• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 21 அக்டோபர், 2025

    நளவெண்பா கதைச் சுருக்கம்

     


    நளவெண்பா கதைச் சுருக்கம்

     


    நளவெண்பா என்னும் காப்பியம் மகாபாரதத்தின் ஒரு துணைக்கதையாகும். நாடு உட்பட அனைத்து உடைமைகளையும் சூதினால் பாண்டவர்கள் இழந்து விடுகின்றனர். தருமர், வனவாசம் சென்று கண்ணனை துரியோதனனிடம் தூதாக அனுப்பி விட்டு போரில்லாத வாழ்க்கையை நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியுமா என்று கலங்கி மிக்க கவலையில் இருக்கின்றனர். அர்ச்சுனனோ பாசுபதம் சிவனிடம் இருந்து பெற்று வருவதற்காகச் சென்று விடுகின்றான். தருமரோ கவலையோ காட்டிலே இருக்கின்றார். இந்த சமயத்திலே வேதவியாச முனிவர் அவ்விடம் வருகின்றார். தருமனின் கவலையைத் தீர்க்கும் முகமாகவும் ஒருவருக்கு சனியின் ஆட்சி நடைபெறும் காலத்திலே எவ்வாறான கஸ்டங்கள் வரும் என்பதை விளக்க நளனுடைய கதையைக் கூறுகின்றார்.

     

    இந்தக் கதையை வடமொழியிலே மிக்க சுவைபட ஹர்ஸ கவி என்பவர் காவியமாக்கினார். இந்த வடமொழி காவியத்தை தமிழில் வெண்பா யாப்பிலே புகழேந்தி நளவெண்பா என்ற பெயரிலே 405  பாடல்களை யாத்துள்ளார். இது பாயிரம், சுந்தர காண்டம் (14 – 168), கலிதொடர் காண்டம்(169 – 316)  கலி நீங்கு காணடம் (317 – 405) என அமைகின்றது. அதன் பின் 16 ஆம் நூற்றாண்டிலே அதிவீரராம பாண்டியன் நைடதம் என்னும் பெயரிலே நளவெண்பாவை யாத்தார்.

     

    ஒரு குகைக்குள் ஆகுகன் ஆகுகி என்னும் ஒரு வேட்டுவத் தம்பதிகள் வசித்து வந்தார்கள். ஒருநாள் அவர்கள்  வீட்டிற்கு ஒரு முனிவர் வருகின்றார். அன்று இரவு அந்த முனிவர் அவர்கள் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. ஆனால், இரண்டு பேர் மட்டும் இருக்கக் கூடிய குகையில் முனிவரையும், தாங்க முடியாத குளிரின் காரணத்தினால் தன்னுடைய மனைவியையும் அந்தக் குகையினுள் தங்க விடுகின்றான்.  மனைவி மேலும் தன் மேலும் அதீத நம்பிக்கை கொண்ட ஆகுகனின் குணத்தைப் பாராட்டிய முனிவர். இருவருக்கும் ஆசி வழங்குகின்றார். சிறிது காலத்தின் பின் ஆகுகனும் மனைவியும் இறந்து போகின்றார்கள். அதன் பின் அடுத்த ஜென்மத்தில் ஆகுகன் நிடத நாட்டு இளவரசனான நளனாகவும் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமராஜன் மகள் தமயந்தியாக ஆகுகியும், அந்த முனிவர் ஒரு அன்னப்பறவையாகவும் பிறக்கின்றார்கள்.

     

    ஒருநாள் நளன் ஒரு சோலைக்குச் செல்லும் போது ஒரு அன்னபபறவையைப் பார்க்கின்றார். அந்த அன்னப்பறவையை தன்னிடம் பிடித்து வரும்படி பெண்களிடம் கூறுகின்றான்.  பிடித்து வரப்பட்ட அன்னம் நடுங்குவதைக் கண்ட நளன் அன்னத்திடம் அழகிய பெண்களின் நடையா உன்னுடைய நடையா சிறப்பானது என்று காண்பதற்காகத்தான் அழைத்து வரச்சொன்னேன் என்று கூறுகின்றார்.

     

    அஞ்சல் மடஅன்னமே! உன்தன் அணிநடையும்

    வஞ்சி அனையார் மணி நடையும் விஞ்சியது

    காணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டு

    மாணப் பிடித்த தார் மன்

     

    இத்துடன் நளனுக்கும் அன்னத்துக்கும் நட்பு ஆரம்பமாகின்றது.

     அன்னம் நளனிடம் சொல்கிறது நீ அழகாகவும் அறிவாகவும் மக்களின் மேல் பாசமாகவும் இருக்கின்றாய் அதங்கேற்ப ஒரு பெண் உனக்கு வேண்டும். நான் வாழுகின்ற நாட்டிலே ஒரு இளவரசி இருக்கிறாள். அவள் பெயர் தமயந்தி அவளை நீ காதல் மணம் புரிவது நல்லது என்று கூறி அவளைப் பற்றி வர்ணித்துச் சொல்கின்றது.

     நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்அமைச்சா

    ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேல்படையும்

    வாளுமே கண்ணா வதனமதிக் குடைக்கீழ்

    ஆளுமே பெண்மை அரசு

     

    நாற்படை -  தேர்ப்படை, யானைப்படை. குதிரைப்படை, காலாள் படை

    சந்திரன் போன்ற முகமே வெண்கொற்றக்குடை அதன் கீழ்தான் பெண்மை என்ற அரசை ஆட்சி செய்கின்றாள் என்பது போல் பாடுகின்றார்.

     இதைவிட அவளுடைய அழகைப்பற்றிச் சொல்லும்போது

     

    என்றும் நுடங்கும் இடைஎன்ப ஏழுலகும்

    நின்ற கவிகை நிழல் வேந்தே – ஒன்றி

    அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் வீசும்

    சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து

    என்று அவளுடைய இடையை வர்ணிக்கின்றது. எப்படி தெரியுமா. தமயந்தி கூந்தலிலே மலர்கள் சூடியிருக்கின்றாள். அந்த மலர்களிலே தேன் அருந்துவதற்காக வண்டுகள் வருகின்றன. அந்த வண்டுகளின் சிறகுகள் அசைகின்ற போது ஏற்படும் காற்றுக்கு அவளுடைய இடை அங்கும் இங்குமாக அசைகின்றது. இப்படி அங்கும் இங்கும் அசைந்து வளைவதனால், அவளுடைய இடை தேய்ந்து போய் இருக்கின்றதாம். இதை உயர்வு நவிற்சி அணி என்று சொல்வார்கள். மிகைப்படுத்திக் கூறுவதுதான். அது என்னவோ பெண்களுடைய இடுப்பை மின்னலிடை, கொடியிடை, என்றுதான் வர்ணிப்பார்கள்

    சின்னச் சின்னக் கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் என்ற பாடலிலே பின்னி வைத்த கூந்தலில் முல்லைப் பூவைச் சூடினால்,அல்லி நடை பின்னல் போடுமா சிறு மின்னலிடை பூவைத் தாங்குமா? என்று பாடுகின்றார்

    ஒரு நகைச்சுவையான கதை இருக்கின்றது. இதை என்னுடைய நண்பன் சிவலிங்கம் கூறினார். ஒரு ஆங்கிலேயன் தமிழ் இலக்கியங்களை கற்றால், இறுதியில் அவர் தரும் ரிப்போhட்டில் பெண்கள் எல்லாம் தமிழகத்தில் என்புருக்கி நோய் வந்தவர்களாகவே இருப்பார்கள் என்று எழுதுவாராம். (இது நகைச்சுவைக்காக மட்டுமே )

     இவ்வாறு அவள் அழகைப் பலவாறாக அந்த அன்னம் வர்ணிக்கின்றது. அப்போது தமயந்தியைப் பார்க்காமலே நளனுக்கு அவள் மேல் காதல் வருகின்றது. நான் போய் தமயந்தியிடம் தூது சொல்லவா என்று கேட்டு தூது போகின்றது. நளனைப் பற்றி அன்னம் தமயங்தியம் பலவாறாக வர்ணிக்கின்றது.

     உதாரணத்திற்கு ஒரு பாடல் சொல்கின்றேன்

     செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள்

    தம்மனத்தை வாங்கும் தடந்தோளான் - மெய்ம்மை

    நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்

    உளனென்பான் வேந்தன் உனக்கு

    செம்மையாகிய ஒழுக்கமுடைய நடுநிலைமையுடைய நேர்மையான மனத்தையுடையவன், இரக்கமுடையவன், நீதி வழுவாத ஆட்சி புரிபவன், மங்கையர்களுடைய மனங்களைக் கவரக்கூடிய நீண்டு உயர்ந்த தோள்களை யுடையவன் விண்ணுலகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று சொல்லப்படுகின்ற நானிலத்திலும் சிறப்புடைய நளன் என்னும் மன்னனே உனக்கு காதலனாவான். இவ்வாறு பலவாறாகப் புகழும் போது

     பெண்ணுதவும் காலைப் பிதாவிரும்பும் வித்தையையே

    எண்ணில் தனம்விரும்பும் ஈன்றதாய் - நண்ணிடையிற்

    கூறியநற் சுற்றம் குலம்விரும்பும் காந்தனது

    பேரழகு தான்விரும்பும் பெண்

     என்று நீதிவெண்பாவிலே சொல்லப்பட்டது போல் தமயந்தி நளன் பேரழகில் காதல் கொள்ளுகின்றாள்.

    இந்த சமயததிலே தமயந்தியின் தந்தை தமயந்திக்கு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்கின்றார். அதற்கு நளன் உட்பட  பல தேவர்களும் வருகின்றார்கள். அத் தேவர்களில் சனி பகவானும் வருகின்றார். அவர்களுக்கு தமயந்தி மனதில் நளனை வைத்திருக்கின்றாள் என்று தெரியும். அதனால் எல்லோரும் நளனுடைய உருவத்திலே வருகின்றார்கள். தேவர்கள் கண் இமைக்க மாட்டார்கள் என்பதைத் தெரிந்த தமயந்தி நளனை அடையாளம் கண்டு கொள்ளுகின்றாள். மாலையிடுகின்றாள். இருவருக்கும் திருமணம் நடக்கின்றது. நளன் தமயந்தியை தன்னுடைய நிடத நாட்டிற்குக் கூட்டிப்போகின்றார். ஏமாற்றம் அடைந்த சனி பகவானுக்கு ஆத்திரம் வருகின்றது. நளனைத் துன்புறுத்த சமயம் பார்த்திருக்கின்றார்.

    இருவருக்கும் இந்திரசேனா, இந்திர சேனன் என்னும் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றார்கள். அரசாட்சி கிடைத்த மன்னன் நளன் சிறப்பாக ஆட்சி புரிந்து வருகின்றார். அப்போது ஒருநாள் நளன் கோயிலுக்குப் போகும் போது கால்களைக் கழுவும் போது ஒரு இடம் கழுவுப்படாமல் இருக்கின்றது. அதன் வழியாக சனி பகவான் இவரைப் பிடித்துவிடுகின்றார். இதனால், அமைச்சர் புட்கரனுடன் சூதாடி தன்னுடைய நாட்டை இழக்கின்றார். காட்டில் வனவாசம் போக வேண்டும். யாருக்கும் தெரியாமல் வாழ வேண்டும். தமயந்தியும் தன்னுடைய பிள்ளைகளை பணிப்பெண்கள் மூலம் தந்தையிடம் ஒப்படைக்கின்றாள். நளன் எவ்வளவோ கூறியும் கேட்காமல் நளனுடனேயே காட்டுக்குள் வருகின்றாள். தன்னுடைய மனைவி காட்டிலே படுகின்ற கஸ்டத்தைப் பொறுக்காத நளன் காட்டிலே அவளைத் தனியே விட்டு விட்டுப் போய்விடுகின்றான். அவள் தன்னுடைய வீட்டிற்குப் போய்விடுவாள் என்று நம்புகின்றாள். நளன் தனியே விட்டுப் போனதன் பின் ஒரு பெரிய பாம்பு தமயந்திமுன் வந்து நிற்கின்றது. அப்போது காப்பாற்றும்படிக் கத்துகின்றாள். அங்கே ஒரு வேடன் வருகின்றான். அவன் பாம்பிடம் இருந்து தமயந்தியைக் காப்பாற்றி அவளை அடைவதற்காக அவளைத்  துரத்தி ஓடுகின்றான். இதனால் காட்டில் இருப்பது சாத்தியமில்லை என்று வேறு ஒரு நாட்டில் பணிப் பெண்ணாக வேஷம் போட்டு வாழுகின்றாள். அந்த நாட்டுக்கு விருந்தினராக வந்த அவள் தந்தை அங்கிருந்து அவளைக் கண்டு தன்னுடைய நாட்டுக்கு அவளைக் கூட்டிப் போய்விடுகின்றார்.

     இதேவேளை காட்டுக்குள் தீப்பிடித்து எரிகின்றது. அங்கே ஒரு கார்க் கோடகன் என்னும் ஒரு பாம்பு காப்பாத்துங்கள், காப்பாத்துங்கள் என்று கத்துகின்றது. இதைக் கண்ட நளனும் அந்த பாம்பைக் காப்பாற்றுகின்றான். அந்தப் பாம்பும் உடனே நளனைத் தீண்டுகின்றது. நன்றி கெட்ட பாம்பு என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். பாம்பு தீண்டியதனால், நளனுடைய அழகான உடம்பு கூன்விழுந்த கிழவன் வடிவமாக மாறுகின்றது. அப்போது நளன் உனக்கு நல்லதுதானே செய்தேன். எனக்கு ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டபோது, ஆம் நல்லதுதான் செய்தேன்.  நீ எவ்வளவு நாட்களுக்குத்தான் காட்டிலே சுற்றித் திரிவாய் நான் தீண்டியதால் நீ உருவம் மாறி வேறு ஒருவராகி விட்டாய் நீ நாட்டில் எங்கேயும் போய் வாழலாம் நான் தருகின்ற இந்த உடையைப் போட்டால் உன்னுடைய பழைய உருவம் கிடைக்கும் என்று கூறி ஒரு ஆடையைக் கொடுக்கின்றது. இப்போது நளன் அயோத்தி நாட்டை அடைகின்றார். அம்மன்னனுக்கு தேரோட்டியாக வேலை பார்க்கிறார். இப்படியே பல வருடங்கள் செல்கின்றன. தமயந்தியும் நளனைக் கண்டுபிடிக்க ஒரு யுத்தியை மேற் கொள்ளுகின்றாள். தன்னுடைய அப்பாவிடம் இரண்டாவது திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்கிறாள். வீமமகாராஜனும் 2 ஆவது சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்கின்றார். அந்த சுயம் வரத்திற்கு அயோத்தி மன்னன் வருகின்றார். அவருடைய தேரோட்டியான  நளனும் அந்த அரண்மனைக்கு வருகின்றார். நளன் தன்னுடைய அரண்மனை வாயிலை அடைந்தவுடன் தமயந்தி உள்ளுணர்வில் ஒரு மாற்றம் ஏற்படுகின்றது. அன்று சனிபகவான் நளனைப் பிடித்த ஏழரை ஆண்டுகள் முடிவடைகின்றது. மனமிரங்கிய சனிபகவான் நளனை விட்டுப் போய்விடுகின்றார். தன்னுடைய மனைவியின் சுயம்வரத்தை அறிந்து பொறுக்க முடியாத நளன் கார்கோடகன் கொடுத்த உடையை அணிந்து அழகான நளன் வடிவத்தில் தோன்றுகின்றான். மறுபடியும் தமயந்தி நளனுக்கு மாலை சூட்டி ஒன்றிணைகின்றார்கள். அப்போது திருமணத்திற்குச் சீர்வரிசையாக வீமராஜனிடம் படைகளை நளன் கேட்டுப் பெற்று புட்கரனைத் தோற்கடித்து நிடதநாட்டை ஆளுகின்றான். இதுதான் நளதமயந்தியின் நளவெண்பா. அக்காலத்தில் பெண் தனியே வாழாமல் மறுமணம் செய்து வாழ்வதற்கு அனுமதி இருந்திருக்கின்றது என்பதை இச்சம்பவம் மூலம் அறியக் கூடியதாக இருந்திருக்கின்றது. பெண் உரிமை பேணப்பட்டிருக்கின்றது.

     


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உணர்வு

        காதல் என்பது ஒரு மனஉணர்வு. இதைக் கடந்து யாரும் வாழ்க்கையில் பயணிக்க முடியாது. இதனைத்தான் ‘’காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவர் யாரு...