’ என்று விக்னேஷ் சிவன் எழுதினார். மனத்துள் பூட்டி உணர்வில் வெளிப்படுத்தும் இக்காதலை நிறமூட்டி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய பெருமை இலக்கியங்களுக்கும், திரைப்படங்களுக்குமே இருக்கின்றன.
கதையாய்ப் பாடலாய் இலக்கியங்களும், அழகுக் காதல் சொல்லும். நடிப்பால் காட்சிகளால் திரைப்படங்களும், காதலை வெளிப்படுத்திக் காட்டும். வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி இலக்கியங்கள் என்றால், திரைப்படங்கள் என்று சொல்லப்படுகின்ற சினிமாவும் அதைத்தான் செய்கின்றன. சினிமா வரலாற்றிலே காதலைச் சொல்லாத தமிழ் சினிமாப் படங்களை விரல்விட்டுத்தான் எண்ண வேண்டும். ஊனமுள்ளவனாக இருந்தாலும் காதல் வரும் என்று எடுத்துக்காட்டிய ‘’பேரழகன்’’, ஒருவரை ஒருவர் தீண்டாமலே காதல் சொல்லும் ‘’ஒரு தலை ராகம்’’, பார்க்காமலே உணர்வுகளைப் பரிமாறிக் கடிதம் மூலம் காதல் வெளிப்படுத்திய ‘’காதல் கோட்டை’’, கால் சலங்கையால் காதலியைக் காலமெல்லாம் நினைத்திருந்த காதல் ‘’சலங்கை ஒலி’’, கலையைக் காதலித்து அக்கலைஞனில் காதல் கொண்ட ‘’சிந்துபைரவி’’, பார்வையற்ற ஏழையாக இருந்தாலும் பணக்காரக் பெண்ணுக்குக் காதல் வரும் என்று சொன்ன ‘’ராஜபார்வை’’, வயது பேதம் பார்க்காது தன்னைவிட வயதான பெண்ணின் மேல் காதல் கொண்ட ‘’அபூர்வராகங்கள்’’, முதியவர்க்கும் காதல் வரும் என்று சொன்ன ‘’முதல் மரியாதை’’, எனை மாற்றும் காதலே என்று சொன்ன ‘’நானும் ரௌடி’’ இவ்வாறு சினிமா சொன்ன காதல் எண்ணிக்கையற்றன.
இவ்வாறான சினிமாவில் தேன் சுவை சொட்டச் சொட்ட மக்கள் மனத்துக்குள் இதமான காதல் உணர்வுகளை வெளிப்படுத்திய சில பாடல் வரிகளை இரசித்து இன்புறுவோம்.
காதல் பாடல்களில் வகைகளை எடுத்து
நோக்கினால், காதலன் காதலியின் அழகைப் புகழ்ந்து பாடும் பாடல்கள், காதலி காதலன் அழகைப் புகழ்ந்து பாடும் பாடல்கள், காதலியின் மனதை ஈர்க்கும் பாடல்கள், காதலனை எதிர்பார்த்துக் காதலியும் காதலியை
எதிர்பார்த்துக் காதலனும் ஏங்கும் பாடல்கள்,
பிரிவுத்
துயரை வெளிப்படுத்தும் சோகப் பாடல்கள் என வகைப்படுத்தலாம்.
காதலன் காதலியை வர்ணிக்கும் போது அவள் கண்களுக்கு முக்கித்துவம் கொடுப்பது வழக்கம்.
“பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து உருவ உண்கணை ஒண்படை ஆம் எனக் கருதி அன்பொடு காமுற்று”
எனக் கம்பன் பாட கம்பனைக் கற்ற கண்ணதாசன் அதேபாணியில்
“பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு
மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட’’
என்று இரு வல்லவர்கள் என்ற
படத்திற்கு கண்ணதாசன் பாடல் வரிகளைத் தந்துவிடுகின்றார். பெண்களுடைய கண்களை பெண்
வண்டுகள் என்று கருதிய ஆண்வண்டுகள் அவளுடைய மலர் போன்ற முகத்திலே வந்து
மோதுகின்றன. அந்த வண்டுகளைத் தடுப்பதற்காக அவள் கைகளால் மூடுகின்றாள். எவ்வளவு
அறபுதமான வரிகள்.
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலைகுனிவாள்.
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்தி பூச்சரமோ,
கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ”
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள்
தந்தாள்.
அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை
பயிலும்.
ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும்
மயிலும்.
இன்னிசையைப் பாடங் கேட்க எண்ணி வரும்
குயிலும்.
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே
துயிலும்”
என்னும் பாவை விளக்குப் படத்தில்
வரும் வரிகளில் அன்னநடையைப் புலவர்கள் பெண்ணின் நடைக்கு உவமையாகச் சொல்வார்கள்.
அந்த அன்னமே இவளிடம் நடைப்பாடம் கற்க வருவதாகச் சொல்வது காதலனின் அதீத கற்பனையாக
வெளிப்படுகின்றது. அதேபோல் மயில் ஆடல்கலையையும், குயில்
பாடலையும் பயில வருகின்றன.
என்று சிவபெருமான் தேவநாதருக்குப் புத்திபுகட்டுவதற்காக தன் இசையை நிறுத்தி உலகத்தையே அசையாமல் செய்தார் எனப் புராணம் கூறுகின்றது. இங்கு இயற்கையைத் தன் காதலி அவள் குரலினால் துயில வைக்கின்றாள் எனக் கவிஞர் எழுதியிருப்பது சுவாரஸ்யமாக இருக்கின்றது.
உலகத்தில் எவையெல்லாம் சிறப்பாக இருக்கின்றனவோ, அவையெல்லாம் தன் காதலியாகக் காணுகின்ற காதலனின் மனத்தை
“காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி(குளிர்மை), மலர்களிலே அவள் மல்லிகை(வாசனை). பறவைகளில் மணிப்புறா, பாடல்களில் தாலாட்டு, கனிகளிலே மாங்கனி, காற்றினிலே தென்றல், பால் போல் சிரிப்பதில் பிள்ளை(களங்கமில்லை). பனிபோல் அணைப்பதில் கன்னி, கண் போல் வளர்ப்பதில் அன்னை’’ எனப் புகழ்ந்து பாடிய கவிஞர், அன்னை பிள்ளையை வளர்ப்பது போலவே என்னைக் கவிஞனாக வளர்த்துள்ளாள் எனத் தன் காதல் உணர்வுகளைப் பாடலாகத் தந்திருக்கின்றார்.
இந்தக் காதலி எவ்வாறான அழகானவளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனதுக்குப் பிடித்துவிட்டால், அவள் காதலனுக்குத் தேவதைதான். அவள் கோபுரங்கள் சாய்வதில்லை படத்து அறுக்காணியாகக் கூட இருக்கலாம். 16 வயதினிலே கமலஹாசன் போல் சப்பாணியாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் காதல் மலரும், மனங் காவியம் பாடும். அதுவே காதலுக்கு உள்ள மகத்துவம். அதனாலேதான் என்னவோ தன்னுடைய காதலனின் அழகை எடுத்துக் காட்டுவதற்கு பல எடுகோள்களை முன் வைக்கின்றாள்
“கறுப்புத்தான் எனக்குப் பிடித்த கலரு. அவன் கண்ணு ரெண்டும் என்னை மயக்கும் தவுஸண்ட் வோட்ஸ் பவரு’’ என்று சொல்வது மட்டுமல்லாமல்ல. இரவு, விவசாயி, மண்ணுக்குள்ள இருக்கிறப்போ வைரம், காதலனை ரசிக்க வைச்ச கண்ணுமுழி, கண்ணகி, கருவறை , பாவாடை கட்டிப் பதிஞ்ச தடம், என்று பலவாறாக கறுப்பின் பெருமைகளைப் பாடுகின்றாள். ஏனென்றால், இவ்வாறான பெருமைகள் பொருந்திய கறுப்பு தான் தன் காதலன்.
இருமனங்கள் சந்தர்ப்பவசத்தால் ஈர்க்கப்படுகின்றன. அதைத்தான் சிலரைக் கண்டால் மனதுக்குள் பல்ப் எரிகின்றது என்பார்கள். அவ்வாறு ஈர்க்கப்பட்ட மனங்கள் ஒன்றாகக் கலக்கின்றன. உயிரில் கலந்து விடுகின்றன. உயிரில் கலக்கும் போது “யாருமில்லா தனியறையில் ஒரு குரல் போல எங்கோ இருந்து என்னை இசைக்கிறாய்” என்கிறார் கவிஞர் பா.விஜய். தனியாக இருக்கும் ஒரு அறையில் அமைதி குடிகொண்டிருக்கும். அந்த அறையில் ஒருவரை எங்கோ இருக்கும் ஒருவர் இசைக்க வைக்க எப்படி முடியும்! இசைக்குத்தானே மனங்களை மட்டுமல்ல மரங்களைக் கூட இசைய வைக்கக் கூடிய சக்தி உண்டு. ஆனால், எங்கோ இருந்து ஒருவரை இசைக்க வைக்கக் கூடிய சக்தி அந்தக் காதலுக்குத்தான் உண்டு.
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிருள் கலந்த காதல் உணர்வுகள் “Black
and White கண்ணு
காதலியைப் பார்த்தா கலரா மாறும். துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக
சீறும்” என்று விக்னேஷ் சிவன் அவர்கள் நானும் ரௌடிதான் என்னும் படத்தில்
எழுதுகின்றார். “காதலுக்கு மொழி தேவையில்லை கண்கள் பேசும் வார்த்தைகளே காதலுக்கு
மனப்பதிவுகளை வலிமையாக்குகிறது. இதனையே ஒலி இல்லாத உலகத்தில் இசையாக நீயே மாறி
காற்றில் வீசினாய் காதில் பேசினாய். மொழியில்லாத மௌனத்தில் விழியாலே வார்த்தை
கோர்த்து கண்ணால் பேசினாய்” என்று அதே நானும் ரௌடிதான் என்னும படத்தில் தாமரை
வரிகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
மண் தொட்டதால் இன்று
செவ்வானம் போல் ஆச்சு.
விண் சொர்க்கமே பொய் பொய்
என் சொர்க்கம் நீ பெண்ணே”
என்னும்போது வாழ்க்கையில்
சொர்க்கத்தைக் காணவே விரதங்களும் கோயில், குளங்களும் சுற்றுகின்ற
அடியார்களுக்கு நடுவே ஒரு பெண் போதும் சொர்க்கம் காண என்று கூற உண்மைக்
காதலுக்குத்தான் முடியும்.
நிலவில் குளிரில்லை.
அவள் கண்ணைப் பார்த்து மலரைப்
பார்த்தேன்
மலரில் ஒளியில்லை.
குயில் ஓசை போலொரு வார்த்தை
குழலோ யாழோ என்றிருந்தேன்.
கலை அன்னம் போலவள் தோற்றம்
இடையில் இடையோ கிடையாது”
காதல் பாடல்களில் சோகப்பாடல்களே அதிகமாக பலரின் மனங்களை இலகுவில் ஆட்கொண்டுவிடுகின்றன. பிரிவுத்துயரை வெளிப்படுத்தும் “கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ?
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ?
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே”
ஆண்டுகள் கடந்தாலும் மனதுக்குள் ஆழமாகப் பதியும் வரிகள் உன்னைக் காணாமல் உயிர் வாழ முடியாது என்பதை காதலி வெளிப்படுத்தும் பாங்கைக் கண்ணதாசன் வரிகளில் கேட்டு இன்புறக் கூடியதாக இருக்கின்றது.
எதுக்காகக் கிட்ட வந்தாளோ! எதைத்தேடி விட்டுப் போனாளோ! விழுந்தாலும் நான் ஒடஞ்சே போயிருந்தாலும் நினைவிருந்தால் போதும் நிமிர்ந்திடுவேன் நானும் என்று பாடும் வரிகளில் கண்ணீரும் கூட சொந்தமில்லை என்று வலி சுமந்த வரிகள் நெஞ்சைத் தொடுகின்றன.
காற்றிலே ஆடும் காகிதம் போல தூரமாகப்
போகவே நேர்ந்தது ஏனடி.
கண்ணுக்கு இமையின்று தூரம்.
நெஞ்சுக்கு நினைவின்று தூரம்.
உடலுக்கு உயிரின்று தூரம் ஆனதே.
கிளை மேலே இணை சேர்ந்த பூக்கள்
புயலாலே
மண் மேலே விழுந்தால்
மீணடும் ஒன்றாகச் சேரக் கூடுமோ”
என்னும் போது கண்ணுக்கு இமைபோல் காதலியைக் காத்து நின்ற காதலன் நெஞ்சு முழுவதும் அவள் நினைவுகளைச் சுமந்தான். அவள் பிரிந்து சென்றதனால் உடல்தான் தாங்கி நிற்கின்றான். உயிரான காதலியை வெகுதூரம் பிரிந்து விட்டான் என்னும் போது உயிரும் உடலும் ஒன்றிணைந்த காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வரிகளை மோகன் ராஜ் தந்திருப்பது ரசித்து இன்புற வைக்கின்றது.
இதேபோன்று அள்ளஅள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போல் சினிமா காதல் பாடல்களை எமக்கு தந்து கொண்டே இருக்கும். இதற்கு அனைத்துக் கலைகளும் போல் பாடலும் பாடகர், இசையமைப்பாளர், கவிஞர், போன்ற மூவரும் ஒன்றிணைந்த கூட்டுச் சேர்க்கையிலேயே சினிமாவில் களை கட்டி இரசிக உள்ளங்களுக்கு நல்ல தீனி போடுகின்றது.
நளவெண்பா கதைச் சுருக்கம்
நளவெண்பா என்னும் காப்பியம் மகாபாரதத்தின் ஒரு துணைக்கதையாகும். நாடு உட்பட
அனைத்து உடைமைகளையும் சூதினால் பாண்டவர்கள் இழந்து விடுகின்றனர். தருமர், வனவாசம் சென்று கண்ணனை
துரியோதனனிடம் தூதாக அனுப்பி விட்டு போரில்லாத வாழ்க்கையை நல்ல நிலைக்குக் கொண்டு
வர முடியுமா என்று கலங்கி மிக்க கவலையில் இருக்கின்றனர். அர்ச்சுனனோ பாசுபதம்
சிவனிடம் இருந்து பெற்று வருவதற்காகச் சென்று விடுகின்றான். தருமரோ கவலையோ காட்டிலே
இருக்கின்றார். இந்த சமயத்திலே வேதவியாச முனிவர் அவ்விடம் வருகின்றார். தருமனின்
கவலையைத் தீர்க்கும் முகமாகவும் ஒருவருக்கு சனியின் ஆட்சி நடைபெறும் காலத்திலே
எவ்வாறான கஸ்டங்கள் வரும் என்பதை விளக்க நளனுடைய கதையைக் கூறுகின்றார்.
இந்தக் கதையை வடமொழியிலே மிக்க சுவைபட ஹர்ஸ கவி என்பவர் காவியமாக்கினார். இந்த
வடமொழி காவியத்தை தமிழில் வெண்பா யாப்பிலே புகழேந்தி நளவெண்பா என்ற பெயரிலே 405 பாடல்களை யாத்துள்ளார். இது பாயிரம், சுந்தர காண்டம் (14 – 168), கலிதொடர் காண்டம்(169 –
316) கலி நீங்கு காணடம் (317 –
405) என அமைகின்றது. அதன் பின் 16 ஆம் நூற்றாண்டிலே
அதிவீரராம பாண்டியன் நைடதம் என்னும் பெயரிலே நளவெண்பாவை யாத்தார்.
ஒரு குகைக்குள் ஆகுகன் ஆகுகி என்னும் ஒரு வேட்டுவத் தம்பதிகள் வசித்து
வந்தார்கள். ஒருநாள் அவர்கள் வீட்டிற்கு
ஒரு முனிவர் வருகின்றார். அன்று இரவு அந்த முனிவர் அவர்கள் வீட்டில் தங்க வேண்டிய
சூழ்நிலை ஏற்படுகின்றது. ஆனால்,
இரண்டு பேர் மட்டும் இருக்கக் கூடிய குகையில் முனிவரையும், தாங்க முடியாத குளிரின்
காரணத்தினால் தன்னுடைய மனைவியையும் அந்தக் குகையினுள் தங்க விடுகின்றான். மனைவி மேலும் தன் மேலும் அதீத நம்பிக்கை கொண்ட
ஆகுகனின் குணத்தைப் பாராட்டிய முனிவர். இருவருக்கும் ஆசி வழங்குகின்றார். சிறிது
காலத்தின் பின் ஆகுகனும் மனைவியும் இறந்து போகின்றார்கள். அதன் பின் அடுத்த
ஜென்மத்தில் ஆகுகன் நிடத நாட்டு இளவரசனான நளனாகவும் விதர்ப்ப நாட்டு மன்னன்
வீமராஜன் மகள் தமயந்தியாக ஆகுகியும், அந்த முனிவர் ஒரு அன்னப்பறவையாகவும் பிறக்கின்றார்கள்.
ஒருநாள் நளன் ஒரு சோலைக்குச் செல்லும் போது ஒரு அன்னபபறவையைப் பார்க்கின்றார்.
அந்த அன்னப்பறவையை தன்னிடம் பிடித்து வரும்படி பெண்களிடம் கூறுகின்றான். பிடித்து வரப்பட்ட அன்னம் நடுங்குவதைக் கண்ட
நளன் அன்னத்திடம் அழகிய பெண்களின் நடையா உன்னுடைய நடையா சிறப்பானது என்று
காண்பதற்காகத்தான் அழைத்து வரச்சொன்னேன் என்று கூறுகின்றார்.
அஞ்சல் மடஅன்னமே! உன்தன் அணிநடையும்
வஞ்சி அனையார் மணி நடையும் விஞ்சியது
காணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டு
மாணப் பிடித்த தார் மன்
இத்துடன் நளனுக்கும் அன்னத்துக்கும் நட்பு ஆரம்பமாகின்றது.
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேல்படையும்
வாளுமே கண்ணா வதனமதிக் குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு
நாற்படை - தேர்ப்படை, யானைப்படை. குதிரைப்படை, காலாள் படை
சந்திரன் போன்ற முகமே வெண்கொற்றக்குடை அதன் கீழ்தான் பெண்மை என்ற அரசை ஆட்சி
செய்கின்றாள் என்பது போல் பாடுகின்றார்.
என்றும் நுடங்கும் இடைஎன்ப ஏழுலகும்
நின்ற கவிகை நிழல் வேந்தே – ஒன்றி
அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசும்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து
என்று அவளுடைய இடையை வர்ணிக்கின்றது. எப்படி தெரியுமா. தமயந்தி கூந்தலிலே மலர்கள் சூடியிருக்கின்றாள். அந்த மலர்களிலே தேன் அருந்துவதற்காக வண்டுகள் வருகின்றன. அந்த வண்டுகளின் சிறகுகள் அசைகின்ற போது ஏற்படும் காற்றுக்கு அவளுடைய இடை அங்கும் இங்குமாக அசைகின்றது. இப்படி அங்கும் இங்கும் அசைந்து வளைவதனால், அவளுடைய இடை தேய்ந்து போய் இருக்கின்றதாம். இதை உயர்வு நவிற்சி அணி என்று சொல்வார்கள். மிகைப்படுத்திக் கூறுவதுதான். அது என்னவோ பெண்களுடைய இடுப்பை மின்னலிடை, கொடியிடை, என்றுதான் வர்ணிப்பார்கள்
சின்னச் சின்னக் கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் என்ற பாடலிலே பின்னி வைத்த
கூந்தலில் முல்லைப் பூவைச் சூடினால்,அல்லி நடை பின்னல் போடுமா சிறு மின்னலிடை பூவைத் தாங்குமா? என்று பாடுகின்றார்
ஒரு நகைச்சுவையான கதை இருக்கின்றது. இதை என்னுடைய நண்பன் சிவலிங்கம் கூறினார். ஒரு ஆங்கிலேயன் தமிழ் இலக்கியங்களை கற்றால், இறுதியில் அவர் தரும் ரிப்போhட்டில் பெண்கள் எல்லாம் தமிழகத்தில் என்புருக்கி நோய் வந்தவர்களாகவே இருப்பார்கள் என்று எழுதுவாராம். (இது நகைச்சுவைக்காக மட்டுமே )
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான் - மெய்ம்மை
நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்
உளனென்பான் வேந்தன் உனக்கு
செம்மையாகிய ஒழுக்கமுடைய நடுநிலைமையுடைய நேர்மையான மனத்தையுடையவன், இரக்கமுடையவன், நீதி வழுவாத ஆட்சி புரிபவன், மங்கையர்களுடைய மனங்களைக்
கவரக்கூடிய நீண்டு உயர்ந்த தோள்களை யுடையவன் விண்ணுலகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று
சொல்லப்படுகின்ற நானிலத்திலும் சிறப்புடைய நளன் என்னும் மன்னனே உனக்கு காதலனாவான்.
இவ்வாறு பலவாறாகப் புகழும் போது
எண்ணில் தனம்விரும்பும் ஈன்றதாய் - நண்ணிடையிற்
கூறியநற் சுற்றம் குலம்விரும்பும் காந்தனது
பேரழகு தான்விரும்பும் பெண்
இந்த சமயததிலே தமயந்தியின் தந்தை தமயந்திக்கு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்கின்றார். அதற்கு நளன் உட்பட பல தேவர்களும் வருகின்றார்கள். அத் தேவர்களில் சனி பகவானும் வருகின்றார். அவர்களுக்கு தமயந்தி மனதில் நளனை வைத்திருக்கின்றாள் என்று தெரியும். அதனால் எல்லோரும் நளனுடைய உருவத்திலே வருகின்றார்கள். தேவர்கள் கண் இமைக்க மாட்டார்கள் என்பதைத் தெரிந்த தமயந்தி நளனை அடையாளம் கண்டு கொள்ளுகின்றாள். மாலையிடுகின்றாள். இருவருக்கும் திருமணம் நடக்கின்றது. நளன் தமயந்தியை தன்னுடைய நிடத நாட்டிற்குக் கூட்டிப்போகின்றார். ஏமாற்றம் அடைந்த சனி பகவானுக்கு ஆத்திரம் வருகின்றது. நளனைத் துன்புறுத்த சமயம் பார்த்திருக்கின்றார்.
இருவருக்கும் இந்திரசேனா, இந்திர சேனன் என்னும் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றார்கள். அரசாட்சி கிடைத்த மன்னன் நளன் சிறப்பாக ஆட்சி புரிந்து வருகின்றார். அப்போது ஒருநாள் நளன் கோயிலுக்குப் போகும் போது கால்களைக் கழுவும் போது ஒரு இடம் கழுவுப்படாமல் இருக்கின்றது. அதன் வழியாக சனி பகவான் இவரைப் பிடித்துவிடுகின்றார். இதனால், அமைச்சர் புட்கரனுடன் சூதாடி தன்னுடைய நாட்டை இழக்கின்றார். காட்டில் வனவாசம் போக வேண்டும். யாருக்கும் தெரியாமல் வாழ வேண்டும். தமயந்தியும் தன்னுடைய பிள்ளைகளை பணிப்பெண்கள் மூலம் தந்தையிடம் ஒப்படைக்கின்றாள். நளன் எவ்வளவோ கூறியும் கேட்காமல் நளனுடனேயே காட்டுக்குள் வருகின்றாள். தன்னுடைய மனைவி காட்டிலே படுகின்ற கஸ்டத்தைப் பொறுக்காத நளன் காட்டிலே அவளைத் தனியே விட்டு விட்டுப் போய்விடுகின்றான். அவள் தன்னுடைய வீட்டிற்குப் போய்விடுவாள் என்று நம்புகின்றாள். நளன் தனியே விட்டுப் போனதன் பின் ஒரு பெரிய பாம்பு தமயந்திமுன் வந்து நிற்கின்றது. அப்போது காப்பாற்றும்படிக் கத்துகின்றாள். அங்கே ஒரு வேடன் வருகின்றான். அவன் பாம்பிடம் இருந்து தமயந்தியைக் காப்பாற்றி அவளை அடைவதற்காக அவளைத் துரத்தி ஓடுகின்றான். இதனால் காட்டில் இருப்பது சாத்தியமில்லை என்று வேறு ஒரு நாட்டில் பணிப் பெண்ணாக வேஷம் போட்டு வாழுகின்றாள். அந்த நாட்டுக்கு விருந்தினராக வந்த அவள் தந்தை அங்கிருந்து அவளைக் கண்டு தன்னுடைய நாட்டுக்கு அவளைக் கூட்டிப் போய்விடுகின்றார்.
எழுத்துகளுக்கும்
ஆடை கட்ட வேண்டும்
இலக்கியம் என்பது ஒரு சமூகம்
வாழுகின்ற காலத்தைத் தெட்டத் தெளிவாக வேறு சமூகத்துக்கு, அடுத்த கால கட்டத்துக்குப் படம்பிடித்துக்
காட்டச் சிறந்த கண்ணாடி. அதனாலேயே காலத்தின் கண்ணாடி இலக்கியம் என்பார்கள். சங்கம்
தொட்டு இன்று வரை தமிழ் இலக்கியங்களே எமது பண்பாட்டு விழுமியங்களை உலகத்துக்கு
எடுத்துக்காட்டியது. எனவே இலக்கியம் சத்தியமாக இருப்பதுடன் சுத்தமாகவும் இருக்க
வேண்டியது அவசியமாகின்றது. ஆனால், தற்காலத் தமிழ் இலக்கியங்கள் எதிர்காலத் தலைமுறையினருக்கு என்ன பண்பாட்டைப்
போதிக்கப் போகின்றது என்பது கேள்விக்குறியாக அமைகின்றது. இலக்கியங்களைக் கற்பதில்
அச்சமும் வெட்கமும் ஏற்படுகின்றது.
இக்கட்டுரை இரண்டு அம்சங்களை
ஆராய்கின்றது. ஒன்று நூல்களிலுள்ள அச்சுப் பிழைகளும், கருத்துப் பிழைகளும், இரண்டாவது ஆபாச எழுத்துக்கள்.
‘நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு’’
என்று நாம் கற்கின்ற நூல்களின் அளவே
எம்முடைய அறிவு அமைகின்றது என்கிறார் ஒளவையார்
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி
மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’’
என்று படிக்கப் படிக்க அறிவு வளரும்
என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. எனவே படிப்பு என்பது பாடசாலைக் கல்வியில்
மாத்திரமன்று நாம் வாசிக்கின்ற நூல்களின் மூலமும் பல விடயங்களைக் கற்றுக்
கொள்ளுகின்றோம். வாசிப்பினால், அறிவு பெற்ற பல அறிஞர்களை நாம்
அறிவோம். நெருப்பு வெளிச்சத்தில் படித்த ஆபிரகாம் லிங்கன், இறக்கும் தறுவாயிலும் நூல்களைப் படித்த பகத்சிங், சோக்ரட்டீஸ்,
கருணாநிதி, பாரதிதாசன் போன்றவர்கள் வாசிப்பின் மகத்துவத்தை
உலகத்துக்கு உணர்த்தியிருக்கின்றாரகள்.
நாம் என்ன கற்கின்றோமோ அதுவாகவே
மாறுகின்றோம். மனத்தைச் செம்மைப்படுத்தும் நூல்களைக் கற்கின்ற போது எமது
சமுதாயத்துக்கு நல் வழிமுறைகளைக் காட்டுவோம் அதனாலேயே நல்வழி, நன்னெறி போன்ற நூல்களை இளம் பிராயத்திலேயே
மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றது. நல்ல நண்பனாக, நல் ஆசானாக,
நல்ல
ஆன்மீக குருவாக, நல்ல மனிதனை உருவாக்க வாசிப்பு
உதவியிருக்கின்றது. ஆனால், இன்று இக்கருத்துக்கள் உண்மையானவையா? என்னும் ஐயம் ஏற்படுகின்ற வகையிலே கருத்துப்
பிழைகள் அமைந்துவிடுகின்றன. இன்று பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற பல சிறுகதைகளில்
சிறுகதைக்குரிய செப்பம் இல்லை. அவை அழுக்குகளோடு பிறந்த சிசுக்களாகவுள்ளன.
பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் கூட அவற்றினைச்
செப்பனிடுவதில் அக்கறை கொள்வதில்லை என செங்கை ஆழியான் அவர்கள் ஞானம் ஆசிரியர்
தி.ஞானசேகரன் அவர்களின் நேர்காணலில் குற்றஞ்சாட்டுகின்றார்.
இதற்கு எடுத்துக்காட்டாகத்
தமிழ்நாட்டுப் பெண் சாதனையாளர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கு என்னும் நூலிலே அரசு
கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஒருவர் ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’’ என்னும் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்களின்
வரிகளை ஒளவையாரின் வரிகள் என்று எழுதியுள்ளார். தமிழ் பல்கலைக்கழக நூலகர் தனது
கட்டுரையில் இந்த வரிகளையே பாரதியார் பாடியதாக எழுதியுள்ளார். ஒரே நூலில் இவ்வாறான
தவறுகள் வந்திருக்கின்ற போது அந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய மிகுந்த கல்வியாளரே
அதனைக் கண்டு கொள்ளவில்லை. சிலப்பதிகாரப் பாடல் என்று சிலப்பதிகாரத்திலேயே இல்லாத
ஒரு பாடல் கொரொனா காலத்திலே இணையத்தில் உலாவின. இவ்வாறான தவறுகளை வாசிக்கின்ற
வாசகர்கள், மாணவர்கள், பேச்சாளர்களும் தப்புத் தப்பாக உலகத்துக்குச்
செய்திகளைச் சொல்பவர்களாக இருப்பார்கள். இணையத்திலேயே தவறுகள் ஏற்படுகின்றன
என்பதைத் தாண்டி அச்சு நூல்களிலும் தவறுகள் காணப்படுகின்றன.
சங்கப்புலவர் சீத்தலைச்சாத்தனார்
பாடல்களில் தவறுகளைக் காணுகின்ற போது தன்னுடைய கையிலுள்ள எழுத்தாணியால் தலையிலே
குத்துவார். இதனால், இவருக்கு சீத்தலைச் சாத்தனார் என்று
பெயர் வந்ததாகக் கூறுவார்கள்.
செண்பகப் பாண்டியனுக்கு ஏற்பட்ட
ஐயத்தைத் தீர்த்து வைக்கத் தருமி மூலம் சிவன் அனுப்பி வைத்த பாடலாகிய
‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்
தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே’’
என்னும் பாடலிலேயே குற்றம் கண்டு
பிடித்து நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டவர் நக்கீரர்.
இவ்வாறான இலக்கியப் பாரம்பரியம் கொண்ட நம் தமிழ் இலக்கியம் இன்று தவறுகளைக்
கண்டும் காணாதிருக்கின்றது.
அடுத்து எழுத்துக்களில் ஒழுக்கக்
கேடான நாகரிகம் அற்ற விரசத்தை எழுதுதல். அதற்கான அங்கீகாரத்தை எழுத்துலகம்
வழங்குதல். இவ்வாறான எழுத்துக்கள் மூலம் சமூகத்திற்கு எழுத்தாளர் எதைக் கொடுக்கப்
போகின்றார்கள் என்று புரியவில்லை. ஜான்ரஸ்கின் எழுதிய ‘கடையேனுக்கும் கடைத்தேற்றம்’’
என்ற நூலே மகாத்மாகாந்தியின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது என்பார்கள். ஒரு
எழுத்தாளனின் கைமுனைப் பேனா, சமூகத்தை தலை நிமிர்த்தி நிறுத்த
வேண்டும். அதைவிடுத்து எதிர்கால சமூகத்துக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தி அறிவை
விடுத்து அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லலாமா?
தோள்சீலைப் போராட்டங்களுக்குப்
பின்புதான் பெண்கள் மார்புச் சீலையே போட்டார்கள். நங்கேலி என்னும் பெண்
முலைவரிக்கு எதிராகத் தன்னுடைய மார்பகங்களையே வெட்டிக் கொடுத்து இறந்தாள்.
இவ்வாறாகப் போராடிப் பெற்ற எமது உரிமைகளின் மகத்துவத்தின் வரலாறு தெரியாமல்
எழுத்திலும், உணர்விலும் விரசத்தைக் கொட்டுபவர்களுக்குப் பெண்கள் மலர்மாலை
சூட்டிப் பாலாபிஷேகம் செய்வது வருந்தத்தக்கதே.
தமிழ்மொழி தெய்வீகமொழி என்று
போற்றப்படுகின்றது. கற்புடைய கண்ணகியைத் தெய்வமாகப் போற்றிய மொழி, காரைக்காலம்மையார் புராணத்தின் மகத்துவம்
உணர்த்திய மொழி, வள்ளுவப் பெருந்தகையின் உலகத்துக்கே
வாழ்விலக்கியம் கூறும் திருக்குறள் தோன்றிய மொழி. அதிலும் காமத்துப்பால்
நாகரிகமாகக் கற்பிக்கப்பட்டுள்ளது.
பல்லவர் காலப் பக்தி இலக்கியங்களின் பெருமையை இன்றும் போற்றுகின்றோம், சோழர்கால ஆட்சியில் மொழியும் மதமும் எவ்வாறு
பாதுகாக்கப்பட்டது என்று அறிந்திருக்கின்றோம்.
நாயக்கர் காலச் சிற்றிலக்கியங்களின்
பெருமையைக் கற்றிருக்கின்றோம், ஐரோப்பியர் காலத்திலே மேலைத்
தேயத்தவர்கள் எம்மொழிக்கு எவ்வாறெல்லாம் சேவை செய்திருக்கின்றார்கள் என்று
அறிகின்றோம். அவ்வாறாகப் போற்றிப் பாதுகாக்கும் எம்முடைய மொழியில் தற்காலத்தில்
போற்றிப் பாதுகாக்கப்படும் பின் நவீனத்துவம் என்று படைக்கப்படும் சில இலக்கியங்கள்
பின் நவீனத்துவம் பற்றிய சரியான புரிதல் இல்லாமலேயே வாசகர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன
என்று கருதுகிறேன்.
எழுத்துக்கள் மந்திரம் மட்டுமல்ல, அது நல்ல வசியமுமாகும். எழுத்துச்
சுதந்திரம் என்று காம இச்சைகளை ஏற்படுத்துகின்ற எழுத்துக்கள் வாசகர்களுக்கு
அருவருப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. வெளிப்படையாக
எழுதுகின்றோம் என்று எழுதும் போது அவ் எழுத்துக்கள் காமசூத்திரம் ஒளிந்து இருப்பது
போல் தேடிப் படிக்க வைக்காமல், பாரதியின் எழுத்துக்கள் போல பட்டி
தொட்டி எங்கும் எழுத்துக்கள் பவனி வர எழுத வேண்டும்.
தமிழ் இலக்கணத்தில் சொற்கள்
வழங்கப்படும் முறையில் இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இரண்டு வழக்குகள்
பயன்படுத்தும் முறைகள் இருக்கின்றன. அதில் தகுதி வழக்கு என்பது நன்மக்களிடத்தில்
சான்றோர் அவையிலே கூறத்தகாத சொற்களை மறைத்து வேறு சொற்களால் கூறுதல். உதாரணமாக
மலம் கழுவி வருதல் என்பதைக் கால் கழுவி வருதல் என்பார்கள். செத்தாரைத் துஞ்சினார்
என்றும், சுடுகாட்டை நன்காடு என்றும்
சொல்வார்கள்.
சிந்து பைரவி என்னும் திரைப்படம்
இரண்டு சோடிச் செருப்புகளைக் காட்டி நாகரிமாக உடலுறவை வெளிப்படுத்தியது. இவ்வாறு
எமது மொழி பேச்சிலும், எழுத்திலும், நடத்தையிலும் பண்பாட்டு நாகரீகத்தைப் போதித்தது. ஆனால், தற்காலத்தில் தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக
ஒரு சமூகம் சில கட்டுப்பாடுகளை மீறிய எழுத்துக்களால் கைதட்டுப் பெறுகின்றது. படுக்கை
அறைக்குக் கதவு தாழ்ப்பாள் இடப்பட்டுள்ளது. பள்ளியறை
தேவை இல்லையென்றால் தாம் பெற்ற வயதான பிள்ளைகளும் அவர்களைப் பெற்றவர்களும்
வரவேற்பறையில் மகிழ்ச்சியாகப் பள்ளி கொள்ளலாம்.
இக்கட்டுரை 09.09.2025 வெற்றிமணி பத்திரிகையில் வெளிவந்தது .