உள்ளத்தின் குரல்
ஆசிரியர்:
பிரேம் ராவத்
வெளியீடு: 2024
12 அத்தியாயங்களில் 357 பக்கங்கள்
இரைச்சல் மிகுந்த உலகத்தில் நிம்மதியை காண்பது
எப்படி?
என்பதை உள்ளத்தின் குரல் என்ற பெயருடன் பிரேம்
ராவத் அவர்கள் எழுதியுள்ளார்.
இவர் 1957-இல் இந்தியாவின்
ஹரித்துவார் இல் பிறந்துள்ளார். ஹரித்துவார் என்றால்
கடவுளை அடைவதற்கான வாசல் என்று பொருள். அமைதி என்ற விஷயம் பற்றி உரையாற்றுகின்ற
சிறந்த பேச்சாளரான ஸ்ரீ ஹன்ஸ்ஜி மகராஜன் மகனாகத்தான் இவர் பிறந்தார். இவருக்கு
எட்டரை வயதாக இருக்கும் போது இவருடைய தந்தை இறக்கின்றார். அதன்பின் அவருடைய வாழ்வில்
குறிக்கோள் அவருக்குத் தெளிவானது. அவர் எவ்வாறு மக்களிடம் அமைதியை ஏற்படுத்தச்
செய்தாரோ அதனையே பிரேம் ராவத் அவர்கள் செய்யத் தொடங்கினார்.
ஒரு விமானம் செலுத்தும் பணிபுரிந்த இவர் மனத்தின்
அமைதியை மற்றவர்களுக்கு கொண்டு வருவதற்கு அவர்களைச் செலுத்துகின்ற ஒரு தூண்டியாக
பயன்படுகின்றார். 13 வயதில் இருந்து மகிழ்ச்சி மற்றும் அமைதியின் நடைமுறைச்
செய்தியை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் கொண்டு வருவதற்கான ஒரு சர்வதேச
முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
சர்வதேச மட்டத்தில் மிக அதிக அளவில் விற்பனையான Peace of Possible என்ற புத்தகத்தின் ஆசிரியராகவும்
இருக்கின்றார். இந்தப் புத்தகம்
Hear yourself என்ற இவருடைய புத்தகத்தின்
தமிழ் வடிவமாக இருக்கின்றது.
வாழ்க்கை பற்றிக் கூறுகின்ற போது நாம் 70 ஆண்டுகள் வாழ்ந்தோம் என்றால் 25.550 நாட்கள் வாழ்வோம். நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் 36.500 நாட்கள் மட்டுமே. ஒரு சுவரில் இருந்த ஒரு கதவு வலியாக உயிர் பெற்று வந்து இன்னொரு இன்னொரு சுவரின் கதவு வழியாக நாங்கள் வெளியேற வேண்டியது அவசியம். சிலர் இரண்டாவது சுவருக்கு அப்பால் என்ன இருக்கின்றது என்று நினைக்கின்றார்கள். ஆனால் இரண்டு சுவர்களுக்கும் இடையில் இருப்பது என்ன என்றுதான் அறிய ஆவலாக நான் இருக்கிறேன் என்று பிரேம் ராவத் அவர்கள் கூறுகின்றார்.
உன்னையே நீ அறிவாய்.
உன் உள்ளத்தின் அமைதியே உலகத்தின் அமைதி. அதை அடைவது எப்படி என்பவற்றை இந்த நூலுக்குள்
புதைந்து கிடக்கின்றது. தன்னை அறிவதே விவேகத்தின் ஆரம்பம் என்கிறார் அரிஸ்டாட்டில்
தன்னை உணர்தலின் மூலம் கிடைக்கும் அமைதியிலிருந்து நமக்கு சந்தோஷம், தெளிவு, நிறைவு, அன்பு, வலிமை,
போன்ற உணர்வுகளும் நல்லனவையும் அமையப்
பெறும்.
எகிப்திய லக்சர் கோவிலின் உட்புறத்திலே ஒரு
கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த மனிதா உன்னையே நீ அறிந்து கொள் அப்போது
தெய்வங்களை நீ அறிந்து கொள்வாய் என்ற வார்த்தைகளில் இருந்து தான் சாக்ரடீஷன் இந்த
உன்னையே நீ அறிவாய் என்ற வரிகள் வந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றார். உன்
கலாச்சாரத்தை அறிந்து கொள் உன் சமூகத்தை அறிந்துகொள் ஏற்று குறிப்பிடவில்லை உன்னை
நீ அறிவாய் என்றுதான் மிகத் தெளிவாக பொறிக்கப்பட்டிருக்கின்றது. தன்னை அறிவது தான்
விவேகத்தின் ஆரம்பம்.
நம்முள்ளே விவேகம் நிறைந்த ஒரு உண்மை
நிலை உள்ளது எனவும் சீன தத்துவஞானி ஆன லாவோ சூ சொல்கின்றார் உங்கள் நண்பர்களை
அறிந்து கொள்வது புத்திசாலித்தனம் ஆனால் உங்களை நீங்கள் அறிந்து கொள்வது தான்
உண்மையான விவேகம். இதற்குக் கவிஞர் ரோமி சொல்லிய கவிதையை எழுத்தாளர் கொண்டு வருகின்றார்.
நேற்று நான் புத்திசாலி அதனால் உலகை மாற்ற விரும்பினேன். இன்று நான் விவேகி அதனால்
என்னையே நான் மாற்றிக் கொண்டேன் என்று இதனை 600 ஆண்டுகளுக்கு
பிறகு ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் என்பவர் “நமது உலகத்தில் எல்லோரும் மனித
இனத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என சிந்திக்கிறார்களே தவிர தம்மைத் தாம்
மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஒருவரும் சிந்திப்பதில்லை என்று சொல்லுகின்றார். இவ்வாறு
விவேகத்துக்கான விளக்கம் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.
மனம் பற்றி இவர் சொல்லுகின்ற போது நமது மனம்
ஒழுங்காக செயல்படுவதற்கு அதனுள் போடப்பட்ட அனைத்து விஷயங்களையும் சார்ந்திருக்கும்
அதே வேளையில் இதயமானது மரபணுக்களைச் சார்ந்தே செயல்படுகிறது என்கின்றார்.
பிரான்ஸ் தேசத்து எழுத்தாளர் ஆந்துத சென்
எக்ஸ்யுபெரி பூரணத்துவம் என்பது மேலும் சேர்த்துக் கொள்ள எதுவுமில்லை
என்பது அல்ல. ஆனால் மேலும் நீக்கிவிட எதுவுமில்லை
என்பதுதான் என்கிறார்.
எங்களுக்கு விருப்பமான ஒரு ஆடையை அணிந்து கொண்டு
வேலை எல்லாம் செய்தால் அது அழுக்காகும் ஆனால் பின் அதை நாம் கழுவித்தான்
தூய்மையாகுவோம் தூய்மையை அதில் கொண்டு சேர்க்க மாட்டோம். அதே போல் தான்
எங்களுக்குள் இருக்கின்ற அமைதியைக் கண்டறிவது அமைதியை சேர்ப்பதில்லை தேவையற்றவற்றை
அகற்றுகின்றீர்கள். தன்னை அறிவது என்பது உங்கள் உண்மையான இயல்பை பிரகாசிக்க
அனுமதிப்பது.
மைக்கல் அஞ்சலோவிடம் சிறந்த சிற்பத்தை எப்படி
ஆக்கினார்கள் என்று கேட்டபோது அவர் சொன்ன டேவிட்டின் இல்லாத பகுதிகளை அகற்றி
விட்டேன் என்று கூறினார். அப்படி அகற்றுகின்ற போது தத்துரூபமாக நாம் எம்மை உணர்வோம்
ஒருமுறை புத்தர் சீடன் ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது
நகரத்தில் இருந்த யாவரும் அவரை நீங்கள் நல்லவரல்ல. நீங்கள் அதை செய்வதில்லை இதை செய்வதில்லை என
விமர்சித்துக் கொண்டே இருக்கிறீர்கள் என்றார்கள். புத்தர் இவர்கள் எல்லாம் உங்களை
விமர்சிப்பது உங்களுக்கு கவலையாக இல்லையா என புத்தரின் சீடன் அவரிடம் கேட்டான். புத்தர் தம் வீடு திரும்பும் வரை காத்திருந்து
தன்னுடைய ஒரு கிண்ணத்தை எடுத்து அந்த
சீடனை நோக்கி நகர்த்தினார். இது யாருடைய
கிண்ணம்? என சீடனிடம் அவர் கேட்டார் சீடன் இது உங்களுடையது என்றான். அந்த கிண்ணத்தை மேலும் சீடனுக்கு சிறிது அருகிலே
நகரத்தினார். இது யாருடைய கிண்ணம் இப்பொழுது கூட இது உங்களுடைய கிண்ணம் என்று
சொன்னார். இப்படியே தொடர்ந்து அவர் செய்து கொண்டிருந்தார். சீடரும் தொடர்ந்து இது
உங்களுடைய கிண்ணம் என்று கூறிக்கொண்டிருந்தான். இறுதியில் அந்த கிண்ணத்தை எடுத்து
சீடரின் மடியில் வைத்துவிட்டு இப்பொழுது இது யாருடைய கிண்ணம் என்று கேட்டார்
இப்பொழுதும் இது உங்களுடையது தான் என்றான். சரியாகச் சொன்னாய் என்ற புத்தர்
கூறினர் இந்தக் கிண்ணத்தை உன்னுடையது என்று நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இது
உங்களுடையது அல்ல. மற்றவர்களின் விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது
என்னுடையது அல்ல என்று கூறினர்
இவ்வாறு பல கதைகள், தத்துவஞானிகளின், கவிஞர்களின்
கருத்துக்களை எடுத்துக்காட்டி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதைகள்
மூலமாக விளக்கி இந்த நூலை ஆசிரியர்
தந்திருக்கின்றார்
வாழ்க்கை பற்றி சொல்லுகின்ற போது வாழ்க்கை ஒரு
வறண்ட பாலைவனம் போல தோன்றினாலும் அங்கு ஒரு அற்புதமான தோட்டத்தை உருவாக்க தேவையான
விதைகள் அவை முளைப்பதற்கு சரியான சூழ்நிலைக்காக மண்ணுக்குள் காத்துக் கிடக்கின்றன.
நாம் பிறந்த கணத்திலிருந்து அதை நம்முள்ளே இருக்கின்றன. நாம் செய்ய
வேண்டியதெல்லாம் அந்த விதைகள் செழித்து வளர தேவையான நீரை தொடர்ந்து ஊற்றுவதும்
தெளிவு என்னும் ஒளி வர இடம் அளிப்பதும் தான் அதை நாங்கள் செய்கின்றபோது அந்த
பாலைவனம் மலர்ந்து பலவிதமான வர்ண பூக்களால் பூத்துக் குலுங்கும். அமைதி
தன்னைத்தானே வெளிப்படுத்த விரும்புவது நான் அங்கே இருப்பதை நீங்கள் அறிய வேண்டும்
என்று அது விரும்புகிறது அமைதி மலர விரும்புகின்றது. நமது சூழ்நிலைக்கு எதுவாக
இருந்தாலும் நமது சுற்றுச்சூழல் எப்படி இருந்தாலும் நாம் நமது உள்ளார்ந்த இயற்கை
முழுமையாக வெளிப்படுத்த ஒரு வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும்
ஒருமுறை கலிபோர்னியாவில் சாந்தா குரூசில் ஒரு
நிகழ்விலே இவர் பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது ஒருவர் யோகாசனத்தை பற்றி என்ன
நினைக்கிறீர்கள் என்று கேட்டார். இவரும் யோகாசனம் ஒரு பூஜ்ஜியம் என்று கூறினார்.
கோபமடைந்த அவர் தனக்கு எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை என்று சென்றுவிட்டார்.
அதன்பின் அறையில் இருந்தவரிடம் பூஜ்ஜியத்தை ஒன்றுக்கு முன்னால் வைத்தால் ஒன்று
ஒன்றாகவே இருக்கு பூஜ்ஜியம் பூஜ்ஜியமாகவே இருக்கும். பூஜ்ஜியத்தை ஒன்றுக்கு
பின்னால் வைத்தால் கிடைப்பது பத்து இன்னொரு பூச்சியத்தைச் சேர்த்தால் நூறு. அதனால்
அது தான் சிறப்பான பதில் என்று நான் நினைத்தேன் என்று கூறினார்.
ஆழ்ந்த அமைதி என்பது நமக்குள்ளே ஓடிக்
கொண்டிருக்கின்ற ஒரு நதி போன்றது. சில சந்தர்ப்பங்களில் நாம் வளமும் இல்லாத, நிறமும்
இல்லாத நிழலும் இல்லாத எதுவுமே வளராத வறண்ட நிலத்தில் இருப்பதாக உணரலாம். அங்கே
அதன் பின்னர் கடினமான மண்ணில் இருந்து அமைதியின் துளிகள் பொங்கி எழுந்து ஒளியில்
மின்னி விழுந்து பழைய ஆற்று படுக்கையை தேடி வறண்டு பிளவு பட்ட நிலத்தில் பாயத்
தொடங்கும் நீர்க்குமிழிகள் மேல் எழுந்து பள்ளத்தாக்கில் நகர்ந்து செல்லுகின்ற போது
பல விஷயங்கள் நடைபெறுகின்றன.
ஆற்றங்கரையில் புல் தளிர்கள் வளரத்
தொடங்குகின்றன. வறண்ட பூமியிருந்த விதைகள் முளைவிட்டு மலர தொடங்குகின்றன. அந்த
புள்ளையும் தழைகளையும் உண்பதற்காக வண்டுகள் வரத் தொடங்குகின்றனர் பெரிய வண்டுகள்
சிறிய வண்டுகளை உண்ண விரும்புகின்றன அத்துடன் அவை உணவு தேடிய அலையும் பறவைகளையும்
கவர்கின்றன. அந்தப் பறவைகள் பல்வேறு விதைகளை அங்கு கொண்டு வருகின்றன. இப்போது
செழிப்பாக இருக்கின்ற நிலத்தில் விதைகள் விழுகின்றன. அங்கே மரங்கள் வளருகின்றன.
பழங்களின் பாரத்தால் மரக்கிளைகள் வளைகின்றன. பூச்சிகளின் சத்தம், பறவைகளின் ஒலிகள்,
காற்றை இசையினால் நிரப்புகின்றன. இந்த காட்டில் இருந்து வருகின்ற நறுமணம்
உயிரினங்களுக்கு அழைப்பு விடுவதாய் இருக்கும். ஒவ்வொரு தாவரத்தின் மற்றும்
பிராணியின் பரிணாம வளர்ச்சி தனித்துவமான கூறுகளைக் கொண்டுள்ளது. ஆனாலும் அவை
அனைத்திற்கும் செழித்து வளர்வதற்கு தண்ணீர் தேவை வாழ்வை நலச் செய்வதற்கான தண்ணீர்
அமைதி அமைதி ஒன்றுதான்
இவர் பேராசை பற்றி சொல்லுகின்ற போது பேராசை
என்பது நாம் விரும்பும் ஒன்றை மேலும் அதிகமாக பெறும் வரை நாம் ஆனந்தம் அடைய
முடியும் என்று ஒரு உணர்வுதான் ஏற்படும். ஆனால் நம்முடன் என்ன இருக்கிறதோ அதற்கு
நன்றி உணர்வோடு இருக்கின்ற போது நிறைவான உணர்வை நாம் நெருங்குகின்றோம். அந்த நன்றி
உணர்வுடன் நாம் நம்மை முழுமையாக இணைத்துக் கொண்டவுடன் பேராசைக்கு ஒரு முடிவு
வந்துவிடும் என்கின்றார்.
விருப்பங்கள் இருப்பதில் தவறில்லை அவை நம்முடைய
வாழ்க்கையில் மகிழ்ச்சியை சேர்க்கின்றன. அவற்றால் பணப்பரிமாற்றம் இடம்பெறுகின்றன.
மக்கள் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள் உங்களுக்கு இன்றைக்கு பிடித்தது நாளைக்கு
பிடிக்காமல் போகலாம் அதுதான் விருப்பத்தினுடைய இயல்பு விருப்பங்கள் மாறாவிட்டால்
அது அர்த்தமற்றது. விருப்பம் என்பது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். விருப்பம் ஒருபோதும் திருப்தி படுவதில்லை. நாம்
நம்முடைய தேவைகளை மறந்து விருப்பங்கள் மீது அதிகமாக கவனம் செலுத்துகின்றோம் பழகப்
பழக பாலும் புளிக்கும் என்ற பழமொழி படி இந்த மக்களுடன் அதிக நேரத்தை செலவிடுகிறோமோ
அவர்களை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விடுவோம். நம் வாழ்விலே அத்தியாவசியமான
தேவைகளைப் பொறுத்தவரையில் பெரும்பாலும்
இப்படித்தான் நடக்கிறது நாம் எத்தனை பேர் இன்று காலை விழித்தவுடன் நன்றி
கூறுகின்றோம்
கவிஞர் கபீரின் ஒரு கவிதையை எடுத்து வருகின்றார்.
அதாவது,
எள்ளுக்குள் எண்ணெய் இருப்பது போல
சிக்கி முக்கி கல்லில் தீப்பொறி இருப்பது போல்
தெய்வீகம் உனக்குள் இருக்கிறது
உன்னால் முடிந்தால் அதைக் கண்டு கொள்.
என்கிறார். இந்த உலகத்திலே மனிதர்களுடைய வாழ்க்கை
முடிவடையும். பூமியின் வாழ்நாளும் முடிவடையும், நட்சத்திரங்களும்
அழிந்து போகும் உருவமற்ற தெய்வீகமானது நிலைத்திருக்கும். நாம் உயிரோடு இருக்கும்
காலம் முழுவதும் தெய்வீகம் நமக்குள்ளே செயல்படுகிறது. அதனால் நமக்குள்ளே ஒரு
அற்புதமான ஆசீர்வாதமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த தெய்வீகம் நன்மை
தீமைகளுக்கு அப்பாற்பட்டது. நீங்கள் தெய்வீகத்தின் மதிப்பை உணர அதை அதனுடைய
கண்களாலேயே பார்க்க வேண்டும். உங்களுக்குள் இருக்கின்ற தெய்வீகத்தை உங்கள்
கண்களால் பார்க்க வேண்டும். அந்த தெய்வீகத்தை கொண்டிருக்கின்ற பாத்திரம் தான்
நீங்கள்.
பிளவர் மேன்டிஸ் என்னும் பூச்சி
தான் அமர்ந்திருக்கும் பூவின் வடிவத்தை
எடுக்கக் கூடியது. அதைக் கடந்து
செல்லும் வேறொரு பூச்சி அதை பூவொன்றே நம்புகிறது. அந்த ஆபத்தான பிளவர் மேன்டிஸ் அசைந்து தன்னுடைய உண்மையான வடிவத்தை
வெளிப்படுத்தும் தருணத்தில் அது பூச்சி அது பூ அல்ல என்பதை பறந்து சென்ற பூச்சி புரிந்து
கொள்கிறது. இதேபோல வாழ்க்கை என்றால் என்ன
என்பதை உண்மையில் நாம் எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறோம். பூவை மட்டும் காணும்
அந்த பூச்சியை போல ஒரு நொடிப் பொழுதிற்கு உண்மை தென்பட்டாலும் நாம் மாயையினுள்
மீண்டும் திரும்பி விடுகின்றோம்.
இவ்வாறு பல கதைகள் பல அறிஞர்களின் கருத்துக்கள்
கவிஞர்களின் கவிதைகள் எல்லாவற்றையும் கையாண்டு இந்தப் புத்தகத்தின் மூலமாக மனித
வாழ்க்கையில் அமைதியைக் கொண்டு வருவதற்கான பல வழிமுறைகளை ஆசிரியர் கையாண்டு
இருக்கின்றார். 13 வயதில் ஆரம்பித்த இவருடைய இந்தப்
பயணம் இன்னும் தொடர்கிறது.
357 பக்கங்களுடன்
நிறைவாக இருந்த இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது மனத்துக்குள் ஒரு
தெய்வீக உணர்வு ஏற்படும்.
அமைதியை தேட வேண்டிய அவசியத்தை
உள்ளுணர்வு உணர்த்தும். அவசியம் ஒவ்வொரு மனிதனும் வாசிக்க வேண்டிய ஒரு நூல் இது.